Tuesday, September 13, 2011

50 ஆயிரம் விடுதலை சந்தாக்கள் அளிப்பு என் வாழ்நாளையும் நீளச் செய்யும் தமிழர் தலைவரின் உருக்கமான உரை


திருச்சிராப்பள்ளி, செப். 12: 50 ஆண்டு எனது விடுதலை ஆசிரியர் பணிக்காக 50 ஆயிரம் விடுதலை சந்தாக்களை எனக்கு அளிப்பதாக சிறப்புத் தீர்மானம் ஒன்றைப் பொதுச் செயலாளர் முன்மொழிந்தார், ஒரு மனதாக எழுந்து நின்று ஆதரித்துள்ளீர்கள். விடுதலையை மட்டுமல்ல - என் வாழ்நாளையும் நீளச்செய்யும் என்று உற்சாகமாக, உருக்கமாகப் பேசினார் விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இந்தப் பொதுக்குழு - வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொதுக்குழுவாக அமைந்துவிட்டது. புத் துணர்ச்சி பெற்று, புது வெள்ளம் பாய்ந்தாற் போல எழுச்சி மிக்க உணர்வோடு ஒவ்வொருவரும் ஊர் திரும்ப உள்ளோம்.

50 ஆயிரம் விடுதலை சந்தாக்கள்

50 ஆயிரம் விடுதலை சந்தாக்களை நீங்கள் வழங்க இருப்பதாக சிறப்புத் தீர்மானமாக பொதுக்குழுவில்  பொதுச் செயலாளர் முன்மொழிய, எழுந்து நின்று உற்சாக மாக கரஒலி எழுப்பி நிறைவேற்றிக் கொடுத்திருப்பதானது விடுதலையை மட்டுமல்ல; என் வாழ் நாளையும் நீளச் செய்வதாகும். (பலத்த கர ஒலி!) எல்லோருக்கும் என் தலை தாழ்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு மேலான அறிவிப்பினை வெளிப்படுத்தியுள்ளீர்கள். மீண்டும் மீண்டும் நன்றி! நன்றி!!

அய்யாவின் அழைப்பு!

என்னை அழைத்து விடுதலையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்கச் சொன்ன பொழுது எனக்கு ஏற்பட்டது  மனப்போராட்டம். நானும், எனது வாழ்விணையரும் இரண்டு நாள்கள் யோசித்தோம். ஒரு பக்கம் நண்பர்கள் தெரிவித்த கருத்து. . . கடலூரில் வழக்குரைஞர்கள் மூன்று பேர் சேர்ந்து ஒரு குழுமமாகத் தொழிலைத் தொடங்கினோம்.

சென்னையில் இருப்பது போல - சென்னைக்கு வெளியில் வழக்கறிஞர் குழுமம்  ஒன்றை ஆரம்பித்து மக்களுக்குப் பயன்படும் வகையில் தொழிலில் திறமையை வெளிப்படுத்துவது என்று திட்டமிட்டி ருந்தோம். தொடக்கமே சிறப்பாக அமைந்திருந்தது.

அத்தகைய நிலையில்தான் அய்யாவின் அழைப்பு- எங்களைத் தடுமாறச் செய்தது. ஒரு நல்ல சூழல் உருவாகி இருக்கும் பொழுது, நீங்கள் விலகிச் செல்லுகிறீர்களே என்று சக வழக்குரைஞர்கள் கூறினர்.

சகத் தோழர்களின் கருத்துகள் பெரிய அளவுக்கு எங்களிடத்தில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. தனி வாழ்வு என்பதைவிட - இயக்கம் சார்ந்த கொள்கை வாழ்வுதானே நம் வாழ்வு என்று உறுதியாகத் தீர்மானித்தோம்.

ஆனாலும் ஒரு பிரச்சினை ஆனாலும் ஒரு பிரச்சினை. குடும்பத்துக்கான வருவாய்ப் பிரச்சினை . இதையெல்லாம் யோசனை செய்துதான் தந்தை பெரியார் அவர்கள் ஒரு திருமண ஏற்பாட்டினைச் செய்தார் - தொலைநோக்கோடு.

தந்தை பெரியாரிடத்தில் சம்பளம் வாங்கக்கூடாது என்பதிலே உறுதியாக இருந்தோம். வழக்குரைஞர் தொழிலையும் நடத்திக் கொண்டு, விடுதலைப் பணியையும் செய்யலாம் என்று கருதி நாங்கள் சொன்ன பொழுது, தந்தை பெரியார் அவர்களுக்கு இருந்த அனுபவத்தின் காரணமாக அது சரி வராது என்று கூறி விட்டார்கள். முழுநேரமாக ஆற்றவேண்டிய பணி என்று கூறிவிட்ட நிலையில், அய்யாவின் வேண்டுகோளைக் கட்டளையாக ஏற்றுக் கொண்டேன். எனக்கு வசதி கிடையாது. அதே நேரத்தில் என் இணையர் மோகனா அவர்கள் வசதி உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்.

போச்சு - சுயமரியாதைப் போச்சு!

எங்கள் வாழ்க்கைக்கான பொருளாதார ஆதாரத்தை வழங்கிட எனது மாமனார், மாமியார் ஆகியோர் முன் வந் தனர். மாமனார், மாமியார் சொத்தில் வாழ்வது என்றால் நம் சுயமரியாதை போச்சு என்ற எண்ணம் இன்னொரு பக்கம்.

அய்யாவிடம் சம்பளம் பெறுவது என்றால், அது இயக்கப் பணம். அதை வாங்குவது கூடாது. மாமனார், மாமியார் ஆகியோரிடம் பெற்றுக் கொள்வது தனிப்பட்ட உறவு வகைப்பணம். இரண்டில் குறைந்த அளவு சுயமரியாதை இழப்பு என்பது இரண்டாவது நிலையில்தான் என்று முடிவுக்கு வந்து விடுதலை ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்.

எங்கள் வாழ்க்கை ஒளிவு மறைவு இல்லாத வாழ்க்கை. எனது முதல் குடும்பம் கொள்கைக் குடும்பமாகிய கழகக் குடும்பம்தான். அடுத்ததுதான் மற்றவையெல்லாம். கடலூரில் இருந்து சென்னைக்கு வந்த போது, மீரான் சாயபு தெருவில் இருந்த அய்யாவின் வீட்டில்தான் தங்கி இருந்தோம் - அய்யாவும், அம்மாவும் அங்கு தான் இந்தனர்.

நாற்காலியில் அமர வைத்தார் அய்யா!

சிந்தாதிரிப்பேட்டையில் பாலகிருஷ்ண பிள்ளைத் தெருவில் அப்பொழுது விடுதலை அலுவலகம் இருந்தது. ஆசிரியருக்கு உள்ள நாற்காலியோ கை ஒடிந்த பழைய நாற்காலிதான். நாம்தான் நாற்காலிகளை விரும்பாத வர்கள் ஆயிற்றே (பலத்த சிரிப்பு!).

அய்யா என்னை அழைத்து விடுதலை  ஆசிரியருக் குள்ள அந்த நாற்காலியில் என்னை உட்கார வைத்தார். விடுதலை  ஆசிரியர் பொறுப்பு என்பது எனக்குப் பெரும் அறை கூவலாகத்தான் இருந்தது. உண்மையைச் சொல்லப்போனால் பயமும் இருந்தது.

மிகப் பெரிய கொள்கை ஏடு - சமுதாயப் புரட்சி ஏடு - எதிர்நீச்சல் போடும் ஏடு. எதையும் உள்வாங்கிக் கொண்டு, ஒவ்வொரு சொல்லையும் நிதானமாகக் கையாள வேண்டிய பெரும் பொறுப்பு அது.

பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன்

நான் பெருமையாகக் கூடச் சொல்லிக் கொள்ள முடியும். இந்த 50 ஆண்டு கால விடுதலை பொறுப்பு, அய்யா காலத்திலும் சரி, அம்மா காலத்திலும் சரி அவர்களின் கருத்துகளுக்கு விரோதமாக எழுதினேன் என்ற நிலை எனக்கு ஏற்பட்டதேயில்லை. சுற்றுப் பயணத்தில் இருக்கும் அய்யா அவர்கள் ஏடுகளில் செய்திகளைப் படித்துவிட்டு, குறிப்பிட்ட பிரச்சினை பற்றி தலையங்கம் எழுதுமாறு எனக்கு அஞ்சலட்டையில் எழுதிப்போடுவார். சில நேரங்களில் ஆளையும் அனுப்பி வைப்பார்.

அய்யா நினைத்தார் நான் எழுதினேன்!

இதில் என்ன சிறப்பானது என்றால், அய்யா சொன்ன அந்தத் தகவலின் அடிப்படையில் அய்யாவின் அஞ் சலட்டை வருவதற்கு முன்பே தலையங்கம் எழுதி இருப்பேன். அய்யா அவர்கள் அதைப் படித்துவிட்டு பலமுறை பாராட்டியிருக்கிறார்கள். அய்யா என்ன நினைக்கிறாரோ - அதை அப்படியே நினைப்பதுதானே அவரின் தொண்டனாகிய என்னுடையதும்.

அதே நிலைதான் இன்றும்

அதே நிலைதான் இப்பொழுதும். நாம் அனைவரும் குறிப்பிட்ட பிரச்னைகளில் ஒரே மாதிரியாகத்தானே நினைக்கிறோம்; சிந்திக்கிறோம். விடுதலை ஏடு எண்ண ஏடாகவும், பல வண்ண ஏடாகவும் இன்றைய தினம் வெளிவந்து கொண்டிருக்கிறது.

தலையங்கம் எழுதுவது சாதாரணமானதல்ல

விடுதலைக்கு தலையங்கம் எழுதுவது என்பது சாதாரண ஒன்றல்ல. ஒவ்வொரு எழுத்துக்கும் பொருள் உண்டு. எச்சரிக்கையாக எழுதிட வேண்டும்.

விடுதலை எத்தனையோ அரசுகளை மாற்றி இருக்கிறது - திட்டங்களை மாற்றியிருக்கிறது = புதிய சட்டங்களைக் கொண்டு வரச் செய்திருக்கிறது. அன்றாடம் அரசின் கண்கள் விடுதலை யைச் சுற்றிக் கொண்டிருக்கும்.

50 ஆயிரம் தமிழர் இல்லங்களில்...

அத்தகு கொள்கை ஏட்டுக்கு 50 ஆயிரம் சந்தாக்கள் என்கிறபோது, மற்ற பத்திரிகைகளுக்கு அது சர்க்கு லேஷன் பிரச்சினை. நமக்கோ 50 ஆயிரம் இல்லங் களுக்குக் கொள்கையைக் கொண்டு போய்ச் சேர்க்கிறது என்று பொருள். தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் சொன்னது போல 50 ஆயிரம் இல்லங்களை தமிழன் இல்லமாக ஆக்குவது; சமுதாய மாற்றத்திற்கு வித்திடுகிறது. விடுதலை பரவாத கிராமம் இல்லை, விடுதலை புகாத தமிழன் இல்லம் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம். அதன் மூலம்தான் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள் நூற்றுக்கு நூறு வெற்றி பெற முடியும்.

இதைவிட மனநிறைவு வேறு உண்டா?

வழக்கறிஞராக நான் சென்று அத்தொழிலில் வெற்றி பெற்றால், அதற்கு மேல் பெரிய பெரிய பதவிகள் எனக்கு வந்து சேர்ந்திருக்கலாம். அதே நேரத்தில் இந்த மனநிறைவு எனக்குக் கிடைத்திருக்குமா? தந்தை பெரியார் அவர்களின் கொள்கைப் பணியில் ஒவ்வொரு நாளும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோமே. இது எவ்வளவு பெரிய வாய்ப்பு என்று எண்ணுகிறபோது எவ்வளவு பெரிய மன நிறைவை அடைகிறோம்! (பலத்த கைதட்டல்)

இன்றும் வழக்குரைஞன்தான்

நீதிமன்றம் சென்று வழக்குரைஞர் தொழிலை நான் செய்யாமல் இருக்கலாம். இன்னொரு வகையில் அதே வழக்குரைஞர் தொழிலை நாள்தோறும் செய்து கொண்டுதானே இருக்கிறேன். சமுதாயத்துக்காக வாதாடுகின்ற வழக்குரைஞராக வீதி மன்றத்திலே வாதாடிக் கொண்டுதானே இருக்கிறேன். (பலத்த கைதட்டல்!)

வழக்குரைஞர் தொழிலில் வாதாடுவது என்பது தனியாருக்காக. அதை விட சமுதாய வழக்குரைஞராக வாதாடுவதுதானே சிறப்பு! அப்படி வாதாடுவதன் மூலம்தான் கருத்துப் புரட்சியை உருவாக்க முடியும்.

நமது அடுத்த பணி என்ன?

நமது அடுத்த பணிகளில் மிக முக்கியமானவை - தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு என்பதே. அரசுத் துறைகளும், பொதுத் துறைகளும் தனியார்த் துறைகளாக மாறி வருகின்றன. கல்வி உரிமைக்காக வாதாடி, போராடி நம் மக்களின் கல்வி உரிமையை வாங்கித் தந்துள்ளோம். அடுத்த கட்டமாக அப்படிப் படித்து வெளிவந்துள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உரிமையையும் பெற்றுத் தரவேண்டும். அதற்கான களத்தில் இறங்குவோம். போராடுவோம், வெற்றி பெறுவோம்!

தை முதல் நாளை விடோம்!

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பது ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழர் மீது தொடுக்கப்பட்ட பண்பாட்டுப் படையெடுப்பு இது. இதனை மாற்றி அமைக்காமல் நாம் விடப்போவதில்லை. முதற் கட்டமாகப் பிரச்சாரக் கூட்டங்கள். இரண்டாவது கட்டமாக ஒத்த கருத்துள்ளவர்களை அழைத்து கலந்துரையாடுவது, திட்டம் தீட்டுவது, செயல்படுவது. மூன்றாவது கட்டமாகப் போராட்டம்! போராட்டம்!!

விரைவில் கழகச் சொற்பொழிவாளர்கள் கூட்டம் தஞ்சையிலோ, திருச்சியிலோ நடைபெறும். அதில் பல திட்டங்களை வகுப்போம் என்றார் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...