Thursday, August 25, 2011

சத்துணவுத் திட்ட சர்ச்சை

தமிழ்நாடு சட்டப் பேரவையில் தமிழ்நாட்டில் நடை பெறும் பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டம் குறித்துப் பலத்த சர்ச்சை எழுந்துள்ளது.

மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்தியவர் காமராசர் என்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கூற, இல்லை, இல்லை, எம்.ஜி.ஆர்.தான் அதனை முழுமையாகச் செயல்படுத்தியவர் என்று முதல் அமைச்சர் மறுத்துக்கூற - தேவையற்ற இந்த சர்ச்சை சட்டப் பேரவையில் நடைபெற்றுள்ளது.

இந்த அவசரத்தில் பள்ளிகளில், மதிய உணவுத் திட்டத்தைப்பற்றி முதன் முதலாகச் சிந்தித்துச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்த - சென்னை மாநக ராட்சியின் மேயரும், நீதிக்கட்சியைத் தோற்றுவித்தவர் களுள் ஒருவருமான பிட்டி தியாகராயரை, மறந்ததுதான் வேதனை!

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கல்விப் பணியை விரிவுபடுத்த ஒரு விழுக்காடு சொத்து வரி விதிக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டு, அது செயல்படுத்தவும் பட்டது. மீனவர் வீட்டுப் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்ற அக்கறையில் பள்ளி ஒன்று மயிலாப்பூரில் தொடங்கப் பட்டது. பெண் கல்விக்காக மூன்று தனிப் பள்ளிகளும், சிறுபான்மை மக்களான முஸ்லீம்களுக்கு மூன்று தனிப் பள்ளிகளும் திறக்கப்பட்டன.

தொடக்கக் கல்வி சட்டத்தில், சொத்து வரியாக விதிக்கப்படும் தொகையில் இருந்து 4.2 விழுக்காடு கல்விப் பணிகளுக்காக அமைய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி, அரசுக்குக் கருத்துருவை அனுப்பியது.

புகுமுக வாழ்க்கைத் தொழில் சார்ந்த (ஞசநஎடிஉயவடியேட) திட்டத்தை மாநகராட்சிப் பள்ளிகளில் செயல்படுத்து வதற்கு அரசு அனுமதித்தது. கொய்யாத் தோப்பு மாநகராட்சிப் பள்ளியில் இரவுப் பள்ளியும் நடத்தப் பட்டது.

வறுமை காரணமாகப் பள்ளிகளுக்குக் குழந்தைகள் வருவதில்லை என்பதை பிட்டி தியாகராயர் உணர்ந்தார். பள்ளிகளுக்கு வராமல் வேலை தேடி சென்றனர் - வருவாய்க்காக. இந்த நிலையில் தியாகராயர் எண்ணத்தில் உதித்ததுதான் உணவுத் திட்டம்; ஒரு வேளை உணவாவது பிள்ளைகளுக்கு அளிக்க வேண்டும் என்று கருதினார்.

அதற்கான தீர்மானத்தை மாநகராட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றினார். அதன்படி ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள பள்ளிகளில் முதன் முதலில் மாணவர்களுக்குக் காலைச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. இதனால் ஆண்டு ஒன்றுக்குள் ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 3075லிருந்து 3705ஆக உயர்ந்தது. அதன் பின்னர் மீர்சாகிப் பேட்டை, சேத்துப்பட்டு பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. மேலும் மேலும் வளர்ந்து மதிய உணவும்கூட அளிக்கப்பட்டது.

1954இல் குலக் கல்வித் திட்டம் கொண்டு வந்த ராஜாஜியின் ஆட்சி, மக்கள் எழுச்சியால் - தந்தை பெரியார் அவர்களின் கடும் போராட்டத்தால் அகற்றப்பட்ட நிலையில், முதல் அமைச்சராக வந்த காமராசர் அவர்கள் மதிய உணவுத் திட்டம் இலவசக் கல்வி, இலவசச் சீருடை, இலவசப் புத்தகம் அளிப்பு என்று பஞ்சம, சூத்திர மக்களின் வீட்டுப் பிள்ளைகள் மளமளவென்று கல்வி கற்கும் நிலையை எட்டச் செய்தார்.

அதனால்தான் பச்சைத் தமிழர் என்றும், கல்வி வள்ளல் என்றும் காமராசரை தந்தை பெரியார் புகழ்ந்து தள்ளினார். காமராசர்மீது பார்ப்பனர்கள் வெறுத்ததற்குக் காரணமே - மனுதர்மத்துக்கு எதிராக பார்ப்பனர் அல்லாதார் கல்வியில் காமராசர் ஆட்சி கொடுத்த ஊக்கமே காரணமாகும்.

கதர்ச் சட்டைக்குள் கறுப்புக் கட்டை என்றெல்லாம் பார்ப்பன ஏடுகள் எழுத ஆரம்பித்தன. பெரியார் என்ற குயில் முட்டையிட, காமராசர் என்ற காகம் அடைகாத்துக் குஞ்சு பொரிக்கிறது என்று கூட கல்கி கார்ட்டூன் வெளியிட்டதுண்டு.

மதிய உணவுத் திட்டம் சத்துணவுத் திட்டமாக எம்.ஜி.ஆர். ஆட்சியில் புதுத் திருப்பம் ஏற்பட வழி செய்யப்பட்டது.

கலைஞர் அவர்கள் ஆட்சிக் காலத்தில் மேலும் அர்த்தமுள்ளதாக இத்திட்டம் ஆக்கப்பட்டது. மாணவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு கோழி முட்டை என்பதற்குப் பதிலாக வாரம் ஒன்றுக்கு 5 கோழி முட்டைகள் அளித்து ஊட்டச்சத்துக் குறைவிலிருந்து, தாய்ப் பறவையாக தமிழினப் பிள்ளைகளைப் பாதுகாத்தார்.

முட்டை சாப்பிடாத வீட்டுப் பிள்ளைகளுக்கு வாழைப் பழங்களை வழங்கச் செய்தார். இவையெல்லாம் யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சரித்திர உண்மைகள்.

தமிழர்களுக்காக நல்லெண்ணத்தோடு செயல்படுத் தப்பட்ட நல்ல திட்டங்களை அரசியலாக்காமல் இருப்பதே நல்லது. அதுவும் சட்டமன்றத்தில் பேசும்போது பொறுப்புணர்வு மிகவும் தேவையல்லவா!

தொட்டதற்கெல்லாம் சேவல் சண்டை தேவையற்றது!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...