Tuesday, August 23, 2011

இளங்கலைப் பட்டம் உள்பட அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வா? - ஒடுக்கப்பட்ட மக்களே, ஒன்று சேர்வோம்!


உயிரையும் பணயம் வைத்து முறியடிப்போம் - வாரீர்! அகில இந்திய அளவில் இளங்கலைப் பட்டம் முதல் அனைத்திலும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கூறியிருப்பது - ஒடுக்கப்பட்ட மக்கள்மீது தொடுக்கப்பட்ட போர்ப் பிரகடனம் என்று கூறியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து இதனை முறியடிப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
2013ஆம் ஆண்டு கல்வியாண்டு முதல் இளங்கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு தேசிய அளவில் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் கபில்சிபலின் கனவு!
இதற்குமுன்புகூட தனது கனவு என்று ஒரு தகவலை டில்லியில் செய்தியாளர்கள் (31.7.2011) மூலம் தன் ஆசையை வெளிப்படுத்தினார்.
மருத்துவம் மற்றும் அதைச் சார்ந்த படிப்புகள், பொறியியல் படிப்புகள் ஆகியவற்றிற்கு இந்தியா முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும். இதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
2013ஆம் ஆண்டில் இதை செயல்படுத்த வேண்டும் என்பது எனது கனவாகும். இவ்வாறு ஒரு நுழைவுத் தேர்வு நடத்துவதன் மூலம் நன்கொடை கட்டாயம் இருக்காது. இதனால் மாணவர்களுக்கு உளப்பூர்வமாக ஏற்படும் பாதிப்பு நீக்கப்படுவதோடு மன அழுத்தமும் ஏற்படாது - என்றெல்லாம் தன் மனம் போன போக்கில் பேசி இருக்கிறார் மத்திய கல்வி அமைச்சர்.
கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவர சென்னையில் மாநாடு
கல்வி என்பது பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வந்தே தீர வேண்டும் என்கிற அவசர அவசியத்தை இதுபோல் நாளும் வரும் தகவல்கள் நம்மை விரைவுபடுத்துகின்றன. செப்டம்பர் 25 அன்று கல்வியாளர்கள் பங்கேற்கும் மாநாட்டை திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னையில் நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பொழுதுகூட கல்வி பொதுப்பட்டியலில் இருக்கிறதே தவிர, மத்திய அரசின் பட்டியலில் இல்லை. இந்த நிலையில் பொதுப் பட்டியலில் உள்ள கல்விபற்றிய முடிவுகளை மேற்கொள்ளும்போது மாநில அரசுகளின் கருத்துக்கு முக்கியம் தந்தாக வேண்டுமே!
ஆனால் மாநில அரசுகளின் கருத்துபற்றி கிஞ்சிற்றும் மத்திய அரசு கவலைப்பட்டதாகவோ, பொருட்படுத்துவதாகவோ தெரியவில்லை.
தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு கிடையவே கிடையாது
தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு கிடையாது என்று தி.மு.க. ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதனை எதிர்த்து உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை தொடுக்கப்பட்ட வழக்குகளில் தமிழ்நாடு சட்டம் செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு விட்ட நிலையில், மத்திய அரசு எப்படி அனைத்து மாநிலங்களையும் கட்டுப்படுத்தும் வகையில் அனைந்திந்திய அளவில் நுழைவுத் தேர்வைத் திணிக்க முடியும்?
இளங்கலை பட்டப் படிப்புக்கூட நுழைவுத் தேர்வாம்!
மருத்துவம், பொறியியல் படிப்புக்கு மட்டுமல்லவாம், இளங்கலைப் பட்டப் படிப்புக்குக்கூட அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுமாம். சமூகநீதிக்கு எதிராக அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு போர் தொடுத்திருக்கிறது என்றே தெரிகிறது. இதன் காரணமாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள் கோடானு கோடியாக எழுந்து நின்று சமூகநீதிக்கு எதிரான போரை முற்றிலும் முறியடிப்பார்கள் என்று எச்சரிக்கிறோம்.
1950 மீண்டும் திரும்புகிறதா?
இந்திய அரசமைப்புச் சட்டம் முதன் முதலாகத் திருத்தப்படுவதற்கு தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும், தமிழ்நாடும் எப்படி முன்னோடியாக இருந்ததோ, அதே நிலை இப்பொழுது ஏற்பட்டுவிட்டதாகவே கருதப்பட வேண்டியுள்ளது. மீண்டும் 1950 திரும்புகிறது.
ஒடுக்கப்பட்ட மக்களின் கழுத்தை அறுக்கும் இந்தத் திட்டத்தை கருவிலேயே முறியடிக்கும் முயற்சியில் நாடாளுமன்றத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், பூகம்பப் புயலாக எழுந்து நின்று முறியடிக்க வேண்டும்.
கல்வியமைச்சர் உயர் ஜாதிக்காரராக இருக்கக் கூடாது
குறிப்பாக கல்வி என்பது உயர் ஜாதியினரிடமே இருக்கவே கூடாது என்கிற அளவுக்கும் பிரச்சினையை முழு வீச்சில் முடுக்கி விட வேண்டும். அரும்பாடுபட்டு போராடிப் போராடி ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகநீதியின் உரிமைகளைப் பெற்று வரும் நிலையில், அதனை அடிவேரோடு நாசமாக்கும் மிகப் பெரிய சூழ்ச்சியில் மத்திய அரசு இறங்கி விட்டது.
இதுகுறித்து திராவிடர் கழகம் ஒத்த கருத்துள்ள அனைவரையும் ஒருங்கிணைத்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். நுழைவுத் தேர்வு என்பதன் மூலம் பொதுப் போட்டிக்கான இடங்களை (50 சதவிகிதம்) அப்படியே சுளையாக விழுங்கிவிடத் துடிக்கும் பார்ப்பனீயச் சூழ்ச்சிதான் இந்த அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வு என்பதை மறக்க வேண்டாம்!
திருத்தணியில் வரும் ஞாயிறன்று நடக்க இருக்கும் திராவிடர் கழக மாநாட்டிலும் இதுகுறித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு, அதனடிப்படையில் செயல்பாடுகள் தொடங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒடுக்கப்பட்ட மக்களே, ஒன்று சேர்வோம்! உரிமைப் போராட்டத்தில் உயிரையும் பணயம் வைத்துப் போராடுவோம்!
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...