Friday, August 5, 2011

இலங்கையும் - சீனாவும்

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவர்களும், மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி அவர்களும் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களை டில்லியில் சந்தித்துப் பல்வேறு பிரச்சினைகள்பற்றி எடுத்துக் கூறியுள்ளனர்.

அதில் ஈழத் தமிழர் பிரச்சினை முக்கியமானது.

லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை அரசோடு செய்து கொள்ளப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் இந்தியா ரத்து செய்ய வேண்டும்.

அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாகவும், தமிழர்களுக்கு எதிராகவும் இந்தியா செயல்பட்டிருக்கின்றது. இனி உலக அரங்கில் இலங்கைக்கு இந்தியா சாதகமாகச் செயல்படக் கூடாது என்று பிரதமரிடம் கூறியுள்ளனர்.

இலங்கைக்கு நாம் உதவாவிட்டால், இலங்கையில் சீனா காலூன்றி விடும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

இதன்மூலம் ஒருண்மை தெளிவாகிறது. லட்சக்கணக் கான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டாலும் கவலையில்லை; ஆண்டுக்கணக்கில் முள்வேலி முகாமுக் குள் தமிழர்கள் பரிதவித்தாலும் பரவாயில்லை. அங்கே சீனா காலூன்றி விடும்; ஆதலால் இலங்கைக்கு இந்தியா உதவி செய்தே தீரும் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு என்பது வெளிப்படையாகி விட்டது.

இவர்கள் நம்பும் (?) ராஜ தந்திரத்துக்காக ஈழத் தமிழர்கள் பகடையாக ஆக்கப்படுகிறார்கள் என்றாகி விட்டது.

இதில் உண்மை என்னவென்றால், இலங்கையில் ஏற்கெனவே சீனா நல்ல அளவுக்குக் கால் ஊன்றி விட்டது என்பதுதான். இலங்கைக்கு இந்தியா உதவுவ தால் சீனா காலூன்றுவது தடுக்கப்பட்டுள்ளது என்று நம்புவதோ, கூறுவதோ வியப்பான ஒன்றுதான். இவ்வுலகில் இந்தியா எவ்வளவுப் பெரிய நாடு! அதன் உளவுத் துறை என்பது சாதாரணமானதா?

இலங்கைத் தீவில் சீனா என்னென்ன பணிகளில் ஈடுபட்டுள்ளது, தளங்களை அமைத்துள்ளது என்பது இந்தியாவுக்குத் தெரியவே தெரியாதா?

இலங்கை கெட்டிக்காரத்தனமாக எதிரும் புதிருமாக இருக்கக் கூடிய இந்தியா - சீனா ஆகிய இரு நாடுகளின் உதவிகளையும் தந்திரமாகப் பெற்றுக் கொண்டு மஞ்சள் குளித்துக் கொண்டு இருக்கிறது.

இலங்கை என்று எடுத்துக் கொண்டாலும் சரி, சீனா என்று எடுத்துக் கொண்டாலும் சரி, இரண்டு முனைகளிலும் இந்தியா தோல்வியைச் சந்தித்திருக்கிறது என்பதுதான் நிகர உண்மையாகும்.

அமெரிக்காவின் செனட் சபைக்கு அளிக்கப்பட்ட அறிக்கை ஒன்றில் இந்தியக் கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கத்தோடு 2005ஆம் ஆண்டு முதல் இலங்கைக்குச் சீனா உதவி வருகிறது என்பதுதான் அந்த நிபுணர்களின் அறிக்கை!

சீனாவின் தென் கடல் பகுதிகளில் உள்ள நாடுகளான மியான்மா, வங்காளதேசம், நேபாளம், இலங்கை, மாலத் தீவு, மொரீஸியஸ், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் கடல் பகுதிகளில் துறைமுகம் மற்றும் விமானப் படைத்தளம் அமைப்பது, இராணுவத்தை நவீனப்படுத்துவது போன்ற நோக்கங்களுக்காக இந்நாடுகளின் உறவினை சீனா பலப்படுத்தியுள்ளது.

இந்தியக் கடல் பகுதியில் துறைமுகம் கட்டுவதற்கு சீனா திட்டமிட்டு வருவது பற்றி இந்தியப் பாதுகாப்புத்துறை திட்ட மதிப்பாளர்கள் ஏற்கெனவே தெரிவித்துள்ளனர். இலங்கையின் தென் கிழக்குக் கடற்கரையில் ஹம்பன் போடா எனும் இடத்தில் துறைமுகம் கட்டுவதற்கு சீனா முதலீடு செய்துள்ளது. அதேபோல பாகிஸ்தானில் குவாடர், வங்கதேசத்தில் சிட்டகாங், பர்மாவில் சித்வே ஆகிய இடங்களிலும் துறைமுகம் கட்டிட சீனா உதவியுள்ளது.

இவை அல்லாமல் இலங்கையில் பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கு சீனாவின் பொருளாதார உதவி அதிகரித்து வருகிறது. இதற்கு முன் சீனா - இந்திய போரில்கூட இலங்கை சீனாவின் பக்கம்தான் பச்சைக் கொடி காட்டி நின்றது.

இவ்வளவு நடந்ததற்குப் பிறகும் இனிமேல் தான் சீனா இலங்கையில் கால் ஊன்ற இருப்பது போலவும், அதனைத் தடுக்கவே இலங்கைக்கு இந்தியா உதவுவது போலவும் எண்ணுவது இந்தியா சரியான கற்பனை உலகத்தில் மிதந்து கொண்டு இருப்பதாக நினைக்கத் தோன்றுகிறது.

இலங்கை அதிபர் போர்க் குற்ற நடவடிக்கைகள் அய்.நா. சார்பில் எடுக்கப்படாமல் இருக்க வீட்டோ அதிகாரத்தை சீனாவும், அதனுடன் சேர்ந்து ருசியாவும் பயன்படுத்தக் காத்துக் கொண்டிருக்கின்றன.

இவற்றின்மூலம் இலங்கை என்பது முற்றிலுமாக சீனாவின் பக்கம் என்றாகி விட்டது.

இந்நிலையில் ஈழத்தமிழர் பிரச்சினையில் இத்தகு காரணங்களைச் சொல்லுவது பொருத்தமானதாகத் தெரியவில்லை; மேலும் மேலும் பல தளங்களில் இந்தியாவின் பின்னடைவைத்தான் இது காட்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...