Monday, September 28, 2015

சென்னையில் மட்டுமின்றி, மதுரை, நெல்லை தஞ்சை, திருச்சியிலும் பெரியார் சட்ட உதவி முகாம்!

சென்னையில் மட்டுமின்றி, மதுரை, நெல்லை தஞ்சை, திருச்சியிலும் பெரியார் சட்ட உதவி முகாம்!
சென்னையில் குடும்ப நல மய்யமும் புதுப்பிக்கப்படும்
சென்னை பெரியார் சட்ட உதவி முகாமில் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவிப்பு
பெரியார் சட்ட உதவி மய்ய பெயர் பலகையை தமிழர் தலைவர் ஆசிரியர் முன்னிலையில்  மூத்த வழக்கறிஞர் காந்தி திறந்து வைத்தார். உடன்: இலவச சட்ட உதவி முகாமை துவக்கி வைத்த நீதியரசர் ஜி.எம். அக்பர் அலி, முன்னாள் மாவட்ட நீதிபதி பரஞ்ஜோதி,  மூத்த வழக்கறிஞர்கள் தியாகராசன், வி.ஆர்.எஸ். சம்பத், த. வீரசேகரன், ச. இன்பலாதன், குமாரதேவன், பாண்டியன், துரைசாமி, சென்னியப்பன் ஆகியோர் உள்ளனர்.


சென்னை, செப்.27- சென்னையில் மட்டுமின்றி மதுரை, நெல்லை, திருச்சி, தஞ்சையிலும் பெரியார் சட்ட உதவி மய்யத்தின் சார்பில் முகாம்கள் நடத்தப்படும் என்றும், சென்னையில் சட்ட உதவி மய்யத்தோடு, குடும்ப நல மய்யமும் புதுப்பிக்கப்படும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.
சென்னை பெரியார் திடலில் எம்.ஆர்.ராதா மன்றத்தில் இன்று (27.9.2015) காலை திராவிடர் கழக சட்டத்துறை, பெரியார் சட்ட உதவி மய்யம், சட்டக் கதிர் இதழ் இணைந்து நடத்திய தந்தை பெரியார் 137ஆம் ஆண்டு பிறந்த நாள்விழாவில் சட்ட ஆலோசனை முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
பயனாளிகள் ஏராளமானவர்கள் திரண்ட   பெரியார் சட்ட ஆலோசனை முகாமில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தமிழத்தின் முக்கிய நகரங்களில் பெரியார் சட்ட உதவி மய்யத்தின் சார்பில் பெரியார் சட்ட ஆலோசனை முகாம்கள் நடைபெறும் என்றும், சென்னை பெரியார் சட்ட உதவி மய்யத்துடன் இணைந்த குடும்ப நல ஆலோசனை மய்யம் தொடர்ந்து புதுப்பிக் கப்பட்டு இயங்கும் என்றும் அறிவித்தார்..
திராவிடர் கழக சட்டத்துறைத் தலைவர் வழக் குரைஞர் த.வீரசேகரன் தலைமையில் நீதிபதி ஆர்.பரஞ்சோதி,  வழக்குரைஞர்கள் திராவிடர் கழக சட்டத்துறை செயலாளர் ச.இன்பலாதன்  ஆ.வீரமர்த் தினி, சு.குமாரதேவன் முன்னிலை வகித்து உரையாற் றினார்கள். வழக்குரைஞர் ஆர். ரத்தினக்குமார் வரவேற்றார்.
தமிழர் தலைவர்
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முகாமில் சிறப்புரை ஆற்றினார். அவர் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது:
பெரியார் சட்ட உதவி மய்யம் தற்போது புதுப்பிக் கப்பட்டுள்ளது. இப்போது முகாமில் 10 பிரிவுகளில், மேலும் பல தனிப்பிரிவுகளிலும் வழக்குகள் ஆலோ சனை அளிக்க உள்ளார்கள். இது ஒரு கூட்டு முயற்சி வெற்றி பெற்றே தீரும். கடந்த 17ஆம் நாள் அன்று தந்தை பெரியார் பிறந்தநாளில்  மருத்துவ முகாம் நடைபெற்றது.
இப்போது சட்ட உதவி முகாம் நடை பெறுகிறது. 23 ஆண்டுகளுக்கு முன்பாக (1992) மறைந்த தில்லை வில்லாளன், தண்டபாணி உள் ளிட்ட சட்ட வல்லுநர்கள் பெரியார் சட்ட உதவி மய்யத்தின் மூலமாக பல்வேறு பணிகளை ஆற்றி வந்தார்கள். இப்போது புதுப்பிக்கப்படுகிறது. பெரியார் இலவசம் என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. எல்லா விதிகளுக்கும் விதிவிலக்கு உண்டு என்பதைப்போல இம்முகாம் நடைபெறுகிறது. பல பேர் வீதிகளில் குடி யிருக்கும் அன்றாடங்காய்ச்சிகளாக இருக்கிறார்கள். பெரியார் சட்ட உதவி மய்யம் சார்பில் சட்ட ஆலோசனை முகாம்  அடுத்த படியாக திருச்சி, மதுரை, தஞ்சை, திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தமிழகம் முழுவதும் நடத்தப்படும்.
ஏற்கெனவே நீதியரசர் பி.வேணுகோபால், ஏ.கே.ராஜன் ஆகியோரைக்கொண்டு பெண்களையும் இணைத்து பெரியார் குடும்ப ஆலோசனை மய்யம் இயங்கி வந்தது. பெரியார் குடும்ப ஆலோசனை மய்யம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு விரைவில் செயல்படும். எங்கே அநீதி இருக்கிறதோ அங்கே நீதியின் தேவை உள்ளது. சாமியார் மோசடிகள்போன்ற குற்றங்களை தடுக்கும்வகையிலும் கழக வழக்குரைஞர்கள் செயல்பட வேண்டும். -_ இவ்வாறு தமிழர் தலைவர் தம் உரையில் குறிப் பிட்டார்.
சட்டக்கதிர் சம்பத்
சென்னை உயர்நீதி மன்ற மூத்த வழக்குரைஞர் ஏ.தியாகராஜன் தொடக்க உரையாற்றினார். பெரியார் சட்ட உதவி மய்யத்துடன் இணைந்து சட்டக்கதிர் இதழும் முகாமுக்கான பணிகளை செய்வதற்கு வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி தெரிவித்து உரை யாற்றிய சட்டக்கதிர் ஆசிரியர் டாக்டர் வி.ஆர்.எஸ்.சம்பத் அறிமுக உரையில் குறிப்பிட்டதாவது: பெரியார் சட்ட உதவி மய்யம் முதலில் மதுரையிலும், அடுத்து திருப்பூர், ஈரோடு நகர்களிலும் நடத்தப்பட்டு இப்போது சென்னையில் நடைபெறுகிறது. உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் அரசமைப்பு சட்டம் உள்ளது. இந்தியாவில் அரசமைப்பு பிரிவு 32 மூலமாக நீதிகோரி எந்த ஒரு குடிமகனும் நேரிடையாக உச்சநீதிமன்றத்தை அணுகலாம். பிரிவு 22 மூலமாக தீர்ப்பு விரைவாக முறையாக கிடைப்பதற்கு வழி உள்ளது. பிரிவு 21 மூலமாக அனைத்து நடவடிக்கைகளும் சட்டத்தின்படிதான் நடக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. அதனைக்கொண்டுதான் ஆட்கொணர்வு மனு ஹேபியஸ் கார்பஸ் வழக்கு போடும் உரிமை உள்ளது. நெறிமுறைக் கோட்பாடுகள் என்பதன்மூலமாக மக்களுக்கு சட்ட உதவி அளிக்கப்பட வேண்டும் என்பதற்கு 1984ஆம் ஆண்டில் நீதிபதி பகவதி அளித்த தீர்ப்பின்மூலமாக கட்டாயம் ஆனது. நாட்டில் வசதிபடைத்தவர்கள், செல்வாக்கு உள்ளவர்கள் நீதியை விலைக்கு வாங்கும் சூழல் உள்ளது. உலகம் முழுவதும் 342 வகைகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்றால், உணவு, உடை, உறைவிடத்துக்காக அல்ல. அனைத்தும் உரிமைகளுக்காக நடைபெறுகின்றன.
இந்தியா என்கிற நம் நாடு ஒரு கூட்டுக்குடும்பம் ஆகும். தனி ஒரு நாடல்ல. இலங்கைப்பிரச்சினையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும், சட்டமன்றமும் ஒரே குரலாக ஒலித்தும்கூட மத்திய அரசு முடிவு வேறாக உள்ளது. இந்தியாவில் 7 விழுக்காட்டினர் தமிழர்கள் உள்ளோம். மாநிலம், மக்கள், மொழி, இனம் ஆகிய அடிப்படையிலான உரிமைகளுக்காகப் போராடி வருகின்ற ஒரே அமைப்பு திராவிடர் கழகம்தான்.
மூத்த வழக்குரைஞர்களாக, நீதிபதிகளாக, அரசின் சட்ட ஆலோசகர்களாக, அரசு வழக்குரைஞர்களாக பணியாற்ற வேண்டு மானால், அவர்கள் மாதத்துக்கு ஒரு வழக்கையாவது இலவச சட்ட உதவி மய்யத்தின்மூலமாக நடத்தி இருக்க வேண்டும் என்று இருக்க வேண்டும். பொதுநல வழக்குகளை நடத்திட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. -இவ்வாறு சட்டக்கதிர் ஆசிரியர் சம்பத் பேசினார்.
மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி
சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி அவர்கள் பெரியார் சட்ட உதவி மய்யம் பெயர்ப் பலகையைத் திறந்துவைத்து தமதுரையில், திராவிடர் கழகத்தின் சட்டத்துறையின் பணிகளைப் பெரிதும் பாராட்டினார். உயர்நீதிமன்றத்திலேயே சட்ட உதவி மய்யம் இருக்கிறது ஆனாலும், பெரியார் சட்ட உதவி மய்யம் தொடர்ந்து இயங்கி பெரியாருக்குப் பெருமை சேர்க்க வேண்டும். மாதம் ஒரு முறை சனிக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மக்களுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்கப்படும் என்று பெயர்ப்பலகையில் இருந்திட வேண்டும். சட்ட ஆலோ சனைகளை வழக்குரைஞர்கள் வழங்குகிறார்கள் என்று விடுதலையில் வெளியிடப்படும் செய்திகள்மூலம் மக்களுக்குப் போய்சேர வேண்டும். பொதுநலம் சார்ந்த பல்வேறு வழக்குகளை நான் நடத்திக்கொண்டு இருக்கிறேன் _இவ்வாறு மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி பேசினார்.
மேனாள் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி
சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி இலவச சட்ட உதவி முகாமை துவக்கி வைத்தார். அவர் பேசுகையில் குறிப்பிட்டதாவது: தந்தை பெரியார் 137ஆம் ஆண்டு பிறந்த நாள்விழாவில் பெரியார் சட்ட உதவி மய்ய விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் வல்லத்தைச் சேர்ந்தவன் என்றாலும், என்னுடைய 10 வயதில் திருவாரூரில் நான் படித்துக் கொண்டிருந்த போது, தந்தை பெரியார் 80 ஆம் ஆண்டு பிறந்த நாள்விழாவில் தந்தை பெரியார் பேசிய பேச்சை நினைத்துப் பார்க்கிறேன். அப்போது அங்கு பேசிய பலரும் 100 ஆண்டுகள் தந்தை பெரியார் அவர்கள் வாழவேண்டும் என்று பேசினார்கள். தந்தை பெரியார் பேசும்போது, இங்கு பேசிய எல்லாரும் கஞ்சத்தனமாக பேசுகிறார்கள். 100க்கு மேல் சொல்ல மாட்டேன் என்கிறார்களே என்றார். இப்போது தந்தை பெரியார் 137ஆம் ஆண்டு பிறந்த நாள்விழா நடைபெறுகிறது. வல்லம் பெரியார் நூற்றாண்டு தொழில் நுட்பக் கல்லூரி அமைந்த காலத்திலிருந்து தொடர்ந்து எனக்கு கழகத்துடன் நெருக்கம் இருந்து வந்துள்ளது. 25 ஆண்டுகளாக 2003ஆம் ஆண்டில் சட்டப்பணிகள் குழு உறுபபினராக இருந்துள்ளேன். அரசமைப்புச் சட்டத்தின் 39(ஏ) பிரிவின்படி அனைவருக்கும் சட்டம் தெரிந்திருக்க வேண்டும். 1976 ஆம் ஆண்டில் 1000 பேர் பீகார் சிறையில் விசாரணைகள் ஏதுமின்றி சிறையில் இருந்தார்கள். காரணம் அவர்களுக்குப் போதிய சட்ட விழிப்புணர்வு  இலவச சட்ட உதவி கிடைக்காததே காரணமாக இருந்தது. அதுகுறித்த கடிதத்தின் அடிப்படையில் நீதிமன்றங்களில் இலவச சட்ட உதவி மய்யம் இயங்கி வருகிறது. தேசிய சட்ட ஆணையக்குழுவில் ஓராண்டு பணியாற்றி உள்ளேன். சட்டத்தின் பணி என்பது கருவில் உள்ள குழந்தையிடமிருந்து தொடங்குகிறது. குழந்தை வளர்ப்பிலிருந்து, கல்வி கற்றலிலிருந்து, கல்லறை வரை இறந்தபின்னரும் இறப்பு சான்றிதழ்வரை சட்டத்தின் பணி உள்ளது.
சமுதாயம் பிரமிடு போன்ற அமைப்புடன் உள்ளது. செல்வாக்குப் படைத்தவர்கள் 5 விழுக்காடு, பணக்காரர்கள் 10 விழுக்காடு, உயர்தர நடுத்தரமானவர்கள் 10 விழுக்காடு, நடுத்தரத்துக்கும் கீழ் உள்ளவர்கள் 10 விழுக்காடு, வறுமையில் வாடக்கூடிய அன்றாடங் காய்ச்சிகள் 30 விழுக்காடு, வறுமைக்கோட்டுக்கும் கீழ் உள்ளவர்கள் 35 விழுக்காடு என்று சமுதாய அமைப்பு உள்ளது. இதில் கீழே உள்ளவர்கள் மேலே செல்வதற்குப் படிகள் இல்லை. அரசமைப்புச் சட்டம் எல்லோரும் சமம் என்று சட்ட உதவி சமமாக கிடைக்க வேண்டும் என்கிறது. வழக்குகளில் குடும்பப் பிரச்சினைகள் நிறைய வருகின்றன. குடும்ப ஆலோசனை மய்யம் செயல்படவேண்டும். நீதிபதி பணியிலிருந்து ஓய்வு பெற்று தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞராக பதிவு செய்துள்ளேன். பெரியார் சட்ட உதவி மய்யத்தின் வழக்குகளை நான் இலவசமாக நடத்தித் தர தயாராக இருக்கிறேன். இவ்வாறு மேனாள் நீதிபதி அக்பர் அலி பேசினார்.
கலந்துகொண்டவர்கள்: திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், வட மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம், அரும்பாக்கம் தாமோதரன், தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வழக்குரைஞர்கள்: முகாம் ஏற்பாடுகளில் பணியாற்றிய வழக்குரைஞர்கள் தமிழர் தலைவர் அவர்களின் பாராட்டைப் பெற்றார்கள். வழக்குரைஞர்கள் திருப்பூர் பாண்டியன், மு.சென்னியப்பன், ந.விவேகானந்தன், ஆலன் டேவிட் ரூபேஸ்,  அபிமன்யு, இரமேஷ், இராஜசேகரன், நாகநாதன், பாலசுப்பிர மணியன், ரவி, சுரேஷ், வெங்கடாசலம், சிவக்குமார், குணசேகரன், முனுசாமி, பிரகாஷ், பாக்கியராஜ், தமிழ்ப்பிரியன், கவிநிலவு, நெப்போலியன், மதிவதனி, பிரியதரிசினி, டேவிட் இளவரசு, சதீஷ், லட்சுமணன், பார்த்திபன், அருண்குமார், பிரகாஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
தொடக்க விழா இணைப்புரையை வழக்குரைஞர் ம.வீ.அருள்மொழி வழங்கினார். முடிவில் வழக்குரைஞர் ஜெ.துரைசாமி நன்றி கூறினார்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Friday, September 25, 2015

தந்தை பெரியாரின் பகுத்தறிவு வெளிச்சம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது

புதுக்கோட்டை, செப். 22_ புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கழக மாவட்டம் நாகுடியில் திராவிடர் விழிப்புணர்வு மாநாடு நடந்தது. இம்மாநாட்டிற்கு புதுக்கோட்டை மண்டலத் தலைவர் பெ.இராவணன் தலைமை வகித்தார். கழகத்தின் பொதுச் செயலாளர் இரா.செயக்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.குணசேகரன், மண்டலச் செயலாளர் சு.தேன் மொழி, 
புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் மு.அறி வொளி, செயலாளர் ப.வீரப்பன், அறந்தாங்கி மாவட் டச் செயலாளர் இளங்கோ, மாவட்ட அமைப்பா ளர்கள் தங்கராசு, ஆ.சுப்பையா, அறந்தாங்கி நகரத் தலைவர் பன்னீர்செல்வம், ஒன்றியத் தலைவர் சவுந்தரராசன், நாகுடி அமைப்பாளர் நெல்லுப்பட்டு ராமலிங்கம்,  மணமேல்குடி ஒன்றியச் செயலாளர் சிவசாமி, மண்டல இளைஞரணிச் செயலாளர் அ.சர வணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அறந்தாங்கி மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து அனைவரையும் வரவேற்றார். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சவு.ஞானாம்பாள் மாநாட்டுக் கொடியை ஏற்றி வைத்தார். திமுகவின் சொத்து பாது காப்புக்குழுத் தலைவர் அறந்தை இரா.இராசன் மாநாட்டைத் திறந்து வைத்தார்.
தலைமைக் கழகப் பேச்சாளர்கள் இராம.அன்ப ழகன், மாங்காடு மணியரசன் ஆகியோர் துவக்கவுரை ஆற்றினார்கள். மந்திரமா தந்திரமா நிகழ்ச்சியை சோம. நீலகண்டன் நிகழ்த்தினார். திமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் கே.பி.கே.தங்கவேலு அறந்தாங்கி சேர்மன் சிவ.வீ.மெய்யநாதன் முன்னாள் சேர்மன் பழ.சுப்பையா, 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின் மாவட்டச் செயலாளர் தெ.கலைமுரசு, தி.க. பொதுக்குழு உறுப்பினர் கு.கண்ணுச்சாமி மாவட்ட இளைஞரணித் தலைவர் ப.மகாராசா, மாவட்ட துணைத் தலைவர் க.முத்து, மாவட்ட இளைஞரணிச் செயலாளர் வீரையா, பட்டுக்கோட் அமைப்பாளர் வை.சிதம்பரம், மருத்துவர் மதியழகன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாநாட்டைத் திறந்து வைத்து சிறப்பு ரையாற்றிய அறந்தை ராசன் பேசுகையில்... இப்பகுதி ஆன்மீகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த பகுதியாகும். 
எங்கள் குடும்பம் பெரியதாகும். வருடம் முழுவதும் 12 -மாதங்களிலும் ஏதாவது திதி திவசம் என்று வந்து கொண்டேயிருக்கும். அதனால் என் கையால் பார்ப்பனர்களுக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டேயிருப்போம். இதெல்லாம் நான் திராவிடர் கழகத்தில் சேர்வதற்கு முன்புதான்.
பட்டுக்கோட்டை அழகிரி போன்றவர்ரகளிடம் பகுத்தறிவுக் கருத்துகளைக் கேட்டறிந்த பின்பும் அய்யா தந்தை பெரியார் அவர்களின் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு முழுமையான பகுத்தறிவுவாதியாக மாறிவிட்டேன். இப்போது எங்கள் குடும்பம் மட்டுமல்ல எங்கள் ஊரே மாறி விட்டது. அனைத்து சாதியில் உள்ளவர்களும் எங்கள் ஊரில் இருந்தபோதிலும் அந்தந்த சாதிக்குள் மட்டும் தான் சொந்த பந்தம் வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற நிலை மாறி அனைத்து சாதியிலும் அனைத் துச் சாதியைச் சேரந்தவர்களும் பெண் எடுத்தும் பெண் கொடுத்தும் வாழ்க்கை முறையை சமூக முறையை ஏற்படுத்தி உள்ளனர். இது தந்தை பெரியார் அவர்களின் கொள்கைக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும் என்றார்.
தமிழர் தலைவர் அய்யா அவர்கள் சிறப்புரையாற் றிய போது தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த கண்டு பிடிப்பான பல்பு இன்று உலகம் முழுவதும் உபயோகப் படுத்தப் படுகின்றன. அவரது கண்டு பிடிப்பு உலகை ஒளிமயமாக்கி வைத்திருக்கிறது. அதே போல் தமிழ கத்தில் பிறந்து பகுத்தறிவு வெளிச்சத்தைக் கொடுத் தவர் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்கள். அந்த பகுத்தறிவு வெளிச்சம் உலகம் முழுவதும் பரவி யிருக்கிறது. இயல்பாக நடந்ததுதான் என்றாலும் பல்பு கண்டு பிடித்ததும் தந்தை பெரியார் அவர்கள் பிறந்த தும் 1879-ஆம் ஆண்டு ஆகும். இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை வியக்கத் தக்கது.
உடல் உறுப்புகளில் அனைத்தும் சரியாக வேலை செய்ய வேண்டும். கண்கள் என்றால் இரண்டும் சரிசம மாக வேலை செய்ய வேண்டும். காதுகள் என்றாலும் அப்படித்தான். அதே போல் ஒவ்வொரு உறுப்புகளும் சரிசமமாக இருந்தால்தான் உடல் சரியாக இயங்கும். அதேதான் சமூகமும். ஆண்கள் உயர்வாகவும் பெண்கள் தாழ்ந்தும் இருக்கக் கூடாது. கல்வியிலும் சமூகத்திலும் ஆண்களுக்கு இணையான  பெண்கள் நிலை உயர்ந்திருக்க வேண்டும். அதைச் செய்தவர் தந்தை பெரியார் அவர்கள்.
பாரப்பனக் குடும்பத்திற்குக்கூட தந்தை பெரியாரின் கொள்கையும் போராட்டமும்தான் விடுதலை பெற்றுத் தந்திருக்கிறது. முன்பெல்லாம் பார்த்தால் பார்ப்பனக் குடும்பங்களில் மொட்டைப் பாப்பாத்தி என்று சொல்லி ஒதுக்கி வைத்திருப்பார்கள். அவர்கள் வெள்ளைச் சேலை உடுத்தியிருப்பார்கள். இப்போது அப்படி எல்லாம் அவர்கள் இல்லை. மாறிவிட்டார் கள். அவர்களின் இந்த மாற்றத்திற்குக் காரணம் பெண் கள் இப்படி இருக்கக் கூடாது என்று கூறிய அய்யா அவர்களின் கொள்கைதான்.
பாஜகவின் கொள்கை முடிவின்படி கடந்த டிச. 7-ம் தேதி அம்பேத்கர் இயற்றிய சட்டத்தை எடுத்து விட்டு மனுதர்மச் சட்டங்களைக் கொண்டுவர வேண் டும் என்கிறார்கள். அப்படிக் கொண்டு வந்தால் நாம் மீண்டும் பழைய காலத்திற்குச் செல்ல நேரிடும். பெரும் துன்பங்களைச் சந்திக்க வேண்டி வரும் என்று பல்வேறு கருத்துகளை எடுத்தக் கூறினார். அறந்தை மாவட்ட ப.க. தலைவர் செ.அ.தர்மசேகர் நன்றி கூறினார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

24-09-2015 விடுதலை நாளிதழ் Readwhere-ல் படிக்க

24-09-2015 விடுதலை நாளிதழ் Readwhere-ல் படிக்க இங்கு கிளிக் செய்யவும்

http://www.readwhere.com/read/597277/Viduthalai-Chennai/24-09-2015#page/1/1/rw 

பாலியல் குற்றவாளி சங்கராச்சாரிமீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? மகளிர் ஆணையம் எச்சரிக்கை

பெங்களூரு, செப்.24_ கருநாடக மாநிலத்தில் ஹோசாநகர் ராமச்சந் திரபூர் மடாதிபதியாக உள்ள சங்கராச்சார்யா ராகவேஷ்வர பாரதி என்பவர்மீதான பாலியல் வழக்கு ஓராண்டாக கிடப் பில் போடப்பட்டுள்ளது.
மடாதிபதி ராகவேஷ் வர பாரதி, பிரேமலதா சாஸ்திரி என்பவரை அரித்துவார், ஜோத்பூர் போன்ற பகுதிகளுக்கு அழைத்துச் சென்று  பாலி யல் வன்முறை செய்தார் என்று கருநாடக காவல் துறையினரிடம் கடந்த ஜனவரியில் புகார் கொடுத் திருந்தார். கருநாடக காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்தனர். உளவுப்பிரிவினரின் விசா ரணையில் அலைபேசிகள் பதிவுகளைக் கொண்டு அவர் அளித்த புகார் உண்மை என்று கண்டு பிடிக்கப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ். ரிஷிபாலுக்கு நெருக்கமானவர்
மடாதிபதிக்கு நெருக் கமாக இருந்து வருபவர் ஆர்.எஸ்.எஸ். அமைப் பைச் சேர்ந்த சேவா பாரதியின் தேசிய பொதுச் செயலாளரான ரிஷிபால் தாத்வால் என்பவர் ஆவார். அவரும் இவ்வழக் கில் முக்கிய சாட்சி ஆவார்.
ராகவேசுவர பாரதி என்கிற சாமியார்மீதான பாலியல் குற்ற வழக்கில் உரிய நடவடிக்கை எடுக் காத கருநாடக காவல் துறையின்மீது தேசிய மகளிர் ஆணையத் தலை வர் கண்டனத்தைத் தெரி வித்துள்ளார்.
தேசிய மகளிர் ஆணை யத் தலைவர் லலிதா குமாரமங்கலம் சாமியார் மீதான பாலியல் வழக்கில் கருநாடக காவல்துறை யினரின் மெத்தனப்போக் கைக் கடுமையாக கண்டித் துள்ளார். தேசிய மகளிர் ஆணை யத்தின் தலைவர் லலிதா குமாரமங்கம்  பெங்களூரு வந்திருந்தபோது, இவ் வழக்கில் சாமியார்மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்த கரு நாடக காவல்துறையினர் தொடர் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் மெத் தனமாக இருந்து வந்துள் ளனர். இரண்டாம் முறை யாக பெங்களூரு வந்த மகளிர் ஆணையத் தலை வர், சாமியார்மீதான பாலியல் வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய் யாத கருநாடகக் காவல் துறையினருக்கு கடும் கண் டனத்தைத் தெரிவித்துள் ளார்.
காவல்துறையினர், சாமியார்மீது உறுதியான நடவடிக்கை எடுக்கத் தவறியதாலேயே மகளிர் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தியுள்ளது. ஆனா லும், அதன்பின்னரும் குற்ற அறிக்கைகூட தாக் கல் செய்யாமல் இருந் துள்ளனர்.
மகளிர் ஆணையத் தலைவர் லலிதா குமார மங்கலம் கூறுகையில், இப்போது வளர்ந்து வரும் சூழ்நிலைகள் பெண்களுக்கு மாநிலத் தில் பாதுகாப்பு இல்லாத நிலையையே உணர்த்து கின்றன. குற்ற அறிக்கை அளிப்பதற்கு ஓராண்டு காலத்தை எடுத்துக் கொண்டு, ரகசியமாக வழக்கை நடத்த வேண்டிய அவசியம் என்ன? அரசி யல் தலையீடுகள் காரண மாகவே காவல்துறையினர் இவ்வழக்கில் அலட்சியத் துடன் நடந்துகொண்டுள் ளார்கள். பாதிப்புக்கு உள்ளானவர்கள் முகத்தை மூடிக்கொண்டு  செல்லக் கூடிய நிலையில், குற்ற வாளி சுதந்திரமாக நட மாடுவதா? இந்த வழக் கின்மூலம் பெண்களுக்குப் பாதுகாப்பின்றி அச்சத் துடன் இருக்கின்ற நிலையே உள்ளது என்பது தெரிகிறது. இதில் அரசி யல் தலையீடுகள்  இருப் பது என்பது வேதனை யானதாகும்.
கடந்த முறை நான் காவல்துறை உயர் அலு வலர்களை சந்தித்தபோது, கூடிய விரைவில் குற்ற அறிக்கையை அளித்து விடுவதாக உறுதி கூறினர். ஆனால், இன்றுவரை எதுவுமே செய்யவில்லை. பிணையில் வெளியே வந்துள்ள சாமியார் தன் ஆட்கள்மூலமாக பாதிக் கப்பட்ட பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வரு கிறார். பாதிப்புக்கு உள் ளான பெண்கள் என்னி டம் தங்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அச்சத்துடன் இருக்கும் நிலை உள்ளது   என்று குறிப்பிட்டுள்ளார்.

திராவிட இயக்கத்தின் பிள்ளை காமராசர்!

- பழ. கருப்பையா
சட்டப்பேரவை உறுப்பினர்
காமராசர் ஒப்பற்ற தலைவர்; தலையாய ஆட்சியாளர்; அறிவு தெளிந்த வயதிலேயே தேசிய நீரோட்டத்தில் கலந்தவர்; விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு ஏறத்தாழப் பத்தாண்டுகளைச் சிறையில் கழித்தவர்; தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்காகப் பத்து ஆண்டுகள் நாடாண்டவர்!
"தாய் மகனை மணந்து கொள்ளக் கட்டாயப்படுத்தியபோது, "விடுதலைக்குப் பிறகு பார்க்கலாம்' என்றவர்! ஆனால் அவருடைய வயதைப் போக்கிவிட்டுத்தான் விடுதலை வந்தது!
முறைசார்ந்த பள்ளிக் கல்வியைப் பெற்றவரில்லை; ஆனால் இணையற்ற அறிஞர்களுக்கு இணையாக அரசியல் நடத்தியாக வேண்டிய கட்டாயம் அவரை ஏராளமாகப் படிக்க வைத்தது!
அவர் அரசியலில் இணைந்த காலம் எம்மான் காந்தி இந்த நாட்டை வழி நடத்திய காலம்!
தன்னலமின்மை, உண்மை, தூய்மை, தியாகம், தேசியம், எந்த ஒன்றிலும் அறிவு சார்ந்த பார்வை என்னும் இவையே பொது வாழ்வின் அடிப்படை நிலைப்பாடுகள்! இவற்றில் நனைந்து ஊறி வளர்ந்தவர்தான் காமராசர்!
அரசியல் என்றால் "அகப்பட்டுக் கொள்ளாமல் அகப்பட்டதைச் சுருட்டுவது' என்னும் "அரிய அரசியல் தத்துவம்' அறியப்படாத காலம் அது!
சாதிகள் இருந்தன; ஆனால் அவை தலைதூக்கி ஆட முடியவில்லை; அவற்றிற்குப் பொதுவாழ்வில் எந்தப் பங்களிப்பும் இல்லை. மதத்தின் நிலையும் அதுதான்!
தாய் தளைப்பட்டிருக்கிறாள் என்னும் நிலை, "நாம் ஒரு தாய் மக்கள்' என்னும் உணர்வுப் பெருக்கத்திற்குக் காரணமானது!
1907-இல் வெள்ளைக்கார ஆட்சி வங்காளத்தில், இசுலாமியர்கள் மிகுதியும் வாழ்ந்த பகுதியைக் கிழக்கு வங்காளமாகத் தனித்துப் பிரித்தபோது, இசுலாமியர்களும் இந்திய சமயத்தவர்களும் ஒன்றாக இணைந்து, "நாங்கள் இந்தியர்கள்; எங்களைப் பிரிக்க நீ யார்?' என்று கடுமையாகப் போராடியதன் விளைவு, அந்த பிளவு மூடப்பட்டு மீண்டும் ஒரே வங்கமாக்கப்பட்டது. அந்தப் பிரிவினையை உண்டாக்கிய தலைமை ஆளுநர் கர்சான், பாரதியால் "கர்சான் என்னும் குரங்கு' என்று வாயார வசைபாடப் படுகிறார்!
ஆனால் அந்த வங்கப் பிரிவினையோடுதான் இந்திய விடுதலை மலர முடிந்தது என்னும் கால முரண் வேறு கதை!
ஆயினும் வங்கப் பிரிவினை நிகழ்ந்து சீர்செய்யப்பட்ட சிறிது காலத்தில் தமிழ்நாட்டில் "பார்ப்பனரல்லாதார் இயக்கம்' என்றொரு இயக்கம் பிட்டி தியாகராயர் தலைமையில் முளைவிட்டது!
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்றும் நீதிக்கட்சி என்றும், பல்வேறாக அது அறியப்பட்டாலும், அதனுடைய அடிப்படை பார்ப்பன மறுப்பே!
அடிமட்ட நீதிபதியிலிருந்து உயர்நீதிபதி வரை, அரசு அலுவலகங்களில் அடிநிலை எழுத்தரிலிருந்து, வெள்ளைக்காரனின் அதிகாரப் பகட்டில் ஒளிரும் நிருவாக சபை உறுப்பினர்கள் வரை, வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் என்று எல்லா வகை அலுவல்களும் அதிகாரங்களும் பார்ப்பனமயமாய் இருந்த காலம் அது!
கல்விக்குச் சாதியில்லை என்பதும், மேல், கீழ் என்னும் வேற்றுமை இல்லை என்பதும், கல்வி வாயில்கள் அனைவருக்கும் பொது என்பதும் வெள்ளைக்காரனால் நமக்கு ஏற்பட்ட நன்மைகளிலெல்லாம் பெரிய நன்மை!
கடலனைய பார்ப்பனரல்லாத பெருங் கூட்டத்தில் புதிதாகப் படித்துவிட்டு வந்த சிலருக்குக் கூட அலுவலுமில்லை; அதிகாரமுமில்லை என்பது சூட்டைக் கிளப்பியது!
அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாடு காங்கிரசு முழுக்கப் பார்ப்பனவசமாகி இருந்தது!
ஆங்கிலக் கல்வியின் முதற் பயனைப் பெற்றவர்கள் அவர்கள்தாம்! அதன் காரணமாக கோட்டைக்கு நெருக்கமாகி வெள்ளைக்காரனுக்கு நடைபாவாடை விரித்தவர்களும் அவர்கள்தாம்; "வெள்ளைக்காரனுக்கு இந்த மண்ணில் என்ன வேலை!' என்று முதலில் கேட்டவர்களும் அவர்கள்தாம்!
வெள்ளைக்காரனைக் கனவிலும் கலவரப்படுத்திய கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம் பிள்ளைக்கு இரட்டை ஆயுள் தண்டனை பெற்றுச் செக்கிழுக்கும் கொடிய ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பிறகு, மீண்டும் ஒரு பார்ப்பனரல்லாத தலைமை காமராசர் வாயிலாகக் கிளர்ந்தெழும் காலம் வரை, காங்கிரசு பார்ப்பனப் பிடிக்குள்தான் இருந்தது!
வ.உ. சிதம்பரம் பிள்ளை காலத்திற்குப் பிறகு காங்கிரசு மிதவாதத் தன்மையை அடைந்துவிட்டது!
காங்கிரசுக்காகக் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிடுபவர்கள் மூவர் என்றால் அந்த மூவரும் சேலம் விசயராகவாச்சாரியார், டி. ரங்காச்சாரியார், டி.ஆர். ராமச்சந்திர ஐயர் என்பன போன்ற பெயருக்குரியவர்களாகத்தான் இருப்பார்கள்! அந்தக் காலகட்டத்தில் மயிலாப்பூர்க் குழுவின் தலைவராயிருந்த மயிலாப்பூர் வி. கிருட்டிணசாமி ஐயர் வெள்ளைக்கார அரசில் மிகுந்த செல்வாக்குடையவராக இருந்தார்!
வாஞ்சி ஐயர், சுப்பிரமணிய சிவா, வ.வே.சு. ஐயர் போன்றவர்கள் நாட்டுப்பற்றில் குறைந்தவர்களல்லர்; தியாகத்திற்குப் பின்வாங்கியவர்களும் அல்லர்!
ஆனால் சாதியால் மேல், கீழ் என்பதல்லாத வெள்ளைக்காரன் ஆட்சி போன பிறகு, ஏற்படப் போகும் காங்கிரசின் ஆட்சி உயர்வு, தாழ்வை நிலைநிறுத்தும் பார்ப்பன ஆட்சியாகவே இருக்கும் என்று பார்ப்பனரல்லாதார் இயக்கம் கருதியதால், அவர்கள் வெள்ளைக்காரனுக்குச் சார்புநிலை எடுக்கும் அளவுக்குச் சென்றார்கள்!
இந்தச் சார்பு நிலை வரலாற்றில் பெரும் அதிர்வை உண்டாக்கிய ஈரோடு வெங்கடப்ப நாயக்கரின் மகன் இராமசாமி விடுதலை அடைந்த நாளைத் "துக்க நாள்' என்று வெளிப்படையாக அறிவிக்கும் நிலைக்கு இழுத்துச் சென்றது!
ஒரு பெருந் தேசபக்தராகவும், காந்தி பக்தராகவும் விளங்கிய ஈ.வெ.ரா., காந்தி கள்ளுக்கடை ஒழிப்பைச் சமூக உருவாக்கப் பணிகளில் ஒன்றாகக் கொண்டபோது, அதற்காகத் தன் தோட்டத்திலிருந்த விலைபெற்ற ஐநூறு தென்னை மரங்களை வெட்டி வீழ்த்திய பெருந்தகை; கதரைத் தலையில் தூக்கி விற்ற சீமான் வீட்டுப் பிள்ளை; தமிழ்நாடு காங்கிரசின் செயலாளராகத் தலைமைப் பொறுப்பில் இருந்த ஒரு பெருந் தலைவர், ஒருநாள் "எது தேசம்? எதற்கு அதன்மீது பக்தி? யார் இந்தக் காந்தி?' என்னும் தலைகீழ் மாற்றத்தை அடைந்தார் என்றால், அதற்குக் காரணம் என்ன என்பது வரலாற்றில் பெரிய கேள்வி அல்லவா?
அதற்கு அடிப்படையான காரணங்கள் பல உண்டு என்றாலும், காங்கிரசில் பெரியாரோடு சேர்ந்து பணியாற்றிய வ.வே.சு. ஐயரின் ஒரு நிலைப்பாடு, அந்த "ஈரோட்டு வெடிமருந்துக் கிடங்கு' தீப்பற்றிக் கொள்வதற்கும், அது வெடித்துச் சிதறி, தமிழ் நிலத்தில் ஒரு பூகம்பம் ஏற்படுவதற்கும் காரணமானது!
அண்ணல் காந்தி ஆங்கிலேயக் கல்வி நிறுவனங்களை மறுத்துத் தாய்மொழி வழியாகக் கல்வி என்பதை முன் வைத்ததை ஒட்டி சுதேசக் கல்வி நிறுவனங்கள் தோன்றின!
வ.வே.சு. ஐயர் அத்தகையதொரு கல்வி நிறுவனத்தைக் குருகுலம் என்னும் பெயரில் 1922-இல் சேரன்மாதேவியில் தொடங்கினார்!
காங்கிரசின் கல்விக் கொள்கையை வ.வே.சு. ஐயர் நடைமுறைப் படுத்த முன் வந்ததை ஒட்டி, காங்கிரசு அவருடைய நிறுவனத்திற்கு நிதி உதவி செய்தது; தனியார்களும் உதவினார்கள்!
ஆனால் குருகுலத்தில் உணவு உண்ணச் செய்யும்போது மாணவர்களை அமர்த்தி வைப்பதில் வேறுபாடு காட்டப்பட்டது என்பது பெருஞ் சலசலப்பை ஏற்படுத்தியது.
பார்ப்பனப் பிள்ளைகள் வேறு இடத்திலும், பார்ப்பனரல்லாத பிள்ளைகள் வேறு இடத்திலும் உணவு உண்ணுமாறு செய்யப்பட்டார்கள்!
சொ. முருகப்பா, வரதராசலு நாயுடு, அன்றையத் தமிழ்நாடு காங்கிரசின் செயலாளராக இருந்த ஈ.வெ.ரா. எனப் பலர் கொதித்தெழுந்தனர்! காந்தி வரையிலும் குறுக்கிட நேர்ந்தது!
"எங்களை இழிவுபடுத்துவதற்கா நாங்கள் பணம் கொடுத்தோம்? கொடுத்த பணத்தைத் திருப்பித் தாருங்கள்' என்றார் ஈ.வெ.ரா.!
"தருமம் செய்துவிட்ட பணத்தைத் திருப்பிக் கேட்கிறவர் நமது நாயக்கர் ஒருவர்தான்' என்று வ.வே.சு. ஐயர் நகையாடினாரே ஒழியப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவுமில்லை; முறையை மாற்றிக் கொள்ளவும் இல்லை!
""சன சமூகத்தில் இருக்கும் ஆசாரங்களை ஒட்டியே குருகுல ஆசாரங்களும் இருக்கும்'' என்னும் நிலைப்பாட்டில் திண்ணமாக இருந்தவர் வ.வே.சு. ஐயர்!
அருவியில் தவறி விழுந்த மகளைக் காப்பாற்றப் போய், தானும் தவறி விழுந்து வ.வே.சு. ஐயர் இயற்கை எய்தும் காலம் வரை இந்தச் சச்சரவு நீடித்தது.
பெரியார் காங்கிரசிலிருந்து வெளிவந்ததற்கு இடஒதுக்கீடு போன்ற இன்னும் பல காரணங்கள் உண்டெனினும், விடுதலை அடைந்த இந்தியாவில் பார்ப்பனரல்லாதாரின் நிலை எவ்வளவு இழிந்ததாக இருக்கும் என்று பெரியாரை உணரச் செய்தது சேரன்மாதேவி குருகுல நிலைப்பாடுதான்!
தன்மான இயக்கம் பிறக்கிறது. பார்ப்பனரல்லாதாரின் நலன் நீதிக்கட்சியினும் கூடுதலாக வலியுறுத்தப்படுகிறது.
"சமூகம் எப்படி இருக்கிறதோ, அப்படித்தான் குருகுலமும் இருக்கும்' என்று அதை நியாயப்படுத்த முயன்றவர்களை முறியடிக்க வேண்டுமென்றால், சமூகத்தை மாற்றியமைக்க வேண்டுமெனப் பெரியார் எண்ணினார்.
பார்ப்பன எதிர்ப்பு நிலை வேகம் பெற்றது! நாம் திராவிடர்கள் என்னும் புதிய நிலை முன்னெடுக்கப்பட்டது. நம்முடைய மொழி வேறு; நாகரிகம் வேறு; பழக்கவழக்கங்கள் வேறு; சமூக மதிப்பீடுகள் (Social Values) வேறு என்பது பார்ப்பனரல்லாதாருக்கு விளங்குமாறு எடுத்துரைக்கப்பட்டது! பெரியார் இந்த அரும்பெரும் பணியை வெல்லத்தக்க வகையில் செய்வதற்கு அண்ணா பெருந்துணையாக இருந்தார்!
வ.வே.சு. ஐயர் காலத்திற்கு முந்தியும் பிந்தியும் காங்கிரசில் பார்ப்பனத் தலைமையே நிலைபெற்றிருந்தது. 1937ல் இராசாசி தமிழ்நாட்டின் முதல்வரானார்!
ஆனால் பெரியாரின் திராவிட இயக்கம் தமிழ்நாட்டைப் புரட்டி எடுத்துக் கொண்டிருந்தது. பெரும் மாறுதல்கள் நிகழத் தொடங்கிவிட்டன!
காங்கிரசு பார்ப்பனர் கட்சி என்னும் நிலை காங்கிரசையே ஆட்டம் காணச் செய்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரசின் தலைவர் பதவிக்குத் தேர்தல் வருகிறது.
காங்கிரசின் தலைமைக்குப் போட்டியிட வேண்டியவர்கள் அதைத் தங்களின் பிடியில் வைத்திருந்த இராசாசியும் சத்தியமூர்த்தியும்தான்! அவர்கள் ஒருவருக்கொருவர் பகை!
நாடு திராவிட உணர்வுகளுக்கு ஆளாகி நிற்கும் நிலையில் காங்கிரசு மக்களிடையே வாழ வேண்டும் என்றால், தாங்கள் தமிழ் மக்களின் கண்ணை உறுத்தாமல் பின்னால் இருந்துதான் இயங்கியாக வேண்டும் என்னும் நிலைக்கு இரு தலைவர்களும் உள்ளாகினர்.
எந்தப் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க முடியாமல் பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறினாரோ, அந்தக் கட்சியின் பார்ப்பனத் தலைவர்கள் தங்களை முன்னிறுத்திக் கொள்ள முடியாத ஒரு நிலையைப் பெரியார் வெளியில் இருந்து ஏற்படுத்தி விட்டார்!
காங்கிரசு மக்களிடம் நிலை கொள்ள வேண்டும் என்றால், பார்ப்பனரல்லாத ஒருவரின் தலைமை மலர்ந்தாக வேண்டும் என்பது காலக் கட்டாயம்!
1940-இல் நடைபெற்ற அந்தத் தேர்தலில் சத்தியமூர்த்தி தன் சீடர் காமராசரையும், இராசாசி தன் சார்பாக சி.பி. சுப்பையாவையும் நிறுத்துகின்றனர்!
காமராசர் வெறும் இரண்டே இரண்டு வாக்குகளில் தமிழ்நாடு காங்கிரசின் தலைவராகிறார். ஒரு பார்ப்பனரல்லாதார் தலைவராகி, அவருடைய அதிகாரத்தால் சத்தியமூர்த்தி செயலாளராக நியமனம் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது!
ஆயினும் காமராசர் சத்தியமூர்த்தியை ஒரு குருவுக்குரிய இடத்தில் வைத்து இறுதி வரை போற்றினார்!
சத்தியமூர்த்தி காலத்திற்குப் பிறகு வலிமைமிக்க தலைவராக உருவானார் காமராசர்! பதினாறு ஆண்டுகள் தொடர்ந்து தலைவராக இருந்தார்! இறக்கும்வரை தமிழ்நாடு காங்கிரசு அவர் கைப்பிடிக்குள் இருந்தது.
1945-இல் திருப்பரங்குன்றத்தில் இராசாசிக்கும் காமராசருக்கும் நடந்த மோதலிலே காமராசர் மேலும் ஊன்றிக் கொண்டார்!
1952-இல் குற்றாலத்தில் குளித்து விட்டுக் காற்று வாங்கிக் கொண்டிருந்த இராசாசியை அழைத்து வந்து முதல்வராக்கினார்! அவருடைய கல்வித் திட்டம் "குலக் கல்வித் திட்டம்' எனத் திராவிட இயக்கத்தாரால் பழிக்கப்பட்டு, தமிழ்நாடு போர்க்களமானபோது, அதைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு இராசாசியிடம் காமராசர் வலியுறுத்தினார்! இராசாசி மறுத்துவிட்டுப் பதவியை உதறிவிட்டு வெளியேறினார்!
காமராசர் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தார். பத்தாண்டுகள் நிகரற்ற ஆட்சி நடத்தினார்! ஒரு நாள் அந்த நாற்காலியைப் புறங் காலால் எற்றி விட்டு தில்லி போனார்!
இராசாசி வெளியேற்றத்தோடு தமிழ்நாட்டு அரசியலில் பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்தது. பெரியாரின் நோக்கம் முற்றுப் பெற்றது!
செயலலிதாவின் எழுச்சி அவரின் திராவிட இயக்க நுழைவின் காரணமாக வேறுவகையானது. அது தனி ஆய்வுக்குரியது!
பற்றற்ற மனநிலையினரான இராசாசியின் பார்ப்பனத் தலைமை, இன்னொரு பற்றற்ற மனநிலையினரான காமராசரின் பார்ப்பனரல்லாத் தலைமையில் வெல்லப்பட்டது!
பார்ப்பனப் பிடியிலிருந்த காங்கிரசு பார்ப்பனரல்லாதாரைத் தலைவராக ஏற்றாக வேண்டும் என்னும் காலநிலையைப் பெரியாரின் போராட்டமும், அவருக்குத் துணையிருந்த அண்ணாவின் அருந்தமிழ் ஆற்றலும் ஏற்படுத்தின!
காமராசரின் தனி ஆற்றலும் பெருமையும் தான் அவருடைய உயர்வுக்குக் காரணம் என்றாலும், பெரியாரின் திராவிட இயக்கம்தான், ஓர் எளிய பார்ப்பனரல்லாதாரின் பயணத்தை இயலும் நிலைக்கு உள்ளாக்கியது!
பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்டிருக்காவிட்டால், பதினாறாம் லூயியின் வாரிசுகள்தாம் நாடாண்டு கொண்டிருப்பார்கள்! பிரெஞ்சுப் புரட்சி பதினாறாம் லூயியை ஒழித்துக் கட்டியது! காலியாக இருந்த அரியணையில் நெப்போலியன் ஏறி அமர்ந்து கொண்டான்.
அதனால் நெப்போலியனைப் பிரெஞ்சுப் புரட்சியின் பிள்ளை என்பார்கள் வரலாற்றாசிரியர்கள்!
அதுபோல, தலைவர்களுக்கெல்லாம் தலைவரான காமராசர் திராவிட இயக்கத்தின் பிள்ளை!
நன்றி: தினமணி 23.9.2015

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

பார்ப்பனர்கள் பின்புத்தியும் தந்தை பெரியாரின் தொலைநோக்கும்!


குஜராத்தின் படேல் சமூகத்தினர் தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி நடத்திய கிளர்ச்சி நாடு தழுவிய அளவில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு மாநிலங்களிலும் பல சமூகப் பிரிவினரும் இதேபோல் கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், நிலச் சீர்திருத்தச் சட்டம் அமல் படுத்தப்பட்ட பிறகு கேரளாவில் நம்பூதிரிகளின் எண் ணிக்கை குறைந்துவிட்டதால், தங்களது சமுதாயத்துக்கு சிறுபான்மையினர் தகுதி வழங்கவேண்டும் என்று யோகஷேம சபா என்ற கேரள நம்பூதிரி பார்ப்பன அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் அக்கீரமன் கலாதாசன் பட்டாதிரிபாட் கோட்டயத்தில் கூறியதாவது: சிறுபான்மையினர் தகுதியை மாநில அளவில் கணக்கிட வேண்டும். தேசிய அளவில் கணக்கிடக் கூடாது. அண்மையில் வெளியிடப்பட்ட ஜாதி, மத கணக்கெடுப்பு அடிப்படையில், இடஒதுக்கீட்டு முறையில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் நம்பூதிரி பார்ப்பனர் களுக்கு உரிய இடங்கள் முறையாக வழங்கப்படுவதில்லை.
நம்பூதிரிகளுக்குச் சிறுபான்மையினர் தகுதி வழங்கப் பட வேண்டும். இதுதொடர்பாக சனிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறும் மாநில மாநாட்டில் விவாதிக்கப்படும். இந்த மாநாட்டை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தொடங்கி வைக்கிறார். சிறுபான்மையினர் தகுதி, இடஒதுக்கீட்டு முறை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து மத்திய அரசிடம் மனு கொடுக்க உள்ளோம். இவ்வாறு அக்கீரமன் கலாதாசன் பட்டாதிரிபாட் கூறினார்.
இட ஒதுக்கீடே கூடாது; அது திறமைக்குப் பங்கம் விளைவிக்கும் என்று கூப்பாடு போட்டவர்கள் இந்தப் பார்ப்பனர்கள்; அக்கருத்து உண்மைக்கு மாறானது.
இட ஒதுக்கீடு காரணமாக இடம் பிடித்தவர்கள் செயல்முறைகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்ப தெல்லாம் நிரூபிக்கப்பட்ட உண்மைகள். மயில்சாமி அண்ணாதுரை போன்ற தமிழர்கள், பெருமைப்படும் வகையில் சாதனை வீரர்களாக ஒளி வீசவில்லையா?
மதிப்பெண் தகுதியைப் பேசினால் ஓர் அம்பேத்கர் கிடைத்திருப்பாரா என்ற கேள்வியை உச்சநீதிமன்றத்தில் எழுப்பினாரே நீதிபதி இரவீந்திரன்.
அந்தக் கூப்பாடு பொய்யானது என்று தெரிந்த நிலை யில், அடுத்தகட்டமாக ஜாதி அடிப்படையில் இட ஒதுக் கீட்டால் ஜாதி உணர்வு மேலோங்குகிறது, தலைதூக்குகிறது என்று ஒப்பாரி வைத்தனர்.
எந்த ஜாதியின் அடிப்படையில் கல்வி உரிமை மறுக்கப்பட்டுக் கிடந்தார்களோ அந்த ஜாதியின் அடிப்படையில் கல்வி வாய்ப்பு அளிக்கப்படுவது என்பது நேர்மையையும், நீதியையும், சரியான வழிமுறையையும் சார்ந்ததாகும். கல்வி வளர்ச்சியால் ஜாதி உணர்வு குன்றுமே தவிர, தலைதூக்காது என்பது நிதர்சனமாகி விட்டது.
எதிர்த்துப் பார்த்து இட ஒதுக்கீட்டை ஒழிக்க முடியாது என்று திண்ணமாக உணர்ந்துவிட்ட நிலையில், பார்ப்பனர்கள் இப்பொழுது எங்களுக்கும் இட ஒதுக்கீடு தாருங்கள்! என்று விண்ணப்பம் போடும் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்; இது சமூகநீதிக்குக் கிடைத்திட்ட மகத்தான வெற்றியாகும்.
இந்தியாவிலேயே இட ஒதுக்கீடு அளித்த முதல் மாநிலம் தமிழ்நாடுதான் - நீதிக்கட்சி என்னும் திராவிட இயக்க ஆட்சிதான் (1928). மொத்தம் 14 இடங்களில் 2 இடங்கள் பார்ப் பனர்களுக்கு ஒதுக்கப்பட்டதே (அதாவது 14 விழுக்காடு) இதனை அன்றைக்கே எதிர்த்தவர்கள் இதே பார்ப்பனர்கள்தானே - மறுக்க முடியுமா?
14 விழுக்காடு கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டு விட்டு இப்பொழுது அதைவிடக் குறைவான விழுக்காட்டு இடங்கள் கேட்கும் நிலைக்கு அல்லவா ஆளாகியுள்ளனர்.
இந்த இடத்தில் ஒன்றை நினைவூட்ட வேண்டும். சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள் மண்டல் குழுப் பரிந்துரைப்படி வேலை வாய்ப்பில் 27 சதவிகித இட ஒதுக்கீடு - பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அளித்தபோது, இதே கேரள நம்பூதிரிப் பார்ப்பனர்கள் பூணூலையும், தர்ப்பைப் புல்லையும் அனுப்பினார்கள் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு. அந்தப் பார்ப்பனர் களுக்குக் காலணிகளை அனுப்பி வைத்தது திராவிடர் கழகம்!
இன்றைக்கு அதே பார்ப்பனர்கள் இட ஒதுக்கீட்டுக்கு மண்டியிடுவதை நினைத்துப் பார்க்கவேண்டும்.
பார்ப்பனர்களுக்கு முன்புத்தி கிடையாது என்று தந்தை பெரியார் கூறுவதுண்டு. இட ஒதுக்கீட்டைப் பார்ப்பனர்கள் எதிர்த்தால், அதே பார்ப்பனர்கள் இட ஒதுக்கீட்டைக் கேட்கும் காலம் வரும் என்று 1936 ஆம் ஆண்டிலேயே (குடிஅரசு, 14.6.1936, பக்கம் 11) தந்தை பெரியார் சொன்னாரே - அதுதான் எத்தகைய தொலைநோக்கு!
பார்ப்பனர்கள் தங்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப 3 சத விகிதம் இடம் கேட்கட்டும்; பிரச்சினைக்கு ஒரே அடியாக முடிவு ஏற்பட்டு விடுமே - சிந்திக்கட்டும்!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Tuesday, September 22, 2015

சென்னை-வில்லிவாக்கத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற 345ஆவது திராவிடர் விழிப்புணர்வு மாநாடு

சென்னை-வில்லிவாக்கத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற  345ஆவது திராவிடர் விழிப்புணர்வு மாநாடு
சென்னை, செப்.21_ வட சென்னை மாவட்ட திரா விடர் கழகத்தின் சார்பில் திராவிடர் விழிப்புணர்வு 345ஆவது வட்டார மாநாடு 18.9.2015 அன்று மாலை சென்னை_ வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
சுயமரியாதை சுடரொளிகள் தியாகராசன், குண சீலன், கடலூர்  கேசவன் நினைவரங்கத்தில் மாவட் டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் தலை மையில் நடைபெற்றது.
வடசென்னை மாவட்ட மகளிரணித் தலைவர் கு.தங்கமணி வரவேற்றார். வட மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, செய லாளர் வி.பன்னீர்செல்வம், மாநில தொழிலாளரணி இணை செயலாளர் பெ.செல்வராசு, பொதுக்குழு உறுப்பினர்கள் தி.வே.சு.திருவள்ளுவன், வெ.மு.மோகன் முன்னிலை வகித்தனர்.
கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, மாநில மகளிர் பாசறை செயலாளர் டெய்சி மணி யம்மை உள்பட கழக நிர்வாகிகள் பலரும் உரை யாற்றினர்.
பகுத்தறிவு கருத்துப் பொழிவாக தமிழர் தலைவர் உரை
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாநாட்டு சிறப்பு ரையில் பழமையான நினைவுகளை எடுத்துக்காட்டி உரை ஆற்றினார். இங்கு வரும்போது பழைய நினைவுகளோடு வந்தேன்.
தந்தை பெரியார் காலத்தில் கழகத்தின் பாசறையாக விளங்கிய பகுதி சென்னை வில்லிவாக்கம் பகுதி என்றும், சுயமரியாதைச் சுட ரொளி தியாகராசன் வழியில் அவர் வாழ்விணையர் பாப்பம்மாள், குணசீலனுக்குப்பிறகு அவர் வாழ் விணையர் தங்கமணி மற்றும் அவர் குடும்பத்தினர்,
அன்பாக உரிமையுடன் தம்பி என்று என்னை அழைப்பவர் கடலூர் கேசவன். அவருடைய பேரன் உள்ளிட்ட அனைவருமே இயக்கத்தில் ஈடுபட்டு தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள் என்பதை  பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
அரசமைப்பு சட்டத்தைக் கொளுத்தும் போராட் டத்தில் கலந்துகொண்டு  சிறைச்சாலை சென்றவர்கள் துரைக்கண்ணு, அயன்புரம் பக்தவச்சலம் என்று நீண்ட பட்டியலையே சொல்லலாம். அப்படி இயக் கத்தில் தீவிரமாக செயல்பட்ட பகுதி வில்லிவாக்கம் பகுதி. நம்முடைய இயக்கம் அடிப்படையில் பிரச்சார இயக்கம்.
ஆண்டுமுழுவதும் கூட்டங்கள், கருத்தரங் கங்கள், விடுதலை ஆண்டு விழா மலர் வெளியிடுவது என்று அனைத்துமே பிரச்சாரத்துக்காகத்தான். பெரியார் சொன்னதை நாங்கள் சொல்லி வந்தாலே எங்கள் வாழ்நாள் போதாது.
பலநேரங்களில் தந்தை பெரியார் கூறியதையே கூறினால் விளக்கம் கிடைத்துவிடும். பெரியார் திடலில் 21 அடி சிலையே பிரம்மாண்டமாக இருக்கிறது. திருச்சி சிறுகனூரில் அமையக் கூடிய 135 அடி உயர பெரியார் சிலைக்கு முன்னோட்டமாக இது அமைந்திருக்கிறது. அந்த சிலையின் பீடத்திலேயே பெரியார் கூறிய வாசகம் இருக்கிறது.
சிலை மணி அடிப்பதற்கு அல்ல.
பெண்ணடிமை, தீண்டாமை, ஜாதி, மதம் ஒழிய வேண்டும் என்கிற விளக்கங்கள் உள்ளன.
பிரச்சாரம்! பிரச்சாரம்!! பிரச்சாரம்!!!
பிறக்காத கடவுள் என்று பிறப்பு, இறப்பு இல்லை, கண்ணுக்குத் தெரியாதவர் என்று சொல்லி, கடவுள் பிறந்ததாக ஒரு நாளைச் சொல்கிறான். பிறக்காத கடவுளுக்கு பிறந்த நாள் என்று  விநாயகன் சதுர்த்தி,  ராம நவமி, கோகுலாஷ்டமி, கந்தன் சஷ்டி என்கிறான்.
இவை யாவும் தமிழா? இதிலிருந்துதமிழருக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று தெரியவில்லையா? இவைகளை விட்டுவிட்டால் கடவுளை மறந்து விடு வார்கள் என்று திருவிழா, பிரச்சார முறைகளாக மட்டுமன்றி பார்ப்பனருக்கு வருவாயும் பார்க் கிறார்கள்.
இதைவைத்து அவர்கள் பிரச்சாரம் செய் கிறார்கள்.  எனக்கு பிறந்த நாள் விழா என்பது பிரச் சாரம் என்று தந்தை பெரியார் கூறியுள்ளார். ராமன் பிறந்த நவமி, கிருஷ்ணன் பிறந்த அஷ்டமியில் எதுவும் செய்யக்கூடாது என்றால், கடவுள் பிறந்த நாள் ரொம்ப கேவலமான நாள், நல்ல நாள் இல்லை என்கிறான்.
தமிழர்கள் தோளில் துண்டு போடவும், வேட்டி கட்டவும், தாய்மார்கள் மாராப்பு உடுத்திக்கொள்ளவும் யார் காரணம்? போராடித்தான் உரிமைகளைப் பெற வேண்டியிருந்தது. நல்ல உடை உடுத்தக் கூடாது என்று மனுதர்மம் கூறுகிறது. நல்ல பெயர் வைக்கக்கூடாது என்றார்கள்.
இளைஞர்களுக்கு பெரியார் கொள்கை அறிந்து கொள்வது முக்கியமானது. மனுதர்மம், அரசமைப்பு, ஒருகுலத்துக்கு ஒரு நீதி என்று இருந்தது. பெண்கள் வாழ்நாள் முழுவதும் அடிமையாக்கப்பட்டனர். சூத் திரர்கள் மற்றவர்களுக்கு அடிமை என்றால், பெண்கள் எல்லா ஜாதியிலும் அடிமையாக்கப்பட்டார்கள்.
பிரம்மாவின் தலையில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந்தவன் சத்திரியன், தொடையில் பிறந்தவன் வைசியன், காலில் பிறந்தவன் சூத்திரன், மேலும் அவர்ணஸ்தர்கள் (OutCaste) என்று தொடக் கூடாதவர்கள், தீண்டத்தகாதவர்கள் பிரித்து வைத்தான்.
துப்புரவுப்பணிகளை செய்பவர்களின் பணி என்பது அர்ச்சகர் பணியைவிட ஆயிரம் மடங்கு மேலான பணியாகும். துணி வெளுப்பவர்கள், செருப்பு தைப்பவர்கள், சவரம் செய்பவர்கள்,
துப்புரவு பணி செய்பவர்கள் என்று அத்தியாவசியமான (Essential Services) பணிகளை செய்பவர்களை கீழ் ஜாதியி னராகவும், எந்த உழைப்பும் கொடுக்காமல் ரோடு ரோலர்போல் கொழுத்துக்கொண்டு இருப்பவனை மேல்ஜாதி என்றும் வைத்துள்ளார்கள். எந்த நாட்டில் இந்தக் கொடுமை இருக்கும்? இன்றைக்கு இந்த நிலைமை உண்டா?
ஜாதி அடிப்படையில் ஒதுக்கீடு என்றால், எந்த  நிலையில் வைக்கப்பட்டிருக்கிறானோ அந்த அடிப் படையில் முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பதற்கே.
சுதந்திரமடைந்து 65 ஆண்டுகள் ஆனபின்னும் மலம் அள்ளுகிற நிலை உள்ளதே. மோட்சத்துக்கு டிக்கட் கொடுக்கின்ற வேலையில்தானே பார்ப் பனர்கள் இருக்கிறார்கள்.
மனுதர்மத்தில் சூத்திரனுக்கு எதைக்கொடுத்தாலும் அறிவை, கல்வியைக் கொடுக்கக் கூடாது என்று உள்ளது.
வௌ¢ளைக்காரன்கூட கருப்பர் இனத்தவரை (நீக்ரோ) இன பேதத்துடன் நடத்தினான் என்றாலும், படிக்கக் கூடாது என்று சொல்லவில்லை.
அரசமைப்பு சட்டத்தில் முதல் திருத்தம் செய் வதற்கு காரணமானவர், சமூக நீதி நிலைநாட்டியவர் தந்தை பெரியார் ஆவார். கொள்கையை இடை விடாது பரப்பவேண்டும்.
இடஒதுக்கீடு கூடாது என்ற பார்ப்பனர்களே எங்களுக்கும் இட ஒதுக்கீடுவேண்டும் என்று கோரி பார்ப்பனர்கள் சார்பில் எஸ்.வி.சேகர் பெரியார் திடலில் எங்களை வந்து சந்தித்தார். எல்லார்க்கும் எல்லாம் என்பதற்குதான் இட ஒதுக்கீடு என்று இட ஒதுக்கீட்டு வரலாறை எடுத்துச்சொன்னோம். நீதிக்கட்சி காலத்தில் பார்ப்பனருக்கு இருந்த இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டியவர்கள் பார்ப்பனர்கள். இப்போது கேட்கிறார்கள்.
மாற்றம் மாற்றம் என்கிற சொல் இப்போது பலரிடமும் சிக்கிக்கொண்டுள்ளது. இருப்பதை மாற்றுவது என்கிறார்கள்.
மாற்றம் என்று கூறுவது ஏமாற்றத்துக்குத்தான் என்று கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போதே திராவிடர் கழகம் சொன்னது.
குஜராத்தில் 1984ஆம் ஆண்டில் இட ஒதுக்கீட்டை எதிர்த்தார்கள். இப்போது அதே வகுப்பினர் இடஒதுக்கீட்டைக் கோருகிறார்கள். படேல் சமூகத்து பெண்கள் போராடுகின்றனர். குஜராத்தில் இட ஒதுக் கீடு கோரும் போராட்டம். பெரியார் குஜராத்துக்கு சென்றுள்ளார்.
தமிழ்நாட்டில் பக்தவச்சலம் காலத்தில் 1965ஆம் ஆண்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போதுதான் இராணுவம் வந்தது.
குஜராத்தில் இராணுவம் செல்லக்கூடிய நிலையில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் ஆளும் பாஜக சட்டமன்ற உறுப்பினரை பெண்கள் முற்றுகையிட்டுள்ளார்கள். தொகுதிக்குள் அரசு நிகழ்ச்சியிலிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். இது போன்று 6 இடங்களில் பிரச்சினைகள் நடந்துள்ளன. இதுதான் குஜராத் மாடலா?
கிரிக்கெட் விநாயகர், நரமுக (மனித முக) விநாயகர், பெண் பிள்ளையார்_கணேசசிறீ என்றெல்லாம் புதிதுபுதிதாக சொல்கிறார்கள்.
கடவுளுக்கு ஏன் பூணூல்-? ஜாதி, மத வெறிகள் ஒழிக்கப்பட வேண்டும். அடுத்த தேர்தலைவிட, அடுத்த தலைமுறை முக்கியம்.
_இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர்தம் உரையில் குறிப்பிட்டார்.
கலந்துகொண்டவர்கள்
இம்மாநாட்டில் கழகப் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் அண்ணா.சரவணன், சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் செ.தமிழ் சாக்ரட்டிஸ்,
சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை, வடசென்னை மாவட்ட செயலாளர் தே.ஒளிவண்ணன், துணைத் தலைவர் கருங்குழி கண்ணன், துணை செயலாளர் செம்பியம் இராம லிங்கம், மாவட்ட மகளிரணி செயலாளர் பொறியாளர் இன்பக்கனி, சொ.அன்பு, இளைஞரணித் தலைவர் அன்புச்செல்வன், தளபதி பாண்டியன்,
பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.கோபால், செயலாளர் வெங்கடேசன், அமைப்பாளர் இராமு, தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, செயலாளர் இல.குப்புசாமி,
மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தய்யன், செயலாளர் அனகை ஆறுமுகம், பொழிசை கண்ணன், காரைக்குடி மாவட்டச் செயலாளர் பிராட்லா, தென் சென்னை மாவட்டத் துணை செயலாளர் கோ.வீ.ராகவன், அமைப்பாளர் செங்குட்டுவன், அரும்பாக்கம் தாமோ தரன், மதுரவாயல் பாலமுரளி, தென் சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் கு.செல்வேந்திரன்,
செயலாளர் சண்முகப்பிரியன், பொறியாளர் குமார், ஆவடி மணிகண்டன், இரணி யன், வழக்குரைஞர் ஜெ.துரைசாமி, சி.காமராசு, கொடுங்கையூர் தங்கமணி, அம்பத்தூர் சிவக்குமார், புழல் ஏழுமலை,  திருவொற்றியூர் கணேசன், பூவிருந்தவல்லி நகர செய லாளர் பெரியார் மாணாக்கன், பிழைபொறுத்தான், மகேஷ், சுரேஷ், லோகேஷ், சக்திவேல், இசையின்பன், பெரியார் களம் இறைவி, சி.வெற்றிசெல்வி,  சுமதி, உமா, தனலட்சுமி,
முனியம்மாள், ஜெயந்தி, பூவை செல்வி, நதியா, சீர்த்தி, ரமணி, திலகவதி, தமிழரசி, வெண்ணிலா, எழில்,  புழல் மாலதி, ஆவடி நதியா, கற்பகம், சசிகலா, த.மரகதமணி, பசும்பொன் செந்தில் குமாரி, பெரியார் பிஞ்சுகள் பகுத்தறிவு, ஜெனிமா மற்றும் இளைஞரணியினர், மகளிரணித் தோழியர், தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
வில்லிவாக்கம் கு.வீரமணி நன்றி தெரிவித்தார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...