Monday, September 28, 2015

சென்னையில் மட்டுமின்றி, மதுரை, நெல்லை தஞ்சை, திருச்சியிலும் பெரியார் சட்ட உதவி முகாம்!

சென்னையில் மட்டுமின்றி, மதுரை, நெல்லை தஞ்சை, திருச்சியிலும் பெரியார் சட்ட உதவி முகாம்!
சென்னையில் குடும்ப நல மய்யமும் புதுப்பிக்கப்படும்
சென்னை பெரியார் சட்ட உதவி முகாமில் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவிப்பு
பெரியார் சட்ட உதவி மய்ய பெயர் பலகையை தமிழர் தலைவர் ஆசிரியர் முன்னிலையில்  மூத்த வழக்கறிஞர் காந்தி திறந்து வைத்தார். உடன்: இலவச சட்ட உதவி முகாமை துவக்கி வைத்த நீதியரசர் ஜி.எம். அக்பர் அலி, முன்னாள் மாவட்ட நீதிபதி பரஞ்ஜோதி,  மூத்த வழக்கறிஞர்கள் தியாகராசன், வி.ஆர்.எஸ். சம்பத், த. வீரசேகரன், ச. இன்பலாதன், குமாரதேவன், பாண்டியன், துரைசாமி, சென்னியப்பன் ஆகியோர் உள்ளனர்.


சென்னை, செப்.27- சென்னையில் மட்டுமின்றி மதுரை, நெல்லை, திருச்சி, தஞ்சையிலும் பெரியார் சட்ட உதவி மய்யத்தின் சார்பில் முகாம்கள் நடத்தப்படும் என்றும், சென்னையில் சட்ட உதவி மய்யத்தோடு, குடும்ப நல மய்யமும் புதுப்பிக்கப்படும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.
சென்னை பெரியார் திடலில் எம்.ஆர்.ராதா மன்றத்தில் இன்று (27.9.2015) காலை திராவிடர் கழக சட்டத்துறை, பெரியார் சட்ட உதவி மய்யம், சட்டக் கதிர் இதழ் இணைந்து நடத்திய தந்தை பெரியார் 137ஆம் ஆண்டு பிறந்த நாள்விழாவில் சட்ட ஆலோசனை முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
பயனாளிகள் ஏராளமானவர்கள் திரண்ட   பெரியார் சட்ட ஆலோசனை முகாமில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தமிழத்தின் முக்கிய நகரங்களில் பெரியார் சட்ட உதவி மய்யத்தின் சார்பில் பெரியார் சட்ட ஆலோசனை முகாம்கள் நடைபெறும் என்றும், சென்னை பெரியார் சட்ட உதவி மய்யத்துடன் இணைந்த குடும்ப நல ஆலோசனை மய்யம் தொடர்ந்து புதுப்பிக் கப்பட்டு இயங்கும் என்றும் அறிவித்தார்..
திராவிடர் கழக சட்டத்துறைத் தலைவர் வழக் குரைஞர் த.வீரசேகரன் தலைமையில் நீதிபதி ஆர்.பரஞ்சோதி,  வழக்குரைஞர்கள் திராவிடர் கழக சட்டத்துறை செயலாளர் ச.இன்பலாதன்  ஆ.வீரமர்த் தினி, சு.குமாரதேவன் முன்னிலை வகித்து உரையாற் றினார்கள். வழக்குரைஞர் ஆர். ரத்தினக்குமார் வரவேற்றார்.
தமிழர் தலைவர்
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முகாமில் சிறப்புரை ஆற்றினார். அவர் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது:
பெரியார் சட்ட உதவி மய்யம் தற்போது புதுப்பிக் கப்பட்டுள்ளது. இப்போது முகாமில் 10 பிரிவுகளில், மேலும் பல தனிப்பிரிவுகளிலும் வழக்குகள் ஆலோ சனை அளிக்க உள்ளார்கள். இது ஒரு கூட்டு முயற்சி வெற்றி பெற்றே தீரும். கடந்த 17ஆம் நாள் அன்று தந்தை பெரியார் பிறந்தநாளில்  மருத்துவ முகாம் நடைபெற்றது.
இப்போது சட்ட உதவி முகாம் நடை பெறுகிறது. 23 ஆண்டுகளுக்கு முன்பாக (1992) மறைந்த தில்லை வில்லாளன், தண்டபாணி உள் ளிட்ட சட்ட வல்லுநர்கள் பெரியார் சட்ட உதவி மய்யத்தின் மூலமாக பல்வேறு பணிகளை ஆற்றி வந்தார்கள். இப்போது புதுப்பிக்கப்படுகிறது. பெரியார் இலவசம் என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. எல்லா விதிகளுக்கும் விதிவிலக்கு உண்டு என்பதைப்போல இம்முகாம் நடைபெறுகிறது. பல பேர் வீதிகளில் குடி யிருக்கும் அன்றாடங்காய்ச்சிகளாக இருக்கிறார்கள். பெரியார் சட்ட உதவி மய்யம் சார்பில் சட்ட ஆலோசனை முகாம்  அடுத்த படியாக திருச்சி, மதுரை, தஞ்சை, திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தமிழகம் முழுவதும் நடத்தப்படும்.
ஏற்கெனவே நீதியரசர் பி.வேணுகோபால், ஏ.கே.ராஜன் ஆகியோரைக்கொண்டு பெண்களையும் இணைத்து பெரியார் குடும்ப ஆலோசனை மய்யம் இயங்கி வந்தது. பெரியார் குடும்ப ஆலோசனை மய்யம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு விரைவில் செயல்படும். எங்கே அநீதி இருக்கிறதோ அங்கே நீதியின் தேவை உள்ளது. சாமியார் மோசடிகள்போன்ற குற்றங்களை தடுக்கும்வகையிலும் கழக வழக்குரைஞர்கள் செயல்பட வேண்டும். -_ இவ்வாறு தமிழர் தலைவர் தம் உரையில் குறிப் பிட்டார்.
சட்டக்கதிர் சம்பத்
சென்னை உயர்நீதி மன்ற மூத்த வழக்குரைஞர் ஏ.தியாகராஜன் தொடக்க உரையாற்றினார். பெரியார் சட்ட உதவி மய்யத்துடன் இணைந்து சட்டக்கதிர் இதழும் முகாமுக்கான பணிகளை செய்வதற்கு வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி தெரிவித்து உரை யாற்றிய சட்டக்கதிர் ஆசிரியர் டாக்டர் வி.ஆர்.எஸ்.சம்பத் அறிமுக உரையில் குறிப்பிட்டதாவது: பெரியார் சட்ட உதவி மய்யம் முதலில் மதுரையிலும், அடுத்து திருப்பூர், ஈரோடு நகர்களிலும் நடத்தப்பட்டு இப்போது சென்னையில் நடைபெறுகிறது. உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் அரசமைப்பு சட்டம் உள்ளது. இந்தியாவில் அரசமைப்பு பிரிவு 32 மூலமாக நீதிகோரி எந்த ஒரு குடிமகனும் நேரிடையாக உச்சநீதிமன்றத்தை அணுகலாம். பிரிவு 22 மூலமாக தீர்ப்பு விரைவாக முறையாக கிடைப்பதற்கு வழி உள்ளது. பிரிவு 21 மூலமாக அனைத்து நடவடிக்கைகளும் சட்டத்தின்படிதான் நடக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. அதனைக்கொண்டுதான் ஆட்கொணர்வு மனு ஹேபியஸ் கார்பஸ் வழக்கு போடும் உரிமை உள்ளது. நெறிமுறைக் கோட்பாடுகள் என்பதன்மூலமாக மக்களுக்கு சட்ட உதவி அளிக்கப்பட வேண்டும் என்பதற்கு 1984ஆம் ஆண்டில் நீதிபதி பகவதி அளித்த தீர்ப்பின்மூலமாக கட்டாயம் ஆனது. நாட்டில் வசதிபடைத்தவர்கள், செல்வாக்கு உள்ளவர்கள் நீதியை விலைக்கு வாங்கும் சூழல் உள்ளது. உலகம் முழுவதும் 342 வகைகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்றால், உணவு, உடை, உறைவிடத்துக்காக அல்ல. அனைத்தும் உரிமைகளுக்காக நடைபெறுகின்றன.
இந்தியா என்கிற நம் நாடு ஒரு கூட்டுக்குடும்பம் ஆகும். தனி ஒரு நாடல்ல. இலங்கைப்பிரச்சினையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும், சட்டமன்றமும் ஒரே குரலாக ஒலித்தும்கூட மத்திய அரசு முடிவு வேறாக உள்ளது. இந்தியாவில் 7 விழுக்காட்டினர் தமிழர்கள் உள்ளோம். மாநிலம், மக்கள், மொழி, இனம் ஆகிய அடிப்படையிலான உரிமைகளுக்காகப் போராடி வருகின்ற ஒரே அமைப்பு திராவிடர் கழகம்தான்.
மூத்த வழக்குரைஞர்களாக, நீதிபதிகளாக, அரசின் சட்ட ஆலோசகர்களாக, அரசு வழக்குரைஞர்களாக பணியாற்ற வேண்டு மானால், அவர்கள் மாதத்துக்கு ஒரு வழக்கையாவது இலவச சட்ட உதவி மய்யத்தின்மூலமாக நடத்தி இருக்க வேண்டும் என்று இருக்க வேண்டும். பொதுநல வழக்குகளை நடத்திட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. -இவ்வாறு சட்டக்கதிர் ஆசிரியர் சம்பத் பேசினார்.
மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி
சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி அவர்கள் பெரியார் சட்ட உதவி மய்யம் பெயர்ப் பலகையைத் திறந்துவைத்து தமதுரையில், திராவிடர் கழகத்தின் சட்டத்துறையின் பணிகளைப் பெரிதும் பாராட்டினார். உயர்நீதிமன்றத்திலேயே சட்ட உதவி மய்யம் இருக்கிறது ஆனாலும், பெரியார் சட்ட உதவி மய்யம் தொடர்ந்து இயங்கி பெரியாருக்குப் பெருமை சேர்க்க வேண்டும். மாதம் ஒரு முறை சனிக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மக்களுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்கப்படும் என்று பெயர்ப்பலகையில் இருந்திட வேண்டும். சட்ட ஆலோ சனைகளை வழக்குரைஞர்கள் வழங்குகிறார்கள் என்று விடுதலையில் வெளியிடப்படும் செய்திகள்மூலம் மக்களுக்குப் போய்சேர வேண்டும். பொதுநலம் சார்ந்த பல்வேறு வழக்குகளை நான் நடத்திக்கொண்டு இருக்கிறேன் _இவ்வாறு மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி பேசினார்.
மேனாள் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி
சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி இலவச சட்ட உதவி முகாமை துவக்கி வைத்தார். அவர் பேசுகையில் குறிப்பிட்டதாவது: தந்தை பெரியார் 137ஆம் ஆண்டு பிறந்த நாள்விழாவில் பெரியார் சட்ட உதவி மய்ய விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் வல்லத்தைச் சேர்ந்தவன் என்றாலும், என்னுடைய 10 வயதில் திருவாரூரில் நான் படித்துக் கொண்டிருந்த போது, தந்தை பெரியார் 80 ஆம் ஆண்டு பிறந்த நாள்விழாவில் தந்தை பெரியார் பேசிய பேச்சை நினைத்துப் பார்க்கிறேன். அப்போது அங்கு பேசிய பலரும் 100 ஆண்டுகள் தந்தை பெரியார் அவர்கள் வாழவேண்டும் என்று பேசினார்கள். தந்தை பெரியார் பேசும்போது, இங்கு பேசிய எல்லாரும் கஞ்சத்தனமாக பேசுகிறார்கள். 100க்கு மேல் சொல்ல மாட்டேன் என்கிறார்களே என்றார். இப்போது தந்தை பெரியார் 137ஆம் ஆண்டு பிறந்த நாள்விழா நடைபெறுகிறது. வல்லம் பெரியார் நூற்றாண்டு தொழில் நுட்பக் கல்லூரி அமைந்த காலத்திலிருந்து தொடர்ந்து எனக்கு கழகத்துடன் நெருக்கம் இருந்து வந்துள்ளது. 25 ஆண்டுகளாக 2003ஆம் ஆண்டில் சட்டப்பணிகள் குழு உறுபபினராக இருந்துள்ளேன். அரசமைப்புச் சட்டத்தின் 39(ஏ) பிரிவின்படி அனைவருக்கும் சட்டம் தெரிந்திருக்க வேண்டும். 1976 ஆம் ஆண்டில் 1000 பேர் பீகார் சிறையில் விசாரணைகள் ஏதுமின்றி சிறையில் இருந்தார்கள். காரணம் அவர்களுக்குப் போதிய சட்ட விழிப்புணர்வு  இலவச சட்ட உதவி கிடைக்காததே காரணமாக இருந்தது. அதுகுறித்த கடிதத்தின் அடிப்படையில் நீதிமன்றங்களில் இலவச சட்ட உதவி மய்யம் இயங்கி வருகிறது. தேசிய சட்ட ஆணையக்குழுவில் ஓராண்டு பணியாற்றி உள்ளேன். சட்டத்தின் பணி என்பது கருவில் உள்ள குழந்தையிடமிருந்து தொடங்குகிறது. குழந்தை வளர்ப்பிலிருந்து, கல்வி கற்றலிலிருந்து, கல்லறை வரை இறந்தபின்னரும் இறப்பு சான்றிதழ்வரை சட்டத்தின் பணி உள்ளது.
சமுதாயம் பிரமிடு போன்ற அமைப்புடன் உள்ளது. செல்வாக்குப் படைத்தவர்கள் 5 விழுக்காடு, பணக்காரர்கள் 10 விழுக்காடு, உயர்தர நடுத்தரமானவர்கள் 10 விழுக்காடு, நடுத்தரத்துக்கும் கீழ் உள்ளவர்கள் 10 விழுக்காடு, வறுமையில் வாடக்கூடிய அன்றாடங் காய்ச்சிகள் 30 விழுக்காடு, வறுமைக்கோட்டுக்கும் கீழ் உள்ளவர்கள் 35 விழுக்காடு என்று சமுதாய அமைப்பு உள்ளது. இதில் கீழே உள்ளவர்கள் மேலே செல்வதற்குப் படிகள் இல்லை. அரசமைப்புச் சட்டம் எல்லோரும் சமம் என்று சட்ட உதவி சமமாக கிடைக்க வேண்டும் என்கிறது. வழக்குகளில் குடும்பப் பிரச்சினைகள் நிறைய வருகின்றன. குடும்ப ஆலோசனை மய்யம் செயல்படவேண்டும். நீதிபதி பணியிலிருந்து ஓய்வு பெற்று தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞராக பதிவு செய்துள்ளேன். பெரியார் சட்ட உதவி மய்யத்தின் வழக்குகளை நான் இலவசமாக நடத்தித் தர தயாராக இருக்கிறேன். இவ்வாறு மேனாள் நீதிபதி அக்பர் அலி பேசினார்.
கலந்துகொண்டவர்கள்: திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், வட மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம், அரும்பாக்கம் தாமோதரன், தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வழக்குரைஞர்கள்: முகாம் ஏற்பாடுகளில் பணியாற்றிய வழக்குரைஞர்கள் தமிழர் தலைவர் அவர்களின் பாராட்டைப் பெற்றார்கள். வழக்குரைஞர்கள் திருப்பூர் பாண்டியன், மு.சென்னியப்பன், ந.விவேகானந்தன், ஆலன் டேவிட் ரூபேஸ்,  அபிமன்யு, இரமேஷ், இராஜசேகரன், நாகநாதன், பாலசுப்பிர மணியன், ரவி, சுரேஷ், வெங்கடாசலம், சிவக்குமார், குணசேகரன், முனுசாமி, பிரகாஷ், பாக்கியராஜ், தமிழ்ப்பிரியன், கவிநிலவு, நெப்போலியன், மதிவதனி, பிரியதரிசினி, டேவிட் இளவரசு, சதீஷ், லட்சுமணன், பார்த்திபன், அருண்குமார், பிரகாஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
தொடக்க விழா இணைப்புரையை வழக்குரைஞர் ம.வீ.அருள்மொழி வழங்கினார். முடிவில் வழக்குரைஞர் ஜெ.துரைசாமி நன்றி கூறினார்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...