Saturday, May 14, 2011

அரசியல் களத்திற்கு அப்பாலும் தி.மு.க.வுக்குப் பணிகள் உண்டு


இனம், மொழி, பகுத்தறிவு, பண்பாடு, சமூக நீதிக் களங்கள் உண்டு
அரசியலோடு இப்பணிகள் தொடரட்டும்! தொடரட்டும்!!
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை


நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்தும், அதே நேரத்தில் அரசியல் மட்டுமே தி.மு.க.வின் களமல்ல; மேலும் பல களங்கள் உண்டு என்றும் எடுத்துக் கூறியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்; அறிக்கை வருமாறு:

நேற்று (மே 13-2011) வந்த தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் முடிவுகள், அதிர்ச்சி தரத் தக்கவை - வெற்றி பெற்ற அணிக்கும், தோல்வியுற்ற அணியினரான (நம்) அனைவருக்கும்.

வெற்றி பெற்ற அ.தி.மு.க. அணியினர்கூட இவ்வளவு சாதகமான அலை போன்ற முடிவைப் பெறுவோம் என்று எண்ணவில்லை. அங்கே இடம் பெற்ற கூட்டணிக் கட்சியினர் பலரும் இதை நேற்று குறிப்பிட்டுள்ளார்கள்!

சாதனைகளுக்குக் கிடைத்த பரிசு!

இந்தத் தோல்வி, கலைஞர் (தி.மு.க.) அரசு சொன்னதையெல்லாம் செய்த அரசு, மேலும் சொல்லாததையும் கூடுதலாகச் செய்த அரசு என்பதால் அதற்குக் கிடைத்த வாக்காளர் பரிசா என்றால், ஆம் என்று ஒப்புக் கொள்ளுவதில் உண்மை பேசுவோர் எவரும் வெட்கப்படத் தேவையில்லை.

ஜனநாயகம் என்ற மக்களாட்சியின் விசித்திரங்களில் இதுவும் ஒன்று!

இவ்வளவு சாதனைகளுக்குப் பிறகுமா இப்படி ஒரு தேர்தல் முடிவு என்று கேட்கின்றனர் பல நண்பர்கள்.

நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் 1933-லேயே குடிஅரசில் எழுதிய வைர வரிகளை நினைவூட்டிக் கொண்டாலே அதற்குத் தக்க பதில் கிடைக்கும்.

நன்றி என்பது பலனடைந்தவர்கள் கட்ட வேண்டிய பண்பாகும்; உதவி செய்தவர்கள் எதிர்பார்க்கக் கூடாது. அப்படி எதிர்பார்த்தால் அது சிறுமைக் குணமேயாகும்

- இவ்வரிகள் மக்களின் இயல்புகளைக் காட்டும் கண்ணாடிகள் அல்லவா?

அன்று சர்ச்சிலுக்கு ஏற்பட்ட இதே நிலை!


இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனையும், நேச நாடுகளையும் அச்சு நாடுகள் அணித் தலைவர் சர்வாதிகார ஆரிய இட்லரிடமிருந்து காப்பாற்றி, போரில் மக்களுக்குத்   தன்னம் பிக்கை ஊட்டி, தளராது பாடுபட்டார் அன்றைய இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்.

எனது மக்களிடம் வியர்வையும், ரத்தமும், உழைப்பும் தாருங்கள் என்று கேட்பதைத் தவிர, நான் தருவதற்கு வேறுஒன்றுமில்லை என்று கூறி, மிகப் பெரிய போரை வென்று ஜனநாயகத்தை, சர்வாதிகாரம் கொல்லாமல் காத்த வின்ஸ்டன் சர்ச்சலின்  கன்சர்வேடிவ் கட்சியைத் தோற்கடித்தனர் பிரிட்டிஷ் மக்கள் - இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் நடந்த பிரிட்டனின் பொதுத் தேர்தலில். மக்கள் தீர்ப்பு - விசித்தரமானதாகவும் அதிர்ச்சியூட்டக் கூடியதாகவும் இருந்தாலும் அதைத் தலை வணங்கி ஏற்கிறேன் என்றுதான் இரும்பு மனிதர் வின்ஸ்டன் சர்ச்சில் அன்று கூறினார்!

சிரித்துக் கொண்டே கலைஞர் சொன்ன பதில்

தான் நின்ற தொகுதிகளில் எல்லாம் (திருவாரூர் உட்பட) தொடர்ந்து வென்றே சரித்திரம் படைத்த நமது முதல்வர் கலைஞர் அவர்கள், இவ்வளவு பெரிய தோல்வி கண்டும் சிறிதும் கலங்காமல், மனந் தளராமல், மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்துள்ளனர்; அவர் களுக்கு எனது வாழ்த்துக்கள் என்று சிரித்துக் கொண்டே சொன்னார் நேற்று!

எந்த நிலையிலும் எதிர் நீச்சல் போடத் தயங்காத ஈரோட்டுக் குரு குல வாசத்தின் பண்பையும், பழக்கத்தையும், எதையும் தாங்கும் அண்ணாவின் இதயமும் கொண்டவர் என்பதை இதன் மூலம் காட்டியுள்ளார்!

1967-இல் பச்சைத் தமிழர் காமராசர்கூட தோற்ற நிலையில், சாதனைகளை அதிக மாகச் செய்தோம் என்றாலும் நம்மைத் தோற் கடித்தார்கள் - மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன் என்றார்!

தொங்கு சட்டசபைக்குத் தமிழ்நாட்டில் வேலையில்லை

ஏன் இப்படிப்பட்ட தோல்வி தி.மு.க. கூட் டணிக்கு என்று அலசி ஆராய்வதற்கு போதிய அவகாசம் உள்ளது.

தமிழ்நாட்டு வாக்காளர்கள் என்றுமே கேரளத்தைப் போல, மேற்கு வங்கத்தைப் போல கூட்டணி ஆட்சியையோ, தொங்கு சட்ட சபையையோ விரும்பியதில்லை என்ற வரலாற்றை அடிப்படையாகக் கொண்டே அ.தி.மு.வுக்கு அதன் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவிற்கு தனித்த மெஜாரிட் டியைத் தந்துள்ளார்கள் என்பது தெரிய வருகிறது!

புதிய முதல் அமைச்சர் ஒன்றரை ஆண்டுக்குள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்

புதிய முதலமைச்சர் பொறுப்பேற்று, ஒன்றரை ஆண்டுகளுக்குள் தனது தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகளையெல்லாம் செய்து முடிப்பதாகக் கூறியுள்ளார் நேற்று ஒரு பேட்டியில்.

அதனை எதிர்பார்க்க, வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் அனைவருக்கும் உரிமை உண்டு. ஜனநாயகத்தில் அதோடு அதை வற்புறுத்தும் உரிமையும் உண்டு எதிர்க்கட்சிகளுக்கு - குறிப்பாக தி.மு.க.வுக்கு; கடுகு சிறுத்தாலும் காரம் போகாதல்லவா?
நல்ல சாதனைக்கு பிறகும் தோல்விகளை சந்திப்பது திராவிடர் இயக்கமான நீதிக்கட்சி  காலம் முதல் ஜனநாயகத்தில் இது முதல் தடவை அல்ல. புதிதும் அல்ல.

திராவிடர் இனத்தின் தலைவர் கலைஞரின் மவுனம் எளிதில் கலையக் கூடாது; தொடர வேண்டும் என்பதே நமது விழைவு.

தி.மு.க.விற்குப் பல களங்கள் உண்டே!

மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் அவர்களுக்கு, ஓய்வு என்பது சட்டசபை - ஆட்சி அரசியல் களத்திலிருந்துதான் ஓய்வே தவிர, அவரது தொண்டறத் தொடர் பணி களுக்கு அல்ல; இனமானப் போர்க்களம், சுயமரியாதைப் பிரச்சாரக் களம், சமூக நீதிக் களம், பகுத்தறிவு, எழுத்துப் பேச்சு, ஊடகம் களம்  - போன்றவை காத்துக் கொண்டிருக் கின்றன - வரலாற்றின் பல பகுதிகள் அவரால் எழுதப்படுவதற்காக!

அரசியல் களம் போல, சமரசங்களுக்கு உட்படாதவைகள் அக்களங்கள்! திராவிடர் - தமிழர் இனமானப் பிரச் சினைகள் என்ற பணிகள், ஈழத் தமிழர் வாழ்வுரிமை விடியல்  உள்ளிட்ட  பல்வேறு பிரச்சினைகள் உட்பட பகுத்தறிவுப் பிரச்சாரம் வரை எத்தனையோ களங்கள் காத்திருக் கின்றன தி.மு.க.விற்கு அரசியல் களத்திற்கும் அப்பால்!

இவற்றில் சாதிக்கப்பட வேண் டியவை நிரம்பவே உண்டு - அரசியலோடு வலிமையாக அந்தப் பணிகளும் தொடரப்பட வேண்டும்.

வெறும் பதவி அரசியலுக்காகத் துவங்கப் பட்டதல்ல தி.மு.க. என்பது நிரூபிக்கப்பட வேண்டும். மக்கள் வழங்கியுள்ள வாய்ப்பாக இதனைக் கருதி தி.மு.க.வின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.

புதிய அரசுக்கு வாழ்த்துக்கள்

சமுதாயப் புரட்சி இலட்சியங்களை செயல் படுத்த ஆட்சியைக் கருவியாக்கிடத்தான் அரசியல் கட்சியானோம் என்பதுதானே அண்ணா தந்த விளக்கம்?

அரசியல் நாகரீகப்படி  புதிய அரசுக்கு நமது வாழ்த்துக்கள்.
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

தி(இ)ன மலரின் திரிநூல்தனம்


- மின்சாரம்


தினமலரான இனமலருக்குச் சதா திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களைப் பற்றித்தான் கவலை!

அதுவும் சரிதானே, - பார்ப்பனர் களுக்குத் தங்களின் எதிரி யார் என்று சரியாகத் தெரிந்திருக்கிறது. பாழாய்ப் போன இந்தத் தமிழர்களுக்குத்தான் விவரம் போதவில்லை.
(1) ஏப்ரல் 25 ஆம் தேதி தினமலரில் தனபாலுக்கு இதோ ஒரு டவுட்.

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படவில்லையெனில், இனி காங்கிரஸ் கட்சி தமிழ் மண்ணை அறவே மறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டே தீரும்.

டவுட் தனபாலு: சட்டசபைத் தேர்தலில் 63 தொகுதிகளை அள்ளிக் கொடுத்து, காங்கிரஸ் பேரியக்கத்தை தமிழகத்தில் வளர்த்தே தீரணும்னு உங்க சகோதரர் கட்சி முடிவெடுத்து . . . அப்படி இருக்கும் போது, நீங்க சொல்றது எப்படி நிறைவேறும்னு புரியலையே
(தினமலர் 25--.4-.2011)

இதில் திராவிடர் கழகத்தின் நிலை என்ன என்பதை தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை வாயிலாகத் தெரிவித்திருக்கிறாரே (15.-3.-2011). நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு காங்கிரசுக்கு 63 இடங்களைக் கொடுக்கத் தேவையில்லை என்று அதில் கூறப் பட்டுள்ளதே. 

உண்மை இவ்வாறு இருக்க ஒரு மாதம் 9 நாள்கள் கழித்து இப்படி தினமலர் எழுதுகிறதே - என்ன ஞான பிரகாசம்!

இனமலர் தனபாலுக்கு இன்னொரு டவுட்

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: வன்னிப் பகுதியில் இலங்கை அரசு அப்பாவி மக்களான ஈழத் தமிழர்களை ஆயுதங்கள் மூலம் கொன்றிருக்கிறது.  சொந்த  நாட்டு மக்கள் மீதே அந்த மண்ணுக்குரிய தமிழர்கள் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தியது.

டவுட் தனபாலு: அப்படியா?

ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தாது என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறதா உங்க சேய்க் கழகத் தலைவர்தான் சொன் னாரு. அதன் அடிப்படையில்தானே அவர் உண்ணாவிரதத்தையே முடிச்சாரு. அப்படி அவர் சொன்னது உண்மை யில்லையா?   (தினமலர் 8-.5.-2011)

உத்தரவாதம் கொடுத்தது உண்மை தான். அதன்படி நடந்து கொள்ளவில்லை என்பதும் அதைவிட உண்மைதான். அதனைத்தான் திராவிடர் கழகத் தலைவர் இடித்துக் காட்டிச் சொல்லி யிருக்கிறார்.

இப்படி உத்தரவாதம் கொடுத்ததற்கு மாறாக நடந்து கொண்ட ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக்கு என்று திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு கட்சிகளும் குரல் கொடுக்கின்றன.

அது சரி ராஜபக்சேவைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டுமா-  வேண் டாமா? இதில் தினமலரின் நிலை என்ன? அதனை வெளிப்படுத்த முடியுமா?

(3) திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: இலங்கையில் இப்படி ஒரு இனப்படுகொலை நடந்ததற்காக இந்தியா தான் முதன் முதலில் ராஜபக்சேவை கண்டித்திருக்க வேண்டும். ஆனால் இந்தியா அதனைச் செய்யவில்லை. இந்திய அரசின் போக்கை வரலாற்றிலே என்ன என்று நினைப்பர்?

டவுட் தனபாலு:  தமிழகத்தில் இருந்த ஆட்சியாளர்களும், தலைவர்களும் மத்திய அரசை வலுவா வற்புறுத்துல. அதனால், மத்திய அரசு ஒண்ணும் செய்யலை _ ன்னு நினைப்பாங்க. வேற எப்படி நிணக்கச் சொல்றீங்க.

(தினமலர் 7-.5.-2011)

திராவிடர் கழகமோ, தி.மு.க.வோ மத்திய அரசை வற்புறுத்தலையாம் . . . தினமலர் பத்திரிகை தமிழ்நாட்டில் இருந்துதான் வெளியாகிறதா?

எத்தனைப் போராட்டங்களை திராவிடர் கழகம் நடத்தியிருக்கிறது. எத்தனை பேரணிகளை, மாநாடுகளை நடத்தி, தீர்மானங்கள் வாயிலாக திராவிடர் கழகம் மத்திய அரசை வலியுறுத்தியிருக்கிறது.

மதுரை, கரூர், பட்டுக்கோட்டை, திருவரங்கம், திருப்பத்தூர் என்று எத்தனை இடங்களில் மாநாடு கூட்டி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம்.

திராவிடர் கழகத்தின் இந்த நடவடிக்கையைப் பற்றி ஒரே ஒரு வரி செய்தி வெளியிட மனம் வராத பார்ப்பன ஏடு, மத்திய அரசுக்கு வக்காலத்து வாங்கி எழுதுகிறது என்றால், இதற்குப் பெயர்தான் பூணூல் புத்தி என்பது!

முதல் அமைச்சர் கலைஞரே உண்ணாவிரதம் இருந்து மத்திய அரசை வற்புறுத்தவில்லையா?

திருமாவளவன், பேரா. சுப.வீரபாண் டியன் போன்றவர்கள் வீராவேசமாகக் குரல் கொடுக்கவில்லையா? சகோதரர் வைகோ குரல் கொடுக்கவில்லையா?

இதற்கு மேல் மத்திய அரசை எப்படி வற்புறுத்த வேண்டும் என்று இனமலர் எதிர்பார்க்கிறது? அதனைச் சொல் லட்டுமே!

பேச நா இரண்டுடையாய் போற்றி என்று ஆரியர் பற்றி அறிஞர் அண்ணா அவர்கள் ஆரிய மாயை நூலில் அழகுற படம் பிடித்துக் காட்டினாரே.  அதனை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

Saturday, May 7, 2011

சங்கராச்சாரியார் பார்வையில் சாயிபாபா!


சங்கராச்சாரியார் பார்வையில் சாயிபாபா!

மின்சாரம்


இன்றைய ஆந்திரத்தைச் சேர்ந்த அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள கொல்ஸ் பள்ளி என்ற கிராமத்தில் வசித்த வெங்கடப்ப ராஜீ - ஈஸ்வரம்மா தம்பதியிருக்கு மகனாக நவம்பர் 23, 1926-_இல் பிறந்தார் பாபா. இந்தக் கிராமமே இப்பொழுது புட்டபர்த்தி என்ற பெயரில் விளங்குகிறது. புட்டபர்த்தி என்பதற்குப் புற்றுகள் நிறைந்த ஊர் என்று பொருள் இங்கு பாம்புகள் அதிகம்.

இவ்வூருக்குப் புற்றூர் எனப் பெயர் வரக் காரணம் உண்டு...


இங்கு வசித்த மாடு மேய்க்கும் வாலிபன், தன் மாடுகளைக் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மேய்ப்பான். திரும்பி வரும்போது, ஒரே ஒரு மாட்டின் மடியில் மட்டும், பால் இல்லாமல் இருப்பதைக் கவனித்தான். தொடர்ந்து சில நாட்களாக இதே நிலை நீடித்தது. அந்தப் பசுவை ரகசியமாக கண்காணித்தான்.

ஒரு நாள் தொழுவத்திலிருந்து கிளம்பி, மலையடிவாரத்துக்குச் சென்றது பசு. அங்கு ஒரு புற்று இருந்தது. இதிலிருந்து ஒரு நல்ல பாம்பு வெளியே வந்து மாட்டின் மடியில் வாய் வைத்துப் பாலைக் குடித்தது. வாலிபனுக்கு  அதிர்ச்சியும், ஆத்திரமும் ஏற்பட, அந்தப் பாம்பைக் கொல்வதற்காக ஒரு கல்லைத் தூக்கிப் போட்டான். உயிருக்குப் போராடிய பாம்பு பேசியது.

இந்த ஊரிலுள்ள இடையர்கள் இனி தொழில் செய்ய முடியாது.  பசுக்கள் அழிந்து விடும். இனி ஊர் முழுதும் புற்றாக மாறி, நல்ல பாம்புகள் குடி கொள்ளும் என சாபமிட்டார். அதன் பின் இந்தவூர் புற்றூர் ஆகி விட்டது.

காலையில் கிணற்றுத் தண்ணீர் இறைக்கச்சென்ற ஈஸ்வராம்பாவின் வயிற்றுக்குள் வானிலிருந்து கிளம்பி வந்த நீல ஒளி பாய்ந்தது. ஈஸ்வரம்பா மயங்கி விட்டார். இதன்பின்தான் வயிற்றில் புகுந்தது தெய்வீக ஒளி என பெரியவர்கள் கூறினர். இதிலிருந்து பத்தாவது மாதம் பாபா பிறந்தார். குழந்தைக்கு சத்ய நாராயண ராஜு என பெயரிட்டனர்.

சத்யா பிறந்தபின்  அவ்வூரில் பாம்புகள் அட்டகாசம் ஒழிந்தன.. இடையர்கள் மீண்டும் தம் தொழிலை சிறப்பாக நடத்தினர். பால்வளம் பெருகியது. பாம்பின் சாபம் நீங்கியது.  புட்டபர்த்தியில் பாபா பஜனைக் குழு ஒன்றைத் துவங்கினார். அக்டோபர் 20, 1940. பள்ளிக்கூடம் சென்றுவிட்டு திரும்பினார் சத்யா புத்தகங்களை வீசி எறிந்து விட்டு, இனி நான் சத்யா இல்லை. நான் திருமால், என் மாயை அகன்றது. இனி நான் உங் களுக்கு மட்டுமல்ல, இந்த உலகத்துக்கே சொந்தம்? என சப்தம் போட்டார்.

அவர் அண்ணி ஓடி வந்து பார்த்தார். சத்யாவின் தலையைச் சுற்றி ஒளிவட்டம் இருந்தது.

சாய்பாபா ஒரு கல்லில் அமர்ந்து போதனை செய்வார். அதை போட்டோ எடுத்துப் பார்த்தபோது அது ஷீரடி சாய்பாபாவாக மாறி தோற்றமளித்தது. ஷீரடி பாபாவின் அவதாரமாக கருதி மக்கள் அவரை வழிபட ஆரம்பித்தனர். இதன் பிறகு பல அற்புத லீலைகளை அவர் நிகழ்த்தினார். நோயாளிகளைக் குணப்படுத்தினார்.

புட்டபர்த்தியில் சாந்தாலயம் என்ற பகுதியில் மிகப் பெரிய கோயில் கட்ட முடிவெடுத்தார்.  பக்தர்கள் கோவிலை எழுப்பினர்.

அதுவே இப்பொழுது பிரசாந்தி நிலையம் எனப்படுகிறது நவ.23, 1950-_இல் இது திறக்கப்பட்டது.
இவ்வளவு தகவல்களும் வெளி யிட்டது தினமலர் வாரமலர் (நவம்பர் 20, 2005 பக்கம் 2,3).
ஒரு கடவுள் அவதாரத்தை உருவாக்குவதற்கு இவ்வளவு அறிவுக்கு ஒவ்வாத கட்டுக்கதைகளை,  பித்தலாட்டங்களை, மூடத்தனங்களை உருவாக்க வேண்டியிருக்கிறது. என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.

பசுவின் மடியில் பாம்பு பால் குடிக் குமா? பாம்புக்கு உள்ளது பிளவுபட்ட நாக்கு; - அதனால் உறிஞ்சிக் குடிக்க முடியாது என்பது அறிவியல் கூறும் -உண்மைத் தகவல்.

வயிற்றுக்குள் வானிலிருந்து கிளம்பி ஒரு நீல ஒளி பாய்ந்ததாம். அது என்ன நீல ஒளி? அது எப்படி வயிற்றுக்குள் பாயும்? அது எப்படி குழந்தையாகப் பிறக்கும்?

றீறீறீ புட்டபர்த்தியில் திடீர் பரபரப்பு - _ நிலாவில் தோன்றி அருள்பாலிப்பேன் -_ சாய்பாபா திடீர் அறிவிப்பு என்று நாளேடுகளில் ஒரு செய்தி தவழ்ந்து வந்தது (6.10.2007)

மாலை 6.30 மணி அளவில் சத்ய சாய்பாபா விஸ்வ ரூப விராத் தரிசனம் அளிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.  (நிலவில் தோன்றிதரிசனம் என்பது இதன் பொருளாம்!)

கைப்பேசி மூலமாகவும் குறுஞ்செய்தி மூலமாகவும் தகவல்கள் பரப்பப் பட்டன. அவ்வளவுதான் புட்ட பர்த்தியை நோக்கிப் பக்தர்கள் படையெடுத்தனர். பல்லாயிரக்கணக்கில் கூடி விட்டனர். சாயிபாபாவை நிலவில் அல்லவா பார்க்கப் போகிறோம் என்ற ஆசை அலை, ஆர்வ ஊற்றுப் பீறிட்டு அடிக்காதா? அமாவாசைக்கு இன்னும் 5 நாள்களே இருந்த நிலையில் அன்று நிலாவே தோன்றவில்லை; ஏமாற்ற மடைந்ததுதான் மிச்சம். இன்னொரு நாள் நிலவில் தோன்றுவேன் என்று கூறி சாயிபாபா சென்று விட்டார் (5.10.2007).

அதுதான் தெய்வ ஒளியாயிற்றே, அதற்கும் பத்து மாதம் தேவைப்படுமா? என்ற கேள்விகளை அறிவைப் பயன்படுத்திக் கேட்கவே கூடாது;. அப்படிக் கேட்டால் அதற்குப் பெயர் விதண்டாவாதமாம் -_ பகுத்தறிவை யெல்லாம் பக்தி விஷயங்களில் தலையிட அனுமதிக்கக் கூடாது என்று ஆக்கி வைத்திருப்பதற்குக் காரணம் மூடத்தனங்களை முற்றாகக் காப்பாற் றிடவே!

அப்படிக் காப்பாற்றுவதன் மூலம் தான் பார்ப்பனீயத்தை வாழ வைக்க முடியும் _ ஆண்டான் அடிமைத் தனத்தை நிலைக்க வைக்க முடியும்.

அடுத்து தினமணிக்கு வருவோம்.

தொடர்ந்து அய்ந்து ஆண்டுகள்கூட மக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கை யையும் பொது வாழ்க்கையில் ஈடுபட்ட நமது அரசியல் தலைவர்களால் தக்க வைத்துக் கொள்ள முடியாத ஒரு கால கட்டத்தில், ஏறத்தாழ 70 ஆண்டுகள் தனது பக்தர்களின் மனங்களில் சிம்மாசனமிட்டுத் தொடர்ந்து வழிகாட்டி வந்தார் என்றால், அதை நாம் வசியம் என்றோ, மேஜிக் என்றோ தள்ளி விடவா முடியும்? என்று தினமணி தலையங்கம் தீட்டுகிறது (25.4.2011)

எழுபது ஆண்டுகளாக பக்தர்கள் மனதில் இடம் பிடித்து விட்டாராம். அதனால் சாயிபாபா வசியக்காரர் என்றோ, மேஜிக்காரர் என்றோ தள்ளி விட முடியாதாம்.

பல நூற்றாண்டுக் காலமாக மாட்டு மூத்திரம், சாணி, பால், தயிர் வெண்ணெய் இவற்றைக் கலந்து பார்ப்பனப் புரோகிதன் கலந்து கொடுக்க அதனைப் பஞ்சகவ்யம் என்று போற்றி, தட்சணை கொடுத்து மொடாக் குடியனாகக் குடிப்பதால், அந்த அசிங்கம் அங்கீகரிக்கத்தக்கதுதானா?

எத்தனையோ முட்டாள்தனங்கள் பக்தியின் பெயரால் எத்தனை எத்தனையோ ஆண்டுகள் குடி கொண்டுள்ளன என்பதால் அந்த முட்டாள்தனங்களை முகம் சுளிக்காமல் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா?

பல நூற்றாண்டுக் காலமாக தீபாவளி கொண்டாடுகின்றனர் மக்கள் என்பதால் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலில் மூழ்கடித்தான். இரண்யாட்சதன் என்பதைத் தினமணி ஏற்றுக் கொள்கிறதா?

பூமியும், பன்றியும் புணர்ந்து பிள்ளை பெற்றது _ அவன்தான் நரகாசுரன் என்ற கட்டுக் கதையை காதைப் பொத்திக் கொண்டு தோப்புக் கரணமும் போட்டு ஆம் என்க! என்று ஆமோதிக்க வேண்டும் என்கிறதா தினமணி?

மேஜிக்குகளைச் செய்யும் சாயி பாபாவின் முகத்திரையை நேருக்கு நேர் கிழித்தாரே மற்றொரு மேஜிக்காரரான பி.சி. சர்க்கார்.

பிரதமர் நரசிம்மராவ் கலந்து கொண்ட புட்டபர்த்தியின் திருமண மண்டப திறப்பு விழாவில் கை அசைப் பில் தங்க சங்கிலியை வரவழைத்து நினைவுப் பரிசாக வழங்கிய சாயிபாபா வின் குட்டு - _ வீடியோ பதிவு மூலம் உடைபட்டதே _ படத்தோடு ஏடுகளி லும் அம்பலமானதே _ இதற்குப் பிறகும் சாயிபாபா தெய்வீகப் புருடர் _ தெய்வீக சக்தி மூலமாகத்தான் இவற்றையெல் லாம் செய்து காட்டுகிறார் என்று தினமணி எழுதுமேயானால் சாயிபாபா என்ற மோசடிக்காரருக்குத் துணை போகும் மோசடி ஏடு என்ற முடிவுக்குத்தானே வர முடியும்?

சரி, கல்கிக்கு வருவோம்.

ஷீரடி சாய்பாபா கோயில் சென்னை மைலாப்பூரில் இருக்கிறது. ஒரு முறை நண்பர் ஒருவர் நீதியரசர் கற்பக விநாயகத்தை அந்தக் கோயிலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால், அவருக்கு எந்த ஈடுபாடும் ஏற்பட வில்லை. பின்னர் தில்லிக்கு விமானப் பயணம் செய்யும் போது, நடுவானில் விமானம் குலுங்க, அது கட்டுப்பாட்டை இழந்து தரையை நோக்கிச் செல்லத் தொடங்கியது.

கடைசி நேரத்தை நெருங்கி விட்டோம் என்று பயணி களுக்குப் புரிந்து போனது. மனத்தில் கலக்கத்துடன் கண்களை மூடிய கற்பக விநாயகத்துக்கு ஷீரடி சாய்பாபா கோயில் தரிசனம் ஏனோ நினைவுக்கு வந்தது. கண்ணை மூடிக் கொண்டு ஷீரடி சாய்பாபாவை மனமுருக வேண் டினார். என்ன அதிசயம்! அவர் மனக்கண் முன் காட்சியளித்தவர் சத்ய சாய்பாபா. கவலைப்படாதே... ஒன்றும் ஆகாது என்று கைகளை உயர்த்தி ஆசி வழங்கி இருக்கிறார். அடுத்த சில நிமிடங்களில் சீரான நிலைப்பாட்டை அடைந்தது விமானம். அன்று எங்களைக் காப்பாற்றியவர் சிறீசத்ய சாய்பாபாதான். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு சுவாமிதான் என்னை வழி நடத்து கிறார் என்கிறார் கற்பக விநாயகம்.

உள்ளங்கையிலிருந்து அருவியாக விபூதி, வாயிலிருந்து லிங்கங்கள், கையை அசைத்து விரித்தால் தங்க, வைர மோதிரங்கள், கடிகாரங்கள்.. என்று ஆச்சரியங்களை அள்ளித் தெளித்து அற்புதங்களை நிகழ்த்தும் சாய்பாபா, நிஜக் கடவுளே வந்தாலும் நம்பாத காலம் இது. நான் மனிதன் அல்ல; தெய்வ அம்சம் என்று சொன்னால் யார் கேட்கப் போகிறார்கள்? உங்கள் மத்தியில் தெய்வமே அவதாரம் எடுத்து வந்திருக்கிறது என்பதை உணர்த்தவே நான் அற்புதங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது.

இல்லாவிட்டால் ஆசை, விரோதம், பொறாமை, கொடுமை, வன்முறை, நயவஞ்சகம் என்று, நல்லவர்களை, ஒழுக்கமுடைய வர்களை, பக்தர்களை தீய பாதைக்கு அழைத்துச் சென்றுவிடும். மக்களை என்னிடம் கொண்டு வந்து குவிக்கவே அற்புதங்களை நிகழ்த்துகிறேன் என்று ஒரு முறை சொன்னார்.

(கல்கி 8.5.2011 பக்கம் 4,5)

தெய்வ அவதாரம் எடுத்து வந்திருக் கிறேன் என்பதற்காகவே அற்புதங் களைச் செய்கிறேன் என்று சாயிபாபா சொன்னது பற்றிச் சிலாகிக்கிறது கல்கி.

இதற்கு முன் இந்துமத மகாவிஷ்ணு பல அவதாரங்களை எல்லாம் எடுத்ததாகச் சொல்லப்படுகிறதே அந்த அவதாரங்கள் எல்லாம் சாயிபாபாவைப் போல மேஜிக்குகளைச் செய்தனரா?

கடவுள் என்ற ஒன்று இருந்து, அதன் உண்மையான அவதாரமாக வந்துதித்தவர் சாயிபாபா என்றால் அற் புதங்களைச் செய்து காட்டித்தான் தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டுமா?
இவர்தான் பகவான் ஆயிற்றே -_ அவர்களின் நெஞ்சுக்குள் நிறைந்து நெக்குருகிப் போகச் செய்ய வேண்டி யதுதானே?

தன்னைக் கொலை செய்ய வந்தவர்களிடமிருந்து தப்பிக் குதிகால் பிடரியில் இரகசிய அறைக்குள் ஓடிச் சென்று தாழ்ப்பாள் போட்டுக் கொண்ட சங்கதிகள் எல்லாம் தெரியாதா? பகவான் என்பது  உண்மையானால், அவனை கொல்ல முடியுமா? மற்றவர் கள் மனதில் பகவானைக் கொல்ல வேண்டும் என்ற மருள் ஏற்படலாமா?

வருடம் ஒன்றுக்கு எத்தனை எத்தனையோ விமான விபத்துகள், ரயில் விபத்துகள் நடக்கின்றன. பரிதாபமாக மக்கள் பலியாகிறார்கள். அவர்களில் ஒருவராவது சாயிபாபாவை நினைக்காத தால் தான் அந்த விபத்துகள் நடந் தனவா? மக்களை விபத்துகளிலிருந்து காப்பாற்ற தானாக முன்வராதவர் எப்படி பகவான்?

ஒரு பொய்யை மறைக்க எத்தனை எத்தனை பொய் மலைகளை இவர்கள் சோடிக்க வேண்டியுள்ளது பார்த்தீர்களா?

சாயிபாபா அற்புதங்களைச் செய்வ தால் அவர் பகவான் சாயிபாபா தான், பகவான் அவதாரம்தான் என்று கல்கிகள் சாதிக்கப் பார்க்கின்றனவே.

அந்த அற்புதங்களை வசியங்களை சித்துகளை இவர்களின் ஜெகத் குரு சங்கராச்சாரியார் ஏற்றுக் கொள் கிறாரா? ஒவ்வொரு வாரமும் அந்தச் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் வண்ணப் படத்தை விடாமல் போட்டு பெரியவாளின் அருள்வாக்கை வெளியிட்டுக் கொண்டு தானே இருக்கிறது. கல்கி சாயிபாபா வின் தெய்வீகத் தேஜஸ்பற்றி பிரஸ் தாபிக்கும் அதே கல்கி இதழின் 33ஆம் பக்கத்தில் பெரியவாளின் அருள் வாக்கை வெளியிட்டுள்ளதே!

சாயிபாபாவா? சங்கராச்சாரியாரா? என்று கேள்வி கேட்டால் கல்கி கூட்டத்தார் பெரியவாளுக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள் என்பது நமக்குத் தெரியாதா?

அந்தப் பெரியவாள் சந்திரசேக ரேந்திர சரஸ்வதி இந்த மேஜிக்குகளை சித்துக்களைப்பற்றி என்ன திருவாய் மலர்ந்தருளுகிறார்?

கல்கத்தாவில் தங்கியிருந்த காஞ்சிசங்கராச்சாரியாரிடம் மந்திரம், மாயா ஜாலங்கள்பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ஆச்சரியார் அளித்த பதிலாவது:

மந்திரங்கள், மாயா ஜாலங்கள் மதத் துறையைப் பிடித்த ஒரு சாபக் கேடு. ஆன்மீக உலகின் தூய்மைக்குக் களங்கம் விளைவிக்கும் இத்தகைய யுக்திகளும், தந்திரங்களும் சமயத் துறையின் அங்கங்களாகப் பாவிக்கப்படுவது பெருந் தவறு. இந்து மதம் வெறும் மாய வித்தைகளைக் கொண்டதல்ல (23.10.1974).

சங்கராச்சாரியாரின் இந்த விமர் சனத்துக்கு தினமணி கல்கி வகையறாக்கள் என்ன பதிலைக் கையில் வைத்துக் கொண்டுள்ளன?

சங்கராச்சாரியாரால் கூறப்பட்டுள்ள அந்த சாபக்கேட்டுக்குப் பட்டுக் குஞ்சம் கட்டுகிறார்களே, எப்படி? பகவான் பாபாவைக் காப்பாற்ற வேண்டுமா னால்,  பெரியவாளைக் கை கழுவ வேண்டும். பெரியாவாளைக் காப்பாற்ற ஆசைப்பட்டால் பாபாவைத் தூக்கிக் கடாச வேண்டும். என்ன செய்ய உத்தேசமோ!

Friday, May 6, 2011

குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் தமிழ்மொழி ராஜ உபசாரத்தோடு கம்பீரமாய் நுழைந்தது! முதலமைச்சர் கலைஞர் பெருமித அறிக்கை


சென்னை, மே. 7- நேற்று நடந்த செம்மொழி விருது வழங்கும் விழாவையொட்டி, டில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் தமிழ்மொழி ராஜ உபசாரத்தோடு கம்பீரமாக நுழைந்தது என்று முதலமைச்சர் கலைஞர் கூறினார்.

இதுகுறித்து, முதலமைச்சர் கலைஞர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டில்லி நீதிமன்றத்தில் என் இளைய மகள் கனிமொழி நிறுத்தப்பட்டுள்ள இந்த நேரத்தில், இதை எழுதுகிறேன்.

புலவர்களின் செந்நாவில் புரண்டு, புயலாகவும், பூந்தென்றலாகவும், புறப்பட்ட தமிழ் - மூவேந்தர்களாம் சேர, சோழ, பாண்டியர்களின் அரண்மனையில் எதிரொலித்த இனிய தமிழ் - சங்கம் வளர்த்துச் சங்கநாதம் செய்த தமிழ் - வேங்கடம் முதல் குமரி வரை விதைகளைத் தூவி, வியப்புறு தருக்களை வளர்த்த தமிழ் - மலை தாண்டி, கடல் தாண்டி, மண்ணுலகின் முதன்மை மொழி என வலம் வந்த தமிழ் - மாளிகைகளில் மட்டுமே மணம் வீசிக்கொண்டிருந்த நிலையினை மாற்றி, அறிஞர் அண்ணாவால், மண் குடிசை களுக்கெல்லாம் கொண்டு செல்லப்பட்டு; குன்றிலிட்ட விளக்காய் வெளிச்சக் கதிர் பரப்பிய தமிழ் -எழுத்து, சொல், பொருள் என மூன்றிலும், மற்றெம்மொழியையும் விஞ்சி நிற்கும் தமிழ் - இன்றைக்கு (6.5.2011) டில்லி மாநகரில், `ராஷ்டிரபதி பவன்' எனப்படும் குடியரசுத்தலைவர்  மாளிகைக் குள், `ராஜ உபசாரத்தோடு' கம்பீரமாய் நுழைகிறது. ஆம்; மத்திய அரசின் சார்பில், சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கிடும் செம்மொழி விருதுகளைப் பெறுவதற் காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நமது தமிழ் அறி ஞர்கள், டில்லிக்கு அழைக்கப்பட்டிருக் கிறார்கள்.

சோனியாகாந்தியின் வழிகாட்டுதலிலும், டாக்டர் மன்மோகன்சிங்கின் தலைமையிலும் இயங்கிவரும் மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, கழகம் தொடர்ந்து வலியுறுத்தியதால், 12.10.2004 அன்று, தமிழைச் செம்மொழி எனப் பிரகடனம் செய்து, அறிவிக்கை வெளியிட்டது.

அதனையொட்டி - இதுவரை சமஸ்கிருதம், பாலி, ப்ராக்ருதம், அராபிக், பாரசீகம் ஆகிய மொழிகளில் விருதுகளுக்குத் தேர்ந் தெடுக்கப்பட்ட அறிஞர்கள் மட்டுமே; குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைக்கப்பட்டு, குடியரசுத் தலைவரால் கவுரவிக்கப்பட்டு வந்த பாரம் பரியத்தின் தொடர்ச்சியாக; முதல்முறையாக, நேற்று காலை 11.30 மணிக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில், நமது தமிழறிஞர்கள் கவுரவிக்கப் படுகிறார்கள் என்ற செய்தி உலகெங்கும் பரவிக் கிடக்கும் தமிழர்களின் செவிகளில் இன்பத் தேனாகப் பாய்ந்து கொண்டிருக்கிறது.

நமது இடையறாத முயற்சிகளின் காரணமாக, தமிழ் `செம்மொழி' என்று மத்திய அரசால் பிரகடனப்படுத்தப்பட்டதற்குப் பிறகு, நமது வேண்டுகோளை ஏற்று, மறைந்த எனது நண்பர் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங் மத்திய அரசின் சார்பில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வாயிலாக, ஆண்டுதோறும், 5 லட்சம் ரூபாய் சிறப்புப் பரிசுடன் "தொல்காப்பியர் விருது'', 5 லட்சம் ரூபாய் சிறப்புப் பரிசுடன் "குறள்பீடம் விருது'', ஒரு லட்சம் ரூபாய் சிறப்புப் பரிசுடன் அய்ந்து "இளம் அறிஞர் விருதுகள்'' ஆகியவற்றை வழங்குவதற்கு முன்வந்தார்.

அதனையொட்டி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவர் என்ற முறையில், எனது தலைமையில், இந்த விருதுகளுக்குரிய அறிஞர் பெருமக்களைத் தேர்ந்தெடுப்பதற்காக முனைவர் வா.செ. குழந்தைசாமி, முனைவர் மா.நன்னன், எழுத்தாளர் - நண்பர் ஜெயகாந்தன் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு; 2005-2006ஆம் ஆண்டு முதல் விருதுகள் வழங்கப் பட்டு வருகின்றன. இன்று (6.5.2011) குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் 2005 -2006, 2006-2007, 2007-2008 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன.

நூறு வயது கடந்த பெருமகனாருக்கு தொல்காப்பியர் விருது

2005-2006ஆம் ஆண்டுக்கான `தொல்காப்பியர் விருது' - 100 வயதைக் கடந்தவரும், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், மயிலம் தமிழ்க் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றத் தொடங்கி, சென்னைப் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரி யராகப் பணியாற்றி, தமிழ் மொழிக்கு அருந்தொண்டு புரிந்தவரும்; செம்மொழித் தமிழ் குறித்து 100-க்கும் மேலான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டவரும்; 65 நூல்களை எழுதியவரும்; பல்வேறு நிறுவ னங்களின் பரிசுகளையும், விருதுகளையும் பெற்ற வருமான பேராசிரியர் அடிகளாசிரியருக்கு வழங்கப் படுகிறது.

பேராசிரியர் அடிகளாசிரியர், `தொல்காப்பியர் விருதைப்' பெற்றுக்கொள்வதற்கு, சென்னையி லிருந்து டில்லிக்கு `ஏர் இந்தியா' விமானத்தில் சென்றிருக்கிறார். அவரது வாழ்நாளிலேயே இதுதான் முதல் விமானப் பயணம். அவரையும், மற்ற தமிழறிஞர்களையும் சென்னை விமான நிலையத்தில் `ஏர் இந்தியா' நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், முதுநிலை மேலாளர் எம்.பி.மேனன் ஆகியோர் வழியனுப்பி வைத்திருக்கின்றனர்.

2006-2007ஆம் ஆண்டுக்கான `குறள்பீடம் விருது' - அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவரும்; கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பல்லாண்டுக் காலம் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவரும்; தமிழ் மற்றும் வடமொழி ஆகிய இரு மொழி இலக்கியங்களையும் முறையாகக் கற்றுத் தேர்ந்தவரும்; அய்ரோப்பியச் செம்மொழிகளான லத்தீனம், கிரேக்கம் ஆகிய இருமொழி இலக்கியங்களையும் விரிவாகக் கற்றுத் தேர்ந்த வரும்; தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளின் இலக்கியங்களை மூல மொழியிலேயே விரிவாகக் கற்றவருமான பேராசிரியர் ஜார்ஜ் எல்.ஹார்ட்டுக்கு வழங்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் இன்றைய நிகழ்ச்சியில், உடல்நிலை காரணமாக அவர் கலந்துகொள்ள இயலவில்லை என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

2005-2006ஆம் ஆண்டுக்கான `இளம் அறிஞர் விருதுகள்'; விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆர்.அரவிந்தன், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் ஒய்.மணி கண்டன், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் எஸ்.கலைமகள், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் வா.மு.சே.முத்துராமலிங்க ஆண்டவர், புதுச்சேரியைச் சேர்ந்த முனைவர் கே.பழனிவேலு ஆகியோர்க்கும்;

2006-2007ஆம் ஆண்டுக்கான `இளம் அறிஞர் விருதுகள்'; மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் எஸ்.சந்திரா, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் அரங்க.பாரி, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் மு.இளங்கோவன், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் எம்.பவானி, நாகை மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் ஆர்.கலைவாணி ஆகியோர்க்கும்; 2007-2008ஆம் ஆண்டுக்கான `இளம் அறிஞர் விருதுகள்'; திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் ஏ.செல்வராசு, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் பி.வேல் முருகன், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் ஏ.மணவழகன், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் எஸ்.சந்திரசேகரன், நெல்லை மாவட் டத்தைச் சேர்ந்த முனைவர் எஸ்.சைமன் ஜான் ஆகியோர்க்கும்; இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கப்படுகின்றன.

தமிழ் உலகம் நீண்ட நெடுங்காலமாகவே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ``செம் மொழி விருதுகள்'' வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. நிகழ்ச்சி நடைபெறும் இந்த நாளில்; எனது நினைவுகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் தோன்றிப் பளிச்சிடுகின்றன.

முதன்முதலில் தமிழுக்குச் செம்மொழித் தகுதி கோரியவர் சூரியநாராயண சாஸ்திரியார் எனும் பரிதிமாற் கலைஞர் ஆவார். ``தமிழ் செம்மொழி என்பது திண்ணம். இதுபற்றி யன்றே தொன்று தொட்டுத் தமிழ் மொழி செந்தமிழ் என நல்லிசைப் புலவரால் நவின்றோதப் பெறுவதாயிற்று. ஆகவே தென்னாட்டின்கட் சிறந் தொளிராநின்ற அமிழ் தினுமினிய தமிழ் மொழி எவ்வாற்றான் ஆராய்ந்த வழியும், உயர் தனிச் செம்மொழியேயாம் என்பது நிச்சயம்'' என்று `தமிழ் மொழியின் வரலாறு' என்ற தமது நூலில், 100 ஆண்டுகளுக்கு முன்பே அறுதி யிட்டு உறுதியாகச் சொன்னவர் பரிதிமாற் கலைஞர்.

மதுரை-விளாச்சேரியில் பரிதிமாற் கலைஞர் வாழ்ந்த இல்லம் கழக ஆட்சியில் அரசுடைமை யாக்கப்பட்டு; 8 லட்சம் ரூபாய்ச் செலவில் புதுப்பிக்கப்பட்டு; இல்லத்தின் முகப்பில் அவரது மார்பளவுச் சிலை நிறுவப்பட்டு; 31.10.2007 அன்று என்னால் திறந்து வைக்கப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர் புத்தகத்தில், ``தமிழுக்குச் செம்மொழித் தகுதி கோரி குரல் கொடுத்த முதல் தமிழன் பரிதிமாற் கலைஞர் புகழ் வாழ்க!'' என நான் எழுதிக் கையெழுத்திட்டேன்.

தமிழ்மொழி `செம்மொழி' என முதல் குரல் கொடுத்த தமிழர் பரிதிமாற்கலைஞர் என்றால்; தமிழ் மொழி `செம்மொழி' என்று முதலில் சொன்ன வெளிநாட்டவர் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் ஆவார். ``திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்'' என்ற உயர் பெரும் நூலில் அறிஞர் கால்டுவெல், ``திராவிட மொழிகள் அனைத்திலும், உயர் தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் தமிழ், தன்னிடையே இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருதச் சொற்களை அறவே ஒழித்துவிட்டு உயிர் வாழ்வதோடு, அவற்றின் துணையை ஒருசிறிதும் வேண்டாமல் வளம் பெற்று வளர்வதும் இயலும்'' என்று நிறுவிக் காட்டி இருக்கிறார். அந்த சிறப்புக்குரிய ராபர்ட் கால்டுவெல் தமிழகத்தில், நெல்லை மாவட்டத்தில், இடையன்குடியில் வாழ்ந்த இல்லம், 20 லட்சம் ரூபாய்ச் செலவில் அரசுடைமையாக்கப்பட்டு; புதுப்பிக்கப்பட்டு, அவரது சிலை அங்கே நிறுவப்பட்டு; அந்த நினைவில்லத்தையும், சிலையினையும் 17.2.2011 அன்று சென்னையில் இருந்து `காணொலிக் காட்சி' வாயிலாகத் திறந்து வைத்தேன்.

அந்த நிகழ்ச்சியில் நான், ``தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், சிறப்புக்கும் கிறித்தவ அறிஞர்கள் ஆற்றியிருக்கும் அரிய பணியை இந்த இனிய வேளையில் நினைவு கூர்வது எனது கடமையாகும்'' என்று சுட்டிக்காட்டி; ``தமிழ் மொழியைப் பொறுத்தவரை, கிறித்தவர்கள் ஆற்றிய பணி பலவகைப்பட்டதாகும். தமிழ்நாட்டுக் கலைச் செல்வத்தை மேலை நாட்டினர்க்குக் காட்டினர் சிலர். தமிழ் இலக்கியத்தின் பண்புகளைப் பாட்டாலும், உரையாலும் விளக்கியருளினர் சிலர். இலக்கண வாயிலாக ஆராய்ந்து, தமிழின் தொன்மையையும், செம்மையையும் துலக்கினர் சிலர். மேலைநாட்டு முறையில் தமிழ் அகராதியைத் தொகுத்து உதவினர் சிலர். தெள்ளுதமிழ் வசன நடையில் அறிவு நூல் இயற்றித் தொண்டாற்றினர் சிலர்'' என்று சொல்லின் செல்வர் பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை குறிப்பிட்டுள்ளதை எடுத்துக்காட்டி உரையாற்றினேன்.

சென்னைக்கு வந்தது செம்மொழி தமிழாய்வு நிறுவனம்

மைசூரில் இயங்கி வந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தைக் கழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி, சென்னைக்கு மாற்றிய மைத்தது. நல்லெண்ணத்தின் அடிப்படையிலும், நம் மீதும், நமது மொழியின் மீதும் கொண்ட பற்றின் காரணமாகவும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் முன்னாள் அமைச்சர் அர்ஜுன் சிங், செம்மொழி நிறுவனத்தைச் சென்னைக்கு மாற்றியமைத்ததற்காக, அவருக்கு சென்னையில் 18.8.2007 அன்று தமிழக அரசின் சார்பில், என் தலைமையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

சென்னை-காமராசர் சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித் துறையின் பாலாறு இல்லத்தில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அலுவலகத் திறப்பு விழா 30.6.2008 அன்று நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்று; அலுவலகத்தைத் திறந்து வைத்து நான் உரையாற்றியபோது, "செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தமிழகத்தில் காலூன்றுகின்ற நாள், பரிதிமாற்கலைஞர் 150 ஆண்டுகளுக்கு முன்பு கண்ட கனவு -அந்தக் கனவு நனவாக வேண்டுமென்று 50 ஆண்டுகளுக்கு முன்பே நான் கொண்ட நினைவு இன்று செயலாக்கம் பெறுகின்றது.

இதையொட்டி எனக்கென்று உள்ள சொந்தப் பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாயை -இந்த நிறுவனத்தின் பொறுப்பில் - `கலைஞர் கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை' ஒன்றினை நிறுவிட வழங்குகின்றேன். இந்த ஒரு கோடி ரூபாயிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு, தமிழக வரலாற்றுப் பயன்மிக்க கல்வெட்டுகளை ஆய்வு செய்பவர் களுக்கு அறக்கட்டளையின் சார்பில் விருதுகளும், பொற்கிழிகளும் வழங்கப்படும்'' என்று நான் அறிவித்து; அதன்படி, 2009ஆம் ஆண்டுக்கான முதல் விருது - ``கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது'' - பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலாவுக்கு; கோவை யில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 10 லட்ச ரூபாய் பொற்கிழி, மதிப்புச் சான்றிதழ், நினைவுப் பரிசு ஆகியவை, இந்திய குடியரசுத் தலைவரால் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன.

2006-2007ஆம் ஆண்டுக்கான `குறள்பீடம் விருது'க்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமெரிக்க நாட்டுப் பேராசிரியர் முனைவர் ஜார்ஜ் எல்.ஹார்ட் என்மீது அளவிடற்கரிய அன்பும், ஆழமான நட்பும் பாராட்டுபவர். அவரது பெயரைக் கேட்கும் போதெல்லாம்; கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ``தமிழ் இருக்கை'' உருவாக்கப்பட்டதன் 10-ஆம் ஆண்டு விழாவின்போது வெளியிடப்பட்ட; எனது இலக்கியப் படைப்புகள் அடங்கிய `கலைஞர் களஞ்சியம்' என்னும் நூலுக்கு அவர் வழங்கிய முன்னுரையில், ``கலைஞர் புதினம், கட்டுரைகள், திரைக்கதைகள், சிறுகதைகள், வரலாற்றுப் புதினங்கள், அறிஞர்கள் கூறும் கருத்துகள் எனப் பலவிதங்களில் இலக்கியப் படைப்புகளை அளித்துள்ளார். தமிழர்களிடம் அவர்களின் பழம் பெருமையைச் சிறந்த முறையில் உணர்த்தியிருப்பவர் கலைஞர். கலைஞர் இலக்கியத்திலும், அரசியலிலும் ஆழ்ந்த அறிவுடையவர். அவர் வாழ்நாள் முழுவதும் தமிழ்மொழி, தமிழர் வாழ்வின் உயர்வுக்காகப் பாடுபட்டுள்ளார்'' என்று குறிப்பிட்டுள்ளதை என்னால் மறந்திட இயலாது.

புரட்சிக் கவிஞர் செம்மொழித் தமிழாய்வு நூலகம்

சென்னை-செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முன்னர் சட்டப்பேரவை நடைபெற்று வந்த மன்றத்தில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ``பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலக''த்தை மாற்றி அமைப்பதென்று கழக அரசு முடிவு செய்ததையொட்டி; அந்த நூலகம் 2.6.2010 முதல், ஆய்வுக்குப் பயன்படும் பல்லாயிரக் கணக் கான நூல்களுடன், வெகு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

இப்படி இன்னும் எத்தனையோ நினைவுகள், இன்று ஒவ்வொன்றாக வந்து என் இதயத்தை நிரப்பிக் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் எடுத்துச் சொல்ல காலமும், இடமும்தான் போதவில்லை. எனது எண்ணங்கள் எல்லாம் குடியரசுத் தலைவர் மாளிகையில் குழுமியுள்ள தமிழறிஞர்களைத்தான் வட்டமிட்டுக் கொண்டி ருக்கின்றன.

அவர்கள் அனைவரையும் இங்கிருந்த வாறே மனமார வாழ்த்தி மகிழ்கின்றேன்! குடியரசுத் தலைவர் மாளிகையில் தமிழறிஞர்கள் முதல் முறையாகச் சென்று, விருதுகள் பெறும் நிகழ்ச்சியை எண்ணி, குவலயத் தமிழர்கள் அனைவருமே வாழ்த்துகிறார்கள்! நீண்டநாள் கனவு நிறை வேறுகிறது!

இந்நாள் உலகத் தமிழர் அனைவர்க்கும் பொன்னாள்தானே!

-இவ்வாறு முதலமைச்சர் கலைஞர் கூறியுள்ளார்.

Wednesday, May 4, 2011

அமெரிக்காவிடம் இந்தியா கற்றுக்கொள்ளுமா?


அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க இராணுவக் குழுவால் கொல்லப்பட்டார் என்ற செய்தி உலகப் பரப்பில் எல்லாம் பெரும் அதிர்வை ஏற்படுத்திவிட்டது.

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் நாள் அமெரிக் காவின் - பாதுகாப்பு நிறைந்த இரட்டைக் கோபுரத்தை விமானம் மோதி அழித்ததில் பின்பலமாக- புலமாக இருந்தவர் இந்த ஒசாமா பின்லேடன்; அதன் காரணமாக குழந்தைகள் உள்பட மூவாயிரம் பேர் கொல்லப்பட்டனர்; அந்தப் பழியைத் தீர்க்கவே பத்தாண்டுகள் திட்டமிட்டு பின்லேடன் இப்போது கொல்லப்பட்டார் என்று ஊடகங்கள் கூறு கின்றன.

உண்மையாக இருக்கலாம். அமெரிக்காவின் பெரி யண்ணன் மனப்பான்மைக்குப் பாடம் கற்பிப்பதற்காக பின்லேடன் செய்த அதிரடி இது என்று சொல்லப்படு வதுண்டு. அதே நேரத்தில் எந்தப் பயங்கரவாத அமைப் பாக இருந்தாலும் சரி, அவர்களின் நடவடிக்கைகளால் எந்தவிதத்திலும் சம்பந்தம் இல்லாத அப்பாவிப் பொதுமக்கள் - குழந்தைக் குட்டிகள் கொல்லப்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது - ஏற்றுக்கொள்ளவே முடியாது.

இதனை ஒரு மதப் போராக மாற்றிட பலரும் முயற்சிக் கக்கூடும். (அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவரே இதற்கு விதிவிலக்கல்ல).

அப்படி ஒரு பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்படுமானால், அது உலகம் தழுவிய அளவில் பெரும் அளவில் பாதிப்பை ஏற்படுத்திவிடும்; ஒரு தனி மனிதனின் வெறி உணர்ச்சி பூகம்பமாகி, மக்களை அழிக்கும் வெறித்தனத்துக்கு எந்த வகையிலும் கத்தி தீட்ட அனுமதிக்கக் கூடாது - கூடவே கூடாது. இஸ்லாமிய தீவிரவாதம் என்று பரப்புரை செய்பவர்களின் நோக்கம் தீயதன்மை கொண்டதாகும்.

எங்கள் நாட்டு மக்களை ஆயிரக்கணக்கில் அழித்த பயங்கரவாதியை அழித்தோம் என்று கூறும் அமெரிக்கா, பொதுமக்கள் உயிருக்கு இழப்பு ஏற்படாமல் நடந்து கொண்டது ஒரு வகையில் வரவேற்கத்தக்கது என்பதில் அய்யமில்லை.

அதே நேரத்தில், இந்தியாவில் ரத யாத்திரை என்ற பெயராலும், பாபர் மசூதி இடிப்பு என்ற பெயராலும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட நிகழ்வுகள் உண்டு. இதன் பின்னணி என்பது முழுக்க முழுக்க மதவாதப் பின்னணியேயாகும்.

இத்தகைய சக்திகள் ஒடுக்கப்பட வேண்டியது அவசியம் என்பது மனித நலனில் அக்கறை கொண்ட வர்களின் பொறுப்பான எதிர்பார்ப்பாகும்.

10  ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க மக்களை ஆயிரக் கணக்கில் கொன்றவர்களை நாடு தாண்டிச் சென்று அமெரிக்காவால் பழி வாங்க முடிகிறது. இந்தியாவிலோ பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமானவர்கள் உள்நாட்டில் இருந்தாலும், சட்ட ரீதியாக 19 ஆண்டுகளுக்குப் பிறகும்கூடத் தண்டிக்க முடியவில்லை என்பது தலைகுனியத்தக்க வெட்கக் கேடான போக்காகும்.

வன்முறையாளர்கள் தண்டனைக்கு உட்படுத்தப் படவில்லையானால், அந்த நிலை வன்முறையாளர்களின் எண்ணிக்கையை வலுப்படுத்திக் கொண்டே போகும் - இளைஞர்கள் வன்முறையின் காதலர்களாக மாறக் கூடிய பேராபத்தும் ஏற்பட்டுவிடும்.

இந்த நேரத்தில் இன்னொரு சிந்தனை அவசியம் எல்லோர் உள்ளத்திலும் ஏற்பட்டாக வேண்டும். அப்படி ஏற்படுவதுதான் உத்தமமான மனிதர்களாக நாம் இருக்கிறோம் என்பதற்கான பொருளுமாகும்.

மூவாயிரம் அமெரிக்கர்களை அல்கொய்தா அமைப்பு கொன்றதைப் பழி தீர்க்கவே பின்லேடன் கொல்லப்பட்டார் என்று நியாயம் கற்பிக்கும் அரசியல் புள்ளிகள், ஊடகங்கள், விமர்சனகர்த்தாக்கள் - ஒரு லட்சம் மக்களை கொடூரமான முறையில் இலங்கைத் தீவில் அழித்தானே கொடுங்கோலன் ராஜபக்சே - அவன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

தமிழர்களை இந்தியர்கள் என்று இந்திய அரசு உண்மையிலேயே கருதுமேயானால், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஏற்பட்ட அதே உணர்வு இந்தியாவை ஆண்டுகொண்டிருப்பவர்களுக்கும் ஏற்பட்டு இருக்கவேண்டுமே?

இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி கொடுங்கோலன் ராஜபக்சேவைக் கொல்லவேண்டும் என்று கூடக் கூறவில்லை - இந்தியாவின் தென்கோடி யில் வாழும் தமிழர்களின் தொப்புள்கொடி உறவு கொண்டவர்களான ஈழத் தமிழர்களை அழிக்கத் துணை போகாமல் இருக்கக்கூடாதா என்பதுதான் மிக முக்கிய வினாவாகும்.

அமெரிக்காவைப் பார்த்த பிறகாவது இந்தியா பாடம் படித்துக் கொள்ளவேண்டாமா? இந்தக் கேள்வி திராவிடர் கழகத்தாரால் மட்டும் எழுப்பப்படும் கேள்வியாக நினைக்கக் கூடாது; மனித உரிமை, மனித நேயம் உள்ள ஒவ்வொருவரும் எழுப்பும் வினாவாகும்.

தீவிரவாதத்தை ஒழிக்க அமெரிக்காவுக்கு ஆதரவு அளிக்கும் என்று கூறும் இந்தியாவின் ஆட்சித் தலைவர்கள், இலங்கையில் தமிழர்களை வேட்டையாடிய - நாளைக்கும் வேட்டையாடத் துடித்துக் கொண்டிருக்கக் கூடிய அரசப் பயங்கரவாதிகள்பற்றி என்ன நினைக் கிறார்கள் என்ற கேள்விக்கு இந்தியத் தரப்பிலிருந்து நாணயமான பதில் கிடைக்காதவரை, உலக நாடுகளின் பிரச்சினையில் குறைந்தபட்சம் கருத்துத் தெரிவிக்கக்கூட அருகதையற்றதாகவே இந்தியா கருதப்படும் - அதில் சந்தேகமே இல்லை.

அய்.நா. அமைத்த வல்லுநர் குழு என்ன சொல்கிறது? 3


புலன் விசாரணை பற்றிய விசாரணைக்  குழுவின் பரிந்துரைகள்

அ) போரில் ஈடுபட்ட இரு தரப் பினர் மீதும் கூறப்படும், அனைத்துலக மனிதநேய மற்றும் மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டது என்ற குற்றச்சாற்றுகள் பற்றி உண்மையான புலன் விசாரணையை இலங்கை அரசு உடனே மேற்கொள்ள வேண்டும்

ஆ) ஒரே நேரத்தில் மேற்கொள் ளப்பட வேண்டிய செயல்பாடுகள் உள்ளிட்ட கீழ்க்குறிப்பிடப்பட்ட பணி களைச் செய்வதற்கான சுதந்திரமான, அனைத்துலக அளவிலான நடை முறை ஒன்றை உருவாக்க அய்க்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்செய லாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1) உள்நாட்டு அளவில், உரிமை மீறல்களுக்குப் பொறுப்பேற்று நிவார ணம் அளிக்கும் நடவடிக்கைகளை  எந்த அளவுக்கு இலங்கை அரசு பயனுள்ள வகையில் மேற் கொள்கிறது என்பதை மதிப்பிட்டுக் கண்காணிப்பது மற்றும் அய்க்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளருக்கு அவ்வப்போது தனது கண்டுபிடிப்புகளின் அடிப்படை யில் பரிந்துரை அளிப்பது.

2) உள்நாட்டில் உண்மையாக மேற் கொள்ளப்பட்ட சட்டம் மற்றும் உரிமை மீறல் வழக்குகள் பற்றிய விசா ரணையை ஒட்டி அவற்றைப் பற்றி சுதந்திரமாக புலன் விசாரணை செய்வது.

3)  போரின் இறுதிக் கட்ட நிகழ்வு களுடன் தெடர்புடைய,  தனக்கு அளிக்கப்பட்ட தகவல்களையும், இந்த விசாரணைக் குழு மற்றும் இதர அமைப்புகள் தொகுத்து அளித்த தகவல்களையும்,  பொருத்தமான எதிர் காலப் பயன்பாட்டிற்காகத் தொகுத்து பாதுகாத்து வைப்பது.

உரிமை மீறல்களுக்குப் பொறுப்பேற்று நிவாரணம் அளிக்கத் தேவையான உடனடி நடவடிக்கைகள்

அ) வன்னிப் பகுதியில் உள்ள போரில் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் பிழைத்துள்ள குடிமக்களின் உரிமைகள் மற்றும் கவுர வத்தை அங்கீகரிக்கும் வகையில் கீழ்க் குறிப்பிடப்பட்ட குறுகிய கால நடவடிக்கை களை இலங்கை அரசு கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

1)  அரசு, அதன் அமைப்புகள் மற்றும் அனைத்து துணை ராணுவப்படைகள், அரசின் ஆதரவு பெற்ற அல்லது அரசால் பொறுத்துக் கொள்ளப்பட்ட துணைப்படை கள் ஆகியவற்றின் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவது.

2) எஞ்சி இருக்கும் இறந்து போன வர்களின் பொருள்கள், உடல் உறுப்பு களைக் கைப்பற்றி அவர்களின் குடும்பத் தினரிடம் திரும்ப அளிக்கவும், இறந்து போனவர்களுக்கான சடங்குகளைச் செய்ய அனுமதி அளிக்கவும் வசதி செய்து தருவது.

3) இறந்து போனவர்கள், காணாமல் போனவர்கள் சார்பாக இறப்புச் சான்றிதழ் களை விரைவாகவும், மரியாதையுடனும், அவர்களின் குடும்பத்தினர் கேட்கும்போது எந்தவிதக் கட்டணமும் இன்றி, மேற் கொண்டு புலன்விசாரணை செய்வது மற்றும் சிவில் உரிமைகள் கோருவது ஆகிய உரிமைகளை சமரசம் செய்து கொள்ளாத முறையில்,  அளிப்பது.

4) அவர்களின் கலாச்சார மதிப்பீடு களையும், பாரம்பரிய பழக்க வழக்கங் களையும் மதித்து, உயிர் பிழைத்து இருக்கும் அனைவருக்கும் சமூக, மனோ ரீதியான ஆதரவை அளிப்பது.

5) காவலில் இருக்கும் புலம் பெயர்ந்த குடிமக்கள் அனைவரையும் விடுதலை செய்து, அவர்களின் முன்னாள் வீடு களுக்குத் திரும்பிச் செல்ல உதவி செய் வது, அல்லது அவர்களின் மறு வாழ்வுக்கு அவர்களின் விருப்பப்படி உதவி செய்து.

6) போரில் உயிர் பிழைத்திருக்கும் அனைத்து குடிமக்களுக்கும் அவர்கள் அமைதியான இயல்பான வாழ்க்கை வாழ்வதற்கான இடைக்கால உதவிகளைத் தொடர்ந்து வழங்குவது.

ஆ) கட்டாயமாகக் கடத்தப்பட்டு காணாமற் போன குடிமக்கள் என்ன ஆனார்கள், இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைப் பற்றி புலன் விசாரணை செய்து வெளிப்படுத்த இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்காக கட்டாயப்படுத்தி, தன்னிச்சையின்றி காணாமல் போனவர்கள் பற்றிய பணிக் குழுவினை   (Working Group on Enforced and Involuntary Disappearances)இலங்கைக்கு வருகை  தர இலங்கை அரசு அழைப்பு விடுக்க வேண்டும்.

இ) நாட்டில் நிலவும் அரசியல் சூழ் நிலையைக் கருத்தில் கொண்டு,  நெருக் கடி நிலை பற்றிய சட்டங்களை இலங்கை அரசு உடனடியாக விலக்கிக் கொண்டு,  இலங்கையின் அனைத்துலகக் கடன்பாட் டுக்குப் பொருத்தமின்றி எதிராக இருக்கும் தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் அனைத் துப் பிரிவுகளையும் திருத்தி அமைக்க வேண்டும்.

இந்த சட்டங்கள் மற்றும் இதர சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் என்று சந்தேகப்படு பவர்கள் மற்றும் இதர மக்களைப் பொருத்த வரை கீழ்க் கண்ட நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும்.

1)  தற்போது கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருக்கும் அனைத்து மக்களின் பெயர்கள்,  அவர்கள் தற்போது காவலில் வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் பெயர் ஆகியவற்றை வெளியிடுவதுடன், அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்கு அடிப்படையான சட்ட விதிகளும் தெரி விக்கப்பட வேண்டும்.

2) கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கும் அனைத்து மக்களும், தங்கள் குடும்ப உறுப்பினர் களையும், சட்ட ஆலோசகர்களையும் சந்தித்துப் பேச அனுமதிக்கப்பட வேண்டும்.

3) தாங்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர அவர்களுக்கு அனுமதி வழங் கப்படவேண்டும்.

4) கொடிய குற்றங்கள் இழைத் தற்கான ஆதாரங்கள் உள்ள வழக்கு களில் அவர்கள் மீது குற்றச்சாற்றுகள் பதிவு செய்துவிட்டு, மற்ற அனை வரையும் விடுதலை செய்வதுடன், மேலும் எந்த வித இடையூறுகளும் இன்றி அவர்கள் சமூகத்துடன் ஒன்று சேர்ந்து வாழ அனுமதிக்கப்பட வேண் டும்.

ஈ) மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும், கூட்டமாக மக்கள் கூடுவதையும், கருத்தை வெளிப் படுத்துவதையும் தடை செய்யும், அல்லது  அச்சத்தை ஏற்படுத்தும் சூழ் நிலையை உருவாக்கும் கட்டுப்பாடு களை நீக்கிவிட்டு,  அரசு இழைக்கும் வன்முறையை இலங்கை அரசு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். 

அ) போரின் இறுதி நிலையில் பெரும் அளவிலான போருக்குத் தொடர்பு இல்லாத குடிமக்கள் கொல்லப்பட்டதில் உள்ள அரசின் பங்குக்குப் பொறுப்பு ஏற்று இலங்கை அரசு ஒரு பொது அறிக்கை வெளியிடவேண்டும்.

ஆ) இறுதிக் கட்டப் போரின்போது கடுமையான உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், குறிப் பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் எளிதில் பாதிக்கப்பட இயன்ற குழுவி னருக்கு,  அனைத்துலக தரத்தின்படி நிவாரணம் அளிக்கும் செயல்திட்டம் ஒன்றை  இலங்கை அரசு உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

அப்படிப் போடு சிக்சர்!



விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமல்ல; வெற்றி பெறத் தேவையானவை திறமை, தன்னம்பிக்கை, துணிவே!

ஆனால், இந்தியாவின் கிரிக்கெட் விளை யாட்டுக்காரர்கள் (வீரர்கள் அல்லர்) இருக்கி றார்களே நொண்டிக் கழுதைக்கு சறுக்கியது சாட்சி! என்ற பழமொழிதான் அவர்களுக்குப் பொருத்தம், மிகவும் பொருத்தம்!

அய்.பி.எல். கிரிக்கெட் என்னும் 20 ஓவர் போட்டி இந்தியா முழுமையும் நடந்துகொண்டிருக்கிறது.

இந்தியாவின் பெரும் பணக்கார முதலைகள் கிரிக்கெட் விளையாட்டுக்காரர்களை ஏலம் எடுக் கிறார்கள். (அடக் கொடுமையே! இவர்கள் என்ன கத்தரிக்காயா, சுண்டைக்காயா- ஏலம் எடுக்கப்பட!).

கிரிக்கெட் அணியில் விளையாடுபவர்களைவிட ஏலம் எடுப்பவர்கள்தான் தங்கள் அணி வெற்றி பெற வேண்டும் என்பதிலே துடியாய்த் துடிக்கிறார்கள்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் முதலாளி முகேஷ் அம்பானி!

அவர் மனைவி நீதா.... மும்பை மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், கொச்சி டஸ்கர் கேரளா அணிக்கும் போட்டி, முடிவில் மும்பை அணி தோல்வியைச் சுமந்தது.

பணம் போட்டவர்களாயிற்றே, சும்மா இருப்பார் களா? ஜோதிடரைத் தேடினார்கள்.

அந்த ஜோதிடரும் மும்பை ஸ்டேடியத்துக்கு வந்தார் - கண்டார் - கண்டுபிடித்தார் - அடே யப்பா, அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ் இவரிடம் மடிப் பிச்சை வாங்கவேண்டும் போங்கோ!

கண்டுபிடித்துவிட்டார் - மும்பை அணியின் தோல்விக்குக் காரணத்தைக் கண்டுபிடித்து விட்டார். ஆம், மும்பை அணியினர் ஸ்டேடியத்தின் வலப்புறத்தில் உள்ள ஓய்வு அறையைத் தேர்ந்தெடுத்ததுதான் தோல்விக்குக் காரணமாம்!

இந்துத்துவா என்னும் கோழைத்தனம்!

இடது பக்க அறையைத் தேர்ந்தெடுத்து இருந்தால் கோப்பை அவர்களுக்குத்தானாம். (இந்தியாவில் இந்த இந்துத்துவா மனப்பான்மை தான் விளையாட்டுக்காரர்களைக்கூடக் கோழை யாக்குகிறது).

முகேஷ் அம்பானிகளும், மல்லையாக்களும், ஷாருகான்களும் சச்சின் டெண்டுல்கர், தோனி, ரெய்னா, கெயில் என்று விளையாட்டுக்காரர்களை விளையாட்டாகக்கூடத் தேர்வு செய்யவேண்டிய அவசியம் இல்லை.

ஜோதிடரைப் பார்த்து அவர் என்ன சொல்லு கிறாரோ, அதன்படி எந்த ஓய்வு அறையைத் தேர்வு செய்யலாம், எந்தக் கலர் கர்ச்சிப்பை சட்டைப் பையில் வைத்துக் கொள்ளவேண்டும் என்பன போன்ற சமாச்சாரங்களைக் கடைப்பிடித்தாலே போதுமானது.

இதன்படி அதுவரை கிரிக்கெட் மட்டையைப் பிடித்து அறியாத குப்பனிடமும், சுப்பனிடமும் மைதானத்தில் பேட்டைக் கொடுத்தால், அடேயப்பா, வெறும் சிக்சர் மழைதான்! அப்படித்தானே!

அட, பைத்தியக்காரர்களே, அய்தராபாத்தில் இலங்கைக்கும் - இந்தியாவுக்கும் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெறவும், தான் அதிக ஓட்டங்கள் (ரன்) எடுக்கவும் புட்டபர்த்திக்குச் சென்று சாயிபாபாவிடம் ஆசி பெற்று வந்தாரே - (டெக்கான் கிரானிக்கல், 24.11.2005) பலன் கிடைத்ததா? அய்தராபாத்தில் டெண்டுல்கர் எடுத்த ஓட்டம் (ரன்) வெறும் இரண்டுதானே!

அதேபோல, பெங்களூருவில் இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், சாயிபாபா கொடுத்த மோதிரத்தை அணிந்து மைதானத்தில் இறங்கிய கவாஸ்கர் எடுத்த ஓட்டமும் இரண்டே இரண்டுதான். (திருச்சி மாலைமலர், 15.10.1987).

சாயிபாபாவிடம் சென்று ஆசீர்வாதம் வாங்காத கபில்தேவ்தான் அந்த ஆட்டத்தில் அதிகபட்சமாக 72 ஓட்டங்கள் (ரன்கள்) எடுத்து, கடைசிவரையிலும் ஆட்டம் இழக்காமல் சிறந்த ஆட்டக்காரராகவும் (மேன் ஆஃப் தி மேட்ச்) விருது பெற்றார். 2003 இல் நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்தியாதான் கோப்பையை வெல்லப் போகிறது என்று சவால்விட்டனர். ஊத்திக்கிட்டது தான் மிச்சம் - கிரிக்கெட் என்றாலே, ஓடும் ஜோதிடர்கள் என்று தினமலர் (26.3.2003) செய்தி போடும் அளவுக்கு ஜோதிடர்களுக்கு மரண அடி!

ஜோதிடத்தை நம்புவோரை சோண கிரிகள், வெறும் சோற்றுத் துருத்திகள் என்று விளிக்காமல் வேறு என்ன நாமகரணங்களால் சாற்றுவதோ!

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...