Wednesday, May 4, 2011

அமெரிக்காவிடம் இந்தியா கற்றுக்கொள்ளுமா?


அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க இராணுவக் குழுவால் கொல்லப்பட்டார் என்ற செய்தி உலகப் பரப்பில் எல்லாம் பெரும் அதிர்வை ஏற்படுத்திவிட்டது.

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் நாள் அமெரிக் காவின் - பாதுகாப்பு நிறைந்த இரட்டைக் கோபுரத்தை விமானம் மோதி அழித்ததில் பின்பலமாக- புலமாக இருந்தவர் இந்த ஒசாமா பின்லேடன்; அதன் காரணமாக குழந்தைகள் உள்பட மூவாயிரம் பேர் கொல்லப்பட்டனர்; அந்தப் பழியைத் தீர்க்கவே பத்தாண்டுகள் திட்டமிட்டு பின்லேடன் இப்போது கொல்லப்பட்டார் என்று ஊடகங்கள் கூறு கின்றன.

உண்மையாக இருக்கலாம். அமெரிக்காவின் பெரி யண்ணன் மனப்பான்மைக்குப் பாடம் கற்பிப்பதற்காக பின்லேடன் செய்த அதிரடி இது என்று சொல்லப்படு வதுண்டு. அதே நேரத்தில் எந்தப் பயங்கரவாத அமைப் பாக இருந்தாலும் சரி, அவர்களின் நடவடிக்கைகளால் எந்தவிதத்திலும் சம்பந்தம் இல்லாத அப்பாவிப் பொதுமக்கள் - குழந்தைக் குட்டிகள் கொல்லப்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது - ஏற்றுக்கொள்ளவே முடியாது.

இதனை ஒரு மதப் போராக மாற்றிட பலரும் முயற்சிக் கக்கூடும். (அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவரே இதற்கு விதிவிலக்கல்ல).

அப்படி ஒரு பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்படுமானால், அது உலகம் தழுவிய அளவில் பெரும் அளவில் பாதிப்பை ஏற்படுத்திவிடும்; ஒரு தனி மனிதனின் வெறி உணர்ச்சி பூகம்பமாகி, மக்களை அழிக்கும் வெறித்தனத்துக்கு எந்த வகையிலும் கத்தி தீட்ட அனுமதிக்கக் கூடாது - கூடவே கூடாது. இஸ்லாமிய தீவிரவாதம் என்று பரப்புரை செய்பவர்களின் நோக்கம் தீயதன்மை கொண்டதாகும்.

எங்கள் நாட்டு மக்களை ஆயிரக்கணக்கில் அழித்த பயங்கரவாதியை அழித்தோம் என்று கூறும் அமெரிக்கா, பொதுமக்கள் உயிருக்கு இழப்பு ஏற்படாமல் நடந்து கொண்டது ஒரு வகையில் வரவேற்கத்தக்கது என்பதில் அய்யமில்லை.

அதே நேரத்தில், இந்தியாவில் ரத யாத்திரை என்ற பெயராலும், பாபர் மசூதி இடிப்பு என்ற பெயராலும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட நிகழ்வுகள் உண்டு. இதன் பின்னணி என்பது முழுக்க முழுக்க மதவாதப் பின்னணியேயாகும்.

இத்தகைய சக்திகள் ஒடுக்கப்பட வேண்டியது அவசியம் என்பது மனித நலனில் அக்கறை கொண்ட வர்களின் பொறுப்பான எதிர்பார்ப்பாகும்.

10  ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க மக்களை ஆயிரக் கணக்கில் கொன்றவர்களை நாடு தாண்டிச் சென்று அமெரிக்காவால் பழி வாங்க முடிகிறது. இந்தியாவிலோ பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமானவர்கள் உள்நாட்டில் இருந்தாலும், சட்ட ரீதியாக 19 ஆண்டுகளுக்குப் பிறகும்கூடத் தண்டிக்க முடியவில்லை என்பது தலைகுனியத்தக்க வெட்கக் கேடான போக்காகும்.

வன்முறையாளர்கள் தண்டனைக்கு உட்படுத்தப் படவில்லையானால், அந்த நிலை வன்முறையாளர்களின் எண்ணிக்கையை வலுப்படுத்திக் கொண்டே போகும் - இளைஞர்கள் வன்முறையின் காதலர்களாக மாறக் கூடிய பேராபத்தும் ஏற்பட்டுவிடும்.

இந்த நேரத்தில் இன்னொரு சிந்தனை அவசியம் எல்லோர் உள்ளத்திலும் ஏற்பட்டாக வேண்டும். அப்படி ஏற்படுவதுதான் உத்தமமான மனிதர்களாக நாம் இருக்கிறோம் என்பதற்கான பொருளுமாகும்.

மூவாயிரம் அமெரிக்கர்களை அல்கொய்தா அமைப்பு கொன்றதைப் பழி தீர்க்கவே பின்லேடன் கொல்லப்பட்டார் என்று நியாயம் கற்பிக்கும் அரசியல் புள்ளிகள், ஊடகங்கள், விமர்சனகர்த்தாக்கள் - ஒரு லட்சம் மக்களை கொடூரமான முறையில் இலங்கைத் தீவில் அழித்தானே கொடுங்கோலன் ராஜபக்சே - அவன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

தமிழர்களை இந்தியர்கள் என்று இந்திய அரசு உண்மையிலேயே கருதுமேயானால், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஏற்பட்ட அதே உணர்வு இந்தியாவை ஆண்டுகொண்டிருப்பவர்களுக்கும் ஏற்பட்டு இருக்கவேண்டுமே?

இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி கொடுங்கோலன் ராஜபக்சேவைக் கொல்லவேண்டும் என்று கூடக் கூறவில்லை - இந்தியாவின் தென்கோடி யில் வாழும் தமிழர்களின் தொப்புள்கொடி உறவு கொண்டவர்களான ஈழத் தமிழர்களை அழிக்கத் துணை போகாமல் இருக்கக்கூடாதா என்பதுதான் மிக முக்கிய வினாவாகும்.

அமெரிக்காவைப் பார்த்த பிறகாவது இந்தியா பாடம் படித்துக் கொள்ளவேண்டாமா? இந்தக் கேள்வி திராவிடர் கழகத்தாரால் மட்டும் எழுப்பப்படும் கேள்வியாக நினைக்கக் கூடாது; மனித உரிமை, மனித நேயம் உள்ள ஒவ்வொருவரும் எழுப்பும் வினாவாகும்.

தீவிரவாதத்தை ஒழிக்க அமெரிக்காவுக்கு ஆதரவு அளிக்கும் என்று கூறும் இந்தியாவின் ஆட்சித் தலைவர்கள், இலங்கையில் தமிழர்களை வேட்டையாடிய - நாளைக்கும் வேட்டையாடத் துடித்துக் கொண்டிருக்கக் கூடிய அரசப் பயங்கரவாதிகள்பற்றி என்ன நினைக் கிறார்கள் என்ற கேள்விக்கு இந்தியத் தரப்பிலிருந்து நாணயமான பதில் கிடைக்காதவரை, உலக நாடுகளின் பிரச்சினையில் குறைந்தபட்சம் கருத்துத் தெரிவிக்கக்கூட அருகதையற்றதாகவே இந்தியா கருதப்படும் - அதில் சந்தேகமே இல்லை.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...