Wednesday, April 25, 2018

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் இலட்சணம்


தீண்டாமைக்கு எதிரான வன்கொடுமை தடை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதா?
நாளை (16.4.2018) சென்னையில் அனைத்துக் கட்சிகள் நடத்தும் போராட்டம்  சுனாமியாக வெடிக்கட்டும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
==================
தாழ்த்தப்பட்டோர்மீது தொடர்ந்து ஏவப்படும் வன்முறைகள், தீண்டாமை அனுசரிப்பு இவற்றிலிருந்து அவர்களைக் காப்பாற்றிட இயற்றப்பட்ட சட்டத்தினை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியைக் கண்டித்து நாளை (16.4.2018) காலை 10 மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற உள்ள அனைத் துக் கட்சி ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களை அரசியல் சட்ட வரைவுக்குழு தலைவராகப் போட்டு, அவருடைய பரந்த சட்ட ஞானத்தைப் பெரிதும் பயன்படுத்திக் கொண்டு, பிறகு அவரை அரசியலில் கறிவேப்பிலையாக்கியது - அங்கே ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனக் கும்பல் ஒன்று.
அண்ணல் அம்பேத்கர் வெளிப்படுத்திய வேதனை!
அவரே பிறகு சொன்னார் - மாநிலங்களவையில் 1953இல் ஆந்திரா மொழி வழி மாநில பிரிவினை மசோதா விவாதத்தின்போது.
"என்னை வாடகைக் குதிரையாக்கிக் கொண் டார்கள் என்றாலும், சில சமூகநீதிக்கு முன்னுரிமை தருவதிலும், பீடிகையில்,
சுதந்திரம், (Liberty)
சமத்துவம் (equality)
சகோதரத்துவம் (Fraternity)
இவைகளை கொள்கை தத்துவங்களாகவும், மதச் சார்பின்மைக்கு அடிகோலியும் பல அடிப் படை உரிமைகளுக்குப் பாதுகாப்பு ஏற்படுத்த முடிந்தது" என்றார் அவர்.
அதில் 17ஆம் பிரிவு "தீண்டாமை" ஒழிக்கப் பட்டு விட்டது. எந்த  ரூபத்தில் அதைக் கடைப் பிடித்தாலும் அது சட்டத்தில் தண்டனை தரக்கூடிய விதியாக  நுழைத்தார்.
1955இல் தனிச் சட்டம்
அதனை செயல்படுத்த, 1955இல் 'தீண்டாமை யை'க் கடைப்பிடிப்பவருக்குத் தண்டனை தர வழி செய்திட சட்டம் கொணர்ந்தனர்.
இதற்கெல்லாம் முன்னோடியாக, பிரிட்டிஷார் ஆண்ட போதே, 1938இல் தொடங்கி 1948 வரை 1) ஒரிசா, 2) பம்பாய் 3) கிழக்குப் பஞ்சாப், 4) அய்த ராபாத் 5) சென்னை ஆகிய மாநிலங்களில் 21 சட்டங்கள் கோயில் நுழைவுக்கே அனுமதியளித்து நிறைவேற்றப்பட்டன.
ஆனால் அவைகளில் பெரும்பாலும் ஏட்டுச் சுரைக்காயாகவே இருந்தன.
தந்தை பெரியார் தனது சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியபின், இந்த கோயில் நுழைவுக்குத் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரையும், மற்றவர்களையும் இணைத்து மதுரை, ஈரோடு, திருவண்ணாமலை கோயில்களுக்குள் நுழைந்து பூசை செய்யப் போராட வைத்தார்!
1922 - திருப்பூர் காங்கிரசு மாநாட்டில் பெரியார்
அதற்குமுன் 1922இல் திருப்பூர் காங்கிரசு மாநாட்டில், கோயில் நுழைவு "தீண்டாதாருக்கு"த் தேவை என்று தீர்மானம் கொண்டு வர, அதை எதிர்த்தவர் மதுரை வைத்தியநாதய்யர் ஆவார். (ஆதாரம்: திரு.வி.. எழுதிய வாழ்க்கைக்  குறிப்புகள்)
அதற்குப் பிறகே 1948இல் கோயில் நுழைவுச் சட்டங்கள் சில மாநிலங்களில் காங்கிரசு ஆட்சி களில் கொண்டு வரப்பட்டன!
1976இல் மீண்டும் ஒரு சட்டம்!
தீண்டாமைக்கெதிராக மத்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்றிய தனிச் சட்டம் 1955இல் இயற்றப்பட்டதை, இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் 1976இல் PCR Act (Protection of Civil Rights) என்று நிறைவேற்றப்பட்டது; காரணம் தீண்டாதார் என்ற உழைக்கும் சகோதரர்களுக்குப் போதிய பாதுகாப்பை முந்தைய 1955 சட்டம் அளிக்கவில்லை என்பதைத் தொடர்ந்து அச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அவர்கள் மீது உயர் ஜாதி வெறியினர் நடத்திய தாக்குதல், வன்கொடுமைகள், வன்புணர்ச்சி உட்பட, ஜாதி பஞ்சாயத்துக்கள் மூலம் தண்டனை அளிப்பது போன்ற அநாகரீகக் கொடுஞ் செயல்கள் பெருகியதைத் தடுக்கவே அவர் வேகப்படுத்தினார்.
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது...
ராஜீவ்காந்தி பிரதமராக வந்தபிறகு 1989இல் அச்சட்டம் பலமுறை மாற்றப்பட்டு தண்டனைகள் அதிகப்படுத்தப்பட்டனசமூகக் கொடுமைகள் தாழ்த்தப்பட்ட சகோதரர்களுக்கு எதிராகக் குறையவில்லை என்பதால் -- Scheduled castes and the scheduled Tribes Prevention of Atrocities  (வன்கொடுமை தடுப்புச் சட்டம்) என்ற சட்டத்தின் மூலம் கூர்முனைப்படுத்தப்பட்டது.
இவ்வளவு இருந்தும் உயர் ஜாதித் திமிரும் மமதையும், கொண்டவர்கள், உழைக்கும் அந்த தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களை பிள்ளைப் பூச்சிகளாக, புன்மைத் தேரைகளாக மண்ணுக்கும் கேடாய் நடத்திய நிலை மாறவில்லை!
குற்றமிழைத்த உயர்ஜாதியினர்மீது காவல்துறையினர் FIR போடுவதற்கேகூட, போராட்டங்கள் நடத்தும் அவலம்!
பிணங்களைத் தூக்கிச் செல்வதற்குக்கூடத் தடைகள்!
தாழ்த்தப்பட்டோர் இறந்தால்  பிணங்களைத் தூக்கி சுடுகாட்டுக்குச் செல்ல, நீதிமன்ற ஆணையைக்கூட மதிக்காத ஜாதி வெறி ஆணவம் தமிழ்நாட்டில்கூட நடந்ததே!
இந்த நிலையில், அண்மையில் டாக்டர் சுபாஷ் காஷிநாத் மகாஜன் என்பவருக்கும், மகாராஷ்டிர அரசுக்கும் (Dr. Subash kashinath Mahajan Vs State of Maharastra and ANR.)  என்ற வழக்கில் 20.3.2018இல் உச்சநீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவரை உடனே கைது செய்யக் கூடாது என்றுகூறி, கொஞ்ச நஞ்சம் இருந்த அச்சட்டத்தின் பல்லையும் பிடுங்கி விட்டது!
காரணம் சரியானபடி தக்கவகையில் சட்ட நிபுணர்களை சமூகநீதியில் நம்பிக்கை உள்ள வழக்குரைஞர்களை வைத்து வாதாடவே இல்லை. இன்று மோடி அரசு அம்பேத்கர் படத்தைத் தூக்கிப் பிடித்து கபட நாடகம் ஆடுகிறது!
நாடே கிளர்ச்சி சுனாமியால் சூழப்பட்டுள்ளது.
'சட்டத்தை நானே எரிப்பேன்' என்றாரே அம்பேத்கர்
இந்த நிலைகளை நன்கு புரிந்த டாக்டர் அம்பேத்கர் "சட்டத்தை நான்தான் எழுதியதாக அடிக்கடி சொல்லுகிறீர்கள்; அதே அரசியல் சட்டத்தை எரிப்பதிலும் நான்தான் முதல் ஆளாக இருப்பேன்" என்று மாநிலங்கள் அவையில் மேற் காட்டிய விவாதத்தில் மனம் நொந்து பேசினாரே!
மொத்தம் 31 நீதிபதிகள் கொண்ட உச்சநீதி மன்றத்தில்  இப்பொழுது ஒரு தாழ்த்தப்பட்ட சமூக நீதிபதி உண்டா?
உச்சநீதிமன்றத்தில் உயர்ஜாதியினர்
பிற்படுத்தப்பட்டவர் கூட கிடையாதே! ஒரே ஒரு பெண் நீதிபதி அவரும் விரைவில் ஓய்வு பெறப் போகிறார்; எல்லாம் பார்ப்பன - மற்ற உயர்ஜாதியினரின்  ஏகப் போக சாம்ராஜ்யம்தான்!
பா... போன்ற பார்ப்பனிய ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில் இழிந்த, வேதனைத் தீயில் வெந்து கருகுவதாக சமூகநீதி ஆக்கப்பட்டது பார்த்தீர்களா?
16ஆம் தேதி (நாளை) ஆர்ப்பாட்டம் -
எழுச்சி பெறட்டும்!
தமிழ்நாட்டில் திமுக, திராவிடர் கழகம், காங்கிரசு, இரு கம்யூனிஸ்டுகள், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் இணைந்து நாளை நடத்தப் போகும் கண்டன ஆர்ப்பாட்டத்தை கருப்புக் கொடி போராட்டம் போல வலிமையாகச் செய்து, சமூகநீதி - பெரியார் மண்ணில் தலை தாழாது பறக்கட்டும்! ஜாதி - தீண்டாமையை ஒழிக்க அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைச் சட்டம் இயற்றியதையும் செயல்படுத்தாத தமிழக அரசின் போக்கினையும், அதில் கண்டித்தாக வேண்டியதும், செயல்பட வைப்பதும் மிக முக்கியமானதாகும்!
அணி திரண்டு பணி முடிக்க வாரீர்! வாரீர்!!


கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

================
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் இலட்சணம்
இந்த வன்கொடுமைத் தடுப்புச் சட்டத் தினை செயலற்றதாக்கியவர்கள் பார்ப்பன, உயர் ஜாதியினர், படித்த கூட்டமும்கூட!
சில எடுத்துக்காட்டுகள்:
1. வடநாட்டில் (.பி.யில்) முன்பு பிளாக் டெவலப்மண்ட்   (BDO) ) அலுவலகத்தில் கீழ்நிலை வேலை பார்த்த ஒரு பெண்ணை வன்புணர்ச்சி செய்தனர் - அங்குள்ள அலுவலக உயர்ஜாதி அதிகாரிகள். இதன்மீதான வழக்கு வராமல் தடுத்து விட்ட நிலையில், மகளிர் அமைப்பினர் போராட்டத்திற்குப் பிறகு வழக்கு முதற் கட்டத்தில் குற்றமிழைத்தோருக்குத் தண்டனை கிடைத்தது; மேல் முறையீட்டில் உயர்நீதிமன்றத்தில் அத்தண்டனைகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டு விடுதலை ஆயினர். காரணம் அத்தீர்ப்பில் கூறப் பட்டது என்ன தெரியுமா?
"இவர்கள் உயர்ஜாதியினர், பாதிக்கப் பட்ட பெண் தாழ்த்தப்பட்டவர், அவருடன் வன்புணர்ச்சி செய்திருக்கவே மாட்டார்கள்" என்பதுதான்! என்னே விசித்திரம்! (மகாபாரதத்தின் பராசரர் - மச்சகந்தி கதை கூடவா அந்த நீதிபதிக்கு தெரியாது?)
2. மற்றொன்று, .பி.யில் மாற்றப்பட்ட ஒரு மாவட்ட நீதிபதிக்குப் பதிலாக வந்தவர் உயர் ஜாதி நீதிபதி, மாற்றப்பட்டவர் தாழ்த்தப்பட்டவர்; அந்த நாற்காலியைக் கழுவி சுத்தம் செய்து, பிறகே அதன் மீது அமர்ந்து நீதி விசாரணையைத் துவக்கினார். இதுதான் சட்டத்தின் லட்சணம்!


மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா?

மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா?
வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு
தமிழர் தலைவர் ஆசிரியரின் எச்சரிக்கை  அறிக்கை

பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந் தால், சம்பந்தப்பட்ட வகுப்புகள் இழுத்து மூடப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பைக் கண்டித்து  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் குறைவான மாண வர்கள் எண்ணிக்கை உள்ள வகுப்புகளை மூடவேண்டும் என பள்ளிக்கல்வித் துறை  உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 30 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள வகுப்புகளை மூட வேண்டும். கிராமப்புற அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 15 மாணவர்களுக்குக் குறைவாக இருந்தால் வகுப்புகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு .தி.மு.. அரசுக்கு ஏன் இந்தக் கேடு கெட்ட புத்தி! ராஜகோபாலாச்சாரியாரின் வழியிலே செயல்படத் தொடங்கிவிட்டார்களா?
மீண்டும் குலக்கல்வியா?
1937-1939 ஆம் ஆண்டுகளில் ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநிலப் பிரதமராக இருந்தபோது 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடினார். 1952 இல் மறுமுறை ஆட்சிக்கு வந்தபோது 6000 பள்ளிகளை இழுத்து மூடி அரை நேரம் படித்தால் போதும்; மீதி அரை நேரம் அப்பன் தொழிலைப் படித்தால் போதும் என்ற கல்வித் திட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார்.
ஆச்சாரியாரைப்பற்றி அறிந்தவர் அல்லவா அய்யா தந்தை பெரியார், இது நவீனக் குலக்கல்வித் திட்டம், வருணாசிரமக் கல்வி என்று கூறி, போர்ப்பறை முழங்கினார். நாடே தந்தை பெரியார் தலைமையில் கிளர்ந்தெழுந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என்று கட்சிகளைக் கடந்து தந்தை பெரியார் தலைமையிலே கனன்று எழுந்தது தமிழ்நாடு.
இந்தக் குலக்கல்வித் திட்டத்தை விலக்கிக் கொள்ளாவிட்டால், கழகத் தோழர்களே! பெட்ரோலும், தீப்பந்தமும் தயாராகட்டும்; நாள் குறிப்பிடுவேன், அக்கிரகாரத்திற்கு நெருப்பு வையுங்கள்'' என்ற அறிவிப்புக் கொடுத்தார்.
விளைவு ஆச்சாரியார் பதவியை விட்டு விலகி ஓடும்படிச் செய்யப்பட்டது.
65 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இந்த நிலவரம், .தி.மு.. அரசுக்குத் தெரியாதா? எம்.ஜி.ஆர். அவர்களே வருமான வரம்பு கொண்டு வந்து கையைச் சுட்டுக்கொண்டாரே!
மாணவர்கள் குறைந்தால் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து, சரி செய்ய வேண்டுமே தவிர, குல்லாய்க்கு ஏற்ப தலையைச் சீவக்கூடாது!
இது பணப் பிரச்சினையல்ல - தலைமுறை தலைமுறையாக கல்வி மறுக்கப்பட்ட சமுதாயத்தின் தலையை நிமிர்த்தும் மிகப்பெரும் சமூகப் பிரச்சினை! இதில் வேண்டாம் விஷப் பரீட்சை!
.தி.மு.. அரசு பாம்புப் புற்றுக்குள் கைவிட ஆசைப்படுகிறதா? எரிமலையை எழுப்ப வேண்டாம். சமூகநீதியில் கை வைத்தால், நாடே தீப்பற்றி எரியும் - ஜாக்கிரதை!
பாதிக்கப்படுவோர் யார்?
இன்னும் நூற்றுக்கு நூறு கல்வி என்ற  நிலையை எட்டவில்லை. வகுப்புகளை இழுத்து மூடினால் அந்தப் பிள்ளைகள் எங்கே போய்ப் படிப்பார்கள்?
இதில் பாதிக்கப்படுவோர் - உயர்ஜாதியினரோசெல்வந்தர் களோ அல்ல; ஒடுக்கப்பட்ட மக்களும், கிராமப்புற மக்களும்தான்
புலிவாலை மிதிக்காதீர்!
ஏற்கெனவே விவசாயிகள் வெந்து மடிந்து கொண்டுள்ளனர். வேண்டாம் இந்த விபரீதம்! புலிவாலை மிதிக்கவேண்டாம்!
எச்சரிக்கை! எச்சரிக்கை!!

கி.வீரமணி
தலைவர் 
திராவிடர் கழகம்.

20.4.2018


Tuesday, April 3, 2018

கங்கை என்னும் சாக்கடை!

கங்கை நதியைப்பற்றி இந்துமதத் தலைவர்கள், அபிமானிகள் கட்டி விடும் கதைகளுக்கோ பஞ்சமில்லை; கங்கையில் குளித்தால் சகல பாவங்களும் பறந்தோடி விடும் - புண்ணியம் மூட்டை மூட்டையாக வந்த சேரும் என்றெல்லாம்  மூட்டை மூட்டையாகப் பொய்களை அவிழ்த்துக் கொட்டுவார்கள்.
செத்த பிறகுகூட அஸ்தியைக் கங்கையில் கரைத்தால் செத்தவன் மோட்சத்துக்குப் போவான் என்ற புரையோடும் மூட நம்பிக்கைகளுக்கும் பஞ்சமில்லை.
ஆனால் உண்மை என்ன? கங்கையைப்பற்றி மாசு கட்டுப்பாடு வாரியம் ஆய்வின் அடிப் படையில் தெரிவித்திருப்பது அதிர்ச்சிக்குரிய தாகும். 2017ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு என்ன கூறுகிறது?
"கடந்த ஆண்டு ஆய்வின்படி உத்தரப் பிரதேசத்தில் 16 குளியல் இடங்களில் கழிவு நீர் கலப்பது 50 சதவீதத்தையும் தாண்டி விட்டதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அனுமதிக்கப்படும் அளவைக் காட்டிலும் அதிகம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பீகாரில் 88 சதவீத குளியல் இடங்களில் கங்கை நதி நீர் தூய்மையாக இல்லை என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2050 ஆம் ஆண்டில் இந்திய நதிகளில் நீர் மாசுபாடு மேலும் அதிகரிக்கும் என்றும், இதனால் உடல்நலத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனறும் யுனெஸ்கோ அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 கங்கை நதி நீர் மாசுபடுவதை தடுக்க நிர்மாணிக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் போதுமானதாக இல்லை என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கான்பூர், அலகாபாத், வாரணாசி ஆகிய இடங்களிலும் கங்கை நீர் அதிக அளவில் மாசு அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. வாரணாசியில் உள்ள மல்வியாபலம் நதி நீரும் மாசு அடைந்துள்ளது. உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களின் வழியாக கங்கை நதி பாய்கிறது. பீகாரில் அபிஷ் மால் என்ற இடத்திலும், உத்தரப்பிரதேசத்திலும் கங்கை நதியில் நுண்ணுயிர்க் கிருமிகள் அடங்கிய கழிவு நீர்அதிகம் கலப்பதால் இந்த இடங்களில் கங்கை நதி நீர் மிகவும் மாசு அடைந்துள்ளது. 
மேற்கு வங்காளத்தை பொறுத்த வரையில் 2016ஆய்வின்படி கழிவு நீர் நுண்ணுயிர்க் கிருமிகள் கங்கை நதியில் அதிகம் கலந்திருப்பது கண்டு அறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட பெரும்பாலான கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் எந்த அளவிற்கு தண்ணீர் சுத்தப்படுத்தப்படுகிறது என்ற புள்ளி விவரங்கள் கிடைக்கவில்லை."
- இவ்வாறு அந்த ஆய்வு குறிப்பிடுகின்றது.
கங்கை என்ற சாக்கடையைத் தூய்மைப்படுத்த 187 திட்டங்களுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது எவ்வளவுப் பொறுப்பற்ற மூடத்தனம்!
மக்கள் நல அரசாக இருந்தால் என்ன செய்ய வேண்டும், மத்திய - மாநில அரசுகள் கங்கையில் குளிப்பதற்கோ, குடிப்பதற்கோ தடை செய்ய வேண்டாமா? ஆனால் மத்தியில் உள்ள இந்துத்துவா பிஜேபி ஆட்சி கங்கையைச் சுத்திகரிப்பதாகக் கூறிக்  கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் பணம் கொட்டியழப்படுகிறது. கண்மூடித்தனமான ஒரு வேலையில் ஈடுபட்டு வருகிறது.
கங்கையில் குளிப்பது உடல் நலத்துக்கு உகந்ததல்ல என்று ஒரு பக்கம் மத்திய அரசின் ஒரு துறையான மாசு கட்டுப்பாடு வாரியம் அறி விக்கிறது. ஆனால் மத்திய அரசின் நிதித்துறையோ அதற்கு மாறாக கோடிக்கணக்கான ரூபாய் பணத்தைக் கொட்டிப் பாழாக்குகிறது. ஏனிந்த இரட்டை வேடம்?
நடப்பது மக்கள் நல அரசல்ல - மனுதர்ம அரசே!

Saturday, December 2, 2017

சேறும் சந்தனமாக மாறும்; மாற்றலாம் - அது நம் கையில்!

நம் வாழ்வில் அவதூறுகள் நம் எதிரிகளால் எளிதில் பரப்பப்படுவது இயல்பு.

அதுவும் பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள்மீது சேற்றை வாரி இறைப்பது, ஆதாரமற்ற செய்திகளை அள்ளி விடுதல் - இவைகளை வாடிக்கையாகவே கொண்டு வயிறு நிரப்பும் வம்பர்களுக்கு நமது நாட்டில் குறைவே இல்லை.

அதுவும் பெண்கள்பற்றியோ, சொல்லவேண்டி யதே இல்லை!

பயமுறுத்தி காசு பறிக்கும் கயமைக்கு இது ஒரு வழிமுறைபோல் சிலருக்குப் பயன்படும்.

எதையும் எதிர்கொண்டு பழக்கமில்லாதவர்கள், இல்லாத ‘பேய்’க்கு எப்படி மனிதர்களில் சிலர் அஞ்சி அஞ்சி நடுங்குகிறார்களோ, அதுபோலவே இந்த அவதூறு சேறு கண்டும் மிகவும் பலர் அஞ்சுவர்.

பொதுவாழ்க்கை என்ற முள்படுக்கைமீது உள்ள வர்கள் பதில் கூறவேண்டிய - அதாவது - பொருட் படுத்தவேண்டிய அவதூறுகளுக்குத் தக்க பதில் கூறவேண்டும்; இல்லாத பொல்லாப்பு, பொய் மூட்டைகளைப் புறந்தள்ளியே வாழப் பழகிட வேண்டும்.

சிலர் இதன்மூலம் ‘பிரபலம்‘ ஆவதற்கே இந்த அவதூறு பரப்புதலை ஒரு அன்றாடத் தொழி லாகவே செய்வதுண்டு.

எனது  பொதுவாழ்வில் இரண்டு அவதூறு வழக் குகளை நானே போட்டு, இரண்டிலும் உண்மையை நிலைநாட்டுவதில் வெற்றி பெற்று மகிழ்ந்தேன். மற்ற நண்பர்களையும், கழகக் கொள்கைக் குடும் பத்தவரையும் மகிழச் செய்தேன். மனநிறைவடைந் தேன். இளையவர்கள் தகவலுக்காக இது.

அ.தி.மு.க.வின் நாளேடாக நண்பர் ஜேப்பியார் நடத்திய ஒரு ஏடு, நண்பர் கே.ஏ.கிருஷ்ணசாமி நடத்திய ஏடுகளில், ‘நான்’ கலைஞரை அரசியல் ரீதியாக ஆதரித்ததினால், எரிச்சலுற்று, என்னை ‘‘கூவம் காண்ட்ராக்டர்’’ என்று, ‘சுத்தப்படுத்தாத கூவத்தில்’ தங்கள் பேனாக்களை நனைத்து எழுதி னார்கள். நான் பொருட்படுத்தவில்லை, அலட்சியப் படுத்தினேன்!

பிறகு, ‘மக்கள் குரல்’ நாளேட்டில் டி.ஆர்.ராமசாமி அய்யங்கார் (T.R.R.)    வேறு புனைபெயரில் இதே குற்றச்சாட்டை எழுதினார். பிரபல்யப்படுத்தி னார் - ‘கூவம் காண்ட்ராக்ட் புகழ்’ என்று பெயர் போட்டே எழுதியதை எதிர்த்து நான் ‘மக்கள் குரல்’ நாளேட்டின்மீது அவதூறு வழக்குப் போட்டு (Defamation I.P.C. கீழ்) சென்னை நீதிமன்றத்தில் அவ்வழக்கு விசாரணை நடைபெற்றது.

தன்னிடம் உள்ள நாளேடான ‘மக்கள் குரலில்’ கொட்டை எழுத்துகளில், குறுக்கு விசாரணையில், என்னிடம் அவர்களது வழக்குரைஞர்கள் கேட்ட அதீத கேள்விகளை பெரிதாகவும், நான் கூறிய பதில்களை சிறிதாகவும் வெளியிட்டு மக்களைக் குழப்பிட தொடர்ந்து முயற்சி செய்தார்கள்.

அந்த டி.ஆர்.ஆர்., முதலமைச்சராக அன்று இருந்த எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கம். ஈ.வெ.கி. சம்பத் அவர்களது மகன் பொறியாளர் கவுதமன் திருமணம் பெரியார் திடலில், அவரது தலைமையில், திருமதி சுலோச்சனா சம்பத் அவர்கள் நடத்தினார். அதற்கு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வந்தார். பெரியார் திடலுக்கு முதன்முதலாக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வருவதால், வரவேற்பது நமது கடமை என்பதால், நான் வரவேற்றேன்.

மேடையில் என்னை அழைத்து அமர்த்தி, அவர் என்னிடம், ‘‘நீங்கள் திராவிட இயக்கத்திற்கே பொதுச்செயலாளர்; எங்களுக்கு வழிகாட்டிடும் இடத்தில் உள்ளீர்கள். உங்கள்மீது இப்படி அவதூறு புகார் கூறியுள்ளதைப்பற்றி நீங்கள் வழக்குப் போட்டுள்ளதால் பரவுகிறதே’’ என்றார்.  ‘‘நீங்கள் ஏன் அவதூறு வழக்குப் போட்டீர்கள்’’ என்று அவர் கேட்ட தொனி, ‘‘வழக்கை வாபஸ் வாங்குங்கள்’’ என்று சொல்லாமற் சொன்னதாகும்!

காதோடு காதாக மேடையில் நாங்கள் பேசிக் கொள்கிறோம் - மற்ற அனைவரும் கவனிக்கின்றனர்.

நான் அவரிடம் சொன்னேன், ‘‘நீங்கள் முதல மைச்சர்; பொதுப் பணித்துறையின் கோப்புகளை வாங்கி, கூவம் சுத்தப்படுத்துவதுபற்றிய கோப்பில் -  நீங்களே உங்கள் செயலாளர்களை விட்டு ஆராய்ந்து பாருங்கள்; அப்படி என் பெயராலோ, என் தம்பி பெயராலோ ஏதாவது உள்ளதா என்று? எனக்குத் தம்பியே கிடையாது’’ என்றேன்.

முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் சிரித்தார். நிகழ்ச்சி முடிந்து திரும்பியதும் அக்கோப்புகளை வரவழைத்துப் பார்த்து ஆய்வும் செய்துள்ளார் என்பது பிறகு தெரிய வந்தது!

வழக்கு பல வாய்தாக்கள் நடந்தது! எனக்குப் பல வங்கிகளில் கணக்கு இருக்கிறது; அவற்றை எல்லாம் ஆராயவேண்டும் என்று ‘மக்கள் குரல்’ சார்பில் எதிர்மனுதாரர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

நான் மகிழ்ச்சியுடன் ஒப்புதல் அளித்து, பட்டியல் தந்தேன். பிறகு ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் 100 ரூபாய், 10 ரூபாய், 5 ரூபாய், 20 ரூபாய்தான் இருப்பு இருந்தன. அதனைப் பார்த்த நீதிபதி, ‘‘அதென்ன இப்படி’’ என்று அதிர்ச்சி அடைந்து கேட்டபோது,

‘‘பெரியார் சிலைகளை ஆங்காங்கு நிறுவிட, D.D. -க்களை (டிராப்ட்) என் பெயருக்கு கழகப் பொறுப்பாளர்கள் அனுப்புவதை டிராப்ட் களானபடியால், பற்பல வங்கிகளில் என் பெயரில் S/B
சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட் திறந்து போடப் பட்ட D.D. தொகையை எடுத்து அவர்களுக்குக் கொடுத்ததுபோக, குறைந்தபட்ச தொகைகளே இருப்புகள்’’ என்றேன்.

இதைக் கேட்டு நீதிபதி எதிர்மனுதாரர்களைப் பார்த்துச் சிரித்தார்! எதிரணி வக்கீலுக்கும் அதிர்ச்சி! வெட்கம்! தனியே என்னிடம் தனது வருத்தத்தை அப்போதே சொன்னார்.

கூவம் சம்பந்தமாக எந்த ஆதாரத்தையும் துளிகூட காட்ட முடியவில்லை; வழக்கு வழக்கம் போல 2 ஆண்டுகள் நடந்து முடிந்து, ‘மக்கள் குரல்’ ஆசிரியர் சண்முகவேல் அவர்களுக்கு சென்னைப் பெருநகர நீதிமன்றம் ஒன்றரை ஆண்டு தண்டனை அளித்தது! பத்திரிகையாளர் தண்டிக்கப் பட்டது அதுவே இங்கே முதல் முறை. அதில் எனக்கு மகிழ்ச்சியில்லை. காரணம், எழுதியவர் வேறு ஒருவர் - தண்டனை வாங்கி உள்ளே போனவர் வேறு ஒருவர். அதுவும் தமிழர்! எனவே, மேல்முறையீட்டில்கூட உயர்நீதிமன்றத்தில் மிகவும் வற்புறுத்திடவில்லை.

அதன் பிறகு என்னை ‘‘கூவம் காண்ட்ராக்டர்’’ என்று எழுதுவதையே பல ஏடுகளும், மேடைகளில் நாக்கில் நரம்பில்லாமல் பேசி வந்தவர்களும் தங்களுக்குத் தாங்களே வாய்ப்பூட்டுப் போட்டுக் கொண்டனர்!

அவதூறுகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம். பிரபல ‘இந்து’ ஆங்கில நாளேட்டின்மீது திராவிடர் கழகம் சார்பில் 1971 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கினை பொதுச்செயலாளர் என்ற முறையில் நானே நேரில் சென்று  (Party in person) வாதாடி வென்றோம்.

நாளை அதுபற்றி அறிந்துகொள்வீர்!

தமிழர் தலைவர் வாழியவே!

திராவிடர் கழகத் தலைவர், ‘விடுதலை’ ஆசிரியர், தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 85 ஆம் ஆண்டு பிறந்த நாள் டிசம்பர் 2.

இந்த 85 ஆண்டில், இவர்தம் பொதுவாழ்வின் அகவை 75. இந்த விகிதாசாரம் இவரேயன்றி, தமிழ்நாட்டில் வேறு யாருக்கும் வாய்த்திராத ஒன்றே - தனித்தன்மையே!

பத்து வயதில் தந்தை பெரியாரைப் பார்த்த அந்தத் தருணம் முதல் அவர் வைத்த கண் - வரித்த கொள்கையில் எவ்விதப் பிசிறுக்கும் இடமேயில்லை - மேலும் மேலும் உறுதிப்பாடும், உத்வேகமும், உற்சாகமும் மேலிட்டே வந்திருக்கிறது.

வெறும் பேச்சாளராக, எழுத்தாளராக, நிர்வாகியாக மட்டும் அமைந்திடாமல், சிறுவயதில் அவர் மேற்கொண்ட களப்பணி இயக்கம் மற்றும் பொது வாழ்வில் உரமேற கால்கோலாக அமைந்தது என்றே கூறவேண்டும்.

அவருக்கு அமைந்த சூழல் மிகமிக அருமையானது. பள்ளிப் பருவத்தில் ஊன்றப்படும் விதை என்பது விருட்சமாக ஓங்கி வளரக்கூடியது என்பதற்கு அவரே உதாரணம்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அதனை மிக அழகாக நேர்த்தியாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

‘‘இளமை வளமையை விரும்பும் என்பர்

இளமை எளிமையை விரும்பிய புதுமையை

வீரமணியிடம் நேரில் கண்டுள்ளேன்!

பாடிக் கைவீசிப் பலருடன் உலவி

வேடிக்கை பேசும் வாடிக்கைதன்னை அவன் பாற்

காண்கிலேன் அன்றும் இன்றும்

உற்றநோய் நோன்றலும் ஊர்நலம் ஓம்பலும்

நற்றவம் என்பர்; தொண்டென நவில்வர்!

தொண்டு மனப்பான்மை அந்தத் தூயனைக்

கொண்டது குழந்தைப் பருவத்திலேயே!’’

- எத்தகைய சரியான படப்பிடிப்பு இது!

திராவிட மாணவர் கழகத்தில் ஏராளமானவர்கள் இருந்த னர் - பல்கலைக் கழகங்களில் பயிலவும் செய்தனர். அந்தப் பட்டியலில் இவருக்கு உள்ள தனிச் சிறப்பு கல்வியில் பட்டொளிவீசிப் பறந்ததாகும். இதில் இவருக்கு நிகர் இவரே!

பல்கலைக் கழகத்தில் முதல் மாணவராக தங்கப் பதக்கத் துக்குரிய தங்கமாக ஒளிவீசினார் - மாணவராக இருந்தபோதே பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைத் தட்டிச் சென்ற வர். விடுமுறை நாள்களில் கடலூர் வீரமணியாகப் பட்டிதொட் டியெல்லாம் சுழன்று பிரச்சாரப் பேரிகை கொட்டியவர்.

தந்தை பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை பெற்றதிலும் முதல்வராக இருந்தவரும் இவரே! இதனைத் தந்தை பெரியார் அவர்கள் எழுத்துப் பூர்வமாகப் பதிவு செய்ததன்மூலம் நன்கு அறிய முடியும்.

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோர் மறைவிற்குப் பிறகு இந்த இயக்கத்தை நடத்திய பாங்கு, இயக்க அமைப்பு முறைகளில் கொண்டு வந்த மாற்றங்கள், பிரச்சார யுக்திகள், ஏடுகளை, இதழ்களை எழிலார்ந்த முறையில் நவீனத்துவத்துடன் மேம்படுத்திய நேர்த்தி, இயக்க நூல்களை எண்ணற்ற முறையில் வெளியிட்டு கடைகோடி மனிதனுக்கும் கழகக் கருத்துகள் போய்ச் சேருவதற்கான வழிமுறைகள் - வெளிநாடுகளிலும் இணைய தளத்தின்மூலம் முதன்முதலாகக் கொண்டு சென்ற சாதனை, பன்னாடுகளிலும் தந்தை பெரியாரைக் கொண்டு சென்ற வெற்றி என்பதெல்லாம் எமது ஆசிரியர் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களையே சாரும்.

இடை இடையே அரசுகளின் இடையூறுகள், இயக்கத்தில் சிறுசிறு பிளவுகள், தூற்றல் படலங்கள், தமிழக அரசியலில் தலைதூக்கும் விபீடணர்களின் திசை திருப்பும் பிரச்சாரங்கள், பார்ப்பனர்களின் ஊடக விஷமங்கள், இருட்டடிப்புகள் இன்னோரன்ன இடையூறுகள், தடைகளையெல்லாம் தாண்டி இயக்கத்தை மட்டுமல்ல - இனத்தின் உரிமை மீட்பில் தளகர்த் தராக இருந்து வெற்றி அறுவடைகளைக் குவித்தது சாதாரண மானதல்ல.

சமூகநீதி என்னும் தாயின் செல்வமான திராவிட இயக்கத் தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியிலே இருந்தபோதே இட ஒதுக்கீட் டில் பொருளாதார அளவுகோலைக் கொண்டு வந்து குழப்பத் தைத் திணிக்கவில்லையா? வேறு யார்? எம்.ஜி.ஆர்.தான்.

அதனைப் புறம்கண்டு, தேர்தலில் தோல்வி என்றால் என்னவென்றே அறிந்திராத எம்.ஜி.ஆருக்கே தண்ணீர் காட்டினாரே தமிழர் தலைவர்.

69 சதவிகித இட ஒதுக்கீடுக்கு வில்லங்கம் வந்தபோது, பார்ப்பன முதலமைச்சரையே பயன்படுத்தி, அதனைக் கட்டிக்காக்க தனி சட்டத்தையே எழுதிக் கொடுத்து நிறைவேற்ற செய்தது சாதாரணமா?

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் தந்தை பெரியாரால் வந்தது என்றால், 76 ஆம் சட்டத் திருத்தம் வந்தது தந்தை பெரியாரின் மாணாக்கர் ஆசிரியர் வீரமணி அவர்களால் அன்றோ!

மத்திய அரசில் இல்லாதிருந்த பிற்படுத்தப்பட்டவர்களுக் கான இட ஒதுக்கீட்டை மண்டல் குழுப் பரிந்துரையை அமல்படுத்த வைத்ததன்மூலம் சாதித்துக் காட்டினாரே!

அதன் பலன் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, அகில இந்திய அளவில் கோடானு கோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் வயிற் றில் பாலை வார்த்தாரே!

தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த தீண்டாமை - ஜாதி ஒழிப்புப் போராட்டமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை எனும் களத்தில் அனேகமாக வெற்றியின் முனையை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்தியாவை அரற்றும் இந்துத்துவா மதவாத அரசியலுக்கு - அதிகாரத்துக்கு முடிவு கட்டுவதிலும், அனைத்து கட்சியினரும் ஏற்றுக்கொள்ளும் தளபதியாக, தலைவராக இன்றைய தினம் விளங்கிக் கொண்டிருப்பவர் மானமிகு வீரமணி அவர்களே!

85 வயதை எட்டும் ஆசிரியர் எண்ணற்ற ஆண்டுகள் மேலும் வாழ்ந்து தந்தை பெரியார் எண்ணங்கள் அனைத்தும் வெற்றி முகட்டில் பறந்திடப் பாடுபடுவாராக! அப்பணிக்கு அர்ப்பணிப்போடு துணை நிற்போமாக!

வாழ்க பெரியார்! வெல்க அவர்தம் சித்தாந்தம்!

தமிழர் தலைவரின் பிறந்த நாள் அறிக்கை

மதவெறி ஒழிந்த மனிதநேய உலகுபடைப்போம்!

பதவிகளுக்கு முடிவு உண்டு - தொண்டோ தொடர் பயணம்!



எனக்கு 2.12.2017 இல் 85 ஆம் ஆண்டு பிறக்கிறது.

இதைவிட எனக்கு மகிழ்ச்சி அளிப்பது - அந்த 85 ஆண்டில்  புதைந்திருப்பது 75 ஆண்டுகாலப் பொதுவாழ்க்கை.

அதுவும் எப்படிப்பட்ட பொதுவாழ்க்கை?

எமது அறிவு ஆசான் தந்தை பெரியார் கூறினார்:

‘‘ஈ.வெ.ராமசாமி என்கிற நான், திராவிட சமுதாயத்தைத் திருத்தி, உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல் மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன்.

அந்தத் தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ, இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.

இதைத் தவிர வேறு பற்று எனக்கு ஒன்றும் இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படையாய்க் கொண்டு கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும், நான் அத்தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன்.

சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இதுபோதும் என்றே கருதுகிறேன்!’’ (6.9.1972 இல் தந்தை பெரியார் எழுதியது)

சமுதாயத் தொண்டு என்ற ஒரு பற்றைத் தவிர, ‘வேறு பற்றற்ற அவரைப்பற்றிக் கொள்ள’ எனக்குப் பயிற்சி தந்த  எனது ஆசிரியர் மானமிகு ஆ.திராவிடமணி அவர்களை என்றும் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

பெற்ற பல்கலைக் கழகப் பட்ட அறிவைவிட, சுய சிந்தனையாளரான நம் அறிவு ஆசானின் பகுத்தறிவுப் பாடங்களும், வழிகாட்டிய நெறியும், அந்நெறி ஊட்டிய ஒளியும் எம்மை உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசா உண்மைத் தொண்டனாக ஆக்கி, பெரியாரின் பெரும்பணியின் ஒரு பகுதியை ஆற்றிட எனக்கு வாய்ப்பளித்தது - யான் பெற்ற பேறு; ஈடு இணையற்ற இன்பம்!

பெரியார் என்ற பேராசானை வாசித்த கட்டம் மாறி, சுவாசித்த கட்டம் வந்ததாலும், அவரும் அவர் நம்பிக்கை வைத்து தொலைநோக்கோடு செய்த ஏற்பாட்டினாலும், தொடர்ந்த தொண்டு மேலும் தொடர உழைத்த எம் அன்னையும் - இருவரும் எம்மீது சுமத்திய பொறுப்பில் பளிச்சென்று தெரிந்த நம்பிக்கைச் சுடரும், இருட்டில் தடுமாறாது கடமையாற்றிட எம்மை வழிநடத்தியது அய்யா - அம்மாவுக்குப் பிறகு,

இலக்கை மட்டுமே குறி வைத்த பார்வை; பதவியோ, பெருமையோ வராதா என்ற சபலம் ஏற்படாது காத்து அரண் செய்த கரணியாக அமைந்தது!

தனி வாழ்வில் இடறிவிழ வாய்ப்பே இன்றி, இயக்கப் பொறுப்பு எம்மை என்றும் ஈரோட்டுப் பாதையிலேயே பயணிக்க வைத்தது.

மானம் பாராத பணி

நன்றி பாராத பணி,

புகழ்வேட்டை ஆடாத பணி

தன்முனைப்பில்லா தனித்தன்மைப் பணி

தன்னடக்க தகைமைப் பணி

என்ற இலக்கணம் வகுத்து எம்மை நடத்தியது - வழி நடத்துகிறது!

‘பெரியார் தந்த புத்தி’ என்ற பெருவழிகாட்டி, இதைவிட எமது தொடர் பணிக்குத் தூண்டுதல் வேறு என்ன தேவை?

இந்த அளவுக்கு ஒரு முக்கால் நூற்றாண்டு பொதுவாழ்க்கைதான் எல்லையற்ற மன நிறைவையும், மகிழ்வையும் தந்துகொண்டே இருக்கிறது!

நம் இன எதிரிகளின் எதிர்ப்புகள் ஒருபுறம் உரமேற்றுகிறது. இயக்கத் தோழர்களின் அணைப்புகள் மறுபுறம் உற்சாகமூட்டுகின்றன.

‘ரத்தம், தண்ணீரைவிடக் கெட்டியானது; ஆனால், கொள்கைக் குடும்ப உறவும், உணர்வும், ரத்த பாசத்தைவிடக் கெட்டியானது! குன்றாதது!!

இது என்னைப் பொறுத்தவரை கூடுதல் (போனஸ்) வாழ்க்கை; மருத்துவ அறுவை சிகிச்சைகள், பலமுறை கொலை முயற்சிகள் எல்லாம் தாண்டிய நிலையில், பெரியார்தம் பெரும் பணி முடிக்கும் சமூகப் போர்க்களத்தில் முறுக்கோடு நிற்கும் துணிவை அளித்துள்ளது.

இப்படி, சலிப்பின்றி உழைக்க, பலரது சரியான ஒத்துழைப்பே முக்கிய காரணம். அவர்கள் அனைவரும் எமது வற்றாத நன்றிக்குரியவர்கள்.

1. எனது வாழ்விணையர் திருமதி. மோகனா

2. எனது இயக்கக் குடும்பத்தவரான கருஞ்சட்டைகளின் பாசப் பொழிவுகள், கருஞ்சட்டை அணியாத கண்ணுக்குத் தெரியாத பற்றாளர்கள் அன்புப் பிணைப்புகள்

3. என் வாழ்நாளை நீட்டும் மருத்துவ மாமணிகள்

4. எனக்குத் துளியும் கவலையையோ, அவப்பெயரையோ ஏற்படுத்திடாத எனது குருதிக் குடும்ப உறவுகள்

5. பயணத்தில் என்னைப் பாதுகாக்கும் காரோட்டிகள் உள்பட பற்பலத் தோழர்கள்

6. குறிப்பறிந்து என்னுடன் பணியில் பங்கேற்று, எனது ‘வேகத் தாக்குதல்களையும்‘ சமாளிக்கும் தோழர்கள்.

7. தேவைப்படும்போதும், நாடும்போதும் மதியுரை அளிக்கும் நல்லெண்ண நண்பர்களாம் மூத்தோர்.

- இப்படிப் பலரது கூட்டு - என் பணிகளை எளிதாக்கி, ஊக்கமூட்டும் மாமருந்துகளாகும்!

‘இளமையில் கல்’ என்பது என்னைப் பொறுத்தவரை, ‘ஈரோட்டில் கல்’ என்றாகியதால், எவ்வித கேடோ, குறையோ இன்றி, எளிதில்  முடியாத பணியை ஏற்றமுடன் என்றும் புத்துணர்ச்சியுடன் செய்வதில்தான் புத்தாக்கம் பெறுகிறேன்.

இவ்வாண்டும் பெரும் பணி முடிக்கவேண்டிய வரலாற்றுக் கட்டாயம் நம் தலைமீது சுமத்தப்பட்டுள்ளது.

1. ஜாதி - தீண்டாமை  ஒழிப்பு என்பதை அடிப்படையாகக் கொண்ட அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற சட்டத்தின் அமலாக்கம்! இப்பணியே முன்னுரிமை பெற்ற முதன்மைப் பணி இப்போது.

2. சமூகநீதிக்கு ஏற்பட்டுள்ள அறைகூவல்களுடன் தனியார் துறை இட ஒதுக்கீட்டுக்கான விரிவான வேலைத் திட்டம்!

3. மகளிர் மாண்பும், உரிமையும், அவர்களுக்கெதிரான வன்கொடுமைகளை எதிர்த்துப் போராட்ட வடிவங்கள்.

4. சாமியார்கள் என்ற போர்வையில் சமூக விரோத காவிக் காலிகளின் அட்டகாசத்தை அறவே வீழ்த்தி எறிய, ‘ஜாதியற்ற சமூகம், சாமியார்கள் இல்லா நாடு’ நம் குறிக்கோள்.

5. மனிதன் தானாகவும் பிறக்கவில்லை - தனக்காகவும் பிறக்கவில்லை என்பதால், தரணிக்கு உழைப்பது தன்னேரில்லாத இன்பம் என்று உணரச் செய்த பெரியார் தத்துவங்களை உலகளாவிய அளவில் பரப்பும் பணியில் மேலும் முன்னேற்றம்.

- இந்த இலக்குகளை நோக்கிய எம் பயணத்தில் இணைந்து கொள்ள வாருங்கள் இளைஞர்களே, தோழர்களே!

சராசரி மனிதனுக்கு 85 வயது - முதுமையின் அடையாளம்!

சறுக்காத பொதுத் தொண்டனுக்கு ‘‘சடுதியில் பணி முடி’’ என்ற கட்டளையின் ஒலி முழக்கம் அது!

இல்லையா தோழர்களே?

எனவே, இணைந்து பணி முடிப்போம்!

மதவெறி ஒழிந்த மனிதநேய உலகுபடைப்போம்!

பதவிகளுக்கு முடிவு உண்டு - தொண்டோ தொடர் பயணம் - மறவாதீர்!

அனைவரின் நம்பிக்கையை ஒருபோதும் பொய்யாக்காமலிருக்க முடிந்த அளவு - முடிவு வரை உழைப்பேன் என்ற உறுதிமூலம் நன்றி தெரிவித்து மகிழ்கிறேன்.

களம் காண கைகுலுக்கி  வரவேற்கிறேன் விரைந்து வாரீர் தோழர்களே!

பெரியார் பணி முடிப்போம்!

வெற்றியைக் குவிப்போம்!



தலைவர்,         திராவிடர் கழகம்

சென்னை
1.12.2017

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...