Tuesday, November 7, 2017

என்று தீரும் இந்த அரசின் மூன்றாண்டு கால வேதனைகள்? மோடி அரசு மூன்றாண்டுகள் கொடுமைகள் திரும்பிப் பார்க்கிறோம்


பொய்யான வாக்குறுதிகள், போலி யான விளம்பரங்கள். தேர்தலுக்குத் தேர்தல் ஏமாற்றுவதே தொழில். எதற்கெடுத்தாலும் சப்பைக்கட்டுகள் - ஜால்ரா தட்ட இங்கு தயாரிக்கப்பட்ட ஒரு கூட்டம். முன்பெல் லாம் பம்மிக்கொண்டு இருந்தவர்கள் - பயமின்றிக் கூச்சமின்றிச் சிறிதும் வெட்கமு மின்றிப் பசப்பு கிறார்கள். இப்படியே காலம் ஓடிவிடும் என்று கனவு காண்கிறார்கள். இந்துத்துவா துருப்புச்சீட்டு கை கொடுக்கும் எனும் கனவில் மிதந்துகொண்டு இருக் கிறார்கள். மோடி அரசு வந்தால் முகம் மலர்ந்து, மாற்றம் வரும் என்று தாமரைக்கு வாக்களித்த நடுநிலை வாக்காளர் என்பவர் முகமெல்லாம் மெல்ல மெல்லக் கூம்பி வருகிறது. கூம்பியது கூம்பியதுதான், அதை மாற்றவே முடியாது என்பதை ஆட்சியாளர் உணரவேண்டும். ஏன்?

தொடக்கத்தில் இருந்தே காவிக்கட்சி அரசு என்பது நாட்டு நலனுக்கு, சமூக ஒற்றுமைக்கு, இட ஒதுக்கீட்டுக்கு, இந்த மண்ணின் பண்பாட்டுக்கு, விரோதமான நஞ்சான அரசு என்று சொல்லிச்சொல்லி வலியுறுத்திவருவது திராவிடர் கழகம் மட்டும்தான், தமிழர் தலைவர் ஒருவர் தான்! அந்த அளவிற்குத் தொலை நோக்கான சமூக சீர்த்திருத்த இயக்கம் திராவிடர் கழகம்.  அவ்வப்போது மோடி அரசின் முக மூடியைக் கிழித்து, உட்பொதிந்த வஞ்சகத்தை, மைபொதி விளக்கேயன்ன அவர்கள் மனத்தில் புதைந்த கடுப்பினை வெளிச்சம் போட்டு விளக்கியே வந்தது திராவிடர் கழகம்.

ஓர் ஆட்சி என்றால் ஒன்று, இரண்டு நல்லது கூடவா இல்லாமல் போய்விடும். பா.ஜ.க.விற்கு வால் பிடிக்கும் கூட்டம் பாவம் மூன்றாண்டு ஆட்சி நிறைவுச் சாதனைப்பட்டியல் பாரீர், பாரீர் என்று பாராட்டி எழுத ஏதுமில்லாமல் தவிக்கும் பாட்டைப் பார்க்கையில் நமக்குச் சிரிப் பாக இருந்தாலும் அவர்களின் பச்சைத் துரோகம் நம் மனதைக் குடைகிறது.

சரி! அவர்கள் சொல்லும் அசட்டுப் பிசட்டுச் சாதனைகள் என்பவை வெறும் வாய்வார்த்தை, வாய்ஜாலம் தான்.

தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா அண்டு ஸ்மார்ட் சிட்டி என்று பேசியதை நன் றாகக் கவனிக்க வேண்டும். பேசியதை, வெறும் பேச்சைக் கூட நியாயப்படுத்த முடியவில்லை. ஏதாவது நடந்து இருந் தால்தானே. "பேரு பெத்த பேரு, தாக நீளு லேது" கதை தான்.

நம்மைக் கேட்கட்டும். நாம் அந்த ஓட்டைச் சல்லடைத் திட்டங்களை உரி, உரி என்று உரித்துப்போட ஆதாரங்கள், ஆவணங்கள் நம்மிடம் ஏராளம், ஏராளம்!

பா.ஜ.அரசின் ஆட்சியில் மக்கள் பட்ட வேதனைகள் அவதிகளை நம்மால் பட்டியல் இட முடிகிறது. அண்ணா அன்று முழங்கினாரே "கும்பி எரியுது, குடல் கருகுது - உங்களுக்கு ஆட்சி ஒரு கேடா? மக்கள் அவதிப்பட்டு மாண்டது போதாதா? நீங்கள் ஆண்டது போதாதா?" என்று கேட்க வேண்டும். 450 உழவர் பெருமக்கள் மாண்ட பின்னும் இங்கி ருக்கும் ஆட்சியின் கையாலாகாத தனத் தால் கையைப்பிசைந்து கொண்டிருக் கிறோம்.

சென்னை குடிநீர்ப்பஞ்சம் என்பது குறிப்பாகப் பத்து ஆண்டுகள் வீராணம் திட்டத்தால் இல்லாமல் இருந்தது. ஆனால் சந்துபொந்துகளில் எல்லாம் தண்ணீர் லாரிகள் நிற்கின்றன. காலிக் குடத்தோடு காத்திருந்த மக்களிடையே தாயாய்ப் - பிள் ளையாய்ப் பழகிய வர்களிடையே சண்டை.

இதற்கெல்லாம் காரணம் மத்தியில் ஆளும் மோடி அரசு என்பதைப் பட்ட வர்த்தனமாகக் கூறாமல், வானம் பொய்த்து விட்டது என்று இங்குள்ள அடிமை அமைச்சர் திருக்கூட்டம் பசப்புகிறது. வானம் இந்த ஆண்டுதான் பொய்த்துப் போனதா? கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் பொய்த்துப் போகவில் லையா? அல்லது பெய்து கெடுத்து விட்டுப் போகவில்லையா?

காவிரியில் வந்து கொண்டிருந்த நீர்வரத்தைக் கன்னடத்தான் அடைத் தான். திட்டமிட்டுத் தண்ணீர் வரும் வழி அடைக் கப்பட்டது. திருச்சி, தஞ்சை மாவட்டங்கள் மட்டுமின்றிச் சென்னை வரை குடிக்கக் கூடத் தண்ணீர்ப் பஞ்சம். இங்கிருக்கும் நதிகளை இணைத்துக் கொடுத்திருந்தாலே இவ்வளவு பஞ்சம் ஏற்பட்டிராது.

அண்டை மாநிலம் ஆந்திரா ஓராண் டுகளில் நதிநீர் இணைப்பை உருப் படியாக நிறைவேற்றியது என்று ‘வாட்ஸ் அப்பில்' படித்ததோடு சரி. முதலமைச்சர் என்று டில்லியின் சூத்திரக்கயிற்றுக்கு ஆடும் பொம்மை. விளைவு காவி வாடை தமிழ் மண்ணில் மணக்க வைக்க மட்டும் காத்திருக்கிறது கழுகுபோல மய்ய அரசு.

ஆனால் ஒரு நிம்மதி. மக்களிடம் பேசினால் சாமானிய மக்கள் கூட இந்த விஷயத்தில் இது பெரியார் மண்! கரகாட் டக்காரி என்ன ஆட்டம் போட்டாலும் காவியின் ஆட்டம் எடுபடாது என்றே கூறக் கேட்கிறோம்.

விலைகள் உயர்ந்து கிடக்கின்றனவே. ரேஷனில் கொடுத்துவந்த உளுத்தம் பருப்பு இல்லாமல் போயிற்றே. இதற்கு அடிப்படை பெட்ரோல், டீசல் ஆகிய வற்றின் வரி உயர்வு. எவ்வளவு உயர்வு தெரியுமா? 200 விழுக்காடு போக்கு வரத்துச் செலவு உயர்ந்தால் பொருள் விலை கூடும் சாமானியனுக்கும் தெரியும் பொருளாதாரம்.

மருந்து பொருள் விலை உயர்ந் திருக்கிறது.

ரயில் கட்டண உயர்வு ஆண்டுக்கு ஆண்டு அதிகம். 200 ரூபாய் பயணச் சீட்டில் பயணிக்க வேண்டிய பயணி களுக்கு 800 ரூபாய் கட்டணத்தில் சிறப்பு ரயில் என்று அதே ஓட்டை உடைசல் ரயில் வண்டி. ரயில்வேயில் செய்த எந்தச் சீர் திருத்த மாவது மக்களுக்கு பயனளித் திருக்கிறதா? தமிழ் மண்ணுக்கு என்று புதிய ரயில், புதியபாதை, புது வசதிகள் ஏதும் கிடையாது.  வாரத்தில் திங்கள், புதன் என இரண்டு நாட்கள் ஓடிய துரந்தோ, மேலும் ஒரு நாள் வெள் ளியன்று அதே பாதையில் ஓடுகிறது. கேட்டால் புதிய ரயிலாம். முன்பதிவு செய்யும் விண்ணப்பப் படிவத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் கொடுத்த நிலை மாறி ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் கொடுக்கும் துணிவு கண்டதுதான் மிச்சம்.

ஒரு காலத்தில் மக்கள் பயன்படுத்த அஞ்சி இப்போது குடிசை மக்களும் பயன்படுத்தும் எரிவாயு உற்பத்தியில் செலவு ஏதும் கூடுவதில்லை. ஆனால் இன்று எரிவாயு விலை உயர்வு. உயர்வு என்றால் ஒரு மடங்கு இரு மடங்கு அல்ல - அய்ந்து மடங்குகள். பெண்கள் கண்ணீர் வடிக்கும் மோடி அரசின் சாதனை இது. ஆம்! எரிவாயு விலையை ஏற்றிக் கொண்டே போவது.

விவசாயி வீட்டுக் கடனுக்கு வாசல் கதவைத் தட்டுகிறான். வீட்டுப் பொருட் களை ஜப்தி என்ற பெயரில் வாரிக் கொண்டு போகிறான். ஆனால் பெரு முதலைகளின் வாராக்கடன், உயர்ந்து கொண்டே போகிறது.

கருப்புப் பணத்தைக் கண்டு பிடிப் போம். கண்டுபிடித்த காசை ஒவ்வொ ருவர் கணக்கிலும் அய்ந்து லட்சம் போடுவோம் என்று வாய்ப்பந்தல் போட் டவர்கள் வெளிநாட்டு கருப்புப்பண முதலீட்டாளர் பெயரை வெளியிட மறுத்தது ஏன்? மோடி அரசுக்குத்தான் வெளிச்சம்.

500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்ததே மோசடி. ஓர் அரசு முறையாகச் செய்ய வேண்டிய முறையில் செய்யாமல் மோடியே முன்வந்து ‘பாயி யோங், பேகனோங்' என்று அறிவித்த போதே இது மோசடி என்பது தெரிந்தது. அவனவன் உழைத்துச் சேர்த்து வைத்த பணத்தை வங்கியிலிருந்து எடுக்கப்பட்ட பாடு - கொடுமை. தன் பணத்தை வங்கியில் சேமித்து வைத்தவனெல்லாம் குற்றவாளி ஆகின்ற நிலை. ஆனால் பிஜேபிக்காரன் தடபுடல் கல்யாணம். 200 கோடி செலவு. இதெல்லாம் கேட்பாரற்றுப் போயிற்று. கள்ளப்பணம், கருப்புப்பணம் பதுக்கல் பணம் என்று பெரிதாக வந்து விடவில்லை.

மாறாக இடைத்தேர்தலில் ஒரு ஓட் டுக்கு 500, 1000 என்று இருந்தது. இரண்டு புது 2000. நோட்டாகக் கை மாறியதே எப்படி? எல்லாம்மோடி என்பதை விட மோசடிதான், மோசடித்தான்! மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் உலக வரை படத்தில் கால் வைக்காத நாடு, ஊர் இருக் கக் கூடாது என்பதாகத்தான் இருந்ததே தவிர என்ன பயன் விளைந்திருக்கிறது? எத்தனை கோடி அந்நிய முதலீடு வந்து குவிந்திருக்கிறது. நாணயம் இருந்தால் இது குறித்து நாவசையட்டும், வெளி யுறவுக் கொள்கை எவ்விதப் பயனும் அளிக்க வில்லை.

ராணுவ வீரர் ஓய்வூதியத் திட்ட தாமத மாம், உதய்மின் திட்டம் எல்லாம் தோல்வி.

யானைப் பசிக்குச் சோளப்பொரி என்பதுபோல் வறட்சி நிவாரணத்திற்குக் கேட்டதில் பத்து சதவீதம்தான் கிடைத் தது; தமிழகம் வறட்சியில் வாடுகிறது.

ஏற்கெனவே மாசுபட்டுக் கிடக்கிறது கங்கை நீர். அதில் வாயில் நுழையாத பெய ருடைய கிருமிகள் என்றெல்லாம் தகவல் வருகிறது. அந்த நீரைத் தபால் துறை வழி இந்தியா முழுவதும் அனுப்பி இந்தியா முழுமைக்கும் மாசு பட்ட நீரால் நோய்க் கிருமி பரப்பிய புண்ணியவான் அரசு மோடி அரசு என்று பெயரெடுத்து விட்டது.

இப்படிச் சொல்லிக் கொண்டு போவதை விடப் பட்டியல் போடுகிறேன்.

மோசடி செய்து மூன்று மாநிலங்களில் ஆட்சி

அருணாசலப் பிரதேச ஆட்சி கலைத்து மூக்கறுப்பு

ராணுவத்திற்கான உணவில் முறை கேடு

இடஒதுக்கீட்டில் கை வைக்க முயற்சி

பென்சன் வட்டி வீதம் குறைப்பு, விதி முறை மாற்றங்கள்

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊதியம் தாமதம்.

யாராவது தலைவர்கள் இறந்தபோது கூடக் கடை அடைக்காத ஓட்டல்காரர், மருந்துக் கடைக்காரர் எல்லாம்  ஜி.டி.பி. குளறுபடியால் கடை அடைத்த அவலம் இதுவரை காணாத ஒன்று.

புதிய வங்கிக் கட்டணங்கள்

ஆதார் குளறுபடி

அந்நிய நேரடி முதலீடு

இந்தித் திணிப்பு

காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்காத மோசடி

நீதிபதிகள் நியமன தாமதம்.

அய்.டி. ஊழியர் லட்சக்கணக்கில் பணி இழப்பு

கல்புர்கி, ரோகித்வெமுலா கொலை

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகப் பிரச்சினைகள்

வருண் காந்தி ராணுவ ரகசியங்கள்

ஜல்லிக்கட்டுப் பிரச்சினை

இவ்வளவு தானா என்று இருந்து விடா தீர்கள், இன்னும் இருக்கிறது.

லலித்மோடி வியாபம், கிரண் ரிஜ்ஜூ 450 கோடி சுரங்க ஊழல்

பிரான்சு பழைய போர் விமானம் அதிக விலை

பள்ளிப் பாடப் புத்தகங்களில் இந்துத்வா வரலாறு திணிப்பு.

பல்வேறு பா.ஜ.க. உறுப்பினர்களின் வெடி தயாரிப்பு, ஓரினச்சேர்க்கை, பலாத்காரம், பெண் பற்றிய பண்பாட் டுக்கு முரணான கருத்துகள். சஹாரா பண லஞ்சம், மோடி முதலமைச்சராக இருந்தபோது தனியார் நிறுவன விளம் பரம், ஜியோ பே.டி.எம் விளம்பரம், பதில் இல்லாத தகவல் உரிமைச் சட்டம். ஜக்கி ஈஷா யோகா நிகழ்ச்சி, பாபா ராம்தேவ் நில ஒதுக்கீடு, சமஸ்கிருதம் திணிப்பு. பொதுசிவில் சட்டம், கங்கை தூய்மைப்படுத்தும் திட்டம் 20,000 கோடி வீண்!

மாட்டுக்கறி தடை, மாட்டுக்கறி கொலைகள், பசுமை தீர்ப்பாயம், ரவிசங்கர் மாநாட்டுக்கு அபராதம், அயோத்தி ராமர்கோயில், அமைச்சர் களின் வெறுப்புப் பேச்சு, கட்டாய சூரிய வணக்கம், டில்லியில் விவசா யிகள் போராடிய கொடுமை, ரேஷன் மானியம் நிறுத்தம், நீட் தேர்வு மோசடி, 470 கோடி பணம் பிடித்தது முதல் பல்வேறு வேட்டைகளின் நிலை, 500, 1000 செல்லாததில் திரும்ப வந்தது எவ்வளவு, அதானிக்கு மட்டும் 72,000 கோடி கடன், ஸ்டேட்பேங்கில் நான் போட்ட பணம் எடுக்கக்கட்டணம் குறைந்த தொகை இருப்பு 5000 என்று அவதிக்கு மேல் அவதியுறும் மக்க ளுக்கு,  ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெறும் கிழவி வங்கியில் குறைந்த அளவு இருப்பு 5000 வைக்காததால் 350 ரூபாய் போக 650 மட்டுமே ஓய்வூதியம் பெறும் அவலம் ஆகி யவைகளுக்கு எல்லாம் எப்போது இந்த அரசிடமிருந்து விடுதலை கிடைக்கும்?

'நீட்' தேர்வு: மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்காததற்குக் காரணம் - மடியில் கனமே!


நீட்' தேர்வு: மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்காததற்குக் காரணம் - மடியில் கனமே!

புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி

புதுச்சேரி, நவ.6 'நீட்' தொடர்பாக தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் குறித்து மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காதது ஏன் என்பது குறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் பேட்டியளித்தார்.

புதுவைக்கு நேற்று (5.11.2017) நீட் எதிர்ப்பு விளக்கக் கருத்தரங்கத்தில் பங்கேற்க சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:

செய்தியாளர்: நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து கருத்தரங்கம், போராட்டங்கள் எல்லாம் நடத்தினீர்கள்; இதுவரையில் தமிழக அரசு எந்தவிதமான நடவடிக் கையையும் எடுக்கவில்லை. எந்த மாதிரியான அழுத்தத்தை மத்திய அரசுக்குக் கொடுக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: தமிழக அரசு எல்லாவற்றையும் மேலே இருக்கிறவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. தமிழக அரசு இரட்டை நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். ஒரு பக்கம் நீட்டை நாங்கள் எதிர்க்கிறோம் என்று சொல்கிறார்கள். கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய இரண்டு மசோதாக்கள் என்னாயிற்று? என்று மத்திய அரசிடம் கேட்பதற்குக்கூட இவர்கள் தயாராக இல்லை. நாளை தமிழகத்திற்குப் பிரதமர் வருகிறார்; அவரிடம் எத்தனையோ விஷயங்களை சொல்லலாம். ஆனால், அவர்கள் சொல்வதற்குத் தயாராக இல்லை. காரணம் என்னவென்றால், அவர் களுடைய கட்சிப் பிரச்சினையையே பெரிதாக நினைக்கிறார்களே தவிர, மக்கள் பிரச்சினைகளை அவர்கள் உதாசீனப்படுத்துகிறார்கள்.

எனவேதான், மீண்டும் மீண்டும் ஒத்த கருத்துள்ள அனைவரையும் ஒன்றிணைத்து இந்தப் பணியை நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். ஏற்கெனவே செய்ததுபோன்று. வீதிமன்றப் போராட்டம் மட்டுமல்ல; நீதிமன்றத் சட்டப் போராட்டம் - நீதித் துறையில் உள்ளவர்களுக்கு இதைப்பற்றி வலிமையாக சொல்லக்கூடிய அந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம்.

செய்தியாளர்: தமிழக அரசு இந்தப் பிரச்சினையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காததற்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: மடியில் கனம், வழியில் பயம்!

செய்தியாளர்: கந்து வட்டி தொடர்பாக கார்ட்டூன் வரைந்த பாலா கைது செய்யப்பட்டு இருக்கிறாரே?

தமிழர் தலைவர்: எல்லாவற்றிலும் மத்திய அரசைப் பின்பற்றுகிறவர்கள் இதிலும் பின்பற்றுகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

பாலாமீது போடப்பட்டுள்ள வழக்கை விலக்கிக் கொண்டு அவரை விடுதலை செய்ய வேண்டும்.

Monday, November 6, 2017

மனிதர்கள் கழகம்


மேன்மைக்குரிய தலைவர் அவர்களே, தாய் மார்களே, பெரியோர்களே!

இன்றைய தினம் இந்த செயங்கொண்டத்தில் பகுத்தறிவாளர் கழகத்தை துவக்கி வைக்கும் பேறு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் கூறுகிற, கருதுகிற கருத்துகளை நீங்கள் கேட்கத்தான் கடமைப் பட்டவர்களே தவிர, அப்படியே நம்பக் கடமைப்பட்டவர்களல்ல. கேட்பவற்றை எல்லாம் நம்ப வேண்டுமென்றால், இதுவரை இந்த நாட்டில் என்னைவிட அதிகமாகக் கூறப்பட்ட கருத்துகள் ஏராளம்! ஆகவே, எதையும் நம்பாமல் அறிவு கொண்டு சிந்திக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

பகுத்தறிவாளர் கழகம் என்றால் மனிதர்கள் கழகம் என்று பெயர் மனிதனுக்குத்தான் பகுத்தறிவு என்ற ஒன்று இருக்கிறது. உலகத்தில் எத்தனையோ கோடி ஜீவன்கள் இருக்கின்றன என்றாலும் அவைகளுக்கு எல்லாம் ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு கிடையாது. மனிதன் ஒருவனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. அப்படி இருக்கும்போது நாம் ஏன் பகுத்தறிவாளர் கழகம் துவக்க வேண்டும்?

இந்தக் கூட்டத்திற்கு வராதவர்கள் எல்லாம் பகுத்தறிவு அற்றவர்களா? பகுத்தறிவாளர் கழகத்தைச் சேராதவர்கள் எல்லாம் பகுத்தறிவு அற்றவர்களா? சிந்திக்க வேண்டும்.

நான் முன்பு ஒருமுறை ஒரு சுயமரியாதை மாநாட்டிற்கு குமாரசாமி ரெட்டியார் என்ற மந்திரியாரை அழைத்து இருந்தேன். அவர் வந்தும் பேசினார். அப்போது சொன்னார், "சுயமரியாதை மாநாடு என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். அப்படியானால், மற்றவர்களுக்கு சுயமரியாதை இல்லை என்று அர்த்தமா?" என்று கேட்டார். அதற்குப் பின்னால் நான் பேசும் போது, அவரைக் கேட்டேன். "நீங்கள் என்ன ஜாதி?" என்று. 'ரெட்டியார்' என்றார். கோவிலுக்குச் சென்றால் எந்த இடத்தில் நிற்கிறீர்கள்? ஓட்டலுக்குச் சென்றால் எங்கே உட்காருகிறீர்கள்? அதற்குக் காரணம் என்ன? நீங்கள் சூத்திரன் என்பதால் அல்லவா என்று கேட்டேன். அசட்டுச் சிரிப்பு சிரித்தார். கூடியிருந்த மக்கள் எல்லாம் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

விளையாட்டுக்காக நான் சொல்லவில்லை. இன் றைக்கும் நம் நிலைமை என்ன? சாஸ்திரப்படி மட்டுமல்ல - இன்றைய இந்தியாவின் அரசியல் சட்டப்படியும் நாம் சூத்திரர்கள்தான். எவன் கிறித்தவன் இல்லையோ, எவன் முஸ்லிம் இல்லையோ, அவனெல்லாம் பார்ப்பானைத் தவிர்த்து பகுத்தறிவுவாதி - நாத்திகன் உட்பட சூத்திரன் என்று இன்றைய சட்டத்திலும் இருக்கிறது.

இதற்கு ஒரு பரிகாரம் செய்ய வேண்டும் என்றுதான் தீவிரமாக இருக்கிறேன். நான் 50 ஆண்டுகளாக இந்த நாட்டில், பகுத்தறிவு சுயமரியாதை பிரச்சாரம் செய்தும் வருகிறேன்.

நம்முடைய இலட்சிய சொல்லாக 'கடவுள் இல்லை - கடவுள் இல்லை! கடவுள் இல்லவே இல்லை! கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் - பரப்பியவன் அயோக்கியன் - வணங்குகிறவன் காட்டுமிராண்டி' என்று கொண்டு இருக்கிறோம்.

உலகத்திலே இருக்கிற மற்ற நாட்டு பகுத்தறிவு வாதிகள் எல்லாம் புதிய புதிய கருவிகளை எல்லாம் கண்டுபிடித்து இருக்கிறார்கள். ஆணும், பெண்ணும் "படுக்காமலேயே" குழந்தை பெறக் கூடிய சாதனங்கள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. கடுமையான வியாதிகளுக்கு எல்லாம் மருந்து வகைகள் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. இவை எல்லாம் பகுத் தறிவை பயன்படுத்தியதால் மற்ற நாட்டுக்காரன் செய்து காட்டிய சாதனை.

1952-இல் நம்முடைய சராசரி ஆயுள் 29. இன்றைக்கு நமது சராசரி ஆயுள் 52. இன்னும் நம் நாட்டு வைத்தியன் எல்லாம் செத்தான் என்றால் அது 75 ஆகி விடும். நம் நாட்டு வைத்தியன் செய்த புண்ணியமெல்லாம் நம் உயிரைக் கொன்று தீர்த்தது தான். வெள்ளைக்காரன் வைத்தியம் நாட்டில் வளர்ந்து விட்ட பிறகுதான் நம்முடைய ஆயுள் நீண்டு வருகிறது.

இன்றைக்குச் சொல்கிறேன், ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். கி.பி. 2,000 முடிவில் இந்திய மனிதனின் சராசரி வயது 75 ஆகவும், வெள்ளைக்காரன் வயது 110ஆகவும் ஆகப் போகிறது. நான் அப்போது இருக்க மாட்டேன். நீங்கள் அதை அனுபவிப்பீர்கள்.

எனக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு நாக்கில் புற்று வந்தது. அந்தத் தழும்புக் கூட இன்னும் இருக்கிறது. டாக்டர் ரத்தின வேலு சுப்பிரமணியமும், டாக்டர் ராயும் வைத்தியம் பார்த்தார்கள்.

டாக்டர் ராய் எலக்டிரிக் டிரீட்மெண்டு செய்து என்னைப் பிழைக்க வைத்தார். இப்படி எல்லாம் மனிதனின் பகுத்தறிவு விஞ்ஞானத் துறையில்; இன்னும் எவ்வளவோ வளர்ந்து வருகிறது.

நம் நாட்டைப் பொறுத்த வரையில் என்னுடைய கவலை எல்லாம் நம்முடைய பகுத்தறிவு, நமது மானத்தைக் காப்பாற்றப் பயன்பட வேண்டும் என்பது தான்.

மற்ற நாட்டுக்காரன் பகுத்தறிவு எல்லாம் வளர்ந்து சந்திர மண்டலத்தில் வீடு கட்டிக் கொண்டு இருக்கப் போகிறான். உணவு முறையிலும் மாறுதல் ஏற்படப் போகிறது.

நம்முடைய நாட்டு மக்களைப் பொறுத்த வரையில், பகுத்தறிவுவாதிகளாக இருப்பதற்கு மான உணர்ச்சி வந்தாக வேண்டும். எவ்வளவு கேவலம்? இந்த நாட்டுக் குடிமக்களை நூற்றுக்கு மூன்று பேராக உள்ள ஒரு கூட்டம் தங்களுக்குத் தாசி மக்கள் என்று இன்றைக்கும் சொல்லி வருகிறது என்றால் இதைவிட ஒரு கேவலம் வேண்டுமா?

எனக்கு ஒருவனுக்கு மட்டும்தான் இந்த வேதனையா? 1925ஆம் வருடத்திலிருந்தே இதற்காக நான்தானே பாடுபட்டு வருகிறேன். எந்த அரசியல் காரன் பாடுபட முன்வந்தான்? அரசியல் காரனுக்கு எல்லாம் என்னோட சேர்ந்து இருப்பதற்கே பயம். காரணம், இவனோடு சேர்ந்தால் ஓட்டுக் கிடைக்காதே என்ற பயம்தான்!

நான் இவ்வளவு பாடுபட்டும் இன்னும் முடிந்த பலனை அனுபவிக்க முடியவில்லையே. நம்முடைய இயக்கத்தால் பார்ப்பானின் ஆதிக்கத்தை சகல துறை களிலும் முறியடித்து விட்டோம். கல்வி, உத்தியோகத் துறைகளில் எல்லாம் நாம் தலையெடுத்து விட்டோம். இவ்வளவும் அமைதியான புரட்சியாக செய்து முடித்து இருக்கிறோம்.

ஒரு பார்ப்பானைக் கொல்லவில்லை, ஒரு பார்ப் பனத்தியைக் கெடுக்கவில்லை. எந்தவித பலாத்காரத் தையும் கையாளாமல் இந்த மாறுதல்களைச் செய்து இருக்கிறோம்.

ஒரு பார்ப்பான் கூட மந்திரியாக இல்லாத ஒரு மந்திரி சபையை தமிழ் நாட்டில் நிலை பெறச் செய்து விட்டோமே! இது ஒன்று போதாதா நம்முடைய வெற் றிக்கு? அதுவும் எப்படிப்பட்ட ஆட்சி! இராமனை செருப்பால் அடித்து வெற்றி பெற்று வந்த ஆட்சி! இது என்ன சாதாரண காரியமா?

வேறு மதக்காரர் ஆளும் நாட்டில் அந்தக் கடவுள்களை இப்படிச் செய்து ஓட்டு வாங்க முடியுமா? இங்கு இராமனை செருப்பால் அடித்து ஓட்டு வாங்கி விட்டோமே! இது என்ன சின்ன காரி யமா? கடவுளாவது - வெங்காயமாவது என்று கருதும் அளவுக்கு மக்களுக்கு உணர்ச்சி வந்து விட்டதே!

மனிதன் ஒவ்வொரு துறையிலும் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் வருகிறான். இப்படி எல்லாத் துறைகளிலும் மாற்றமும், முன்னேற்றமும் ஏற்பட்டு விட்ட பிறகு, நம்மை தேவடியாள் மக்கள் என்னும் சூத்திர இழிவு ஏன் ஒழிய வில்லை? இதில் மட்டும் மாற்றம் ஏற்படவில்லையே, ஏன்?

மானம் இல்லாததாலா? உணர்ச்சி இல்லாததாலா? அறிவு இல்லாததாலா? இல்லை - இல்லை. இவை எல்லாம் மனிதனுக்குத் தாராளமாக இருக்கிறது. இருந்தும் ஏன் பயன்படுத்தவில்லை?

மனிதன் பகுத்தறிவைக் கொண்டு எல்லாவற்றையும் சிந்திக்கலாம். ஆனால், கடவுள், மதம் விஷயங்களில் மட்டும் மனிதன் பகுத்தறிவைப் பிரயோகப்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் அவனைக் கொல்லலாம் என்று இருக்கிறது. இதை விட என்ன வேண்டும்?

இராமாயணத்திலே கூறப்பட்டு இருக்கிறது, பகுத் தறிவைப் பயன்படுத்தி கடவுள், மத விவகாரங்களில் எவன் தர்க்கம் செய்கிறானோ, அவனைக் கொன்றுவிட வேண்டும் என்று இராமன் கூறுவதாக ஒரு காட்சி வருகிறது. அந்த நிலைமைதான் இன்றைக்கும்.

காந்தியாரைத் தீர்த்துக் கட்டியதும் இதே கருத்துப் படிதான். சாஸ்திரத்தில் தீண்டாமை இருக்கிறது. அதில் கை வைக்க வேண்டும் என்று காந்தியார் முயற்சித்த போது சாஸ்திரப்படி அவரைத் தீர்த்துக் கட்டி விட்டான்.

இன்றைய அரசியல் சட்டம் கூட அப்படித்தான். அரசியல் சட்டத்தில் எதைத் திருத்தினாலும் 'அடிப்படை சட்டங்கள்' என்ற பகுதியை மட்டும் திருத்தக் கூடாது என்று எழுதி வைத்திருக்கிறான். அரசியல் சட்டத்தில் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அந்தத் 'தீண்டாமை' என்ற வார்த்தை இன்வர்ட்டடு கமாவுக்குள் போடப்பட்டுள்ளது. அப்படிப் போடப்பட்டு இருப்பதற்குக் காரணம், அதற்குத் தனி அர்த்தம் இருக்கிறது என்பதுதான்.

வருகிற டிசம்பர் 8, 9 தேதிகளில் சென்னையில் ஒரு பெரிய மாநாடு கூட்டப் போகிறேன். சட்டப்படி இருக்கிற நம்முடைய இழி நிலையை மாற்ற தீர்மானம் கொடுக்கப் போகிறேன். மாற்றினால் போச்சு, இல்லாவிட்டால் போராடத்தான் வேண்டும். போராடினால் கடுமையாகத் தண்டிப்பான். ஏழாண்டு வரை கொடுப்பான். ஏற்கத் தான் வேண்டும். நீங்கள் எல்லாம் ஜெயிலுக்கு வரத் தான் வேண்டும். எதெல்லாமோ செய்து நம்மை ஒழித் துக்கட்டப் பார்ப்பார்கள்.  அதற்கெல்லாம் நாம் தயாராக இருக்க வேண்டும்.

இந்து இல்லை என்று எவன் ஒருவன் சொல் கிறானோ, அவனை விடுதலை செய்ய வேண்டும். அவனை அந்த இழிவுக்குள் புகுத்தக்கூடாது என்று கூறப்போகிறோம். அதற்கு இந்த ஆட்சி என்ன செய்யப் போகிறது என்று பார்ப்போம்.

இந்த ஆட்சியை ஒழித்து விட்டால் மறுநாளே தீர்ந்தது. நம்முடைய இழிவை ஒழிக்க மறுநாளே ஏற்பாடு செய்து விடலாம். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.

அதற்கான ஆயத்தமான மாநாடு தான் நடக்க இருக்கும் சென்னை மாநாடு. மாநாட்டிற்கு ஆண்களும் பெண்களுமாய் இதுவரை மாநாடுகளில் கூடாத அளவுக்கு வந்து கூடியாக வேண்டும். எந்தெந்த வகையில் உங்களது ஒத்துழைப்பு இருக்க முடியுமோ அவ்வளவும் இருக்க வேண்டும். பண வசதி உள்ள வர்கள் தாராளமாக உதவலாம். ஜெயிலுக்கு வர வாய்ப் புள்ளவர்கள் ஏராளமாக வரவேண்டும்.

முதன்முதலில் வடநாட்டுக்காரன் கடையில் மறியல் செய்யலாம் என்று இருக்கிறேன். அவனுக்கு இங்கு என்ன வேலை என்று கேட்போம்.

பம்பாயில் சிவசேனைக்காரன் நம்மவர்களை அங்கு விரட்டவில்லையா?

அவன் அங்கு செய்யும்போது நாம் ஏன் இங்கு செய்யக்கூடாது?

துணியவேண்டும். பதவிக்குப் போகிற நாலு பேர் களை அதற்கென்று விட்டு விடுவோம். மற்றவர்கள் நம் முடைய இழிவை ஒழித்துக்கட்ட முயற்சிக்க வேண்டும்.

நமக்கு பதவி வந்தால் போதாது - நம்மில் பலர் இலட்சாதிபதியானால் போதாது. நமக்கு இன்றைக்கு தேவை எல்லாம் நமது மானம் மீட்கப்பட்டாக வேண் டும், நமது இழிவை ஒழித்தாக வேண்டும்.

இன்னும் எத்தனை நாளைக்கு நான் இருக்கப் போகிறேன். எத்தனை நாளைக்கு கத்தப்போகிறேன் நாளைக்கே பொசுக்கென்று போய்விடுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கெதி என்ன? என் இடத்தில் உட்கார எவன் வரப்போகிறான். வர விரும்பு கிறவன் இருந்தாலும் எவனை இந்த அளவுக்கு மதிக்கப் போகிறீர்கள்?

மக்களிடம் மதிப்பு பெறுவது என்பது சின்ன காரியமா? அந்த மதிப்பைப் பெற எவ்வளவு பட்டாக வேண்டும்.

ஆகவே தோழர்களே! நாளைக்கு எனக்கு ஏதாவது என்றால் நம் கெதி அவமானகரமானதாகப் போய்விடும்; தலை எடுக்க முடியாது.

எனவே, நீங்கள் எல்லாம் நமது இழிவை ஒழிக்கும் காரியத்தில் துணிந்தாக வேண்டும்.

உங்கள் பெயரை எல்லாம் பட்டியல் போட்டுக் கொடுங்கள். யார் யாரை எப்படி எப்படி எல்லாம் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அப்படி எல்லாம் பயன்படுத்திக் கொள்கிறேன்.

எனக்காக, என் தயவுக்காக நீங்கள் போராட முன்வர வேண்டாம். உங்களுக்காக - உங்கள் பிள்ளைக் குட்டிகளுக்காக உங்கள் சந்ததிக்காக முன் வாருங்கள்.

(10.11.1973 அன்று ஜெயங்கொண்ட சோழபுரத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - 'விடுதலை' 12.11.1973)

Thursday, November 2, 2017

சென்னை புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது: 10 மாவட்டத்தில் கனமழை நீடிப்பு



சென்னை, நவ.1 சென்னையில் தொடர்ந்து 2 நாட்கள் கனமழை பெய்த நிலையில், 10 கடலோர மாவட்டங்களில் மேலும் 3 நாட்கள் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. புறநகர் பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். தமிழகம் முழுவதும் மழைக்கு 10 பேர் பலியாகியுள்ளனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக இடைவிடாது பெய்த பலத்த மழையால் சாலைகள் குண்டும் குழியுமாக மாறிய துடன், அப்பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறத் துவங்கி உள்ளனர். இந்நிலையில் வங்கக் கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இலங்கை அருகே நீடிப்பதால் இந்த மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித் துள்ளது.

சென்னை மற்றும் சுற்றுப்புறத்தில் 2வது நாளாக நேற்று முன்தினம் இரவும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் விடிய, விடிய கனமழை வெளுத்து வாங்கியது. கால்வாய் தூர்வாருவதில் சென்ன மாநகராட்சி அலட்சியம் காட்டிய தால், மழைக்கு நகர் மற்றும் புறநகர் பகுதிகள் சின்னாப்பின்னமாகியுள்ளன. மேலும் போக்குவரத்து சாலைகள், உட்புற சாலைகள், குடியிருப்பு பகுதிகள் என எங்கு பார்த்தாலும் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை கீழ்ப் பாக்கத்தில் மின்மாற்றி வெடித்து தீவிபத்து ஏற்பட்டதில் 4 வாகனங்கள் தீயில் கருகின. மழைநீர் கால்வாயில் தண்ணீர் செல்ல வழி யில்லாமல் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளதால் அங்கு கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

முடிச்சூரில் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் புகுந்ததையடுத்து பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். லட்சுமி நகர், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் வீடுகளை காலி செய்து வெளியேறினர். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. ரயில்நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதால் ரயில் போக்குவரத்தும் நேற்று பாதிக்கப்பட்டது. வடசென்னை முழுவதும் தண்ணீரில் தத்தளித்தது. பேசின் பாலம் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

தொடர் மழையால் சென்னையில் சுரங்கபாதை, தரைப்பாலம், ரயில்வே பாலங்களை வெள்ளம் சூழ்ந்தது. குரோம் பேட்டை, பள்ளிக்கரணை பாலத்தை நேற்று காலை வெள்ளம் சூழ்ந்ததால் அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. குடியிருப்பு பகுதிக்குள் கழிவுநீருடன் கலந்த மழைநீர் புகுந்ததால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்கு முன்பாகவே அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள் ளதாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக ஆய்வு கூட்டமும் நடத்தப்பட்டன. ஆனால், கடந்த 2 நாட்களாக அரசின் எந்த உதவியும் கிடைக்காமல் தவித்து வருவதாக மழை யால் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக் கின்றனர்.

சென்னை வியாசர்பாடி ஜீவாநகர் சுரங்கபாதையில் தேங்கிய மழைநீரில் மாநகர பேருந்து ஒன்று மூழ்கியது. இத னால் புளியந்தோப்பு-வியாசர்பாடியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஒருநாள் மழைக்கே வெள்ளம் சூழ்ந்த நிலையில், மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்ற தகவலால் மக்கள் பீதியடைந்தனர்.

மழைக்கு 10 பேர் பலி
சென்னை பல்லாவரம் அருகில் உள்ள அனகாபுத்தூரில் நேற்று முன்தினம் இரவு மின்னல் தாக்கியதில் லோகேஷ்(18), கிஷோர்குமார்(19) ஆகிய 2 வாலிபர்கள் உயிரிழந்தனர். நாகை மாவட்டம் சீர்காழி பெரிய வகுப்புகட்டளை தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி பாலசுந்தரம் (47) மழையினால் வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி பலியானார். தஞ்சை அடுத்த ஒரத்தநாட்டில் விட்டு சுவர் இடிந்து தினேஷ் என்பவரும், நாகை மாவட்டம் சீர்காழியில் மின்னல் தாக்கி ராமச்சந்திரன் (54) என்பவரும் உயிரி ழந்தனர்.

கடலூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி 2 பேரும், சுவர் இடிந்து விழுந்து ஒருவரும் பலியாகினர். ஆரணி அருகே சுவர் இடிந்து விழுந்ததில் நித்யா(9) என்ற மாணவி உயிரிழந்தார். விழுப்புரம் மாவட் டம் கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனூர் ஆற்றில் ஆண் சடலம் கண்டெடுக்கப் பட்டது. மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர்.

வானிலை ஆய்வு மய்யம்



இந்த நிலையில், சென்னை உள்பட தமிழக கடலோர மாவட்டங்களில் வரும் 4ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மய்யம் முன்அறிவிப்பு செய்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மய்யம் இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:

இலங்கை அருகே நிலைகொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து மன்னார் வளைகுடா ஒட்டிய பகுதியில் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்கள் மற்றும் தென்கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக் குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். அடுத்த 3 நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மயிலாடுதுறையில் 2000 ஏக்கர் பயிர் நீரில் மூழ்கின

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக பெய்து வரும் கனமழையில், திருவாரூர் - நாகை நெடுஞ்சாலையில் அடி யக்கமங்கலம் அருகே மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் போக்குவரத்து பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை, கும்பகோணம், சீர்காழி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்துள்ளது. பாசன வாய்க்கால்களை முறையாக தூர்வாராததால் குத்தாலம் வட்டத்தில் 2,000 ஏக்கர் நிலத்தில் நடவு செய்யப்பட்டுள்ள பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் சுற்றுவட்டாரத்தில் பெய்து வரும் மழை காரணமாக 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மேலும் உப்பளங்களை கடல் நீர் சூழ்ந்ததால் உப்பு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

அம்பேத்கர் - ‘புத்தப் பிரியர்’ மட்டுமல்ல; புத்தகப் பிரியரும்கூட! (7)

டாக்டர் அம்பேத்கரின் மிக நெருங்கிய நட்புற வுடன் இருந்த சீடரான நாம்தேவ் நிம்காடே ஓர் அரிய தகவலை - டாக்டரின் தனி நூலகம் எப்படிப் பட்ட பெருமைகளைக் கொண்ட அரிய சேகரிப்பு - மேற்கோள் பார்த்து அறியும் ஆய்வகம் போன்றது என்பதை விளக்கும் ஒரு சம்பவத்தைச் சுட்டிக் காட்டுகிறார்!

ஒரு பிரிட்டிஷ் கமிஷன் - பிரிட்டிஷ் அரசால் நியமனம் பெற்றது; ஆய்வு செய்து அறிக்கையைத் தரும் பணி செய்யும் கமிஷன் - குறிப்பிட்ட ஓர் அறிக்கை (ரிப்போர்ட்) தேவை என்று இந்திய நாட் டின் நூலகங்கள், அரசு ஆவணக் காப்பகங்கள் எங்கெங்கும் தேடினர்; கிடைக்கவே இல்லை. அவர்களுக்கு அக்குறிப்பிட்ட தாங்கள் தேடும் அறிக்கை ஆவணம் டாக்டர் அவர்களது நூலகத்தில் இருக்கக் கூடும்; காரணம், இதுபோல், பல அரியவை களை சேகரித்துப் படித்து,  பின்பு பாதுகாப்புடன் இருப்பது அங்கேதான்; எதற்கும் அங்கு போய்க் கேட்டுப் பார்ப்போம் என்று டாக்டரை நாடி வந்து கேட்டனர்.

அவர்களுக்கு ஆச்சரியம்...!

அது அங்கே கிடைத்தது. டாக்டரிடம் கேட்டார் கள். அந்த பிரிட்டிஷ் கமிஷனின் பொறுப்பாளர்கள் - ஆய்வு செய்வதற்காக.

டாக்டர் அம்பேத்கர் உடனே இசைவு தந்தார். (பொதுவாக தனது புத்தகங்களை யாருக்கும் இரவ லாகக்கூட தருகின்ற பழக்கம் டாக்டர் அம்பேத் கருக்குக் கிடையாது). ஏனெனில், அவை திரும்பி வருமோ என்ற சந்தேகம் ஒருபுறம் என்றாலும், எதை, எப்போது எடுத்து அவர் ஆராய்வார் என் பதை அறுதியிட்டுக் கூற முடியாதே! தேடும்போது அது அங்கே இல்லை; கிடைக்கவில்லை என்றால், பணி - எழுத்துப் பணி அல்லது உரைக்கான ஆயத் தப் பணி அல்லது அவ்வப்போது கூடி விவாதிக்கும் நண்பர்களிடம் குறிப்பிட்ட அத்தகவல்களை மேற் கோளாகக் காட்டும் நூலை உடனே சுட்டிக்காட்டும் வாய்ப்பும் இருக்காதல்லவா? அதனால்தான் புத்தகங் களை இரவல் கொடுப்பது கூடாது என்ற அவரின் கொள்கைத் திட்ட நடைமுறை நமக்கும் ஏற்பு டையதே!

அவர் ஒரு நிபந்தனை விதித்தார். ‘‘இந்த அறிக் கையை எவ்வளவு விரைவில் உங்களால் திருப்பித் தர முடியுமோ அவ்வளவு விரைவில் கொண்டுவந்து கொடுத்துவிட வேண்டும்‘’ என்பதே அந்நிபந்தனை.

இப்போதுள்ள நகலக வசதிகள் அக்காலத்தில் கிடையாதே!

புத்தகங்களைப்பற்றிய - அவர் படித்த கொலம் பியா பல்கலைக் கழக நூலகத்தின் புத்தகங்கள்பற்றி டாக்டருக்கு மனதில்  அத்துப்படி டாக்டருக்கு. அவரது நினைவும், ஆற்றலும் அபாரமானது!

தான் எழுதிக் கொண்டிருந்த ஒரு நூலுக்குரிய மேற்கோள் (Reference)
வேண்டியிருந்ததால், ஒரு குறிப்பிட்ட புத்தகம் அவருக்குத் தேவைப்பட்டது. இந்தியா முழுவதிலும் உள்ள நூலகங்களில் கேட்டுப் பார்த்தார். கிடைக்கவில்லை. பிறகு, தான் படித்த அமெரிக்கப் பல்கலைக் கழகமான கொலம்பியா பல்லைக் கழகத்தில் அப்போதிருந்த ஒரு மாணவரை - நூலகத்தை அதிகமாகப் பயன்படுத்தும் மாண வராக அவர் இருந்திருக்கக்கூடும் என்பதால், குறிப் பிட்ட அந்த புத்தகத்தை நூலகத்தில் தேடிக் கண்டு பிடித்து எடுத்து அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.

அம்மாணவர் அங்கு தேடியபோது கிடைக்க வில்லை; இதை டாக்டரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு மறுமொழியாக டாக்டர், ‘‘எனக்கு Card Catalogue  நூலக புத்தக எண் வரிசை அட்டை நினைவில் இல்லை என்று கூறி, நூலகத்தின் அலமாரிகளில் ஓர் அடையாளம் சொல்லி அந்த மூலைப் பகுதிக்குச் சென்று தேடிப் பாருங்கள் என்று சொன்னதும், அம்மாணவர் அந்தப் புத்தகத்தை குறிப்பிட்ட அவ்விடத்தில் கண்டுபிடித்தார்!

என்னே, யானை நினைவு இந்த சிங்கத் தலைவருக்கு!

இரவெல்லாம் கண் விழித்துப் படிப்பது டாக்டரின் வழக்கம்; அவர் எப்போது எத்தனை மணிக்கு உறங்கப் போவார் என்பது அவருடைய உதவியாளர் ராட்டுவுக்குக்கூட சரியாகத் தெரியாது.

அப்படி படிப்பு! வாசிப்பு!! வாசிப்பு!!! சில அமெ ரிக்க பத்திரிகை நிருபர்கள் டாக்டரைத் தொடர்பு கொண்டு தங்களைச் சந்திக்க - பேட்டி காண - வசதியான நேரத்தை எங்களுக்குச் சொல்லுங்கள் என்று கேட்டனராம். அப்போது இரவு நடுநிசி! நீங்கள் எப்போது வேண்டுமானாலும், இரவிலும் வந்து என்னைப் பார்க்க வரலாம்; உங்களுக்கு அனுமதி உண்டு என்றவுடன், நடுநிசி நேரத்தில் சென்று - அதிசயத்துடன் அவரைச் சந்தித்துள்ளனர்.

அவர்கள் கேட்ட முதல் கேள்வியும், அதற்கு டாக்டர் அம்பேத்கர் அளித்த சமூகப் பொறுப்பு மிகுந்த பதிலும் வரலாற்றுப் புகழ் வாய்ந்த ஒன்றாகும். (இதை நாம்தேவ் நிம்காடே  தனது நூலில் பதிவு செய்துள்ளார்).

‘‘காந்தியையும், நேருவையும் பார்க்க வேண்டு மென்று கேட்டோம். அதற்கு இது நடுநிசி, அவர்கள் உறக்கத்தில் உள்ளார்கள். விடிந்த பிறகே அனுமதி பெற்று வாருங்கள் என்றே பதில் கிடைத்தது. ஆனால், இங்கே நாங்கள் வந்து பார்த்தால், நீங்கள் இந்த நடு இரவிலும் படித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருக்கிறீர்களே!’’ என்று அந்த நிருபர்கள் கேட்டதற்கு,

பாபா சாகேப், ‘‘காந்தியும், நேருவும் வாய்ப்பானவர்கள் (Luckly Leaders)
அவர்களைப் பின்பற்று வோர் எப்போதும் விழித்திருக்கிறார்கள். எனவே, இவர்கள் தூங்குகிறார்கள்.

எனது நிலை அப்படியில்லையே! என்னைப் பின்பற்றுபவர்கள் எப்போதும் தூங்கிக் கொண்டே உள்ளதால், அவர்களுக்காக இந்த நடுநிசியிலும் விழித்திருப்பதைத் தவிர எனக்கு வேறு கடமை இல்லையே!’’ என்று கூறினார்.

அவர்கள், டாக்டரின் சமூக உணர்வும், ஈடுபாடும், உறுதிப்பாடும் கண்டு வியப்புக் கடலில் வீழ்ந்தனர்!

அதுமட்டுமா?

டாக்டருக்கு ஏற்பட்ட அதிர்ச்சிக்குரிய விபத்து பற்றி கவலையுடன் டாக்டர் அம்பேத்கர், நாம்தேவ் விடம் கூறியதில் பொங்கிய கொள்கை உறுதிப்பாடு - அதிர வைக்கக் கூடியது.

அடுத்துப் பார்ப்போமே!

இன்றுமுதல் சர்க்கரை கசக்கும்!

தமிழக நியாய விலைக் கடைகளில், இதுவரை ஒரு கிலோ சர்க்கரை  13.50 ரூபாய்க்கு அளிக்கப்பட்ட நிலையில், இன்று (1.11.2017) முதல் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களைத் தவிர்த்து, பிறருக்கு ரூ.25 ஆக விலை உயர்த்தி விற்கப்படும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அதிகபட்ச மாக ஒரு மாதத்திற்கு அய்ந்து கிலோ சர்க்கரை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அடுத்தமாதம் முதல் வறுமைக் கோட் டிற்குக்கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே சலுகை விலையில் சர்க்கரை வழங்கப்படும் என்று உணவுத்துறை செயலாளர் குமார் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.

நியாயவிலைக் கடையில் சர்க்கரையின் விலை அதிகரிக் கப்பட்டாலும், வெளிச்சந்தையில் விற்கப்படும் சர்க்கரையின் விலை ஒரு கிலோவிற்கு ரூ.45 ஆக இருப்பதால், நியாய விலைக் கடையில் ஒரு கிலோவிற்கு ரூ.20 அய் அரசு ஏற்றுக்கொண்டு, மானியத்துடன் விற்பனை செய்யப்படுகிறது என்று அரசு தெரிவித்துள்ளது. இதன்காரணமாக ஒரு ஆண்டிற்கு ரூ.836.29 கோடி ரூபாயை சர்க்கரைக்கான மானியமாக செலவிட வேண்டியுள்ளது என்றும் தெரிவித் துள்ளது.

இதுநாள் வரை மத்திய அரசு சர்க்கரைக்கு அளித்து வந்த மானியம் கடந்த ஜூன் மாதத்தில் நிறுத்தப்பட்டதால், தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் சலுகை விலையில் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் சர்க்கரை வழங்க ரூ.85.92 கோடி முதல் ரூ.109 கோடி வரை செலவு செய்யவேண்டிய நிலைக்கு ஆளானது என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சர்க்கரை அளிப்பதிலும் மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் 10,820 மெட்ரிக் டன் அளித்து வந்ததை வெறும் 1,863 மெட்ரிக் டன்னாகக் குறைத்ததால் தமிழக அரசு இந்த விலை உயர்வை அமல்படுத்தியுள்ளது என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

நியாய விலைக் கடைகளில் சர்க்கரையின் விலையேற்றத் தைக் கண்டித்து, திமுக சார்பில் நவம்பர் 6 ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து நியாய விலைக் கடைகளின் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது .

‘‘தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தால் பொது விநியோகத் திட்டத்துக்கு ஏற்படும் மோசமான பாதிப்புகள் பற்றி கவலைப்படாமல், தமிழ்நாடு அரசு கையெழுத்துப் போட்ட காரணத்தால்தான்,  தமிழ்நாடு அரசு இன்றைக்கு ரேசன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரை விலை விண் ணளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ சர்க்கரையை 25 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய அவலநிலைக்குத் தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்’’ என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

‘‘சர்க்கரை விலை உயர்வு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மானியத்தை மத்திய அரசு நிறுத்தியபோது எதிர்க்காமல், தற்போது வறுமைக்கோட்டிற் குக்கீழ் உள்ளவர்களுக்கு ஒரு விலையும், மற்றவர்களுக்கு வேறு ஒரு விலை என்றும் நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்வது மக்கள் விரோத நடவடிக்கை’’ என்ற கருத்துள்ளது. விலைவாசி உயரும் அளவுக்கு மக்கள் வரு மானம் உயர்ந்துள்ளதா என்பது முக்கியமான வினாவாகும்!

‘‘தமிழகத்தில் மொத்தமுள்ள 2.03 கோடி குடும்ப அட்டைகளில், வெறும் 9.15%, அதாவது 18,64,600 அட்டைகள் மட்டும்தான் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின்கீழ் பெறப்பட்டவை. இலவச அரிசி பெறும் ஏழைக் குடும்பங்களின் எண்ணிக்கை 1.91 கோடி, அதாவது 94.05% ஆகும். இவ்வளவு பேரை பாதிக்கும் முடிவை அறிவித்து விட்டு, அதனால் ஏழைகள் பாதிக்கப்பட மாட்டார்கள்  என்று  மாநில பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராசன் மாநில அரசின் குரலாக ஒலித்திருக்கிறார்.

தற்போதைய சூழலில் விலைவாசி எவரெஸ்ட் உயரத்தை தொட்டுக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் உணவுச் செலவை ஓரளவிற்கு சமாளிக்க உதவுவது இந்த பொது விநியோக திட்டம். இதிலும் மத்திய அரசு, மாநில அரசு இரண்டும் சேர்ந்து மக்களின் வாழ்வாதாரத்தின் மூலாதார மான உணவுப்பொருளில்  கைவத்து மரண அடி கொடுப்பது நியாயந்தானா? ஏற்கெனவே துவரம்பருப்பை நிறுத்திவிட்டு அதற்குப் பதிலாக பஞ்சத்துக்கு பயன்படும் மசூர் பருப்பை வழங்கிவருகிறது. நாள்தோறும் பெருகிவரும்பெருவணிக முதலாளிகளின் பொருள்களை வாங்க வற்புறுத்தும் ஒரு வகையான ஏற்பாடாகவும் இது கருதப்படுகிறது. நியாய விலைக் கடைகளை மக்கள் நாடாமல் செய்துவரும் சூழ்ச்சியே இந்த விலையேற்றம்!

மத்திய அரசின் நடவடிக்கை சர்க்கரை விலை உயர்வுக்கு அதிக காரணம் என்பதை முக்கியமாக உணரவேண்டும்.

எப்படியோ இனிப்பான சர்க்கரை கூட ஏழைகளுக்கு இன்றுமுதல் கசக்கவே செய்யும்!

‘‘உடும்பு வேண்டாம் - கை வந்தால் போதும்'' என்ற நெருக்கடியில் மோடி?

நெருப்பில் பெட்ரோலை ஊற்றிய நிலை

‘‘உடும்பு வேண்டாம் - கை வந்தால் போதும்'' என்ற நெருக்கடியில் மோடி?

சிவகாசியில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்



சிவகாசி, நவ.1 ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் உடும்பு வேண்டாம்; கை வந்தால் போதும் என்ற நிலையில் தவிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சிவகாசிக்கு  (30.10.2017) அன்று வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.

தமிழர் தலைவர்: தந்தை பெரியார் அவர்களுடைய நெஞ்சில் தைத்த முள் என்று கலைஞர் அவர்கள் தந்தை பெரியாருக்கு அரசு மரியாதை கொடுத்தபோது,  சொன்னார்கள்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் அதன்மூலம் ஜாதி, தீண்டாமை ஒழிவதற்கு அதுதான் சரியான வாய்ப்புக் கருதி தந்தை பெரியார் அவர்கள் இறுதிவரை போராட்டத்தில் இறங்கி னார்கள்.

தி.மு.க. ஆட்சியில் சட்டம்

திமுக ஆட்சியிலே சட்டமும் கொண்டு வந்து கலைஞர் அவர் கள் நிறைவேற்றி, அந்த சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றமும் தெளிவாக  சொல்லிவிட்ட சூழ்நிலையிலே,

நமக்குப் பின்னால் வந்த கேரள அரசு அதை நடைமுறைப்படுத்தி, ஆதிதிராவிடர்கள் அர்ச்சகர் ஆகக்கூடிய அளவுக்கு தேவசம் போர்டு அங்கே ஏற்பாடு செய்துவிட்ட சூழ்நிலையிலே,

இன்றைக்கு இருக்கின்ற அதிமுக அரசு, ஏற்கெனவே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் சட்டமன்றத்திலேயே நீதிமன்ற வழக்கு முடிந்த உடனேயே அல்லது தெளிவுபடுத்தப்பட்ட உடனேயே  நாங்கள் நிச்சயமாக இதை நடைமுறைப்படுத்துவோம், அர்ச்சகர்கள் சட்டத்தை செயல்படுத்துவோம் என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்கள். உறுதிமொழியும் தந்தனர்.

எனவே, சட்டமன்றத்திலே ஒரு முதலமைச்சரால் அல்ல, இரண்டு முதலமைச்சர்களால் உறுதிமொழி கொடுத்து, அதே கட்சி ஆட்சி தொடருகின்ற இந்தக் காலகட்டத்திலே, எடப்பாடி பழனிச் சாமி தலைமையிலே இருக்கக்கூடிய இந்த ஆட்சி, இனிமேலும் தாமதிக்காமல், ஏற்கெனவே, ஆகமங்களில் பயிற்சி பெற்ற 206பேர் தயாராக இருக்கிறார்கள், அனைத்து ஜாதியிலிருந்தும் 69 சதவிகித இடஒதுக்கீட்டின்படி தேர்வு செய்யப்பட்டவர்கள்.

ஆகவே, உடனடியாக அவர்களை அர்ச்சகர்களாக கோயில்களிலே நியமனம் செய்ய வேண்டும்.

பயிற்சி இல்லாதவர்கள் இப்பொழுது இருக்கிறார்கள்

அர்ச்சகர் பயிற்சியே இல்லாதவர்கள் இப்பொழுது பெரிய பெரிய கோயில்களிலே அர்ச்சனை செய்துகொண்டிருப்பது சட்ட விரோதம், மத விரோதம், நியாய விரோதம் என்று நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான ஆய்வுக்குழுவே கொடுத்திருக்கிறது. எனவேதான், இனிமேலும் தாமதிக்காமல் செய்ய வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம் திராவிடர் கழகத்தின் சார்பிலே.

1957 இல் போராட்டம்

வருகிற நவம்பர் 26 அன்று ஜாதி ஒழிப்பு நாள். ஜாதியைப் பாதுகாக்கின்ற அரசமைப்புச் சட்டத் தாளைக் கொளுத்துவேன் என்று தந்தைபெரியார் வாழ்ந்த காலத்திலே 1957இலே அவர்கள் தம்முடைய தோழர்களை வைத்து, அதன் நகலைக் கொளுத்தி, ஆறு மாதம் முதற்கொண்டு மூன்று ஆண்டுகள் வரை சிறைச் சாலைக்குப்போய், 18 பேர் சிறைச்சாலையிலும், வெளியிலும் மரணத்தைத் தழுவினார்கள். அப்போராட்டத்துக்கு இப்பொழுது 60 ஆண்டுகள் நிறைகிறது.

இந்த 60 ஆண்டுகளும் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம். இதைச் செய்வதற்கு இதுதான் சரியான தருணம். பக்கத்திலே கேரளாவிலே அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது.

உச்சநீதிமன்றத்திலே இருந்த வழக்கு, இந்த சட்டம் திமுக கொண்டு வந்த சட்டம் செல்லும் என்று கூறி, மதுரை அர்ச்சகர்கள் மற்றவர்கள் போட்ட வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது  நீதி மன்றம்.

ஆகவே, இப்பொழுது எந்தத் தடையுமில்லை. முன்னாலே ஆரம்பித்தவர்கள் நாம்; இன்னும் செய்யவில்லை. பின்னாலே வந்த கேரளா இதைச் செய்து பரிசைத் தட்டிக்கொண்டு விட்டது; முயல், ஆமை கதை மாதிரி இது இருக்கிறது.

ஆகவே, மேலும் தாமதிக்காமல், உடனடியாக இதைச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, அனைத்து கட்சி தோழர்கள், ஒத்த கருத்துள்ளவர்கள் அத்துணைப் பேரையும், பாஜக, அதிமுக தவிர மற்ற அத்துணைக் கட்சிக்காரர்களும் கலந்துகொள்ளக்கூடிய ஒரு மாபெரும் மாநாடு சென்னையில் நவம்பர் 26ஆம் தேதி நடைபெற இருக்கிறது. திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருக்கிறது. அதில் அத்துணைக் கட்சித் தலைவர்களும் மற்றவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அதிலே தெளிவாக அரசாங்கத்திற்கு இதைச் செய்ய வேண்டும் என்றும், இல்லையானால், சிறைநிரப்பும் போராட்டம் நடைபெறும் என்றும் அறி விக்கப் போகிறோம்.

கேரளா முந்திக்கொண்டது

செய்தியாளர்: கேரளா முந்திக்கொண்டது. தமிழகம் பிந்தியிருக்கிறது. இப்படி ஒரு சுணக்கம் ஏற்பட்டதற்கு காரணம் என்ன என்று கருதுகிறீர்கள்?

தமிழர் தலைவர்: காரணத்தை நீங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உங்களை சந்தித்தால் கேட்கலாம்.

செய்தியாளர்: அரசியல்தான் காரணமா...?

தமிழர் தலைவர்: அரசியல் காரணம் என்னவென்று தெளிவாக தெரியும். ஏனென்றால், ஒருவேளை மோடி இன்னும் இதற்கு கிளியரன்ஸ் கொடுக்கவில்லை என்று நினைக்கிறாரோ என்று தெரியவில்லை. மோடியிடம் அடுத்த தடவை போகும்போது, அவரோ அல்லது துணை முதல்வர்தான் அடிக்கடி சந்திக்கின்ற வாய்ப் பைப் பெற்றிருக்கிறார் இவரைவிட. அவர்மூலமாக கேட்டு சீக்கிரம் அதற்கு என்ஓசி வாங்கி, கிளியரன்ஸ், பச்சைக்கொடி காட்டச் செய்யவேண்டும். எல்லாவற்றி லும், தேர்தல் சின்னம் உள்பட, மோடி பார்த்துக்கொள்வார் என்கிறார்கள். அப்ப, இதற்கும் கூட மோடிகிட்டே கேட்டிருக்கிறோம், பதில் வரவில்லை என்று ஒருவேளை சொல்கிறார்களோ என்று தெரியாது. இல்லையில்லை வீரமணி சொல்வது தப்பு, அதெல்லாம் இல்லை நாங்கள் சுதந்திரமாக நடத்துகிறோம் என்று, அப்படி செய்தாலும் நாங்கள் வரவேற்போம், பாராட்டுவோம்.

பா.ஜ.க. வழிகாட்டுதல்படி தமிழக ஆட்சி

செய்தியாளர்: பாஜக வழிகாட்டுதல்படிதான் தமிழக அரசு உள்ளதா?

தமிழர் தலைவர்: உங்கள் ஊர் அமைச்சர், உங்கள் பகுதி அமைச்சர்தான் சொல்லியிருக்கிறார். நான் சொல்லவில்லை. இது பற்றி அமைச்சரே சொல்லியிருக்கிறார். அதற்கு முன்னாலே சாய்பாபாவைப்பார்த்து நாமிருக்க பயமேன் என்று கேட்டார். இப்போது அவர் (மோடி) இருக்க பயமேன் என்கிறார்கள் அவ்வளவுதான்.

அரசியல் வெற்றிடமா?

செய்தியாளர்: ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு, அரசியலில் வெற்றிடம் இருப்பதாக கூறப்படுகிறதே, அதுபற்றி...?

தமிழர் தலைவர்: வெற்றிடம் இல்லீங்களே, அந்த இடத்திலேதான் உட்கார்ந்திருக்கிறார்களே, அந்த அம்மா மறைந்தும் விட்டார்கள், இப்போது மண்டபம் கூட கட்டுகிறார்கள். வெற்றிடமே இல்லையே அங்கே. முழு இடமும் அடைக்காமல் நல்ல அளவுக்குப் புதைத்த இடத்தில்கூட மண்டபம் கட்டப் போகிறார்கள். அதனாலே வெற்றிடமே கிடையாது.

வெற்றிடம் என்று சொல்லிக்கொண்டு, சில பேர் Ôமிஸ்டு கால்Õ கட்சிக்காரர்கள் உள்ளே நுழையலாம் என்று பார்க்கிறார்கள். சொந்தக்கால் வருகின்ற வரை யிலும் அவர்களால் உள்ளே நுழைய முடியாது. Ôமிஸ்டு காலைÕயும் நம்ப முடியாது.

கமலும், ரஜினியும்

செய்தியாளர்: ரஜினி, கமல் போன்றவர்கள் இப் பொழுது அரசியலில் வருவதற்கு முயற்சி செய்துவரு கிறார்களே...?

தமிழர் தலைவர்: அதுபற்றி ஏற்கெனவே சொல்லியிருக்கிறோம். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசமைப்புச் சட்டத்திலே உரிமை உண்டு. எப்படி என்றால், மூன்றே மூன்று தகுதிகள்தான். ஒன்று 25 வயது ஆகவேண்டும். இன்னொன்று இன்சால்வண்ட் ஆக இல்லாமல் இருக்க வேண்டும். மூன்றாவது பைத்தியம் பிடிக்காமல் இருக்க வேண்டும்.

இந்த மூன்றும் அரசமைப்புச் சட்டத்தில் தெளிவாக இருக்கிறது. இந்த மூன்றும் இருக்கக்கூடியவர்கள் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். இரண்டாவது பள்ளிக்கூடம் ஆரம்பிக்க வேண்டுமானாலும், தொழிற் சாலை ஆரம்பிக்க வேண்டுமானாலும் லைசன்ஸ் வாங்க வேண்டும்.

கட்சி ஆரம்பிப்பது ரொம்ப சுலபம் நம்ம நாட்டிலே.  அதற்கு லைசன்ஸ், பெர்மிஷன் யாரிடமும் வாங்க வேண்டியதில்லை நம்ம நாட்டிலே. குறைந்தபட்சம் ஒருத்தர் இருந்தாலே கட்சி ஆரம்பிக்கலாம். இரண்டு பேர்கூட தேவையில்லை.

கொள்கையைச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. கொள்கையை பின்னாலே பார்த்துக்கொள்ள லாம், கட்சியை முன்னாலே சொல்லலாம் என்றெல்லாம் பலபேர் வருகிறார்கள். அதுமாதிரி சினிமாக்காரர்கள் நேரடியாக வந்து உட்கார்ந்துகொள்வோம் என்று சொல்லும்போதும் எங்கள் கருத்தைச் சொல்லியிருக் கிறோம்.

சினிமாக்காரர்கள் வரக்கூடாதா?

சினிமாக்காரர்கள் வரலாம், என்ன தியாகம் செய்தி ருக்கிறார்கள்? மக்களுக்காக என்ன போராடினார்கள்? என்பதையெல்லாம் செய்து முடித்துவிட்டு அதற்கப்புறம் வரட்டும். மக்களிடம் சொல்லட்டும். என்ன கொள்கை யோடு நாங்கள் வருகிறோம் என்று சொல்லட்டும். வந்தால் சொல்லலாம் என்றோம். சில பேர் முதலில் வந்தார்கள்.   ரொம்ப முன்னாலே போனவர்கள் கொஞ் சம் ரிவர்ஸ் கியர் போட்டு பின்னாலே போகிறார்கள் சில பேர். பின்னாலே என்ன என்று பார்க்கலாம்.

செய்தியாளர்: வெற்றி வாய்ப்பு அவர்களுக்கு எப்படி இருக்கும், நடிகர்கள் வந்தால் ஜெயிக்கலாம் என்று சொல்கிறார்களே?

தமிழர் தலைவர்: முதலில் அவர்களின் சொந்தக்காரர் களைக் கேட்கட்டும். வெற்றி வாய்ப்பு எவ்வளவு என்று அவர்களின் சொந்தக்காரர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கட்டும். அல்லது பாரதிராஜா மாதிரி இருப்ப வர்களைக் கேட்கட்டும். அவர்கள் என்ன சொல்கி றார்கள் என்று கேட்கட்டும். எங்களைவிட அவர்கள் தான் ரொம்ப நெருக்கமானவர்கள்.

தமிழக அரசு நீடிக்குமா?

செய்தியாளர்: எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு தொடர்ந்து நீடிக்குமா?

தமிழர் தலைவர்: டெங்கு தீருமா? என்று கேட்பது மாதிரி இருக்கிறது. பொதுவான தத்துவம் என்ன என்றால், இன்றைக்கு இருப்பார், நாளைக்கு இருப்பார் என்று எண்ணவோ திடமில்லை என்று முதலில் தத்துவ வேதாந்திகள் சொன்னார்கள். இந்த அரசு எவ்வளவு தூரம் என்பதில், அவர்களே சொல்லியிருக்கிறார்களே, மோடி தயவிலே நாங்கள் இருக்கிறோம் என்று; மோடி எவ்வளவு நாளைக்கு இருக்க வேண்டும், இந்த ஆட்சி இருக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவ்வளவு காலத்துக்கு இருக்கும். மெஜாரிட்டியாக இருந்தாலும் சரி, மைனாரிட்டியாக இருந்தாலும் சரி, பாதி பேர் வெளியே போய்விட்டாலும் சரி, அவர் நினைத்தார் என்றால், அவரின்றி ஓர் அணுவும் அசையாது அப்படி என்று சொல்லக்கூடிய அளவிலே வந்துவிட்டார்கள் இவர்கள். ஆகவே, அதைப்பொறுத்துதான் இருக்கிறது. இவர்கள் ஜமக்காளத்து நிழலில் நின்று கொண்டிருக் கிறார்கள். ஜமக்காளத்தை எப்போது இழுக்கிறது என்கிற கை டில்லியிலே இருக்கிறது.

செய்தியாளர்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கிலே நீதிமன்றத் தின் நிலை என்னவாக இருக்கும்?

தமிழர் தலைவர்: வழக்கு நீதிமன்றத்தில். நீதிமன்றத் தீர்ப்புக்கு யூகங்கள் எல்லாம் சொல்லக்கூடாது. வழக்கு இருக்கும்போது அதைப்பற்றி பேசுவதே சரியல்ல. இரண்டாவது, நீதிமன்றத் தீர்ப்பை யூகத்திலே எனக்கு வரும், உனக்கு வரும் என்று சொல்லவே முடியாது. சொல்லக்கூடாது. நான் வழக்கறிஞன், சட்டம் தெரிந்த வன். ஒரு வேளை சட்டம் படிக்கவில்லை என்றால், எதை வேண்டுமானாலும் சொல்லலாம். நான் சட்டமும் படித்தவன் என்பதாலே சொல்வதற்கு தயக்கம். நீதிமன்றத் தீர்ப்புக்கு காத்திருப்போம்.

பெரியார் மண்ணில் பா.ஜ.க.வா?

செய்தியாளர்: பெரியார் மண்ணில் பாஜக கால் பதிப்பதற்கு இவ்வளவு துடிக்கிற அளவுக்கு நாம் விட்டுவைத்ததுதான் காரணமா?

தமிழர் தலைவர்: இல்லை, இல்லை. காரணம் என்ன வென்றால், திராவிட இயக்கத்தில் கொஞ்சம் ஊடுருவல் நடந்ததாலே வந்ததாலே வந்த கோளாறு. வேறு ஒன்றுமில்லை.

செய்தியாளர்: என்ன ஊடுருவல்?

தமிழர் தலைவர்: ஊடுருவல் உங்களுக்கே தெரிந்தது தான்.

உடும்பு வேண்டாம் - கைவந்தாலே போதும்!

செய்தியாளர்: நவம்பர் 8 அன்று கருப்பு நாளாக கடைப்பிடிப்பதாக கூறியுள்ளார்களே?

தமிழர் தலைவர்: அது எல்லாருக்குமே தெளிவாக தெரிந்ததுதானே. இந்த பண மதிப்பிழப்பு என்பதாலே, பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று சொன்னார்கள். பொருளாதார வளர்ச்சி ஏற்படவில்லை. தளர்ச்சி ஏற்படும் என்று மன்மோகன்சிங் அவர்கள் தெளிவாக நாடாளுமன்றத்திலேயே சொன்னார். இன்றைக்கு அவர் சொன்னபடி, ஏழாக இருந்தது ஆறாக குறைந்து, 5.7 ஆக ஆகிவிட்டது. வேலை வாய்ப்புகள் புதிதாக ஏதுமில்லை. ஏற்றுமதிகள் இல்லை. போதாததற்கு எரிகிற நெருப்பில் பெட்ரோலை ஊற்றியது மாதிரி, ஜி.எஸ்.டி என்று உள்ளே நுழைந்து, வியாபாரிகள் எல்லாம் தங்கள் நிலைகளைப் பற்றி பரிதாபப்படக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள். இப்போது உடும்பு வேண்டாம், கை வந்தால் போதும் என்கிற நிலைக்கு மோடி அரசு உள்ளது.

இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பின்போது குறிப்பிட்டார்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...