Saturday, September 9, 2017

மஹா புஷ்கரம் எனும் மெகா புளுகு!


நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் துலாக்கடம் என்று சொல்லப்படுகிற காவிரிக்கரையில் அரசு ஏற் பாட்டில் 'மஹா புஷ்கர விழா' நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான வேலைகள் கடந்த மூன்று மாதங்களாகவே வெகுஜோராக நடைபெற்று வருகின்றன.
வரும் செப்டம்பர் 12 முதல் 24ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த விழாவில் தமிழக முதல மைச்சர் மற்றும் சங்கராச்சாரிகள் முதல் சவுண்டிகள் வரை கலந்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியரும், மந்திரிமார்களும் தொடர்ந்து பலமுறை புஷ்கர விழா ஏற்பாட்டுப் பணிகளை ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதி, தனியார் வங்கிகள், தனியார் நிறுவனங்கள் என தாராளமாய் பணம் செலவிடப்படுவதாகத் தெரிகிறது.
மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம், புதிய பேருந்து நிலையம், நவீன வசதிகளுடன் கூடிய மாவட்ட தலைமை மருத்துவ மனை, சுற்றுவட்டப் பாதை என பல கோரிக்கைகள் பல்லாண்டுகளாய் கோரிக்கையற்று கிடக்கும் மயிலாடு துறையில் விளக்கமாற்றுக்கு பட்டுக்குஞ்சம் என்பது போல் வரிந்து கட்டிகொண்டு ஆட்சியாளர்கள் புஷ்கர விழாவிற்கு வேலைசெய்வதை பார்க்கின்ற எவராலும் இத்தகைய செயலை விமர்சிக்காமல் இருக்க முடியாது.
இந்த விழா நடந்துவிட்டால் நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடும் என்கிற ரேஞ்சுக்கு "தினமலர், தினமணி, இந்து" போன்ற பார்ப்பனப் பத்திரிக்கைகள் கட்டுரைகளை பிரசுரித்த வண்ணம் இருக்கின்றன.
மூன்றரை கோடி தீர்த்தங்களுக்கு அதிபதியானவராம் பிரம்மன். அதில் கங்கை, நர்மதா, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, பிரம்மபுத்ரா, தர்மபத்ரா, சிந்து, பிராணஹிதா ஆகிய பன்னிரண்டு நதிகள் மட்டும் ஒவ்வொரு ராசியை சேர்ந்தவையாம். குருபகவான் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும்போது அந்த ராசிக்குரிய நதிக்கரையில் இந்த புஷ்கர விழா நடத்தப்படுகிறதாம். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த விழா காவிரி துலாம் ராசியில் இருப்பதால் இப்போது காவிரிக்கு கொண்டாடப்படுகிறதாம்.
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை இது மஹா புஷ்கர விழா என்று அழைக்கப்படுகிறதாம். இந்த புஷ்கரம் நடக்கும் காலத்தில் சிவன், பிரம்மா, விஷ்ணு, தேவர்கள், மகரிஷிகள் எல்லோரும் வாசம் செய்வதால் இந்த நேரத்தில் புனித நீராடினால் மூன்றரை கோடி தீர்த்தங் களில் ஸ்னானம் செய்த பலனும் புண்ணியமும் கிட்டுமாம். இக் காவிரியில் புனித நீராடிவிட்டால் நமது ஆயுள் உள்ளவரை சேரும் பாவங்கள் உடனே அகன்று விடும் என தர்மசாஸ்திரம் சொல்கிறதாம். இப்படி புளுகு மூட்டைகளை அவிழ்த்துகொண்டே செல்கிறது அந்த பார்ப்பன பத்திரிக்கைகள்.
நட்சத்திரங்களையும், துணைக்கோள்களையும் கிரகமாக கணக்கிட்டு நவக்கிரஹம் என்று சொல்லி அதன் அடிப்படையில் மனிதர்களுக்கு ராசிகளை உருவாக்கிய புரோகிதக் கூட்டம் நதிகளுக்கும் ராசி சொல்கிறது! சூரியனும், சந்திரனும் கிரகங்களா? நீங்கள் சொல்லும் நவகிரகங்களில் யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ போன்ற பிந்தைய கண்டுபிடிப்புகள் உங்கள் ஜாதகத்தில் உண்டா? என பகுத்தறிவாளர்கள் காலாகாலமாய் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை எவராலும் பதில் சொல்ல முடியவில்லையே!.
மூன்றரை கோடி தீர்த்தங்களுக்கு அதிபதியானவராம் பிரம்மன். பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல் லுங்கப்பா என்கிற வழக்குசொல்தான் ஞாபகத்திற்கு வருகிறது. மூன்றரை கோடி தீர்த்தங்களாமே? எவை எவை என பட்டியலிட முடியுமா? இக் காவிரியில் புனித நீராடிவிட்டால் நமது ஆயுள் உள்ளவரை சேரும் பாவங்கள் உடனே அகன்று விடும் என தர்மசாஸ்திரம் சொல்கிறதாமே? பின் காவல்துறையும், நீதிமன்றங்களும், சிறைச்சாலைகளும் எதற்கு? சங்கராச்சாரிகள் இதுவரை செய்த பாவங்கள் போதாதென்று இனி செய்யத்திட்ட மிட்டிருக்கும் பாவங்களையும் சேர்த்துப் போக்கத்தான் இங்கு வருகிறார்களோ?
கவேரன் என்கிற ராஜரிஷி புத்திரப்பேறு வேண்டி பிரம்மாவை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தானாம். இதைக்கண்ட பிரம்மன் காவிரியை பெண்ணாக்கிட அவளை அகஸ்தியரிஷி மணந்து தனது கமண்டலத்தில் வைத்துகொண்டானாம். கமண்டலத்திலிருந்த காவிரியை கணபதி காக்கை உருவில் வந்து உருட்டிவிட அது கவே ரன் ரிஷியின் மகளாக  பாய்ந்ததாம். இப்படி பல ரிஷி களின் தொடர்போடு உருவாகியதாம் காவிரி.
காவிரி வறண்டு பல காலம் ஆகிவிட்டது. விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தினம் ஒரு அவதாரம் எடுத்து டில்லி தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தற்கொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. புஷ்கர காலத்தில் வாசம் செய்யப்படுவதாகச் சொல்லப்படும் சிவன் வகைய றாக்களுக்கு இவை யெல்லாம் தெரியாதா? குறைந்தபட்சம் புஷ்கரவிழாவின் பொழு தாவது காவிரி கரைபுரளாதா? புண்ணியங்களைப் போக்குவது இருக் கட்டும். புனித நீராடுவதற்கான தண் ணீரைக் கூட கடவுள் அருள்பாலிக்க மாட்டாரா?  அப்படி ஒரு அதிசயம் நடக்கும் என்ற குறைந்த பட்ச நம்பிக்கை கூட விழா ஏற்பாட்டாளர் களுக்கோ, பக்தகோடிகளுக்கோ வராமல் போனதால்தான் புஷ்கரவிழாவை யொட்டி மயிலாடு துறை காவிரிக்கரை துலாக்கடப் பகுதியில் நீர்த்தேக்க தொட்டிகளை கட்டி பம்பு செட்டுகளை வைத்து தண்ணீர் நிரப்பும் முயற்சி களில் ஈடுபட்டிருக் கிறார்களோ?
கன்மமகரிஷியை கருமை நிறம் கொண்ட மூன்று பெண்கள் சந்தித்தார்களாம். அவர்கள் தங்களை கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் என்று அறிமுகப்படுத்திகொண்டு, 'மக்கள் அனைவரும் தங்கள் பாவங்களை எங்களிடம் வந்து கரைத்துச் செல்வதால் கருமை அடைந்து விட்டோம்! இதற்கு ஒரு தீர்வு வேண்டும்!'என முறையிட்டனராம். "தென் மண்டலத்தில் மாயூரம் காவிரி துலாக்கடத்தில் புனித நீராடினால் நலம் பெறுவீர்கள்" என்று ஆசி கூறினாராம் கன்மமகரிஷி!. இந்த கதையை இந்து தமிழ்நாளேடு வெளியிட்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பே இதை வெளியிட்டு மோடிக்கும் சொல்லி அனுப்பியிருந்தால் புனித கங்கை எனும் பெயரில் பல கோடிகளை பாழடித்துவரும் மோடி அரசு புஷ்கர விழாவில் கலந்துகொள்ள இருக்கும் சங்கராச்சாரிகளிடம் கங்கை, யமுனை, சரஸ்வதிகளை தங்களோடு கூட்டிச் செல்லுமாறு வேண்டுகோளாவது விடுத் திருக்கும். சங்கராச்சாரிகளும் சந்தோஷ மாக புனித நீராடியிருப்பார்கள்!

- கி.தளபதிராஜ்

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அ.தி.மு.க. அரசு புத்திசாலித்தனமாக என்ன செய்ய வேண்டும்?

‘நீட்’ தேர்வு திணிப்பை எதிர்த்து நாடெங்கும் கிளர்ச்சிகள் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்து விட்டன. பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல, உயர்நிலைப்பள்ளி, மேல் நிலைப்பள்ளி இருபால் மாணவர்களும் புயம் தூக்கிப் புயல் எனப் புறப்பட்டு விட்டனர்.

1928முதல் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்து வந்த இடஒதுக்கீட்டு ஆணை ‘சுதந்திர’ இந்தியாவில் காவு கொடுக்கப்பட்டது. தந்தை பெரியார் 1925ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரசில் இருந்தபோதே பகிரங்கமாகவே அறிவித்தாரே - ‘பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் பிரச்சினைக்கு வெள்ளைக்காரர்கள் இந்தியாவில் ஆட்சியில் இருக்கும்போதே முடிவு கட்டப்பட வேண்டும்; இல்லையேல் ‘சுதந்திர’ இந்தியாவில் ஜனநாயகம் (DEMOCRACY) இருக்காது - மாறாக பார்ப்பனர் ஆதிபத்தியம்தான் (BRAHMINOCRACY) இருக்கும்' என்றாரே! அந்தத் தொலைநோக்கு  பிறர்க்கு சிந்தனைக்கு அசல் எடுத்துக்காட்டுத்தான் - இந்திய அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நிலையில் முதல் பலியாக தமிழ்நாட்டில் நடப்பில் இருந்த இடஒதுக்கீடு பலி கொடுக்கப்பட்டதாகும்.
தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த இடஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்பு வழங்கிய அந்தக்காலக்கட்டத்தில் தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடே எரிமலையாகச் சிலிர்த்து எழுந்தது.
மாணவர்கள் எல்லாம் கல்விக் கூடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுப் பாடினர் - நாடே முற்றிலுமாக முடங்கிப் போனது.
தமிழ்நாட்டின் உணர்வினை அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டி அவசர அவசரமாக இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் சட்டத் (15(4) திருத்தத்தைக் கொண்டு வந்தார். அப்பொழுது சட்ட அமைச்சராக இருந்த அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அதற்குப் பேராதரவாகவும், ஊன்றுகோலாகவும் இருந்தார்.
இன்றைக்கும் இதே நிலைதான் நிலவுகிறது. தமிழ்நாடு முழுவதும் சொல்லி வைத்தாற்போல போராட்டங்கள் பல வடிவங்களிலும் கனன்று விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
ஆசிரியர் ஒருவர் சமூக நீதிக்கு ஏற்பட்டு இருக்கும் ஆபத்தைச் சுட்டிக்காட்டி தனது எதிர்ப்பின், வெறுப்பின் அடையாளமாகத் தனது ஆசிரியர் பணியையே கால் கடுதாசியில் எழுதித் தூக்கி எறிந்து விட்டு வெளியேறியிருக்கிறார்.
உலகப் புகழ்ப் பெற்ற வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையையே புறக்கணித்து அறிவித்தும் விட்டது.
யாரும் யாரையும் தூண்டி தமிழ் மண்ணில் இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கவில்லை. தன்னெழுச்சியாக தாண்டவமாடுகிறது.
தமிழ்நாடு அரசுக்கு ‘நீட்’ ஒழிப்பில் உண்மையாகவே கவலையும், அக்கறையும் இருக்குமேயானால் என்ன செய்ய வேண்டும்?
தமிழ்நாட்டின் இந்தக் கொதி நிலையை எடுத்துக்காட்டி ‘நீட்’ டிலிருந்து நிரந்தரமாகத் தமிழ்நாட்டுக்கு விலக்களிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். அப்படிச் செய்வதுதான் புத்திசாலித்தனமான அணுகுமுறையாகவும் இருக்க முடியும்.
அதை விட்டு விட்டு,  போராட்டக் களத்தில் குதித்திருக்கும் மாணவர்களைக் கைது செய்து, குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு போய் வாகனங்களில் தூக்கி எறிவது - சுவரொட்டி அச்சிடும் அச்சகங்களை  அச்சுறுத்துவது, கைது செய்வது என்பதெல்லாம் தேவையானதுதானா? நெருப்பை அணைப்பதாகக் கூறி, பெட்ரோலை ஊற்றுவது புத்திசாலித்தனம் தானா? இது எதிர்வினையை உண்டாக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?
அண்ணாவின் பெயரை சுமந்து நிற்கும் அ.இ.அ.தி.மு.க. அரசு தமிழ் மண்ணுக்கே உரித்தான சமூக நீதிப்  பிரச்சினையில் - மண்ணின் மனப்பான்மைக்கு (ஷிளிமிலி றிஷிசீசிபிளிலிளிநிசீ) மாறாக போராட்டங்களை ஒடுக்க முயன்றால், பொதுமக்கள் மத்தியில், மேலும் மேலும்  மிகப்பெரிய  அளவில் அ.இ.அ.தி.மு.க. அரசின் மீது வெறுப்பு நெருப்பைத்தானே உமிழச்செய்யும்.
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் முக்கிய கட்சிகள் எல்லாம் ஒருங்கிணைந்து, இந்தப் பிரச்சினையில் அடுத்தடுத்துப்  பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.
இன்று திருச்சியில் திராவிடர் கழகத் தலைவர் தலைமையில் பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்கள் ‘நீட்’டை எதிர்த்துப் போர் முழக்கம் செய்கிறார்கள். இக்கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்தில் அடுத்தக்கட்ட போராட்ட அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில அரசு இந்த சூழலைப் பக்குவமாகப் பயன்படுத்திக் கொண்டு கரை ஏற வேண்டும்.

மத்திய பா.ஜ.க ஆட்சி என்ற அசல் பார்ப்பன மனுதர்ம ஆட்சி என்ன செய்யப் போகிறது? கழகம் இல்லாத ஆட்சியை உருவாக்குவோம் என்று உளறுபவர்கள் எல்லாம் ஊறுகாய் ஜாடியில் ஒளிய வேண்டிய நிலைதான் என்பதை இப்பொழுதாவது புரிந்து கொண்டால் சரி! 

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

“மாநிலக்கல்வி திட்டத்திலேயே தேர்வு தேவை - தேவை!” “நீட்’ வேண்டவே வேண்டாம்!”



அகமதாபாத் செப். 8 ‘நீட்’ தேர்வு வேண்டவே வேண்டாம், மாநிலக் கல்வித் திட்டத்தின் கீழ்தான் தேர்வு வேண்டும் என்று கூறி பிஜேபி ஆளும் - குஜராத்தில் மாணவர்கள் போராட்டக் களத்தில் குதித்தனர்.
அரியலூரில் அனிதா என்னும் ஏழை மாணவி மருத்துவம் படிக்க முழுத்தகுதி இருந்தும் நீட் தேர்வால் தனது கனவு சிதைந்து போனதை அடுத்து அவர் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு தமிழகம் எங்கும் மாணவர்கள் தன்னெழுச்சிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டம் தற்போது குஜராத்திலும் ஆரம்பித்துள்ளது.  நீட் தேர்வில் ஆங்கில வழிக்கும் குஜராத்தி வழிக்கும் தனித்தனி வினாத்தாள்கள் வழங்கப்பட்டன.   இதில் ஆங்கில வழியில் கேட்கப்பட்ட கேள்விகள் சுலபமாகவும், குஜராத்தி வழியில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாகவும் இருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்களால் சொல்லப் படுகிறது.
நுழைவுத் தேர்வு என்பது எந்த மொழி வழியில் படித்தாலும் ஒரே கேள்வியாக இருக்க வேண்டும் என மாணவர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.  அனிதாவைப் போன்றே பல மாணவர்கள் 12ஆம் வகுப்பில் 90% க்கு மேல் மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வு மதிப்பெண்கள் குறைந்ததால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியவில்லை.
குஜராத்தின் அரோல்லி பகுதியைச்  சேர்ந்த 17 வயது மாணவர் ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர்.  மருத்துவக் கல்லூரியில் சேரும் ஆசையுடன் இரவும் பகலும் படித்து 92% மதிப்பெண் 12ஆம் வகுப்பில் வாங்கிய அவரால் நீட் தேர்வில் 292/700 மதிப்பெண் தான் வாங்க முடிந்தது.
அவருடைய தகுதி (ரேங்க்) 3881 ஆனதால் அவர் மருத்துவக் கனவு நிராசை ஆனது.   அவருக்கு புஜ் நகரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் ரூ. 17 லட்சங்கள் கொடுத்தால் இடம் தர நிர்வாகம் தயாராக இருந்தது.  ஒரு ஏழை விவசாயியின் மகனால் அவ்வளவுப் பணம் புரட்ட முடியாததால் அந்த இடமும் பறி போனது.
குஜராத்தி வழியில் தனியாகவும், ஆங்கில வழியில் தனியாகவும் தகுதிப் பட்டியல் போடும்படி மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.   அவர்கள் கோரிக்கையை கண்டு கொள்ளாமல் ஒரே தர வரிசைப் பட்டியலை அரசு வெளியிட்டு, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது.
இவரைப் போல வேறு பல மாணவர்களும் உள்ளனர்.  கிராமப்புற மாணவர்களான அவர்கள் அகமதாபாத் நகருக்குச் சென்று நீட் தனிப்பயிற்சி நிறுவனங்களில் படிக்கப் போவதாக சொல்கிறார்கள்.  அதே நேரத்தில், நீட்டில் குறைந்த மதிப்பெண் எடுத்த ஹனி படேல் என்னும் மாணவி, "குஜராத் அரசுப் பள்ளியில் படிப்பதால் எந்தப் பயனும் இல்லை.  கிராமப் புற குஜராத்தி வழி மாணவர்களுக்கு தனிப் பயிற்சியகங்களில் படிக்கச் செலவு செய்ய வேண்டியுள்ளது.  தவிர தரமான தனிப் பயிற்சியகங்கள் என்பதும் இந்த மாநிலத்தில் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளன.  தனி தரவரிசை பட்டியல் போடாமல்  அரசு எங்களை ஏமாற்றி விட்டது.  நான் இப்போது என் டாக்டர் கனவுக்காக ஹோமியோபதி கல்லூரியில் சேர்ந்துள்ளேன்" எனக் கூறினார்.
மேலும் பல மாணவர்களும், குஜராத்தி வழி தனி தேர்வுத்தாள் தந்ததற்குத் தங்கள் கண்டனத்தை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.   பலர் சரியான பயிற்சியகங்கள் இல்லாததால் ஒரு வருடம் காத்திருந்தாலும் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாது என்னும் எண்ணத்தில் உள்ளனர்.  அவர்களின் ஒட்டு மொத்த கருத்து, மருத்துவக் கல்லூரிக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண்ணை மட்டுமே கணக்கில் எடுக்க வேண்டும்.  நீட் தேர்வே வேண்டாம் என்பதே!.

குஜராத் மாநில கல்வி அமைச்சர் பூபேந்திரசிங், "இந்த அரசு நீட் தேர்வுக்கும், அரசு தேர்வுக்கும் இடையில் வித்தியாசம் இருப்பதைக் களைய முயன்று வருகிறது.   குஜராத் மாநிலக் கல்வி திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பாடப் புத்தகங்களை அரசே அளிக்கும்.   நீட் தேர்வுக்கு தயார் செய்யும் வகையிலேயே இனி அரசுத் தேர்வுகளும் அமையும்.   வரும் 2018 முதல் அனைத்துப் பள்ளிகளிலும் சி பி எஸ் சி பாடத் திட்டத்தில் கல்வி மாற்றப்படும்" என தெரிவித்துள்ளார். அதாவது "குல்லாய்க்காக தலையை வெட்ட வேண்டும்" என்கிறார்.

Thursday, September 7, 2017

மாநாடுகளில்- நீதிமன்றத்தில் - தேர்தல் பிரச்சாரத்தில் சமஸ்கிருதத்திலேயே பேச நீங்கள் தயார்தானா?


சமஸ்கிருதவாதிகளைப் பார்த்து தோழர் தா.பாண்டியன் கேள்வி


சென்னை, செப்.6-  மாநாடுகளில் - நீதிமன்றத்தில் - தேர்தல் பிரச்சாரத்தில் சமஸ்கிருதத்துக்காக வக்காலத்து வாங்குவோர் சமஸ்கிருத மொழியில் பேசத் தயார்தானா? என்ற வினாவை எழுப்பினார்  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தோழர் தா.பாண்டியன் அவர்கள்.
25.8.2017 அன்று சென்னை பெரியார் திடலிலுள்ள  நடிகவேள் எம்.ஆர்.இராதா அரங்கில் ‘‘இந்தி - சமஸ்கிருத திணிப்பு கண்டன மாநாட்டில்  இந்திய கம்யூனிஸ்டு   கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தோழர் தா.பாண்டியன் அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு: நாடு முழுவதிலும் மக்களிடம் பேசவேண்டி இருக்கிறது
இம்மாநாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர்  தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே,
நன்றியுரை பகர இருக்கிற இன்பக்கனி அவர்களே, குமாரதேவன் அவர்களே, பெரியோர்களே, காலம் கருதி நான் சுருக்கமாக சொல்ல விரும்புகிறேன். ஏனெனில், எனக்குமுன் உரையாற்றிய அத்துணை பேரும் நாம் எதற்காக இந்த மாநாட்டில் கூடியிருக்கிறோம் - இந்த எதிர்ப்பு ஏன் இப்பொழுது ஒருமுகப்படுத்தப்படுகிறது என்பதை தெளிவாக விளக்கிப் பேசியிருக்கிறார்கள். நான் மீண்டும் அதற்கொரு விளக்கவுரையாற்ற வேண்டிய அளவிற்கு அவசியமில்லை. அது இதற்குப் பிறகு நாடு முழுவதிலும் இங்கு வராத மக்களிடம் பேசவேண்டி இருக்கிறது.
ஏன் எதிர்க்கிறோம் இந்தி மொழித் திணிப்பை?
எனவே, இது அடுத்து நாம் நடத்தப்போகிற போராட் டத்திற்கான பிரகடன மாநாடு. எனவே, ஏன் எதிர்க்கிறோம் சமஸ்கிருதத்தை? ஏன் எதிர்க்கிறோம் இந்தி மொழித் திணிப்பை? என்பதைச் சொல்ல நான் விரும்பவில்லை.
1930 ஆம் ஆண்டிலிருந்தே இந்த தமிழ் மண்ணில், அறிவுள்ளவர்கள், தமிழ் பற்றுள்ளவர்கள் தொடர்ந்து போராடி வந்திருக்கிறார்கள்.
குள்ளநரி மிகக் குதூகலமாக வந்துகொண்டிருக்கிறது
இப்பொழுது நம்மை எதிர்க்கின்ற சக்தி முழு மூச்சாக மத்தியில் ஆட்சிக்கு வந்திருக்கிறது. அவன் ஒரு கொள் கைத் திணிப்பாக மட்டுமல்ல, அதிகாரத்தைப் பயன்படுத்தி, மக்கள் தந்த வரிப் பணத்தையும் செலவிட்டு, அதேநேரத்தில் தமிழ்நாட்டில் அல்லது வேறு மாநிலங்களில் காணப்படுகிற பலவீனத்தையும் பயன்படுத்தி, இதுதான் வேட்டையாடு வதற்கு நல்ல நேரம்; நாம் குடியேறுவதற்கு நல்ல நேரம் என்று குள்ளநரி மிகக் குதூகலமாக வந்துகொண்டிருக்கிறது.
நாம் ஒப்புக்கொண்டிருக்கிற இந்த தேர்தல் ஜனநாயக முறையில், ஒரு மூன்றாண்டு காலத்தைக் கழித்துவிட்டால், இன்னும் ஓர் இரண்டாண்டு காலம் இருக்கப் போகிறார்கள். அவர்கள் ஜனநாயகத்தை மதிக்கவில்லை என்றாலும், நாம் ஜனநாயகத்தை மதிக்கின்ற காரணத்தால், ஜனநாயக முறையிலேயே நம்முடைய எதிர்ப்பினைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றோம்.
நம்முடைய தேர்தல் முறைகளில் உள்ள பலவீனத்தின் காரணமாய்...
அவர் வாக்குக் கணக்குப்படி பெரும்பான்மை பெற்று இந்தியப் பிரதமர் ஆனவர் அல்ல. சரியான தேர்தல் கணக்குப்படி பார்த்தால், நம்முடைய தேர்தல் முறைகளில் உள்ள பலவீனத்தின் காரணமாய், குறைந்த வாக்குள்ள வர்களாக இருந்தாலும், அதிக இடங்களைக் கைப்பற்று கின்றபொழுது, சட்டமன்றங்களுக்குள், நாடாளுமன்றத் திலும் பெரும்பான்ம பெற்று பிரதமராக வந்துவிட்டார்.
உத்தரப்பிரதேசத்தில் இரண்டாம் முறை வெற்றி பெற்ற போதுகூட, 33 விழுக்காடு வாக்குகள்தான் பெற்றார். 67 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற நாம் தோற்றோம். வேறொன்றுமில்லை அதற்குக் காரணம் - நாம் நமக்குள் இருந்த சண்டையை கறாராக நடத்தினோம். முதல் எதிரி யார் என்பதைப் பார்க்காமல் சண்டை போட்டோம்.
இப்பொழுது இந்த மாநாடு நடத்தப்படுவதற்குள்ள காரணம், அந்த முதல் எதிரியை மறந்துவிட்டு, பக்கவாட்டில் சகோதர சண்டையில் தமிழா ஈடுபட்டு விடாதே, உத் தரப்பிரதேசம் போன்று ஏமாந்துவிடாதே என்பதற்காகத் தான் இந்த மாநாடு.
இங்கே தோழர் ராமகிருஷ்ணன் அவர்கள் சில விளக்கங்கள் கொடுத்தார்; நான் இப்பொழுது அந்த ஒப்புதல் வாக்குமூலங்களில் இறங்க விரும்பவில்லை.
இந்தியாவின் ஒருமைப்பாடு காப்பாற்றப்பட வேண்டும் என்று எங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே கற்பிக்கப் பட்டது - தேசிய இயக்கங்கள் - அதிகமாக பொதுவுடைமை இயக்கம்.
மீண்டும் நாம் பிளவுபட்டு நின்றால், அடிமைப்பட்டு விடுவோம்
ஏன்? இந்தியா ஒன்றுபட்டு நிற்கவேண்டும்; பிளவு பட்டதால்தான் அடிமைப்பட்டது. எனவே, மீண்டும் நாம் பிளவுபட்டு நின்றால், அடிமைப்பட்டு விடுவோம் என்று தான் திராவிட நாடு என்ற கோரிக்கையை எதிர்த்தே, அநேகமாக ஒரு 30 ஆண்டுகாலம், நா தழும்பேற பேசிய வன்தான், இப்பொழுது இங்கே பேசிக் கொண்டிருக்கிறேன்.
அவர்களும் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், திராவிட நாடு பிரிவினையை கைவிடுகிறோம் என்று அறிவித்தார். பெருந்தன்மையோடு அறிஞர் அண்ணா அவர்கள் அறிவித்தபொழுதே சொன்னார், கோரிக்கையை நான் கைவிடுகிறேன்; ஆனால், அந்த திராவிட நாடு என்பதற்கு வற்புறுத்திய காரணங்கள், எதுவும் தீரவில்லை என்பதை நான் நினைவுபடுத்துகிறேன் என்றார்.
அவர் நினைவுபடுத்தினார்; அவர் சொன்னது, இன்றைக்கு நினைவுபடுத்தி இருக்கிறது.
எனவே, இப்பொழுது ஒற்றுமை என்ற பெயரால், மாநில உரிமைகள், மக்களுடைய கலாச்சார, பண்பாட்டு உணர் வுகள் அத்தனையையும் மிதிக்கத் தொடங்கியபொழுது, இப்பொழுது அடிக்கடி நான் தொலைக்காட்சிகளில் பார்க் கிறேன், காட்டெருமைகள் வீட்டிற்குள் நுழைந்துவிட்டது; யானைகள் வாழைத் தோட்டத்திற்குள் நுழைந்துவிட்டது என்று.
மொழி என்பது ஒரு கருவி
தமிழ்நாட்டிற்குள் என்ன நுழைந்து கொண்டிருக் கின்றன என்பதை தமிழன் தெரிந்துகொள்ளவேண்டாமா?  அவ னுக்கே தெரியும், அவன் பேசுகிற மொழி என்பது விஞ்ஞான ரீதியில், ஆக்ஸ்போர்டு டிக்ஷனரி கொடுக்கிற மொழி பெயர்ப்பில் க்ஷிமீலீவீநீறீமீ ஷீயீ ஜிலீஷீuரீலீt கருத்தை வெளியிடுகிற ஒரு கருவி - ஒரு சாதனம்.
அது ஒரு சாதனம் என்பது - இப்பொழுது மருத்துவத் துறைக்கு சில சாதனங்கள் வேண்டும்; போக்குவதற்திற்கு வாகனங்கள் என்ற சாதனங்கள் வேண்டும்; பறப்பதற்கு ஒரு சாதனம் வேண்டும்; கடலில் நீந்துவதற்கு ஒரு சாதனம்; தண்டவாளத்திற்குப் போவதற்கு ஒரு சாதனம். இப்படி சாதனங்கள் வேறுபடுகிறது அல்லவா! இப்பொழுது புதிய சாதனங்கள் வருகிறபொழுது, அதனை நாம் கடைபிடிக் கிறோம். பயன்படும் என்பதால். அது எந்த நாட்டில்  உருவாக்கப்பட்டது என்பதெல்லாம் பிறகு. அது பயன்படவேண்டும்.
இப்பொழுது அவன் சொல்கிறான், நீங்கள் தான் உலக வழக்கு அழிந்து ஒழிந்து, சிதையா உன் சீரிளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே என்று இந்த ஆரிய மொழியைச் சொல்கிறீர்கள். ஆரிய மொழி உலக வழக்கில், அழிந்து ஒழிந்து - எவனும் பேசக் காணோம்.
ஆனால், பிள்ளையார் சதுர்த்தியான இன்று காலை நான்  வருகிறபொழுது, ஆங்காங்கே அது கத்திக் கொண்டிருக்கிறது.  நல்லவேளை அது என்ன சொல்கிறது என்று வைத்தவனுக்கே தெரியாது.
குண்டர்படைதான் ஆர்.எஸ்.எஸ்.
அதேபோன்று சில விளம்பரங்களையும் சென்னை மாநகரத்தில் பார்த்திருக்கலாம். குளோபல் சம்ஸ்கிருத் எஜுகேசன் இன்ஸ்டிடியூசன் என்று பெரிய அளவில் போட்டு, விரைவில் சேருங்கள் என்று விளம்பரம் செய்கிறார்கள்; பலர் அதில் படிக்கிறார்கள்; மேற்படியார் அந்தப் பள்ளிக்கூடத்தில் சேருகிறார்கள். அவர்கள்மீது எனக்குக் கோபமே இல்லை. ஏனென்றால், அவர்கள் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், நன்னா பேசுவா; நம்முடைய சங்க கால இலக்கியங்கள், வள்ளுவர் எதுவுமே அவர்களின் நாக்குகள் போகாது. நன்றாகப் பேசுங்கள் - பாரதீய ஜனதா கட்சி - என்னைப் பொறுத்த வரையில், இதை எதிர்க்கிறேன், அதை எதிர்க்கிறேன் என்று ஒவ்வொன்றாக அடுக்கவில்லை.
பாரதீய ஜனதா கட்சியின் அடிப்படை கொள்கையே மனுஸ்மிருதி - வருணாசிரும தர்மம். அதற்காக தொண்டர் படை என்று சொல்லக்கூடிய குண்டர் படைதான் ஆர்.எஸ்.எஸ். இதை இப்பொழுது பரிமாறுவதற்கு சங் பரிவார்.
இப்பொழுது அவனுக்கு உலக பின்னணியும், பின் ஆதரவும் வந்திருக்கிறது. வெளிநாட்டு நிறுவனங்களும் பணம் கொடுத்து ஆதரிக்க வந்திருக்கிறார்கள்.
எனவே, ஏகாதிபத்தியம், கார்ப்பரேட் நிறுவனம், வகுப்புவாதம் இவை அத்தனையும் ஒரு பேயாக உரு வெடுத்து வந்திருப்பதுதான் பாரதீய ஜனதா கட்சி.
நான் சொல்வதற்கு முன்பே, நமக்குப் புரிவதற்காக அவர்களே சொல்லிவிட்டார்கள். கழகங்கள் இல்லாத தமிழகம். கவலை இல்லாத தமிழகம். இதைச் சொன்னதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. தாமரை பூக்கப் போகிறது - ஆளப் போகிறது.
தாமரை பூக்கும் என்று எவனாவது சொல்வானா?
அவர்களுக்குக் கண்கள் இருக்கிறதா? இல்லையா? என்று தெரியவில்லை. தமிழ்நாட்டு குளத்தைப் பார்த்து இப்பொழுது தாமரை பூக்கும் என்று எவனாவது சொல் வானா? ஆனால், துணிந்து சொல்கிறான்.
அவர்களுக்கு நாம் வைக்கின்ற ஒரே ஒரு வேண்டுகோள். நான் சமஸ்கிருதத்தையும் எதிர்க்கவில்லை, இந்தியையும் எதிர்க்கவில்லை, மேற்படியாளையும் எதிர்க்கவில்லை - ஏனென்றால், எனக்கு அதைப்பற்றி ஒன்றுமே தெரியாது. நான் ஆறு ஆண்டுகள் டில்லியில் என்னுடைய காலத்தைக் கெடுத்தேன் - நாடாளுமன்றத்தில் தெரியாத்தனமாக. அப்பொழுது நான் கற்றுக்கொண்டது இரண்டே இரண்டு வார்த்தைகள் தான் - ‘ஜாவ்’, ‘நஹி’ எவ்வளவு அருமையா சொற்கள் பார்த்தீர்களா?
அதைத்தான் இப்பொழுது இவர்களுக்கும் சொல்கி றேன். நஹி, ஜாவ். மூன்றாவது வார்த்தையை நான் படிக்கவேயில்லை. ஏனென்றால், எனக்கு அவ்வளவுதான் தெரியும். நீ என்ன பேசினாலும் எனக்குப் புரியாது. அந்த இரண்டு வார்த்தைகள்தான் எனக்குப் புரியும் - உனக்கும் புரியும் என்று நினைக்கிறேன்.
‘ஜாவ்’ என்று சொன்னால்தான் அவனுக்குப் புரியும்!
இதைச் சொல்வதற்காகத்தான் அந்த இரண்டு வார்த்தைகளையும்கூட படித்தேன். போடா என்று சொன்னால், அவனுக்குப் புரியாது. ஜாவ் என்று சொன்னால்தான் அவனுக்குப் புரியும்.
நீ இரண்டே இரண்டு காரியம் செய். இது கருத்தை வெளியிடுகிற கருவி.
இப்பொழுது சுஷ்மா சுவராஜ் சொல்லியிருக்கிறார், உலக அறிவே வரும்; நுண்ணறிவு வரும்; இந்தியா முன்னேறும் என்று.
தொடையில் கயிறு திரித்துவிடலாம் என்று நினைக்காதே!
இன்னும் என்னென்ன பஜனை பாட முடியுமோ பாடு. ஒரே ஒரு வேண்டுகோள், நீங்கள் வைக்கின்ற கடைகள் அத்தனையிலும் பெயர்ப் பலகைகளை சமஸ்கிருதத்தில் எழுது.
நீ நடத்துகிற மாநாடுகள் அத்தனையிலும், சமஸ் கிருதத்திலேயே பேசு.
நீதிமன்றத்திலும் நீ சமஸ்கிருதத்திலேயே வாதாடு
தேர்தல் பிரச்சாரத்திலும் மறக்காமல் சமஸ்கிருத்த திலேயே நடத்து.
உன்னை யாரும் தடுக்க முடியுமா? தாராளமாகப் பேசு; ஏன் பேச மாட்டேன் என்கிறாய்?
உன் சோன் பப்படியும் விக்காது. எனவே, நாங்கள் மீண்டும் தூங்குகிறோம், தொடையில் கயிறு திரித்து விடலாம் என்று நினைக்காதே! மற்றவர்கள் எல்லாம் ஏற்கெனவே மொழிப் போரில் போராடியிருக்கிறார்கள்.
நான் சுற்றிவளைத்துச் சொல்ல விரும்பவில்லை - இந்தி மொழி எதிர்ப்புப் போர் நடைபெற்றபொழுது, அதில் பங்கேற்காத பச்சைத் தமிழன் நான்.
நான் என்று சொன்னால், காரணம், என்னுடைய கட்சி. அதைத்தான் தீபக் பவார் இங்கே மிகவும் நாகரிகமாகக் குறிப்பிட்டார். எங்கள் மாநிலத்தில் மாநாடு நடந்தால், கம்யூனிஸ்டுகள் மேடைக்கு வந்திருப்பார்களா? என்று.
செத்துப் போன மொழியை சொல்லி, ஊமையாகப் பிறக்கிறதா?
அவர் சொன்னது உண்மை. அதை ஏன் மறைக்க வேண்டும்? ஏனென்றால், இந்தியாவின் ஒற்றுமை கெட்டுப் போய்விடும் என்று முன் அப்படி சொன்னோம் - இப்பொழுது தெளிவாக தெரியவேண்டும் - இந்தியைத் திணிக்க முயன்றால், ஒற்றுமை சாகடிக்கப்படும்.
என் பண்பாட்டையும், என் கலாச்சாரத்தையும், என் வரலாற்றையும் மறந்த பிறகு, நான் ஏன் பயன்படவேண்டும். ஒரே ஒரு வேண்டுகோள் - நீ சமஸ்கிருதத்தை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பயன்படுத்துவதற்கு ஒரு புதிய இந்தியா - புதிய இந்தியாவிற்கு, ஒரு புதிய மொழியை சொன்னாலும் பரவாயில்லை. செத்துப் போன மொழியை சொல்லி, ஊமையாகப் பிறக்கிறதா?
நீ  ஒன்றைப் பயன்படுத்து. நீதான் வேதங்களையெல்லாம் படைத்திருக்கிறாய். பகவத் கீதையை உலக முழுவதும் கொண்டு போகவேண்டும் என்று சொன்னாய். அதோடு விட்டாயா? அப்துல்கலாமுக்கு நினைவிடம் வைத்து, அங்க வைக்கப்பட்டுள்ள அவரது சிலையின் காலிலும் பகவத் கீதையை வைக்கிறாய். பரவாயில்லை, உனக்கு இருக்கும் பக்திக்கு பகவத் கீதையை விடாதே!
நாடாளுமன்றத்தில் பேசுவதும் இல்லை - விவாதிப்பதும் இல்லை!
ஆகவே, நீ ஆட்சியில் இருப்பதால், இந்தியா முழு மைக்கும் ஒரே வரியா? ஒரு பொதுக்கூட்டத்தில் போடு கிறாய். ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாதா? பொதுக் கூட்டத்தில் அறிவிக்கிறாய்.
நாடாளுமன்றத்தில் பேசுவதும் இல்லை - விவாதிப்பதும் இல்லை. அதேபோல், இந்திய ராணுவ முழுமைக்கும், அர்ஜுனன் பயன்படுத்திய வில் தரப்படும்; பீமன் பயன்படுத்திய கதாயுதம் வழங்கப்படும்.
விமானங்களையெல்லாம் இனி நாம் வெளிநாடுகளில் இருந்து வாங்கவேண்டியதில்லை. மயில்களில் ஏறித்தான் பிரதம மந்திரி உலகம் முழுவதும் சுற்றி வரப் போகிறார். பிள்ளையாருக்குப் பெருச்சாளி. இப்படியே இருந்தால், பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தைப்பற்றி நாம் கவலைப் படவேண்டாம்.
எனவே, அந்தக் கருவிகளையெல்லாம் உன் ராணு வத்திற்குப் பயன்படுத்து; மந்திரிகளுக்கெல்லாம் மயில் பிடித்துக் கொடு; மற்றவனுக்கு எல்லாம் மாடு பிடித்துக் கொடு; எருமைப் பிடித்துக் கொடு. எங்களை தயவு செய்து விட்டுவிடு!
தமிழ் மக்களைத் தட்டி எழுப்புவோம்!
நாங்கள் இந்த மண்ணிலே பிறந்தோம் என்பது மட்டுமல்ல, இருப்பது எங்களுக்கும் ஓர் உயிர்தான்; உனக்கும் ஒரே ஓர் உயிர்தான் என்பதை மறந்துவிடாதே!
அடிமைகளாக வாழ்வதைவிட, போராடி மடியத் தயார் என்று தமிழ் மக்களைத் தட்டி எழுப்புவோம்!
முன்பு போராட்டத்தில் ஈடுபடாமல் விட்டதையும், ஈடுகட்டுகின்ற முறையில், அடுத்த போராட்டத்தில் - பேரன்பிற்குரிய மோடி அவர்களே, இந்த அரிய வாய்ப்பைக் கொடுத்ததற்காக உங்களுக்கு அரிய நன்றி!
ஏனென்றால், சாவதற்கு முன்பு ஒரு போராட்டத்தை நடத்திவிட்டு சாகவேண்டும் என்று ஒரு ஆசை - நிறைவேறும் என்று நினைக்கிறேன்.
போராடுவோம், வாருங்கள்!

- இவ்வாறு  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தோழர் தா.பாண்டியன் அவர்கள் உரையாற்றினார்.

மோடி ஆட்சியை அப்புறப்படுத்தத் தயாராவோம்

மோடி ஆட்சியை அப்புறப்படுத்தத் தயாராவோம்


முரசொலி பவள விழாவில் தளபதி மு.க.ஸ்டாலின் சூளுரை


சென்னை, செப். 6- மத்தியில் அமைந் திருக்கும் பிஜேபி ஆட்சியானது மோடி ஆட்சியல்ல, வெறும் மோசடி ஆட்சிதான். இந்தியாவில் நடக்கும் இந்த மோசடி ஆட்சியை அப்புறப் படுத்தத் தயாராவோம் என நேற்று (5.9.2017) மாலை சென்னை கொட்டி வாக்கத்தில் நடைபெற்ற முரசொலி யின் பவளவிழா மாபெரும் பொதுக் கூட்டத்தில் சூளுரை நிகழ்த்திய தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் உரை வருமாறு:
முரசொலியின் பவளவிழா நிகழ்ச் சியில் நன்றியுரை வழங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. கிடைத் திருக்கிறது என்பதைவிட நானாக அதை எடுத்திருக்கிறேன். முதலில் அந்தப் பணியை நிறைவேற்றுகின்ற நிலையில் நான் இருக்கிறேன்.
1943ஆம் ஆண்டு முரசொலியின் முதலாமாண்டு விழா. மதிப்பிற்குரிய நாவலர் அவர்கள் நம்முடைய பொதுச் செயலாளர் அவர்கள், நம்முடைய பேராசிரியர் அவர்கள் ஆகியோரை அழைத்து வந்து தலைவர் கலைஞர் அவர்கள் அந்த விழாவை நடத்தினார். ஆனால், இந்தப் பவளவிழாவுக்கு தலைவர் கலைஞர் அவர்களால் வர முடியவில்லை. ஆனால், நான் தொடக்கத்தில் சொன்னதுபோல, இந்த விழாவின் நிகழ்ச்சிகள் அத்த னையும் அவரது மனதில் இருந்து கொண்டிருக்கும். கடந்த ஜூன் 3 ஆம் தேதி நடைபெற்ற தலைவர் கலைஞர் அவர்களின் வைரவிழாவை நான் எண்ணிப் பார்க்கிறேன். நம்முடைய திரு. திருமாவளவன் அவர்கள் பேசிய போது சொன்னாரே, வைரவிழா, அடுத்து இந்த முரசொலியின் பவள விழா. இவை தலைவர் கலைஞருக்குப் பெருமை சேர்க்க வேண்டிய விழா என்றார்.
உண்மைதான். ஆனால், கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதியன்று தலை வர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழாவில் ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடத்திய நேரத்தில், அகில இந்திய அளவில் இருக்கும் தலைவர்களை எல்லாம் அழைத்து வந்து அந்த நிகழ்ச்சியை நடத்தினோம். அப்போது, இந்த மேடை யில் உள்ள பல தலைவர்களுக்கு எல் லாம் கூட வருத்தம் உண்டு. அதை நமது மதிப்புக்குரிய தொல். திருமாவ ளவன் அவர்கள் வெளிப்படையாகவே எடுத்துச் சொன்னார். உரிமையோடு, பாசத்தோடு, அந்த வாய்ப்பு நமக்குக் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தில் தான் அதனைச் சொல்லியிருக்கிறார் என்பதை நாமும் அறிவோம். ஆனால், அந்த நிகழ்ச்சியில், முதலில் அகில இந்திய அளவில் உள்ள தலை வர்கள் பாராட்டட்டும், வாழ்த்தட்டும், இப்போது தமிழக அளவில் இருக்கக் கூடிய தலைவர்களான நீங்கள் வாருங் கள், வாழ்த்துங்கள், பாராட்டுங்கள், நீங்கள் அந்தப் பெருமையைத் தேடித் தாருங்கள் என்ற உணர்வோடு, உங் களை எல்லாம் இன்றைக்கு அழைத் திருக்கிறோமே தவிர, வேறல்ல. எனவே, உங்கள் மனதில் உள்ள அந்தக் குறை நிச்சயமாக இந்த விழா வின் மூலமாக அகற்றப்பட்டு இருக் கும் என உளமாற நம்புகிறேன். திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்கு ஒரு இதழா, இரண்டு இதழா, 265க்கும் மேற்பட்ட எத்தனையோ இதழ்கள் துணை நின்று, திராவிட இயக்கத்துக்கு வாளும்  கேடயமுமாக இருந்திருக்கின்றன. பேரறிஞர் அண்ணா அவர்கள் நடத்திய திராவிட நாடு, கேண்டி, ஹோம் லேண்ட், ஹோம் ரூல், நம் நாடு, தலைவர் கலைஞர் அவர்கள் நடத்திய முர சொலி, முத்தாரம், மறவன் மகள், நம்முடைய பேராசிரியர் அவர்கள் நடத்திய புதுவாழ்வு, தந்தை பெரியார் அவர்கள் நடத்திய விடுதலை, நாஞ்சிலார் அவர்கள் நடத்திய இந்தியம், பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் நடத்திய குயில், ஆசைத்தம்பி அவர் கள் நடத்திய தனியரசு, நாவலர் அவர் கள் நடத்திய மன்றம், ஏ.பி.ஜனார்த் தனம் அவர்கள் நடத்திய டார்பீடோ, கே.ஏ.மதியழகன் அவர்கள் நடத்திய தென்னகம், செல்வராசு அவர்கள் நடத்திய மறுமலர்ச்சி ஆகிய இப்படிப் பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இதழ் களுக்கு இடையில் நடைபயின்று, வெற்றிகண்டு, இன்றைக்கு 75 ஆம் ஆண்டு பவளவிழா காணக்கூடிய ஏடுதான் முரசொலி என்பதை மகிழ்ச் சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். உலகத்தில் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு, தனி வர லாறு உண்டு, அதுபோன்ற சிறப்பு முரசொலிக்கும் உண்டு. பிரான்சு நாட்டில் 1789இல் மன்னர்களின் கொடுங்கோல் ஆட்சியை ஒழித்த வர லாறு உண்டு. 1917இல் ரஷ்ய நாட்டில் ஜார்ஜ் பரம்பரை ஒழிக்கப்பட்டு, மக் கள் புரட்சி வெற்றி பெற்றது வரலாறு. அதேபோல 1947இல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த வரலாறு உள்ளது. அந்தப் பட்டியலில், 1942க்கு முர சொலி தொடங்கப்பட்ட வரலாறு என் பதை நான் எண்ணிப் பார்க்கி றேன்.
நிரந்தர எழுத்தாளர்
தலைவர் கலைஞர் அவர்கள் நெஞ்சுக்கு நீதி முதல் பாகத்தில், தன்னுடைய வாழ்க்கை வரலாறு புத்தகத்தில், முரசொலியின் நிரந்தர எழுத்தாளர் நான் என்று குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். அப்போது கலை ஞராக அல்ல, புனைப்பெயரில் அன்றைக்கு சேரனாக முரசொலியின் பக்கங்களில் தலைவர் கலைஞர் அவர்கள் இருந்திருக்கிறார். இன் றைக்கு 144 தடையுத்தரவு என்பதை அனுபவரீதியாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோமே, ஜனநாயகரீதி யில் நடைபெறும் தேர்தலை நிறுத்தி தடையுத்தரவு, கதிராமங்கலம் செல்வ தற்கும் தடையுத்தரவு, நெடுவாசல் பகுதிக்கு யாரும் செல்ல முடியாமல் தடையுத்தரவு, சேலம், எடப்பாடியில் உள்ள ஏரியை எதிர்க்கட்சித் தலைவர் சென்றுப் பார்க்கக்கூடாது என்பதற்கும் ஒரு தடையுத்தரவு, இப்படி இன்று மட்டுமல்ல, அன்றும் தடையுத்தரவு போடப்பட்டிருக்கிறது.
வர்ணாசிரம மாநாடு
சிதம்பரத்தில் நடைபெற்ற வர் ணாசிரம மாநாடு பற்றி தலைவர் கலைஞர் அவர்களால் முரசொலியில் எழுதப்பட்ட கட்டுரைக்குத் தடையுத் தரவு போடப்பட்டது. அதுமட்டுமால், சிதம்பரத்துக்குள் தலைவர் கலைஞர் வரக்கூடாது என்றும் தடையுத்தரவு போட்டார்கள். காரணம், தலைவர் கலைஞர் அவர்கள் முரசொலி கட்டு ரையில், மரணத்தின் உச்சியில் மானங் காக்கும் மறத்தமிழா போராடு, என்று எழுதினார். அது, அன்றைய அதிகார வர்க்கத்தை நடுங்க வைத்தது. அந்த முழக்கம் தான் இப்போதும் தேவை என்பதை நாமெல்லாம் உணர்ந்திட வேண்டும்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் முர சொலி பற்றி, என்னுடைய தம்பிகள் கருணாநிதியும், மாறனும் கழகத்துக் குத் தொண்டாற்றுவது மட்டுமல்ல, அந்தத் தொண்டில் கலைநயத்தை இழைத்து, குழைத்துத் தருகிறார்கள், என்று அழகான வரிகளில் குறிப் பிட்டார். இப்படி அண்ணா அவர் களால் பாராட்டப்பட்ட முரசொலிக்கு இன்று பவளவிழாவை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆக, எந்தக் கொள்கைக்காக 75 ஆண்டுகாலமாக முரசொலி பாடுபட்டிருக்கிறதோ, அந் தக் கொள்கைக்கு சவால் வந்திருக் கிறது.
சமூகநீதிக்கு ஆபத்து
மாநில சுயாட்சிக்கு ஆபத்து, சமூக நீதிக்கு ஆபத்து, மாநில உரிமைகளுக்கு ஆபத்து, மாநிலத்தில் சுயாட்சி - மத்தி யில் கூட்டாட்சி என்ற கொள்கைக்கும் ஆபத்து என எல்லாவற்றுக்கும் ஆபத்து வந்திருக்கின்றன. நாம் இன்றைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளாக பிரிந் திருக்கலாம், கொள்கைகளில் மாறு பாடு கொண்டிருக்கலாம், வேறுபாடு கள் இருக்கலாம், ஆனால், மேடை யில் இருக்கும் தலைவர்கள் நீங்கள் மட்டுமல்ல, பேசிக் கொண்டிருக்கும் என்னையும் சேர்த்துச் சொல்கிறேன், சமூகநீதியைக் காப்பாற்ற எத்தனை வேறுபாடுகள், மாறுபாடுகள் இருந் தாலும், அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, சமூகநீதியைப் பாது காக்க நாம் ஒன்று கூட வேண்டும் என முழக்கமிடுகின்ற விழாவாக இந் தப் பவள விழா அமைந்திட வேண்டும்.
தமிழகத்தை காப்போம்
இன்றைக்கு மத்தியில் ஒரு மிருக பலத்தைப் பெற்றுக் கொண்டிருக்கும் காரணத்தால், எப்படியாவது மத அடிப்படை வாதத்தை இந்தியாவில் இருக்கும் எல்லா மாநிலங்களிலும் பரப்பிட வேண்டும், குறிப்பாக, தமிழ் நாட்டில் இன்றைக்கு ஆளும் கட்சி யாக உள்ள அதிமுகவின் பிளவைப் பயன்படுத்தி, எப்படியாவது காலூன்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில், திட்டமிட்டு, பிஜேபி ஆட்சி முயற்சி மேற்கொண்டுள்ளது. அவர்களுக்கு எல்லாம் நான் நீண்ட விளக்கமல்ல, ஒரே ஒரு விளக்கத்தைச் சொல்வதென்றால், எட்டாத கனிக்குக் கொட்டாவி விடாதே அப்பனே, என்றுதான் சொல்ல முடியும். ஆகவே, தமிழகத்தை காப்போம். வேற்று மையில் ஒற்றுமை கொண்டுள்ள இந்தியாவை காப்போம். பிரதமர் மோடி அவர்கள் தேர்தலுக்கு முன் என்ன சொன்னார்? நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அதை செய்வோம், இதை செய்வோம், வானத்தைக் கிழிப்போம், வைகுண்டத்தைக் காட்டுவோம், மணலைக் கயிறாகத் திரிப்போம், என்றெல்லாம் கதைகளை விட்டு ஆட்சிக்கு வந்தாரே? நான் கேட்கி றேன், இன்றைக்கு நீட் தேர்வில் என்ன நிலை? கருப்புப் பணத்தை ஒழிப்பேன் என்றாரே, ஒழிக்கப்பட் டதா? ஸ்விஸ் வங்கியில் இருக்கும் கருப்புப் பணத்தை நான் இந்தியா வுக்கு கொண்டு வருவேன், இந்தியா வின் ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வேன் என்றாரா, இல்லையா? அது நிறைவேற்றப்பட்டதா? தமிழக மீனவர்களை பாதுகாப்பேன் என் றாரே, அந்த உறுதி நிறைவேற்றப் பட்டதா? நதிகள் இணைக்கப்படும் என்றாரே, இணைக்கப்பட்டதா? இப்படி அவர் சொன்னதையும் செய்யவில்லை, நாம் கேட்பதையும் நிறைவேற்றவில்லை. எனவே, மத்தியில் அமைந்திருக்கும் பிஜேபி ஆட்சியானது மோடி ஆட்சியல்ல, வெறும் மோசடி ஆட்சிதான். இந்தி யாவில் நடக்கும் இந்த மோசடி ஆட் சியை அப்புறப்படுத்தத் தயாராவோம். விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.

இவ்வாறு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

எட்டாத கனிக்குக் கொட்டாவி ஏன்?

சென்னையில் திமுக சார்பில் நேற்று மாலை நடைபெற்ற முரசொலி பவள விழா வெகு நேர்த்தியுடன் நடத்தப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 10 அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., திடலில் நடைபெறவிருந்த இந்த விழா கடுமழையின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு நேற்று நடைபெற்றது.
ஒத்தி வைக்கப்பட்ட ஒரு விழா இவ்வளவு சிறப்பாக நேர்த்தியாக, எழில் குலுங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பது மிகுந்த பாராட்டுக்குரியதே!
மேனாள் சென்னை மேயரும், தென் சென்னை மாவட்ட திமுக செயலாளருமான, மா.சு. என்று அழைக்கப்படும் மா.சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் அம்மாவட்டத்தைச் சேர்ந்த திமுக பொறுப்பாளர்களும்  திறன்பட இந்தச் சிறப்பான பணியைச் செய்து முடித்துள்ளனர். அவர்களைத் திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் பாராட்டியது வெகு பொருத்தமே!

பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், சமூக அமைப்பினர் 27 பேர் உரையாற்றினர். நாலரை மணிநேரம் ஒரு பொதுக்கூட்டம் நடைபெறுவது என்பது அசாதாரணமானது.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் மானமிகு  வைகோ அவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது கூடுதல் சிறப்பாகும். அவர் தம் உரையும் நெகிழ்ச்சி மிக்கதாக - குற்றால அருவியாகக் கொட்டியது.
தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள், வைகோ அவர்களின் வருகையை வரவேற்று, எது நம்மை இணைக்கிறதோ அதனை அகலப்படுத்த வேண்டும் என்றும், எது நம்மைப் பிரிக்கிறதோ அதனை அலட்சியப்படுத்த வேண்டும் என்றும் தந்தை பெரியார் கூறிய கருத்தினை பொருத்தமாகச் சுட்டிக்காட்டினார். அவரின் அந்தக் கருத்து, வெள்ளம் போல திரண்டிருந்த மக்கள் மத்தியில்  பெரும் ஆரவார அலையைத் தட்டி எழுப்பியது.
அதுவும் தாய்க் கழகத்தின் சார்பில் இதனைச் சுட்டிக்காட்ட தமக்குக் கடமை இருக்கிறது - உரிமையும் இருக்கிறது என்று அழுத்தமாகச் சொன்ன போது அந்த வார்த்தைக்குக் கூடுதல் முக்கியத்துவமும், மதிப்பும் இருந்தது என்றே சொல்ல வேண்டும்.
சமூக நீதிக்கு எதிரான - மதச்சார்பின்மைக்கு விரோதமான ஓர் ஆட்சி மத்தியில் அமைந்திருக்கும் நிலையில், மதச்சார்பற்ற சக்திகளும், சமூக நீதி சக்திகளும் ஒருங்கிணைவது அவசியமான ஒன்றுதானே! விழாவில் பேசிய பல்வேறு தலைவர்களின் உரையில் இந்தக்கருத்து முக்கியமாக மய்யம் கொண்டிருந்ததை அறிய முடிந்தது.
கழகமில்லாத ஆட்சியை தமிழ்நாட்டில் ஏற்படுத்துவோம் என்று காற்றில் சிலம்பாட்டம் ஆடிக் கொண்டிருக்கும் பிஜேபி - சங்பரிவார்க் கும்பலுக்கும் நேற்று திமுக நடத்திய விழா சரியான மரண அடியைக் கொடுத்திருக்கும் என்பதில் அய்யமில்லை.
அரியலூர் அனிதா ‘நீட்’ தேர்வு காரணமாக, தமது மருத்துவக் கனவு சிதைந்த காரணத்தால் தற்கொலை செய்து கொண்டதானது - தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் கூட மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்தத் தாக்கம் என்பது ‘நீட்’ என்னும் மாநிலக் கல்விக்கு சற்றுமே தொடர்பில்லாத, பொருத்தமில்லாத, நுழைவுத் தேர்வை திணித்ததில் உயர் ஜாதி ஆதிக்கச் சக்திகளின் கை இருக்கிறது என்ற கருத்து பெரும்பாலும் மக்கள் மத்தியில் உறுதியாகி விட்டது.
பிஜேபி என்னும் உயர்ஜாதி வர்க்கத்தின் அமைப்பும், உயர் ஜாதியினர் கரங்களில் வகையாகச் சிக்கியிருக்கும் ஊடகங்களும் நீட்டுக்கு   ஆதரவாக உரத்த முறையில் முரட்டுத்தனமாக ஆதரித்து கூச்சல் போடுவதிலிருந்தே, நீட் அவர்களுக்குச்சாதகமாகவே இருக்கும் ஒன்று என்பது தெளிவாகப் புரிந்து விட்டது.
அரியலூர் அனிதாவின் தற்கொலை - பிஜேபி - சங்பரிவார் கூட்டத்தினர் மீது மிகப்பெரிய எரிச்சலையும், கடும் வெறுப்பையும் வேகமாகத் தூண்டிவிட்டது. தமிழ்நாட்டுக்கு பிஜேபி தலைவர்களும், அமைச்சர்களும் வருவதைத் தவிர்த்து விட்டனர். உள்ளூர் பிஜேபியினரும் மக்கள் முகத்தில் விழிக்க முடியாதவர்களாக முடங்கிக் கிடக்கிறார்கள்.
இணையதளத்தில் திமிர்த் தனத்துடன், உயர் ஜாதி மமதையுடன், செய்திகளையும், கருத்துகளையும், வெளியிட்டவர்கள் சரியாக வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளனர்.
மாணவர்களும் அனைத்து மாவட்டங்களிலும் தன்னிச்சையாகவே  வகுப்புகளைப் புறக்கணித்து வீதிக்கு வந்து போராட ஆரம்பித்து விட்டனர்; இந்தி எதிர்ப்புப் போராட்டம் போல காட்டுத்தீயாக மாணவர் மத்தியில் கொந்தளித்து எழுவது தொடரும் என்றும் தெரிகிறது.  ஏனெனில் இந்த ‘நீட்’ தேர்வு என்பது மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகவும் சவாலானதாகும்.
நன்றியுரையாற்றிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நறுக்குத் தெறித்தது போல முரசொலி பவள விழா தரும் செய்தியாகக் சொன்னக் கருத்து முத்தாய்ப்பானது.
சமூகநீதி, மதச்சார்பின்மைக்கு எதிராக மத்திய அரசு - அதற்கு நிபந்தனையின்றித் தண்டனிட்டுத் துணை  போகும் மாநில அ.இ.அ.தி.மு.க அரசு இரண்டுமே மக்கள் விரோதமானவை என்றும், விரைவில் மாற்றம் நிகழும் என்றும் தளபதி மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்து விழாவின் முத்தாய்ப்பான செய்தியாக அசைபோட்டு மக்கள் வெள்ளம் விழாப் பந்தலிலிருந்து விடைபெற்றுச் சென்றது.

எட்டாத கனிக்குக் கொட்டாவி விட வேண்டாம் என்று பாஜகவினருக்கு திமுக செயல் தலைவர் சொன்னது சிரிக்க வைத்துச் சிந்திக்கவும் வைத்தது!.

திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தின் தீர்மானங்கள்

டிசம்பர் 2 - தமிழர் தலைவர் பிறந்தநாளில் 15,000 விடுதலை சந்தாக்கள் வழங்குவோம்


2018 ஜனவரி - திருச்சி உலக நாத்திகர் மாநாட்டுக்குப் பேராதரவு
விடுதலை வாசகர் வட்டம், புத்தகச்சந்தை,

துண்டறிக்கை விநியோகம், பகுத்தறிவு தகவல் பலகை அமைத்து இயக்கப் பணியில் தீவிரம்

தந்தை பெரியார் பிறந்தநாளை

ஊர்தோறும் ஊர்வலத்துடன் கொண்டாடுவோம்!

திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தின் தீர்மானங்கள்



சென்னை, செப்.6 தந்தை பெரியார் 139ஆம் ஆண்டு பிறந்தநாளை ஊர்தோறும் ஊர்வலத்துடன் நடத்துவது என்றும், விடுதலைக்கு 15000 சந்தாக்கள் சேர்ப்பது உட்பட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டம் - 6.9.2017 தீர்மானங்கள்
இன்று (6.9.2017) அன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
1.            இரங்கல் தீர்மானம்
தீர்மானம் 2 ஊர்தோறும் தந்தை பெரியார்

பிறந்த நாள் பெருவிழா!
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி அன்று தந்தை பெரியார் படத்தினை அலங்கரித்து அனைத்துக் கட்சியினரையும் பொதுமக்களையும் குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள், மகளிர் கலந்துகொள்ளும் ஊர்வலத்தினைச் சிறப்பாக நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது. ஆங் காங்கே தந்தை பெரியார் உருவப்படத்தினை அலங்கரித்து வைத்து பிரச்சாரம் செய்வது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
காவல்துறை அனுமதி உள்ளிட்ட அனைத்துப் பணி களையும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தந்தை பெரியார் பிறந்த நாள் அன்று புத்தாடை அணிதல், இனிப்புகளை வழங்குதல், நண்பர்களை, உறவினர்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்ளுதல் உள்ளிட்ட வகையில் தேசியத் திருவிழாவாக தந்தை பெரியார் பிறந்த விழாவைக் கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 3 (அ) 15,000 விடுதலை சந்தாக்கள்

அளிக்க முடிவு
தமிழர்களின் உரிமைப் போர்வாளான ‘விடுதலை’ ஏட்டுக்கு 15 ஆயிரம்  ஆண்டுச் சந்தாக்களைச் சேர்ப்பது எனவும், அதனை தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 85ஆம் ஆண்டு பிறந்த நாளான வரும் டிசம்பர் 2ஆம் தேதியன்று ஈரோட்டில் மிகப் பெரிய விழா நடத்தி அவ்விழாவில் அளிப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது. கழகப் பொறுப்பாளர்கள் கிளைக்கழகம் முதல் அனைவரும் விடுதலைச் சந்தாதாரராக இருக்க வேண்டும் என்று கட் டளைத் தீர்மானமாக இச்செயற்குழு நிறைவேற்றுகிறது.
(ஆ) விடுதலை சந்தா சேர்ப்பதற்காக “வீடுதோறும் விடுதலை - வீதிதோறும் பிரச்சாரம்” எனும் தலைப்பில் ஆயிரக்கணக்கான துண்டறிக்கைகளை அச்சிட்டு, பொது மக்கள் மத்தியில் வழங்கி, ‘விடுதலை’யின் தேவையை மக்கள் மத்தியில், மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில்அறியும்படி செய்வது என்று தீர்மானிக்கப்படுகிறது. “ஜாதி இல்லா நாடு; சாமியார்கள் இல்லா நாடு” என்ற பொருளில் தமிழ்நாடு முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தை வரும் அக்டோபரில் குமரி தொடங்கி, திருத்தணி வழியே சென்னை வரை, 7 நாள்கள் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

(இ) செப்டம்பர் 22 முதல் ஒவ்வொரு வெள்ளி, சனி, ஞாயிறுகளில் மாவட்டக் கழகமே பொறுப்பாளர்களைச் சந்தித்து ‘விடுதலை’ சந்தா சேர்ப்புக்கான வழிமுறைகள் பற்றிக் கலந்துரையாடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
(ஈ) வரும் அக்டோபர் 7ஆம்  தேதியன்று கடலூரில் திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம்  4


பெரியார் படிப்பகம், நூலகங்களைச் 
சரிவரப் பராமரிப்பது
நாட்டின் பல பகுதிகளிலும் துவக்கப்பட்ட பெரியார் படிப்பகங்கள், நூலகங்கள் சிறப்பாக நடைபெற வேண்டும் என்றும், எந்தக் காரணத்தை முன்னிட்டும் அவை செயல்படா நிலையில் இருக்கக் கூடாது என்றும், பகுதி நேரப் பணியாளர்கள் அமர்த்தப்பட்டு, செவ்வனே நடத்துவது என்றும், பெரியார் படிப்பகங்கள் கழகத் தோழர்களின் சந்திப்புக் களமாகவும் முக்கியமாக செயல்பட வேண்டும் என்றும் அதற்கான பொறுப்புகளை சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் பொறுப்பாளர்களாக இருக்கும் மாநில, மண்டல, மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் ஏற்க வேண்டும் என்றும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 5

(அ) துண்டறிக்கைப் பிரச்சாரம்
நமது கழகப் பிரச்சாரத்தில் துண்டறிக்கைகளை மக்க ளுக்கு வழங்குவது என்பது நீண்டகாலமாக இருந்துவரக்கூடிய - பயன் அளிக்கக்கூடிய எளிய திட்டமாகும். மூடப் பழக்கவழக்கங்களை, தோலுரித்து மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் தலைமைக் கழகம் வெளியிடும் துண்டறிக் கைகளைக் கழகத் தோழர்கள் கழக் கொடியுடன் கடை கடை யாக, வீடு வீடாகச் சென்று, பகுத்தறிவுப் பிரச்சாரப் பணியை மேற்கொள்வது என்றும், அதுபோலவே பகுத் தறிவுத் தகவல் பலகையைக் கிளைக் கழகம் தோறும் வைத்து, நாள்தோறும் புதுப்புது கருத்துகளை எழுதி விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கழகத் தோழர்களையும், பகுத்தறிவா ளர்களையும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
(ஆ) விடுதலை வாசகர் வட்டத்தை நகர்ப்புறங்களிலும், ஒன்றிய தலைநகரங்களிலும், குறிப்பாக பெரியார் படிப்ப கங்கள் உள்ள இடங்களிலும் கண்டிப்பாக நடத்திடத் தீர்மானிக்கப்படுகிறது.
(இ) புத்தகச் சந்தையை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 6


மாநிலக் கழகப் பொறுப்பாளர்கள் தலைமைக் 
கழகத்திற்கு 15 நாள்களுக்கு ஒருமுறை வருதல் மாநிலக் கழகப் பொறுப்பாளர்கள் 15 நாள்களுக்கு ஒருமுறை தொடர்ச்சியாக சென்னைத் தலைமைக் கழகத்தில் இரு நாள்கள் தங்கி தலைமையுடன் கலந்துரையாடி, அவ்வப்போது மேற்கொள்ளப்பட வேண்டிய கழகப் பணிகள், திட்டங்கள் கள நிலைமை குறித்து முடிவு செய்து செயல் படுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம்  7

திருச்சியில் நடைபெறும் கண்டனப் பொதுக்கூட்டத்திற்குப் பேராதரவு
தி.மு.க செயல் தலைவரும் தமிழ்நாடு சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் 4.9.2017 மாலை சென்னை அண்ணா அறிவால யத்தில் கூட்டிய பல்வேறு கட்சிகளின் கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு இச்செயற் குழு தனது முழுஆதரவினையும் தந்து வரவேற்கிறது. அதன்படி 8.9.2017 அன்று திருச்சியில் மத்திய - மாநில அரசின் சமூகநீதிக்கு எதிரான கண்டனப் பொதுக்கூட்டத்தில் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கட்சிக்கு அப்பாற்பட்ட முறையில் தமிழினப் பொதுமக்களை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
சமூகநீதி வரலாற்றில் ஒரு மைல்கல் போன்ற இந்தக் கண்டனக் கூட்டத்தின் வெற்றிக்கு எல்லா வகைகளிலும் ஒத்துழைப்பது என்றும் இச்செயற்குழு முடிவு செய்கிறது. கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக திரளுமாறும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 8

உலகநாத்திகர் மாநாட்டுக்கு ஆதரவும் - ஒத்துழைப்பும் தருதல்
திருச்சியில் 2018 ஜனவரியில் நடக்கவிருக்கும் உலக நாத்திகர் மாநாட்டை சீரும் சிறப்புமாக நடத்துவதற்கு அனைத்து ஒத்துழைப்பையும் அளித்து மகத்தான அளவில் வெற்றிப்பெறச் செய்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 9

பகுத்தறிவாளர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு கண்டனம்
கருநாடக மாநிலம் பெங்களூரில் முற்போக்கு எழுத்தாளர், ஊடகவியலாளர் கவுரி லங்கேஷ் அவர்கள் காவிகளால் படுகொலை செய்யப்பட்டதற்கு இச்செயற்குழு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
இதற்குமுன் மகாராட்டிர மாநிலத்தில் தபோல்கர், கோவிந்த்பன்சாரே, கருநாடாகாவில் கல்புர்கி ஆகிய பகுத்தறிவாளர்களும் தொடர்ந்து காவிகளால் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். மத்தியில் பிஜேபி ஆட்சி வந்த தற்குப் பிறகு பகுத்தறிவாளர்களுக்கும், முற்போக்காளர் களுக்கும் கடும் அச்சுறுத்தல், உயிருக்கு ஆபத்தும் நிகழ்ந்து வருகிறது. குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகளும் இது வரை வழங்கப்படவில்லை. பகுத்தறிவாளர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதற்கு  இது ஊக்கத்தையும், துணிச் சலையும் கொடுக்கிறது என்று இச்செயற்குழு குற்றஞ்சாட்டுகிறது.
எனவே -குற்றவாளிகள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனையைப் பெற்றுத் தருமாறு மத்திய - மாநில அரசுகளை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...