Saturday, September 9, 2017

அ.தி.மு.க. அரசு புத்திசாலித்தனமாக என்ன செய்ய வேண்டும்?

‘நீட்’ தேர்வு திணிப்பை எதிர்த்து நாடெங்கும் கிளர்ச்சிகள் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்து விட்டன. பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல, உயர்நிலைப்பள்ளி, மேல் நிலைப்பள்ளி இருபால் மாணவர்களும் புயம் தூக்கிப் புயல் எனப் புறப்பட்டு விட்டனர்.

1928முதல் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்து வந்த இடஒதுக்கீட்டு ஆணை ‘சுதந்திர’ இந்தியாவில் காவு கொடுக்கப்பட்டது. தந்தை பெரியார் 1925ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரசில் இருந்தபோதே பகிரங்கமாகவே அறிவித்தாரே - ‘பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் பிரச்சினைக்கு வெள்ளைக்காரர்கள் இந்தியாவில் ஆட்சியில் இருக்கும்போதே முடிவு கட்டப்பட வேண்டும்; இல்லையேல் ‘சுதந்திர’ இந்தியாவில் ஜனநாயகம் (DEMOCRACY) இருக்காது - மாறாக பார்ப்பனர் ஆதிபத்தியம்தான் (BRAHMINOCRACY) இருக்கும்' என்றாரே! அந்தத் தொலைநோக்கு  பிறர்க்கு சிந்தனைக்கு அசல் எடுத்துக்காட்டுத்தான் - இந்திய அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நிலையில் முதல் பலியாக தமிழ்நாட்டில் நடப்பில் இருந்த இடஒதுக்கீடு பலி கொடுக்கப்பட்டதாகும்.
தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த இடஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்பு வழங்கிய அந்தக்காலக்கட்டத்தில் தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடே எரிமலையாகச் சிலிர்த்து எழுந்தது.
மாணவர்கள் எல்லாம் கல்விக் கூடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுப் பாடினர் - நாடே முற்றிலுமாக முடங்கிப் போனது.
தமிழ்நாட்டின் உணர்வினை அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டி அவசர அவசரமாக இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் சட்டத் (15(4) திருத்தத்தைக் கொண்டு வந்தார். அப்பொழுது சட்ட அமைச்சராக இருந்த அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அதற்குப் பேராதரவாகவும், ஊன்றுகோலாகவும் இருந்தார்.
இன்றைக்கும் இதே நிலைதான் நிலவுகிறது. தமிழ்நாடு முழுவதும் சொல்லி வைத்தாற்போல போராட்டங்கள் பல வடிவங்களிலும் கனன்று விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
ஆசிரியர் ஒருவர் சமூக நீதிக்கு ஏற்பட்டு இருக்கும் ஆபத்தைச் சுட்டிக்காட்டி தனது எதிர்ப்பின், வெறுப்பின் அடையாளமாகத் தனது ஆசிரியர் பணியையே கால் கடுதாசியில் எழுதித் தூக்கி எறிந்து விட்டு வெளியேறியிருக்கிறார்.
உலகப் புகழ்ப் பெற்ற வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையையே புறக்கணித்து அறிவித்தும் விட்டது.
யாரும் யாரையும் தூண்டி தமிழ் மண்ணில் இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கவில்லை. தன்னெழுச்சியாக தாண்டவமாடுகிறது.
தமிழ்நாடு அரசுக்கு ‘நீட்’ ஒழிப்பில் உண்மையாகவே கவலையும், அக்கறையும் இருக்குமேயானால் என்ன செய்ய வேண்டும்?
தமிழ்நாட்டின் இந்தக் கொதி நிலையை எடுத்துக்காட்டி ‘நீட்’ டிலிருந்து நிரந்தரமாகத் தமிழ்நாட்டுக்கு விலக்களிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். அப்படிச் செய்வதுதான் புத்திசாலித்தனமான அணுகுமுறையாகவும் இருக்க முடியும்.
அதை விட்டு விட்டு,  போராட்டக் களத்தில் குதித்திருக்கும் மாணவர்களைக் கைது செய்து, குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு போய் வாகனங்களில் தூக்கி எறிவது - சுவரொட்டி அச்சிடும் அச்சகங்களை  அச்சுறுத்துவது, கைது செய்வது என்பதெல்லாம் தேவையானதுதானா? நெருப்பை அணைப்பதாகக் கூறி, பெட்ரோலை ஊற்றுவது புத்திசாலித்தனம் தானா? இது எதிர்வினையை உண்டாக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?
அண்ணாவின் பெயரை சுமந்து நிற்கும் அ.இ.அ.தி.மு.க. அரசு தமிழ் மண்ணுக்கே உரித்தான சமூக நீதிப்  பிரச்சினையில் - மண்ணின் மனப்பான்மைக்கு (ஷிளிமிலி றிஷிசீசிபிளிலிளிநிசீ) மாறாக போராட்டங்களை ஒடுக்க முயன்றால், பொதுமக்கள் மத்தியில், மேலும் மேலும்  மிகப்பெரிய  அளவில் அ.இ.அ.தி.மு.க. அரசின் மீது வெறுப்பு நெருப்பைத்தானே உமிழச்செய்யும்.
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் முக்கிய கட்சிகள் எல்லாம் ஒருங்கிணைந்து, இந்தப் பிரச்சினையில் அடுத்தடுத்துப்  பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.
இன்று திருச்சியில் திராவிடர் கழகத் தலைவர் தலைமையில் பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்கள் ‘நீட்’டை எதிர்த்துப் போர் முழக்கம் செய்கிறார்கள். இக்கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்தில் அடுத்தக்கட்ட போராட்ட அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில அரசு இந்த சூழலைப் பக்குவமாகப் பயன்படுத்திக் கொண்டு கரை ஏற வேண்டும்.

மத்திய பா.ஜ.க ஆட்சி என்ற அசல் பார்ப்பன மனுதர்ம ஆட்சி என்ன செய்யப் போகிறது? கழகம் இல்லாத ஆட்சியை உருவாக்குவோம் என்று உளறுபவர்கள் எல்லாம் ஊறுகாய் ஜாடியில் ஒளிய வேண்டிய நிலைதான் என்பதை இப்பொழுதாவது புரிந்து கொண்டால் சரி! 

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...