Saturday, December 17, 2016

நினைத்தது ஒன்று நடந்தது வேறொன்று!

‘‘நாட்டில் 45 கோடி மக்கள் தினக்கூலிகள். பால்காரர், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் (ஒரு நீண்ட பட்டியலே உண்டு) மத்திய அரசின் பண மதிப்பிழப்பு உத்தரவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
‘‘பண மதிப்பிழப்பு என்பது தொலைநோக்கு யோச னையே இன்றி எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை. உலகின் அனைத்துப் பெரிய பொருளாதார வல்லுநர்களும், பெரிய செய்தித்தாள்களும், இந்த நடவடிக்கையை விமர்சனம் செய்துள்ளன. பண மதிப்பிழப்பு உத்தரவைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி தனது உரையில், கருப்புப் பணத்தை ஒழிக்கப்போவதாக முழங்கினார். தற்போது  பணமற்ற பொருளாதாரம் என்ற வார்த்தை அவர் பேச்சில் இடம் பிடித்துள்ளது. கருப்புப் பணத்தை இந்த அறிவிப்பு ஒழிக்கவில்லை என்பதை அறிந்து கொண்ட மோடி, தனது பேச்சை பணமற்ற பொருளாதாரம் என்பதை நோக்கி நகர்த்தி விட்டார்.
பணமற்ற டிஜிட்டல் பொருளாதாரம் என்பது நல்லதே. ஆனால், அதை அவசர கதியில் செய்யக் கூடாது - முடியாது. இதற்கு உரிய கால அவகாசம் தர வேண்டும். பெரும்பாலான நகரங்களிலுள்ள அங்காடிப் பகுதிகள் தற்போது மூடப்பட்டு கிடக்கின்றன. வாரத்திற்கு ரூ.24,000 அளவுக்கு ரொக்கப் பணத்தை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்பது மத்திய அரசின் அறிவிப்பு. ஆனால், மக்களால் அந்த அளவுக்குப் பணத்தைப் பெற முடியவில்லை. எனக்கே கூட அந்த பணம் இன்னும் கிடைக்கவில்லை. எனவே கேள்வி எழுப்ப முழு சுதந்திரம் எனக்கு உள்ளது. ஏடிஎம் மய்யங்களுக்கு மோடி நேரில் சென்று மக்கள் படும் கஷ்டத்தை பார்க்க வேண்டும்‘’ என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் (13.12.2016) தெரிவித்துள்ளார்.
‘‘மத்திய அரசின் ரூபாய் நோட்டு ரத்து விவகாரம் என்பது ஒரு பொருளாதார அவசர நிலையை உரு வாக்குவது போன்ற சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டது. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ஒழித்துவிட்டு 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவது ஊழல்வாதிகளுக்கு வசதியாகப் போய்விடும். அவர்கள் குறுக்கு வழியில் தங்களின் ஊழல் பணத்தை பதுக்கி வைப்பதற்கு மோடி வசதி செய்து கொடுக்கிறார்.
இந்தியாவில் 83 விழுக்காடு புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளை ரத்து செய்யும் முன்பு இதனால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி சிந்திக்காமல் இப்படி ஒரு மோசமான நடவடிக்கையால் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் தங்களின் சிறிய சேமிப்பைக்கூட வங்கிகளிடம் கொடுத்துவிட்டு, செலவிற்குப் பணம் வாங்க வங்கி வாசலில் காத்துக் கிடக்கின்றனர்.  மோடி அரசியல் செய் வதற்காக நாட்டின் முக்கிய விவகாரங்களில் தலையிட்டு நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைக்கும் நடவடிக் கையில் ஈடுபட்டு வருகிறார்’’ என்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் (4.12.2016).
‘‘பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஒட்டுமொத்த நாடும் தற்போது வங்கிகளின் முன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஒரு சாராருக்கு மட்டுமே நன்மை விளைவிப்பதாக உள்ளது. இதன்மூலம் யாரோ ஆதாயம் பெறுகிறார்கள்’’ என்கிறார் ஜனதா தள தலைவர் சரத்யாதவ் (30.11.2016).
‘‘பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறி விக்கப்பட்டதில் பெரிய ஊழல் நடந்துள்ளது. மக்கள் பணம், 10 லட்சம் கோடி ரூபாய் வலுக்கட்டாயமாக, வங்கிகளில், ‘டெபாசிட்’ செய்ய வைக்கப்பட்டுள்ளது; அதேசமயம், கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன், தள்ளு படி செய்யப்படுகிறது. பிரதமர் மோடி, பணம் எடுக்க வரிசையில் நின்று, தேசபக்தியை காட்டும்படி கூறுகிறார்; ஆனால் வரிசையில் நின்று இறந்த, நூற்றுக்கும் மேற்பட் டோரின் உயிருக்கு யார் பொறுப்பு?’’ என்கிறார் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (17.11.2016).
இவர்கள் எல்லாம்கூட  ‘அரசியல்வாதிகள்’ என்று சொல்லலாம். ஆங்கில நாளேடான ‘எக்னாமிக்’ என்ன கூறுகிறது?
‘‘உலகின் ஊழலுக்கெல்லாம் முதன்மை ஊழல் மோடி கொண்டு வந்த ரூபாய் நோட்டின் ஒழிப்பின் மூலம் நடக் கப் போகிறது,
பணமில்லாப் பரிமாற்றம் என்பது இலவசமாக கொடுக்க முடியாது; பணமில்லா பரிமாற்றத்திற்கான மின்னணு கருவிகள், அதற்கான பராமரிப்பு சேவை கள், இணையதளம், மின்சாரம் போன்றவற்றை பயன்படுத்தினால் மட்டுமே பணமற்ற பரிமாற்றம் சாத்தி யமாகும். இது கூடுதல் சுமையாகி விடுகிறது. மேலும் இதை இலவசமாகக் கொடுக்க இயலாது.
உதாரணத்திற்கு 100 ரூபாய் நோட்டு 1,00,000 முறை கைமாறினாலும் அதன் மதிப்பு ரூ.100 ஆக மட்டுமே இருக்கும்.
இதே நேரத்தில் பணமில்லா பரிமாற்றத்தின்மூலம் ஒரு முறை 100 ரூபாய் நாம் செலுத்தினால் அதற்கான வரியாக 2.5 விழுக்காடு பெறப்படும். அதாவது 1.00,000 முறை 100 ரூபாய் பணமற்ற பரிமாற்றத்தின் மூலம் 2,50,000 ரூபாய் பரிமாற்றம் சேவைக் கட்டணமாக ஜியோ மணி, பேடைம் போன்ற பல்வேறு தனியார் நிறுவனங்களுக்குப் போகிறது,
அப்படி என்றால் நாடு முழுவதும் நடைபெறும் கோடிக் கணக்கான பணமில்லாப் பரிமாற்றம்மூலம் லட்சம் கோடிகள் தனியார் நிறுவனங்களால் கொள்ளையடிக்கப்படும். மோடியின் மிகவும் நவீன நுட்பமான இந்த ஊழல்தான் உலகின் ஊழலுக்கு எல்லாம் முதன்மையாக இருக்கப் போகிறது.’’ (‘எக்னாமிக்‘, 7.12.2016).
கருப்புப் பணத்தை ஒழிப்போம் என்று கூறி இப்பொழுது ரொக்கமற்ற பரிவர்த்தனை என்று ஏதேதோ நாளுக்கொன்று கூறி மிடறு விழுங்கித் தத்தளிக்கிறார் பிரதமர் மோடி.
இவ்வளவு சீக்கிரத்தில் இவ்வாட்சியின் சாயம் வெளுத்துப் போகும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
உப்புத் தின்றுள்ளார் பிரதமர் - அந்தளவுக்குத் தண்ணீர் குடித்துத் தானே தீரவேண்டும்.

Sunday, December 11, 2016

இந்து மதம் எங்கே சென்றாலும் துரத்தும் ஜாதி பிரிட்டனில் ஜாதி பாகுபாடு தடைச் சட்டம்!

லண்டன், டிச.11 இந்து மதம் எங்கே சென் றாலும் ஜாதியையும் பத்திரமாக எடுத்துச் செல்லும் நிலையில், இங்கிலாந்தில் ஜாதி பாகுபாட்டைத் தடுக்கும் தடைச் சட்டம் கொண்டுவரப்படுகிறது.
பிரிட்டனில் ஜாதி பாகுபாடு தடைச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. என்ன வியப்பாக இருக்கிறதா? பிரிட்டனில் ஜாதி இருக்கிறதா என்று கேள்வி கேட்டால், பிரிட்டனில் இந்தியர்கள் இருக்கிறார்களே என்பது பதிலாக வருகிறது. ஏற்கெனவே, வெள்ளையர், கருப்பர், இஸ்லாமியர் என இனப்பாகுபாடு நிலவும் பிரிட்டிஷ் சமூகத்தில் இன்று ஜாதியும் சேர்ந்து நிற்கிறது.
ஏற்கெனவே,அய்.நா.சபையின்வழி காட்டலின்படி, 2010 ஆம் ஆண்டில் பிரிட்டன் சமத்துவச் சட்டம் (Equality Act) இயற்றப்பட்டது. ஆனால், இச்சட்டம் மதங் களுக்கிடையிலான பாகுபாட்டினை தடை செய்வதற்கு போதுமானதாக இருந்தாலும், மதங்களில் உள்ளுறைந்து நிற்கும் ஜாதி களுக்கிடையிலான பாகுபாட்டினைத் தடை செய்வதற்கும், மீறல்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் போதுமானதாக இல்லை.
இத்தகைய நிலையிலிருந்தே இன்று அதற்கான ஒரு துணைச் சட்டம் தேவைப் படுகிறது என விவாதம் தொடங்கியிருக்கிறது. இது இந்தியர்களை மய்யப்படுத்தி வர விருக்கும் சட்டம் எனக் கூறப்படுகிறது. சிறுபான்மையினராக இருப்பினும், இந்திய தலித் வம்சாவளியினர் இந்து, கிறிஸ்தவ, சீக்கிய மதங்களில் ஒரு கணிசமான பகுதி யினர் பிரிட்டனில் இருக்கின்றனர்.
அய்.நா. கூறியும்...
இவர்களுக்கு எதிரான பாகுபாடுகள் சமூக அளவில் பரவிக் கிடக்கின்றன. எனவேதான் இச்சட்டம் அங்கே தேவைப்படுகிறது. கல்வி யில், வேலைவாய்ப்பில், மருத்துவ சேவை பெறுவதில் என பல வகையிலும் அரசு அதிகாரிகள் மட்டத்தில், பல பாகுபாடுகள் உள்ளன. அரசுத் துறையில், ஓரளவில் சட்டம் இல்லாமலேயே சமாளிக்க முடியும். எனினும், தனியார்த் துறையினை இவ்விஷயத்தில் கட்டுப்படுத்த சட்டம் தேவை என்பது அரசுத் தரப்பு வாதம். அய்.நா. சபையின் வழிகாட்டலுக்குப் பின்னரும் நீண்ட நாள் அதைக் கண்டு கொள்ளாதிருந்த பிரிட்டிஷ் அரசு, இப்போது அது குறித்த வாதத்தினைத் தொடங்கி இருக்கிறது.
இயல்பாகவே, அத்தகைய சட்டம் தேவை இல்லை என்ற குரலும் அங்கு இப்போது எழும்பியிருக்கிறது. சிவில் உரிமை பாதுகாப்புச் சட்டம், (Protection of Civil Rights) எஸ்.சி / எஸ்.டி மக்கள் மீதான வன்கொடுமை தடைச் சட்டம் போன்ற சட்டங்கள் இந்தியாவில் வந்த போது, அவற்றிற்கெதிராக, இங்கு என்ன வாதங்கள் எல்லாம் முன்வைக்கப்பட்டனவோ, ஏறக் குறைய அதே போன்ற வாதங்கள் அங்கேயும் முன் வைக்கப்படுகின்றன.
அத்தகைய பாகுபாடுகள் எதுவும் இல்லை என சிலர் அடித்துக் கூறி வருகின்றனர். இந்தச் சட்டத்திற்கு ஆதரவாகப் பேசியிருக்கும் லண்டனைச் சேர்ந்த நடிகரும், சமூக ஆர்வலருமான சவுந்தேவன் அபராந்தி என்ன கூறுகிறார்:
‘இந்தியர்களில், ஒரு குறிப்பிட்ட கீழ் நிலை ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால், அவருடைய இல்ல நிகழ்ச்சிகளுக்கு அரங்கங்கள் மறுக்கப்படுகின்றன;  இதே போன்று ஒரு மூதாட்டிக்கு இதே ஜாதி பாகுபாடு அடிப்படையில் மருத்துவ சேவை மறுக்கப்பட்டிருக்கிறது. இந்தியர்களின் பூர் வீகத்தை எப்பாடுபட்டாவது கண்டுபிடித்து விடுகிறார்களாம்.’
இந்தியாவைப் போலவே....
இந்தியாவில், சில கீழ்நிலை வேலை களில் சில குறிப்பிட்ட ஜாதியினர் ஈடுபடுத் தப்படுவதால், உருவான மேல்-கீழ் ஜாதி மனநிலை பிரிட்டன் போன்ற நவீன சமூகத்திற்குள் நுழைந்த பின்னரும் சில இந்தியர்களிடம் தொடர்வது குறித்து பிரிட்டிஷ் சமூக ஆர்வலர்கள்  தங்களது  அதிர்ச்சியைத்  தெரிவித்திருக்கின்றனர்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஜார்ஜ் குன்னத் கூறும் போது,
‘‘பிரிட்டனில் ஜாதி பாகுபாடு நிச்சயம் இருக்கிறது. அது பல வடிவங்களில் இருக் கிறது. இந்தச் சட்டத்திற்கு ஆதரவான பிரச்சாரம், மதங்களுக்கு எதிரானது அல்ல.
மாறாக அது, சுதந்திரம் மற்றும் கவுரவமான வாழ்க்கைக்கான தலித் மக்களின் போராட்டம் குறித்தது’’ என குறிப்பிட்டிருக்கிறார்.
ஜாதி என்பதை இனம் குறித்த அம்ச மாகவே பார்க்க வேண்டும் என்பது அய்.நா. சபை விவாதங்களில் வெளிப்பட்ட கருத்து. ஜாதிப் பாகுபாடு என்பது. மனித உரிமை மீறல். இதுவே, பிரிட்டனில் உள்ள சமூக ஆர்வலர்களின் நிலைப்பாடும் கூட. உலகமயம் என்றெல்லாம் நவீனம் பேசினாலும், தங்களது பொருளியல் வாழ்க் கையில் முன்னேறிச் செல்ல வேண்டும் என விழைந்தாலும், சமூக வாழ்க்கையில் என்னவோ சிலருக்கு மனது பின்னோக்கிச் செல்லவே விரும்புகிறது.

Saturday, December 10, 2016

யோக்கியப் பொறுப்புடன் சிந்திக்கட்டும்!

வரும் 12 ஆம் தேதியன்று திருவண்ணாமலையில் மகாதீபமாம். அன்று அண்ணாமலையார் கோவிலில் தீபத் திருவிழாவாம். அப்படியென்றால் என்ன?
2668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் 200 கிலோ செப்புத் தகட்டில் தயார் செய்யப்பட்ட ஒரு கொப்பரையில் 3,500 கிலோ நெய் ஊற்றப்பட்டு தீபம் ஏற்றப்படும் - இதுதான் மகாதீபம் என்று சொல்லப்படுவது.
இது ஓர் இந்து மதப் பண்டிகை. அந்தப் பண்டிகையின் தாத்பரியம் என்ன?
இந்த மூடப்பண்டிகைக்கு 2 கதைகள் உள்ளன.
ஒரு சமயம் அக்னிதேவன் என்னும் கடவுள் சப்த ரிஷி களின் மனைவிமார்களைப் பார்த்து மோகங்கொண்டானாம். அதனை அறிந்து அவனது மனைவி சுவாகாதேவி  என்பவள், அவர்களுடன் தன் கணவன் மோகங்கொண்டதால், சப்த ரிஷிகள் சபித்துவிடுவார்கள் என்று எண்ணிப் பயந்து, அதனால் தானே வசிஷ்டரின் மனைவி அருந்ததியை விட்டு விட்டு, மற்ற ஆறு ரிஷிகளின் மனைவிமார்களைப் போல் உருவம் கொண்டு, தன் கணவன் ஆவலை நிறைவேற்றினாளாம். இவ்வாறு சுவாகாதேவி கொண்ட ஆறு உருவத்திற்கும் கார்த்திகை என்று பெயராம். இவைகள் தாம் கார்த்திகை நட்சத்திரமாகக் காணப்படுபவையாம். இந்த நட்சத்திரப் பெண்கள்தான் சுப்பிரமணியன் என்ற கடவுள் குழந்தையாக இருந்த போது அதை எடுத்து வளர்த்தார்களாம்!
அடுத்து, இதன்மூலம் அறிவது, பிறர் மனைவிமேல் ஆசைப் படுவது, விபச்சாரம் செய்வது குற்றம் இல்லை. தன் கணவன் எந்தக் காரியத்தை விரும்பினாலும் அதைப் பூர்த்தி செய்து கொடுக்கும் அடிமைகளாக மனைவி இருக்க வேண்டும் என்பது!
இவ்வாறு நம் மக்களுக்கு கற்பிக்கும் மூடநம்பிக்கையைப் பாருங்கள்.
அடுத்த கதை.
ஒரு சமயம் பிரம்மா , விஷ்ணு ஆகிய இரண்டு கடவுள்கள் ஒவ்வெருவரும் முழுமுதற்கடவுள் தாம், தாமே என்று கூறிக் கொண்டதனால், இருவருக்கும் வாய்ச்சண்டை ஏற்பட்டு பிறகு அடிபிடிச்சண்டை ஆகிவிட்டதாம் . இதைக் கண்ட பரமசிவன் எனும் கடவுள், வானத்திற்கும், பூமிக்குமாக ஒரு பெரிய ஜோதி உருவில் அவர்கள் இருவருக்கும் இடையில் நின்றானாம். சண்டை போட்டுக்கொண்டு இருந்த இருவரும் திகைத்து நிற்க உடனே பரமசிவன் தோன்றி இந்த ஜோதியின் அடிமுடிகளை யார் முதலில் கண்டு வருகின்றார்களோ அவர் தான் ‘பெரியவர்’ என்றானாம்.
உடனே விஷ்ணு பன்றி உருவம் கொண்டு பூமிக்குள் துளைத்துக் கொண்டு வெகுதூரம் சென்று காணமுடியாமல் திரும்பிவிட்டானாம்.
பிரம்மன் அன்னப்பறவை வடிவம் கொண்டு ஜோதியின் முடியைக் காண மேலே பறந்து சென்று கொண்டு இருக்கையில், கீழ் நோக்கி ஒரு தாழம்பூ வந்துகொண்டு இருந்ததாம். அதைக் கண்டு பிரம்மன், ‘தாழம்பூவே எங்கிருந்து, எவ்வளவு காலமாய் வருகின்றாய்;’ என்று கேட்கவும், ‘நான் பரமசிவன் முடியில் இருந்து கோடிக்கணக்கான வருஷங்களாக வந்து கொண்டு இருக்கின்றேன்’ என்றதாம். உடனே பிரம்மன், ‘நான் சிவன் முடியைப் பார்த்துவிட்டதாக சாட்சி கூறுகின்றாயா?’ என்று கெஞ்சினானாம். அதற்குத் தாழம்பூ சம்மதித்ததாம். இதைக் கண்ட சிவன் கோபங்கொண்டு ‘‘பொய் சொன்னதற்காக பிரம்மனுக்கு இவ்வுலகில் கோவில் இல்லாமல் போகக் கடவது’’ என்றும், ‘‘தாழம்பூ இனிமேல் பூஜைக்கு உதவாமல் போகக்கடவது’’ என்றும் சாபமிட்டாராம்.
உடனே பிரம்மாவும், விஷ்ணுவும் வருந்தி - திருந்தி சிவன்தான் பெரியவன் என்பதை உணர்ந்து, மன்னிப்புக் கேட்டுக்கொண்டு,  தங்கள் வழக்கைத் தீர்த்து வைத்ததற்கு அடையாளமாக, ‘‘இம் மலையின் மேல் ஒரு ஜோதி உருவாகி இருக்கவேண்டும்‘’ என்று கேட்க, அதற்குச் சிவனும் சம்மதம் தெரிவித்து, ‘‘ஒவ்வொரு வருடமும் கார்த்திகைப் பண்டிகையில் இந்த மலையில் ஜோதி யாய்க் காணப்படுவேன்’’ என்று சொன்னானாம். இதுதான் திரு வண்ணாமலைப் புராணமாகிய அருணாசலப் புராணத்தில் கூறப்படும் கார்த்திகைத் தீபப் பண்டிகையாம்.
இதுதான் இந்த தீபப் பண்டிகையின் புராணக் கதையாகும்.
இதில் அறிவுக்குப் பொருந்தக்கூடியது ஏதாவது இருக்கிறதா? ஒழுக்கத்துக்கு உகந்ததாகத்தான் இருக்கிறதா?
முதல் கதையில் அக்னி தேவன் என்னும் கடவுள் ரிஷி களின் மனைவிகள்மீது மோகங்கொண்டான் என்பது எத்தகைய கேவலம்! அக்னி தேவனின் மனைவி சுவாகாதேவி தன் கணவனின் மோகத்தைத் தீர்க்க எவ்வளவுக் கேவலமாக நடந்து கொண்டுள்ளாள்? இப்பொழுது ஒரு பெண் இப்படி நடந்துகொண்டால் அறிவும், ஒழுக்கமும் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
தன் கணவனின் காமவெறியைத் தீர்க்க ரிஷிப் பத்தினிகள் ஆறு பேர் உருவங்கொண்டாள் என்று கூறப்படுகிறது அல்லவா - அந்த உருவத்தில் உள்ளவர்களுக்குக் கார்த்திகை  என்று பெயராம்.
இவைதான் கார்த்திகை நட்சத்திரங்களாக வானில் இருக்கின்ற னவாம். (இந்த விஞ்ஞான யுகத்தில் கடுகளவு புத்தி யுள்ளவர்கள்கூட இதனை ஏற்றுக்கொள்வார்களா?
இந்தக் கார்த்திகைப் பெண்களுக்காகத்தான் இந்தக் கார்த்திகை தீபமாம்!
இரண்டாவது கதை - இதைவிட வெகு கேவலமானது. படைத்தல் கடவுள் என்று சொல்லப்படும் பிரம்மா பொய் சொன்ன தற்காக ஒரு பண்டிகை கொண்டாடப்பட வேண்டுமா?
இந்தக் கதையை சைவர்கள் ஏற்றுக்கொள்வார்களே தவிர, வைணவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
பிரம்மா, விஷ்ணுவைவிட சிவன்தான் பெரிய கடவுள், சக்தியுள்ள கடவுள் என்பதை வைணவர்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளவே மாட்டார்களே!
மூடத்தனமும், ஒழுக்கக்கேடும் நிறைந்த கதைகளைக் கற்பித்து புராணக் குப்பைகளாக ஏதோ ஒரு காலத்தில் எழுதினார்கள் என்றால், விஞ்ஞானம் வளர்ந்த இந்தக் காலகட்டத்திலும் அவற்றையெல்லாம் கட்டிக்கொண்டு மாரடிக்கவேண்டுமா?
இந்தக் கேவலத்துக்காக 3,500 கிலோ நெய்யை நெருப்பில் கொட்டி எரித்துத் தீபம் என்று கூறி மக்களைக் கூட்டி, அவர் களின் காலத்தையும், பொருளையும், புத்தியையும் நாசப்படுத்தவேண்டுமா?
இந்தியா முழுமையும் 14.5 மில்லியன் குழந்தைகள் ஊட்டச் சத்துக் குறைவால் வளர்ச்சி அடையாமலும், உயரமாக வளர முடியாமலும் உள்ளனர். ஆறு மாதங்களுக்கும் குறைவாக தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் 46 விழுக்காட்டிலிருந்து 72 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு பன்னாட்டு சுகாதார அமைப்பின் இலக்கை எட்டுவதில் பெரும் அறைகூவல் காத்திருக்கிறது என்று உலக வங்கி அறிக்கை கூறுகிறது!
இத்தகு நாட்டில் 3,500 கிலோ நெய் நெருப்பில் ஊற்றப்படுவது ஒரு பக்கம்; இன்னொரு பக்கம் ஒழுக்கக்கேடுகளை பக்தியின் பெயரால் மக்களிடம் ஊட்டுகிறது.
யோக்கியப் பொறுப்புடன் யாரும்  இதை சிந்திக்கட்டும்!
அறிவார்ந்த நல்ல முடிவுக்கு வரட்டும் - வரட்டும்!

திருமணம் தனிப்பட்ட உரிமை - மதத்திற்கு என்ன வேலை?

த்திய தேர்வாணையத்தின் பணியாளர் தேர்வில் அய்.ஏ.எஸ். தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றவரான தினா தாபி, அதே தேர்வில் இரண்டாமிடம் பெற்றவரான அத்தார் ஆமிர் உல் ஷஃபி கான் என்பவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அண்மையில் முகநூலில் அறிவித்தார்.
மத வேறுபாடுகளைக் காரணமாகக் கூறி, திரு மணத்தை நிறுத்தவேண்டும் அல்லது முசுலீம் மதத்தி லிருந்து அத்தார் ஆமிர் உல் ஷஃபி கான் மதம் மாற வேண்டும் என்று தினா தாபியின் பெற்றோருக்கு   அகில பாரதிய இந்து  மகா சபா எனும் அமைப்பின் சார்பில் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தினா தாபியின் தந்தை ஜஸ்வந்த் தாபிக்கு அகில பாரதிய இந்து மகா சபாவின் தேசியப் பொதுச் செயலாளர் முன்னா குமார் சர்மா எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
“இந்த முடிவின் மூலமாக உங்கள் குடும்பம் Ôலவ் ஜிகாத்Õதை ஊக்கப்படுத்துவதாக ஆகிவிடும். ஆகவே, எந்தவகையிலும் இந்த திருமணம் நடைபெறக்கூடாது.  இருப்பினும் அவ்விருவரும் திருமணம் செய்து கொள் வதில் உறுதியாக இருந்தார்கள் என்றால்,  ஷஃபி கான் (கர் வாப்சி - தாய்மதம் திரும்புதல்) மதம் மாற வேண்டும். அதற்கு ஷஃபி கான் ஒப்புக்கொண்டால்   மட்டுமே திருமணம் நடைபெறலாம். அப்படி மதம் மாறுவது அல்லது Ôகர் வாப்சிÕக்கு எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் (இந்து மகா சபா) உதவியாக இருப்போம்.
2015 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பெற்று தேர்ச்சி பெற்று தினா சாதனை படைத்துள்ளார். அதற்கு நாங்கள் எல்லோரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம். ஆனால், ஷஃபி கானை  திருமணம் செய்து கொள்வதாக அவர் எடுத்துள்ள முடிவு எங்களுக்கு தெரியவந்தபோது, எங்கள் எல்லோருக்கும் அதிர்ச்சியாகவும், வருத்தமளிப்பதாகவும் இருக்கிறது.
முசுலீம்கள் லவ் ஜிகாத் என்பதை அதிக அளவில் ஊக்கப்படுத்தி வருகிறார்கள் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்துப் பெண்களை அவர்களிடம் காதலில் விழச் செய்து, அப்பெண்களை திருமணம் செய்வதன்மூலமாக முசுலீமாக மதமாற்றம் செய்கிறார்கள்.
ஆனால், தினா தாபி மற்றும் ஷஃபி கான் இரு வருக்கும் திருமணம் செய்துகொள்வது முக்கியமாக இருந்தால், கான் முதலில் Ôகர்வாப்சிÕ (மதமாற்றம்) செய்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்’’ என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் தினா தன்னுடைய முகநூலில் அத்தாரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறி வித்தார் இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து சமூக வலை தளங்களில் விஷமப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மே மாதத்தில் தினா, அத்தார் சந்தித்தார்கள்.  அன்றிலிருந்துதங்களுக்குள்கருத்துகளைதொடர்ந்து பரிமாறிவருகின்றனர்.முதலில்அத்தார்காதல் வயப்பட்டார். பழகியபின்னர் தாபி சில மாதங் களுக்குப் பின்னர், தம்முடைய உணர்வுகளை வெளிப் படுத்தியுள்ளார்.
சமூக வலை தளமான முகநூலில் தினா தாபி தங்களின் நிலைப்பாடுகுறித்து குறிப்பிடும்போது, தெளிவாகவே அவரவர் நம்பிக்கைகளுக்கேற்ப எங்களிடையே உள்ள உறவு தொடரும் என்றும், எவரும் மதம் மாறப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர சிந்தனையுள்ள, சுதந்திரமான பெண்ணாக, எதுவாக இருந்தாலும் என்னுடைய முடிவுதான். ஆமீரை எனக்குரிய வகையில் தேர்வு செய்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். எங்களின் பெற் றோர்களும் மகிழ்ச்சியுடன் உள்ளனர். ஆனால், ஒரு மதத்தவர் மற்றொரு மதத்தவருடன் கருத்துகளை பரிமாறிக்கொள்ளும்போது, இதுபோன்ற  அற்பமான சக்திகள் எப்போதுமே எதிர்மறை கருத்துகளை பரப்பி வருவார்கள் என்று தாபி, தன் முகநூலில் தெளிவுபட குறிப்பிட்டுள்ளார்.
திருமணம் என்பது தனிப்பட்டவர் உரிமை. குறிப் பிட்ட வயதை எட்டியவர்கள் தங்கள் திருமணத்தை அவர்களே முடிவு செய்துகொள்ளலாம். இதில் மதம் எங்கே இருந்து வந்தது?
‘லவ் ஜிகாத்’ என்ற ஒன்றை உருவாக்கியுள்ளனர். சிறுபான்மை மக்களை எப்படியெல்லாம் சிறுமைப் படுத்தலாம் என்பதற்கு இந்துத்துவாவாதிகள் புதிது புதிதாக வண்ண வண்ணமாக ‘ஆய்வு’ செய்து அவ் வப்போது சில மதவெறித்தன கரடிகளைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள்.
மதத்தை வைத்து திருமண உரிமையில் புகுந்து விளையாடுவதைப் போலவே, சிலர் ஜாதியை வைத்தும் அரசியல் நடத்திடத் துடிக்கிறார்கள்.
இந்தப் பிற்போக்குத்தன வலையில் இருபால் இளை ஞர்களும் சிக்கிக் கொள்ளாமல், சுதந்திர சிந்தனையோடு தங்கள் வாழ்வின் எதிர்காலத்தை முடிவு செய்யட்டும்!
இளைஞர்கள் மத்தியில் முற்போக்குச் சிந்தனை முகிழ்த்து வெடிக்கட்டும்!

ஊளையிட்ட நரிகள் எங்கே பதுங்கின?

5.5 லட்சம் கோடிக்கு ஸ்பெக்ட்ரம் விற்பனையை இலக்காக வைத்த மோடி அரசுக்கு கிடைத்தது 65,789 கோடிதான். இதன்மூலம் அரசுக்கு மூன்றேமுக்கால் லட்சம்  கோடிகள் இழப்பு ஏற்பட்டுள்ளது.
2ஜி வாதத்தின்படி 1,80,000 கோடி இழப்பு, ஊழல் என்றால் 3,75,000 கோடிகள் இழப்பும் ஊழல்தானே?
2016-17 ஆம் ஆண்டிற்கான ஸ்பெக்ட்ரம் ஏலம் பல்வேறு மூடநம்பிக்கைகளின் காரணமாக அரசே தேதியைத் தள்ளிப்போட்டு வந்தது. இந்த நிலையில் அக்டோபர் ஒன்றாம் தேதி விஜய தசமியன்று விஜய முகூர்த்த்தில் துவங்கப்பட்டது.
1,800 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசை அலைகற்றைக் கான அடிப்படை ஏலத் தொகை ரூ.2,873 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 900 மெகாஹெர்ட்சுக்கு ரூ.3,341 கோடியாகவும், 800 மெகாஹெர்ட்சுக்கு ரூ.5,819 கோடியாகவும், 2,00 மெகாஹெர்ட்சுக்கு ரூ.2,100 கோடி யாகவும், 700 மெகாஹெர்ட்சுக்கு ரூ.11,485 கோடியாகவும், 2,300 மெகாஹெர்ட்சு மற்றும் 2,500 மெகாஹெர்ட்சு அலைவரிசை அலைக்கற்றைக்கு தலா ரூ.817 கோடி யாகவும் அடிப்படை ஏலத் தொகை நிர்ணயம் செய் யப்பட்டுள்ளது. மொத்தம் 2354.55 மெகா ஹெர்ட்சு செல்போன் அலைவரிசைகள் அனைத்து அலைவெண் பட்டைகளிலும் ஏலம் விடப்பட்டது.
இந்த ஏலத்தில்  ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன், அய்டியா செல்லுலர் மற்றும் பார்தி ஏர்டெல், டாடா டெலிசர்வீஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஏர்செல் ஆகிய நிறுவனங்களும் அலைக்கற்றை ஏலத் துக்கான போட்டியில் கலந்து கொண்டன.
இந்த ஏலத்தின் மூலமாக, இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்குப் பெருந்தொகையாக 5 லட்சத்து 66 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டுவோம் என்று கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அருண் ஜெட்லி அறிவித்தார். மோடியும் தனது பொதுக்கூட்டங்களில் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் கோடிகளை அரசு லாபமாகப் பெறும் என்று கூறிக்கொண்டு இருந்தார்.
ஆனால், மத்திய அரசு நிர்ணயித்த தொகையில் ஏலம் எடுக்க, எந்த நிறுவனமும் முன்வரவில்லை. இதனால் தொடர்ந்து ஏலத் தொகையைக் குறைத்து ஏலம் விடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
மத்திய அரசுக்கு, வெறும் 67 ஆயிரம் கோடி ரூபாய் தான் கிடைத்துள்ளது;  இது மிகபெரும் இழப்பாகும்.  அரசு நிர்ணயித்த இலக்கைவிட பல மடங்கு குறைவாக விலைக்குப் போனது. இதனால் அரசுக்கும் 3,75,000 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. யுபிஏ அரசின் காலத்திலும் இதே போன்ற இழப்பு ஏற்பட்டது. ஆனால் அந்த இழப்பை ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று பெயர் சூட்டிய அப்போது எதிர்கட்சியாக இருந்த இதே பாஜக தற்போது ஆளும் கட்சியாக உள்ளது, இம்முறை ஏற்பட்ட  இழப்பும் ஊழலாகவே கருதப்படுமா?
மத்திய அரசுக்குக்கு ஏற்பட்ட மிகப்பெரும் இழப்பு குறித்து கருத்து தெரிவித்த தொலைத்தொடர்பு துறை செயலாளர் ஜே.எஸ்.மிஸ்ரா கூறியதாவது, “மத்திய அரசு மிகப் பெரிய அளவில் மிகச் சிறந்த ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை விற்பனை செய்கிறது. அதனால் விலை அதிகமாக நிர்ணயிக்கவேண்டியுள்ளது. ஏலம் குறித்த கலந்துரையாடல் கூட்டத்தில்  அனைத்து நிறுவனங்களும் கலந்து கொண்டன’’ என்று கூறினார். “இருப்பினும் நாங்கள் திட்டமிட்டபடி வருவாய் இலக்கை அடையமுடியவில்லை;மிகப்பெரிய அளவில் தற்போதுதான் அலைவரிசை ஏலம் விடப்படுகிறது. இந்த அலைவரிசை மூலம் தொலைத் தொடர்பு சேவை மேம்படுவதுடன், தொலைத் தொடர்பு சேவை இடை இடையே பாதிக்கும் பிரச்சினைகளும் இருக்காது’’ என்றும் கூறினார்.
ஏலத் தொகை பற்றி அய்டியா செல்லுலார் நிறு வனத்தின் நிதி ஆலோசகர் அக்ஷயா முந்திரா கருத்து தெரிவித்தபோது “ஏலத்தொகை மிகவும் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் ஏலம் கேட்க உரிமை கோரிய நிறுவனங்கள் மீண்டும் தங்களது பொருளாதார ஆலோசனைக்குழுவைக் கூட்டி முடிவு செய்ய வேண்டியிருக்கும். இதனால் ஏலத்திலிருந்து விலக நேரிடும் சூழல் உருவாகிறது. ஏலத்தொகையை உயர்த்தியதன் மூலம் சில நிறுவனங்கள் லாபம் பெறும்; அரசு நிர்ணயித்த வருவாய் இலக்கை எட்ட முடியாது’’ என்று கூறினார்.
அரசுக்கு ஏற்பட்ட இந்தப் பெரிய அளவிலான இழப்பு குறித்து தொலைத்தொடர்புத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்தாவது, “மத்திய அரசு ஆரம்பத்திலிருந்தே ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு மட்டுமே ஆதரவாக செயல்பட்டது, பொதுவாக ஏலத்தொகை அதிகம் நிர்ணயிக்கும்போது பல்வேறு நிறுவனங்கள் துவக்கக் கட்ட ஏலத்திலேயே வெளியேறிவிடுகின்றன. இந்த வெற்றிடத்தைப் பயன்படுத்தி அரசு தனக்குசாதகமான நிறுவனத்திற்கு ஏலம் கொடுத்து விடுகிறது’’ என்று தெரிவித்தனர்.
பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் இலட்சியமெல்லாம் தனியார் தொப் பையை வளர்ப்பதே!
2ஜி ஊழல் என்று ஊளையிட்ட நரிகள் இப்பொழுது எங்கே பதுங்கினவாம்?

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைத்திடுக! மத்திய அரசுக்கு தமிழர் தலைவர் வற்புறுத்தல்

உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம்
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைத்திடுக!
மத்திய அரசுக்கு தமிழர் தலைவர் வற்புறுத்தல்
காவிரி நதிநீர்ப் பிரச்சினை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பினை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கியமான தீர்ப்பினை இன்று அளித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன்? என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது.
அதற்கு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக, மத்திய அரசின் தலைமை வழக்குரைஞரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி பதிலளித்தார்.
இதையடுத்து, அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும், அதற்கு முன்னதாக மேலாண்மை வாரியத்திற்கான ஒருங்கிணைப்பாளரை அறிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
காவிரி பாசனப் பகுதி மாநிலங்களான தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள், அக்டோபர் ஒன்றாம் தேதி மாலை ஆறு மணிக்குள், காவிரி மேலாண்மை வாரியத்தில் இடம்பெறும் தங்கள் மாநிலப் பிரதிநிதிகளின் பட்டியலை நீர்வளத்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்; அதைத் தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியத்தில் இடம்பெறும் உறுப்பினர்கள் அக்டோபர் 4 ஆம் தேதி கர்நாடக மாநிலத்திலும், 5 ஆம் தேதி தமிழகத்திலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அணைகளின் நிலவரங்களை ஆய்வு செய்து, அதுதொடர்பான அறிக்கைகளை அக்டோபர் 6 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.
செப்டம்பர் 30 ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட மத்திய அரசின் வழக்குரைஞர், மூன்று நாள்களுக்குள் அக்டோபர் 3 ஆம் தேதி - இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது என்று மத்திய அரசு முந்தைய நிலையிலிருந்து முரண்பாடான முடிவை எடுத்து, அதனை உச்சநீதிமன்றத்திலும் தெரிவித்தது. அது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் - காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்கு மேலான மேல்முறையீட்டினை விசாரிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு உண்டு என்று தெளிவாக திட்டவட்டமாக இன்று கூறிவிட்டது. இதனை திராவிடர் கழகம் வரவேற்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்டப்படி இப்பிரச்சினையில் உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு என்று திராவிடர் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது என்பதையும் நினைவூட்டுகிறோம்.
மேலும், காலத்தை வீணடிக்காமல் மத்திய அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

கி.வீரமணி    
தலைவர்,     திராவிடர் கழகம்..

சென்னை
9.12.2016

Thursday, December 8, 2016

அ.இ.அ.தி.மு.க.வுக்குள் பிளவை உண்டாக்கிட முயற்சிக்கும் ‘‘ஆரிய சக்திகளிடம்'' எச்சரிக்கையுடன் இருப்பீர்!

அ.இ.அ.தி.மு.க. சகோதரர்களே!

அ.இ.அ.தி.மு.க.வுக்குள் பிளவை உண்டாக்கிட முயற்சிக்கும் ‘‘ஆரிய சக்திகளிடம்'' எச்சரிக்கையுடன் இருப்பீர்!




 அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலா ளரும்,முதலமைச்சருமானசெல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் மறைந்து மூன்று நாள்களே ஆன நிலையில், அக்கட்சிக்குள்ளும், ஆட்சி அமைப்புக்குள் ளும் பிளவுகளை ஏற்படுத்திட, குழம் பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்ற திட்டத்துடன் ‘‘ஆரிய சக்திகள்’’ தூண்டிலைத் தூக்கிக்கொண்டு திரியும் நிலையில், இந்தக் கட்டுரை - அறிக்கை மிகவும் முக்கியமானது - ஊன்றிப் படியுங்கள் - படியுங்கள்!)

மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள்  உடல் அடக்கம் நிகழ்ந்து இன்னும் அந்த ஈரம் கூட காயவில்லை; அதற்குள் ஆரிய விஷப் பாம்புகளின் சீற்றம் ஆரம்பமாகிவிட்டது - ஆங்கில ஏடுகளின் வாயிலாக!

‘‘சிண்டு முடிந்திடுவோய் போற்றி!’’

அறிஞர் அண்ணா கூறிய,  ‘‘சிண்டு முடிந்திடுவோய் போற்றி’’ என்ற அனுபவ மொழிப்படி, அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய பொறுப்பாளர்களிடையே பிளவை வலிந்து உண்டாக்கி, இடையே புகுந்து,   நூல் பிளந்து  பார்க்கும் முயற்சியில் ஈடுபடத் துவங்கிவிட்டனர்.

சுமூகமாகவே புதிய அமைச்சரவை - அரசியல் சட்டக் கடமைப்படி பதவியேற்று விட்டது - திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களை முதலமைச்சராகக் கொண்டு; பழைய அமைச்சர்கள் மீண்டும் அமைச்சர்களாகி விட்டனர்.

கலகம் உண்டாக்கிட முயற்சி!

அவர்கள்மூலமோ அல்லது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க் கள் மூலமோ எந்த அதிருப்திக் குரலும் கிளம்பாத நிலையில்,  அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவி இன்னமும் நிரப்பப்படாத சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, பல்வேறு கலகங்களை உருவாக்கிட, கட்டுக் கோப்பான அக்கட்சியினை  ஜாதி அடிப்படையில் பிரித்தாள தங்களது பேனாக்கள்மூலம் ‘துவஜா ரோகணம்‘ செய்யத் தொடங்கிவிட்டனர்!

‘பார்ப்பனத் தலைமை ஆட்சி பறிபோய்விட்டதே!’

பார்ப்பனத் தலைமையிலான ஆட்சி வரும் வாய்ப்பு இப்படிப் பறிபோய்விட்டதே என்பதால், ஜெயலலிதாவின் நிழலாக இறுதிவரை இருந்து, மெய்க்காப்பாளராக, சேவகியாக, சிறந்த பாசம் காட்டிய தங்கையாகவே வாழ்ந்து, அந்த அம்மையாரின் கஷ்டங்கள், சிறைவாசங்களில் பங்கேற்ற திருமதி சசிகலாவைப்பற்றி தேவையில்லாமல் பெரும் ஆய்வே நடத்தி,  அரசியல் ஆவர்த்தனம் செய்கிறார்கள்!

தூண்டிலைத் தூக்கித் திரிகிறார்கள் - கவனம்!

முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்து துக்கம் 7 நாள் என்பதுகூட தீராத நிலையில், துயரத்தில் உழலும் அவர்களிடையே குட்டையைக் குழப்ப தூண்டிலைத் தூக்கிப் புறப்பட்டு விட்டார்கள்!

அக்கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்களுக்கு இல்லாத கவலையும், அக்கறையும் இந்த அக்கிரகார அறிவுஜீவிகளுக்கு ஏன்? விஷயம் புரிந்தவர்களுக்குக் கண்டிப்பாகவே விளங்கும்.

அடேயப்பா, பா.ஜ.க.வின் கரிசனம்!

இன்னொரு பக்கம் தங்கள் பக்கம் சாய்த்துக்கொள்ள - திராவிட இயக்கங்களுக்கு தாங்கள்தான் மாற்று என்ற பா.ஜ.க.வினரின் ‘கரிசனம்‘ - அ.தி.மு.க.வின்மீது கரைபுரண்டு ஓடத் தொடங்கிவிட்டது!

இரண்டு கட்சிகளின் லட்சியங்களும் ஒன்றுதானாம்; வெங்கய்யா நாயுடுகார் கண்டுபிடித்து, கசிந்துருகி கண்ணீர் மல்கக் கூறுகின்றார்!

காவிரி நதி நீர் ஆணையத்தை சட்டப்படி அமைக்க கடைசி நேரத்தில் மறுத்த பிரதமர் மோடி, அ.தி.மு.க.  எம்.பி.,க்களைக்கூட சந்திக்க மறுத்த பிரதமர் மோடி ‘‘நான் தொலைப்பேசியில் கூப்பிடு தூரத்தில்தான் இருக்கிறேன்’’ என்று முதலமைச்சர் ஓ.பி.எஸ். அவர்களிடம் கூறுகிறாரே, எப்படி?

சசிகலாவின் தலையில் கைவைத்து ‘ஆறுதல் கூறும்‘ மோடியின் நோக்கம் என்ன?’

இப்படி அரசியல் களத்தில் ‘என்னா வினோதம் பாரு; எவ்வளவு ஜோக் பாரு, பாரு, பாரு’ என்று பாடும் பரவசக் காட்சிகள் மறுபுறம்! இவைகளையெல்லாம் பார்க்கும்போது, அந்தக் காலத்தில் திராவிடர் கழக கூட்டங்களில் கூறப்பட்ட ஒரு துக்க வீட்டு ஒப்பாரிக் கதைதான் நம் நினைவிற்கு வருகிறது!

‘பந்தலிலே பாவக்காய்!’

முக்கியமான ஒருவர் மறைந்துவிட்டார். துக்க வீட் டிற்குப் பலரும் சென்று அவருடைய உறவுகளிடம் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினர்.

இரண்டு சகோதரிகள் வந்தார்கள். மறைந்தவரின் உடலுக்கு அருகில் மறைந்தவரின் உறவுக்காரரைக் கட்டிப் பிடித்து ஒப்பாரி சொல்லி அழத் தொடங்கி - மூக்கைச் சிந்திக்கொண்டே,
அதில் தங்கை ஒருவர் ஒப்பாரியில்,
‘பந்தலிலே பாவக்காய்,
பந்தலிலே பாவக்காய்
தொங்குதடி எக்காடி
தொங்குதடி எக்காடி!’
என்று ஜாடை காட்டிப் பாடினாள்.
அதைப்  புரிந்த மூத்த அக்காள், ஒப்பாரியிலேயே குறிப்புக் காட்டினாள்.
‘போகும் போது பாத்துக்கலாம்,
போகும்போது பறித்துக்கலாம்!’ என்று.
இவ்வளவு துக்கத்திலும் வீட்டுக்கார அம்மா அதைக் கண்காணித்து,  அவ்விருவருக்கும் ஒப்பாரியிலேயே பதில் சொல்லும் வகையில் பாடினார்.
‘அய்யோ, அது விதைக்கல்லோ விட்டிருக்கு,
விதைக்கல்லோ விட்டிருக்கு!’ என்று.

அக்கதைதான் இப்போது நம் நினைவிற்கு வருகிறது!
அ.தி.மு.க. சகோதரர்களே எச்சரிக்கை!
எனவே, அ.தி.மு.க.வின் சகோதரர்களே,

சிண்டு முடிந்திடுவோரை,  உங்கள்மீது திடீர் அனுதாபம், அளவற்ற ஆதரவு தருவது போல்  நாடகம் போடுவோரை விழிப்போடு புரிந்துகொள்ளுங்கள்!
அக்கட்சியின் கட்டுக்கோப்பை - கட்டுப்பாட்டை மறவாதீர்!

சிறுசிறு ஓட்டைகளைத் தேடி அலைந்து அவற்றைப் பெரிதாக்குகின்றனர்!

அம்மையாரை எரிக்காமல் புதைத்துவிட்டனராம்; இப்படி ‘ஹிந்துத்துவா’ உணர்வுகளால் இவர்கள்மீது அம்பு எய்தும் அற்பத்தன முயற்சிகளில் ஆங்கில ஏடுகளில் அறிவு ஜீவிகள் அஸ்திரங்களை ஏவுகின்றனர் - இனியும் அதிகம் ஏவ ஆரம்பித்துவிடுவர்! அவர்களின் மூக்குடைவது உறுதி!

எதற்கும் அ.இ.அ.தி.மு.க.வினர் மட்டத்தில் தேவை தேவை - எச்சரிக்கை தேவை!

- சர்ச்லைட்

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...