Tuesday, October 6, 2015

மூடி மறைக்கும் பிஜேபியின் முகத்திரை கிழிந்தது

மூடி மறைக்கும் பிஜேபியின் முகத்திரை கிழிந்தது
மாட்டிறைச்சி விவகாரம்: கைதானவர்கள் அனைவருமே பாஜகவைச் சேர்ந்தவர்கள்
தாதரி(உபி) அக் 5_ உத்தரப் பிரதேச மாநிலத் தில் மாட்டிறைச்சி வதந்தி தொடர்பாக அக்லாக் என்பவர் கொலை செய்யப் பட்டார். இந்தக் கொலை தொடர்பாக கைதானவர் களில் 11 பேர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் என்று உத்தரப்பிரதேச காவல் துறையினர் தெரிவித் துள்ளனர்.
பாசாரா கிராமத்தைச் சேர்ந்த வன்முறைக்கும் பல்  மாட்டிறைச்சி வதந் தியை கிளப்பி செப்டம்பர் 28 ஆம் தேதி அக்லாக் என்பவரின் குடும்பத்தின் மீது கடுமையான தாக்குதல் நடந்தி அக்லாகை, கொலை செய்தது; அவரது மகன் உயிர்க்குப் போராடிக் கொண்டு இருக்கிறான்.  இந்த விவகாரம் தொடர் பாக அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 11 பேரை உத்தரப் பிரதேசக் காவல்துறை கைதுசெய்தது, இன்னும் 26 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களைத் தேடிவருகின்றனர். இந்த நிலையில் கைதான 11 பேரும் அந்த ஊரைச் சேர்ந்த பாஜக பிரமுகரான சஞ்சய் ரானா என்பவரின் உறவினர்கள் என்று தெரியவந்தது.
மேலும் இவர்களில் 8 பேர் பா.ஜ. கட்சியில் உறுப்பினர்கள் என்றும் தெரிய வந்தது.  டில்லி போட்டு கொடுத்த திட்டமா?  இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளி சிவம், வினய் கைது செய்யபட் டனர். இதில் வினய் என்பவன் அந்த ஊரில் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்துள்ளான். சம் பவத்தன்று இரவு இவனும் பாஜக பிரமுகரான சஞ்சய் ரானாவின் மகன் விஷால் என்பவனும் சேர்ந்து தான் கோவிலில் அறிவிப்பு செய்தனர் என்று ஒப்புக் கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக மேலும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த வினய் காவல் துறையினரிடம் தெரிவித்ததாவது:
சம்பவத்தன்று நானும், விஷால் என்பவரும் சேர்ந்துதான் கோவிலுக்குச் சென்று அறிவிப்பு செய் தோம்.  கையில் என்ன கிடைக்கிறதோ கொண்டு வாருங்கள் என்று கூறி னோம். கரும்பு வெட்ட வைத்திருந்த கோடரி, மற்றும் கம்பு, கம்பிகள் போன்றவற்றை பலர் எடுத்து வந்தார்கள். மேலும் கைதான ச்வுரப், கவுரவ், சந்தீப், சிவம், சசின், விவேக், மற்றும் கைலாஷ் இவர்கள் அனைவரும் உள்ளூர் பாஜக பிரமுக ரின் நெருங்கிய உறவின ராவார்கள். விரைவில் நடக்கவிருக்கும் பஞ்சாயத் துத் தேர்தலில் சஞ்சய் ரானா தனது ஆதரவாளர் களை தேர்தலில் நிறுத்த டில்லி சென்று பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அந்தப் பேச்சு வார்த்தை யின் போது அவருடன் இந்தக் கொலையில் தொடர் புடைய அனைத்துக் குற்ற வாளிகளும் சென்றுள்ள னர். இவ்விவகாரம் தொடர்பாக கவுதம் புத்தா மாவட்ட காவல்துறை ஆணையர் அனுராக்சிங் கூறியதாவது. குற்றவாளி களில் 11 பேரைக் கைதுசெய்துவிட்டோம். இவர்களில் 9 பேர் பாஜ கட்சியைச் சார்ந்தவர்கள். கைதான அனைவரும் பாஜக பிரமுகரான சஞ்சய் ரானாவின் நெருங்கிய உறவினர்கள். ஹரி மற்றும் ஓம், விவேக் மற்றும் சஞ்சய் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இவர்களில் ஹரி மற்றும்  ஓம் இது வரை காவல்துறையின் பிடியில் சிக்கவில்லை.
அக்லாக்கைக் கொலை செய்த போது விவேக், ஓம், சசின் ஹரி, வினய் போன்றவர்கள் சம்பவ இடத்தில் இருந்ததாகவும் அவர்கள் கையில் ஆயுதங்கள் இருந்ததாகவும் நேரில் கண்ட சாட்சிகள், மற்றும் அக்லாக்கின் தாயார் கொடுத்த புகார் மனுவில் உள்ளது. அவர் களும் தங்களின் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர்.  உதவிக்கு வராத இந்து நண்பர்கள்  வன்முறைக் கும்பல் வீட்டைத் தாக்கும் போது அக்லாக் தனது வீட்டிற்கு அருகில் உள்ள மனோஜ் என்பருக்கு போன் செய்து உதவிட வேண்டியுள்ளார். மனோஜ் மற்றும் கொலை செய்யப்பட்ட அக்லாக் இருவரும் குழந்தைப் பருவத்தில் இருந்தே நண்பராக இருந்தவர்கள்.   தாக்குதலுக்கு ஆளான தானிஷ் கோமாவில் இருந்து மீளவில்லை. இது குறித்து காவல் துறையினர் பேசும் போது அக்லாக் இறுதியாக மனோஜிற்கு இரவு 10 மணியளவில் போன் செய்துள்ளார். அக்லாக் கின் போன் ரிக்கார்டை பரிசோதனை செய்த காவல்துறையினர் இந்த விவகாரம் தொடர்பாக மனோஜிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் நான் சொந்த வேலை தொடர்பாக அருகில் உள்ள ஊருக்குச் சென்றுவிட்டேன்; அப் போது எனது போனில் அக்லாக் பேசினார் ஆனால் சிக்னல் சரியாக இல்லாததால் அவர் என்ன பேசுகிறார் என்று எனக் குக் கேட்கவில்லை என்று கூறினார்.

மாட்டிறைச்சி கொலை விவகாரம் ஒபாமா கண்டனம்
நியூயார்க், அக் 5   மாட்டிறைச்சி வதந்தி தொடர் பாக முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் கண்டன அறிக்கை ஒன்றை அவரது உதவியாளர் லிண்டா சமூக வலைதளத்தில் வெளியிட் டுள்ளார். அதில் ஒபாமா குறிப்பிட்டுள்ளதாவது:
தனி மனித உணவுவிவகாரம் தொடர்பாக இந்தியாவில் உள்ள தாதரி என்ற ஊருக்கு அருகில் உள்ள கிராமத்தில் முதியவர் கொலை செய்யபட்டது எனது மனதை மிகவும் பாதித்து விட்டது. தீவிரவாதச் செயலுக்கு ஒப்பான இந்தக் கொடூர சம்பவத்திற்கு அமெரிக்க அரசு கண்டனம் தெரிவிக்கிறது என்று கூறியுள்ளார்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


Friday, October 2, 2015

இடஒதுக்கீட்டை யாராலும் ஒழிக்க முடியாது!

இடஒதுக்கீட்டை யாராலும் ஒழிக்க முடியாது!
உடுமலைப்பேட்டை வட்டார மாநாட்டில் தமிழர் தலைவர் உரை வீச்சு
உடுமலை, அக்.2_ இடஒதுக்கீட்டை யாராலும் ஒழிக்கமுடியாது என்று உடுமலைப்பேட்டை வட்டார மாநாட்டில் தமிழர் தலைவர் உரை வீச்சு நிகழ்த் தினார்.
வட்டார மாநாடு
அறிவு ஆசான் தந்தை பெரியாரின் 137வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் _ திராவிடர் விழிப் புணர்வு வட்டார மாநாடு 30.9.2015 அன்று மாலை 6 மணியளவில் உடுமலைப்பேட்டை வெங்கிட கிருஷ்ணா சாலையில் உடுமலை நகர, ஒன்றிய திராவி டர் கழகம் சார்பில் சிறப்போடு தொடங்கி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தாராபுரம் கழக மாவட்ட தலைவர் க.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். திராவிடர் கழகத்தின் மாநில சட்டத்துறை துணைச் செயலாளர் வழக்குரைஞர் ஜெ.தம்பி பிரபாகரன் அனைவரையும் வரவேற்றார். கோவை மண்டல செயலாளர் வழக் குரைஞர் நா.சக்திவேல், மாவட்ட அமைப்பாளர் கி.மயில்சாமி, மாவட்ட ப.க.தலைவர் ச.ஆறுமுகம், நகர தலைவர் போடிபட்டி, காஞ்சி மலையான், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் நா.மாயவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழர் தலைவர் உரை
மாநாட்டில் சிறப்பாக பங்கேற்று உரையாற்றிய திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி அவர்கள் உரை வீச்சு நிகழ்த்தியதாவது;
மிகக்குறுகிய காலத்தில் வெகு சிறப்போடு ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெறுகிற தந்தை பெரியாரின் 137வது பிறந்த நாள் பிரச்சாரத்திருவிழாவிற்கு திரளாக வருகை புரிந்திருக்கின்ற அனைவருக்கும் அன்பான வணக்கம்!
மத்திய - மாநில அரசின் போக்கு
மழை வந்து சென்றது. மழை வருவது இந்த நேரத்தில் பாராட்டப் படவேண்டிய விஷயம் டெல்டா மாவட்டத்தில் விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு கடும் தண்ணீர் பற்றாக்குறை. கர்நாடகம் தண்ணீர் தர மறுக்கிறது. தமிழக முதல்வர் அவர்கள் கடிதம் எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள்.
காவிரி பிரச்சினையில் தொடர்ந்து நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணாக செயல்பட்டு வரும் கர்நாடகத்தை கண்டிக் காமல் மத்திய அரசு கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறது.
மரமும், மழையும்
மழைவேண்டி வருணஜெபம் செய்கிறார்கள்! ஆனால், மழை வருவதில்லை! கடவுள் இல்லை என்று சொல்கிற நாங்கள் வரும்போது மழை பெய்கிறது! எங்களுக்கு இதுவே சிறந்த பகுத்தறிவுப் பிரச்சார மாகும். மழை வேண்டி யாகம் நடத்த மரத்தை வெட்டி நெருப்பில் போடுகிறார்கள்.
காடுகளை அழித் தால் மழையும் பெய்யாது! மிருகங்களும் ஊருக்குள் வரும்! இடஒதுக்கீடு அதுக்கும் சரியாக இருந்தால் அது சரியாகி விடும்!
பெரியாருக்கு விழா ஏன்?
தந்தை பெரியார் பிறந்த நாளை கொண்டாடு கிறோம். எதற்காக? சடங்கிற்காகவா? சம்பிரதாயத் திற்காகவா? இல்லை இது ஒரு நன்றி திருவிழா! இனத் தால் திராவிடர்களாகவும், மொழியால் தமிழர் களாகவும் உள்ள மக்களே ஒன்றை எண்ணிப் பாருங் கள், 100 ஆண்டுகளுக்கு முன் எப்படிப்பட்ட நிலை? இப்போது திரும்புகிற பக்கம் எல்லாம் கல்வி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், மருத்துவர்கள், இந்த நிலை எப்படி வந்தது?
இதை அருள் கூர்ந்து நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். தந்தை பெரியாரின் ஒப்பற்ற, தன்னலமற்ற, புகழ் தேடாத தொண்டாலும், இனமானத்துக்காக தன் மானம் போனாலும் பரவா யில்லை என்று கருதியதால் தான் இப்படி பட்ட நிலை வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இதனால் தந்தை பெரியாரை உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள்.
இடஒதுக்கீடு
பெரியார் இல்லை என்றால் இடஒதுக்கீடு இல்லை என்று காந்தி அவர்களின் பேரன் சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கூறியுள்ளது. இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய செய்தியாகும். வேட்டிகட்டுவதே பெரியாரின் தொண்டால் கிடைத்த உரிமையாகும். திராவிடத்தால் வீழ்ந்தோம்! என்கிறார்கள்!
அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பதை அவர் கள் சிந்திக்க வேண்டும். இடஒதுக்கீடு யாரால் கிடைத் தது என்பதையும் திராவிடத்தை எதிர்ப்பவர்கள் சிந்திக்க வேண்டும்! ஆர்.எஸ்.எஸ்.சங்பரிவாரின் கொள்கை என்ன?
வருணாசிரமத்தைப் பாதுகாப்பது, சமூகநீதியை ஒழிப்பது என்பது தான்! ஆனால் தந்தை பெரியாரின் சமூகநீதி தத்துவமான இடஒதுக்கீட்டை யாராலும் ஒழித்துவிட முடியாது! எந்த கொம்பனும் கை வைக்க முடியாத அளவுக்கு அரசியல் அமைப்புச் சட்ட அட்டவணை 9 இல் பாதுகாப்பாக இருக்கிறது.
இது திராவிடர் கழகத்தாலும், இன்றைய ஆளும் கட்சி யாலும் ஏற்பட்டதாகும். இராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை ஒழித்தது திராவிடர் கழகம் எம்.ஜி.ஆர். அவர்கள் கொண்டு வந்த வருமான வரம்பு ஆணையை ஒழித்தது திராவிடர் கழகம்! சமூக நீதியை ஒழித்துவிடலாம் என்று ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி வகை யறாக்கள் நினைத்தால் அது நடக்காது! எதிரிகளை அடையாளம் காட்டும் கலங்கரை விளக்கமாக இருப்பது திராவிடர் கழகம்!
இளைஞர்களே! திராவிடர் கழகத்தை நோக்கி வாருங்கள்! லட்சியத்திற்காக எந்த விலையையும் கொடுக்க அனைவரும் தயாராகுவோம்! மழை தோற்றது நாம் வென்றோம்! நன்றி! வணக்கம்! இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றினார்.
தொடக்கவுரை
தமிழர் தலைவர் உரைக்கு முன்பாக தலைமைக் கழகச் சொற்பொழிவாளர் புலியகுளம் க.வீரமணி அவர்கள் பெரியார் ஏன் கடவுள் இல்லை என்றார்? மதம், ஜாதி, மூடப்பழக்க வழக்கங்கள் ஏன் ஒழிக்கப் படவேண்டும் என்றார்? என்று ஆதாரத்தோடு விளக்கியும் புராணம், கடவுள் லீலை, பார்ப்பன சூழ்ச்சி ஆகியவற்றை தோலுரித்து காட்டியும், கிரிக் கெட் மற்றும் திரைப்படங்களினால் ஏற்படும் கெடுதியையும் இளைஞர்கள், மாணவர்கள் புரிந்து கொள்ளும்
வகையில் சிறப்போடு உரையாற்றி மாநாட் டின் தொடக்கவுரையை நிறைவு செய்தார்.
மந்திரமா! தந்திரமா!
ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்வு - மாநாட்டில் கழக நூல்கள் விற்பனை
மாநாட்டில் மந்திரமா? தந்திரமா? எனும் பகுத் தறிவு நிகழ்ச்சியை திராவிடர் கழகத்தின் ஊழியர் ஈட்டி கணேசன் அவர்கள் மாணவர்களை மேடைக்கு அழைத்து மந்திரவாதிகளின் பித்தலாட்டங்கள், பில்லி, சூனியம், மை தடவுதல், லிங்கம் கக்குதல், திருநீறு தருதல் ஆகியவை அனைத்தும் தந்திரமே! என்பதை செய்து காட்டியதோடு ஜாதகம், ஜோதிடம் என்பதும் பித்தலாட்டமே என்பதை வெகு மக்களிடையே எடுத்துக்கூறி பகுத்தறிவு பாய்ச்சினார்.
கலந்துகொண்டோர்
கழகப்பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் பொதுக்குழு உறுப்பினர் நா.சாமிநாதன், உடுமலை ஒன்றிய தலைவர் ச.பெரியார் பித்தன், செயலாளர் திருமுருகன், மடத்துக்குளம் ஒன்றிய தலைவர் ந.ஜெயப்பிரகாசு, செயலாளர் பழ.நாகராஜ், மாவட்ட மாணவரணி தலைவர் ம.பரிதிஇளம்வழுதி, உடுமலை நகர இளைஞரணி தலைவர் ஜெ.பெஞ்சமின் கிரு பாகரன், காங்கேயம் நகர தலைவர் முத்து முருகேசன்,
உடுமலை முன்னாள் நகர்மன்றத் தலைவர் சி.வேலுச் சாமி (திமுக), திராவிட இயக்கத் தமிழர் பேரவையைச் சார்ந்த மாவட்ட தலைவர் சு.தண்டபாணி, திக சட்டத்துறை துணைச் செயலாளர் வழக்குரைஞர் ஆ.பாண்டியன், திருப்பூர் மாவட்ட ப.க. தலைவர் கோபி.வெ.குமார ராசா, கோவை மாவட்ட செய லாளர் ம.சந்திரசேகர், கோவை மாநகரத் தலைவர் சிற்றரசு, பொதுக்குழு உறுப்பினர் பொள்ளாச்சி தி.பரமசிவம், ஆனந்தசாமி,
இமயவரம்பன், பழனி இரணியன், கன்னிமுத்து, கோவை மண்டல இளைஞரணி செயலாளர் மணிகண்டன், மாணவரணி செயலாளர் பிரபாகரன், துங்காவி வெங்கடாஜலம், திருப்பூர் மாவட்ட திமுக வழக்கறிஞரணி அமைப் பாளர் க.செல்வராஜ், திராவிட இயக்க தமிழர் பேரவை மேற்கு மண்டல செயலாளர் வே.இளங் கோவன், தென்றல் சேகர், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் க.தங்கவேல்,
சிந்தனையாளர் பேரவையைச் சார்ந்த ஆ.நடராசன், தாராபுரம் ஒன்றிய தலைவர் நாத்திக சிதம்பரம், மாரிமுத்து, முனிஸ்வரன் உள்ளிட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், திமுக, திராவிட இயக்க தமிழர் பேரவை, தமிழக முஸ்லீம் முன்னேற்றக்கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் முற்போக்கு சக்திகள், வெகுமக்கள் பெருந்திரளாக அடாத மழையிலும் விடாது பங்கேற்றுச் சிறப்பித்தனர். நன்றி யுரையை நகர செயலாளர் அ.ப.நடராசன் கூறினார்.

தூய்மை இந்தியா என்னும் ஏமாற்றுத் திட்டம்

சமூக நல்லிணக்கத்தையும், மதச்சார்பின்மையையும் பின்பற்றிய தலைவர்களின் பிறந்த நாளை கொச்சைப் படுத்தும் விதமாக மோடி அறிவித்த திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்து வருகின்றன.
இந்திரா காந்தி பிறந்த நாளில் கழிப்பறைத் திட்டம், காந்தி பிறந்த நாளில் தூய்மை இந்தியா திட்டம் போன்ற வைகளைக் கூறலாம். தூய்மை இந்தியா திட்டம் ஒராண்டு விளம்பரத்திற்கு மாத்திரம் ரூ.120 கோடிகள் வரை செல விடப்பட்டதாக தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் அறியவருகிறது.  தூய்மை இந்தியா திட்டம் நேற்றோடு ஓராண்டு முடிந்த நிலையில் இந்தத் திட்டத்தின் மூலம் ஏற்பட்ட தாக்கங்கள் குறித்து தேசிய பொதுநல மாணவர் அமைப்புகள் இணைந்து நாடு முழுவதும், கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தின.
இந்த கருத்துக் கணிப்பின் படி பெருவாரியான மக்கள் தூய்மை இந்தியா திட்டம் ஒரு ஏமாற்றுத் திட்டம் என்றும், அரசு தூய்மைத் தொழில் புரியும் தொழிலாளர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தாலே தூய்மை இந்தியா திட்டம் எளிதில், வெற்றி பெறும் என்றும் கூறியுள்ளனர்.
முன்னாள் ஆம் ஆத்மி உறுப்பினரும், சமூகத் தொண்டு நிறுவனத் தலைவியுமான சஜியா இல்மீ தூய்மை இந்தியா திட்டம் மற்றும் அது தொடர்பான செலவீனங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் விவரங்கள் கேட்டிருந்தார்.
இது தொடர்பாக அவர் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, தூய்மை இந்தியா திட்டம் குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தனக்குக் கிடைத்த தகவல்கள் மிகவும் அதிர்ச்சிகரமானவையாக இருந்தன.
பத்திரிகை அலுவலகங்களுக்கு தூய்மை இந்தியா திட்டம் என்ற பெயரில் பெரும் தொகைகள் சென்றுள்ளன; விளம்பரத்திற்காக ரூ.100 கோடிவரை செலவு செய்துள்ள இந்த அரசு, தனியார் விளம்பரதார நிறுவனங்களுக்கு ரூ,20 கோடி வரை செலவழித்துள்ளது. இந்த விளம்பரங்களினால் ஏதாவது பலன் ஏற்பட்டதா என்பது குறித்து அரசு கண்காணிப்பும், ஆய்வும் இதுவரை நடத்தவில்லை, முக்கியமாக டில்லி, மும்பை, லக்னோ, வாரணாசி போன்ற பல்வேறு வட இந்திய நகரங்கள் இன்றும் அசுத்தம் நிறைந்த நகரங்களாகவே காட்சி தருகின்றன, உண்மை என்ன வென்றால் டில்லி பாஜகவினர் வாகனங்களில் குப்பை களை அள்ளிக்கொண்டு வந்து தெருவில் வீசிவிட்டு, வீசிய குப்பைகளை அள்ளுவது போன்று நாடகம் நடத்திக் கொண்டு இருக்கின்றனர். டில்லியில் மட்டுமல்ல, பல்வேறு நகரங்களிலும் பாஜகவினர் தூய்மை இந்தியா என்ற பெயரில் இது போன்ற கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டு வருகின்றனர். டில்லி காங்கிரஸ் தலைவர் முகேஷ் சர்மா கூறும்போது பாஜக தலைவர்கள் அனைவரும் குப்பை யைக் கூட்ட தூய்மைப் பணியாளர்களை விட்டு குப்பைக் கூளங்களை தெருவில் வீசச்சொல்கிறார்கள் என்று கூறினார்.
மாணவர் அமைப்பு எடுத்த கருத்துக் கணிப்பின்படி நாடு முழுவதும் பெரு நகரம், சிறுநகரம் என இரண்டு பிரிவாகப் பிரித்து 3 லட்சம், மக்களை சந்தித்தனர். இதில் தூய்மை இந்தியா திட்டத்தின் தோல்வி தெளிவாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மாநகராட்சி, நகராட்சி தன்னுடைய பகுதிக்குத் தேவையான பணியாளர்களை நியமித்து, அவர்களின் பணிகளை கண்காணித்து அவர்களுக்குத் தேவையான கருவிகளைக் கொடுத்தாலே நகரங்கள் தூய்மையாகி விடும். ஆனால், அவர்கள் அடித்தட்டு - கீழ்ஜாதி மக்களாயிற்றே - உயர் ஜாதி மனம் கொண்ட பிஜேபி அரசின் கண்களுக்கு இவை எல்லாம் தெரியுமா? மாநகராட்சி நகராட்சி அலுவலங்களில் குப்பை அள்ளும் வாகனங்கள், இயந்திரங்கள் பழுதடைந்து துருப்பிடித்த நிலையில் கிடக்கின்றன. மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் விரயமாகிக்கொண்டு இருக்கிறது. நிர்வாகத்தைப் பிடித்துள்ள அரசியல் கட்சிகள் தங்கள் பகுதி எதிர்க்கட்சிப் பகுதி என்று தனித்தனியாக பிரித்துப் பார்க்கும் அவலம் நிகழ்கிறது, முக்கியமாக பாஜக கட்சியினர், தூய்மை இந்தியா என்ற பெயரில் நடத்தும் கூத்துகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.
தூய்மையாக நகரங்களை உருவாக்குவதற்கு எல்லா மக்களுமே விரும்புகின்றனர். ஆனால் ஆட்சி அதிகா ரத்தை கையில் வைத்துள்ளவர்களின் செயல்பாடுகளால் நகரங்கள் குப்பையாகின்றன.  குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அய்.ஏ.எஸ் அதிகாரி விஜயலட்சுமி ஜோஷி தூய்மை இந்தியா திட்டத்தின் இயக்குநர் பொறுப்பில் பதவி வகித்தவர். இவர் திடீரென  செப்டம்பர் 2-ஆம் தேதி பதவியை விட்டு விலகினார்.
மேலும் இவரை மாற்றுப்பணிக்கு அரசு தன்னை நியமிக்கும் என்ற நிலையில் இவர் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
இது குறித்து ஆங்கில நாளேடான இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில்,  எந்த ஒரு சூழலிலும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் எந்த ஒரு திட்டமும் சரியாக செயல்படவில்லை என்றும், மோடி தன்னிச்சையாக தூய்மை இந்தியா திட்டத்தின் அறிவிப்பு களை வெளியிடுகிறார் என்றும், இந்தத் திட்டம் ஆரம் பித்தது முதல் செப்டம்பர் இறுதிவரை எந்த ஒரு தலைமைச் செயலாளர் கூட்டத்தையும் கூட்டவில்லை என்றும், மேலும் இந்த திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்கள் விரயமாவதாகவும் அந்தப் பத்திரிகை  வெளியிட்டுள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தின் மீதான வரவேற்பு மற்றும் பாராட்டுரைகள் அனைத்தும் மோடியைச் சென்றடைந்த போது தோல்வி மற்றும் எதிர்கட்சிகள் வெளிப்படுத்தும் உண்மை நிலைக்கு தலைமை இயக்குனராக இருக்கும் விஜயலட்சுமி ஜோஷியே பொறுப்பேற்கவேண்டியுள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் உள்ள பல்வேறு அதிகாரிகள் மக்கள் தொடர்பு அதிகாரிகள் அனைவரும் இதர அமைச் சகத்தில் இருந்து தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர்கள், அவர்களின் முழுக் கவனமும் முதன்மையான பணி யிலேயே உள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் எந்த ஒரு நிர்வாக அதிகாரியும் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து பணியாற்ற மறுக்கின்றனர். இதன் காரணமாக விஜயலட்சுமிஜோஷி தேவையற்ற விமர்சனங்களுக்கு ஆளாகின்றார். இதனால் அவர் பதவிவிலகினார் என்று அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
இதுதான் விளம்பரக் காற்றால் பறக்கும் தூய்மை இந்தியா எனும் குப்பை.

தந்தை பெரியார் சந்தித்த இரண்டு காந்திகள்!

அக்டோபர் 2: அண்ணல் காந்தியாரின் பிறந்த நாளில்....!
தந்தை பெரியார் சந்தித்த இரண்டு காந்திகள்!!
- கி.வீரமணி
தேசப்பிதா என்று அனைவராலும் மதிக்கப்பட்ட மகாத்மா (இப்பெயர் இரு நூற்றாண்டுக்கு முன்பே மகாராஷ்டிர சமுதாயப் புரட்சியாளர் ஜோதிபா பூலே அவர்களுக்கு மக்கள் அளித்த பட்டம்) - மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களை, தந்தை பெரியார் அவர்கள் தனது ஒப்பற்ற தலைவராக - காங்கிரசில் சேர்ந்த போது (1919 வாக்கில்) ஏற்று, அவரே இவர் பால் மிகுந்த மரியாதையும், மதிப்பும் கொள்ளும் அளவுக்கு அருந் தொண்டாற்றி ஆச்சரியப்பட வைத்தவர்.
கள்ளுக்கடை மறியலின்போது மகளிர் தலைமை தாங்கி நடத்தியதை அவரது ஆங்கில வார ஏட்டில் காந்தியார் குறிப்பிட்டுள்ளார். 1. திராவிட தேசத்தில் தான் (தென்னாட்டில்) அன்னை ஈ.வெ.ரா. நாகம்மையார், பெரியாரின் தங்கை S.R. கண்ணம்மாள்  உட்பட பல பெண்கள் நடத்திய அறப்போர், ஒத்துழையாமை இயக்கம் - இவைகளைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, காந்தியார் இதை நிறுத்துவது என்பது என் கையில் இல்லை; ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்மணிகளிடம் தான் உள்ளது என்று கூறிடும் அளவுக்கு,காந்தியாரின்  பேரன்பைப் பெற்றவர்கள்.
2. மதுவிலக்குப் பிரச்சாரத்திற்காக தனது தோப்பில் உள்ள 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தி தனித் தன்மையான வரலாறு படைத்தவர் தந்தை பெரியார் என்பது காந்தியாருக்குத் தெரியும்.
3. கைராட்டினம், தக்ளி மூலம் கதர் நூல் நூற்க, கைகள் வீங்கும் அளவிற்கு தந்தை பெரியார் ஆர்வம் காட்டியதைக் கண்டு, இனி கொஞ்ச நாள் கதர் நூல் நூற்க வேண்டாம் என்று விதி விலக்கு தந்தார் அண்ணல் காந்தியார்!
அவ்வளவு மதிப்பும், செல்வாக்கும் காந்தியாரிடம் உள்ள தந்தை பெரியார் - ஏன் காந்தியாரையும், காங்கிரசையும் விட்டு 1925இல் வெளியேறினார்.
சமூக நீதிப் போராட்டம் - வகுப்புவாரி உரிமை -  கேட்டு, காங்கிரஸ் ஏற்காத நிலையில் வெளியேறினார் என்பது ஒரு பக்கம்.
அதே போல காங்கிரசில் இருந்த போதே காந்தி யாரின் ஆழ்ந்த வர்ணாசிரம தர்மப் பற்று கண்டு, தந்தை பெரியார் காந்தியிடம் பெரிதும்  மாறுபட்டார்.
(அ) ஆதி திராவிடர்களுக்குத் தனிக் கிணறு, தனிக் குளம், தனி இடம் என்ற காந்தியார் ஹரிஜன நலக் கொள்கையை அங்கேயே தந்தை பெரியார் எதிர்த்தார். (ஆ) 1924இல் சேரன் மாதேவி குருகுலத்தில் வர்ணா சிரம தர்ம நம்பிக்கையினால் வ.வே.சு. அய்யர் பக்கமே - பார்ப்பனர் பக்கமே நியாயம் வழங்கிய காந்தியாரின் போக்கு பெரியாருக்கு மட்டுமல்ல - பி. வரதராஜுலு நாயுடு போன்றோருக்கும் பிடிக்கவில்லை.
சமையல்காரர் பிராமணராக இருக்கட்டும் என்ற காந்தியாரின் தீர்ப்பு இவ்விருவர்களால் ஏற்கப்படவில்லை.
(இ) வைக்கம் சத்தியாகிரகத்தில், தமிழ்நாட்டிலிருந்து பெரியார் சென்று கலந்து கொண்டதை காந்தியார் ஏற்கவில்லை. மனமாற்றம் நம்பூதிரிகளிடம் - உயர் ஜாதியினரிடம் ஏற்படுவதே நல்லது என்று கூறியதுகேட்டு அதிர்ந்து பெரியார், காந்திக்கே கடிதம் எழுதினார், அத்தெருக்களில் நடமாடும் நாயும், பன்றியும், கழுதையும் சத்தியாகிரகம் செய்தா அவ்வுரிமையைப் பெற்றன?  அவைகளுக்கு உள்ள உரிமை ஆறறிவு படைத்த கீழ் ஜாதி ஈழவ சகோதரர்களுக்குக் கிடைக்கக் கூடாதா?  என்று அக்கடிதத்தில் நறுக்கென்று எழுதினார்.
காந்தியின் இந்த வர்ணதர்ம பிடிப்பு, பெரியாரை அவரிடமிருந்து வெகு தொலைவுக்குக் கொண்டு வந்து நிறுத்தியது! பிரிந்த பிறகும் பெங்களூரில் காந்தியாரைச் சந்தித்த போது காந்தியார் - பெரியார் இடையே நடந்த உரை யாடல் மிகப் பிரபலமானது. தான் குருவாகவும், தலைவ ராகவும் கருதிய காந்தியிடமிருந்து மாறுபட்டதேன் என்பதை விளக்கும் வண்ணம் அமைந்த ஒன்று.
பிறகு காந்தியின் வர்ணதர்ம ஆதரவு, ஹரிஜன் என்று ஒரு பெயர் சூட்டி தாழ்த்தப்பட்ட மக்களை உயர்த்தி விடலாம் என்பது போன்ற பல நடவடிக் கைகளை, தனித்தொகுதிக்காகப் போராடி வெற்றி பெறும் நிலையில் இருந்த டாக்டர் அம்பேத்கரை அச்சுறுத்தி அழுத்தம் கொடுக்க மேற்கொண்ட உண்ணா நிலை போராட்டமும் தந்தை பெரியாரால் பெரிதும் ஏற்றுக் கொள்ளப் படாதது மட்டுமல்ல; வன்மையான கண்டனத் திற்கும் ஆளாகியது! (அம்பேத்கருக்கே தந்தி கொடுத்தார் பெரியார் - காந்தியாரின் உயிரைவிட பல கோடி தாழ்த்தப் பட்ட மக்களின் உரிமை சமத்துவம் முக்கியம்) என்றார்!
அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்கள்,  கோட்சே என்ற மராத்திப் பார்ப்பனர் - ஆர்.எஸ்.எஸிடம் பயிற்சி பெற்ற ஹிந்து மகாசபை உறுப்பினர், காந்தியாரை 1948 ஜனவரி 30இல் சுட்டுக் கொன்ற பிறகு காந்தி மதம், காந்தி தேசம் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று அறிக்கை விட்டார்; தந்தை பெரியாரின் இந்த மாற்றம் சந்தர்ப்பவாதமோ அல்லது நீரோட்டத்தில் கலப்பதோ அல்ல; அந்த நிலைப்பாட்டிற்கு என்ன காரணம் என்று தந்தை பெரியார் அவர்கள் 1948இல் விடுதலையிலும் தெளிவாக குடிஅரசு ஏட்டிலும் எழுதியுள்ளார்.
முந்தைய காந்தியார் வர்ணசிரமவாதி; பின்னால் அவருக்குள் வகுப்புரிமைபற்றி ஒரு தெளிவு - மாறுபட்ட சிந்தனை உதித்தது!
1947 வாக்கில் சென்னை மாநில முதலமைச்சராக இருந்த ஒழுக்க சீலர் ஓமாந்தூர் ஓ.பி. இராமசாமி (ரெட்டியார்) அவர்களை வகுப்புவாதி என்று பார்ப்பனர்கள் வர்ணம் தீட்டி, பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் தங்கள் ஜாதியினருக்கு இடம் தர மறுக்கிறார் என்று காந்தியாரிடம் மெமோரென்டம் தந்தார்கள். அதுபற்றி ஓ.பி. ஆரிடம் விசாரிக்கச் சொல்லி தனது செயலாளர் (மகாதேவதேசாய்) அவர்களை அனுப்பினார்.
காந்தியாருக்கு ஓமாந்தூரர், தக்க புள்ளி விவரங் களுடன் - பார்ப்பனர் விகிதாச்சாரத்திற்கு அதிகமான இடங்களைப் பெற்றும், ஏகபோக ஆதிக்கம் செலுத் திடவே விரும்புகின்றனர் என்று விளக்கியது, காந்தியின் கண்களைத் திறந்தது!
பார்ப்பனர்களைப் பார்த்து கடிந்து கொண்டு, வேதம் ஓதுதல்தானே வேதியர்க்கழகு; உங்கள் குல தர்மப்படி. நீங்கள் ஏன் டாக்டர், என்ஜினியர்களாக விரும்பு கிறீர்கள்? என்று கேட்டார்.
ஆகா; காந்தி நமக்கு விரோதியாகி விட்டார்; சமூக நீதி பக்கம் சாய்ந்து விட்டார்; இனி நமக்கு அவர் பயன்பட மாட்டார் என்று அன்றே முடிவு கட்டினர் பார்ப்பனர்கள்.
அதோடு, இந்திய அரசியல் அமைப்பில் மதத்தைக் கலக்கக் கூடாது என்று அழுத்தத் திருத்தமாகக் கூறினார்.
இந்த இரண்டு நிலைப்பாடும் பார்ப்பனருக்கு விரோதமாக காந்தியார் எடுத்த நிலைப்பாடு.
அப்படி கூறிய சில வாரங்களில் காந்தியார் சுடப்பட்டார்; காந்தி கொலை சதி நடத்தி நடந்தது!
இதை தந்தை பெரியார் தனது டைரியில் கைப்பட எழுதி வைத்துள்ளார்!
பிறகு எழுதினார்.
முன்பு நான் எதிர்த்த காந்தி  வேறு -
இப்பொழுது நான் ஆதரிக்கும் காந்தி வேறு
முந்தைய காந்தி வர்ணாசிரமவாதி. பிந்தைய காந்தி  - மனமாற்றம் அடைந்த- உண்மைகளைப் புரிந்த - வகுப்புரிமையை, மதச் சார்பின்மையை ஆதரித்த காந்தி-
இது பார்ப்பனீயத்தின் அடிவேரை வெட்டுவதாக இருப்பதால், காந்தியாரை - ஆரியம் விட்டு வைக்க விரும்பவில்லை - இதனைப் பெரியார் உணர்ந்தே தனது அறிக்கையை விடுத்தார்.
இன்று காந்தியாருக்கு பா.ஜ.க. நாமாவளி பாடுவது அதன் தந்திரங்களில் (Strategy)
ஒன்று. மறவாதீர்! புரிந்து கொள்வீர்!!

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

ஒட்டு மொத்த தமிழர்களுக்கு ஏமாற்றம்! அதிர்ச்சி!!

அய்.நா. மனித உரிமை கூட்டத்தில் இலங்கைக்கு சாதகமான அமெரிக்க தீர்மானம் நிறைவேற்றம்
இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவாம்!
ஒட்டு மொத்த தமிழர்களுக்கு ஏமாற்றம்! அதிர்ச்சி!!
ஜெனீவா, அக்.2- போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கையின் பங்களிப்பு இல்லாத பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று ஓட்டு மொத்த தமிழர் களும் - வற்புறுத்தி வந்த நிலையில், இலங்கை அரசுக்கு ஆதரவான அமெரிக்காவின் தீர்மா னம் அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேறி இருப்பதும், இந்திய உள்ளிட்ட நாடுகள் அதற்கு ஆதரவு நிலை எடுத் திருப்பதும் பெரும் ஏமாற் றத்தையும், அதிர்ச்சியை யும் ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இறுதிக் கட்ட போரின் போது ஏராளமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட் டனர்.போரின் போது மனித உரிமை மீறல்களும், போர்க் குற்றங்களும் நடைபெற்ற தால், அதுகுறித்து சர்வ தேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வற் புறுத்தின. ஆனால் அதை ஏற்க மறுத்த இலங்கை, தாங்களே விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க விரும்புவதாக கூறியது.
இதற்கிடையே, இலங் கையில் நடந்த போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்திய அய்.நா. மனித உரிமை ஆணையர் சையத் ராத் அல் உசேன், போர்க் குற்றங்கள் பற்றி சர்வதேச நீதிபதிகள் அடங்கிய குழு விசாரணை நடத்த வேண் டும் என்று கோரி ஜெனீவா நகரில் உள்ள அய்.நா. மனித உரிமை ஆணையத் தில் அறிக்கை தாக்கல் செய்தார். ஆனால் இந்த அறிக்கை தங்கள் நாட் டின் இறையாண்மைக்கு எதிரானது என்று கூறி இலங்கை எதிர்ப்பு தெரி வித்தது.
இந்த நிலையில், இலங் கையில் நடைபெற்ற போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்கா வின் சார்பில், 47 நாடு களை உறுப்பினர்களாக கொண்ட அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் நேற்று (1.10.2015) ஒரு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், வெளிநாட்டு நீதிபதிகள், சட்ட நிபு ணர்கள், உள்நாட்டு நீதி பதிகள் அடங்கிய விசா ரணை குழு ஒன்றை இலங்கை அமைத்து போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி நம்பிக்கைக்குரிய விசாரணை நடத்த வேண் டும் என்று கூறப்பட்டு இருந்தது. குற்றங்கள் செய்தவர்கள் தண்டிக்கப் படுவதை இலங்கை அனு மதிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இலங்கைக்கு சாதக மான இந்த தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத் தில் கலந்து கொண்டு பேசிய இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா உள் ளிட்ட பெரும்பாலான நாடுகளின் உறுப்பினர் கள், தீர்மானத்தை ஆதரித்து பேசினார்கள்.
தீர்மானத்துக்கு இந்தியாவும் தனது முழு ஆதரவை தெரிவித்தது. இந்திய பிரதிநிதி அஜித் குமார் பேசுகையில்: ஒருங்கிணைந்த இலங்கையில் அனைத்து தரப்பு மக்களும் சம உரிமையுடன் தரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று இந்தியா விரும்புவ தாகவும், 13ஆவது அரசி யல் சாசன திருத்தங்கள் நிறைவேற்றப்பட வேண் டும் என்றும் கூறினார். இலங்கை அரசு மறுகட்ட மைப்பு வசதிகளை ஏற் படுத்தி தரவேண்டும் என் றும் அவர் தனது பேச்சின் போது குறிப்பிட்டார்.
இலங்கை அரசின் பிரதிநிதி பேசுகையில், அமெரிக்க தீர்மானத்தின் படி செயல்பட இலங்கை தயாராக இருப்பதாக கூறினார்.  இந்த தீர்மா னத்தின் மீது எந்த நாட் டின் பிரதிநிதியும் வாக் கெடுப்பு கோரவில்லை. இதனால், இலங்கைக்கு ஆதரவான அமெரிக்கா வின் தீர்மானம் ஓட்டெ டுப்பு இன்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பெரும் ஏமாற்றம் - அதிர்ச்சி
போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி இலங்கையின் பங் களிப்பு இல்லாத சர்வ தேச விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழர் களும், பல்வேறு தமிழ் அமைப்புகளும் வற்புறுத்தி வரும் நிலையில், இலங்கை அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவான அமெரிக்கா வின் தீர்மானம் அய்.நா. மனித உரிமை ஆணையத் தில் ஒருமனதாக நிறை வேறி இருப்பது, அவர் களுக்கு பெரும் ஏமாற் றத்தையும், அதிர்ச்சியை யும் ஏற்படுத்தி உள்ளது.
அதே சமயம் இலங்கை யில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த தீர்மானத்தை வரவேற்று இருக்கிறது. முன்னதாக மனித உரிமை ஆணையர் சையத் ராத் அல் உசே னின் அறிக்கை மீது ஆணைய கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது சையத் ராத் அல் உசேன் பேசுகையில்: இலங்கையில் போர் முடிந்து 6 ஆண்டுகள் ஆகியும் பாதிக்கப்பட்ட வர்களுக்கு எந்த நிவார ணமும் கிடைக்கவில்லை என்றும், முந்தைய ராஜ பக்சே அரசு அளித்த வாக் குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்றும் கூறினார்.
விவாதத்தில் பங் கேற்று பேசிய இலங்கை தூதர் ரவிநாத ஆர்ய சின்கா, அனைத்து மக் களின் உரிமைகளையும் பாதுகாக்க அய்.நா.வுடன் இணைந்து இலங்கை செயல்படும் என்றும், இதற்காக சர்வதேச சமூ கத்தின் உதவிகளும், ஆலோ சனைகளும் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்தார்.
கூட்டத்தில் பேசிய அமெரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ரஷ்யா, கனடா உள்ளிட்ட பல் வேறு நாடுகளின் பிரதி நிதிகள் இலங்கை அரசின் நிலைப்பாட்டை ஆதரிப் பதாக தெரிவித்தனர்.
பிரான்சு, சுவிட்சர் லாந்து நாடுகளின் பிரதி நிதிகள் பேசுகையில், சர்வ தேச ஒத்துழைப்போடு போர்க்குற்ற விசாரணை நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இந்த விவாதத்தில் இந் தியா பங்கேற்கவில்லை.

Thursday, October 1, 2015

சுரண்டப்படும் தாழ்த்தப்பட்டவர்கள்


தமிழ்நாடு அரசு ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறை மானியக் கோரிக்கையின்மீது நடைபெற்ற விவாதத்தில் சட்டப் பேரவை உறுப்பினர் தோழர் அண்ணாதுரை (சி.பி.எம்.) சட்டப் பேரவையில் இத்துறை சம்பந்தப்பட்ட பல குறைபாடுகளையும், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் கூறியுள்ளார். இடை இடையே சம்பந் தப்பட்ட அமைச்சர்கள் குறுக்கிட்டு சில தகவல்களைச் சொன்னார்கள் என்றாலும் சட்டமன்ற உறுப்பினர் எடுத்துக் கூறியவற்றுள் பல உண்மைகள், குற்றச்சாற்றுகள் துல்லியமானவை என்பதில் அய்யமில்லை.
தமிழ்நாட்டில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின ருக்கான 27 ஆயிரம் காலிப்  பணி இடங்களை ஆறு மாதத்திற்குள் நிரப்ப வேண்டும் என்று 2014 ஜூலை மாதம் சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. ஓராண்டு ஆன பிறகும் நீதிமன்றத்தின் ஆணை நிறைவேற்றப்பட வில்லை என்று சட்டப் பேரவை உறுப்பினர் கூறினார். துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் இதற்காகக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழு 2.7.2015 அன்று கூடியது. பல்வேறு துறைத் தலைவர்களைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டது. துறைவாரியாக உள்ள பணி இடங்கள் கோரப்பட்டுள்ளன. அதன் பின்னர் இந்தப் பணி இடங்கள் நிரப்பப்படும் என்று மேலெழுந்த வாரியாகப் பதில் சொல்லி இருக்கிறார்.
27,000 பணி இடங்கள் என்பவை சாதாரணமானதல்ல; தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களின் சம்பந்தப் பட்ட மிக முக்கியமான பிரச்சினை இது. இவர்களைப் பொறுத்தவரை முதல் தலைமுறையாகப் படித்து விட்டு வந்தவர்கள்; இவர்களின் பெற்றோர்கள் இன்னும் கூலி வேலை செய்யக் கூடியவர்களாகத்தானிருப்பார்கள்.
முதல் தலைமுறையில் படித்து விட்டு வந்தவர்களுக்கு இவ்வளவுப் பெரிய எண்ணிக்கையில் வேலை வாய்ப்பு களிருந்தும், அதுவும் உயர்நீதிமன்றம் ஆணை பிறப் பித்தும் இப்பொழுதுதான் குழு போடப்பட்டுள்ளது என்று அமைச்சர் சொல்லுவது ஒரு பொறுப்பான பதிலாகக் கருதப்பட முடியாது.
கல்வியும், வேலை வாய்ப்பும்தான் தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் சமூக மரியாதையை அவர்களுக்குத் தேடித் தரும் - ஒடுக்கப்பட்டவர்களாகக் கிடந்த மக்கள் மத்தியில் சுயமரியாதை உணர்வு பீறிடும் - பொருளாதாரத்திலும் அடுத்த அடி எடுத்து வைக்கும் கம்பீரமும் கிடைக்கும்.
27,000 காலி இடங்கள் என்றால் 27,000 குடும்பங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை - ஒரு பெரிய எழுச்சியை தாழ்த் தப்பட்ட மக்கள் மத்தியில் உண்டாக்கக் கூடிய பிரச்சினை. இதில் இவ்வளவு அலட்சியமாக தமிழ்நாடு அரசு இருப்பது கண்டிக்கத் தக்கதாகும்.
தாழ்த்தப்பட்டவர்களுக்கான பஞ்சமி நிலங்கள் பற்றிய பிரச்சினையையும் சட்டப் பேரவை உறுப்பினர் திரு. அண்ணாதுரை வலியுறுத்திக் கூறியுள்ளார். 2009ஆம் ஆண்டு வருவாய்த்துறைக் கணக்குப்படி 1,10,794 ஏக்கர் பஞ்சமி நிலங்கள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நிலங்கள் குறித்த நிலவரங்களை சார்பதிவாளர் அலுவலகத் திற்கு அனுப்பி வைத்து வில்லங்கங்கள் சரி பார்க்க வேண்டும். 
பஞ்சமி நிலங்கள் மீட்புக் குழுவின் தலைவர் விநாயகம் 12.8.2012 அன்று தொடர்ந்த வழக்கின் அடிப் படையில் தவறான நில மாற்றத்தை ரத்து செய்யவும், மீண்டும் உண்மையான உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டது. ஆனால் இதுவரை அது நிறைவேற்றப்பட வில்லை. தானாகவும் செய்வதில்லை, உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும்கூட செயல்படுவதில்லை என்றால் தாழ்த்தப்பட்ட மக்கள் எங்கு சென்று பரிகாரம் தேடுவது?
ஏதோ ஒரு காலத்தில் ஆதிதிராவிடர் தோழர்கள் படிப்பறிவு அற்றவர்களாக கூலிகளாக - அடிப்படைத் தேவையும், உரிமைகளும் பறிக்கப்பட்டவர்களாக இருந்தார்கள் என்றால், திராவிடர் இயக்கம் தோன்றி விழிப்புணர்வூட்டப்பட்ட இந்தக் காலத்தில்கூட சட்டங்கள் இருந்தும், தீர்ப்புகள் இருந்தும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடிவு கிடைக்கவில்லை என்பது துயரமானது - கண்டனத்துக்குரியது!
இதில் இன்னொரு மிகப் பெரிய சுரண்டல் நடந்து வருகிறது. தாழ்த்தப்பட்டோருக்கென்று ஒதுக்கும் நிதியைக் கூட மாநில அரசுகள் அவர்களுக்கு பயன்படுத்துவ தில்லை - அந்நிதியின் பெரும் அளவுத் தொகை வேறு துறைகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது என்பது எவ்வளவுப் பெரிய ஏமாற்று வேலை?
தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று ஒதுக்கப் படும் 18 சதவீத ஒதுக்கீட்டில் 2 சதவிகிதம் மட்டுமே அவர் களுக்குச் செலவு செய்யப்படுகிறது என்ற பேரிடித் தகவலை தாழ்த்தப்பட்டோருக்கான தேசீய ஆணையம் கூறியுள்ளது.
தேசீய ஆணையம் கூறியுள்ள இன்னொரு தகவலும் மிக முக்கியமானது. தேசிய அளவில் தாழ்த்தப்பட்டோ ருக்கு எதிரான வன்கொடுமைகள் அதிக அளவில் நடக்கும் அய்ந்து மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். வன் கொடுமை தொடர்பான புகார்களின் அடிப்படையில் உட னடியாக வழக்குகள் தமிழ்நாட்டில் பதியப்படுவதில்லை; நீதிமன்றத் தலையீட்டுக்குப் பிறகே தமிழ்நாடு அரசு வழக்குகளைப் பதிவு செய்கிறது. தமிழ்நாட்டில் 70 சதவீத வழக்குகள் ஆதாரமில்லை என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்றால் - எந்த லட்சணத்தில் தமிழ்நாடு அரசின் துறைகள் செயல்படுகின்றன என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். தாழ்த்தப்பட்டோர் தொடர்பான பிரச்சினைகளைக் கண்காணிக்க மாநில அளவில் முதல் அமைச்சர் தலைமையில் கண்காணிப்புக் குழுக்கள் இருக்கத்தான் செய்கின்றன. இக்கூட்டம் ஆண்டுக்கு இரு முறை கூட்டப்பட வேண்டும். ஆனால் 2013 ஜூன் 25க்குப் பிறகு ஒருமுறைகூட தமிழ்நாட்டில் கூட்டப்படவில்லை.
தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகள் மட்டும் வேண்டும்; ஆனால், அவர்களுக்குச் சட்டப்படி உள்ள உரிமைகளும், திட்டங்களும் புறக்கணிக்கப்படுகின்றன என்பது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றே!
என்ன கொடுமை என்றால், தாழ்த்தப்பட்டோர்மீதான இத்தகைய சுரண்டல்கள்கூட வெளிச்சத்துக்கு வராதது தான்!
தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்! அதன்மூலம் தான் இந்தச் சுரண்டலை முறியடிக்க முடியும்.

பிஜேபி ஆட்சியில் நாடு நர மாமிசக் காடாகி விட்டது

பிஜேபி ஆட்சியில் நாடு நர மாமிசக் காடாகி விட்டது
பசுவைக் கொன்று சாப்பிட்டதாகப் புரளி கிளப்பி
முசுலிம் ஒருவர் படுகொலை, இன்னொருவர் கண்கள் குருடாக்கப்பட்டன

நடவடிக்கை எடுத்த காவல்துறையின்மீது இந்து அமைப்புகள் தாக்குதல்
தாதரி (உபி) அக்.1  உத்தரப் பிரதேசம் மாநி லம் தாதரி நகருக்கு அரு கில் உள்ள ஒரு கிராமத் தில் மாட்டு மாமிசம் சாப்பிட்டார்கள் என்று கூறி தந்தை கொல்லப்பட் டார். அவருடைய மகனை  அடித்துக் கண்களைக் குருடாக்கிய கொடூரச் சம்பவமும் நடந்துள்ளது. 
 தாதரி நகருக்கு அருகில் உள்ள பிசாரா என்ற கிராமத்தில் திங்கள் அன்று பசுமாடு ஒன்று காணாமல் போய்விட்ட தாகவும், அந்தப் பசுமாட் டின் மாமிசம் முகமது அக் லாக் வீட்டில் இருப்பதாக வும் சிலர் கூறினர்.

இந்த நிலையில் முக மது அக்லாக் மற்றும் அவர்களது வீட்டில் உள் ளவர்கள் தான் பசுவை வெட்டி சமைத்து தின்று விட்டார்கள் என்றும், மீதமுள்ள மாமிசத்தை குளிர்சாதனப்பெட்டியில் வைத்துள்ளார்கள் என்றும் அந்த ஊரில் உள்ள சில இந்து அமைப்பைச் சார்ந் தவர்கள் வதந்தி பரப் பினர்.

இதனை அடுத்து அந்த ஊரில் உள்ள கோவில் ஒன்றில்  இந்து அமைப்பினர் மக்கள் அனைவரையும் கூடச் சொன்னார்கள். கூட்டத் திற்குப் பிறகு முகமது அக்லாக் பசுவை வெட்டிய தாகவும் அதைத் தின்று விட்டு மீதமுள்ள மாமி சத்தை தெருவில் வீசிய தாகவும், ஆகையால் பசு வைத் தின்ற குடும்பத் திற்கு தகுந்த தண்டனை தரவேண்டும் என்றும் மக் களை தூண்டிவிட்டனர்.
 இந்தச் சம்பவம் குறித்து கொலை செய்யப்பட்ட முகமதுவின் மகளான சாஜிதா பத்திரிகையாளர் களிடம் கூறும்போது எங்கள் வீட்டிற்கு திங்கள் கிழமை நள்ளிரவு காவிக் கொடிகளைப் பிடித்துக் கொண்டு பலர் கும்பலாக வந்தனர்.

கும்பலைக் கண்டு பயந்து கதவை மூடி விட்டோம். ஆனால் அந்த கும்பல் கதவைக் கோடரி மற்றும் கம்பிகள் கொண்டு தாக்கத் துவங்கி விட்டனர். சில நிமிடங் களில் கதவு உடைந்து விட்டது. உள்ளே வந்த சிலர் என் தந்தையை அடித்து வெளியே இழுத் துச் சென்றனர் பிறகு கோடரியால் தலையில் அடித்தனர். எனது மூத்த சகோதரனை செங்கலால் தாக்கினர்.

எனது தாயாரையும் அடித்தனர். பிறகு எனது ஆடைகளையும் கிழித்து எறிந்து என்னை அரை நிர்வாணமாக்கினார்கள் என்று கூறினார். இச்சம்பவம் நடந்த போது அந்த ஊர் மக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்துகொண்டு இருந் தனர். இந்தச் சம்பவத்தில் முகமத் அக்லாக் சம்பவ இடத்திலேயே மரண மடைந்தார். அவரது 26 வயது மகன் டானிசின் பார்வையும் பறிபோனது.  இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறை ஆணையர் கூறும் போது, ஊரில் உள்ள கோவிலில் சிலர் கூடி வதந்திகளைப் பரப்பியுள்ளனர்.  

சரியாக இரவு 10 மணியளவில் ஊரில் ஒன்று கூடிய மக்களில் சிலர் பசுவைத் திருடி அதைக் கொன்று சாப்பிட்டவர்களுக்கு தண்டனை தர வேண்டும் என்று கூறினார்கள்.

இதனை அடுத்து திரளான மக்கள் கையில் ஆயுதங் களுடன் அக்லாக் வீட் டிற்குச் சென்று தாக் குதல் சம்பவத்தில் ஈடு பட்டுள்ளனர்.    மொத்தம் 10 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 பேர் தலைமறைவாகியுள் ளனர் என்று கூறினார்.   

இந்து அமைப்புகள் எதிர்ப்பு   காவல்துறையினர் 4 பேரைக் கைது செய்ததை எதிர்த்து ஊரில் உள்ள இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வன்முறை யில் இறங்கினர். காவல் துறையினரின் இரண்டு மோட்டார் சைக்கிளுக்குத் தீ வைத்தனர். காவல் துறை வாகனத்தையும் அடித்து நொறுக்கித் தீ வைத்தனர்.

வன்முறைச் சம் பவம் கட்டுக்கடங்காமல் போனதைத் தொடர்ந்து மாஜிஸ்ட்ரேட் சிறப்பு காவல்படையினரை சம்பவ இடத்திற்கு வரவ ழைத்தார். சிறப்புக்காவல் படையினர் ஊருக்கு வராமல் தடுக்க சாலை களில் சேதமேற்படுத்த முனைந்த கலவரக்காரர் கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். ஆனால் வன்முறையாளர்கள் காவல்துறையினர் மீது பயங்கர ஆயுதங்களால் தாக்கத் தொடங்கியதும் காவல் துறையினர் துப்பாக் கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் காயமடைந்தார். கல வரக்காரர்கள் தாக்கியதில் 3 காவலர்கள் காயமடைந்த னர்.   

சிறப்பு கலவரக் கட்டுப் பாட்டு பிரிவு காவல்துறையி னர் 3000 பேர் அந்த பகுதி யில் முகாமிட்டுள்ளனர்.  கொலை செய்யப்பட்ட அக்லாக் என்பவர் மட்டும் தான் அந்த ஊரில் வசதியாக வாழ்ந்தவர். சுமார் 400 குடும் பங்கள் அடங்கிய அந்த ஊரில் 2 முஸ்லீம் குடும்பம் மாத்திரமே உள்ளன. பக்ரீத் பண்டிகைக்காக ஒரு குடும் பத்தினர் வெளியூர் சென்று விட்டனர்.  

பசு மாட்டின் மாமிசம் அல்ல இந்த நிலையில் மாநில காவல்துறை ஆணையர் கூறும் போது குளிர்சாதனப் பெட்டியில் உள்ள மாமிசம் ஆரம்ப பரிசோதனையின் படி  அது பசு மாட்டின் மாமிசம் அல்ல என்று கூறினார்.

உலகளவில் பரபரப்பு!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிசாரா கிராமத்தில் மாமிசம் வைத்திருந்தார் என்ற வதந்தியை அடுத்து அடித்துக் கொலைசெய்யப் பட்ட முகமது அக்லாக் மற் றும் கண்கள் குருடாக்கப் பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கும் அவரது மகன் டானிஸ் விவகாரம் உலக அளவில் பெரும் பர பரப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது.  

இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அமெரிக்கா சென்ற மோடி இந்தியா முன்னேறி வருகிறது, நான் பிரதமர் ஆன பிறகு உலகமே இந்தியாவை திரும்பிப் பார்க் கிறது என்று கூறியிருந்தார். ஆனால் அவர் இதைச் சொல்லிவிட்டு டில்லி திரும் பும் முன்பே மாட்டு மாமி சத்தை வைத்திருந்தார்கள் என்ற வதந்தியின் பெயரில் இந்து அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஒரு குடும்பத்தையே அடித்து நொறுக்கியுள்ளனர். அனல் கக்கும் உ.பி. எம்.பி.,

இது குறித்து உத்தரப்பிர தேச சமாஜ்வாடி நாடாளு மன்ற உறுப்பினர் ஆஜம் கான் கூறியதாவது: மோடி பிரதம ரானதில் இருந்து அவரது பரிவாரங்கள் மிகவும் உற் சாகமாக இருக்கின்றன. அவர்களின் உற்சாகம் அள வுக்கு மீறிச் சென்று கொண் டிருக்கிறது. மனிதர்களின் உயிரை எடுப்பதுதான் மோடி பரிவாரங்களின் முழு நேரவேலையாகப் போய்விட் டது. 

இந்துத்துவா அரசியல் என்பது இப்படி முஸ்லீம் மக்களின் உயிரை எடுத்துத் தான் நடத்தவேண்டும் என் பது முசாபர் நகர் கலவரத்தி லேயே தெரிந்து விட்டது. ஆனால் உங்கள் பரிவாரத் தின் இந்த அராஜகப் போக் கால் இந்தியாவின் நற்பெயர் உலக அளவில் களங்கமேற் பட்டு வருகிறது. 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் வடு இன்னும் ஆறவில்லை. உங்கள் பரிவாரத்திற்கு நீங் கள் தலைமை வகிக்கின்றீர் கள். 

அப்படி என்றால் இவர் களின் இந்த கொடூர வன் முறைக்கும் நீங்கள் தான் பொறுப்பேற்கவேண்டும். ஊரில் தனியாக உழைத்து முன்னேறி வாழ்ந்த ஒரு இஸ்லாமியனை இப்படி வன்மம் வைத்து அடித்துக் கொலை செய்வது நீதியா? மோடி அவர்களே, அடக்கி வையுங்கள்

குஜராத்தில் கொலைக ளைச் செய்த போதே அமை தியாக இருந்த உங்களுக்கு இது எல்லாம் பெரிதாகவே தெரியாது. ஆனால் இந்தியா போன்ற மாபெரும் குடியரசு நாட்டில் இது போன்ற செயல்கள் தற்போது தொடர்ந்து நடந்துவருவது மிகவும் அபாயகரமானது. உங்களின் பரிவாரங்களை அடக்கிவையுங்கள் என்று கூறினார். மேலும் 2017இல் நடை பெற இருக்கும் உத்தரப் பிர தேச தேர்தலுக்கு முன்பு பாஜக இதைவிடக் கொடூர மான செயல்களைச் செயல் படுத்தத் திட்டமிட்டுள்ளது என்றும் கூறினார்.

ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை முகமது அக்லாக்கை இந்து அமைப்புகள் கொலை செய்த விவகாரம் தொடர் பாக பேசிய உபி முதல்வர் அகிலேஷ் யாதவ் பேசும் போது, அக்லாக் கொலையா னது மிகவும் துக்ககரமான நிகழ்ச்சியாகும், கொலையான முகமது அக்லாக் குடும்பத்தி னரின் வீடு முற்றிலும் சேத மடைந்துள்ளது. அவர்க ளுக்கு முதல்வர் நிவாரண உதவியாக ரூ10 லட்சம் அரசு சார்பில் வழங்கப்படும். பலத்த காயத்துடன் மருத்துவமன யில் சேர்க்கப்பட்ட அவரது மகன் டானிஸின் அனைத்து மருத்துவ உதவிகளையும் அரசு சார்பில் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். மேலும் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட வர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை கள் எடுக்க உத்தரவிட்டுள் ளேன் என்றார்.

பாஜ.க. எம்.எல்.ஏ. ஆணவப் பேச்சு

உத்தரப் பிரதேச பாஜக தலைவர்களுள் ஒருவரான சிறீசந்த சர்மா என்பவர் கூறும் போது மக்களின் உணர்வு களை மதித்து நடக்கவேண் டும், ஊர் மக்கள் இந்துக்கள். இந்துக்கள் பசுவைத் தெய்வ மாக மதிப்பவர்கள், அவர் களுக்குப் பசுவைக் கொலை செய்து அதை சாப்பிடுவ தைப் பார்த்தால் ரத்தம் கொதிக்கத்தான் செய்யும், என்றார். அப்பகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் நாகர் சிங் கூறியதாவது:

ஊரில் ஒருவர் மாட்டி றைச்சியைத் தின்பதைப் பார்த்துக் கொண்டு அமைதி யாக இருந்து அதற்காக காவல்துறையை எதிர்பார்ப் பது என்பது மக்களால் இய லாத காரியம், இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கும் போது காவல்துறை யால் என்ன செய்யமுடியும்? என்றார். ஊரில் பட்டறை வைத்து பிழைப்பு நடத்தும் முகமது அக்லாக் சமீபத்தில் விளைநிலமும் வாங்கியுள் ளார். மிகவும்  ஏழைக் குடும் பமாக இருந்த தனது குடும் பத்தை தனி மனிதனாக உழைத்து வீடுகட்டி, தற் போது நிலமும் வாங்கியுள் ளார். அவருடைய மகன் தற் போது விமானப் படையில் பொறியாயளராக பணியாற்றி வருகிறார். அவர் மனைவி, மற்றும் 70 வயது தாயாரும் தாக்கப்பட்டுள்ளனர்.


சம்பவம் நடந்த சில மணிநேரத்திற்கு முன்பு அங்குள்ள  கோவில் ஒன்றி லிருந்து முகமது அக்லாக் கையும் அவர்களது குடும்பத் தையும் ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து அடித்துக் கொலை செய்யுங்கள் என்று அறி வித்து இருக்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக அந்த ஊர் கோவில் அர்ச்சகரை காவல் துறையினர் விசா ரணை செய்து வருகின்றனர்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...