அக்டோபர் 2: அண்ணல் காந்தியாரின் பிறந்த நாளில்....!
தந்தை பெரியார் சந்தித்த இரண்டு காந்திகள்!!
- கி.வீரமணி
தேசப்பிதா என்று அனைவராலும் மதிக்கப்பட்ட மகாத்மா (இப்பெயர் இரு நூற்றாண்டுக்கு முன்பே மகாராஷ்டிர சமுதாயப் புரட்சியாளர் ஜோதிபா பூலே அவர்களுக்கு மக்கள் அளித்த பட்டம்) - மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களை, தந்தை பெரியார் அவர்கள் தனது ஒப்பற்ற தலைவராக - காங்கிரசில் சேர்ந்த போது (1919 வாக்கில்) ஏற்று, அவரே இவர் பால் மிகுந்த மரியாதையும், மதிப்பும் கொள்ளும் அளவுக்கு அருந் தொண்டாற்றி ஆச்சரியப்பட வைத்தவர்.
கள்ளுக்கடை மறியலின்போது மகளிர் தலைமை தாங்கி நடத்தியதை அவரது ஆங்கில வார ஏட்டில் காந்தியார் குறிப்பிட்டுள்ளார். 1. திராவிட தேசத்தில் தான் (தென்னாட்டில்) அன்னை ஈ.வெ.ரா. நாகம்மையார், பெரியாரின் தங்கை S.R. கண்ணம்மாள் உட்பட பல பெண்கள் நடத்திய அறப்போர், ஒத்துழையாமை இயக்கம் - இவைகளைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, காந்தியார் இதை நிறுத்துவது என்பது என் கையில் இல்லை; ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்மணிகளிடம் தான் உள்ளது என்று கூறிடும் அளவுக்கு,காந்தியாரின் பேரன்பைப் பெற்றவர்கள்.
2. மதுவிலக்குப் பிரச்சாரத்திற்காக தனது தோப்பில் உள்ள 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தி தனித் தன்மையான வரலாறு படைத்தவர் தந்தை பெரியார் என்பது காந்தியாருக்குத் தெரியும்.
3. கைராட்டினம், தக்ளி மூலம் கதர் நூல் நூற்க, கைகள் வீங்கும் அளவிற்கு தந்தை பெரியார் ஆர்வம் காட்டியதைக் கண்டு, இனி கொஞ்ச நாள் கதர் நூல் நூற்க வேண்டாம் என்று விதி விலக்கு தந்தார் அண்ணல் காந்தியார்!
அவ்வளவு மதிப்பும், செல்வாக்கும் காந்தியாரிடம் உள்ள தந்தை பெரியார் - ஏன் காந்தியாரையும், காங்கிரசையும் விட்டு 1925இல் வெளியேறினார்.
சமூக நீதிப் போராட்டம் - வகுப்புவாரி உரிமை - கேட்டு, காங்கிரஸ் ஏற்காத நிலையில் வெளியேறினார் என்பது ஒரு பக்கம்.
அதே போல காங்கிரசில் இருந்த போதே காந்தி யாரின் ஆழ்ந்த வர்ணாசிரம தர்மப் பற்று கண்டு, தந்தை பெரியார் காந்தியிடம் பெரிதும் மாறுபட்டார்.
(அ) ஆதி திராவிடர்களுக்குத் தனிக் கிணறு, தனிக் குளம், தனி இடம் என்ற காந்தியார் ஹரிஜன நலக் கொள்கையை அங்கேயே தந்தை பெரியார் எதிர்த்தார். (ஆ) 1924இல் சேரன் மாதேவி குருகுலத்தில் வர்ணா சிரம தர்ம நம்பிக்கையினால் வ.வே.சு. அய்யர் பக்கமே - பார்ப்பனர் பக்கமே நியாயம் வழங்கிய காந்தியாரின் போக்கு பெரியாருக்கு மட்டுமல்ல - பி. வரதராஜுலு நாயுடு போன்றோருக்கும் பிடிக்கவில்லை.
சமையல்காரர் பிராமணராக இருக்கட்டும் என்ற காந்தியாரின் தீர்ப்பு இவ்விருவர்களால் ஏற்கப்படவில்லை.
(இ) வைக்கம் சத்தியாகிரகத்தில், தமிழ்நாட்டிலிருந்து பெரியார் சென்று கலந்து கொண்டதை காந்தியார் ஏற்கவில்லை. மனமாற்றம் நம்பூதிரிகளிடம் - உயர் ஜாதியினரிடம் ஏற்படுவதே நல்லது என்று கூறியதுகேட்டு அதிர்ந்து பெரியார், காந்திக்கே கடிதம் எழுதினார், அத்தெருக்களில் நடமாடும் நாயும், பன்றியும், கழுதையும் சத்தியாகிரகம் செய்தா அவ்வுரிமையைப் பெற்றன? அவைகளுக்கு உள்ள உரிமை ஆறறிவு படைத்த கீழ் ஜாதி ஈழவ சகோதரர்களுக்குக் கிடைக்கக் கூடாதா? என்று அக்கடிதத்தில் நறுக்கென்று எழுதினார்.
காந்தியின் இந்த வர்ணதர்ம பிடிப்பு, பெரியாரை அவரிடமிருந்து வெகு தொலைவுக்குக் கொண்டு வந்து நிறுத்தியது! பிரிந்த பிறகும் பெங்களூரில் காந்தியாரைச் சந்தித்த போது காந்தியார் - பெரியார் இடையே நடந்த உரை யாடல் மிகப் பிரபலமானது. தான் குருவாகவும், தலைவ ராகவும் கருதிய காந்தியிடமிருந்து மாறுபட்டதேன் என்பதை விளக்கும் வண்ணம் அமைந்த ஒன்று.
பிறகு காந்தியின் வர்ணதர்ம ஆதரவு, ஹரிஜன் என்று ஒரு பெயர் சூட்டி தாழ்த்தப்பட்ட மக்களை உயர்த்தி விடலாம் என்பது போன்ற பல நடவடிக் கைகளை, தனித்தொகுதிக்காகப் போராடி வெற்றி பெறும் நிலையில் இருந்த டாக்டர் அம்பேத்கரை அச்சுறுத்தி அழுத்தம் கொடுக்க மேற்கொண்ட உண்ணா நிலை போராட்டமும் தந்தை பெரியாரால் பெரிதும் ஏற்றுக் கொள்ளப் படாதது மட்டுமல்ல; வன்மையான கண்டனத் திற்கும் ஆளாகியது! (அம்பேத்கருக்கே தந்தி கொடுத்தார் பெரியார் - காந்தியாரின் உயிரைவிட பல கோடி தாழ்த்தப் பட்ட மக்களின் உரிமை சமத்துவம் முக்கியம்) என்றார்!
அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்கள், கோட்சே என்ற மராத்திப் பார்ப்பனர் - ஆர்.எஸ்.எஸிடம் பயிற்சி பெற்ற ஹிந்து மகாசபை உறுப்பினர், காந்தியாரை 1948 ஜனவரி 30இல் சுட்டுக் கொன்ற பிறகு காந்தி மதம், காந்தி தேசம் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று அறிக்கை விட்டார்; தந்தை பெரியாரின் இந்த மாற்றம் சந்தர்ப்பவாதமோ அல்லது நீரோட்டத்தில் கலப்பதோ அல்ல; அந்த நிலைப்பாட்டிற்கு என்ன காரணம் என்று தந்தை பெரியார் அவர்கள் 1948இல் விடுதலையிலும் தெளிவாக குடிஅரசு ஏட்டிலும் எழுதியுள்ளார்.
முந்தைய காந்தியார் வர்ணசிரமவாதி; பின்னால் அவருக்குள் வகுப்புரிமைபற்றி ஒரு தெளிவு - மாறுபட்ட சிந்தனை உதித்தது!
1947 வாக்கில் சென்னை மாநில முதலமைச்சராக இருந்த ஒழுக்க சீலர் ஓமாந்தூர் ஓ.பி. இராமசாமி (ரெட்டியார்) அவர்களை வகுப்புவாதி என்று பார்ப்பனர்கள் வர்ணம் தீட்டி, பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் தங்கள் ஜாதியினருக்கு இடம் தர மறுக்கிறார் என்று காந்தியாரிடம் மெமோரென்டம் தந்தார்கள். அதுபற்றி ஓ.பி. ஆரிடம் விசாரிக்கச் சொல்லி தனது செயலாளர் (மகாதேவதேசாய்) அவர்களை அனுப்பினார்.
காந்தியாருக்கு ஓமாந்தூரர், தக்க புள்ளி விவரங் களுடன் - பார்ப்பனர் விகிதாச்சாரத்திற்கு அதிகமான இடங்களைப் பெற்றும், ஏகபோக ஆதிக்கம் செலுத் திடவே விரும்புகின்றனர் என்று விளக்கியது, காந்தியின் கண்களைத் திறந்தது!
பார்ப்பனர்களைப் பார்த்து கடிந்து கொண்டு, வேதம் ஓதுதல்தானே வேதியர்க்கழகு; உங்கள் குல தர்மப்படி. நீங்கள் ஏன் டாக்டர், என்ஜினியர்களாக விரும்பு கிறீர்கள்? என்று கேட்டார்.
ஆகா; காந்தி நமக்கு விரோதியாகி விட்டார்; சமூக நீதி பக்கம் சாய்ந்து விட்டார்; இனி நமக்கு அவர் பயன்பட மாட்டார் என்று அன்றே முடிவு கட்டினர் பார்ப்பனர்கள்.
அதோடு, இந்திய அரசியல் அமைப்பில் மதத்தைக் கலக்கக் கூடாது என்று அழுத்தத் திருத்தமாகக் கூறினார்.
இந்த இரண்டு நிலைப்பாடும் பார்ப்பனருக்கு விரோதமாக காந்தியார் எடுத்த நிலைப்பாடு.
அப்படி கூறிய சில வாரங்களில் காந்தியார் சுடப்பட்டார்; காந்தி கொலை சதி நடத்தி நடந்தது!
இதை தந்தை பெரியார் தனது டைரியில் கைப்பட எழுதி வைத்துள்ளார்!
பிறகு எழுதினார்.
இதை தந்தை பெரியார் தனது டைரியில் கைப்பட எழுதி வைத்துள்ளார்!
பிறகு எழுதினார்.
முன்பு நான் எதிர்த்த காந்தி வேறு -
இப்பொழுது நான் ஆதரிக்கும் காந்தி வேறு
இப்பொழுது நான் ஆதரிக்கும் காந்தி வேறு
முந்தைய காந்தி வர்ணாசிரமவாதி. பிந்தைய காந்தி - மனமாற்றம் அடைந்த- உண்மைகளைப் புரிந்த - வகுப்புரிமையை, மதச் சார்பின்மையை ஆதரித்த காந்தி-
இது பார்ப்பனீயத்தின் அடிவேரை வெட்டுவதாக இருப்பதால், காந்தியாரை - ஆரியம் விட்டு வைக்க விரும்பவில்லை - இதனைப் பெரியார் உணர்ந்தே தனது அறிக்கையை விடுத்தார்.
இது பார்ப்பனீயத்தின் அடிவேரை வெட்டுவதாக இருப்பதால், காந்தியாரை - ஆரியம் விட்டு வைக்க விரும்பவில்லை - இதனைப் பெரியார் உணர்ந்தே தனது அறிக்கையை விடுத்தார்.
இன்று காந்தியாருக்கு பா.ஜ.க. நாமாவளி பாடுவது அதன் தந்திரங்களில் (Strategy)
ஒன்று. மறவாதீர்! புரிந்து கொள்வீர்!!
ஒன்று. மறவாதீர்! புரிந்து கொள்வீர்!!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment