Tuesday, November 11, 2014

பிரார்த்தனையால்தான் வெற்றியா?..........




கிரிக்கெட் மட்டையைப் பிடித்து கோடி கோடியாக சம்பாதித்த சச்சின் டெண்டுல்கர் தன் வரலாறு எழுதி யுள்ளாராம். ஏடுகள் பக்கம் பக்கமாகசெய்திகள் வெளி யிடுகின்றன.

அதில் ஓரிடம் : 2011ஆம்ஆண்டு உலகக் கோப் பையை வென்றது என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாகும். இறுதிப் போட்டியில் ஆட்டமிழ்ந்து நான் வெளியேறிய பிறகு ஆட்டத்தைப் பார்க்கவில்லை.

ஸ்டேடியத்தின் உள்ளே இருந்த நான் வெற்றிக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தேன் வெற்றிபற்றி எனக்குத் தெரிய வந்ததும் துள்ளிக் குதித்தேன் அனைவருடனும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன்.

என் வாழ்க்கையில் இது பெருமையளிக்கக் கூடியதாகும் என்கிறார்.
விளையாட்டு என்பது திறமைக்கான களம்! இதில் கடவுளுக்கும், பிரார்த்தனைக்கும் ஏது இடம்?

பிரார்த்தனையால் வெற்றி என்றால் விளையாட்டு வீரர்களின் சாதனைக்கு என்ன மதிப்பு? இந்த இந்துத் துவா வாதம் எவ்வளவு முறைகேடானது என்பதைச் சிந்திக்க வேண்டாமா? டெண்டுல்கரின் பிரார்த்தனை யால்தான் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதா? இவ்வளவுக்கும் இவர் இந்த இறுதிப் போட்டியில் அடித்துக் கிழித்த ஓட்டங்கள் வெறும் 18 தான்.

இந்தக் கேவலத்தில் இவர் பிரார்த்தனையால்தான் இந்தியா ஜெயித்ததாம். ஹி... ஹி...


மருந்துகளின் பக்க விளைவுகள் தெரியாமல் அதனை பரிந்துரைக்கும் மருத்துவர்கள்: ஆய்வு தகவல்


டில்லி, நவ.9- இந்திய மருத்துவ நெறிமுறைகள் பத்திரிகையில் பதிவு செய்யப்பட்ட ஆய் வறிக்கை யில், நோயுற்றவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்து களின் பக்க விளைவுகள் குறித்து மருத்துவர்களுக்கு போதுமான தகவல் கிடைப் பதில்லை எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மருந்துகளின் விற்பனையை அதிகரிக்க மருத்துவம் சார்ந்த பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கின்றன. இவ்வாறு அளிக்கப்படும் விளம்பரங் களில், மருந்து தயாரிப்பில் எந்தெந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து தெளி வான தகவல்கள் தரப்படு வதில்லை.

பெரும்பாலான மருத்துவர்கள், மருந்துகள் குறித்து தகவல் அறிய மருத்துவ பத்திரிக்கைகள் மற்றும் மருத்துவ பிரதிநிதி களை சார்ந்து உள்ளனர். மருத்துவர்களுக்கு மருந்து களின் தன்மை குறித்த தெளிவான தகவல் இல்லா ததால் அவர்கள் மருந்து களின் பக்க விளைவுகளை அறியாமலேயே நோயுற்ற வர்களுக்கு அதனை பரிந்து ரைக்கும் நிலை ஏற்படுகிறது.

இந்திய மருத்துவக் கழக பத்திரிகையில் 2011 டிசம்பர் முதல் 2012 நவம்பர் வரை கொடுக்கப்பட்ட 145 மருந்து களுக்கான 54 விளம்பரங் களில், இரண்டு விளம்பரங் களில் மட்டும் மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப் பட்ட பொருட்கள் குறித்த தகவல் இருந்தது. 2 விளம் பரங்களில் மருந்தின் பக்க விளைவுகள் குறிப்பிடப் பட்டிருந்தன. மருந்து உபயோகிப் பதற்கு முன் தேவையான முன்னெச்சரிக்கை நடவ டிக்கை குறித்து இரண்டு விளம்பரங்கள் தெரிவித் திருந்தன.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த எம்.ஜி. எம் மருத்துவ கல்லூரி மற்றும் எல்.எஸ்.கே மருத் துவமனை ஆய்வாளர்கள், அனைத்து விளம்பரங் களிலும் மருந்துகளின் பிராண்ட் பெயர் குறிப் பிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் அவற்றில் வெறும் 61 சதவீத விளம்பரங்கள் மட்டும் மருந்தின் மருத்துவ சிகிச்சை பயன்கள் குறித்த தகவலை தெரிவித்ததாகவும் கூறியுள்ளனர்.

மருந்துகள் குறித்த தகவலுக்கு மருத்துவ பத்திரிகை விளம்பரங்களை சார்ந்திருப்பதாக மருத்து வர்கள் தெரிவித்துள்ள நிலையில், மருத்துவர்கள் நோயுற்றவர்களுக்கு மருந் துகள் பரிந்துரைக்கும் போது அதிக கவனத்துடன் செயல்படுமாறு இந்திய மருத்துவ கவுன்சில் வலியு றுத்தியுள்ளது.

Monday, November 3, 2014

மோடியின் மேடைப் பேச்சு மெச்சத் தகுந்ததாக இல்லை

இந்தியாவின் பிரதமர் என்ற ஒரு நிலைக்கு வந்த பிறகும்கூட நரேந்திர மோடி அதற்கான தன்மையில்  நடந்து கொள்வதாகத் தெரியவில்லை; குறிப்பாக அவர் வாயைத் திறந்தாலே யாரையாவது சாடுவது - எதை யாவது

குற்றப்படுத்துவது? என்ற ரீதியில் இருக்கிறதே தவிர, 125 கோடி மக்கள் வாழும் ஒரு நாட்டுக்கான பிரதமர் என்ற தகுதியில் நாம் இருக்கிறோம் என்ற எண்ணம் அவருக்கு வருவதில்லை.

வல்லபாய் படேல் பிறந்த நாள் விழாவில் பங்கேற் றால் அவரைப் பற்றிச் சிறப்பாகச்  சொல்லுவதற்கு எவ்வளவோ சேதிகள் உண்டு. அவரைப் புகழ வேண்டும் என்பதற்காக காந்தியாரைச் சிறுமைப்படுத்த வேண்டுமா? படேல் என்ற ஒருவர் இல்லையென்றால் காந்தியார் என்பவரே கிடையாது என்று பேசியுள்ளார்.

காந்தியாரைக் கொல்ல சதித் திட்டங்கள் பின்னணியில் இருக்கின்றன என்று தெரிந்திருந்தும், காந்தியார் (1948) கொலை செய்யப்படுவதற்கு முன்பே கூட பல முறை கொலை முயற்சிக்கு ஆளாக்கப்பட் டார் என்பதை அறிந்திருந்தும், உரிய வகையில் காந்தியாருக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளை அளிக்கும் கடமையில் உள்துறை அமைச்சராகவிருந்த படேல்  முன்னெச்சரிக்கையுடன் செயல்படத் தவறி விட்டார் என்ற குற்றச்சாற்று பொதுவாக அவர்மீதுண்டு. அதை அறிந்த படேல் பதவி விலகல் கடிதத்தை பிரதமர் நேருவுக்கு அனுப்பினார். இதை வைத்துக் கொண்டே ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு எப்பொழுதுமே படேல் மீது இனந் தெரியாத ஒரு பற்றுதல் உண்டு. (Soft Corner).
காந்தியார் படுகொலையைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். தடையைப் பிறப்பித்தவரே இந்தப் படேல்தான். அதையெல்லாம் வசதியாக மறந்து விடுவார்கள் அல்லது மறைப்பார்கள்.

என்னதான் காந்தியார் ராமபஜனை பாடினாலும், இந்துத்துவாவாதிகளுக்குக் காந்தியாரை அறவே பிடிப்பதில்லை; பாகிஸ்தான் பிரிவினைக்கு அவர்தான் காரணம் என்ற நினைப்பு! அந்தக் கால கட்டத்தில் .கலவரத்தில் சிறுபான்மை மக்கள் பக்கம் காந்தியார் நின்றதெல்லாம் ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு அவர்மீது கடும் கோபமும் ஆத்திரமும் கரை புரண்டு ஓடக் காரணமாக இருந்தன.

போதும் போதாததற்கு இந்தியா மதச் சார்பற்ற நாடு - கோயில் காரியங்களுக்கு அரசு கஜானாவிலிருந்து ஒரு பைசாகூட செலவழிக்கப்படக் கூடாது.

நான் மதிக்கும் ராமன் வேறு; இராமாயண ராமன் வேறு என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்து விட்டார் காந்தியார் என்ற உடன் இந்து வெறிக் கும்பல் காந்தி யாரை உயிரோடு விட்டு வைக்கக் கூடாது என்ற முடி வுக்கு வந்து விட்டனர்; திட்டம் போட்டு காந்தியாரின் உயிரையும் குடித்தனர் - கேடு கெட்டவர்கள்.

காந்தியார்மீதான வெறுப்பு அவர்களைப் பொறுத்த வரை இன்று வரை தொடரத்தான் செய்கிறது. அதனால் தான் பிரதமர் மோடி படேல் என்ற ஒருவர் இல்லை யேல் காந்தியாரே கிடையாது என்று கூறி, படேல் போர்வையில் காந்தியாரைச் சிறுமைப்படுத்துகிறார்.

மைநாதுராம் கோட்சே போல்தே! என்ற ஒரு நாடகத்தையே மும்பை - டில்லி நகரங்களில் வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது நடத்திக் காட்டவில்லையா?
காந்தியார் என்ற தனி மனிதனைக் கொல்லவில்லை; காந்தி என்ற அரக்கனைக் கொன்றேன் என்று கோட்சே கூறுவதாக அந்த நாடகத்தில் காட்சி இடம் பெற்றதே!

அதே போல் நேருவையும் அவர்களுக்கும் அறவே பிடிக்காது; அதனால்தான் கேரளாவில் நடைபெற்று வரும் கேசரி என்ற ஆர்.எஸ்.எஸ். ஏட்டில் காந்தி யாரைக் கொன்றதற்குப் பதிலாக கோட்சே நேருவைக் கொன்றிருக்க வேண்டும் என்று எழுதுகிறார்கள்.

படேலைப் பாராட்ட வேண்டும் என்பதைவிட படேலை துக்கிப் பிடித்து காந்தியாரையும், நேருவை யும் சிறுமைப்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். நேரு ஒரு பகுத்தறிவுவாதி என்று அறியப் பட்டவர்! நாம் சாணி யுகத்தில் வாழவில்லை; பக்ரா நங்கல் போன்ற வளர்ச்சித் திட்டங்கள்தான் உண்மை யான கோயில்கள் என்று அணை திறப்பு விழாவில் ஜவகர்லால் நேரு பேசினார் என்றால், அது இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு பிடித்தமாக இருக்குமா?

நேருவுக்குப் பதிலாக படேல் பிரதமராகியிருந்தால் நாட்டை நல்ல அளவுக்கு முன்னேற்றியிருப்பார் என்று இவர்கள் பேசுவதெல்லாம் உள்நோக்கத்தோடுதான்.

ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் கண்ணாடி மாளிகையில் இருப்பவர்கள் என்பதை மறந்து விடக் கூடாது. கண்ணாடி மாளிகையிலிருந்து கல்லெறிந்தால் அதன் எதிர் விளைவு என்னவாக முடியும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

பிரதமராக இருக்கக் கூடிய நரேந்திரமோடி தன்னை ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரராகவே நினைத்துக் கொண்டு மேடைப் பிரசங்கம் செய்து கொண்டு வருகிறார். அரசு மேடைகளை  அரசியல் பிரச்சார மேடைகளாகப் பயன்படுத்துவது நாகரிகமன்று.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் அரசின் வானொலியைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு மணி நேரம் தம் கட்சிப் பிரச்சாரத்தைப் பிளந்து கட்டினார் எவ்வளவு எதிர்ப்புகள் வெடித்துக் கிளப்பின!

இதில் என்ன  வேடிக்கை தெரியுமா? ஆர்.எஸ்.எஸ். தலைவரின் ஒரு மணி நேர வானொலி உரையை பிரதமர் நரேந்திர மோடியோ வானளாவப் புகழ்ந்து தள்ளினார். ஊழல் என்பது பணம் பெறுவது மட்டுமல்ல; சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதும், நெறி பிறழ்ந்து நடந்து கொள்வதும்கூட ஊழல்தான்.

ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் இவர்கள் போற்றும் இந்து மதம் என்பதே ஊழலின், ஒழுக்கக் கேட்டின் ஊற்றுக் கண்தானே - பிறவியில் பேதம் பேசுவது தானே! தன் கண்ணில் உத்திரம் இருப்பது தெரியாமல் அடுத்தவர் கண்களில் தூசு விழுந்தது பற்றி நீட்டி முழக்கலாமா?

Saturday, November 1, 2014

சூனியம் வைப்பதும் ஏவல் செய்வதும் உண்மையா?

- பொதட்டூர் புவியரசன்


ஒருநாள் காலை ஏழுமணி இருக்கும். அன்றைய நாளேடுகளைப் புரட்டிக் கொண்டிருந்தேன். தொலைபேசி ஒலித்தது. மத்தூர் பன்னீர்செல்வம் என்பவர் பேசினார். அவர் ஊருக்குப் பக்கத்துக் கிராமத்தில் நடக்கும் ஒரு செய்தியைப் பற்றிக் கூறினார். எனக்கும் வியப்பாக இருந்தது. செய்தி இதுதான்.

பறக்கும் தட்டு திறக்கும் கதவு

திருத்தணிக்குப் பக்கத்தில் புச்சி ரெட்டிபள்ளி என்றொரு கிராமம். அங்கே ஒரு வீட்டில் யாரோ சூனியம் வைத்து ஏவல் செய்து விட்டிருக் கின்றனர். வீட்டில் உள்ளபொருட்கள் தெருவில் கிடக்கின்றன. புறக்கடையில் இருந்து கல்லும் கட்டையும் வீட்டுக்குள் வந்து விழுகின்றன. பாத்திரங்கள் எல்லாம் சிதைந்து கிடக்கின்றன. அவ்வீட்டில் எந்த பொருளும் வைத்தது வைத்த மாதிரி இருப்பதில்லை. வீட்டிலிருந்த குடை புறக்கடை மரத்தில் உள்ளது. மருமகள் சாப்பிடும்போது தட்டு கூடப் பறக்கிறது. கதவுகள் தானே திறந்து கொள்கின்றன. இதைப்போன்று அசாதாரண செயல்கள் இன்னும் பல நடப்பதாகக் கூறினார்.

இந்தச் செய்திகளைக் கேட்கக் கேட்க வியப்பாகவும்இருந்தது. வேடிக்கை யாகவும் இருந்தது. என்னுடன் இருந்த பகுத்தறிவாளர் கழக நண்பர்கள் சிலருடன் அன்று பகல் பன்னிரண்டு மணிக்கெல்லாம் அங்குச் சென்றேன். ஒரு ஓடு போட்ட தட்டை வீடு. அய்ம்பது வயதுக்கு மேற்பட்ட கணவன் மனைவி. அவர்களுக்கு இரண்டு மகன்கள். ஒரு பெண், மூத்த மகனுக்குத் திருமணமாகி அந்தப் பெண் வாழ விரும்பாமல் விவாகரத்து போல சமுதாயத்தீர்ப்பு பெற்றுத் தாய்வீடு சென்று விடுகிறாள். இந்த மூத்த மகனுக்கு மறுமணம் செய்யப் பெண் தேடுகையில் முதல் பெண்ணைக் கொடுத்தவரே தன் இரண்டாவது மகளைத் தருவதாகக் கூற, திருமணம் முடிந்தது.

இந்த இரண்டாவது திருமணம் நடந்த பிறகுதான் குடும்பத்தில் பிரச் சினைகள் ஆரம்பமாயின. நாளெல்லாம் நெசவுத் தொழில், வேளைக்கு உணவு, வேளைக்கு உறக்கம் என்று அமைதி யான நீரோட்டம் போல் ஓடிக் கொண்டிருந்த குடும்பத்தில் சூறாவளி வீசத் தொடங்கியது.

துடிக்கும் கணவன்; தடுக்கும் ஏவல் திருமணமான மூத்த மகன் தன் மனைவியை ஆசையாகத் தொட முடியவில்லை அந்த நேரத்தில் தன்னை யாரோ அடிப்பதாகச் சத்தமிடுவாள். இரவு நேரம் வந்தால் ஏதோ ஒரு ஏவல் அவளை ஆட்டிப் படைக்கிறது. மருமகள் சாப்பிடும்போது சாப்பாட்டுத் தட்டைக் கணவனோ, மாமனாரோ அழுத்திப் பிடித்துக் கொள்கிறார்கள். இல்லாவிட்டால் தட்டு நகர்ந்து போய்விடுகிறதாம். வீட்டில் துணிகள் கிழிக்கப்பட்டிருக்கின்றன. அவர்களுடைய நெசவுத் தொழிலில் ஒரு இழை அறுந்தாலே தொழில் தடைப்படும்; ஒரே நேரத்தில் ஆயிரக் கணக்கான இழைகள் அறுக்கப்பட்டி ருக்கும்; அதைச் சரிசெய்து மீண்டும் தொழில் தொடங்க ஒரு வாரம் ஆகும்; மீண்டும் அறுக்கப்பட்டிருக்கும்.

யாரோ ஏவல் செய்து விட்டார்கள். அதனால்தான் இப்படி நடக்கிறது; கோயிலுக்குச் சேவை செய்து பார்த்தோம். பத்தாயிரம் இருபதாயிரம் செலவு செய்து சூனியம் எடுத்துப் பார்த்தோம். என்ன செய்தும் இன்னும் நின்றபாடில்லை என்று அவர்கள் வருத் தப்பட்டுக் கூறினார்கள். உன்னிப்பாகக்  கேட்டு விசாரணையை முடித்துக் கொண்டோம்.

சிக்கிய இராட்டை; சிதறிய கட்டை
 
நாங்கள் இருந்த நேரத்தில் ஏதேனும் நடக்கிறதா என்று கவனித்துக் கொண்டிருந்தோம். மருமகள் நூல் சுற்றிக் கொண்டிருந்தாள். அவர் லேசாக இராட்டையைத் தட்டிவிட அதில் நூல் சிக்கிக் கொண்டது. யாருடைய கை பட்டாலும் நூல் சிக்கிக் கொள்வது இயல்பே. ஆனால், மிரண்டு போயுள்ள அந்தக் குடும்பம் இதையே மிகைப்படுத்தியது. இப்படித்தாங்க, ஏதோ ஒண்ணு நடக்குது என்றார்.

சில குறிப்புகளை எடுத்துக்கொண்டு அன்று நாங்கள திரும்பி விட்டோம். அடுத்த நாள் சென்ற போது புழக் கடையில் இருந்த கட்டைத்துண்டுகள், கற்கள் போன்றவை வீட்டுக்குள் வந்துவிழுந்து கிடந்தன. அவற்றைக் காண்பித்து எங்க மருமகதான் இங்க உட்கார்ந்துக்கிட்டிருந்துச்சு, அவ கண்ணெதிரிலேயே இதெல்லாம் வந்து விழுந்தது என்றார் மாமியார்.

அவற்றைச் சோதித்து அவற்றி லிருந்து கைரேகை எடுப்பதாகக் காட்டிக்கொண்டோம். அன்றைய விசாரணையில் இன்னொரு செய்தியும் கிடைத்தது. இந்தக்குடும்பத்தில் இவ்வாறு நடப்பதெல்லாம் இந்த மருமகள் இருக்கும்போது மட்டுமே; அவர் தாய்வீடு சென்றுவிட்டால் இங்கே நடப்பதில்லை என்பதுதான் அது. சரி, மருமகள் தாய்வீடு சென்றால் அங்கே நடக்கிறதா? என்று கேட்டேன்.

மருமகளைக் காதலிக்கும் ஏவல்

மருமகள் அங்கே தனியாகப் போகும் போது நடப்பதில்லை, இவளைப்பார்க்க என் மகன் சென்றால் அப்போது இப்படியெல்லாம் அங்கும் நடக்கிறது என்றார்கள். இப்போது உண்மை உடைய ஆரம்பித்தது; இந்த ஏவலின் நாயகி மருமகளே! இந்தக் கணவனோடு வாழப் பிடிக்கவில்லை; அதை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் இப்படி ஏதோ செய்யக்கூடிய மனநிலையில் இருப்பதை உணர்ந்தோம். ஆனால் அதை உடனே நாங்கள் வெளிப்படுத்தாமல் அக்குடும் பத்தாருடைய கைரேகைகளைப் பதிவு செய்து கொண்டு மாமனார், மருமகள் ஆகிய இருவரை மட்டும் என் அலுவலகத்திற்கு வரவழைத்தோம்.

உடைந்தது உண்மை

மாமனாரை ஒப்புக்கு விசாரித்து விட்டு, ஒரு பெண் மருத்துவரைத் துணைக்கு வைத்துக் கொண்டு மரு மகளுடன் கலந்தாய்வை ஆரம்பித்தேன். அவருடைய தனித்தன்மை, தாய்வீடு போன்றவற்றைக் கேட்டுவிட்டு உங்களுடைய கைரேகைகளைப் பரிசோதித்துவிட்டோம். அந்தப் பொருள்களில் இருப்பதெல்லாம் உன்னுடைய கைரேகை மட்டுமே; ஏவல் பெயரில் நடந்தவை அனைத்தும் உன்னால் நடந்துள்ளது. அந்தக்குடும் பத்தின் மீது உனக்கு அப்படி என்ன கோபம்? என்று கேட்டேன்.

முதலில் சிறிது நேரம் உறுதியாக மறுத்துவிட்டுப் பிறகு குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டே இவங்க எங்க அக்காவை என்ன கொடுமைப்படுத்தினாங்க தெரியுமா? அதனாலதான் இவங்களை இப்படி பண்ணேன் என்றார். அனைத்தையும் தான் செய்ததாக ஒப்புக் கொண்டு இன்னொரு குண்டைத் தூக்கி போட்டார். இந்த உண்மைகளை வெளியில் சொன்னால் நான் தற்கொலை செய்து கொள்வேன். என்றார். இந்த உண்மைகளை நாமும் வெளிப்படையாக உடைக்கமாட்டோம் என்பது உண்மையே. இருப்பினும் வெகுளித்தனமான குடும்பத்தில் விவரமான மருமகள் வாய்த்திருப்பதை அறிய முடிந்தது. பேதமை தந்த வேதனை

அதற்குப் பிறகு  அந்தப் பெண்ணின் விருப்பப்படி மணமுறிவு கொடுத் தனுப்பி விட்டு மூன்றாவதாக யாரையோ திருமணம் செய்துகொண்டு இப்போது மகிழ்ச்சியாகவே இருக்கிறார் அந்த இளைஞர். இதிலே நாம் கவனிக்க வேண்டிய செய்தி, இத்தனையும் நடந்து, இந்த ஓராண்டுக்காலம் அந்தக் குடும்பத்தாரால் ஏவல், சூனியம் என்று நினைக்க முடிந்ததே தவிர, ஏதோ மனித சக்தியால்தான் இவையாவும் நடக் கின்றன என்று யோசிக்க முடியவில்லை.

முகத்தில் சலனமின்றி, அவ்வளவு திறமையாக இத்தனையும் செய்துவிட்டு, அப்பாவிபோல் நடித்து அவர்களோடு வாழ்ந்து வந்த அப்பெண்ணின் மன வலிமையை என்னவென்று சொல்வது? இப்படிப்பட்ட செயல்கள் எல்லாம் தாமே நடக்காது; மனிதர்களால் மட்டுமே நடக்கும் என்ற அறிவுப் பார்வை அக்குடும்பத்திற்கு இல்லாமற் போனதால் அந்த ஓராண்டில் இலட்சக்கணக்கான  ரூபாயை இழந்து கடனில் சிக்கி அவதிப்பட்டனர். பசி பட்டினியோடு அவர்கள் பட்ட மன உளைச்சல் எவ்வளவு?

மந்திரவாதிகள் வந்து சூனியம் எடுப்பதாகக் கூறி ஆயிரக்கணக்கில் பறித்துச் சென்றனர். சூனியம் என்றால் ஒன்றுமில்லை என்று பொருள். அந்த ஒன்றுமில்லை என்பதைத்தான் சூனியம் எடுத்தேன் என்று மந்திரவாதி சொல்லிவிட்டுப் போகிறான். ஏமாளி கள் இருக்கும்வரை ஏமாற்றத்தான் செய்வார்கள்.

இந்த ஏவல் என் மருமகளைத்தான் பாடாய்ப்படுத்துகிறது என்று அப்பாவித்தனமாகக் கூறிக் கொண் டிருந்த மாமனாரையும், மாமியாரையும், தன்னை தொடமுடியாமல் அச்சத் தோடு தவித்துக் கொண்டிருந்த கண வனையும் எப்படியெல்லாம் ஏமாற்ற முடியுமோ அப்படியெல்லாம் ஏமாற்றி நம்ப வைத்துக் கொண்டிருந்த ஏவல் நாயகியான அந்த மருமகளும், இப் போது வேறு யாரையோ மணந்து கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.

வெளிப்படையாகப் பேசிப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள வாய்ப்பில்லாதபோது இப்படி ஒரு நாடகம் அரங்கேறியது. இதற்காக அந்த குடும்பம் கொடுத்தவிலை மிக அதிகம். பல்வேறு இழப்புக்கு ஆளான அந்தக்குடும்பத்தைப்போல இன்னும் பல பேர் இந்த ஏவல், சூனியம் என்பதை நம்பிக்கொண்டு தான்இருக்கின்றனர்.

மனிதம் அழிந்த பூமி

இப்படிச் சூனியம் வைத்தோ, ஏவல் செய்தோ ஒருவரை அழித்துவிட முடியுமென்றால் தீவிரவாதிகள் ஏன் வெடிகுண்டுகளோடு அலைந்து கொண்டிருக்கிறார்கள்? இன்றுள்ள அரசியல் தலைவர்களுக்கு எந்த அளவிற்கு ஆதரவாளர்கள் உண்டோ, அந்த அளவிற்கு எதிரிகளும் உண்டு. சூனியம் வைக்கப்படுவது உண்மை யென்றால் ஓர் அரசியல் தலைவர்கூட உயிரோடு இருக்க முடியாது. உலகில் மனித இனம் பூண்டோடு அழிந்து போய் இருக்காதா?

சூனியம் என்பது ஒன்றுமில்லாதது; ஏவல் என்பது யாரோ ஒரு தனிநபர் செய்வது என்பதைப் புரிந்து கொண்டு, எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என்று ஆய்ந்து பார்த்திருந்தால் உண்மை புரிந்திருக்குமல்லவா? கெட்டிக்காரன் புளுகுகூட எட்டு நாளைக்குத்தான் என்பார்கள். ஆனால், இந்தக்குடும்பம் ஓராண்டுக்கு மேலாக அறியாமை துரத்திய பாதையில் ஓடிக்களைத்துப் போனது.

உலகத்தின் மிகப்பெரிய சுமை மூடநம்பிக்கையே என்றார் மில்டன். அறிவைக் கெடுத்து வாழ்வைச்சிதைக்கும் அந்த மூடநம்பிக்கைகளை எதிர்கொள்ளும் தெளிவான பாதை காட்டுகிறார். ரட்சார்ட் கிப்லிவ் என்ற அறிஞர். என்னிடம் எங்கே? என்ன? எப்போது? ஏன்? எப்படி? யார்? என்ற ஆறு நேர்மையான உதவியாளர்கள் உள்ளனர் என்கிறார். அந்த ஆறு கேள்விகளை முன் வைத்து வாழ்க்கையை நடத்துவோர்க்கு இத்தகைய இழப்புகள் வாழ்க்கையில் ஏற்படாது.

Wednesday, October 15, 2014

ஆசிரியர் தகுதி தேர்விற்கான வழிமுறைகள்

பின்புலம் மற்றும் கருத்துரு

இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைச் சட்டம் (RTE ) 2009-ஐ நடைமுறைப்படுத்த நாடு முழுதும் குறிப்பிட்ட காலத்திற்குள் மிக அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். குறிக்கோளை அடைவதில் பெரும் தவறு நடக்காமலிருக்க, ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதில் எக்காரணம் கொண்டும் தரத்தை உறுதிசெய்வதில் பி்ன்னடைவு ஏற்படக்கூடாது. ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு, கற்பிப்பதில் உள்ள சவால்களை சந்திக்கும் அளவுக்குத் திறமையும் மனப்பாங்கும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைச் சட்டம் (RTE ) 2009 ன் பிரிவு 23, உப பிரிவு (1) ல் குறிப்பிட்டுள்ளபடி, ஆசிரியக் கல்விக்கான தேசியக் குழுமம் (NCTE ) 2010 – ஆகஸ்டு 23 –ம் தேதி வெளியிட்ட குறிப்பாணையில் 1 முதல் 8 ம் வகுப்பு வரை கற்றுக் கொடுக்க ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு குறைந்தபட்ச தகுதிகளாக சிலவற்றை வரையறுத்துள்ளது. குறிப்பாணையின் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. RTE சட்டம் பிரிவு 2 ன் படி ஆசிரியராக நியமிக்கப்படும் ஒருவருக்கு மிக முக்கிய தகுதியாக எதிர்ப்பார்க்கப்படுவது என்னவென்றால் அந்தந்த மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET ) தேர்ச்சியடைந்திருப்பது அவசியம்.

ஆசிரியராக நியமிக்கப்பட இருக்கும் ஒருவருக்கு ஆசிரியர் தகுதித் தேர்வை (TET ) குறைந்தபட்சத் தகுதியாக வைத்திருப்பதன் காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
  1. தகுதியான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் ஒரு தேசிய தரத்தையும் அடையாளத்தையும் கடைப்பிடிக்க.
  2. ஆசிரியப் பயிற்சி நிறுவனங்களும், மாணவர்களும் தங்களுடைய செயல்திறனை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்வுபூர்வமாக உணர்த்த.
  3. அரசானது ஆசிரியர்களின் தரத்தில் மிகவும் கவனமாக இருக்கிறது என்பதை அனைவருக்கும் உணர்த்த. அந்தந்த அரசால் நியமிக்கப்படும் வல்லுநர் குழுவால் இந்தத் தேர்வானது நடத்தப்படும். கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களின்படி இத்தேர்வானது நடத்தப்படும்.
தகுதி
கீழ்க்கண்ட நபர்கள் இந்த TET தேர்வை எழுதத் தகுதியானவர்கள்:
  1. ஆசிரியப் பயிற்சிக்கான தேசியக் குழுமம் 2010 ஆகஸ்ட் 23 –ந் தேதி வெளியிட்ட குறிப்பாணையின்படி, ஒரு நபர் தேவையான கல்வித் தகுதியையும், தொழிற்கல்வித் தகுதியையும் பெற்றிருக்க வேண்டும்.
  2. ஆசிரியப் பயிற்சிக்கான தேசியக் குழுமம் 2010 ஆகஸ்ட் 23 –ந் தேதி வெளியிட்ட குறிப்பாணையின்படி, ஒரு நபர் (NCTE) குழுமம் குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு ஆசிரியப் பயிற்சியை முடித்திருக்க வேண்டும்.
  3. RTE சட்டம் பிரிவு 23 உப பிரிவு 2 –ன் கீழ் ஒரு மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச அரசு, இந்த TET தேர்வை எழுதுவதற்கான தகுதிகளிலிருந்து சில விலக்குகளை அளிக்க விரும்பினால் RTE சட்டம் பிரிவு 23 உப பிரிவு 2 –ன் கீழ் அளித்துக் கொள்ளலாம். இந்த விதிவிலக்குகள் மத்திய அரசினால் உப பிரிவின் கீழ் ஒரு குறிப்பாணையாக வெளியிடப்படும்.
TET-ன் அமைப்பு மற்றும் பொருளடக்கம்
ஆசிரியர் தகுதித் தேர்வின் (TET) அமைப்பு மற்றும் பொருளடக்கம் கீழ்வரும் பத்திகளில் கொடுக்கப்பட்டுள்ளது. எல்லாக் கேள்விகளும் சரியான பதிலை தேர்ந்தெடுத்து எழுதும் வகைக் கேள்விகளே. ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் தரப்பட்டிருக்கும்.
அவற்றில் ஒன்று மட்டுமே சரியான பதில். தவறான பதிலுக்கு மதிப்பெண் குறைப்பது இல்லை.

தேர்வு நடத்தும் குழு கட்டாயமாக பின்வரும் அமைப்பு மற்றும் பொருளடக்கத்தை பின்பற்ற வேண்டும். TET இரண்டு தேர்வுகளைக் கொண்டது. முதல் தேர்வு 1 முதல் 5 ஆம் வகுப்பிற்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானது. இரண்டாவது தேர்வு 6 முதல் 8 ஆம் வகுப்பிற்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானது. ஒருவர் 1 முதல் 5 ம் வகுப்பிற்கு கற்பிக்க இருந்தாலும், 6 முதல் 8 ம் வகுப்பிற்கு கற்பிக்க இருந்தாலும் கட்டாயமாக இரண்டு தேர்வுகளையும் எழுத வேண்டும்.

முதல் தேர்வு (1 முதல் 5-ம் வகுப்பிற்கானது)

கேள்விகள்: 150
தேர்வு நேரம் : ஒரு மணி 30 நிமிடங்கள்
அமைப்பு மற்றும் பொருளடக்கம் (அனைத்தும் கட்டாயம்)
(i) குழந்தை வளர்ச்சி மற்றும் அணுகுமுறை 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்
(ii) மொழிப்பாடம் – 1 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்
(iii) மொழிப்பாடம் – 2 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்
(iv) கணிதம் 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்
(v) சூழ்நிலை அறிவியல் 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்
கேள்விகளின் தரமும் இயல்பும்:
முதல் தேர்வுக்கான கேள்வித்தாளை தயாரி்க்கும்போது, தேர்வு நடத்தும் குழு கீழ்க்கண்ட காரணிகளை கவனத்தில் கொள்ள வேண்டும்:
  • 6 முதல் 11 வயது வரம்புள்ள குழந்தைகளின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் குழந்தை உளவியலை மையப்படுத்தி குழந்தை வளர்ச்சி மற்றும் அணுகுமுறைப் பகுதி கேள்விகள் இருக்க வேண்டும். மேலும் கற்போர்களின் புரிதல் நிலை, பல்வகைப்பட்ட கற்போர், கற்போரிடம் உரையாடுதல், ஒரு நல்ல தொகுப்பாளரின் தன்மை மற்றும் குண நலன்களையும் மையப்படுத்தி இருக்க வேண்டும்.
  • கற்பிக்கும் மொழியில் ஒருவருக்கு இருக்கும் புலமையை மையப்படுத்தி மொழிப்பாடம் – 1 ல் கேள்விகள் கேட்கப்படும். விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மொழிகளில் தேர்வு எழுதுபவர் தேர்ந்தெடுத்த மொழிக்கானது.
  • மொழிப்பாடம் – 2 என்பது மொழிப்பாடம் – 1ஐ தவிர்த்து மற்றுமொரு மொழிக்கான தேர்வாகும். தேர்வு எழுதுபவர் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் மொழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இது மொழியின் கூறுகளைப் பற்றியும், தொடர்புகொள்ளும் மற்றும் புரிந்து கொள்ளும் திறமைகளைக் கண்டறியும் தேர்வாகும்.
  • கணிதம் மற்றும் சூழ்நிலை அறிவியல் பகுதி கருத்துருக்களையும், பிரச்சினைகளைத் தீர்க்கும் மற்றும் புரிந்து செயல்படுத்துதல் திறமைகளையும் சோதிக்கும் பகுதியாகும். இவையனைத்துப் பாடங்களிலும் கேள்விகள் வகுப்பு 1 முதல் 5 வரையுள்ள அனைத்துப் பிரிவிலிருந்தும் கேட்கப்படும்.
  • முதல் தேர்வின் கேள்விகள், அந்தந்த மாநில அரசு வகுத்துள்ள பாடத்திட்டத்தில் 1 முதல் 5 வகுப்புகள் வரை இருந்தாலும், அதன் தொடர்புக் கேள்விகளும் கடினத் தன்மையும் நடுநிலை வகுப்பு வரை இருக்கலாம்.

இரண்டாவது தேர்வு (6 முதல் 8 ம் வகுப்புகளுக்கானது)

கேள்விகள்: 150
தேர்வு நேரம் : 1 மணி 30 நிமி்டங்கள்
அமைப்பு மற்றும் பொருளடக்கம் அனைத்தும் கட்டாயம்
(i) குழந்தை வளர்ச்சி மற்றும் அணுகுமுறை(கட்டாயம்) 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்
(ii) ii. மொழிப்பாடம்–1(கட்டாயம்) 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்
(iii) மொழிப்பாடம்–2(கட்டாயம்) 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்
(iv) a. கணிதம் மற்றும் ஆசிரியர்களுக்கானது: கணிதம் மற்றும் அறிவியல் 60 கேள்விகள் 60 மதிப்பெண்கள்
b. சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கானது: சமூக அறிவியல் 60 கேள்விகள் 60 மதிப்பெண்கள்
c. மற்ற ஆசிரியர்களுக்கானது: 4 (a) அல்லது 4(b)
இரண்டாம் தேர்வுக்கான கேள்வித்தாளை தயாரிக்கும்போது தேர்வு நடத்தும் குழு கீழ்க்கானும் காரணிகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • குழந்தை வளர்ச்சி மற்றும் அணுகுமுறைப் பகுதி கேள்விகள் 11 முதல் 14 வயது வரம்புள்ள குழந்தைகளின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் குழந்தை உளவியலை மையப்படுத்தி குழந்தை வளர்ச்சி மற்றும் அணுகுமுறைப் பகுதி இருக்க வேண்டும். மேலும் கற்போர்களின் புரிதல் நிலை, பல்வகைப்பட்ட கற்போர், கற்போரிடம் உரையாடுதல், ஒரு நல்ல தொகுப்பாளரின் தன்மை மற்றும் குண நலன்களையும் மையப்படுத்தி இருக்க வேண்டும்.
  • கற்பிக்கும் மொழியில் ஒருவருக்கு இருக்கும் புலமையை மையப்படுத்தி மொழிப்பாடம் – 1 ல் கேள்விகள் கேட்கப்படும். விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மொழிகளில் தேர்வு எழுதுபவர் தேர்ந்தெடுத்த மொழிக்கானது.
  • மொழிப்பாடம் – 2 என்பது மொழிப்பாடம் – 1ஐ தவிர்த்து மற்றுமொரு மொழிக்கான தேர்வாகும். தேர்வு எழுதுபவர் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் மொழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இது மொழியின் கூறுகளைப் பற்றியும், தொடர்புகொள்ளும் மற்றும் புரிந்து கொள்ளும் திறமைகளைக் கண்டறியும் தேர்வாகும்.
  • கணிதம், சூழ்நிலை அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பகுதி கருத்துருக்களையும், பிரச்சினைகளைத் தீர்க்கும் மற்றும் புரிந்து செயல்படுத்துதல் திறமைகளையும் சோதிக்கும் பகுதியாகும். இவையனைத்துப் பாடங்களிலும் கேள்விகள் வகுப்பு 6 முதல் 8 வரையுள்ள அனைத்துப் பிரிவிலிருந்தும் கேட்கப்படும்.
  • இரண்டாம் தேர்வின் கேள்விகள், அந்தந்த மாநில அரசு வகுத்துள்ள பாடத்திட்டத்தில் 6 முதல் 8 வகுப்புகள் வரை இருந்தாலும், அதன் தொடர்புக் கேள்விகளும் கடினத் தன்மையும் உயர்நிலை வகுப்பு வரை இருக்கலாம்.
கேள்வித்தாள் இரண்டு மொழிகளில் இருக்க வேண்டும்:
  1. முதல் மொழி அந்தந்த அரசுகள் தீர்மானிக்க வேண்டும்
  2. இரண்டாம. மொழி ஆங்கிலம்

தகுதி மதிப்பெண்கள்

ஒருவர் 60 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றிருந்தால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவராவார்.
  1. பள்ளி நிர்வாகம் (அரசு, உள்ளுர் அமைப்புகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், உதவிபெறாத பள்ளிகள்) தாழ்த்தப்பட்ட வகுப்பினர் SC/ST , இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் OBC தனித்திறனாளிகள் போன்றோருக்கு இதில் அவரவர்களின் ஒதுக்கீட்டிற்குத் தகுந்தபடி சலுகைகள் வழங்கலாம்.
  2. ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் படிநிலைகளில் ஆசிரியர் தகுதித் தேர்வின் மதிப்பெண்களையும் கவனிக்க வேண்டும். அதே நேரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது மட்டுமே ஆசிரியராக தேர்ந்தெடுக்கப்பட தேவையான தகுதி என்று கருத்தில் கொள்ளக்கூடாது.
பொருத்தமானவை
  1. RTE சட்டம் பிரிவு 2 வகை (a), உப வகை (i) மத்திய அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) RTE சட்டம் பிரிவு 2 வகை (a), உப வகை (i) ல் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும்.
  2. மாநில அரசு / யூனியன் பிரதேச அரசுகளால் நடத்தப்படும் TET தேர்வுகள்:
    1. RTE சட்டம் பிரிவு 2 வகை (a), உப வகை (i) ல் குறிப்பிடப்பட்டிருக்கும் மாநில அரசு / யூனியன் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளுக்கும் பொருந்தும்.
    2. RTE சட்டம் பிரிவு 2 வகை (a), உப வகை (ii) ல் குறிப்பிடப்பட்டிருக்கும் மாநில அரசு / யூனியன் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளுக்கும் பொருந்தும்.
    பிரிவு (i) மற்றும் (ii) ல் குறிப்பிடப்பட்டிருக்கும் பள்ளிகளுக்கு, ஒருவர் வேறு மாநிலத்தில் / யூனியன் பிரதேசத்தில் TET தேர்வு எழுதியிருந்தாலும் அவர் தகுதியானவரே. ஒருவேளை ஒரு மாநில அரசு / யூனியன் பிரதேச அரசு TET தேர்வை நடத்தவில்லையெனில் மத்திய அரசு அத்தேர்வை நடத்தும்.
  3. RTE சட்டம் பிரிவு 2 வகை (n) உப வகை (iv) ல் குறிப்பிட்டுள்ளபடி ஒருவர் மத்திய அரசால் நடத்தப்படும் TET தேர்வையோ அல்லது மாநில அரசு / யூனியன் பிரதேச அரசுகள் நடத்தும் TET தேர்வையோ நியமனத்திற்கான தகுதியாகக் கருதப்படும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதற்கான காலவரம்பும், சான்றிதழ் செல்லத்தக்க காலவரம்பும் அந்தந்த மாநில அரசுகள் ஆண்டிற்கு ஒருமுறை TET தேர்வை நடத்தலாம். சான்றிதழ் செல்லத்தக்க காலவரம்பை, அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை அந்தந்த மாநில அரசுகளே தீர்மானித்துக் கொள்ளலாம். ஆனால் ஒருவர் இந்த சான்றிதழுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் TET தேர்வை எழுதலாம். ஒருவர் ஏற்கனவே இத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், மதிப்பெண்களை அதிகப்படுத்திக் கொள்ள அவர் மீண்டும் இத்தேர்வை எழுதலாம்.

தேர்வை நடத்துவதற்கான நடைமுறைகள்

தேர்வு நடத்தும் குழு TET தேர்வை நடத்துவதற்கான நடைமுறைகளையும் குறிப்புகளையும் விவரமாகத் தீர்மானிக்க வேண்டும். இத்தேர்வில் ஏமாற்றுதல் மற்றும் ஆள் மாறாட்டம் செய்வது மிக மிக கண்டிக்கத்தக்கது என்பதை தேர்வை எழுதும் மாணவர்களுக்கு முன்பே புரியவைக்க வேண்டும்.
சட்டப் பிரச்சனைகள்
TET தேர்வை நடத்துவது சம்பந்தமான அனைத்து சட்டப் பிரச்சனைகளும் அந்தந்த மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்குள் தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
சான்றிதழ் வழங்குதல்
அந்தந்த மாநில அரசுகள் TET தேர்வை நடத்தி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, சான்றிதழை வழங்கும். அந்த சான்றிதழில் மாணவரின் பெயர் மற்றும் விலாசம், பிறந்த தேதி, பதிவு எண், சான்றிதழ் வழங்கப்பட்ட மாதமும் ஆண்டும், ஒவ்வொரு தேர்விலும் பெற்ற மதிப்பெண்கள், சான்றிதழ் செல்லத்தக்க வகுப்புகள் (1 முதல் 5 வகுப்புகள், 6 முதல் 8 வகுப்புகள் அல்லது இரண்டுமே), ஒருவேளை 6 முதல் 8 வகுப்புகளுக்காக இருந்தால் பாடப்பிரிவும் (அறிவியல், கணிதம், சமூக அறிவியல்) குறிப்பிடப்பட்டிருக்கும். சான்றிதழ் மின்னனு முறையில் சில பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கலாம். சில சிறப்பு நிறுவனங்களை அணுகி மிகவும் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட சான்றிதழ்களை தயாரிப்பதன் மூலம் ஏமாற்றுதல் / தவறாக பயன்படுத்துதலை தவிர்க்கலாம்.

மேற்பார்வையிடுதல்

ஆசிரியர் தகுதித் தேர்வை (TET) நடத்தும் போது தரத்தையும் நிர்வாகத்தையும் மேற்பார்வையிட கீழ்க்காணும் விதிமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்:
  1. அந்தந்த மாநில அரசுகள் TET தேர்வுகளுக்காக ஒரு சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்.
  2. ஆசிரியப் பயிற்சிக்கான தேசியக் குழுமம் (NCTE) இந்த சிறப்பு அதிகாரிகளுக்கான கூட்டத்தை குறைந்த ஆண்டிற்கு ஒருமுறை கூட்டும்.
  3. ஆசிரியப் பயிற்சிக்கான தேசியக் குழுமத்தால் (NCTE) வடிவமைக்கப்பட்ட படிவத்தில் ஒவ்வொரு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) பற்றிய விவரங்களை அந்தந்த மாநில அரசுகள் உடனுக்குடன் NCTE க்கு அனுப்ப வேண்டும்.
  4. ஆசிரியப் பயிற்சிக்கான தேசியக் குழுமம் (NCTE) அனைத்துத் தகவல்களையும் பராமரிப்பதோடு, பல்வேறு ஆதாரங்கள், வல்லுநர்கள், தொழில்நுட்ப உதவிகளை அந்தந்த மாநில அரசுகளுக்கு வழங்கி உதவும்.

Sunday, October 12, 2014

ஜீவா என்னும் சினிமா - பலே! பலே!!


திரைப்படம் பார்ப்பவர்கள் ஜீவா என்னும் திரைப்படத்தைப் பார்த்திடப் பரிந்துரைக்கின்றோம். என்ன, விடுதலை திரைப்படத்தைப் பார்க்கச் சொல்லுகிறதா என்று புருவத்தை உயர்த்த வேண்டாம்!

படமே பார்ப்பதில்லை என்றால், அது வேறு; படம் பார்ப்பவர்களாக இருந்தால் இந்தப் படத்தைப் பார்த்தே தீர வேண்டும்.

கிரிக்கெட் என்பது எப்படி முழுக்க முழுக்கப் பார்ப்பனர்களின் சுரண்டல் கிடங்காக இருக்கிறது என்பதைத் தோலுரித் துக் காட்டியுள்ளார் இயக்குநர் சுசீந்திரன். உண்மையிலேயே இது ஒரு படம் அல்ல - சமூகத் தொண்டு- விழிப்புணர்வும்கூட!

ஜீவா என்ற கதாநாயகனை உருவாக்கி, அவனுக்குக் கிரிக்கெட்டில் மிகப் பெரிய அளவிற்குத் திறமை இருந்தும் இந்திய அணியில் இடம் கிடைக்காததற்குக் காரணம் என்ன? ரஞ்சி  டிராஃபி என்பது என்ன? அதில் இடம் பிடிப்பது யார்? தேர்வு செய்வதற்கு என்ன அளவுகோல் என்பதை சும்மா புரட்டிப் புரட்டி எடுத்துள்ளார்.

தமிழ்நாட்டிலிருந்து 16 பேர் இந்திய அணிக்கு இதுவரை சென்றுள்ளனர் என்றால் அதில் 14 பேர் பார்த்தசாரதி இனத்தைச் (பார்ப்பனர்களைத்தான் அப்படி சொல்லுகிறார்) சேர்ந்தவர்கள் தான்.

ஒரு காட்சி! கிரிக்கெட் தேர்வுக் குழுத் தலைவரான பார்த்தசாரதி அய்யங்கார் ராஜா என்ற பார்ப்பனர் அல்லாத சிறந்த விளையாட்டுக்காரை முதுகில் தட்டிக் கொடுப்பது போல எதையோ துழாவுவார்! வேறு ஒன்றுமில்லை. அவன் முதுகில் பூணூல் தட்டுப்படுகிறதா என்று பார்ப்ப தற்குத்தான் அந்த வேலை.

ராஜா என்ற பார்ப்பனர் அல்லாத கிரிக்கெட் விளையாட்டுக்காரரின் நண்பன் - அவனும் மிகச்சிறந்த விளையாட்டு வீரன்! பந்தயத்தில் விளையாட வாய்ப்பு அளிக்கப் படவில்லை என்பதற்காகத் தற்கொலை செய்து கொள்ளும் காட்சி கல் நெஞ்சங் களையும் கழிவிரக்கம் கொள்ளச் செய்யும்.

இந்த விவரங்கள் எல்லாம் புரியாமல் நமது தமிழின இளைஞர்கள் இந்தப் பாழாய்ப் போன பார்ப்பன விளையாட்டின் ரசிகர்களாக மாறி இருப்பதன் அவலத்தை என்ன சொல்ல!

கிராமப்புறங்களிலும், வயல்களிலும், ஆற்றுப்படுகைகளிலும் இடம் பெற்ற தமிழர்களின் உண்மையான வீர விளை யாட்டான சடுகுடு (கபடி) இருந்த இடம் தெரியவில்லை; அந்த இடத்தை இந்தச் சோம்பேறி   - பார்ப்பனீய கிரிக்கெட் பிடித் துக் கொண்டு விட்டதே!கிரிக்கெட்டைப் புறந்தள்ளி தமிழர் களின் வீர விளையாட்டைப் புதுப்பிப்போம்!

தந்தை பெரியார் வீர விளையாட்டுக் கழகம் இதனை முன்னெடுத்துச் செல்லுகிறது!

கிரிக்கெட் என்பது பதினோரு முட்டாள் கள் விளையாட, பதினோராயிரம் முட்டாள் கள் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர் என்றார் அறிஞர் பெர்னாட்சா.

போட்டிகள் நடந்து கொண்டிருக்கும்  பொழுது எந்த விளையாட்டிலாவது, பார்வையாளர்களுக்கு ஆட்டோ கிராபிஃல் விளையாட்டு வீரர்கள் கையொப்பம் போட்டுக் கொடுத்துக் கொண்டு இருப் பார்களா? கிரிக்கெட்டில்தான் இந்தக் கூத்தைப் பார்க்கலாம்.

ஆடும் 11 பேர் கொண்ட அணியில் பந்து வீசுபவன் ஒருவன், ஓடுபவர் இருவர், துரத்துபவன் ஒருவன்; மற்றவர்கள் பேன் குத்திக் கொண்டு இருப்பார்கள். இந்திய அணி, இந்திய அணி என்று  நமது இளைஞர்கள் கூறும் மட்டைப் பந்து குழுவிற்கும் இந்தியாவிற்கும் முற்றிலும் தொடர்பில்லை.

விளையாட்டை ஒருவகை வியாபார மாக்கி லாபம் பார்க்கும் கம்பெனிதான் பி சி சி அய்; இதன் கீழ் வருவது தான் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் என்னும் டிஎன்சிஎ; அமைப்பின் மேல் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை அது ஆரம்பித்த காலமான 1938ல் எப்படி தமிழகத்தில் பார்ப்பன ஆதிக்கம் இருந்ததோ அதே நிலையில் தான் இருக்கிறது இன்று வரை! தமிழக அணியில் இடம் பெற விளையாடத் தெரிந்திருந்தால் மட்டும் போதாது, காலில்  காலணிகளில் கயிறு இருக்கிறதோ இல்லையோ, உடலில் தோளில் இருந்து இடுப்புவரை உருண்டோடும் குறுக்கு கயிறான பூணூல் இருந்தே ஆகவேண்டும். இதுவரை தமிழ் நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய அணிக்காக விளையாடியவர்கள் மொத்தம் 21 பேர் இதில் எத்தனை பேர் என்ன சாதியினர் என்று பார்த்தோம் என்றால் அத்தனையும் அய்யர், அய்யங்காராகவே இருப்பார்கள். இதில் அய்யர்களை விட அய்யங்கார்களே அதாவது பார்த்தசாரதிகளும் சேஷாத்ரி களுமே அதிகமாக இருப்பார்கள். வைஷ்ணவத்தைப் பின்பற்றும் அய்யங்கார்களின் ஆதிக்கமே இங்கு அதிகம்.
இந்த 21 பேரில் இரண்டு பேர் தான் அய்யர் அல்லது அய்யங்கார் இல்லாத வர்கள். சரி அப்படியென்றால் மற்ற சாதி யினர்  விளையாடுவதில்லையா என்று கேட்டால் விளையாடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கான வாய்ப்பு என்பது எவ்வளவு நன்றாக விளையாடினாலும், பாராட்டு என்ற பெயரில் முதுகைத் தடவி பூணூல் இருக்கிறதா என்று பார்த்து தான் கொடுக்கப்படும்.

உதாரணமாக அனிருத் முன்னாள்  இந்தியக் கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்தின் மகன், வருங்கால விளையாட்டு வீரர்கள் என்று தேர்ந்தெடுக்கப்பட்டு ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டிக்கு அனுப்பப்பட்டார் இந்தியா சார்பாக;  அப்பொழுது தேர்வுக் குழு உறுப்பினாராக இருந்தவர் ஸ்ரீகாந்த், இதைக் குறித்து வினாக்கள் எழுப்பப்பட்ட பொழுது   தேர்வுக் குழு உறுப்பினர்கள் மூவரும் ஸ்ரீகாந்தைக் காப்பாற்றினார்கள்.    ஆனால், அவர் சாதித்துக் கிழித்தது என்னவாம்? அனிருத் மட்டைப்பந்து விளையாட்டில் இன்றளவும் திறமையற்ற வராகத்தான் இருக்கிறார்.

ரஞ்சிக் கோப்பை போட்டிக்கு தேர்ந்து எடுக்கப்படும் வீரர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்  பூணூல்காரர்களாகவே இருப் பார்கள். மற்றவர்கள் எவ்வளவு நன்றாக விளையாடினாலும் ரஞ்சிப் போட்டிகளுக்கு அனுப்ப மாட்டார்கள், அப்படியும் திறமையை நிரூபித்து ஒரு சிலர் வந்தால் அவர்களை அணியில் எடுத்துக் கொள் வார்கள் ஆனால் ரஞ்சிக் கோப்பை போட் டிகள் அனைத்திலும் அனுமதிக்காமல் பார்வையாளர்கள் பகுதியிலேயே (ஷிதீவீமீ) அமர வைக்கப்படுவார்கள், ஆண் டிற்கு இரண்டு போட்டிகளில் அனுமதிக் கப்பட்டாலே அது அதிகம். ரஞ்சிப் போட்டிகளில் விளையாடும் பொழுது இங்கே நடக்கும் முதல் டிவிசன் லீக் போட்டிகளிலும் கலந்து கொள்ள இயலாமல் இருப்பார்கள். அடுத்த ஆண்டு ரஞ்சி அணி தேர்ந்தெடுக்கும் பொழுது அதிக ரன் அடிக்கவில்லை என்று போட் டிகளில் விளையாடாமலேயே தேர்வுக் குழுவினரால்  தோற்கடிக்கப்படுகின்றனர், இப்படி பலரின் வாழ்க்கையைக் குதறியிருக் கிறார்கள்.

பி.கே.தர்மா என்ற தமிழக வீரர் தனது 14 வயதில் டிவிசன் லீக் போட்டிகளில் விளையாட ஆரம்பித்து மிக வேகமாக முதல் டிவிசன் லீக் போட்டிகளில் விளையாடியவர்; பி.கே. தர்மா  இவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இவர் ஒரு வேகப்பந்து வீச்சாளர், லட்சுமி பதி பாலாஜியின் உடல் நிலை சரியில்லாத பொழுது தமிழகத்துக்கு விளையாடினார். ஆனால், அதற்குப் பிறகு நிலையாக தமிழக அணியில் இவரை வைத்துக் கொள்ள வில்லை. இரண்டு ஆண்டிற்கு முன்பு தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்; அதுவும் காலையில் ஒரு போட்டியில் விளையாடிவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தவர் தற்கொலை செய்து கொண் டுள்ளார்; இவரின் தற்கொலைக்குக் காதல் என்று கிளப்பி விட்டார்கள்; ஆனால் அதற்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை, 21 வயதில் ஒரு அருமையான விளையாட்டு வீரர் தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

சடகோபன் ரமேஷ் மற்றும் திருக் குமரன் என்ற கென்னி இருவரும் சம காலத்தில் விளையாடியவர்கள் 1999 ஜனவரியில் சடகோபன் ரமேஷ் இந்திய அணிக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டு 2001 செப்டம்பர் வரையில் இருந்தார். இவர் என்ன விளையாடினார் என்பது நமக்கு நன்றாகவே தெரியும், ஆனால் 1999 நவம் பரில் இந்திய அணிக்கு தேர்ந்தெடுக் கப்பட்டவர் தான் திருக்குமரன். ஆனால் 2000 ஜூனுக்குப் பிறகு திரும்பவும் இந்திய அணிக்குத் தேர்ந்து எடுக்கப்படவில்லை; அவருக்கான விளை யாடும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. தமிழகத்திற்காக 2007ஆம் ஆண்டு வரை விளையாடிவிட்டு அதாவது ஆடாமல் தோற்றுவிட்டு, தனது ஓய்வை அறிவித்து விலகினார்.

இவரின் திறமையை உணர்ந்து அமெரிக்கா தனது தேசிய அணியின் உதவிப் பயிற்சியாளராக நியமித்துள்ளது.  ரஞ்சிக்கோப் பைக்கான 14 பேர் கொண்ட அணியில் கிட்டத்தட்ட 10 பேர் பார்ப்பனர்களே! ஆனால் ஒரே ஒரு மகிழ்ச்சி, முதன் முதலாக இரண்டு கிறித்துவர்களுக்கு இடம் கொடுத்துள்ளனர். ஆமாம் தமிழ்நாடு மட்டைப்பந்து விளை யாட்டில் சாதியம் பார்ப்பது மட்டுமில்லை; மதமும் தொடர்ந்து கடைப்பிடிக்கப் படுகிறது, தமிழ்நாட்டில் இருந்து இஸ்லாமி யர்களோ கிறித்துவர்களோ இது வரை இந்திய அணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட தில்லை.

இப்படி மிகச்சிறந்த பூணூல் ஆதிக்க அணியாக இருக்கும் தமிழ்நாடு மட்டைப் பந்து விளையாட்டுக் குழு 1935ல் இருந்து நடக்கும் ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் கலந்து கொண்டுள்ளது, ஆனால் தமிழக அணி இது வரை இரண்டு முறை தான் கோப்பையை வென்றுள்ளது. 1987-88ஆம் ஆண்டு போட்டியில் தான் கடைசியாக ரஞ்சிக் கோப்பையை தமிழ்நாடு பூணூல் அணி கைப்பற்றியது; அதற்குப் பிறகு 26 ஆண்டுகளாக பூணூல் அணி கோப்பைக் கனவு மட்டுமே கண்டு கொண்டுள்ளது.

மும்பை அதிகபட்சமாக 40 முறை கோப் பையைக் கைப்பற்றியுள்ளது மட்டைப்பந்து விளையாட்டைப் பொறுத்த வரை மும்பை, டில்லி, கொல்கத்தாவிற்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு அணி உள்ளது ஆனால் ராஜஸ்தானிடம் எல்லாம் மரண அடி வாங்கி ஓடி வந்தது தான் பூணூல் அணியின் வரலாறு.
இந்திய அணியிலும் பார்ப்பனீயம் காப்பாற்றப்பட்டாலும் அவ்வப்பொழுது கபில்தேவ், அசாருதீன், தோனி போன்றவர் களால் பார்ப்பனீயம் உடைக்கப்படுகிறது. கபில், தோனி தலைமையில்தான் உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றியது.

தமிழ்நாட்டில் பார்ப்பனீயம் தனது கால்களை ஆழமாகவும் நல்ல அகல மாகவும் வேரூன்றி நிற்கிறது, இதை வேருடன் கெல்லி எறிய வேண்டிய தேவை உள்ளது.

நிறவெறியைப் பாவித்த தென் னாப்பிரிக்க அணி சர்வதேச மட்டைப்பந்து

விளையாட்டுடிலிருந்து ஒதுக்கப்பட்டது போல் இந்தியாவும் ஒதுக்கப்பட வேண்டும். இப்பொழுது தென்னாப்பிரிக்காவில் கிரிக் கெட்டிலும் கறுப்பர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஜிம்பாவே மட்டைப்பந்து விளையாட்டு அணியில் இருப்பது போல் இடஒதுக்கீடு முறை தமிழ் நாடு மட்டைப்பந்து விளையாட்டு வாரியத் திலும் கொண்டு வரப்பட வேண்டும். இல்லையென்றால் பார்ப்பனீயம் பெரு வாரியான இளைஞர்களின் விளையாட்டுப் போதையைப் பயன்படுத்தி அவர்களின் வாழ்க்கையை நாசமாக்கி விடும்!



பார்ப்பனக் கொள்ளையைக் கேட்பார் உண்டோ!

கிரிக்கெட் விளையாட்டுக்காரர்களுக்கு பிசிசிஅய் ஒப்பந்த அடிப்படையில் ஓர் ஆண்டு சம்பள விபரம்:

பிசிசிஅய் தனக்கு ஒப்பந்தமான அணிகளை 3 பிரிவாக பிரித்துள்ளது. ஒன்று எ குழுமம், பி குழுமம், சி குழுமம்  ஏ குழுமத்திற்கு நாடு முழுவதிலுமுள்ள சிறந்த விளையாட்டு வீரர்கள் தேர்ந்தெடுத்து இணைக்கப்படுவார்கள் இவர்களுக்கு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. ஏ குழுமம் 9 பேர் 1 கோடி ரூபாய் ஆண்டிற்குப் பெறுகின்றனர்
சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ் தோனி, ஜாகிர்கான், வீரேந்திர சேவாக், கவுதம் கம்பீர், சுரேஸ் ரயினா, யுவராஜ் சிங், வீராத் கோலி, அஸ்வின் பி குழுமத்தில் 50 லட்சம் ஆண்டிற்குப் பெறுகிறார்கள்

ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா, பிரகயான் ஓஜா, ரோஹித் சர்மா,சித்தேஷ்வர் பூஜாரா, அஜின்கியா ரஹனே, இர்பான் பதான், உமேஷ் யாதவ்

சி குழுமத்தில் 35 லட்சம் ஆண்டிற்கு  பெறும் வீரர்கள்

ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, வினய் குமார், முனாஃப் படேல் அபிமன்யூ மிதுன் எம் விஜய் சேகர் தவான், விரித்திமன் சாஹா, பர்திவ் படேல், மனோஜ் திவாரி, எஸ் பத்திரிநாத், பியூஸ் சாவலா, தினேஷ் குமார், யுசூப் பதான், பிரவீன் குமார், எல் பாலாஜி  சச்சின் டெண்டுல்கர் 2012 ஆண்டு வருமானம் 129,024,000 (சுமார் ரூ.13 கோடி)

டெஸ்ட் மேட்ச் 7 லட்சம் உள்ளூர் போட்டிகளுக்கு; 12 முதல் 15 லட்சம் வெளிநாட்டுப் பயணங்களுக்கு.

ஒரு நாள் போட்டிக்கு 4 லட்சம் உள்ளூர் விளையாட்டுகளுக்கு;  8 முதல் 10 லட்சம் வெளிநாட்டுப் பயணங்களுக்கு

20-20 போட்டிக்கு 2 லட்சம் உள்ளூர்; 5 முதல் 8 லட்சம் வெளியூர் போட்டிக்கு   .

இதில் விளம்பரதாரர்கள் அளிக்கும் சிறப்பு பரிசு மற்றும் பி சி சி அய் அறிவிக்கும் சிறப்புப் பரிசுகள் என சேர்த்தால் முன்னணி வீரர்களுக்கு ரூ.20 முதல் 25 லட்சம் வரை ; டெஸ்ட் போட்டி 12 முதல் 15 லட்சம் வரை ; ஒரு நாள் போட்டிகளில் 10 லட்சம் 20-20 போட்டிகளில் கிடைக்கும்

உள்ளூர் ரஞ்சி கோப்பைக்கான போட்டிகளில் விளையாடும் வீர்ர்களுக்கு  1,8 லட்சம் பி.சி.சி.அய் வழங்கும்

வெளிநாடு செல்லும் குரூப் பி மற்றும் டி அணி வீர்ர்களுக்கு 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை ஊதியமாக கொடுக்கப்படுகிறது,  புதிய வீரர்களுக்கு விளையாட்டுத் திறனிற்கேற்ப ஊக்கத்தொகை 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை தரப்படுகிறது,  புதிய வீரர்களுக்கு விளம்பரதாரர் நேரடியாக எந்த தொகையும் விளையாட்டுப் போட்டியின் போது வழங்க அனுமதியில்லை.

Thursday, October 9, 2014

கல்வி - தந்தை பெரியார்


தோழர்களே!
 
கல்வி என்னும் விஷயமாய் நான் பேசுவது என்றால், எனக்கு அதிக தைரியம் வேண்டும். ஏனெனில், மக்கள் பெரும்பாலோர் கல்வி என்பதற்கு என்ன பொருள் கொண்டிருக்கிறார்களோ அந்தக் கல்வி எனக்குக் கிடையாது. பிழையற எழுதக்கூடத் தெரியாதவன் - அவையடக்கமாக  நான் இதைச் சொல்லவில்லை. உண்மையிலேயே எனக்கு வல்லினம், இடையினம் கூடச் சரியாகப் பிரயோகிக்கத் தெரியாது. அது மாத்திரமல்ல, ஒரே சந்தர்ப்பத்தில் ஒரு வாக்கியத்தில் ஒரு வார்த்தை இரண்டு தடவை வருமானால் ஒரு தடவை வல்லினம் போடுவேன்; மறுதடவைக்கு இடையினம் போடுவேன். அந்த மாதிரியான நான், உங்கள் முன் கல்வி  என்பதைப் பற்றிப் பேசுவது என்றால் அது எவ்வளவு கஷ்டமான காரியம் என்று பாருங்கள். ஆனாலும் உங்கள் விருப்பத்திற்கும் எனது ஆசைக்குமாக ஏதோ என் அபிப்பிராயத்தைக் கூறுகிறேன். நீங்கள் அதை அப்படியே ஒப்புக் கொண்டுவிடாமல், நன்றாய் ஆலோசித்து கொள்வது கொண்டு, தள்ளுவதைத் தயங்காமல் தள்ளி விடுங்கள்.

கல்வி 

கல்வி என்றால் என்ன? பள்ளிக்கூடத்தில் சர்க்கார் பள்ளிக்கூட அதிகாரிகள் ஏற்படுத்தின திட்டப்படி அவர்கள் குறிப்பிடும் விஷயங்களைக் கொண்ட புத்தகங்களை உருப்போட்டு பரிட்சை கொடுத்து தேர்வு அத்தாட்சி பெறுவதையே அனேகம் பேர் கல்வி என்று கருதி இருக்கிறார்கள். அன்றியும் இப்படிப்பட்ட கல்வி கற்பது என்பது அறிவு விளக்கத்திற்காக என்றும் சொல்லப்படுகிறது. ஆகவே கல்வி என்பதற்கு கருத்து ஒன்று, சொல்லு மற்றொன்று என்று சொல்லக் கூடியதாய் இருப்பதோடு கல்வியின் பயனாய் நடந்து கொள்ளும் நடத்தை  மற்றொன்றாக இருக்கிறது. அதாவது கல்வி என்பது வயிற்றுப் பிழைப்புக்கும் எப்படியாவது வாழ்க்கை நடப்புக்கும், பெருமைக்கும் தான் பயன்படுத்தப்படுகின்றது. இப்படி மூன்று விதமாகப் பயன்படுத்தப்படும் கல்வியில் மக்களுக்கு ஏற்படும் பணச் செலவும், நாள் செலவும், ஊக்கச் செலவும் அளவு சொல்ல முடியாததும் சாதாரண மக்கள் தாங்க முடியாததும் ஆகவே இருக்கிறது.

கல்விக்கு லட்சியமில்லை

பொதுவாகவே நான் சொல்லுவேன் நம் மக்களுக்கு கல்வி கற்பிப்பதில் நமக்கு லட்சியம் ஒன்றுமே கிடையாது. யார் எதைப் படிக்க வேண்டும்? படித்த படிப்பு எதற்குப் பயன்படும்? என்கின்ற ஒரு யோசனையே பெற்றோர்களுக்குக் கிடையாது. படிப்பது என்பது எதையோ படிப்பதும் படிப்பு வரக்கூடிய பிள்ளையாய் இருந்தால் படித்துக் கொண்டே போவதும், படிப்பு வரா விட்டால் நிறுத்திவிடுவதும், படித்துப் பட்டம் பெற்றுவிட்டால் அன்று முதலே  வேலை தேடித் திரிவதும் ஏதோ கிடைத்த வேலையை ஒப்புக்கொண்டு அதன் மூலம் வாழ்க்கை நடத்துவதும், தன் தனிப்பட்ட குடும்பம் முன்னுக்கு வரப்பார்ப்பதும், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வதும் ஆகிய இவைதான் கல்வியின் தன்மையாய் இருக்கிறது. எந்த வேலைக்கு எவ்வளவு படிப்பு வேண்டும் என்பதில் மனித னுக்கு சிறிதும் ஞானமே கிடையாது - தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கை நலத்திற்கே கல்வியைப் பயன்படுத்துவது கல்வியின் பயனாக ஆகிவிட்டதால் கல்வி கல்லாத மக்கள் என்பவர்களுடைய நாணயம், ஒழுக்கம் என்பதைவிட கற்றவர்கள் என்பவர்களுடைய நாணயமும் ஒழுக்கமும் மிகமிக மோசமாகவே இருக்கும்படி படித்த அநேகர் நிலைமை ஏற்பட்டுவிட்டது. கல்வி, தந்திரத்திற்கும் மற்ற மக்களை ஏய்ப்பதற்கும் கற்றிருக்கிறோம் என்பதற்கு ஆக சராசரி மனிதத் தன்மையைவிட பல மடங்கு தங்களைப் பெரியவர்களாக எண்ணிக் கொள்ளவும் நடவடிக்கையில் சராசரி மனித நாணயத்தை, நடத்தையைவிட பலமடங்கு மோசமாய் நடக்கவும் ஏற்பட்டுவிடுகிறது.

கல்வி மக்களைச் சுரண்டுகிறது
 
இன்றையக் கல்வி, கல்வியின் பேரால் மற்ற மக்களைச் சுரண்டுவதற்கே பயன்படக் கூடியதாக ஏற்பட்டுவிட்டதால் கல்வி கற்றவர்கள் என்பவர்களுக்கு மற்ற மக்கள் நலத்தைப் பற்றிக் கவலையே இல்லை. அதிலும் இராஜதந்திரம், அரசியல் என்கின்ற இரண்டு தலைப்பின் கீழ் எவ்வளவு அயோக்கியத்தனமாய் நடந்து கொண்டாலும் குறை கூறப்படுவதில்லை. ஆதலால் கற்றவர்கள் என்பவர்கள் தங்களது நாணயமற்ற தன்மையை நடத்திப் பயன் பெற அரசியலையும் இராஜ தந்திரத்தையும் கையாள மோகம் ஏற்பட்டு விடுகின்றது. ஆகவே இன்றைய கல்வி அறிவுக்கும், ஒழுக்கத்திற்கும், அன்புக்கும் பயன்படுவது இல்லை என்பது மாத்திரமில்லாமல் பல கேடுகளுக்கும் காரணமாக இருக்கின்றது.

இதில் மற்றொரு தன்மை என்னவென்றால் கல்வி கற்பது என்பது இன்று செல்வவான்களுக்கும் செல்வ சவுகரியம் இருப்பவர்களுக்கும் எள்ளளவும் ஒழுக்கமும், நாணயமும், மானமும் இல்லாமல்  பணம் தேடத் துணிகிற வர்களுக்கும்தான் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடிகின்றது . சிறிய பணக்காரர், சிறிய வரும்படிக்காரர், சராசரி வாழ்க்கைக்காரர்கள் நாணயத்துக்கும், மானத்துக் கும் பயந்து வாழ்க்கை நடத்துகிறவர்கள் ஆகியவர்கள் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க ஆரம்பித்தார்களே யானால் அவர்கள் மிக்க ஏழ்மைக் குடும்பத்தார்களாகவும் தரித்திரக்காரர்களாவும் சதா துன்ப வாழ்க்கை நடத்துகிறவர்களாகவும் ஆகிவிட நேரிடுகின்றது.

சர்க்கார் நிலை

சர்க்காருக்கு இந்தக் கல்வியைப் பற்றிய ஒரு பொறுப்புணர்ச்சியே கிடையாது என்றே சொல்லலாம். சாதாரணமாக சர்க்காரின் கல்வித் திட்டத்தின் கருத்து என்னமாயிருக்குமென்று யூகித்தறியவே முடியாமல் போகிறது. ஆனால் அது எப்படி முடிகின்றது என்று பார்த்தால் அநாகரிக மக்கள் அல்லது கீழ்த் தர மக்கள் செல்வவான்கள் ஆகாமல் கஷ்ட வாழ்வு நடத்தும்படி செய்வதற்கு கள்ளுக்கடைகள், சூதாடுமிடங்கள், விபசாரி இல்லங்கள் எப்படி இருந்து வருகின்றனவோ அதே போல் நாகரிக உணர்ச்சி உள்ள மக்கள் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டு வறுமை வாழ்வு வாழ்ந்துகொண்டு இருக்கவும் கையில் ஏதாவது ஒரு சிறு அளவும் சேர்த்து வைக்க முடியாமல் அடிமைத் தன்மைக்கு எப்பொழுதும் தயாராக இருக்கவும் மக்களைக் கட்டாயப்படுத்துவதற்கு அனுகூலமாக யோசித்துச் செய்யப்பட்ட காரியம் என்றுதான் கருத வேண்டியிருக்கிறது.

கோவில், பண்டிகை, திருவிழா, சடங்கு முதலியவை களும் பெருவாரியான மக்களை இந்த நிலைக்குத்தான் கொண்டு போகிறது என்று சொல்லப்பட்டாலும் அது வருணாசிரம தர்மத்தை நிலை நிறுத்தச் செய்த காரியம் என்னலாம். ஆனால் இந்தப் படிப்பு முறை அரசியல் ஆதிக்கத்தைக் குறிவைத்து ஒரு கூட்ட மக்களை அரசியல் அடிமையாக இருப்பதற்கு ஆகச் செய்த காரியம் என்றால் எண்ணத்தில் மாற்றம் இருந்தால் இருக்கலாமே ஒழிய பயனில் மாற்றம் இருக்காது என்பேன்.

B.A., M.A.,

சர்க்கார்  மக்களை B.A., M.A., படிக்க வேண்டும் என்று சொல்வதிலோ, அந்த யோக்கியதாம்சம் வேண்டுமென்று கேட்பதிலோ, அதற்கு ஆக சர்க்கார் பொருள் செலவழித்து தாபனம், இலாகா ஏற்படுத்தி இருப்பதிலோ என்ன நியாயமும் அவசியமும் கண்டு பிடிக்க முடிகிறது என்று கேட்கிறேன்.

சர்க்கார் உத்தியோகத்துக்கு B. A., வகுப்பு தேர்வு வேண்டியிருக்கிறது. அந்த பி.ஏ., தேர்வுக்கு இலக்கியம், பூகோளம், சரித்திரம், கணக்கு, விஞ்ஞானம் (சைன்) முதலியவை படித்து உருப்போட்டுத் தேரவேண்டி இருக்கிறது. இந்தப் படிப்புக்காரர்களுக்கு சர்க்கார் கொடுக்கும் உத்தியோகங்களுக்கு அவர்கள் உத்தி யோகம் பார்க்கும் காலங்களில், அல்லது தன்மைகளில் மேற்கண்ட இலக்கியம், பூகோளம், சரித்திரம், கணக்கு, சைன்ஸ் இவ்வளவு தேவை இருக்கிறதா? அல்லது பயன் படுகிறதா? என்று கேட்கிறேன். தேவை இல்லையென் றால் சர்க்கார் செய்வது தப்பான காரியமா இல்லையா? என்று கேட்கிறேன். ஒரு முஸ்லிம் உத்தியோகத்திற்கு வந்தால் அவனுக்கு ஒருமாதிரி யோக்கியதாம்சம் இருந்தால் போதுமென்றும், ஒரு ஆதிதிராவிடன் வேலைக்கு வந்தால் அவனுக்கு  ஒரு யோக்கியதாம்சம் இருந்தால் போதுமென்றும், ஒரு திராவிடனும் ஒரு ஆரியனும் (பார்ப்பானும்) உத்தி யோகத்திற்கு வந்தால் அவனுக்கு ஒரு மாதிரி யோக் கியதாம்சம் இருக்க  வேண்டுமென்றும், ஒரு அய்ரோப் பியனுக்கோ அல்லது ஆங்கிலோ இந்தியனுக்கோ வேறுமாதிரி யோக்கியதாம்சம் இருக்க வேண்டும் என்றும் தரம் பிரித்திருப்பதின் கருத்து என்ன?

முஸ்லிமுக்கும், ஆதிதிராவிடனுக்கும் சற்று குறைந்த படிப்பு யோக்கியதாம்சம் போதும் என்று சர்க்கார் ஒரு பத்தி வைத்திருக்கிறார்கள். இந்த இரு சமுகத்தாரும் திராவிடர், ஆரியர், என்கின்ற இரு சமுகத்தாரை விட அதிபுத்திசாலிகளாகக் கருதப்பட்டு அவர்களுக்குக் கல்வி யோக்கியதை குறைக்கப்பட்டு இருக்கிறதா? அல்லது அவர்கள் புத்திசாலித்தனத் துக்கு அவ்வளவு தான் படிக்க முடியும் என்று கருதி குறைக்கப்பட்டி ருக்கிறதா?

(02-03-1944 அன்று ஈரோடு இலண்டன் மிஷன் கம்யூனிட்டி டிரெயினிங் ஸ்கூலில் கல்வி என்னும் பொருள் பற்றி தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு)
 
(குடிஅரசு  - 01. 04. 1944)


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...