Thursday, March 20, 2014

மோடிக்கு முட்டுக் கொடுப்பவர்களைக் கேட்கிறோம்!


27.2.2002 புதன் அன்று  காலை 7.20 மணிக்கு அயோத்தியிலிருந்து வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் கோத்ரா ரயில் நிலையத்தில் நின்றது. அதில் பயணம் செய்த கரசேவகர்கள் ரயில் நிலையத்தில் கலாட்டா செய்ததால் அவர்கள் பயணம் செய்த ரயில் பெட்டி பொது மக்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.

அந்தப் பெட்டியில் பயணம் செய்த 26 பெண்கள், 15 குழந்தைகள் உட்பட 58 பேர் எரிந்து சாம்பலாகி விட்டனர்.

இதனைத் தொடர்ந்து குஜராத்தில் நடந்த கலவரத்தில் ஒரு சில மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர்!

முதல் அமைச்சர் மோடி அந்தக் கலவரத்தை இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் மிகவும் ஆணவமாக - பேசினார்.

நியூட்டன் விதிகளின்படி ஒவ்வொரு விளைவிற்கும் எதிர் விளைவு உண்டு என்று இனப்படுகொலைக்கு அறிவியல் விளக்கம் கொடுத்தார் முதல் அமைச்சர் நரேந்திர மோடி!

கலவரத்தையொட்டி சிறுபான்மை மக்களுக்கு அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களைக்கூட குழந்தைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் என்று வக்கிரப் புத்தியோடு வர்ணித்தார்!

12 ஆண்டுகளுக்குப் பிறகு (2014இல்) பிரதமர் வேட்பாளராக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நிறுத்தப்பட்டுள்ள நரேந்திர மோடியை நோக்கி  முன்பு குஜராத்தில் (2002-இல்) நடைபெற்ற திட்டமிட்ட இன ஒழிப்பு படுகொலைபற்றி இப்போது நீங்கள் இதுபற்றி என்ன கூறுகிறீர்கள்?  வருத்தம் தெரிவிப்பீர்களா? என்ற கேள்விக்கு,

ஒரு நல்ல சிமெண்ட் சாலையில் வேகமாகக் கார் செல்லும்போது, ஒரு நாய்க்குட்டி அடிபட்டு விட்டது என்றால், பின் சீட்டில் உட்கார்ந்திருக்கிற எனக்கு சிறிது வருத்தம் ஏற்படத்தானே செய் யும்? என்று கூறிய பதில் - மனிதா பிமானமோ, செத்தவர்களுக்காக வருந் தும் நிலையோ கூட ஏற்படாத  - இரக்கமற்ற ஆணவத் தின் குரல் அல்லவா?

இந்த குஜராத் இந்தியா முழுவதும் பரவுவதுதான் ஆரோக்கியமான ஜனநாயகமா?

இவரை உயர்த்திப் பிடிக்க தமிழ்நாட்டுத் தமிழர் இன உணர்வாளர்களாக தங்களைக் காட்டிக் கொள்ளும் கட்சிகள் ஓடலாமா? கூட்டணி என்ன கொள்கைக் கூட்டணியா? அல்லது வெறும் சீட்டணியா?
சிந்தியுங்கள் வாக்காளர்களே!

- சர்ச்லைட்

அம்மா உணவகத்தில் ஆபத்தான அம்...மாவு!

100 டன் கோதுமை மாவு அழிக்கப்படுகிறது!

சென்னை, மார்ச்.20- அம்மா உணவகங்களில் தயாரிக்கப்படும் மலிவு உணவால் ஆபத்து என்ற தகவல் வெளி வந்துள்ளது.

ஆய்வின் முடிவில் 100 டன் கோதுமை மாவு அழிக்கப் படுகிறதாம்....

தமிழக அரசின்சார்பில் நடத்தப்படும் அம்மா  உண வகங்களில் சப்பாத்தி மாலை 6 மணி முதல் 9 மணிவரை ரூ.3க்கு இரு சப்பாத்திகள் பருப்புக் கடை சலுடன் வழங்கப்படு கின்றன . 203 அம்மா உண வகங்களில் ஓர் உணவ கத்தில் சப்பாத்தி விற்பனை இரண்டாயிரம் வரை ஆனது. தற்போது மளமளவென விற்பனை சரிந்துள்ளது.

திருவொற்றியூர், மாதவ ரம்,  தண்டையார்ப்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், வளசரவாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் 30ஆயிரம் சப்பாத்திகள் விற்பனை யிலிருந்து 20ஆயிரத்துக்கும் குறைவாக விற்பனை ஆகியுள்ளது.

விற்பனைக் குறைவால் உற்பத்தியும் குறைக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் வரும் பொதுமக்கள் சப்பாத்திகள் கசப்பது குறித்து உணவ கங்களில் பணிபுரியும் பெண்களிடம் தொடர்ச்சி யாக புகார்களைத் தெரி வித்தவண்ணம் உள்ளனர்.

கோதுமைமாவே அப்படித் தான் எங்களுக்கு வழங்கப் படுகிறது என்றுதான் ஊழி யர்களால் பொதுமக்களி டம் கூற முடிந்தது.

ஆனா லும், இதுகுறித்து மேல் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

சப்பாத்திகள் கசப்பதற்கான காரணம் குறித்து அரசு அலுவலர்கள் விசாரணை மேற்கொண்ட னர். விசாரணையில் சப் பாத்தி மிகவும் கசப்பாக இருந்ததால் பொதுமக்கள் சப்பாத்திகளை வாங்குவ தில்லை என்று தெரிய வந்தது.

உணவுப்பொருள் வழங்கு  துறைமூலம் பெறப்படும் கோதுமையைச் சுத்தம் செய்யாமல் அப்படியே கோதுமை மாவாக அரைத்ததால் சப்பாத்தி களில் கசப்புத்தன்மை ஏற் பட்டதாக தெரிய வருகிறது.

சுகாதாரத்துறை சார்பில் ஆய்வு மேற்கொண்ட அதி காரிகள் சப்பாத்திக்கு பயன் படுத்தப்பட்ட கோதுமை மாவை பரிசோதனைக்கு ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளனர். ஆய்வில் அம் மாவுப்பொருள்  உணவாக உட்கொள்ளத் தகுதியற்ற தாக இருப்பதாக ஆய்வு அறிக்கையில் சான்று அளிக் கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஒரு இலட்சம் கிலோ கோதுமை மாவைப் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்துள் ளனர். இதனைத்தொடர்ந்து 100 டன் கோதுமை மாவை அழிக்க உத்தர விட்டுள்ளனர்.

குறிப்பு : பல நாடு களில் மைதா தடை செய் யப்பட்டுள்ளது.

Wednesday, March 19, 2014

பேராசையும் சோம்பேறித்தனமுமே பிரார்த்தனையின் அடிப்படை


- தந்தை பெரியார்

பிரார்த்தனை என்பது இன்று உலகில் மக்கள் சமூகம் எல்லோரிடத்திலும், அதா வது கடவுளால் மக்கள் நடத்தப்படு கிறார்கள் என்று நம்பும் எல்லோரிடத்திலும் இருந்து வருகிறது. இது எல்லா நாட்டிலும், எல்லா மதக்காரர்களிடத்திலும் இருந்து வருகிறது.

பிரார்த்தனை என்பதற்கு ஜபம், தபம், வணக்கம், பூசனை, தொழுகை முதலிய காரியங்களும், பெயர்களும் சொல்லு வதுண்டு.

இவையெல்லாம் கடவுளை வணங்கி தங்களுக்கு நன்மை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுவதேயாகும்.

தனக்கு வேண்டியவற்றை எல்லாம், அதாவது இம்மையில் இவ்வுலகில் புத்தி யுத்தி, செல்வம்,  இன்பம், ஆயுள், புகழ் முதலியவையும், மறுமையில் மேல் உலகத் தில் பாவ மன்னிப்பு, மோட்சம், நல்ல ஜென் மம் முதலியவையும் கிடைக்க வேண்டும் என்கின்ற ஆசையே பிரார்த்தனையின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.

இந்தப் பிரார்த்தனையின் அஸ்திவாரம் உலகத்தைப் படைத்துக் காத்து வரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும், அவர் சர்வ வல்லமையும், சர்வ வியாபக மும், சர்வமும் அறியும் ஞானமும் உடைய வர் என்பதும், அப்படிப்பட்ட கடவுளை வணங்குவதால் ஒருவனுக்கு வேண்டிய சகல காரியத்திலும் சித்தி பெறலாம் என் பதுமானவை தான் பிரார்த்தனைக்காரர் களின் கருத்தாயிருக்கிறது.

இப்படிப்பட்ட பிரார்த்தனைக்கு அக்கடவுளை வணங்கு வது, தோத்திரம் செய்வது, புகழ்வது, பஜனை செய்வது முதலிய காரியங்கள் ஒருபுற மிருக்க, பொருள்களைக் கொண்டும் கட வுளைத் திருப்தி செய்து அவற்றால் பயன் பெறலாம் என்பதும் இந்தப் பிரார்த் தனையில் சேர்ந்ததாகும்.

அதாவது கடவுளுக்கு இன்னது செய்வதாக நேர்ந்து கொள்ளுவது, ஜீவபலி கொடுப்பது, கோயில் கட்டுவது, உற்சவம் செய்வது முதலிய காரியங்கள் செய்யப்படு வனவாகும். ஆகவே, இப்படிப்பட்ட பிரார்த் தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாற்றுப் பெயர் சொல்ல வேண்டுமானால், பேராசை என்று தான் சொல்ல வேண்டும். பேராசை என்றால் தகுதிக்கு மேல் விரும் புவது; வேலை செய்யாமல் கூலி பெறுவது.

படித்து பாஸ் செய்ய வேண்டியவன் பிரார்த் தனையில் பாஸ் செய்வது என்றால், பணம் வேண்டியவன் பிரார்த்தனையில், பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால், மோட்சத்துக்குப் போக வேண்டும் என்கிற வன் பிரார்த்தனையில் மோட்சத்துக்குப் போக வேண்டும் என்றால், இவற்றுக்கெல் லாம் பேராசை என்று சொல்லுவதோடு வேலை செய்யாமல் கூலி கேட்கும் பெரும் சோம்பேறித்தனமும், மோசடியும் என்று சொல்லுவதும் தான் மிக பொருத்தமாகும்.

பேராசையும், சோம்பேறித்தனமும் ஏமாற்றும் தன்மையும் இல்லாவிட்டால், பிரார்த்தனைக்கு இடமே இல்லை.

சற்று முன் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஆக பிரார்த்தனை செய்வதும், பிரார்த் தனையில் அவற்றை அடையப் பார்ப்பதும் முன் குறிப்பிட்ட சர்வ வல்லமை, சர்வ வியாபகம் உள்ள கடவுளை சுத்த முட்டாள் என்று கருதி, கடவுளை ஏமாற்றச் செய்யும் சூழ்ச்சி என்று கூட சொல்லி ஆக வேண்டி யிருக்கிறது.

எந்த மனிதனும் தகுதியானால் எதையும் அடையலாம். அதற்கு வேண்டிய காரி யங்கள் செய்து, தகுதியாக்கிக் கொண்டு பலனடைய எதிர்பாராமல் காரியத்தைச் செய்யாது, பிரார்த்தனையில் பலன் அனுபவிக்க வேண்டும் என்று கருதினால், கடவுள், வேலை செய்யாமல் கூலி கொடுக் கும் ஒரு அறிவற்றவர் என்றும், தன்னைப் புகழ்வதாலேயே வேண்டியதைக் கொடுக் கும், ஒரு தற்புகழ்ச்சிக்காரர் என்றும் தானே சொல்ல வேண்டும்.

தவிர, இந்தப் பிரார்த்தனையின் தத்துவ மானது மனிதனைச் சோம்பேறியாக்கு வதோடு சகலவித அயோக்கியத்தனமான காரியங்களுக்கும் லைசன்சு, அனுமதிச் சீட்டுக் கொடுப்பது போலாகிறது. விதை நட்டு, தண்ணீர் பாய்ச்சாமல், அறுப்பு அறுக்க கத்தி எடுத்துக் கொண்டு போகிற வனுக்கும், யோக் கியமான காரியங்களைச் செய்யாமல் கடவுள் கருணையை எதிர் பார்ப்பவனுக்கும் என்ன வித்தியாசம் என்பது விளங்கவில்லை.

கடவுள் சகலத்தையும் உணர்ந்து அதற்குத் தகுந்தபடி கர்மபலன் கொடுக்கக் கூடிய சர்வசத்துவம் உள்ளவர் என்று ஒருவன் கருதியிருப்பானேயானால் அவன் கடவுளைப் பிரார்த்தனை செய்யும் வேலை யில் ஈடுபடவோ, அதற்காக நேரத்தைச் செலவு செய்யவோ ஒரு பொழுதும் துணிய மாட்டான்.

ஏனென்றால், சகல காரியமும் கடவு ளால்தான் ஆகும் என்று நினைத்துக் கொண்டு கடவுள் யாருடைய முயற்சியும், கோரிக்கையும் இல்லாமல் அவனவன் செய்கைக்கும், எண்ணத்துக்கும், தகுதிக்கும் தகுந்தபடி பலன் கொடுப்பதற்குத் தகுந்த ஏற்பாடும் செய்து விட்டார் என்றும், (அதா வது விதியின்படி தான் முடியும் என்றும் தெரிந்து இருந்த ஒருவன் அந்தத் தெளிவில் நம்பிக்கை இருந்தால்) பிரார்த்தனை செய் வானா என்று யோசித்துப் பார்க்க வேண்டு கிறோம்.

சாதாரணமாக மக்களில் 100-க்கு 90 பேர்களிடம் பிரார்த்தனை வெகு கேவல மான - அறிவற்ற வியாபாரத்தனமான முறையில் இருந்து வருகிறது. அதாவது எனக்கு இன்ன பலன் ஏற்பட்டால் உனக்கு இன்ன காரியம் செய்கிறேன்; அல்லது உனக்கு நான் இன்ன காரியம் செய்கிறேன். அதற்குப் பதிலாக நீ இன்ன காரியம் எனக்குச் செய் என்கின்ற முறையிலே பிரார்த்தனை இருந்து வருகிறது.

இப்படியேதான், இதையே தான் பிரார்த் தனையைத் தூண்டும் ஆதாரங்களும், சாஸ்திரங்களும், கரும காண்டமும் கூறு கின்றன.

இதைப் பார்த்தால், இவர்கள் எல்லோ ரும் அதாவது இந்தப் பிரார்த்தனைக் காரர்கள் எல்லோரும் கடவுள் புத்திசாலி என்றோ, சர்வசக்தி உள்ளவன் என்றோ, பெரிய மனிதத் தன்மை உடையவன் என்றோ கருதவில்லை என்று தான் சொல்லி ஆக வேண்டும். சிலர் சொல்லு கிறார்கள், மனிதன் பாவி, அவன் பாவ கர்மத்தைச் செய்து தான் தீருவான்; ஆதலால் மன்னிப்புக் கேட்டுத்தான் தீர வேண்டும் என்கிறார்கள்.

நான் பாவம் செய்து தான் தீருவேன்; நீ மன்னித்துத் தான் ஆகவேண்டுமென்று பிரார்த்திப்பதைக் கடவுள் ஏற்றுக் கொள் ளுவதானால் மனிதன் எந்தப் பாவத்தைச் செய்வதற்கும் ஏன் பயப்பட வேண்டும் என்பது நமக்குப் புலப்படவில்லை. பாவத் துக்கு எல்லாம் மன்னிப்பு இருக்குமானால் புண்ணியம் என்பதற்கு அர்த்தம் தான் என்ன?

ஆகவே, கடவுள் கற்பனையைவிட இந்தப் பிரார்த் தனைக் கற்பனையானது மிக மிக மோசமானது என்று தான் சொல்ல வேண்டும்.

பிரார்த்தனைக் கற்பனை இல்லாவிட் டால் கடவுள் கற்பனை ஒரு பிரயோஜனத் தையும் கொடுக்காமல் போய்விடும்.

மனிதன் பூஜையும், பிரார்த்தனையும் செய்து லாபம் அடைவதற்குத் தான் கடவுள் ஏற்படுத்தப்பட்டதே ஒழிய, கடவுளுக்கு ஆக பூஜையும், பிரார்த்தனையும் ஏற்படுத் தப்படவில்லை.

குரு - (பாதிரி), புரோகிதன் (பார்ப்பான்) ஆகியவர்கள் பிழைப்புக்கு ஆகவே பிரார்த்தனையும், கடவுள் மன்னிப்பும் ஏற்படுத்தப்பட வேண்டியதாய் விட்டது. இந்த இரண்டு காரியமும் இல்லாவிட்டால் பார்ப்பானுக்கோ, பாதிரிக்கோ, முல்லா வுக்கோ ஏதாவது வேலை உண்டா என் பதை யோசித்துப் பாருங்கள். ஆஸ்திகர்கள் கொள்கைப்படி மனிதனுடைய செய்கை யும், எண்ணமும், சித்திரபுத்திரனுக்கோ, கடவுளுக்கோ தெரியாமல் இருக்கவே முடியாது. இதற்கு ஆக பலன் கொடுக்க தீர்ப்பு நாளும், எமதர்மராஜாவும் இருந்தே இருக்கிறான்.

மத்தியில் பிரார்த்தனை பூசனை என்பது, மேல்கண்ட இரண்டையும் ஏமாற்றவா? அல்லது குருவும், புரோகிதனும் பிழைக் கவா? என்பது யோசித்தால் விளங்காமற் போகாது.

பிரார்த்தனையில் செலவாகும் நேரத்தைப் போல, மனிதன் வீணாய் கழிக்கும் நேரம் வேறு இல்லை என்றே சொல்லுவோம்.

சில சோம்பேறிகள் பிழைப்பதற்கு ஆக மக்கள் புத்தி எவ்வளவு கெடுகிறது? மக்களுக்கு அயோக்கியத்தனம் செய்ய எவ்வளவு தைரியம் ஏற்பட்டு விடுகிறது? பொருள்கள் எவ்வளவு நாசமாகிறது?

என்பவற்றையெல்லாம் யோசித்துப் பார்த்தால் பிரார்த்தனை என்பது ஒரு புரட்டான காரியம் என்றோ, பயனற்ற காரியம் என்றோ, அறிவீனமான காரியம் என்றோ விளங்காமற் போகாது.

பூசை புரட்டு குறித்து பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை (விடுதலை 20.11.1953.).



கடவுளை நம்புகிறவர்களை முட்டாள் என்று சொல்வதற்கு யார் காரணம்?


- தந்தை பெரியார்

இந்தக் கடவுள், மதம், சாஸ்திரம் போன்ற முட்டாள் தனம் முன்னோர்கள் காலத்தி லிருந்து இருந்து வருகிறது. இதை மாற்றக் கூடாதது என்று சொல்கின்றோமே தவிர, உணவை, உடையை, மற்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் முன்னோர்கள் பழமையைக் கடைபிடிப்பது கிடையாது.

விளக்கெண்ணெய் அகல் விளக்கைத் தூக்கிக் குப்பையிலெறிந்துவிட்டு மனிதன் மின்சார விளக்கைப் பயன்படுத்துகின் றானே தவிர, முன்னோர்கள் காலத்தி லிருந்து இருந்து வந்தது என்று எவனும் அகல் விளக்கைப் பயன் படுத்துவது கிடையாதே!

இங்கு மனிதன் சிந்திப்பது பாவம், மதத்திற்கு விரோதம், கடவுளுக்கு விரோ தம் என்று சொல்லி மனிதனின் சிந் தனையைத் தடுத்து விட்டதால் அறிவு வளர்ச்சியடைய முடியாமல் போய்விட்டது. ரஷ்யாக்காரன் கடவுள், மதத்தை ஒழித்து சிந்தனைக்குச் சுதந்திரம் கொடுத்ததால் அங்கு ஏழையும் இல்லை - பணக்காரனுமில்லை, தொழிலாளியும் இல்லை - தாழ்ந்த சாதிக்காரனும் இல்லை - உயர்ந்த சாதிக் காரனும் இல்லை. எல்லா மக்களும் சமமாக இருக்கிறார்கள்.

உலகில் நாம் பல பாகங்களைப் பார்த்துச் சிந்திக்க ஆரம்பித்த பின்தான் நம் இழிவிற்குப் காரணம் பகுத்தறி விருந்தும் அதனைக் கடவுள் - மதம் - சாஸ்திரம் - புராணம் - முன்னோர் - பெரியோர் என்கிற காரியங்களில் பயன்படுத் தாததே என்பது புலப்படுகிறது.

பகுத்தறிவு என்பது ஒரு மனிதனால் புகுத்தப் பட்டதல்ல, தானாக ஏற்படுவதாகும். ஏசு கிறிஸ்து ஆயிரம் கடவுள் இல்லை; ஒரு கடவுள்தான் உண்டு என்றான். அப்போது அவன் பகுத்தறிவுவாதி! முகமது நபி ஆயிரம் கடவுள் இல்லை; கடவுளுக்கு உருவ மில்லை; ஒரு கடவுள்தான் உண்டு என்று சொன்னான்; அந்தக் காலத்தில் அவன் பகுத்தறிவு வாதி! இப்போது நான் அந்த ஒரு கடவுளும் தேவையில்லை என்கின்றேன்.

குரங்கை எப்படி மனிதன் அடக்கி ஆட்டி வைக்கின்றானோ அதுபோல் மூடமக்களை மதவாதிகள் ஆட்டி வைக் கின்றனர். எதற்காக ஒருவன் மேல் சாதி என்றால், கடவுள் அமைப்பு, மத அமைப்பு, தலையெழுத்து, முன் ஜென்மத்தில் அவன் செய்த புண்ணியம் என்கின்றான். எதற்காக ஒருவன் கீழ்சாதி என்றால் அவன் தலை யெழுத்து, கடவுள் அமைப்பு, மத அமைப்பு, முன் ஜென்மத்தில் அவன் செய்த பாவம் என்கின்றான். ஆகையால்தான் மனிதனின் இழிவை ஒழிக்க இந்தக் கடவுள், மதம், சாதி, சாஸ்திரம் முன்ஜென்மம் என்கின்ற முட் டாள் தனங்களை ஒழிக்க வேண்டுமென் கிறோம்.

நோய்க்கு மூலகாரணம் என்ன என்பதை அறிந்து அதற்குப் பரிகாரம் செய் தால்தான் நோய் குணமாகும். அதுபோன்று நம் இழிவிற்கு, அறிவற்ற தன்மைக்கு, மானமற்ற தன்மைக்கு, அடிப்படை மூலம் எது என்று பார்த்து அதனை அழித்தால் தான் மனிதனின் இழிவு, அறிவற்றதன்மை, மானமற்ற தன்மை ஒழியும். இந்து மதம் இருப்பதால்தான் ஒருவன் பார்ப்பானா கவும், ஒருவன் பறையனாகவும் இருக்கின்றான். இந்துமதம் இல்லை என்றால் பார்ப்பானு மில்லை, பறையனுமில்லையே! கிறிஸ்து மதத்தில், முஸ்லிம் மதத்தில் பார்ப்பான் - பறையன் என்று எவனுமில்லையே!

இந்துமதம் என்பதாக ஒரு மதமே கிடையாது. காந்தியும் இதைச் சொல்லி விட்டார். இந்து என்றால் கருப்பு நிறமுடை யவன் என்றுதான் பொருள். இந்துமதம் இருந்தது என்பதற்கு எந்த இலக்கியத்திலும் சான்றில்லை. இந்து மதம் எப்போது தோன்றியது? அதன் தலைவன் யார்? மதநூல் (வேதம்) எது? என்றால் இவைகள் எதற்கும் தெளிவான விளக்கம் இல்லை. இவற்றிலிருந்தே இந்துமதம் இல்லை என்பதை உணரலாம்.

சிந்திக்காததனாலே எவன் அதை உப யோகப்படுத்திக் கொண்டு வாழ்கின் றானோ,  அவன்தான் நம்மையெல்லாம் சிந்திக்க ஒட்டாமல் தடுக்கின்றான். மற்ற வற்றில் பகுத்தறிவைப் பயன்படுத்துவது போன்று கடவுள் - மத - சாஸ்திர விஷயத் திலும் மனிதன் தன் சிந்தனையை - பகுத் தறிவைப் பயன்படுத்த வேண்டுமென்று நாம் சொல்கின்றோம்.

நாம் கடவுள் இல்லை என்று சொன் னால், கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று சொன்னால், இது நாமாக சொன்னது இல்லையே. கடவுள் நம்பிக்கைக்காரன் நம்மைப் பற்றிச் சொன்னதற்குப் பதில்தான் நாம் சொல்வதாகும்.

பைபிளிலேயே இருக்கிறதே! எவன் கடவுளை நம்பவில்லையோ அவன் முட்டாள், அயோக்கியன் என்கின்றான். துலுக்கனை எடுத்துக் கொண்டால் எவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லையோ அவன் காபிர், முட்டாள், அறிவில்லாதவன், அயோக்கியன் என்கின்றான்! கடவுள் நம்பிக்கையற்றவனையெல்லாம் கொலை செய்திருக்கிறார்களே!

சமணனும், புத்தனும் என்ன அயோக்கியத்தனம் செய்தனர்? எதற்காக அவர்களைக் கொலை செய்ய வேண்டும்? கழுவேற்றிக் கொல்ல  வேண் டும்? மதத்தைப் பரப்பியதே மக்களை வெட்டி வீழ்த்திக் கொன்றுதானே? துலுக் கன் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொன்றுதானே மகம்மதிய மதத்தைப் பரப்பினான்?

1920இல் மலையாளத்தில் மாப்பிள்ளா கலகம் ஏற்பட்டதே மதத்தைப் பரப்புவ தற்காக ஏற்பட்ட கலவரம்தானே! அது 1920லேயே இப்படிப்பட்ட கொடுமை நடந்திருக்கிற தென்றால் 1000, 2000 ஆண்டு களுக்கு முன் நடந்த கொடுமையைப் பற்றிச் சொல்ல வேண்டுமா?

ஏசுவை எதற்காகக் கொன்றார்கள்? ஆயிரம் கடவுள்கள் இல்லை; ஒரு கடவுள் தான் உண்டு என்று சொன்னார். அதற் காகத்தான் அவரைச் சிலுவையிலறைந்து கொன்றார்கள். இப்படிக் கடவுள் நம்பிக்கை யற்றவர்களை அழித்து ஒழித்துத்தான் மக்களை மடையர்களாக்கி வைத்திருக் கின்றார்கள்.

நாம் இப்போது இது போன்ற கழகங்கள் துவக்குவதன் நோக்கம் மனிதர்களுக் கிடையே இருக்கிற மடமை, முட்டாள் தனம், அறிவற்ற தன்மை ஒழிக்கப்பட வேண்டும். மற்ற உலகிலுள்ள மனிதர் களைப் போல் இழிவற்று அறிவு பெற்று வாழ வேண்டுமென்பதற்காகவும் மனிதன் தன்னை மனிதன் என்று சொல்லிக் கொள் வதற்குச் சிந்தனை வேண்டும். அந்தச் சிந்தனையைத் தூண்டுவதற் காகவும் ஏற்பாடு செய்யப்படுவதேயாகும் என எடுத்துரைத்தார்.

10.12.1970 அன்று கோவை மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் தொடர்ச்சி (விடுதலை, 20.1.1971).

Tuesday, March 18, 2014

ஹோலி

இந்து மதக் கடவுள் களுள் கிருஷ்ணன் என்னும் கடவுள் பலே கில்லாடி! 

பெண் ணென்று அடையாளம் தெரிந்து விட்டால் போதும் - அவ்வளவுதான் - காமக் குரூரன்! அவாள் பாஷையில் லீலை என்று சொல்லி விஷ யத்தை வேறு ஜிகினா ஒட்டித் திசைமாற்றி விடுவார்கள்.

பதினாயிரம் கோபிகா ஸ்திரீகளுடன் கூடிக் குலாவினான் என்று சொல்லுவதற்கு வெட்கப் படாமல், அதனையே பெரிய சாதனை போல பக்திக்கான பெரிய நிலை என்பது போல உருட்டல் புரட்டல் செய்து வைத் துள்ள தந்திரத்தைக் கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஆசையை அறு உள்ளிட்ட பல ஒழுக்க ரீதியான வழி முறைகளை கவுதமப் புத்தர் மக்களிடம் பரப்பி, ஆபாச வேத மத மான இந்து மதத்தின் ஆணி வேர்களை சுட்டுப் பொசுக்கினார்.

இதற்கு மாறாக, நேர் எதிர்ப்பாக - எப்படி இப் பொழுது சினிமாவைக் காட்டி, வசீகரங்களைக் காட்டி மக்களை, இளை ஞர்களை மயக்குகிறார் களோ, அரசியலில் துண் டில் போட இந்த வலையை விரிக்கிறார் களே, அதுபோலவே கவுதமப் புத்தரின் ஒழுக்கப் பத்தியங்களைப் புறந் தள்ளுவதற்கு காம இச்சைக் கதாநாயகனாக கிருஷ்ணன் என்ற கட வுளைக் கற்பித்து மக்களி டத்திலே உலாவ விட்டார் கள் என்பதுதான் உண்மை.

அந்தக் கிருஷ்ணன் பிறந்த  ஒரு ஊரைக் கற்பித்துள்ளனர். உ.பி. மதுரா மாவட்டத்தில் பிருந்தாவனம் தான் கில்லாடிக் கிருஷ்ணன் கடவுளின் ஊராம். வித வைப் பெண்கள் அதிகம் இருப்பது இந்த ஊரில் தான்! (கடவுளின் கிருபையோ!)

அங்கு ஒரு வேடிக்கை வினோதம்! ஹோலிப் பண்டிகை என்னும் பெய ரில் - இந்து மதத்தில் விதவைப் பெண்கள் என் றால் பூ வைக்கக் கூடாது; பொட்டு வைக்கக் கூடாது, நல்ல விதமாக துணி மணிகளை உடுத்தவும் கூடாது, சுபகாரியங் களில் கலந்து கொள்ள வும் கூடாது. அப்படித் தானே?

ஹோலிப் பண்டிகை என்பது முட்டாள்தன மானது என்றாலும் அதில் ஒரு திருப்பம் என்ன தெரியுமா?

விதவைப் பெண்கள் ஒருவர்மீது ஒருவர் பூக் களையும் வண்ணப் பொடிகளையும் தூவி மகிழ்ந்து இவ்வாண்டு ஹோலியைக் கொண் டாடினார்களாம்.

மதப் பண்டிகை என்றாலும், விதவைப் பெண்கள் இதன்மூலம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்று தான் கருத வேண்டும். விதை ஏதோ ஒரு வகை யில் ஊன்றப்பட்டதாகவே கருத வேண்டும்.

அடுத்தடுத்து விளைவுகளைப் பார்ப்போம்!

- மயிலாடன்

Thursday, March 6, 2014

காங்கிரஸ் தனது கட்சியைக் காப்பாற்றிக்கொள்ள முயலட்டும்! திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை

இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம்: உலகத் தமிழர்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாகும்!
வலிமையான தீர்மானத்தை கொண்டு வந்தாவது
காங்கிரஸ் தனது கட்சியைக் காப்பாற்றிக்கொள்ள முயலட்டும்!
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் நமக்கு மட்டுமல்ல, உலகத் தமிழர்களுக்கே மிகப்பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது. கலைஞர் தலைமையில் 'டெசோ' அமைப்பு கேட்டுக்கொண்டபடி, இப்போதாவது (காலந்தாழ்ந்தாவது) இலங்கைக்கு எதிரான வலிமையான தீர்மானத்தைக் கொண்டு வந்தாவது, தங்களது கட்சியை காங்கிரஸ் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

இலங்கையில் நடைபெற்ற இராஜபக்சே அரசின் இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் இவைகளைக் கண்டித்தும், விசாரணையும், நடவடிக்கையும் தேவை என்பதுபற்றியும், உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்கள் மட்டுமல்லாமல், மனித உரிமை ஆர்வலர்கள், காப்பாளர்கள், அமைப்புகள் வற்புறுத்தி வருகின்றன.

அய்.நா.வின் மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளை அவர்களிடம் நேரிலேயே டெசோவின் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் நேரில் சந்தித்து வற்புறுத்தி மனு கொடுத்தனர்.

உலகம் முழுவதிலும் இத்தகைய வற்புறுத்தலின் குரல் - நீதியின் குரலாக ஓங்கி ஒலித்தது.

இலங்கைப் போர்க் குற்றங்களுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் ஒன்றை அமெரிக்கா கொண்டு வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், அத்தீர்மானம் ஏதோ ஒப்புக்குச் சப்பாணி என்பதுபோல் அமைந்திருப்பது நமக்கு மட்டுமல்லாமல், உலகத் தமிழர்களுக்கே மிகப்பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.

விசாரணையை இலங்கை அரசே மீண்டும் விசாரித்து முடிவுகளைக் கூறவேண்டும் என்று அத்தீர்மானம் கூறுகிறது.

இதனால் ஒரு பயனும் ஏற்படாது; சுதந்திரமான விசாரணையும், தொடர் நடவடிக்கையும் தேவை!

குற்றவாளியையே காவல் துறை விசாரணை அதிகாரியாக நியமித்தால், எங்காவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமோ, நீதியோ கிடைக்குமா? ஒருபோதும் கிடைக்காது!

சர்வதேச விசாரணை - சுதந்திரமான வெளிநாட்டு விசாரணைக் குழுவினால் நடத்தப்பட்டு, உலக அரங்கில் இதற்குமுன் போர்க்குற்றம் நிகழ்ந்த பற்பல நாடுகள் தண்டிக்கப்பட்டதுபோல, ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் அமையவேண்டும். இனப்படுகொலை என்பது தீர் மானத்தில் வலியுறுத்தப்படவேண்டும்.
 
உலகின் மனித உரிமையைக் காக்கும் கடமை உணர்வுடைய அனைவரும் இதில் தயவு தாட்சண்யம் பாராமல் ஒருமித்துக் குரல் கொடுக்கவேண்டும்.

இந்தியாவின் மத்திய அரசுக்கு இதுதான் ஒரு கடைசி வாய்ப்பு - ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை மீது ராஜபக்சே அரசுக்குத் துணைபோன நிலைப்பாட்டினால் ஏற்பட்ட கறைகளைத் துடைத்துக் கொள்ள.

தனியாகவே தீர்மானம் கொண்டு வருவதற்கு இந்தியா, ஏற்கெனவே கலைஞர் தலைமையிலான டெசோ கேட்டுக்கொண்டபடி செய்திருக்கவேண்டும்; இப்போதாவது ‘‘Better late than never’’ என்ற பழமொழிக்கேற்ப காலந்தாழ்ந்தாவது, வலிமையான திருத்தத்தைக் கொண்டு வந்தாவது, தங்களது ஆட்சி, கட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவாவது முயற்சிக்கட்டும்!

ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுவதைவிட, இவர்களை (காங்கிரஸ் கட்சி)க் காப்பாற்றிக் கொள்ளவாவது அது ஓரளவு உதவக்கூடும்!

- கி.வீரமணி,
தலைவர்,திராவிடர் கழகம்.
சென்னை   
5.3.2014

Wednesday, March 5, 2014

இந்துத்துவ வலையில் சிக்கிய மீன்

ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரர் இருக்கிறார்.  அவர் முதலில் தி என்ற பயிற்சியாளரிடம் 10 மாதம் பயிற்சி பெறுகிறார். பங்கு பெறும் ஆட்டங்களில் எல்லாம் நாலும் ஆறுமாக, சதமும், இரட்டை சதமுமாக அடிக்கிறார்.

பத்து மாதங்கள் கழித்து பயிற்சியாளர் மாறி விடுகிறார். ஆ என்ற பயிற்சியாளர் வருகிறார். இப்பொழுது அந்த மட்டையாளர் ஆறு, நான்கு எல்லாம் அடிக்க முடியாமல், முட்டையும், 1 ஓட்டமுமாக ஒரு ஆட்டத்தில் 10 ஓட்டங்களைக்கூட அடிக்கத் திணறுகிறார். இப்படியாக 8 மாதங்கள் போய்விடுகிறது. அதன் பிறகு கி என்ற பயிற்சியாளர் வருகிறார். இப்பொழுது மட்டையாளர் படிப்படியாக முன்னேறுகிறார். 20, 30 என்று அடித்தவர், இரு மாதங்கள் கழித்து மெதுவாக 50 வரை அடித்துள்ளார். ஆனால் சதம் அடிக்கவில்லை. இப்பொழுது, சிறந்த பயிற்சியாளர் யார்? மோசமான பயிற்சியாளர் யார்?

*******

இந்தக் கேள்விகளை மனதில் இருத்திக்கொள்ளுங்கள். சிறிது வரலாறு படித்துவிட்டு மீண்டும் இதற்கு வருவோம்.

*******

தமிழகத்தைப் பொருத்தவரை, பல ஆண்ட பரம்பரைகள் உள்ளனர். ஏறத்தாழ அனைத்து ஜாதியினருமே ஏதோ ஒரு காலகட்டத்தில் அரசாண்டு உள்ளனர். பிற நேரங்களில் அவர்கள் நிலை அடிமையாக இருந்துள்ளது.

இதில் நெய்தல் நில கடல்சார் சமூக மக்களின் சரித்திரத்தைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

இவர்களும் ஒரு காலத்தில் அரசாண்டவர்கள் தான். சங்க கால பாண்டிய மன்னர்கள் நெய்தல் நில கடல் சார் சமூகத்தைச் சேர்ந்தவர்களே. அவர்களின் தலைநகரங்கள் கடலின் ஓரம் இருந்ததாலேயே அவை கடற்கோள்களினால் அழிய நேரிட்டது.

சங்க காலத்திலும், அதன் பிறகு களப்பிரர் காலம் வரையிலும் நெய்தல் நில கடல் சார் சமூகத்தினர் பல வேலைகளைச் செய்து வந்தனர். சிலர் கலங்களைக் கட்டுபவர்களாக இருந்துள்ளனர் (Ship builders).

சிலர் அந்தக் கலங்களை ஓட்டுபவர்களாகவும், பாய்மரத்தைப் பயன்படுத்துபவர்கள் (sailors) மற்றும் வானைப் பார்த்து வழி காட்டுபவர்கள் (navigators). சிலர், அந்தக் கலங்களில் சென்று வியாபாரம் செய்பவர்களாகவும் (businessmen), சிலர் அந்தக் கலங்களில் சென்று போர் புரிபவர்களாகவும் (navy), சிலர் சிறு படகுகளில் சென்று மீன் பிடிப்பவர்களாகவும் (fishermen), சிலர் முத்துக் குளிப்பவர்களாகவும் இருந்துள்ளனர் (pearl divers).

களப்பிரர் காலம் வரை மிகவும் சிறப்பாக இருந்த இந்த நெய்தல் நில மக்களுக்கு அதன் பிறகு சோழர் காலத்தில் வந்த, தமிழர்களின் வாழ்வைச் சீரழித்த, தமிழர்களின் கல்வியைத் தடுத்த, அவர்களின் ஒற்றுமையைக் கெடுத்த ஆரிய மதங்களால் இறக்கம் வந்தது. அதன் பிறகு தமிழகத்தின் பல சமூகங்களைப் போலவே இந்தச் சமூகமும் அடிமை சமூகமாகவே இருந்தது.

பிராமணர் தவிர மற்ற சமூகத்தினரைப் பலவாறாகப் பிரித்து, பிராமணர் தவிர மற்ற சமூகத்தினர்களின் ஒற்றுமையைக் குலைத்து, பிராமணர்களை மட்டும் முன்னிறுத்தும் ஆரியம் நெய்தல் நில கடல் சார் சமூகத்தையும் பிரித்தது. கலங்களைக் கட்டுபவர்களில் பலர் இசுலாம் மதத்தைத் தழுவி மரைக்காயர் ஆகிவிட்டனர்.

அந்தக் கலங்களில் சென்று வியாபாரம் செய்பவர்கள் செட்டியார்களாக மாறிவிட்டனர். (கோவலன், செட்டியார் தான். அதாவது, கடல்சார் சமூகத்தைச் சேர்ந்தவன்தான். அந்தக் காலத்தில் வந்த கடல்கோளினால் புகார் அழிந்தது. அதில் தப்பிப் பிழைத்த செட்டியார்கள் பயந்து கடலிலிருந்து உட்புறமாக வந்து சிவகங்கையில் தங்கினார்கள். ஆனால், நீரைப் பார்த்த பயம் மட்டும் போகவில்லை. செட்டி நாடு வந்தாலும், வீடுகளை 5 அல்லது 6 அடி உயரமாகவே கட்டினார்கள்! இன்றளவும் செட்டிநாட்டில் வீடுகள் உயரமாக இருப்பதன் காரணம் அவர்களுக்கு புகாரில் ஏற்பட்ட கடற்கோள் பாதிப்பினால் வந்த பயமே).

அந்தக் கலங்களில் சென்று போர் புரிபவர்களாக இருந்தவர்களில் சிலர், பிற மருதம் மற்றும் பாலை நில போர் வீரர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். அதில் குதிரை வீரர்கள் இராவுத்தர் ஆயினர்.

இன்றளவும், கடற்கரையோர இசுலாமிய சமூக மக்களும், மீன்பிடித் தொழில் செய்பவர்களும், சில இடங்களில் மாமன், மச்சான் உறவு முறை கொண்டாடுவதன் பின்ணனி இதுதான்.

பிற சமூகத்தினர் கல்வி கற்கத் தடை செய்த ஆரியம் நெய்தல் நில கடல்சார் சமூகத்தினரின் அரிய வானியல் அறிவையும், அவர்களின் பிற நுட்பங்களையும் பறித்துக் கொண்டது, பலனற்றதாக்கிவிட்டது.

கி.பி பத்தாம் நூற்றாண்டு வரை வெறும் பாய்மரம் மற்றும் விண்மீன்களின் துனை கொண்டு ஆப்பிரிக்காவைச் சுற்றி உரோமபுரிக்கும், யவனத்திற்கும் சென்று வாணிபம் செய்த ஒரு சமூகத்தின் அறிவும், திறமையும் ஆரியத்தால் அழிந்தன. எத்தனை ஏகலைவர்களின் கட்டை விரல்கள் பறிக்கப்பட்டிருக்கும் என்பதற்குக் கணக்குக் கிடையாது.

ஆரியம் அவர்களுக்கு கல்வியை முற்றிலும் மறுத்தது.

மிகுந்த செல்வச் செழிப்பாக இருந்த நெய்தல் நில மக்களை அடிமையாக்கி _ ஏழையாக்கி, அவர்களிடமிருந்த கப்பல் கட்டும் தொழில், பாய்மரம் செலுத்துதல், வழி காட்டுதல், வியாபாரம் ஆகியவற்றை அவர்களிடம் இருந்து பிரித்து அவர்களைக் கல்வி அறிவு அற்றவர்களாக ஆக்கி அவர்களை மீன் பிடிக்க மற்றும் முத்துக் குளிக்க மட்டும் அடிமையாக ஆக்கியது சோழர் காலத்தில் தமிழகத்திற்குள் வந்த ஆரியமே.

இதே போல் மருத நில மக்களும் பாதிக்கப்பட்டனர்.

கல்வியிலும் தத்துவத்திலும் தரை வழி வாணிபத்திலும் பள்ளிக்கூடங்களை நடத்துவதிலும் சிறந்து விளங்கிய சமணர்களில் பலரைக் கழுவில் ஏற்றி, பிறரை சாணார் என்று சொல்லி அந்தச் சமூகப் பெண்கள் மேல் சட்டை அணிய தடை விதித்தது. அவர்களை, பனை ஏற மட்டுமே சுருக்கியதும் ஆரியமே.

இது போல் தமிழகத்தின் எந்தத் தொல் சமூகத்தின் வரலாற்றை எடுத்துப் பார்த்தாலும் அவர்களின் வாழ்வைச் சீரழித்தது ஆரியம் என்று அறிந்து கொள்ளலாம்.

பத்தாம் நூற்றாண்டிலிருந்து மீன்பிடிப்பவர்களாகவும், முத்து குளிப்பவர்களாகவும் (மீனவர்கள், பரவர், பரதவர், முக்குவர்) மட்டுமே மாறி விட்ட நெய்தல் நில மக்களும் பனை ஏறுபவர்களாகவே மாற்றப்பட்டு, பெண்கள் இடுப்பிற்கு மேல் உடை அணிய தடை விதிக்கப்பட்ட (நாடார், சாணார்) மருத நில மக்களும் அடுத்த பல நூற்றாண்டுகளாக அடிமை நிலையிலேயே இருக்க வேண்டி வந்தது.

அவர்களுக்கு விமோசனம் அய்ரோப்பாவில் இருந்து நாடு பிடிக்க வந்த போர்த்துகிசீயர்களாலும், ஆங்கிலேயர்களாலுமே வந்தது.

அவர்கள் வந்த பிறகே இந்தச் சமூகங்கள் மீண்டும் கல்வி பெற முடிந்தது. போர்த்துகீசியர் கொண்டு வந்த கத்தோலிக்க மதத்திலும், ஆங்கிலேயர் கொண்டு வந்த கிறித்தவ மதத்திலும் யார் வேண்டுமானாலும் சாமியார், குருக்கள், ஆயர் ஆகலாம்.

அனைவரும் தேவாலயத்தின் உள்ளே சென்று கும்பிடலாம். தேவாலயத்தின் உள்ளே யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் அமரலாம்.

அனைவரும் நற்கருணை வாங்கலாம் போன்ற சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் பல நூற்றாண்டு அடிமைப்பட்டிருந்த சமூகங்களுக்கு விடிவெள்ளியாய் திகழ்ந்தன.

போர்த்துகீசியர் வருகையால் நெய்தல் நில மக்கள் தங்களின் கப்பல் சார் பணிகளை மீண்டும் பெற்றனர். (அதில் சிலர் மேசைக்காரர்கள் என்று ஆனது தனிக் கதை). திருநெல்வேலி தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் அளவிற்கு ஆங்கிலேயர் வருகையால் கல்விக்கூடங்கள் பெற்றது.

சென்னை மாகாண ஆளுநரின் நேரடித் தலையீட்டினால் உயர் ஜாதிப் பெண்களுக்கு மட்டுமே மேலாடை அணிவதற்குக் கொடுக்கப்பட்ட உரிமை அனைத்து ஜாதியைச் சேர்ந்த பெண்களுக்கும் கொடுக்கப்பட்டது. இதுதான் சுருக்கமான வரலாறு. அதாவது, திராவிட ஆட்சியில் சீரும் சிறப்புமாக இருந்த சமூகங்கள் எல்லாம் ஆரிய ஆட்சியில் அடிமையாக, கல்வி மறுக்கப்பட்டும், பெண்கள் இடுப்பிற்கு மேல் ஆடை அணிய உரிமை மறுக்கப்பட்டும், பலவாறாகப் பிரிக்கப்பட்டு, அவர்களின் பல தொழில்கள் பறிக்கப்பட்டுச் சீரழிந்து கொண்டிருந்த போது, அய்ரோப்பியர்கள் கொண்டு வந்த கிறித்தவ மதத்தினால் கல்வி பெற்று ஆடை அணிய உரிமை பெற்று தொழில் செய்ய உரிமை பெற்று சிறிது சிறிதாக முன்னேறி வருகிறார்கள்.

***********

இப்பொழுது மீண்டும் நாம் முதலில் பார்த்த கிரிக்கெட் கேள்விகளுக்கு வருவோம்.

சிறந்த பயிற்சியாளர் யார்? பயிற்சியாளர் தி மோசமான பயிற்சியாளர் யார்? பயிற்சியாளர் ஆ சரிதானே.

இப்பொழுது ஒருவர் கிரிக்கெட் குறித்து கட்டுரை எழுதுகிறார்.

அவர் என்ன மோசடி செய்கிறார் என்றால், தி என்ற ஒரு பயிற்சியாளர் இருந்ததை முற்றிலும் இருட்டடிப்புச் செய்து விடுகிறார். முதலில் பெற்ற சதங்களுக்குக் காரணம் ஆ என்று திரித்துப் பொய் கூறுகிறார். (அதாவது தியின் சாதனைகளை மறைத்து) இடையில் பெற்ற 0 ஓட்டங்களுக்குக் காரணம் கி என்று திரித்து அடுத்த பொய் கூறுகிறார் (அதாவது ஆ செய்த மோசடி வேலைகளை மறைத்து).

இப்பொழுது இந்தக் கட்டுரையாளர் ஆவின் ஆதரவாளர் தியின் மற்றும் கியின் எதிர்ப்பாளர் என்று கண்டு கொள்ள முடிகிறதல்லவா?

*******

இப்பொழுது நெய்தல் நிலத்திற்கு மீண்டும் வரலாம். நெய்தல் குறித்த கதை எழுதும் ஒருவர் களப்பிரர் காலம் வரை அந்தச் சமூகம் இருந்த உயர்வுகளைக் கூறி, ஆனால் களப்பிரர் என்பதை மறைத்து, அந்த உயர்வுகளுக்குக் காரணம் இந்து மதம் என்று பொய் கூறி இந்து மதத்தினால் இந்தச் சமூகத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் கூறலாம். அந்தப் பாதிப்புகளுக்கு எல்லாம் காரணம் கிறித்தவம் என்ற அடுத்த பொய் கூறுகிறார். அதாவது, களப்பிரர்களின் சாதனைகளை மறுக்கிறார். களப்பிரர்களின் சாதனைகளை எல்லாம் இந்து மதத்தின் சாதனைகளாகப் பொய் கூறுகிறார்.

ஆரியத்தின் துரோகங்களை மறைக்கிறார். அந்தத் துரோகங்களை, அந்த மக்கள் விரோதச் செயல்களை எல்லாம் செய்தது கிறித்தவம் என்று பொய் கூறுகிறார்.

கிறித்தவத்தின் சாதனைகளை மறைக்கிறார்.

இப்படிப்பட்டவரை இந்துத்துவ எழுத்தாளர் என்று கூறினால் அதில் என்ன பிழை? அவர் சாகித்திய அகாடமி விருது வாங்கினால் என்ன, வாங்காவிட்டால் என்ன?

- கிளிமூக்கு அரக்கன் (முகநூலில்)

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...