Wednesday, March 5, 2014

இந்துத்துவ வலையில் சிக்கிய மீன்

ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரர் இருக்கிறார்.  அவர் முதலில் தி என்ற பயிற்சியாளரிடம் 10 மாதம் பயிற்சி பெறுகிறார். பங்கு பெறும் ஆட்டங்களில் எல்லாம் நாலும் ஆறுமாக, சதமும், இரட்டை சதமுமாக அடிக்கிறார்.

பத்து மாதங்கள் கழித்து பயிற்சியாளர் மாறி விடுகிறார். ஆ என்ற பயிற்சியாளர் வருகிறார். இப்பொழுது அந்த மட்டையாளர் ஆறு, நான்கு எல்லாம் அடிக்க முடியாமல், முட்டையும், 1 ஓட்டமுமாக ஒரு ஆட்டத்தில் 10 ஓட்டங்களைக்கூட அடிக்கத் திணறுகிறார். இப்படியாக 8 மாதங்கள் போய்விடுகிறது. அதன் பிறகு கி என்ற பயிற்சியாளர் வருகிறார். இப்பொழுது மட்டையாளர் படிப்படியாக முன்னேறுகிறார். 20, 30 என்று அடித்தவர், இரு மாதங்கள் கழித்து மெதுவாக 50 வரை அடித்துள்ளார். ஆனால் சதம் அடிக்கவில்லை. இப்பொழுது, சிறந்த பயிற்சியாளர் யார்? மோசமான பயிற்சியாளர் யார்?

*******

இந்தக் கேள்விகளை மனதில் இருத்திக்கொள்ளுங்கள். சிறிது வரலாறு படித்துவிட்டு மீண்டும் இதற்கு வருவோம்.

*******

தமிழகத்தைப் பொருத்தவரை, பல ஆண்ட பரம்பரைகள் உள்ளனர். ஏறத்தாழ அனைத்து ஜாதியினருமே ஏதோ ஒரு காலகட்டத்தில் அரசாண்டு உள்ளனர். பிற நேரங்களில் அவர்கள் நிலை அடிமையாக இருந்துள்ளது.

இதில் நெய்தல் நில கடல்சார் சமூக மக்களின் சரித்திரத்தைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

இவர்களும் ஒரு காலத்தில் அரசாண்டவர்கள் தான். சங்க கால பாண்டிய மன்னர்கள் நெய்தல் நில கடல் சார் சமூகத்தைச் சேர்ந்தவர்களே. அவர்களின் தலைநகரங்கள் கடலின் ஓரம் இருந்ததாலேயே அவை கடற்கோள்களினால் அழிய நேரிட்டது.

சங்க காலத்திலும், அதன் பிறகு களப்பிரர் காலம் வரையிலும் நெய்தல் நில கடல் சார் சமூகத்தினர் பல வேலைகளைச் செய்து வந்தனர். சிலர் கலங்களைக் கட்டுபவர்களாக இருந்துள்ளனர் (Ship builders).

சிலர் அந்தக் கலங்களை ஓட்டுபவர்களாகவும், பாய்மரத்தைப் பயன்படுத்துபவர்கள் (sailors) மற்றும் வானைப் பார்த்து வழி காட்டுபவர்கள் (navigators). சிலர், அந்தக் கலங்களில் சென்று வியாபாரம் செய்பவர்களாகவும் (businessmen), சிலர் அந்தக் கலங்களில் சென்று போர் புரிபவர்களாகவும் (navy), சிலர் சிறு படகுகளில் சென்று மீன் பிடிப்பவர்களாகவும் (fishermen), சிலர் முத்துக் குளிப்பவர்களாகவும் இருந்துள்ளனர் (pearl divers).

களப்பிரர் காலம் வரை மிகவும் சிறப்பாக இருந்த இந்த நெய்தல் நில மக்களுக்கு அதன் பிறகு சோழர் காலத்தில் வந்த, தமிழர்களின் வாழ்வைச் சீரழித்த, தமிழர்களின் கல்வியைத் தடுத்த, அவர்களின் ஒற்றுமையைக் கெடுத்த ஆரிய மதங்களால் இறக்கம் வந்தது. அதன் பிறகு தமிழகத்தின் பல சமூகங்களைப் போலவே இந்தச் சமூகமும் அடிமை சமூகமாகவே இருந்தது.

பிராமணர் தவிர மற்ற சமூகத்தினரைப் பலவாறாகப் பிரித்து, பிராமணர் தவிர மற்ற சமூகத்தினர்களின் ஒற்றுமையைக் குலைத்து, பிராமணர்களை மட்டும் முன்னிறுத்தும் ஆரியம் நெய்தல் நில கடல் சார் சமூகத்தையும் பிரித்தது. கலங்களைக் கட்டுபவர்களில் பலர் இசுலாம் மதத்தைத் தழுவி மரைக்காயர் ஆகிவிட்டனர்.

அந்தக் கலங்களில் சென்று வியாபாரம் செய்பவர்கள் செட்டியார்களாக மாறிவிட்டனர். (கோவலன், செட்டியார் தான். அதாவது, கடல்சார் சமூகத்தைச் சேர்ந்தவன்தான். அந்தக் காலத்தில் வந்த கடல்கோளினால் புகார் அழிந்தது. அதில் தப்பிப் பிழைத்த செட்டியார்கள் பயந்து கடலிலிருந்து உட்புறமாக வந்து சிவகங்கையில் தங்கினார்கள். ஆனால், நீரைப் பார்த்த பயம் மட்டும் போகவில்லை. செட்டி நாடு வந்தாலும், வீடுகளை 5 அல்லது 6 அடி உயரமாகவே கட்டினார்கள்! இன்றளவும் செட்டிநாட்டில் வீடுகள் உயரமாக இருப்பதன் காரணம் அவர்களுக்கு புகாரில் ஏற்பட்ட கடற்கோள் பாதிப்பினால் வந்த பயமே).

அந்தக் கலங்களில் சென்று போர் புரிபவர்களாக இருந்தவர்களில் சிலர், பிற மருதம் மற்றும் பாலை நில போர் வீரர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். அதில் குதிரை வீரர்கள் இராவுத்தர் ஆயினர்.

இன்றளவும், கடற்கரையோர இசுலாமிய சமூக மக்களும், மீன்பிடித் தொழில் செய்பவர்களும், சில இடங்களில் மாமன், மச்சான் உறவு முறை கொண்டாடுவதன் பின்ணனி இதுதான்.

பிற சமூகத்தினர் கல்வி கற்கத் தடை செய்த ஆரியம் நெய்தல் நில கடல்சார் சமூகத்தினரின் அரிய வானியல் அறிவையும், அவர்களின் பிற நுட்பங்களையும் பறித்துக் கொண்டது, பலனற்றதாக்கிவிட்டது.

கி.பி பத்தாம் நூற்றாண்டு வரை வெறும் பாய்மரம் மற்றும் விண்மீன்களின் துனை கொண்டு ஆப்பிரிக்காவைச் சுற்றி உரோமபுரிக்கும், யவனத்திற்கும் சென்று வாணிபம் செய்த ஒரு சமூகத்தின் அறிவும், திறமையும் ஆரியத்தால் அழிந்தன. எத்தனை ஏகலைவர்களின் கட்டை விரல்கள் பறிக்கப்பட்டிருக்கும் என்பதற்குக் கணக்குக் கிடையாது.

ஆரியம் அவர்களுக்கு கல்வியை முற்றிலும் மறுத்தது.

மிகுந்த செல்வச் செழிப்பாக இருந்த நெய்தல் நில மக்களை அடிமையாக்கி _ ஏழையாக்கி, அவர்களிடமிருந்த கப்பல் கட்டும் தொழில், பாய்மரம் செலுத்துதல், வழி காட்டுதல், வியாபாரம் ஆகியவற்றை அவர்களிடம் இருந்து பிரித்து அவர்களைக் கல்வி அறிவு அற்றவர்களாக ஆக்கி அவர்களை மீன் பிடிக்க மற்றும் முத்துக் குளிக்க மட்டும் அடிமையாக ஆக்கியது சோழர் காலத்தில் தமிழகத்திற்குள் வந்த ஆரியமே.

இதே போல் மருத நில மக்களும் பாதிக்கப்பட்டனர்.

கல்வியிலும் தத்துவத்திலும் தரை வழி வாணிபத்திலும் பள்ளிக்கூடங்களை நடத்துவதிலும் சிறந்து விளங்கிய சமணர்களில் பலரைக் கழுவில் ஏற்றி, பிறரை சாணார் என்று சொல்லி அந்தச் சமூகப் பெண்கள் மேல் சட்டை அணிய தடை விதித்தது. அவர்களை, பனை ஏற மட்டுமே சுருக்கியதும் ஆரியமே.

இது போல் தமிழகத்தின் எந்தத் தொல் சமூகத்தின் வரலாற்றை எடுத்துப் பார்த்தாலும் அவர்களின் வாழ்வைச் சீரழித்தது ஆரியம் என்று அறிந்து கொள்ளலாம்.

பத்தாம் நூற்றாண்டிலிருந்து மீன்பிடிப்பவர்களாகவும், முத்து குளிப்பவர்களாகவும் (மீனவர்கள், பரவர், பரதவர், முக்குவர்) மட்டுமே மாறி விட்ட நெய்தல் நில மக்களும் பனை ஏறுபவர்களாகவே மாற்றப்பட்டு, பெண்கள் இடுப்பிற்கு மேல் உடை அணிய தடை விதிக்கப்பட்ட (நாடார், சாணார்) மருத நில மக்களும் அடுத்த பல நூற்றாண்டுகளாக அடிமை நிலையிலேயே இருக்க வேண்டி வந்தது.

அவர்களுக்கு விமோசனம் அய்ரோப்பாவில் இருந்து நாடு பிடிக்க வந்த போர்த்துகிசீயர்களாலும், ஆங்கிலேயர்களாலுமே வந்தது.

அவர்கள் வந்த பிறகே இந்தச் சமூகங்கள் மீண்டும் கல்வி பெற முடிந்தது. போர்த்துகீசியர் கொண்டு வந்த கத்தோலிக்க மதத்திலும், ஆங்கிலேயர் கொண்டு வந்த கிறித்தவ மதத்திலும் யார் வேண்டுமானாலும் சாமியார், குருக்கள், ஆயர் ஆகலாம்.

அனைவரும் தேவாலயத்தின் உள்ளே சென்று கும்பிடலாம். தேவாலயத்தின் உள்ளே யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் அமரலாம்.

அனைவரும் நற்கருணை வாங்கலாம் போன்ற சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் பல நூற்றாண்டு அடிமைப்பட்டிருந்த சமூகங்களுக்கு விடிவெள்ளியாய் திகழ்ந்தன.

போர்த்துகீசியர் வருகையால் நெய்தல் நில மக்கள் தங்களின் கப்பல் சார் பணிகளை மீண்டும் பெற்றனர். (அதில் சிலர் மேசைக்காரர்கள் என்று ஆனது தனிக் கதை). திருநெல்வேலி தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் அளவிற்கு ஆங்கிலேயர் வருகையால் கல்விக்கூடங்கள் பெற்றது.

சென்னை மாகாண ஆளுநரின் நேரடித் தலையீட்டினால் உயர் ஜாதிப் பெண்களுக்கு மட்டுமே மேலாடை அணிவதற்குக் கொடுக்கப்பட்ட உரிமை அனைத்து ஜாதியைச் சேர்ந்த பெண்களுக்கும் கொடுக்கப்பட்டது. இதுதான் சுருக்கமான வரலாறு. அதாவது, திராவிட ஆட்சியில் சீரும் சிறப்புமாக இருந்த சமூகங்கள் எல்லாம் ஆரிய ஆட்சியில் அடிமையாக, கல்வி மறுக்கப்பட்டும், பெண்கள் இடுப்பிற்கு மேல் ஆடை அணிய உரிமை மறுக்கப்பட்டும், பலவாறாகப் பிரிக்கப்பட்டு, அவர்களின் பல தொழில்கள் பறிக்கப்பட்டுச் சீரழிந்து கொண்டிருந்த போது, அய்ரோப்பியர்கள் கொண்டு வந்த கிறித்தவ மதத்தினால் கல்வி பெற்று ஆடை அணிய உரிமை பெற்று தொழில் செய்ய உரிமை பெற்று சிறிது சிறிதாக முன்னேறி வருகிறார்கள்.

***********

இப்பொழுது மீண்டும் நாம் முதலில் பார்த்த கிரிக்கெட் கேள்விகளுக்கு வருவோம்.

சிறந்த பயிற்சியாளர் யார்? பயிற்சியாளர் தி மோசமான பயிற்சியாளர் யார்? பயிற்சியாளர் ஆ சரிதானே.

இப்பொழுது ஒருவர் கிரிக்கெட் குறித்து கட்டுரை எழுதுகிறார்.

அவர் என்ன மோசடி செய்கிறார் என்றால், தி என்ற ஒரு பயிற்சியாளர் இருந்ததை முற்றிலும் இருட்டடிப்புச் செய்து விடுகிறார். முதலில் பெற்ற சதங்களுக்குக் காரணம் ஆ என்று திரித்துப் பொய் கூறுகிறார். (அதாவது தியின் சாதனைகளை மறைத்து) இடையில் பெற்ற 0 ஓட்டங்களுக்குக் காரணம் கி என்று திரித்து அடுத்த பொய் கூறுகிறார் (அதாவது ஆ செய்த மோசடி வேலைகளை மறைத்து).

இப்பொழுது இந்தக் கட்டுரையாளர் ஆவின் ஆதரவாளர் தியின் மற்றும் கியின் எதிர்ப்பாளர் என்று கண்டு கொள்ள முடிகிறதல்லவா?

*******

இப்பொழுது நெய்தல் நிலத்திற்கு மீண்டும் வரலாம். நெய்தல் குறித்த கதை எழுதும் ஒருவர் களப்பிரர் காலம் வரை அந்தச் சமூகம் இருந்த உயர்வுகளைக் கூறி, ஆனால் களப்பிரர் என்பதை மறைத்து, அந்த உயர்வுகளுக்குக் காரணம் இந்து மதம் என்று பொய் கூறி இந்து மதத்தினால் இந்தச் சமூகத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் கூறலாம். அந்தப் பாதிப்புகளுக்கு எல்லாம் காரணம் கிறித்தவம் என்ற அடுத்த பொய் கூறுகிறார். அதாவது, களப்பிரர்களின் சாதனைகளை மறுக்கிறார். களப்பிரர்களின் சாதனைகளை எல்லாம் இந்து மதத்தின் சாதனைகளாகப் பொய் கூறுகிறார்.

ஆரியத்தின் துரோகங்களை மறைக்கிறார். அந்தத் துரோகங்களை, அந்த மக்கள் விரோதச் செயல்களை எல்லாம் செய்தது கிறித்தவம் என்று பொய் கூறுகிறார்.

கிறித்தவத்தின் சாதனைகளை மறைக்கிறார்.

இப்படிப்பட்டவரை இந்துத்துவ எழுத்தாளர் என்று கூறினால் அதில் என்ன பிழை? அவர் சாகித்திய அகாடமி விருது வாங்கினால் என்ன, வாங்காவிட்டால் என்ன?

- கிளிமூக்கு அரக்கன் (முகநூலில்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...