Tuesday, August 6, 2013

சிவ- அய்யாதுரை பேசுகிறார்

தமிழர்கள் பெருமைப்படக் கூடிய தமிழர் - இராஜபாளையத்தைச் சேர்ந்த சிவ. அய்யா துரை. தொலைத் தொடர்புத்துறையில் மின் அஞ்சலைக் கண்டுபிடித்து அறிவியல் உலகத் தில் மிக உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.
நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, ஊராட்சி, நகராட்சிப் பள்ளியில் படித்தவர் இவர். கல்விப் பாரம்பரியம் உள்ளவர் என்ற பின்னணி யெல்லாம் இவருக்குக் கிடையாது. சென்னை அரிமா சங்கத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் தெரிவித்த கருத்து கவனிக்கத்தக்கது - கருத்தூன்றத்தக்கது.
எப்பொழுது தமிழர்கள் ஜாதியினைத் துறந்து ஒரே இனமாகச் சிந்திக்கத் தொடங்கு கிறார்களோ அப்பொழுதுதான் தமிழர்கள் முன்னேற முடியும் என்று அவர் தெரிவித்த கருத்தினை வரவேற்கிறோம் - பாராட்டு கிறோம்!
தமிழர்களின் ஒற்றுமையைச் சிதைத்தது ஜாதிதானே! தமிழன், தாம் ஓர் இனம் என்ற உணர்வைப் பெறுவதற்குத் தடையாக இருப்பது ஜாதி தானே? நீ யார் என்று கேட்டால் முதலியார், செட்டியார், நாடார், வன்னியர் என்று சொல்லுகிறானே தவிர நான் தமிழன் என்று சொல்லுவதில்லையே!
இந்த உணர்வு வழி ஒற்றுமை இல்லாத காரணத்தால் தமிழன் பல உரிமைகளை இழந்து கொண்டு இருக்கிறான் - போராடும் உணர்வினையும் தொலைத்துக் கொண்டு இருக்கிறான் என்பதை மறுக்க முடியுமா?
இன்னொரு கருத்து அவர் குறிப்பிட்டுள்ளது மிக முக்கியமானது. நமது நாட்டுக் கல்வி முறை என்பது வெறும் மனப்பாடக் கல்வியாகத் தானிருக்கிறது. அறிவியல் சிந்தனையை வளர்ப்பதாக இல்லை என்று அவர் குறிப்பிட்டது மிகச் சரியானது.
நம் நாட்டுக் கல்வி முறை - மதிப்பெண்கள் என்பதெல்லாம் பார்ப்பனர்களுக்கு எளிதான வசதியான மனப்பாட முறை. மந்திரங்களை மனப்பாடம் செய்து மனப்பாடம் செய்து பரம்பரைப் பரம்பரையாக மரபு வழித் திறன் களை வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்தக் கல்வி முறை கண்டிப்பாக மாற்றப்பட வேண்டும். சுய சிந்தனையைத் தூண்டக் கூடியதாகவும், மாணவர்களின் தனித் திறனை அடையாளங் கண்டு, அதனை வளர்க்கக் கூடியதாகவும் அல்லவா கல்வி முறை இருக்க வேண்டும்.
நம் நாட்டில் அறிவியல் பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளனவே தவிர அறிவியல் மனப்பான்மையை வளர்க்கக் கூடிய தன்மையில் அவை இல்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
மதிப்பெண்கள் அதிகம் வாங்குவது எப்படி என்ற கலையைக் கற்றுக் கொடுக்கும் கல்வியால் என்ன பயன்?
பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தோழர் சிவ. அய்யாதுரையின் மனதைக் காயப்படுத்தும் அளவுக்கு ஒரு நிகழ்வு - அதனையும் அரிமா சங்கக் கூட்டத்தில் தெரிவிக்கத் தயங்கவில்லை அவர்.
ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு வெளிவரக் கூடிய ஓர் ஆங்கில இதழ் வெளியிட்ட செய்திதான் அது.
பார்ப்பனர் அல்லாதார் இவ்வளவுப் பெரிய அறிவியல் கண்டுபிடிப்பை கண்டுபிடித்திருக்க முடியாது என்று அந்தப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டு இருந்த தகவலை இளம் விஞ்ஞானி சிவ. அய்யாதுரை கூறியது எத்தகைய அதிர்ச்சிக்கு உரியது! நம் நாட்டுப் பார்ப்பனர்களின் மனப்பான்மை, எத்தகைய இனத் துவேஷ நஞ்சை உள்ளடக்கிக் கொண்டு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். சிவ. அய்யாதுரை அவர்கள் ஒன்றும் திராவிடர் கழகத்துக்காரர் அல்லர்;  அத்தகைய ஒருவரே இதனை எடுத்துச் சொல்லிக் குமுறி இருக்கிறார் என்றால் இதைவிடப் பார்ப்பனர் களைத் தெரிந்து கொள்ள வேறு என்ன ஆதாரம் தேவை?

Monday, August 5, 2013

அடுத்த கட்டப் பணி நோக்கி டெசோ!

ஈழத் தமிழினம் மானமும், அறிவும், உரிமையும் பெற்றிட
8ஆம் தேதி தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை
எழுச்சியுடன் நடத்திட அணி திரண்டு வாரீர்! வாரீர்!!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அழைப்பு - அறிக்கை!


ஆகஸ்டு 8ஆம் தேதி தமிழ்நாடு தழுவிய அளவில் டெசோ சார்பில் நடத்தப்பட உள்ள தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை எழுச்சி யுடன் நடத்திட அணி வகுத்து அனைவரும் வருமாறு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கடந்த 16.7.2013 அன்று டெசோ கூட்டம் அதன் தலைவர் மானமிகு கலைஞர் அவர்களது தலைமையில் நடைபெற்றது. அவ்வமயம் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான பாதுகாப்புக்காக 4 முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி, மத்திய மாநில அரசுகளுக்கும், இலங்கை சிங்களப் பேரினவாத அரசுக்கும் தமிழர்களின் உரிமைக் குரலைப் புரிய வைத்துள்ளது.
ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்கள்
இக்கோரிக்கைகளை வற்புறுத்திடும் வகையில் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை 8.8.2013 அன்று நடத்திடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
1) இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தியும்.
2) இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தியும்,
3) தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியும்,
4) இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தைத் தடுக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டியும்,
நிறைவேற்றப்பட்டுள்ள இந்த நான்கு தீர்மானங் களையும் தமிழக மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லவும் அரசுகளுக்கு அழுத்தம் தரவும்.
ஆகஸ்ட் 8இல் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் என்ற அறப் போராட்டம் நடைபெறவிருக்கிறது!
டெசோவின் உறுப்புகளான தி.மு.க., தி.க. விடுதலைச் சிறுத்தைகள், திராவிட இயக்கத் தமிழர் பேரவை போன்ற அமைப்புகளும், தமிழ் இனவுணர் வாளர்கள், பற்றாளர்கள் அனைவரும் பல லட்சக் கணக்கில் திரண்டு இந்த அறப்போராட்டத்தின் மூலம் உலக நாடுகள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவை களுக்கு உணர்த்திடும் அரிய வாய்ப்பு நிச்சயம் ஏற்படும்!
கடந்த ஆண்டு டெசோ மாநாடு!
சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டைடெசோ சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடத்தியதிலிருந்து ஓராண்டு காலத்தில் - அடுக்கடுக்காக அதன் செயல்பாடுகள் உலக அய்.நா. மன்றம் தொடங்கி, உள்ளூர் மக்களின் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு வடிவம் கொடுத்தது வரை, செய்து வரும் சாதனைகள் அடை மழை போன்ற அடுக்கடுக்கான அறப் போராட்டங்கள்!
என்றாலும் நமது ஈழத் தொப்புள் கொடி உறவுகள் உண்மையான விடுதலையையும், சமத்துவ சம வாழ்வுரிமையையும் பெறும்வரை, நம் பணி தொடர் பணியாகவே இருக்கும் இருந்தே தீரும்!
கட்சியில்லை - ஜாதியில்லை!
தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஒரு தனி வரலாறு படைக்கும் வண்ணம் குடும்பம் குடும்பமாகக் கலந்து கொள்ள வேண்டும்!
இதில் கட்சியில்லை,
இதில் ஜாதியில்லை,
இதில் மதமில்லை,
இதில் மனிதநேயம் உண்டு.
மனித உரிமைப் போர்க் குரல் உண்டு,
நாதியில்லாதவர்கள் அல்ல எம் ஈழத்துத் தமிழ்ச் சொந்தங்கள் - அறுபடாத பந்தங்கள்
அவர்கள் உரிமைகளை பெறும் வரை
நம் பணி ஓயாத பணி; ஒழியாத பணி!
90 வயதிலும் களத்தில் கலைஞர்
சென்னையில் இந்த 90 வயதிலும் களம் காணுகிறார் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கழகத்தில் வற்புறுத்தும் நம் இனத்தின் ஒப்பற்ற பாதுகாவலர் மானமிகு கலைஞர் அவர்கள்!
சென்னையில் அவருடன் சகோதரர் பேராசிரியர் மானமிகு சுப. வீரபாண்டியன் அவர்களும் மற்றும் கழகச் செயல் வீரர், வீராங்கனைகளும் கலந்து கொள்கின்றனர்.
திருச்சியில் தமிழ்நாட்டின் நம்பிக்கை ஒளிவீசும், செயல் வீரர் தளபதி செம்மல்  மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்து கொள்கிறார்.
திருவள்ளூரில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் கலந்து கொள்கிறார்.
மதுரை மாநகரில் என்னைக் கலந்து கொள்ள டெசோ பணித்துள்ளது. அதன்படி பங்கேற்க விருக்கிறேன்.
எச்சரிக்கை ஒலி!
தோழியர் திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் கோவை பெருநகரில் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறார்.
இப்படி தமிழ்ப் பூமியே குலுங்கும் வண்ணம் எழுச்சி முரசு கொட்ட கழகத்தவர்கள் ஆயத்தமாகி நிற்கின்றனர்!
மக்கள் கடல் பொங்குமாங்கடலென பொங்கிக் காட்டி, பொல்லாங்கு மனம் படைத்த சிங்கள இனவெறித் தனத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க முனைப்புடன் அறவழியில் களங்கண்டு தமிழர் பெருந்திரள் எச்சரிக்கை மணியை ஓங்கி ஒலித்திடுவீர்!
வாரீர்! வாரீர்!!
அனைவரும் கலந்து கொள்ளுங்கள்! குடும்பம் குடும்பமாக அணி வகுத்துப் பணி முடிக்க ஆயத்தமாவீர்!
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? என்று இன எதிரிகளுக்குக் காட்டி, எம் இனம் மானமும், அறிவும், உரிமையும் பெற, நாளும்  போராடுவோம் வாரீர்! வாரீர்!!
வெற்றி பெறுவோம் வாரீர்! வாரீர்!!

கி.வீரமணிதலைவர், திராவிடர் கழகம்
சென்னை   
5.8.2013


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

மகாபாதகமா? மகாபாரதமா? தடுமாறலாமா தமிழ் எழுத்தாளர்கள்?


- மின்சாரம்

பிரபல சமூக வரலாற்றாளர் ஆர்.எஸ். சர்மா அவர்களால் எழுதப் பட்ட பழங்கால இந்தியாவில் அரசியல், கொள்கைகள், நிலையங்கள் -_ சில தோற்றங்கள் என்ற நூலில் அரசன் முக்கியமாகத் தோற்றுவிக்கப்பட்டதே வருணக் கலப்பைத் தடுப்பதற்கே என்று குறிப்பிடுகிறார்.
ராஜ்யம் தோன்றுவதற்கு சமூகப் பிரிவினை வர்ணங்கள் காரணமாக இருந் ததைப் புராணங்கள் முக்கியமாகக் கூறுகின்றன. வாழ்வதற்கு வேண்டிய பொருள்கள் கிடைத்து விட்ட பிறகு, மக்கள் நான்கு வகை வர்ணங்களாகப் பிரிக்கப்பட்டார்கள். இறைவனை வழிபடுவதற்குப் பிராமணர்களும், போரிடுவதற்கு க்ஷத்திரியர்களும், உற்பத்தி செய்ய வைசியர்களும், கூலி வேலைக்குச் சூத்திரர்களும் நியமிக்கப்பட்டனர். இந்தப் பிரிவினை இறைவனை வழிபட்டவர் களுக்கும் போரிட்டவர்களுக்கும் ஆதர வாக ஒரு தலைப்பட்சமாக இருந்ததால் வைசியர்களும், சூத்திரர்களும் இதை மனமு வந்து ஏற்கவில்லை. வர்ணங்களுடைய கடமைகள் முடிவு செய்யப்பட்ட போதி லும், அவர்கள் தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யாமல் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டனர் என்று வாயு புராணம் கூறுகிறது. இதை உணர்ந்து பிரம்மா குற்றவாளிகளை விசாரித்துத் தண்டிப்பதையும் போர்களில் ஈடுபடு வதையும் க்ஷத்திரியர்களின் தொழிலாக ஆக்கினார். இந்த நூலில் பிறிதொரு இடத்திலும் இதைப் போன்ற விவரம் தரப்பட்டுள்ளது. வர்ணாசிரமம் என்ற அமைப்பைப் பிரம்மா படைத்தார் என்றும் மக்கள் அதை ஏற்றுத் தம் கடமைகளைச் சரிவரச் செய்யாமல் ஒருவரோடு ஒருவர் (அதாவது ஒரு வர்ணத்தாரோடு மற்றொரு வர்ணத்தார்) சண்டை போட்டுக் கொண்டனர் என்றும் அது கூறுகிறது. அதனால் அவர்கள் மனுவிடம் முறையிட்டனர். பிரியவிராட, உத்தானபாத என்ற இரு அரசர்களை அவன் முதலில் நியமித்தான். இதிலி ருந்து தண்ட அதிகாரம் அரசர்களைச் சேர்ந்ததாயிற்று. எனவே பல வர்ணங் களுக்கும் இடையே நடந்த சச்சரவு களைத் தீர்க்கவே ராஜ்யம் ஏற்பட்டதாகப் புராணங்கள் கருதுகின்றன. வர்க்கப் போராட்டங்களைத் தடுக்க ராஜ்யம் தேவைப்பட்டது என்று இந்நாளில் மார்க்சிஸ்டுகள் சொல்லுவதற்கு இது முன்னோடியாக அமைந்தது எனலாம். (நூல் பக்கம்: 66-_67).
அதே நூலில் பக்கம் 90இல் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.  ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்காக, விஷ்ணு தன் மனத்திலிருந்து ஒரு மகனைத் தோற்றுவித்து உண்டாக்கினான் என்றும் ஆனால், அவன் பின்னோர்கள் உலகப் பற்று நீங்கினர் என்றும் அதனால் வேணனின் கொடுங்கோலாட்சி ஏற் பட்டதாயும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த அரசனின் உயிருக்கு முனிவர்கள் முற்றுப் புள்ளி வைத்தனர் என்றும் அவ னுடைய வலது தொடையிலிருந்து பிருதுவை உண்டாக்கினர் என்றும் கூறப்படுகிறது. பிருது, விஷ்ணுவின் எட்டாவது சந்ததி. என்ற அடிப்படையில் பிருது, வைன்ய என்பவன் சிம்மாசனத் தில் வீற்றிருக்கலாம் என்பதை முனி வர்கள் தெளிவாக எழுதி வைத்தார்கள். (1) தண்ட நீதிக் கொள்கையின்படி அரசாள்வேன் (2) பிராமணர்களுக்கு எவ்விதத் தண்டனையும் வழங்க மாட்டேன் (3) சாதிக்கலப்பு ஏற்படாதபடி உலகைக் காப்பாற்றுவேன் -_ என்று மூன்று  உறுதிமொழிகளைச் சத்தியம் செய்து கொடுக்கும்படி முனிவர்கள் அவனை வேண்டினார்கள். மனிதர்களுக்குள் காளைகள் போன்று விளங்குவதால் பிராமணர்களைப் பெரிதும் மதித்து அவர்களை வணங்கி வழிபடுவதாக, பிருது, முனிவர்களிடம் கடவுள் சாட்சி யாகச் சத்தியம் செய்தான். அரசாங்க இயலுக்கு ஏற்பவும் நியாயமாகவும் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்வதாக அவன் ஏற்கெனவே உறுதிமொழி கொடுத்திருந்தான்.
(மகாபாரதம் சாந்தி பருவம் 59ஆம் அதிகாரம் 94_99).
பாரதம் காட்டும் நெ(வ)றி
வில் வித்தையில் கர்ணனுக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் அவனோ சத்திரியன். அதனால் அவனுக்கு வித்தை கற்றுக் கொடுக்க யாரும் முன்வரவில்லை. ஞானவேட்கையை முன்னிட்டு பொய் கூறுவதில் குற்றமில்லை என்று நினைத் துத் தன்னை பிராமணன் என்று பொய் கூறி பார்க்கவரிடம் (வில் வித்தை நிபுணர்) மாணாக்கனாகச் சேர்ந்து வில் வித்தையில் நிபுணத்துவம் பெற்று, தலைமாணாக்கனாகத் திகழ்ந்தான்.
ஒரு நாள் நண்பகலில் பார்க்கவர், தம் சீடன் கர்ணன் மடியின்மீது கண்ணயர்ந்து தூங்கினார். அப்பொழுது வண்டு ஒன்று கர்ணன் தொடையில் துளைத்து ரத்தம் பெருக்கெடுக்கச் செய்தது. குருவுக்கு நித்திரைப் பங்கம் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு வலியைப் பொறுத்துக் கொண்டான். கண் விழித்த குரு தன் முகத்தில் ரத்தம் பரவியதற்கு காரணம் என்ன என்று கேட்டார். நடந்தவற்றைக் கர்ணன் கூறினான். நீ ஏன் ஓலமிட்டுக் குதித்து எழவில்லை? என்று குரு கேட்டார்.
உங்கள் உறக்கத்திற்கு இடையூறு வராதிருக்கும் பொருட்டு, என்று பதில் சொன்னான்.
அப்பொழுது பார்க்கவர் சொன்னார் _ உடலில் உண்டு பண்ணுகிற வதை யைச் சகிக்கும் தன்மை க்ஷத்திரியர் களுக்கே உண்டு. அடே சிறுவா, நீ ஒரு க்ஷத்திரியன் அல்லவா? என்று கேட்டார்.
கர்ணன் குருவின் காலில் விழுந்து தேம்பித் தேம்பியழுது உண்மை நிலைகளைச் சொன்னான்.
பார்க்கவர் கோபாவேசமும் பதை பதைப்புமாக வடிவெடுத்தவர் ஆனார். அவருக்கோ பண்பிலும் மிக்கது பிறப்பு. பிராமண குலத்தில் பிறந்த தம் கலையை நல்குவது என்னும் கொள் கையில் அவர் முற்றிலும் ஊறியிருந்தார். ஆதலால் குற்றமில்லா அவ்விளைஞனிடத்தில் வைத்திருந்த அன்பு ஒரு நொடிப் பொழுதில் மாயமாய் மறைந்து போயிற்று.
உன்னை நீ ஒரு பிராமணன் என்று பாசாங்கு பண்ணிக் கொண்டு என்னி டத்தில் அஸ்திர சாஸ்திர வித்தைகள் அனைத்தையும் கற்றுக் கொண்டாய். இந்த வித்தைகளைப் பயன்படுத்த வேண்டிய நெருக்கடி வாய்க்கும் பொழுது, இவையாவும் உன்னுடைய ஞாபகத் தினின்று மறைந்து பட்டுப்போம் என்று சாபமிட்டார்
(ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் இயற்றி மஹாபாரதம் என்ற நூலிலிருந்து _ பக்கம் _ 47_49)
நேருவின் சீற்றம்
இரண்டு நாட்களுக்கு முன்னால் நான் ஒரிசாவுக்குச் சென்றிருந்தேன்.
அப்போது ஏகலைவனைப் பற்றி ஒரு சிறு நாடகம் நடத்தப்பட்டதைக் கண்டேன். இது மகாபாரதத்திலுள்ள ஒரு கதை;  ஒரு ஏழைக் குடியானவன் க்ஷத்திரியர்களின் வில் வித்தை ஆசானான துரோணரை அணுகினான்; வில்லம்புகளை உபயோ கிக்கும் முறைகளைக் கற்றுக் கொள்வ தற்காக. ஆனால் அந்த  துரோணரோ வில் வித்தைகளைக் கற்றுக் கொடுக்க மறுத்துவிட்டார்; அந்த ஏகலைவன் க்ஷத்திரியன் அல்ல என்ற காரணத்தால். இருந்தும் அந்தக் குடியானப் பையன் துரோணரைப் போல ஒரு சிலை செய்து வைத்துக் கொண்டு தானே வில் வித்தைகளைப் பயின்றான். தன் சொந்த சீடனான அர்ஜுனனைவிட இந்த ஏகலை வன் வில் வித்தையில் சிறந்தோனாகி விட் டான் என்று அந்த துரோணர் கேள்விப் பட்டதும், அவர் அவனிடம் சென்று, அவன் அந்த வித்தைகளைத் தன்னு டைய (துரோணருடைய) உருவத்திட மிருந்து கற்றுக் கொண்டதால் தனக்கு குரு தட்சணை தந்தாக வேண்டுமென்று கேட்டார்.
அவர் கேட்ட குருதட்சணை அந்த ஏகலைவனின் வலது கைக் கட்டை விரலாகும். அந்தச் சிறுவனும் தயங்காது தனது இடது கையால் தனது வலது கை கட்டை விரலைத் துண்டித்து அதை துரோண ருக்குக் கொடுத்தான்; இந்த ஏகலைவன் கதை மகாபாரதத்தில் மிகவும் காரமான - கடினமான வரலாறாகும்.
நான் இச்சம்பவத்தைப்பற்றி அவ்வள வாக கவனம் செலுத்தவில்லை; ஆயினும் அந்த நாள் முதல் அது என் மனதை உறுத்திற்று கவலை கொள்ளச் செய்தது.
இந்த கதையைப்பற்றி என்னிடம் ஒரு விஷயம் கூறப்பட்டது. அதாவது அந்த ஒரிசாவிலுள்ள மலைவாசிகள் (பழங் குடிகள்) தங்களைப் பிறர் எவ்விதம் அடக்கி ஒடுக்கி சுரண்டி வந்துள்ளனர் என்பதற்கு இந்தக் கதையே ஒரு உதார ணமாகிறது என்று சுட்டிக் காட்டுகின் றனராம்.
இத்தகைய எழுச்சிகளின் நோக்கத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். உண்மை என்னவென்றால் முன் காலத்தில் எழுதப்பட்ட நாட்டு வரலாறு ஒரு பட்சமாகவுள்ளது. இக்கால மக்களும் அப்படியே தங்கள் சொந்த முறையில் நிகழ்ச்சிகளை எழுத முற்பட்டுள்ளனர்; இது மற்றவர்களால் சிருட்டிக்கப்பட்டது என்று நாம் நினைக்கக் கூடாது.
இந்தக் கதையை நான் எண்ணும் போது மற்றவர்கள் தங்களுடைய போட்டியிடுபவர்களைத் தடுக்க முற்படும் அந்த மனிதர்கள்மீது என் கோபம் கொந்தளித்து எழுகிறது.
எனவே நாம் இந்தப் பிரச்சினையில் அதிக ஜாக்கிரதையாகக் கவனித்து நடந்து கொள்ள வேண்டும்.
(டெல்லியில் இந்தி மொழி கவிஞரும், மத்திய சட்டப் பேரவை உறுப்பினருமான ஆர்.எஸ். தினகர்  தமிழ்நாட்டில் தாம் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின்போது, தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு வடவர் எதிர்ப்பு உணர்வை சுட்டிக்காட்டிப் பேசினார் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நேரு இவ்வாறு பேசினார் -_ ஆதாரம்: விடுதலை 16.12.1954).
இவ்வளவு எடுத்துக்காட்டுகளையும் எடுத்துக் கூறுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.
இராமாயணம், பாரதம் ஆகிய இதிகாசங்களும் புராணங்களும், இந்து மத சாத்திரங்களும் வருண தர்மத்தை இறுக்கிக் காப்பாற்றுவதில்தான் தம் இருப்பைக் கொண்டு இருக்கின்றன.
இந்த இதிகாசங்களில் இலக்கிய வளங்கள் இருக்கலாம்; தங்கக் கிண்ணத்தில் அமேத்தியம் (மலம்) இருப்பது போல என்று தந்தை பெரியார் கூறுவார்.
இவற்றை எல்லாம் புறந்தள்ளி விட்டு, இலக்கிய ரசனை, உபகதைகள் பாத்திரப் படைப்புகள் என்று மெச்சி தமிழின எழுத்தாளர்கள் பக்கம் பக்கமாக எழுத ஆரம்பிப்பது சரியானது தானா? நல்லது தானா? நாட்டு மக்களுக்குச் செய்யும் தொண்டு இதுதானா? என்று நாம் கேட்கத் தவறினால் அது சமுதாயத்துக்கு இழைக்கப்படும் துரோகமே!  நல்ல உணர்வாளர் முற்போக்குச் சிந்தனை யாளர் என்றெல்லாம் நாம் எண்ணி மதித்த பிரபஞ்சன் போன்றவர்களின் பேனா இந்தத் திசையில் பயணிப்பது வருத்தத்திற்குரியது.
திராவிட இயக்க முத்திரையோடு செயல்படும் ஒரு தொலைக்காட்சி, இராமாயணம், மகாபாரதங்களைப் புதுப் பொலிவோடு ஒளிபரப்புவதன் பொருள் என்ன? வெறும் பொருள் தானா? ஒரு நூற்றாண்டுக் காலம் இம் மக்களின் தன்மானத்திற்காகவும் இன மானத்துக்காகவும், சுய மரியாதைக்காகவும், பகுத்தறிவுச் சிந்தனைக்காகவும் அயராது பாடுபட்ட இயக்கங்கள், தலைவர்கள், தொண்டர்கள் உண்டு.
அந்தத் தியாகத்தால் செழித்தவற்றின் வேர்களில் எல்லாம் அனல் பாய்ச்சிட நம் தமிழர்கள் பந்தயக் குதிரைகளாக பாயலாமா?
மகாபாரதம் போன்ற ஒரு படைப்பு உலகத்தில் எந்த மொழியில் சாத்தியமாகி இருக்கிறது? வித்தியாசமாக, ஒன்று போல ஒன்றில்லாத எத்தனை பாத்திரங்கள் மகா பாரத மனிதர்கள் எண்ணத்தை தொடர்ந்து நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
(-பிரபஞ்சன் (கல்கி 4.8.2013)
உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத பிறப்பின் அடிப்படையில் பேதப்படுத்தும் வருண தர்மத்தைக் கட்டிக் காப்பதுதான் உலகத்தில் எங்கும் இல்லாத சிறப்பான (?) காவியம் என்பதற்கான தகுதிப்பாடா? குற்றம் சுமத்துவது என்பதைவிட வருத்தத்தைத் தெரிவிப்பதுதான் நமது நோக்கம்!
நமது திறமையும் செயலும் சமுதாய வளர்ச்சிக்கும் விழிப்புக்கும் பயன்பட வேண்டுமா? அல்லது நம் பங்குக்கு நாமும் சேர்ந்து மிதிக்க வேண்டுமா? பண்டிதர்களால் பார்ப்பனீயம் செழித்தது போதாதா? புது தலைமுறை எழுத் தாளர்களும் துரோக உரங்களைப் போட வேண்டுமா?
ஒரே ஒரு நிமிடம் தந்தை பெரியாரை நினைக்கக் கூடாதா?



பர்தாவா? டிரவுசரா?

ஜூலை 14 அன்று புனேவில் உள்ள ஃபெர்குசன் கல்லூரியின் நிரம்பி வழிந்த அரங்கத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உரையாற்றினார். 30 நிமிட உரையில் காங்கிரஸ் போலி மதச்சார்பின்மையை கடைபிடிப்பதாகக் கூறித் தாக்கினார். காங்கிரஸ் அரசு எப்போதெல்லாம் தோல்வியுறுகிறதோ, எப்போதெல்லாம் அதன் தவறுகள் வெளிச்சத்துக்கு வருகின்றனவோ அப்போதெல்லாம் மதச்சார்பின்மை என்ற முகத்திரைக்குள் ஒளிந்து கொள்கிறது காங்கிரஸ். இதை கேள்வி கேட்காமலேயே இருக்க முடியாது என்றார் மோடி. 1,400 கி.மீ.க்கு அப்பால் ரோடக் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான தீபேந்தர் சிங் ஹூடாவின் தில்லி இல்லத்தில் இருந்த 4 ஆய்வாளர்கள் உடனடியாக பதிலடியில் இறங்கினார்கள். ஹூடாதான் கட்சியின் சமூக வலைத்தள உத்திகளைக் கையாள்பவர். இவற்றில் இயங்கும் திக்விஜய் சிங், சசிதரூர், மணிஷ்திவாரி, அஜ்ய்மேக்கன் போன்றோருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து மோடிக்கு உரிய பதில் தர கேட்டுக் கொள்ளப்பட்டது. சமூக வலைத் தள ஆய்வுக் குழுவிடமிருந்து எல்லா தலைவர்களுக்கும் நாம் காக்கி டிரவுசர் என்ற பதத்தை வைத்து மோடியை தாக்க வேண்டும் என்று குறுஞ்செய்தி பறந்தது. மாலைக்குள் தரூர் எதிர்வினை எழுதி அனைவருக்கும் அனுப்பினார். மதச்சார்பின்மை என்கிற பர்தாவுக்குள் நாங்கள் ஒளிந்து கொள்வதாக மோடி சொல்கிறார். சகிப்பின்மை மற்றும் வெறுப்பு என்கிற அவரது காக்கி டிரவுசரைவிட இது தேவலாம் என்றது ட்வீட்.
அன்று தாக்குதல் மேலும் கூர்மைப்பட்டது. 10.30 மணிக்கு திக் விஜய் சிங், மோடியின் பர்தா பேச்சுக்கு எதிர்வினையாக பண்டல்கண்ட் கவிஞர் அகில் அர்ஜரியாவின் இந்தி கவிதையொன்றை ட்வீட் செய்தார். 12 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு மய்யத்தின் தலைவரான அஜய்மேக்கன் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். உண்மையின் தாக்குதல் என்று பெயருள்ள இந்த முயற்சி சூடு பிடித்து. ஜூலை 22 அன்று ராகுல் காந்தி சற்றே மாறுபட்ட அறிகுறி காட்டினார். நாடு முழுவதுமிருந்து வந்திருந்த 240 தொண்டர்கள் கலந்து கொண்ட 2 நாள் தில்லி பயிலரங்கில் பேசிய ராகுல் ஒரே குரலில் பேசுங்கள். ஒற்றுமையாய் இருங்கள். பாசிடிவான அரசியலில் கவனம் செலுத்துங்கள் என்றார் மோடி குறித்த கவலையோ, அவரை ஒரு சவாலாகவோ காங்கிரஸ் பார்க்கவில்லை.
-  இந்தியா டுடே 7.8.2013




பாரதம் காட்டும் பண்பாடு?
பாண்டவர்கள் கிருஷ்ணனின் துணையோடு உறவினர்களுடன் போரிட்டது பலன் கருதாப் பணியா? அவர்களைக் கொன்று வென்று நாட்டை ஆள வேண்டுமென விரும்பியது பலனை எதிர்பார்த்த பணிதானே!
துரோணரின் மகன் அசுவத் தாமன் இறந்துவிட்டானென்று தருமரை ஏவிப் பொய் சொல்ல வைத்தது ஏன்? கௌரவர் களுக்குப் போரில் பெருந் துணையாக இருக்கும் துரோணாச்சாரியரைக் கொல்ல வேண்டுமென்ற சூழ்ச்சியால் தானே! தருமரைப் பொய் சொல்ல வைத்தது, பலன் கருதாப் பணியா?
கிருஷ்ணன், போரில் ஜயத்ர தனை நோக்கி; சூரியன் மறைந்து விடடது என்று ஏன் பொய் சொல்ல வேண்டும்? பலன் கருதாப் பணியை வலியுறுத்தும் கிருஷ்ணன், இதனைப் பலன் கருதாமலா சொன்னார்?
மெய்காப்பாளர்கள் துணை யின்றித் தனிமையில் இருந்த ஜயரதனை அம்பெய்திக் கொன்றது பலன் கருதாப் பணியா?
பெண்ணாகப் பிறந்தவனிடம் போர் செய்ய விரும்பாத பீஷ் மரை அவருக்கு எதிரே இருந்த சிகண்டிக்குப் பின் நின்று கொண்டு அர்ச்சுனன் பீஷ்மரைக் கொன்றது பலன் கருதாப் பணியா?
- நூல்: பா. வீரமணியின் கீதையின் மறுபக்கம் ஆழழும் அகலமும்


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Saturday, August 3, 2013

2013லும் தேவதாசி முறைக்கு வக்காலத்தா?


சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியின் நாட்டியத் துறை ஜூலை 27 அன்று காலை ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. முன்ன தாக இந்த நிகழ்வுக்கு அடையார் டைம்ஸ் பத்திரிகையில் ஒரு விளம் பரம் வந்திருந்தது.  கல்லூரி முதல் வரை சந்தித்து பெண் போராளிகள் இந்நிகழ்வு குறித்த அச்சத்தை தெரிவித்தனர். தொலைபேசியில் அழைத்து தெரிவித்த உடனேயே அழைப்பிதழை மாற்றிவிட்டதாகக் கூறினர். ஆனாலும் அவர்கள் நாங் கள் கூறியதை காதில் வாங்கவில்லை. பெயரில் எதுவும் இல்லை. நாங்கள் பெயரை மாற்றச் சொல்லவில்லை.

இந்நிகழ்வில் சொல்லப்படும் கருத் துக்கள் குறித்துத்தான் கேட்கிறோம் என்றோம். இது கலை சார்ந்த நிகழ்வாக இருக்கும். சொர்ணமால்யாதான் பேசுகிறார் என்றார். முதல்வர் இன்று காலை அந்த நிகழ்வுக்குச் சென்றோம். சொர்ணமால்யா தேவதாசிகள் குறித்தான ஆய்வை செய்து அதில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். தனது பவர் பாயிண்ட் ஸ்லைடுக்கு அவர் வைத்திருந்த தலைப்பு ‘‘Devadasis - Wives of God’’ தலைப்பு ஒன்றே போதும்..அவருடைய உரை எப்படி இருந்தது என்று கூறவேண் டியதே இல்லை.ஆனாலும் சிலவற்றை முக்கியமாகச் சொல்லியாக வேண்டும். தேவதாசி முறையை உச்சிமுகர்ந்து கொண்டாடினார். அது கடவுளுக் கான அர்ப்பணிப்பு என்றார். தேவதாசிகள் அதை மனமுவந்து செய்தார்கள் என்றார். நாட்டியத்தில் ஈடுபாடுள்ள பல ஜாதி பெண்களும் தாங்களாகவே முன்வந்து தேவதாசி களானார்கள் என்றார். எல்லா ஜாதி யிலிருந்தும் பெண்கள் வந்ததாகக் கூறினார். நட்டுவாங்கம் வாசித்த பல ஜாதியைச் சேர்ந்தவர்களை ஒன் றாக்கி இசை வேளாளர் என்கிற புதிய ஜாதியை உருவாக்கியது திரா விடர் கழகம் என்றார். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி முறையை ஒழிக்க எண்ணியதற்கு அவர் அரசியல்வாதியாய் இருந்தது தான் காரணம் என்றார். அப்படி யெனில் அவருக்கு வேறு நோக்கங்கள் இருந்தன என்கிறார்.

தனது இரண்டு மணி நேர உரை யில் எங்குமே தேவதாசி முறை எப்படி பெண்களை அடிமைப்படுத்தியது என்றோ அவர்கள் பாலியல்ரீதியாக சுரண்டப்பட்டார்கள் என்றோ குறிப்பிடவில்லை. ஆனால் மாறாக தேவதாசிகளுக்கு ஒருவேலி கோவில் நிலம் வழங்கப்பட்டது. உண்டைக் கட்டி சோறு கோவிலில் வழங்கப் பட்டது. நெல் வழங்கப்பட்டது. பெண்களுக்கு சொத்துரிமை இல்லாத காலத்தில் இவையெல்லாம் கிடைப் பது எவ்வளவு பெரிய விஷயம் என்று அபத்தமாகப் பேசினார். கோவிலில் உள்ள ஒவ்வொரு சடங்கிலும் அவர்கள் பங்குபெறுவது எப்படியான பாக்கியம் என்று சிலாகித்தார். தேவதாசி முறை ஒழிப்புக்கு தனது எதிர்ப்பை வலியுறுத்திப் பேசினார். மொத்தத்தில் தேவதாசி முறையை நியாயப்படுத்தி, சிலாகித்து, அதை கடவுளுக்கு செய்யும் பணிவிடை என்றார். அந்தப் பெண்களை கட்டாயப்படுத்தி இப் படியான ஒரு வாழ்க்கைக்குள் கட் டாயப்படுத்தி தள்ளியது குறித் தெல்லாம் ஒரு வார்த்தை இல்லை. பரதம் தோன்றியது சதிர் என்னும் ஆட்டத்திலிருந்து. அதை முறையாக ஆடிய, இசையில் சிறந்துவிளங்கிய, தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் போன்றவற்றில் சிறந்துவிளங்கிய தேவதாசிகள் பொட்டு கட்டி விடப்பட்டு கோவில்களில் தங்கள் ஆடல் பாடல் கலைகளை வெளிப் படுத்துவது என்பது மிகவும் சிறப் பானது. தேவதாசி முறை ஒழிக்கப் பட்டது அந்தக் கலைகளையும் ஒழித்துவிட்டது. என்று சொர்ண மால்யாவின் கவலை முழுவதும் கலை குறித்தே இருந்தது. அந்தப் பெண் களின் மனநிலை குறித்து எந்தப் பதி வும் இல்லை. அவர்கள் அப்படியான வாழ்க்கையில் விரும்பி ஈடுபட்டார் கள் என்பது போன்று பேசினார். காலங்காலமாக மூவலூர் ராமாமிர் தம் அம்மாள், முத்துலட்சுமி ரெட்டி போன்றோர் தேவதாசி முறையை ஒழிக்கப்பட்ட பாடுகளையெல்லாம் அரசியல் தூண்டுதலின் பேரில் நடந்தவை என்று புறந்தள்ளுகிறார். மூவலூர் ராமாமிர்தம் அம்மாளின் மதி பெற்ற மைனர் அல்லது தாசிகளின் மோச வலை நூல் குறித் தும் அவதூறான கருத்தை முன் வைத்தார். ராமாமிர்தம் அம்மாளுக்கு விஷம் வைத்து கொல்ல முயன்றனர் என்பது சொர்ணமால்யாவுக்குத் தெரியுமா?

சட்டமன்றத்தில் சத்தியமூர்த்திக்கும், முத்துலட்சுமி ரெட்டிக்கும் நடந்த தேவதாசி முறை ஒழிப்பு குறித்த உரையாடல் நாம் அறிந்தது. அந்த உரையாடலுக்காக சத்தியமூர்த்தியைப் பாராட்டிப் பேசுகிறார் சொர்ண மால்யா. பெரியார் சும்மாவா கேட்டார் அப்போதே?

சில பெரியோர்கள் நாட்டின் நற்பெயரையும், நமது மற்ற பெண் களின் கற்பையும் காப்பதை உத் தேசித்து, இம்மாதிரி ஒரு கூட்டம் பெண்கள் விபசாரத்திற்கென்றே தனியாயிருக்க வேண்டும் என்று சொல்லுகின்றார்களாம். இந்தக் கொள்கையைப் பற்றி நாம் விவகாரம் பின்னால் செய்து கொள்ள நினைக்கின்றோம். ஆனால், அப்படி ஒரு கூட்டம் பெண்கள் வேண்டும் என்கிற கட்சியை நியாயமென்று கொள்வதாகவே வைத்துக் கொண் டாலும், அதற்காக ஒரு வகுப்பாரே தலைமுறை, தலைமுறையாக தங்கள் பெண்களை உதவிவர வேண்டும் என்பதற்கு என்ன ஆதாரம் இருக் கின்றது? என்று கேட்பதுடன், அந்த தேசாபிமானமும், நாட்டின் கற்பு அபிமானமும் கொண்டதான இந்தப் பரோபகாரம் எல்லா வகுப்புக்கும் பங்கு முறைப்படி வரட்டும் என்ப தாக தாராள நோக்கத்துடன் பார்த்து, அதை மற்றவகுப்புக்கும் பிரித்து விடுவதில் என்ன ஆட்சேபணை, அல்லது நாட்டு கற்பில் கவலையுள்ள ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ் வொரு பெண்ணை இந்த தேசாபி மானத்திற்கும், கற்பு அபிமானத் திற்கும் விட ஒரு சட்டம் செய்வதற்கு என்ன ஆட்சேபணை என்று கேட் கின்றோம். இப்படிப்பட்ட தர்ம நியாயங்கள் சொல்லி ஏமாற்றித் தானே, ஆதியில் ஒரு வகுப்பார் தலையில் இவ்விழிவு காரியங்கள் போய் விழுந்து விட்டன. - (பெரியார், குடிஅரசு - _ துணைத் தலையங்கம் - 30.10.1927)

பொட்டுக் கட்டும் ஜாதியில் பிறந்து வளர்ந்து அதன் கொடுமைகளை நன்கு உணர்ந்த மூவலூர் ராமா மிர்தம் அம்மையாரும், முத்துலட்சுமி ரெட்டியும் அந்த வாழ்க்கை தேவையில்லை என்று வெளியேறி அதை ஒழிக்க பாடுபட்டார்கள். அவர்களுடைய கண்களால் பார்கக மால், கலை, பரதம், கடவுள், பக்தி, அர்ப்பணிப்பு என்று கூப்பாடு போடும் சொர்ணமால்யாக்களின் மேட்டுக்குடி கண்களால் இவ் விஷ யத்தை அணுகவேண்டுமா? 1927இல் கேள்வி கேட்க பெரியார் இருந்தார். இன்று? என்ன செய்யப் போகிறோம்?

--_ கவின் மலர்

இந்து மதம் பாதிக்கப்படுவதும், பாகுபாடு காட்டப்படுவதும் யாரால்?

அரசாங்கங்கள் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படுகின்றன. வருணா சிரமத்தை சட்ட பூர்வமாகச் செயல் படுத்தவேண்டும் இதுதான் இந்தியத் தலைநகர் டில்லியில் கூடிய இந்து தர்ம ஆச்சார்யா சபாவில் பேசப்பட்டதன் சாராம்சம். சுவாமி தயானந்த சரஸ் வதியை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட இந்த சபாவுக்கு சுவாமி பரமாத்மானந்தா என்பவர்தான் செயலாளர். முன்னாள் நீதிபதிகள், உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் உள்ளிட்ட பலரும் இந்த சபாவில் இடம்பெற்றிருக்கிறார்கள். எதற்காக அவர்கள் டில்லியில் கூடினார்கள்?

இந்துக் கோவில்களை மாநில அரசாங்கங்கள் சட்டவிரோதமாகத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை எதிர்த்தும், இதற்கு அரசியல்சாசனத் தின் அங்கீகாரம் இல்லை என்பதை வலியுறுத்தியும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் எப்படி வெற்றி பெறுவது என்பதுதான் இந்து தர்ம ஆச்சார்யா சபா கூட்டத்தின் நோக்கம். அவர்கள் குறிப்பாகக் கவனம் செலுத்துவது தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களில் உள்ள கோவில்களைத்தான்.

இந்த மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கு பல மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகள் உள்ளன. அவையெல்லாம் அந்தந்த மாநில அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகின்றன. உச்சநீதிமன்றம் இந்த சட்டவிரோத செயல்பாடு தொடர்பாக 1954ஆம் ஆண்டிலேயே உத்தரவிட்டும்கூட, 1959இல் தமிழ்நாடு இந்து அற நிலையத்துறை சட்டம் மூலம் இந்த சொத்துகள் எல்லாம் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்று சபா கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தமிழகமும், ஆந்திரத்தின் பெரும்பாலான பகுதிகளும் இணைந் ததுதான் அன்றைய சென்னை மாகாணம். பிரிட்டிஷ் இந்தியாவில் இந்த மாகாணத்தை நீதிக்கட்சி ஆட்சி செய்தபோதுதான் இந்து கோவில் களையும் அதன் பெரும் சொத்துகளை யும் ஒரு சில சமுதாயத்தினரே கையில் வைத்துக்கொண்டு அதிகாரம் செலுத்தி வந்ததை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் இந்து அறநிலையப் பாதுகாப் புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. கோவில் நிலங்கள் அரசுப் பராமரிப் பின்கீழ் வந்தன.

இதனை அப்போதிருந்தே எதிர்த்துக் கொண்டிருப்பவர்கள்தான், சட்டரீதி யாக இதனைத் தகர்ப்பதற்குப் பலப்பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் கள். அவற்றையெல்லாம் மீறித்தான் தமிழகத்தில் அறிமுகமான அறநிலையப் பாதுகாப்புச்சட்டம் பின்னர் இந்து அற நிலையத்துறை என்ற தனித்துறை யாகவே மாறி, கோவில்களையும் அதன் சொத்துகளையும் பாதுகாத்தது. ஆந்திராவிலும், புதுச்சேரியிலும் இது தொடர்கிறது. இந்தியாவின் பல மாநிலங்களும் தமிழகத்தைப் பின்பற்றி, கோவில்களைப் பாதுகாப்பதற்கான சட் டங்களையும், துறையையும் உருவாக்கி யுள்ளன. இதனைப் பொறுக்கமுடியா மல்தான் இந்து தர்ம ஆச்சார்யா சபா வினர் டில்லியில் கூடியிருக்கிறார்கள்.

பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ராம ஜோய்ஸ், ராஜஸ்தான் உயர்நீதிமன்ற முன்னாள் தற்காலிகத் தலைமை நீதிபதி விஷ்ணு சதாசிவ கோக்ஜே, ராமஜென்மபூமி வழக்கில்  ஆஜரான உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கே.என்.பட் உள்ளிட்ட பலரும் இந்த சபா கூட்டத்தில் பங்கேற்று இந்து மதம் பாதிக்கப்படுவது பற்றியும், இந்து மதம் மீது பாகுபாடு காட்டப்படுவது பற்றியும் பேசியிருக்கிறார்கள். அத்துடன், சிறு பான்மை சமுதாயத்திற்கு அளிக்கப்படும் வாய்ப்புகள் எல்லாம் ஒரு பாதுகாப்புக் காகத்தானேதவிர, அதுவே அவர்களின் உரிமையாகிவிடாது என்றும் பேசி யுள்ளனர். (16.-7.-2013)

இந்து மதப் பாதிப்பு, பாகுபாடு பற்றியெல்லாம் உயர்ந்த பொறுப்பில் இருந்தவர்கள் தங்கள் ஓய்வுக்காலத்தில் பேசும்போதுதான், இந்தியாவை எத்தகைய மதச்சார்பின்மை நிர்வாகம் செய்து வருகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. தீட்சிதர்கள் வசமிருந்த சிதம்பரம் நடராஜர் கோவி லில் தமிழ் மொழியே தீண்டாமையாகக் கருதப்பட்டதையும், அங்கே தேவாரம் பாடுவதற்காக ஓதுவார் ஆறுமுகசாமி மேற்கொண்ட போராட்டங்களையும் அதற்குத் தமிழ் வழிபாட்டு பக்தர்கள், மனித உரிமைப் பாதுகாப்பு மய்யம், திராவிடர் கழகம்,  இடதுசாரிகள் உள்ளிட்ட பல அமைப்பினரும் உறுதி யான ஆதரவுடன் நின்றதையும் அதன் காரணமாக, நடராஜரின் சிற்றம் பலத்தில் தேவாரம் ஒலித்ததையும் மறக்க முடியாது.

தீட்சிதர்களின் ஆக்கிரமிப்பில் இருந்த சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர மாநில அரசு முயற்சிகள் எடுத்தபோது அதற்கெதிராகவும், தீட்சிதர்களுக்கு ஆதரவாகவும் சுப்ரமணிய சாமி செயல்பட்டதையும், தீட்சிதர்கள் இன்றைய முதல்வரும் அன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு கேட்டதையும் பழைய நாளிதழ்களைப் புரட்டினால் விரிவாகத் தெரிந்து கொள்ளமுடியும். பல தடைகளைக் கடந்து 2009ஆம் ஆண்டில் தி.மு.க ஆட்சியின்போது சிதம்பரம் நடராஜர் கோவில், தீட்சிதர்களின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு, இந்து அற நிலையத்துறை வசம் வந்தது.

இந்து அறநிலையத்துறையினர், கோவில் உண்டியலைத் திறந்து காணிக்கைப் பணத்தை எண்ணினர். லட்சக்கணக்கான ரூபாய் கணக்கில் வந்தது. ஆனால், தீட்சிதர்கள் கையில் கோவில் இருந்தபோது ஆண்டுக்கு 3000 ரூபாய் மட்டுமே உண்டியல் வசூல் என கணக்குக்காட்டப்பட்டு வந்துள்ளது. சிவன் சொத்து குல நாசம் என்று மற்றவர்களை பயமுறுத்திக் கொண்டே, அந்த சொத்தை முழுமையாக அனுபவித்தவர்கள்தான் சிதம்பரம் தீட்சிதர்கள்.

இப்படிப் பலரது அதிகாரத்தில் இருந்த கோவில்களைத்தான் அற நிலைய பாதுகாப்பு சட்டத்தின் மூலமாக நீதிக்கட்சி ஆட்சி மீட்டது. காங்கிரஸ் ஆட்சியிலும், திராவிடக் கட்சிகளின் ஆட்சியிலும் இது தொடர் கிறது. அரசு ஊழியர்களிடம் காணப் படும் குறைபாடுகளும் லஞ்ச-ஊழல் குற்றச்சாட்டுகளும் அறநிலையத்துறை ஊழியர்கள் மீதும் உள்ளது. அவற்றை சரிப்படுத்த வேண்டுமே தவிர, இந்துக் கோவில்களை அறநிலையத்துறை யிடமிருந்து பறிப்பதற்கு இந்து அமைப் புகள் மேற்கொள்ளும் முயற்சிகள் ஆபத் தானவை. மீண்டும், வர்ணாசிரமத்தின் அதிகாரத்தை நிலைநாட்டுபவை.
பாதிப்பு பற்றியும், பாகுபாடு பற்றியும் இந்து தர்ம ஆச்சார்யா சபாவினர் கவலையோடு பேசியிருக்கிறார்கள். இந்து மதத்தில் பிறந்து, தமிழகத்தில் அர்ச்சகர் பயிற்சியை முறையாகப் பெற்று தேர்ச்சி  சான்றிதழ் பெற்ற தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட-பிற சமுதாயங்களைச் சேர்ந்த 206 பேர் இன்னமும் கோவில்களில் அர்ச்சகராக முடியாத நிலை நீடிக்கிறது. இந்துக் களான அவர்களை அர்ச்சகராக நியமிப்பதை எதிர்த்து, உச்சநீதிமன்றம் சென்று தடைபெற்றவர்கள் யார் என்பதை அந்த சபாவினர் உரக்கச் சொல்லட்டும். அர்ச்சகர் பயிற்சி பெற் றவர்களின் பாதிப்பிற்கு வழி சொல் லட்டும்.

இந்து மதத்தில் பாகுபாடு என்பது வர்ணாசிரமத்தைக் கட்டிக்காக்க நினைக்கும் இந்த சபாக்களைச் சேர்ந்தவர்களால்தான் நிலை பெற்றி ருக்கிறதே தவிர, அரசாங்கத்தின் சட் டங்களால் அல்ல. வர்ணாசிரமத்தைத் தகர்த்தால், இந்து மதத்தில் பாகுபாடு மட்டுமல்ல, இந்து மதம் என்ற கற்பி தமே இல்லாது போகும். அதனால்தான் சபாக்கள் எல்லாம் பதறுகின்றன.

- எழுதியவர்-: கோவி.லெனின்

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...