Friday, May 3, 2013

பிக்பாக்கெட் கடவுள்


சென்ட்ரல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி களில் ஒரு மணி நேரத்திற்கு, 12,500க்கு மேற்பட்டோர் கடந்து செல்வதால் பிக்பாக்கெட் திருடர்கள் சென்ட்ரல் பகுதியில் பணியாற்று வர். இருட்டும் நேரத்தில், அவர்கள் பாடிகாட் முனீஸ்வரனுக்கு, சுருட் டையும், குவார்ட்டரையும் காணிக்கை செலுத்திய பின்னரே தொழிலுக்குச் செல்வர் என்கின்றனர் கோவில் பணியாளர்கள் - தினமலர் 17.4.2013
கடவுள், பக்தி என்பது எப்படி இருக்கிறது என்ப தற்கு இது ஒரு முக்கிய எடுத்துக்காட்டாகும்.
எந்தக் குற்றத்தைச் செய்தாலும், ஆன்மிக மொழியில் எந்த பாதகங் களைச் செய்தாலும் பிரார்த்தனை செய்தால், கடவுளுக்கு நேர்த்திக் கடன் கழித்து விட்டால், பிராயச்சித்தம் செய்து விட்டால் பாவங்களிலி ருந்து தப்பிக்கலாம் என்ற நிலை இருக்கு மட்டும் இது போன்ற குற்றவாளி கள் பெருகத்தானே செய்வார்கள்.
விஷ ஊசி போட்டுக் கொன்றவர்கள் கொள் ளையடித்த பணத்தில் ஒரு பங்கை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக் குப் போட்டதாக ஒப்புதல் வாக்கு மூலம் அளிக்க வில்லையா?
அறிஞர் அண்ணா அவர்கள் மிக அழகாகச் சொன்னாரே!
கள்ளக் கையொப் பக்காரன் கரம் கூப்பு கிறான். விபச்சாரி விசேஷ அபிஷேகம் செய்விக் கிறாள். குடி கெடுப்பவன் கும்பாபிஷேகம் செய் கிறான். கொள்ளை லாபம் அடித்தவன் வெள்ளி ரிஷபம் செய்து வைக்கிறான். ஒழுக்கக் குறைவு உள்ளோர், அழுக்கு மனம் படைத்தோர், இழுக்கான வழி செல்ப வர்கள் ஆலயங்களிலே நுழைய முடியாதபடி தடை உண்டா? (அறிஞர் அண்ணா வின் நூல்: தீண்டாமை வானொலி உரையிலிருந்து)
பிக்பாக்கெட்காரர்கள்  முனீஸ்வரனைக் கவனிக்க வேண்டிய முறையில் கவனித்து விட்டு, தங்களின் பிக் பாக்கெட் தொழிலை ஜாம் ஜாமென்று நடத்திக் கொண்டு வருகின்றனர்.
கீழ் மட்டக் கடவுளிடம் தான் இது நடப்பதாக யாரும் நினைக்க வேண் டாம். திருப்பதி கோயி லிலே இது சர்வசாதார ணம்.
திருப்பதி ஏழுமலை யான் உருவம் பொறித்த டாலர் விற்பனையில் மோசடி செய்து பெரும் பணம் குவித்த டாலர் சேஷாத்திரிகள் இன்னும் அந்தக் கோயில் நிரு வாகத்திற்குள் இருக்கத் தானே செய்கிறார்கள்?
ஏழுமலையானுக்கு ஒரு நமஸ்காரம் போட் டால் போகிறது!
- மயிலாடன்

ஓர் ஆன்மிகவாதியின் பலே மோசடி!


கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த சாரதா சிட் பண்ட் நிறுவனம் திவாலாகி விட்டது என்ற தகவல் ஏடுகளில் முக்கியமான இடத்தை நிரப்பிக் கொண்டு விட்டது.
ரூ.20 ஆயிரம் கோடி முதல் ரூ.50 ஆயிரம் கோடி வரை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தச் சாரதா குழுமம் சார்பில் நடத்தப்பட்டு வந்த இந்த நிதி நிறுவனத்தில் மே.வங்காளம் அசாம், திரிபுரா மாநிலங்களிலிருந்தெல்லாம் முதலீடு செய்துள்ளார்கள்.
இதனுடைய உரிமையாளர் சுதிப்தா சென் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யப் பட்டுள்ள நிதிகளைக் கொண்டு ரியல் எஸ்டேட், பிஸ்கட் பேக்டரி  முதலிய துறைகளிலும் ஈடுபட்டுள்ளார்.
இவ்வளவுத் தூரம் கொடி கட்டிப் பறந்த ஒரு நிறுவனம் திவாலானதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
அரசியல்வாதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் குறிப்பாக மேற்கு வங்காளத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவர்கள் அச்சுறுத்தி பெருந் தொகையைப் பெற்றுக் கொண்டனர் என்றெல்லாம் ஒரு பக்கத்தில் கூறப்படுகிறது.
யார் இந்த சுகிப்தாசென்? சாரதா என்ற பெயரில் இவ்வளவு நிறுவனங்களை நடத்து வதன் பின்னணி என்ற கேள்விகள் எல்லாம் எழுந்து நிறுகின்றன.
இவர் ஆன்மீகத்தில் மூழ்கி முத்து எடுக்கக் கூடியவராம்; ராமகிருஷ்ண பரமஹம்சரின் மனைவி சாரதாதேவியின் தீவிரப் பக்தராம்; அதனால்தான் அவர் நடத்தும் நிறுவனங்களுக் கெல்லாம் அந்த அம்மையாரின் நாம கரணத்தைச் சூட்டியிருக்கிறார்.
தொடக்கத்தில் நக்சலைட்டு இயக்கத்தில் இருந்திருக்கிறார். அதன்பிறகுதான் ஆன்மீகத் துக்குத் திரும்பியிருக்கிறார். இதுதான் சரியான வேடம் என்று தெரிந்து கொண்டு இராம கிருஷ்ண பரமஹம்சரின் மனைவி சாரதா அம்மையாரின் பக்தராக வலம் வந்தார்.
நிதி நிறுவனத்தை இந்தப் பின்னணியில் ஆரம்பித்தவுடன் மக்களும் நம்பி முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர் என்பதுதான் உண்மை.
ஏமாற்றுக்காரர்களுக்கு வசதியான வேடம் ஆன்மீகம் தானே - அதன் மூலம்தானே நம்ப வைத்துக் கழுத்தறுக்கலாம்.
இந்த ஆசாமியின் பாஸ்போர்ட்டில் உள்ள தந்தையாரின் பெயர் வேறு; வேறு ஆவணங்களில் வேறாக இருக்கிறதாம்.
பக்தி வேடம் போட்டால் எளிதில் மக்களை ஏமாற்றலாம் என்பது வெளிப்படை!
சாமியார்களும், சாயிபாபாக்களும் எந்தவித முதலீடும் செய்யாமல் மக்களைச் சுரண்டுவது எந்த அடிப்படையில்? சுதிப்தா சென் என்பவராவது ஒரு நிறுவனத்தைத் தொடங்கி ஏமாற்றியிருக்கிறார். சாயிபாபாவும், சாமி யார்களும் எந்தவித நிறுவனத்தையும் நடத் தாமல், எந்தவித முதலீட்டையும் செய்யாமல், மக்களின் பக்தி முட்டாள்தனத்தை மட்டுமே முதலீடாகக் கொண்டு அன்றாடம் சுரண்ட வில்லையா?
சாயிபாபாவை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எந்தத் தொழிலைச் செய்தார்?
பகவான் சாயிபாபா என்ற பிரச்சாரம் - அதனை நம்பி, விளக்கொளியைக் கண்டு பாய்ந்து வரும் விட்டில் பூச்சிகளாக மக்கள் அவர் வலையில் விழுந்தனர். பணத்தைப் பணம் என்று பார்க்காமல் கொட்டிக் கொட்டிக் கொடுத்தனர்.
எத்தனை ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதியானார்! முதலில்லா வியாபாரம் என்பது மதமும், பக்தியும் இவற்றைச் சார்ந்த சேர்ந்த ஆன்மீகம்தானே?
இவ்வளவு நடந்தாலும் படித்த, படிக்காத பாமர மக்களின் பக்திப் போதை தெளிவ தில்லையே! ஒரு சில நாட்கள் பரபரப்பாகப் பேசப்படுவதோடு சரி. அதற்குப் பிறகு வழக்கம்போல பக்தி வேடக்காரர்களின் பகற் கொள்ளைத் தொழில் ஜாம் ஜாமென்றுதானே நடக்கிறது.
பக்தி ஒழுக்கத்திற்குத் துணை போகிறதா?
மோசடிக்குத் துணை போகிறதா?
சிந்திப்பீர்!


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

சுயமரியாதையை உண்டாக்கி அறிவை வளர்க்கவே நமது குடிஅரசு



(நமது பத்திரிகை என்ற தலைப்பில் குடிஅரசின் அய்ந்தாவதாண்டு தொடக்கத்தில் தந்தை பெரியார் அவர் களால் எழுதப்பட்ட தலையங்கம் இது).

குடிஅரசு அபிமானிகளே!

நமது குடிஅரசு தோன்றி நான்காவதாண்டு கடந்து, அய்ந்தாவதாண்டின் முதல் இதழ் வெளி-யாக்கும் பேறு பெற்றமைக்கு மகிழ்வெய்துகின்றோம். அது தோன்றிய நாள் தொட்டு இன்றைய நாள்வரை மக்கள் முன்னேற்றத்திற்கும், நாட்டின் விடுதலைக்கும் தன்னால் இயன்றதைச் சிறிதும் ஒளிக்காமல் தொண்-டாற்றி வந்திருக்கும் விஷயம் நாம் எடுத்துக் காட்-டாமலே அன்பர்கள் உணர்ந்திருக்கலாம்.

இதன் ஆசிரியராகிய யாம் சுமார் 30 ஆண்டு உலக வாழ்க்கை அனுபவம், அதாவது வியாபாரம், விவசாயம் அனுபவமும், சுமார் இருபதாண்டுப் பொது நலவுழைப்பு என்பதின் பேரால் அதாவது உள் ஊர் அக்கப்போர்கள், ஜில்லா பொதுநல சர்க்கார் சம்பந்தமில்லாத ஸ்தாபனங்கள், சர்க்கார் சம்பந்த-முள்ள ஸ்தல ஸ்தாபனம் முதலியவைகளில் நிர்வாக விஷய அனுபவமும் அரசர்கள், அதிகாரிகள் ஆகியவைகளின் கூட்டுறவு, அனுபவமும், ஜமீன்-தார்கள், பிரபுக்கள், ஏழைகள், காலிகள் ஆகியவர்-களின் நெருங்கிய நேச அனுபவமும், இவை-களெல்லாம் அல்லாமல் வீட்டையும் குடும்பத்தையும் விட்டு, துறவறம் கொள்ள எண்ணம் கொண்டு வெளிக்-கிளம்பி சன்னியாசி வேஷமிட்டு, காவி தரித்து, சாமியாராகி இந்தியா முழுவதும் சுற்றி அலைந்த பிறகு, அதையும் விட்டு, வெறும் கோவணத்துடன் தெருப்பிச்சை எடுத்து, பிறகு அதையும் விட்டு, எச்சிலையில் கிடப்பதை எடுத்து உண்டது ஆகிய வாழ்க்கைகளிலும் ஈடுபட்ட அதன் அனுபவமும், கடைசியாக அரசியலுக்கும் சமுக இயலுக்கும் என்று சென்னை மாகாண சங்கம் உபதலைவராகவும், தேசிய-வாதிகள் சங்க காரியதரிசியாகவும், காங்கிரஸ் இயக்கம் என்பதில் ஒத்துழையாமை இயக்கத்திற்கு மாகாணத் தலைவர், காரியதரிசி ஏக தலைவர் ஆகிய பதவிப் பேறும், வைதீக ஒத்துழையாமை கொள்கைக்கு முக்கிய தலைமையும் மற்றும் சத்தியாக்கிரகம், சர்க்கார் உத்திரவு மீறுதல் உண்மையை ஒளிக்காமல் பேசுதல் ஆகியவைகளுக்கு ஆக பல தடவை அரசாங்க தண்டனைக்கு ஆளாகி சிறை வாசம் அடைதல் ஆகிய பல பேறுகளும் பெற்றதன்மூலம் சிறிது சிறிதாய் உலக அனுபவம் பெற்று, அவைகளின் பயனாய் நமது நாட்டின் உண்மை விடுதலைக்கு விரோதியாயிருப்பது பார்ப்பனியமே என்பதையும், அதன் ஆதிக்கம் வலுத்திருப்பதற்குக் காரணம் நமது மக்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சியும், அறிவு வளர்ச்சிக்கு இடமும் இன்மையே என்பதையும், அதற்கு முக்கிய காரணம் மூடநம்பிக்கையே என்ப-தையும் உணர்ந்து, சுயமரியாதை உணர்ச்சியை உண்-டாக்கி, அறிவை வளரச்செய்து மூடநம்பிக்கைகளை ஒழித்துப் பார்ப்பனியத்தை அடியோடு அழித்து மக்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்கவேண்டும் என்கின்ற ஒரே ஆசையின் மீதே இக்குடிஅரசு பத்திரிகையை ஆரம்பித்த நாம் அதற்கேற்ப இத்-தமிழ்நாடு முழுவதும் இடைவிடாமல் சுற்றிச்சுற்றி அலைந்து திரிந்து சொற்பொழிவாற்றிக் கொண்டு-மிருப்பவராவோம். எனவே இப்படிப்பட்ட நிலையில் இதன் கொள்கை என்ன என்பதையும் இது என்ன செய்தது என்பதையும், உலகமே அறிந்ததாதலால் இதைக் குறிப்பிட வேண்டியதில்லை என்றே நினைக்-கின்றோம்.

நிற்க, இக்கொள்கையைக் கடைபிடித்து நடந்து வந்த சென்ற நான்கு வருஷகாலமாய் குடிஅரசானது முதலில் யாருடைய உதவியும் இன்றி பிரவாக வெள்-ளத்தில் எதிர்நீச்சல் நீந்த வேண்டியது போன்ற மிகக் கஷ்டமான காரியத்தில் இறங்கி இருந்ததோடு செல்-வமும் செல்வாக்கும் பெற்ற பெரியோர்கள் என்பவர்-கள் முதற்கொண்டு, மானமும், ஈனமும் அற்ற காலி-கள் என்பவர்கள் வரையும், அறிவும் ஆராய்ச்சியும் உள்ளவர்கள் என்று சொல்லப்படும் பண்டிதர்கள் முதல் தனக்கும் அறிவில்லாமல் பிறர் சொல்வதையும் கேட்க இயலாமலும் உள்ள பிடிவாத சுயநலக்காரர்கள் வரையிலும் உள்ளவர்களின் இரக்கமும் மனிதத் தன்-மையும் அற்ற எதிர்ப்புக்கு ஆளாகி வந்தும், மேற்-கூறிய எவ்வித எதிர்ப்பும் இடையூறும் இல்லாமல் தாராளமாய் விடப்பட்டிருந்து மேற்கண்டவர்கள் எல்லாம் நேசமாயிருந்து உதவி செய்து வந்திருந்-தாலும்கூட அது உத்தேசித்துள்ள காரியங்களில் எவ்-வளவு செய்திருக்க முடியுமோ அவற்றை எல்லாம்-விட குறிப்பிடத்தக்க அளவு அதிகமாகவே செய்-திருக்-கின்றதென்றே நாம் மனப்பூர்வமாக உணரு-கின்றோம். 

இதற்கு உதாரணம் என்னவென்றால் முத-லாவதாக குடிஅரசு இன்றைக்கு வாரம் ஒன்றுக்கு 9500 பிரதிகள் வெளியாகின்றதும், அடிக்க அடிக்க பந்துகிளம்புவது போல் எதிர்க்க எதிர்க்க வாசகர்கள் அதிகமாவதும் மற்றும் குடிஅரசு கொள்கைகளை ஆதரிக்கும் பத்திரிகைகளுக்கும் இதுபோலவே பல ஆயிரக்கணக்காக பிரதிகளும் வாசகர்களும் பெருகிக்கொண்டு போதலும் இக்கொள்கைக்காக என்றே புதிதுபுதிதாகப் பத்திரிகைகள் துவக்கப்படுதலும் அவைகளுக்கும் ஆரம்பத்திலேயே செல்வாக்கு பெருகுதலும், இரண்டாவதாக இக்கொள்கைகளை அனுபவத்தில் ஏற்றுக்கொண்ட மக்களுக்கும், இக்கொள்கைகளை உபதேசிக்கும் மக்களுக்கும், இக்-கொள்கைகளை ஒப்புக்கொண்ட ஸ்தாபனங்களுக்கும் நாட்டில் செல்வாக்கும் மதிப்பும் வளர்தலும் மூன்-றாவதாக இக்கொள்கைகளுக்கு எதிரிடையாக உள்ள பத்திரிகைகளுக்கும் தனிப்பட்ட நபர்களுக்கும் ஸ்தாப-னங்களுக்கும் மதிப்பும் செல்வாக்கும் குறைந்து போதலும் முதலாகிய காரணங்களால் உணரலாம். அன்றியும் எங்கு பார்த்தாலும் அடிக்கடி இக்கொள்-கைகளைப் பரப்புவதற்காக மாகாண ஜில்லா தாலுகா சுயமரியாதை மகாநாடுகள் நடப்பதும், இக்கொள்கைக்கு விரோதமான ஸ்தாபனங்கள் என்று சொல்லப்படும் காங்கிரஸ், தேசியம் முதலிய அரசியல் புரட்டு ஸ்தாப-னங்களுக்கு நாட்டில் சிறிதும் செல்வாக்கற்று இரண்டு மூன்று வருஷமாக நமது நாட்டில் அரசியலின் பேரால் மாகாண மகாநாடுகூட நடத்த முடியாமலும், ஜில்லா தாலுகா மகாநாடுகள் என்பதுகள் கூட நடப்பதென்பது மிக அருமையாயும் போய்விட்டதோடு சுயமரியாதைக் கொள்கைக்கு விரோதமான கூட்டத்தார் வெளியில் தலைகாட்டவோ மேடை ஏறுவதற்கோ லாயக்கில்லாத முறையில் அடங்கிக் கிடக்கவேண்டிய நிலைமையை உண்டாக்கியிருக்கின்றது. சுருங்கச் சொன்னால் அரசியல் சமுதாய இயல் ஆகிய புரட்டுகளை மக்-களுக்கு வெட்டவெளிச்சமாக்கி அதன்பேரால் ஏமாற்றி வயிறு வளர்த்தவர்களையும், ஆதிக்கம் பெற்று வந்த-வர்களையும் ஒருவாறு ஒடுங்கச் செய்துவிட்டதென்றே சொல்லவேண்டும்.

 நிற்க, சமயப் புரட்டுத் துறைகளிலும் எதிர்பாராத அளவு அவைகளை வெளியாக்கி அவற்-றின் போலி ஆதிக்கத்தை ஒருவாறு அழித்துக் கொண்டு வருகின்றது என்று சொல்லலாம்.

உதாரணமாக ஆயிரக்கணக்கான சாமிகளுக்கு இருந்த மதிப்புகள் எல்லாம் மலை உச்சியிலிருந்து உருட்டி-விட்ட உருண்டைக் குன்றுபோல் வேகமாக இறங்கி வருகின்றது. அவற்றின் பூசைகள், உற்சவங்கள் ஆகியவைகளின் யோக்கியதைகளுக்கும், முன்னிருந்த மதிப்பில் பகுதி மதிப்புக்கூட இல்லாமல் இருந்து வரு-கின்றது. சில இடங்களில் வெகுகாலமாய் நடந்து வந்த உற்சவங்களும், பூஜைகளும் நிறுத்தப்பட்டுவிட்டன. சாமிகளும் அவற்றின் பூசைகளும் உற்சவங்களும் இக்கதியினால் சடங்குப் புரட்டைப் பற்றி நாம் சொல்லித் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் யாருக்கும் இருக்காது என்றே நினைக்கின்றோம்.

சுருங்கச் சொல்ல வேண்டுமானால் சடங்கை நிறுத்தினவர்களும் ஜாதிப் பட்டத்தை எடுத்து விட்டவர்களும் சமயக் குறியைத் தள்ளிவிட்டவர்களும் ஆயிரமாயிரக் கணக்காகத் தைரிய-மாகப் பெயர் கொடுத்து வருகின்றார்கள். இவ்-வளவும் அல்லாமல் இத்தனைக் காலம் ஏமாற்றியதைப் போல் தேசத்தையும் தேசியத்தையும் சுயராஜ்யத்தையும் சொல்லிக் கொண்டு தேர்தலுக்கு நிற்க யாருக்கும் யோக்கியதை இல்லாமலும் செய்துவிட்டது.

உதாரணம் பாமர மக்களுக்குள்ள மற்றொரு மூட-நம்பிக்கையை ஆதாரமாய் வைத்துக் கொண்டு அதாவது மதத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு நிற்கப் போவதாய் வெளியிட வேண்டியதாய் விட்டதே போதுமானது. சமுதாய புரட்டுத் துறையிலும் தீண்டாமை விலக்கைப் பற்றி எங்கும் வெகுதாராளமாய் பேசப்-படுகின்றது. சமபந்தி போஜனம் அதிசயிக்கத் தக்க வண்ணம் முன்னேறி வருகின்றது.

பொதுவாக இவைகளுக்கு ஒரு கடுகளவு அறிவுள்ள கூட்டத்திலும் அணுவளவு ஆட்சேபமாவது அதிருப்தி-யாவது கிளம்புவதாக யாருமே சொல்ல முடியாத நிலைமை, எய்திவிட்டது என்று உறுதியாய்ச் சொல்ல-லாம். ஆனால் பொறாமைக்காரர்களுடையவும் சுய-நலக்காரர்களுடையவும் அவர்களது கூலிகளுடையவும் எதிர்ப்பும் அதிருப்தியும் சிறிதாவது இல்லை யென்று சொல்ல முடியாது. என்றாலும் அவர்களையும் இக்-கொள்கைகளை நேரான முறையில் வெளிப்படையாய் எதிர்ப்பதற்குத் தைரியமற்றவர்களாக்கி சூழ்ச்சியிலும் பித்தலாட்டத்திலுமே தான் மறைமுகமாய் தலைகாட்ட முடியும்படியாகச் செய்திருக்கின்றது.

இதுபோலவே கல்யாண முறையிலும் சாதாரணமாய் எதிர்பார்க்க முடியாத அளவு சீர்திருத்தமும், கலப்புமண உணர்ச்சியில் ஆண்களைவிட பெண்களுக்கே அதிக ஆவலும், பெண் உரிமையில் ஆண்களைவிட அதிக-மான உரிமை பெண்களுக்கு வேண்டும் என்று பெண்-களே கருதத்தக்க வண்ணமும் ஆண்கள் சிறிதும் ஆட்-சேபிக்க முடியாமல் தலை குனிந்து ஒப்புக்-கொள்ள-வேண்டிய தான உணர்ச்சியும் உண்டாயிருக்கின்றது.

இவைகள் தவிர சாஸ்திரம், புராணம், இதிகாசம் என்பவை முதலியவற்றின் யோக்கியதைகளும், புரட்டுகளும் சந்தி சிரிக்கத் தக்க வண்ணம் வெளியாகி முக்கிய சாஸ்திரங்கள் இதிகாசங்கள் என்பவைகளை அதாவது வருணாசிரமக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவைகளை ஆயிரம், பதினாயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தின் முன் நெருப்பு வைத்து கொளுத்தத் தக்க ஆவேசமும், உணர்ச்-சியும் ஏற்பட்டு விட்டது. தினம் தினம் வருணா-சிரம மகாநாடுகளும் அடிக்கடி சைவ சமய மகாநாடு-களும் மூலை முடுக்குகளில் கூட்டி குடிஅரசையும் அதன் கொள்கைகளையும் கண்டிப்பதும், சட்டசபை-களில் சரமாரியாக கேள்விகளைக் கேட்பதும் ஆகிய பல அவசியத்தைக் கொண்டு வந்தும் விட்டுவிட்டது.

இந்த சொற்ப காலத்திற்குள் இவ்வளவு காரியங்கள் நடைபெற்றதற்குக் காரணம் என்னவென்று பார்ப்போம். நாம் இத்தொண்டில் இறங்கிய காலம் முதல் இதுவரை யாருடைய வாக்கு சகாயமாவது, பண சம்பந்தமான உதவியாவது கடுகளவுகூட கிடையாது.

இதற்கு விரோதமாய் எதிர்ப்புகள் மாத்திரம் மலிந்து கிடந்தன. பள்ளிக்கூட படிப்பில்லாமலும் பத்திரிகை அனுபவம் சிறிதுமில்லாமலும் உள்ள நிலையில் இப்-பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டதும் நமக்கெதிராக அநேக பத்திரிகைகள் ஒன்று சேர்ந்து சதியாலோசனை செய்து எதிர்த்துக் கொண்டிருந்தன. உதாரணமாக நமது பத்-திரிகை விளம்பரத்தைக்கூட எவ்வளவு பணம் கொடுத்-தாலும் விளம்பரப்படுத்த சுதேசமித்திரன், நவசக்தி போன்றவைகள் மறுத்துவிட்டன. பத்திரிகை வெளிப்-படுத்தும் விஷயத்தில் தபால் ரயில் இலாகாவிலுங் கூட சகிக்க முடியாத தொல்லைகள் அனுபவிக்க வேண்டி-யதா-யிற்று. எங்கு சென்றாலும் ஆங்காங்குள்ள ஸ்தல அதிகாரிகளின் தொல்லையும் வெகு தொல்லை-யாயிருந்தது.

இவ்வளவுமல்லாமல் நமது எழுத்துகளையும் சொற்-களையும் நமது எதிரிகள் பாமர மக்களுக்குத் திரித்து எழுதியும், கூறியும் வந்த தொல்லைகள் எல்லாவற்-றையும் விட அதிகமாக இருந்தன.

அதோடு மாத்திர-மல்லாமல் பத்திரிகை ஆரம்பித்தவுடன் நம்மை தேசத்-துரோகி என்று தீர்மானித்து காங்கிரஸிலிருந்து வெளி-யாக்கி விட்டதாக நவசக்தி முதலிய பத்திரிகைகளின் பிரச்சாரமும் நாம் காங்கிரஸிலிருந்து பணம் திருடிக் கொண்டதாக தமிழ்நாடு முதலிய பத்திரிகைகளின் பிரச்சாரமும் பறை அடிப்பதுபோல் மூலை முடுக்குகளில் எல்லாம் செய்து வந்ததல்லாமல் மலேயா முதலிய வெளிநாடுகளுக்கும் ஆட்களை அனுப்பி அங்கும் விஷமப் பிரச்சாரம் செய்தும் சில சந்தா-தாரர்களிடம் குடிஅரசு வரவழைப்பதை நிறுத்திவிட்டால் தமிழ்நாடுவை இலவசமாய் அனுப்புகின்றோம் என்று சொல்லியும், குடிஅரசை நிந்தித்துத் தாங்களே கடிதம் எழுதி அதில் பாமர சந்தாதாரர்கள் கையெழுத்து வாங்கி நமக்கனுப்புவதும், குடிஅரசுக்கு விளம்பரம் கொடுத்திருப்பவர்களிட மெல்லாம் சென்று குடிஅரசுக்கு விளம்பரம் கொடுக்கக் கூடாது என்று சகல செல்வாக்-கையும் செலுத்தி பலவந்தம் செய்தும் கடைசியாக குடிஅரசு விளம்பரத்தை நிறுத்திக் கொண்டால் தமிழ்நாடுவில் இலவசமாய் விளம்பரம் போடுவதாகச் சொல்லி குடிஅரசுக்கு வந்த விளம்பரங்களை நிறுத்-தியும், மற்றும் ஒவ்வொரு சமூகத்தாரையும் நமக்கு விரோதமாய்க் கிளப்பிவிடக் கருதி நாம் சொல்லாத-வைகளையும், எழுதாதவைகளையும் எழுதியும் தங்கள் நிருபர்களைவிட்டு உட்கலகம் செய்யும்படி செய்தும், உதாரணமாக விருதுநகர் நாடார் சமுகத்தை நமக்கு விரோத-மாக கிளப்பிவிட சூழ்ச்சி செய்ததும் ஆகிய எத்த-னையோ இழித்தன்மையான எதிர்ப்புகள் எல்லாம் இருந்தும் இன்று குடிஅரசும் அதன் கொள்கையும் வெற்-றியில் இருப்பதற்குக் காரணம் என்ன என்று யோசித்துப் பார்க்க வேண்டாமா? அப்படி யோசித்தால் என்ன பதில் கிடைக்கும்? ஒரே ஒரு பதில்தான் கிடைக்கும்.

அதாவது குடிஅரசோ அதன் ஆசிரியரோ ஆரம்ப காலம் முதல் மனதில் பட்டதை ஒளிக்காமல் சொல்லும் கொள்கைகளில் சமயத்திற்குத் தகுந்தபடி சுயநலத்தையே கருதி அடிக்கடி குட்டிக்கரணம் போடாமல் இருந்ததும், வேறு யாருடைய தயவையும் கையையும் எதிர்பாராமல் தன் காலிலேயே நின்று தன்னுடைய சொந்த செலவிலேயே இயக்கத்தை நடத்தினதுமே முக்கிய காரணமாகும் என்பதே! இதில் யாருக்காவது சந்தேகம் இருக்குமானால் விளக்குவதற்கு வெளிப்படையாகவே சொல்லுகின்றோம்.

அதாவது குடிஅரசு ஆரம்பித்த காலம் முதல் இன்றையவரை ஏதோ சிலர் கல்யாண காலத்திலும், கருமாதி காலத்திலும் 4 அணா, 8 அணா, ஒரு ரூபாய் வீதம் நன்கொடையாக அளித்து வந்ததில் மொத்தம் சுமார் 100 அல்லது 120 ரூபாய்கள் தவிர மேற்கொண்டு ஒரு அம்மன் காசாவது கொடுத்த-வர்கள் யாரும் இல்லை என்றே சொல்லுவோம். ஆனால் குடிஅரசின் கொள்கையையும் தொண்-டை-யும் ஒப்புக் கொண்ட சில நண்பர்கள் குடிஅரசுக்குச் சில சமயங்களில் பண உதவி செய்ய தாங்களாகவே முன்வந்த போதும் அதைத் திருப்பி விட்டு வேண்டுமானால் தயவு செய்து திரா-விடனுக்கு உதவுங்கள் என்று கேட்டு கொண்டதன் மூலம் திராவிடனுக்கு உதவித் தொகை அளிக்கப்பட்டிருக்கின்றது.

என்றாலும் திராவிடன், குடிஅரசுக்கு உதவி-யாய் நின்றதன் பயனாக குடி அரசுக்கு ஏற்பட்ட உதவிக்கு நாம் நன்றி செலுத்தியாக வேண்டிய நிலையில் இருக்கின்றோம். இதுதவிர அதுபோலவே, நமது சுற்றுப் பிரயாணங்களுக்கும் நமது பிரச்சாரகர்களுக்கும் நண்பர்களுக்கும், இன்றைய வரை யாரும் எவ்வித பண உதவியும், செய்யப் பெறவில்லை என்றும், தைரியமாய்ச் சொல்லுவோம். பத்திரிகை நடத்துவதிலும், குடிஅரசு ஆரம்பித்த காலம் முதல் இது ஒரு வருஷம் தவிர; அதாவது மலேயா நாட்டுக்கு நமது சகோதரர் சந்தா சேர்க்கச் சென்றுவந்த வருஷம் தவிர, மற்றபடி நஷ்டத்தி-லேயே நடைபெறுகின்றதேயல்லாமல் வேறில்லை.

உடல்நிலையும் முதலாவது கண்பார்வை சற்றுக் குறைவு. தலைவலி, அடிக்கடி மயக்கம், ஜீரண குறைவால் மார்பு வலி, பல்வலி சிறிது, காதிலும் தொல்லை, குடல்வாதம், அதிக வேலை செய்யக் கூடாது என்று பிரபல வைத்தியர்களின் கண்டிப்-பான அபிப்பிராயம், முதலிய நெருக்கடியான கஷ்டத்தில் இருக்கின்றது.
தினப்படி வரும் தபால்களில் நூற்றுக்கணக்காய் வெறுக்கத் தக்கவண்ணம், புகழ்ந்தெழுதுபவை ஒருபுறமிருந்தாலும், வைதும் மிரட்டியும் எழுதப்பட்டு வரும் மொட்டைக் கடிதங்களுக்கும் குறைவில்லை.

இவ்வளவு நிர்ப்பந்தங்களுக்கிடையில் நமது இயக்கம் ஒருவித, நன்னிலை அடைந்து மேற்-செல்லுவதையும் இவைகள் நமக்குப் பேரூக்கத்தை விளைவித்து வருவதையும் ஆயிரக்கணக்கான வாலிபர்கள், நம்மைத் தாங்கி நிற்பதையும், நாம் மனமார உணருகின்றோம். முடிவாக நமது கொள்கைகளிலாவது, நமது எழுத்துகளிலாவது, சொற்களிலாவது, நமக்குச் சிறிதளவும் சந்தேகமோ மயக்கமோ இல்லாத அளவு தெளிவாயிருக்கின்றோம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். கடைசி-யாக நமக்கு உதவியாக இருக்கும். குமரன், நாடார், குலமித்திரன், தமிழன் முன்னேற்றம், விஸ்வநேசன்;

சுயமரியாதைத் தொண்டன், லட்சுமி, ரிவோல்ட். திராவிடன், முத்தமிழ் நாட்டின் பள்ளி உதயம், பிரசண்ட மகாவிகடன், மலையாளமொழி பத்திரிகை-களாகிய சகோதரன், மிதவாதி, தேசாபிமானி முதலாகியவைகள் மொத்தம் சுமார் நாற்பதினாயிரம் சந்தாதாரர்களைக் கொண்டு, நமக்காக உழைத்து வரு-வதற்கும், தென் இந்திய நல உரிமைச் சங்கத்திற்-கும், பார்ப்பனரல்லாத வாலிப சங்கத்திற்கும், நாடார் மகாஜன சங்கத்திற்கும் மற்றும் சைவ சமாஜம், சன்மார்க்க சங்கம், முதலிய சங்கங்களுக்கும் சிறிதும் தன்னலமின்றி, தங்களது முழு நேரத்தையும், தங்-களது உடல் பொருள் ஆவி ஆகியவைகளையெல்-லாம், இவ்வியக்கத்திற்கே உவந்தளிக்கத் காத்-திருக்கும் எமது அருமை வாலிப இளஞ்சிங்கங்-களுக்கும், அவசிய மானபோது எவ்வித உதவியும் புரியத் தயாராயிருக்கும் செல்வமும், செல்வாக்கும் உண்மை ஆசையும் கொண்ட செல்வ நண்பர்களுக்கும், எமது நன்றியறிதலையும் தெரிவித்துக் கொண்டு, நான்காவது ஆண்டைக் கடந்து அய்ந்தாவது ஆண்டிற்குச் செல்கின்றோம்.

- குடிஅரசு, தலையங்கம் - 05.05.1929

Thursday, May 2, 2013

ராமனைக் காட்டி சேது சமுத்திரத் திட்டத்தை முடக்குவது பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆருக்குச் செய்யும் துரோகம்!


மக்கள் மன்றத்திற்குக் கொண்டு சென்று ஆதரவு திரட்டுவோம் - வாரீர்!

அய்.ஏ.எஸ். தேர்வு இந்தியிலும், இங்கிலீஷிலும்தான் எழுதப்பட வேண்டுமா? ஒடுக்கப்பட்ட மக்களே, கிளர்ந்தெழுவீர்!
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை சேது  சமுத்திரத் திட்டத்தின் அவசியத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லுவோம் - ஆதரவு திரட்டுவோம். அனைவரும் வாரீர் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள். அவரது அறிக்கை வருமாறு:
தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்குப் பெரிதும் வாய்ப்பாக அமையும், தமிழர்களின் நீண்ட கால கனவுத் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்ற திட்டத்தினை வேண்டாத தமிழ்நாட்டுத் தலைவர்களே இல்லை என்றே சொல்லலாம்.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர், எம்.ஜி.ஆர். என்ற மறைந்த அத்தனைத் தலைவர்களும், கட்சி வேறுபாடு இன்றி இதனை பற்பல கால கட்டங்களிலும் வலியுறுத்தி, செயலில் கொண்டு வர வேண்டுமெனக் கோரியுள்ளனர் - தத்தம் கட்சிகள் சார்பில்.
ரூ.2400 கோடி திட்டம்
இத்திட்டம் தி.மு.க.வும் அதன் தோழமைக் கட்சிகளும் இணைந்து அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை 2004இல் அமைத்த வாய்ப்பின் காரணமாக, 2400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் (U.P.A.) அடுத்து 2007இல் துவக்கப் பட்டது. அதற்கு முன்பே தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போதே (NDA)   வாஜ்பேயி பிரதமராக இருந்த காலந்தொட்டே இது தமிழ்நாட்டுக் கட்சிகளால் வற்புறுத்தி, ஆராயும் படியான ஒரு நிலையையும் ஏற்படுத்தின.
பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில்...
அதன்படி - பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியில் இதற்கான ஆய்வுகளை - நாகபுரியில் உள்ள நீரி (Neeri)   என்ற புவியியல் ஆய்வுக் கூடத்தின் மூலம் சரியான வழித் தடம் பற்றி ஆய்வு செய்து, ஆறாம் வழித்தடமே வாய்ப்பானது என்று கூறப்பட்டது.
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அதனை ரூ.2400 கோடி திட்டமாக செயல்படுத்த முனைந்தது!
இன்னும் 22 கிலோ மீட்டரே!
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் இடையறாத திட்டமிட்ட சீரிய முயற்சி - தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர். பாலு அவர்கள் கப்பல்துறை அமைச்சராகவே பொறுப் பேற்று மிக வேகமாகச் செய்ய முனைந்து இன்னும் ஒரு சிறு பகுதிதான் (22 கி.மீட்டர்தான்) முடிக்க வேண்டிய பாக்கி பகுதி என்ற நிலை இருந்தது.
இந்தக் கால கட்டத்தில் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சுப்ரமணியசுவாமி என்ற பார்ப்பனரும், அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் வழக்குப் போட்டனர்.
அரசியல் நோக்கமே!
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் வந்துவிட்டால் அதன் பெருமை - அதன் அரசியல் லாபம் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு - தி.மு.க.வுக்கு அல்லவா சென்றுவிடும் என்ற அரசியல் நோக்கில் (பிஜேபி ஆட்சியிலேயே தேர்வு செய்த தடம்தான் என்ற போதிலும்) ஆதாம் பாலம் போன்ற மணற் திட்டுகளை, இராமன் பாலம் என்று கயிறு திரித்து, பார்ப்பன ஊடகங்கள் ஆதிக்கம் காரணமாக இதை ஊதிப் பெரிதுபடுத்தி, முட்டுக்கட்டை போட்டு வருகின்றன. உச்சநீதிமன்றத்தில் ஒரு ஆய்வுக் குழு புதிதாக போடப்பட்டு (கால தாமதம் செய்து கட்டை போடுவதுதான் அதன் நோக்கம் என்பது அரசியல் பார்வையாளர் அறியாததா?) அதன் அறிக்கைக்காக என்று, காங்கிரசு சென்ற நாடாளுமன்ற தேர்தலில் வடநாட்டில் இந்த இராமன் பாலப்  பிரச்சாரம் தங்கள் வெற்றி வாய்ப்பைப் பாதிக்குமோ என்று கருதியோ என்னவோ, இந்த முட்டுக்கட்டை போட்டவர்களுக்கு மறைமுக உதவி செய்வது போல நடந்து கொண்டு கிணற்றில் போட்டனர்!
வெறும் நம்பிக்கை போதுமானதா?
மக்கள் வரிப் பணம் ரூ.2000 கோடி செலவழிக்கப்பட்டு, பல வகையில் கப்பல்களின் பயண தூரம் இலங்கையைச் சுற்றாமல் சுருங்கியுள்ளதனால் எரி பொருள் சிக்கனம், இலங்கை அரசுக்குச் செல்லும் பண வருவாய் தமிழ் நாட்டிற்கு, இந்திய அரசுக்கு வரும் வாய்ப்பு, தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு இவைபற்றி சிறிதும் எண்ணா மல், வெறும் மூடநம்பிக்கை அடிப்படையில் அறிவிய லுக்கும் ஆதாரங்களுக்கும் முரணாக இப்படி ஒரு செயற்கைத் தடையை ஏற்படுத்தி, 4 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்திருக்க வேண்டிய திட்டத்தைக் கிடப்பில் போட, இவ்வாறு பல நிலைப்பாடுகளை உருவாக்கி விட்டனர்.
இராமன் பாலம் - ஆதாரம் உண்டா?
1. இராமன் கட்டிய பாலம் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஆதாம் பாலம் - மணல் திட்டுக்கள் என்றே அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வாசகங்களிலேயே கூறப்பட்டுள்ளன.
2. அய்.மு. கூட்டணி அரசு (U.P.A.) இந்த ஆறாம் வழித்தடத்தை (ஆதாம்பாலம் உள்ள தடத்தை) தேர்வு செய்யவில்லை; நீரி என்ற ஆய்வு அமைப்பின் நிபுணர்கள் ஆறு தடங்களில் இதுவே சிறந்தது என அறிக்கை தந்து தேர்வு செய்து  பணிகளும் நடந்தன. தி.மு.க.வோ மற்ற அய்க்கிய முற்போக்குக் கட்சிகளோ முடிவு செய்த இடம் அல்ல அது! பா.ஜ.க. அமைச்சர்களே அப்போது கையொப் பமிட்டு முடிவு செய்யப்பட்ட தடம் (அருண்ஜேட்லி, எஸ். திருநாவுக்கரசர், வேத்பிரகாஷ்கோயல், உமாபாரதி ஆகிய பிஜேபி அமைச்சர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டமிது - பிரதமர் வாஜ்பேயியாலும் அறிவிக்கப் பட்டதும்கூட).
3. தனது இரண்டு தேர்தல் அறிக்கைகளில் சேது சமுத்திர கால்வாய்த் திட்டத்தை ஏன் அப்போதைய மத்திய ஆட்சிகள் செயல்படுத்தவில்லை என்பதை ஜெயலலிதா தலைமையில் உள்ள அ.தி.மு.க.வே வற்புறுத்தி விட்டு, இப்போது இப்படி தலை குப்புற பல்டி நிலைப்பாடு எடுப்பது எதனால்?  அரசியல் தவிர வேறு எந்த நியாயமான காரணமும் இல்லை. அது தி.மு.க.வின் சாதனையாகி விடக் கூடாதே என்பதுதானே உள் நோக்கம்?
இதைவிட தமிழ்நாட்டு வளர்ச்சிக்குக் கேடு செய்யும் கொடுமை வேறு உண்டா?
வேலை வாய்ப்பு, பொருளாதார செழுமைபற்றி அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையே விளக்கமாக விவரித்த நிலையிலா இப்படி ஒரு முரண்பட்ட அரசியல் நிலைப்பாடு?
நண்பர் வைகோவும், இடதுசாரிகளும் கண்டிக்க வேண்டாமா?
4. நண்பர் வைகோ இதை செயல்படுத்த தான் எடுத்த முயற்சிகள் அதிகம்; எனவே தனக்கும் தன் கட்சிக்குமே முதல் பெருமை கிடைக்க வேண்டும் என்று மார்தட்டியவர்.
இடதுசாரிக் கட்சித் தோழர்களும் இடையறாது வற்புறுத்தியதோடு, பல மேடைகளில் தி.மு.க.வோடு இணைந்து சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் பற்றியும், இராமன் பாலம் என்பது கற்பனை என்றும் முழங்க வில்லையா?
தமிழக அரசின் நிலைப்பாடாகவே உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து, கட்சியாடி முடக்க நினைப்பதை - மதிமுக பொதுச் செயலாளரும், இடது சாரிகளும்  எதிர்க்க வேண்டாமா?
ஓட்டுக் கண்ணோட்டமா?
இதில் நாட்டுக் கண்ணோட்டம் முக்கியமல்லவா? ஓட்டுக் கண்ணோட்டம் அல்லது கூட்டணி உத்தேசக் கண்ணோட்டத்திற்காக மவுனம் சாதிக்கலாமா? உடனே குரல் கொடுக்க வேண்டாமா?
தி.மு.க. -கருமத்திற்குரியவர்கள் கடைசி வரை இருப்பர் - என்பதற்கேற்ப வரும் மே 15ஆம் நாள் - எழுச்சி நாள் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்தி, மக்களின் ஆதரவைத் திரட்டுவது என்பது வரவேற்கத்தக்கது!
இதுஅரசியலுக்கு அப்பாற்பட்ட தமிழ்நாட்டு வளர்ச்சியோடு இணைந்த - இன்றியமையாத திட்டம். எனவே இதனை மத்திய அரசு செயல்படுத்திட அனை வரும் ஒத்தக் கருத்துள்ளவர்கள். ஓரணியில் நிற்க மனமில்லா விட்டாலும் - முரண்பாடு இல்லாமல் தனித்தனியாகவேனும் குரல் கொடுக்க - செயல்படுத்த முன் வாருங்கள்!
பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆருக்கும் துரோகம்!
தமிழ்நாடு அரசின் சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை இராமனைக் காட்டி முடக்குவது அண் ணாவுக்கும், எம்.ஜி.ஆருக்கும்கூட அது செய்யும் துரோகம் -  மக்கள் விரோதம்! இதை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு சென்று மக்கள் ஆதரவைத் திரட்டிட அனைவரும் முன் வருவார்களாக!

-  கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...