கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த சாரதா சிட் பண்ட் நிறுவனம் திவாலாகி விட்டது என்ற தகவல் ஏடுகளில் முக்கியமான இடத்தை நிரப்பிக் கொண்டு விட்டது.
ரூ.20 ஆயிரம் கோடி முதல் ரூ.50 ஆயிரம் கோடி வரை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தச் சாரதா குழுமம் சார்பில் நடத்தப்பட்டு வந்த இந்த நிதி நிறுவனத்தில் மே.வங்காளம் அசாம், திரிபுரா மாநிலங்களிலிருந்தெல்லாம் முதலீடு செய்துள்ளார்கள்.
இதனுடைய உரிமையாளர் சுதிப்தா சென் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யப் பட்டுள்ள நிதிகளைக் கொண்டு ரியல் எஸ்டேட், பிஸ்கட் பேக்டரி முதலிய துறைகளிலும் ஈடுபட்டுள்ளார்.
இவ்வளவுத் தூரம் கொடி கட்டிப் பறந்த ஒரு நிறுவனம் திவாலானதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
அரசியல்வாதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் குறிப்பாக மேற்கு வங்காளத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவர்கள் அச்சுறுத்தி பெருந் தொகையைப் பெற்றுக் கொண்டனர் என்றெல்லாம் ஒரு பக்கத்தில் கூறப்படுகிறது.
யார் இந்த சுகிப்தாசென்? சாரதா என்ற பெயரில் இவ்வளவு நிறுவனங்களை நடத்து வதன் பின்னணி என்ற கேள்விகள் எல்லாம் எழுந்து நிறுகின்றன.
இவர் ஆன்மீகத்தில் மூழ்கி முத்து எடுக்கக் கூடியவராம்; ராமகிருஷ்ண பரமஹம்சரின் மனைவி சாரதாதேவியின் தீவிரப் பக்தராம்; அதனால்தான் அவர் நடத்தும் நிறுவனங்களுக் கெல்லாம் அந்த அம்மையாரின் நாம கரணத்தைச் சூட்டியிருக்கிறார்.
தொடக்கத்தில் நக்சலைட்டு இயக்கத்தில் இருந்திருக்கிறார். அதன்பிறகுதான் ஆன்மீகத் துக்குத் திரும்பியிருக்கிறார். இதுதான் சரியான வேடம் என்று தெரிந்து கொண்டு இராம கிருஷ்ண பரமஹம்சரின் மனைவி சாரதா அம்மையாரின் பக்தராக வலம் வந்தார்.
நிதி நிறுவனத்தை இந்தப் பின்னணியில் ஆரம்பித்தவுடன் மக்களும் நம்பி முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர் என்பதுதான் உண்மை.
ஏமாற்றுக்காரர்களுக்கு வசதியான வேடம் ஆன்மீகம் தானே - அதன் மூலம்தானே நம்ப வைத்துக் கழுத்தறுக்கலாம்.
இந்த ஆசாமியின் பாஸ்போர்ட்டில் உள்ள தந்தையாரின் பெயர் வேறு; வேறு ஆவணங்களில் வேறாக இருக்கிறதாம்.
பக்தி வேடம் போட்டால் எளிதில் மக்களை ஏமாற்றலாம் என்பது வெளிப்படை!
சாமியார்களும், சாயிபாபாக்களும் எந்தவித முதலீடும் செய்யாமல் மக்களைச் சுரண்டுவது எந்த அடிப்படையில்? சுதிப்தா சென் என்பவராவது ஒரு நிறுவனத்தைத் தொடங்கி ஏமாற்றியிருக்கிறார். சாயிபாபாவும், சாமி யார்களும் எந்தவித நிறுவனத்தையும் நடத் தாமல், எந்தவித முதலீட்டையும் செய்யாமல், மக்களின் பக்தி முட்டாள்தனத்தை மட்டுமே முதலீடாகக் கொண்டு அன்றாடம் சுரண்ட வில்லையா?
சாயிபாபாவை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எந்தத் தொழிலைச் செய்தார்?
பகவான் சாயிபாபா என்ற பிரச்சாரம் - அதனை நம்பி, விளக்கொளியைக் கண்டு பாய்ந்து வரும் விட்டில் பூச்சிகளாக மக்கள் அவர் வலையில் விழுந்தனர். பணத்தைப் பணம் என்று பார்க்காமல் கொட்டிக் கொட்டிக் கொடுத்தனர்.
எத்தனை ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதியானார்! முதலில்லா வியாபாரம் என்பது மதமும், பக்தியும் இவற்றைச் சார்ந்த சேர்ந்த ஆன்மீகம்தானே?
இவ்வளவு நடந்தாலும் படித்த, படிக்காத பாமர மக்களின் பக்திப் போதை தெளிவ தில்லையே! ஒரு சில நாட்கள் பரபரப்பாகப் பேசப்படுவதோடு சரி. அதற்குப் பிறகு வழக்கம்போல பக்தி வேடக்காரர்களின் பகற் கொள்ளைத் தொழில் ஜாம் ஜாமென்றுதானே நடக்கிறது.
பக்தி ஒழுக்கத்திற்குத் துணை போகிறதா?
மோசடிக்குத் துணை போகிறதா?
சிந்திப்பீர்!
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- ஜெயங்கொண்டம் பேருரை!
- பகுத்தறிவும் - சுயமரியாதையும்
- சேது சமுத்திரத் திட்டமும் அ.இ.அ.தி.மு.க.வும்
- முதல் அமைச்சர் அவசரம் காட்ட வேண்டும்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment