Friday, April 5, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு - பணிநியமன இட ஒதுக்கீட்டு மோசடி (6)


இலட்சக்கணக்கானோரின் வாழ்வைப் பறித்த ஆசிரியர் தகுதித் தேர்வு - பணிநியமன இட ஒதுக்கீட்டு மோசடி (6)




(நேற்றைய தொடர்ச்சி)
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு இட ஒதுக்கீட்டை எப்படி செயல்படுத்துறதுன்னு சுத்தமா தெரியலைங்கிறது தெள்ளத் தெளிவா தெரியுது (Crystal Clear) ன்னு நீதியரசர் சொல்லியிருக்காருன்னு பார்த்தோமே! அது தெரியாம செஞ்சதா? இல்லை தெரிஞ்சே செஞ்ச சதியான்னு விசாரிச்சாத் தான் தெரியும். அது ஒரு பக்கம் இருக்கட்டும். அதையும் தாண்டி இன்னொரு விசயத்தையும் தன்னோட தீர்ப்புல சொல்லியிருந்தார் நீதியரசர்.
27. Thus, the Teachers Recruitment Board itself has now impliedly conceded before this Court that the method of selection under various categories already done by the Teachers Recruitment Board is not correct and therefore the lists of selected candidates already published are liable to be withdrawn. Therefore, the entire select lists, including the select lists for the posts for which there is no challenge, are liable to be set aside.
ஏற்கெனவே ஆசிரியர் தேர்வுவாரியத்தால் பல்வேறு பிரிவுகளுக்கு செய்யப்பட்ட தேர்வு முறைகளிலும் (method of selection under various categories)  சரியான நடைமுறை பின்பற்றப்படவில்லை என தேர்வு வாரியமே மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளது. ஆகவே, இதற்கு முன்பு வெளியிடப்பட்ட பட்டியல்கள் எல்லாமே திரும்பப்பெறப்பட வேண்டியவை. ஆகவே, இங்கே நீதிமன்றத்தை அணுகாத இடங்கள் உள்பட அனைத்துத் தேர்வுப் பட்டியல்களுமே ஒதுக்கி வைக்கப்பட வேண்டியவையே!
ஆக, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான வழக்கில், இட ஒதுக்கீட்டை நாங்க எப்படி அமல்படுத்துறோம்னு ஆசிரியர் தேர்வு வாரியம் கொடுத்த விளக்கங்கள்ல இருந்தே, இது சரியான நடைமுறை இல்லைன்னு புரிஞ்சுக்கிட்ட நீதியரசர், இதற்கு முன் பல்வேறு பிரிவுகளின் கீழ் செய்யப்பட்ட தேர்வு முடிவுகளும் இப்படித் தான் -னு தெளிவா புரிஞ்சுக்கிட்டு அதையெல்லாம் திரும்பப்பெறணும்னு சொல்லியிருக்கு
அப்போ, இந்த TET தகுதித் தேர்வுப் பட்டியலும் 24.08.2012-இல், இந்தத் தீர்ப்புக்கு முன்னாடி வந்தது தானே, அப்பன்னா இதுவும் தப்பான பட்டியல். திரும்ப வாங்கணும்கிற மாதிரி தானே தீர்ப்பு இருக்கு!
உண்மை தான். அதேமாதிரி, வெறும் தகுதித் தேர்வு முடிவை மட்டும் வச்சுக்கிட்டு  வேலையும் கொடுக்க முடியாது. தெரியுமா?
ஆம். TET என்பது தகுதித் தேர்வு மட்டுமே, இதை வைத்துக் கொண்டு நேரடியாக வேலை கொடுக்க முடியாது; கொடுக்கவும் கூடாது! ஆசிரியர் பணி நியமனத்திற்கென்று எப்போதும் வழக்கமாக தனி நடைமுறைகள் பின்பற்றப்படும்! அதாவது வகுப்பு வாரியான பணியிடங்கள் குறித்த விவரங்களைக் கொண்ட ஒரு முறைப்படியான அறிவிக்கையை அரசு வெளியிடும்.
தகுதி பற்றிய விவரங்களும் தேர்ந்தெடுக்கும் முறை பற்றிய விவரங்களும், (நேரடிப்போட்டித்தேர்வு /பதிவுமூப்பு /வெயிட்டேஜ் மதிப்பெண்கள் இவற்றுள் ஏதேனும் ஒன்று) குறிப்பிடப்பட்டு, வயதுவரம்புச் சலுகை, இன்னபிற சலுகைகள் குறித்த விவரங்களும் இடம்பெறும்! அதில் தகுதி படைத்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப் படுவார்கள்.
இதுபோன்ற முறையான அறிவிக்கையை வெளியிட்ட பிறகுதான், அதன் அடிப்படையில் விண்ணப்பிப்பவர்களைக் கொண்டு எந்த ஓர் அரசுப் பணியிடத்தையுமே நிரப்பமுடியும்!  அதில் விண்ணப்பித்தவர்களை வரிசைப்படுத்தி, அதில் தமிழகத்தின் இடஒதுக்கீட்டு விகிதாச்சார அளவான 69ரூ  இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்! இதுதான் வழக்கமான சட்டப்படியான நடைமுறை!
இந்தத் தகுதித் தேர்வுக்கென ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிக்கையிலும் வேலை வாய்ப்புக்கான நடைமுறைகள் தனியே நடைபெறும் என்றும், இந்தத் தேர்வு வேலைவாய்ப்புக்கான நேரடித் தேர்வு இல்லை என்றும், இதில் வெற்றி பெற்றுவிட்டதாலேயே, எவரும் கட்டயாமாக் வேலை தந்தாக வேண்டும் என்று கேட்கமுடியாது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது! இதோ TRB  வெளியிட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையில்((04/2012-07.03.2012)) குறிப்பிடப்பட்டுள்ளசெய்தி.
General Information:
The Teacher Eligibility Test is merely as a pre-requisite eligibility test for those who are seeking appointment as a teacher.
For appointment of teachers the Teachers Recruitment Board will follow separate selection procedures.
Recruitment of Teachers will be conducted separately as and when there is need following the guidelines of the Government of Tamil Nadu and the Communal Roster in vogue.
…. qualifying the TET would not confer a right on any person for recruitment/employment as it is only one of the eligibility criteria for appointment.
ஆனால் நடந்தது என்னவென்றால், மேற்கண்ட அறிவிப்புக்கு மாறாக,  தனியே எந்த நடைமுறையும் பின்பற்றப்படாமல், சட்ட விரோதமான முறையில், TET மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பட்டியல் வெளியிடப்பட்டு பணி வழங்கப்பட்டுள்ளது. இதோ, 05.12.2012-இல் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பைப் பாருங்கள். (http://trb.tn.nic.in/TET2012/05122012D/msg.htm)         .
Candidates who have secured 60% marks and above were called for Certificate Verification. Certificate Verification was held in two spells i.e. for TNTET main examination and for TNTET Supplementary Examinations.
Now, the Board release the tentative provisionally selected list of candidates for the post of secondary grade teachers and graduate assistants. The said selection for secondary grade teachers is purely based on seniority with communal rotations and the priorities laid down by the Government of Tamil Nadu and the selection list for graduate assistants is prepared based on the weightage marks awarded as per the G.O.Ms.No.252 School Education Department dated 5.10.2012.
முன்பு போட்டித் தேர்வுக்கும், தகுதித் தேர்வுக்கும் உள்ள வேறுபாட்டைப் பார்த்தோமே, அதை மறைத்து தகுதித் தேர்வையே போட்டித் தேர்வு போன்ற தோற்றத்துடன் காட்டியிருக்கிறார்கள் என்று சொன்னோமே - அது இது தான்.
ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்குமாறு கூட கோரப்படவில்லை. வகுப்புவாரியான காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்படவில்லை.
பொதுப்போட்டி - 31 %
பிற்படுத்தப்பட்டோர் -26.5%
பிற்படுத்தப்பட்டோர் (இஸ்லாமியர்) -3.5 %
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 20 %
தாழ்த்தப்பட்டோர் (பட்டியல் இனத்தவர்) - 18%
பழங்குடியினர் - 1 %
(இவை தவிர, மேற்கண்ட ஒவ்வொரு பிரிவிலும்  பெண்களுக்கு 30% , மாற்றுத் திறனாளிகள் 2% , தமிழ் வழியில் பயின்றோர் - 20% ஆகியோருக்கு கிடைமட்ட இட ஒதுக்கீடு)
இப்படித் தெளிவாக சமூகநீதி அடிப்படையில் வரையறுக்கப் பட்டுள்ள, இந்திய அரசியல் சட்டப்படி அங்கீகாரம் பெற்றுள்ள இட ஒதுக்கீடு பற்றி சுத்தமாகக் கண்டுகொள்ளாமல் தான் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநியமனத்துக்கு அறிவிப்பு வெளிவந்தது. நேரடியாக தகுதித் தேர்வில் தேறியோர் அனைவரும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.
ஆனால், இதில் தமிழ்நாடு அரசு வகுத்துள்ள வகுப்புவாரியான சுழற்சி, முன்னுரிமை அடிப்படையில் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளதாக அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ளார்களே! அப்படி யானால் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டுள்ளது என்று தானே அர்த்தம்? ஆம்.. அப்படித் தான் தோன்றும். அப்படி நமக்குத் தோன்ற வேண்டும் என்பதற்காகத் தான் இந்த பித்தலாட்டமான வார்த்தைகள். அது தான் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்களை வகுக்காமல், இட ஒதுக்கீட்டிற்கான வழியையே அடைத்தாயிற்றே! அப்புறம் ஏன் இந்த சால்ஜாப்பு என்றால், நம்மை ஏமாற்றத் தான்..
05.12.2012-இல் வந்த அறிவிப்பின்படி முதல் மற்றும் மறுதகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் அனைவரும் சான்றிதழ் சரிபார்ப்புக்கும், கலந்தாய்வுக்கும் வருமாறு அழைக்கப்பட்டு சுடச்சுட வேலை வழங்கப்பட்டது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் என தேர்ச்சிபெற்ற 19000 பேருக்கும் வேலை வழங்கப்பட்டதாக சொல்லப்பட்டதே, அதில் தமிழ்நாட்டின் 69 இட ஒதுக்கீட்டின் படியேவா தேர்ச்சி இருந்தது? தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை என்று சொன்னாலே அங்கே இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்று தானே பொருள்.
இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் - தகுதித் தேர்வில் தேறியவர்களில் பதிவு மூப்பு அடிப்படையில் செய்யப்படவேண்டும். (இதற்கும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் என்ற அளவுகோலை அறிவித்தார்கள். ஆனால், இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் பதிவுமூப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.)
அதாவது சமூகநீதிப்படி தகுதி அளவுகோல் வரையறுக்கப்படாத பொதுப்போட்டிக்குரிய 60% மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்கள் தேர்ச்சி  அடைந்ததாகக் கருதப்படுவார்கள். அதன்பிறகு அவர்களது தகுதி மதிப்பெண்களுக்கு முன்னுரிமை இல்லை. பணிக்கு விண்ணப்பம் செய்வோர், பதிவு மூப்பு அடிப்படையில் தேர்ந் தெடுக்கப்படவேண்டும். அப்படியெனில், ஒவ்வொரு பிரிவினருக்கும் வகுப்பு வாரியான பதிவு மூப்பு கட்-ஆப் தேதி அறிவிக்கப்பட வேண்டும். அப்படி அறிவிக்கப்பட்டால், பொதுப்போட்டிக்கென்ற தேதிக்குப் பிறகு ஒரு தேதி தான் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பிற இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட வேண்டும்.
ஆனால், பதிவு மூப்பு கட்-ஆப் தேதி விவரமும் வெளியிடப்பட வில்லை. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியலும் வெளியிடப்பட வில்லை. வேலை உண்டா? இல்லையா? என்பதைத் தனித் தனியாக அவரவர் தெரிந்துகொள்ளும்படி வெளியிட்டிருந்தார்கள்.
எடுத்துக்காட்டாக சில விவரங்களை நாம் பார்ப்போம். பின் வருவனவற்றில் நீங்கள் கவனிக்க வேண்டியது - பதிவுத் தேதி (Emp. Reg. Date)
அதாவது, 2002-இல் பதிவு செய்தவர்  BC என்று குறிப்பிடப் பட்டுள்ளார். 2006-இல் பதிவு செய்தவர்  SC  என்று குறிப்பிடப்பட் டுள்ளார். ஆனால், 2010-இல் பதிவு செய்தவர்  GT  என்று குறிப்பிடப் பட்டுள்ளார். இது எப்படி நிகழ்ந்திருக்க முடியும்?  எப்படியென்றால், வகுப்புவாரியான கட்-ஆப் தேதி அறிவிக்கப்படவில்லை. Turn என்று அவர்கள் குறிப்பிட்டிருப்பது இட ஒதுக்கீட்டின் படியான  Turn அல்ல.
விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர்கள் என்ன பிரிவு என்று குறிப்பிட்டுள்ளார்களோ, அதையே எடுத்துப் போட்டு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது போன்ற தோற்றம் தரப்பட்டுள்ளது. மற்றபடி,  இடஒதுக்கீட்டுவிதிகளின்படி, பதிவுமூப்பு அடிப்படையிலோ அல்லது பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலோ அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய வகுப்புவாரிப்பிரிவு அங்கு குறிப்பிடப்படவில்லை! உண்மையில், பழைய மோசடி, அதாவது நீதிமன்றம் எது முறையற்றது என்றதோ, அது தான் மீண்டும் நடந்துள்ளது. 69% இட ஒதுக்கீடும் பின்பற்றப்படாமல் அது போன்ற தோற்றத்தைத் தரத் தான் BC, SC, ST என்று குறிப்பிட்டுள்ளார்கள். முற்பட்ட வகுப்பினரை மட்டும்  பொதுப்பிரிவு GT என்று குறிப் பிட்டுள்ளார்கள்.
அதனால் தான் 2010-இல் பதிவு செய்தவர்  GT என்றும், 2002-இல் பதிவு செய்தவர் BC என்றும் குறிப்பிடபட்டுள்ளார்.
பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம்:
பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்று அறிவித்திருந்தது. வெயிட்டேஜ் மதிப்பெண்களே மோசடி. ஒருவர் ஆசிரியர் பணி நியமனம் பெறுவதற்கு, 12-ஆம் வகுப்பு, கல்லூரியில் இளநிலையில் பெற்ற மதிப்பெண்கள், ஆசிரியர் பயிற்சியில் பெற்ற மதிப்பெண்கள், இவற்றுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் இதெல்லாம் சேர்த்து கணக்கிடப்படுமாம். மருத்துவக் கல்லூரிக்கு நுழைவுத் தேர்வு நடந்த காலத்தில், 12-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்ணையும், நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணையும் கணக்கிட்டு பட்டியல் தயாரித்தார்கள்.
நுழைவுத்தேர்வு நீக்கப்பட்டதே, இத்தகைய நடைமுறையால் கிராமப்புற ஒடுக்கப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் தான். ஆனால், அதே போன்ற, இன்னும் சொல்லப்போனால், அதை விடக் கொடுமையான நடைமுறைதான் இந்த பணிநியமனத்தில் சொல்லப்பட்டுள்ள வெயிட்டேஜ் மதிப்பெண்கள்.
12-ஆம் வகுப்பில் வெவ்வேறு பாடப் பிரிவு படித்தவர்கள் எடுத்த மதிப்பெண்களையும், கல்லூரியில் வெவ்வேறு பாடப்பிரிவில் படித்த மதிப்பெண்களையும் எப்படி கணக்கில் எடுக்கிறார்களோ தெரியவில்லை. நல்ல வாய்ப்பாக, LKG, UKG-ல் எடுத்த மதிப்பெண்களுக்கும், அப்பா, அம்மா எடுத்த மதிப்பெண்ணுக்கெல்லாம் வெயிட்டேஜ் தரவில்லை.
சரி, அப்படியே வெயிட்டேஜ் மதிப்பெண்களைக் கொண்டு பட்டதாரி ஆசிரியர் பணிநியமனம் நடைபெற்றது என்றே வைத்துக் கொள்வோம். அந்த வெயிட்டேஜ் மதிப்பெண்கள் என்ன? அந்த மதிப்பெண் அடிப்படையிலான தகுதிப் பட்டியல் எங்கே? மதிப்பெண்ணே போடாமல், தகுதிப் பட்டியல் வெளியிட்டதை இதுவரை யாராவது கண்டிருக்கிறோமா? மதிப்பெண் தான் தகுதி என்ற பிறகு அது இல்லாமல் எப்படி தகுதிப் பட்டியல்? கேலிக் கூத்தாக அல்லவா இருக்கிறது. ஆனால் இது வெறும் கேலிக்கூத்து அல்ல. எண்ணற்றோரின் வாழ்வை அழித்த மோசடி!
எங்கே வெயிட்டேஜ் மதிப்பெண்? எதை வைத்து அவர்  BC, இவர்  GT என்று கணக்கிடப்பட்டது? இது தான் வேலை உண்டா இல்லையா என்று மட்டும் சொன்ன பட்டியல்.
யெஸ்-சுன்னா யெஸ்-ன்னு சொல்லு...
நோவுன்னா நோவுன்னு சொல்லு என்ன சினிமா பாட்டா இது? மதிப்பெண்கள் இல்லை; ஆனால் இது தான் தகுதிப் படியான முடிவு என்கிறார்கள்.
இந்த அப்பட்டமான அநீதி தான் இந்த பணிநியமனம் முழுக்கவே நடைபெற்றிருக்கிறது. தொடக்கத்தில் இருந்து நடந்திருக்கிறது. எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அங்கெல்லாம் மோசடி நடந்திருக்கிறது. அறிவிக்கைகள் வெளியிடப்படவில்லை. வெளியிடப் பட்ட அறிவிக்கையில் OCக்கான பணியிடங்கள் என்று சொல்லி விட்டு,  OC என்பது என்ன விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதே இல்லை. இடஒதுக்கீட்டை குழப்ப வேண்டும் என்ற நோக்கம் தொடக்கம் முதலே இதில் ஈடுபட்டவர்களுக்கு இருந்திருக்கிறது என்பது தெரிகிறது.
இத்தனைப் பெரிய மோசடியின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? யார்? அல்லது எத்தனை பேர்? இந்தக் கேள்விகளுக்கான விடையை, அவர்களுக்குரிய தண்டனையை வழங்க வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமை. மேற்கண்ட மோசடி முடிவுகள் அனைத்தையும் திரும்ப வாங்கிவிட்டு, சமூகநீதி அடிப்படையிலான மதிப்பெண் அளவுகோலுடனான புதிய பட்டியல்களை வெளியிட்டு, வகுப்புவாரியான காலிப் பணியிட விவரங்கள் அடங்கிய புதிய பணி நியமன அறிவிக்கை வெளியிட்டு முழுமையான முறையான நடைமுறைகள் மேற்கொள்ளப்படுவதே உரிய நீதியாகும்..
இனிமேல் உள்ளவற்றில் பார்த்துக் கொள்ளலாம் என்பது அநீதியானது. இந்த வேளையில், இன்னொரு முக்கியமான செய்தியையும் கவனிக்க வேண்டும்.
தனியார் பள்ளிகளிலும் பணியில் சேர முடியாது
குதிரை கீழே தள்ளியது மட்டுமல்லாமல், குழியும் பறித்த கதையாக அரசுப் பணியிடங்களுக்கு நடந்த இந்த மோசம் மட்டுமில்லாமல், தனியார் பள்ளிகளுக்கும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இதே போன்ற அறிவிப்பை தமிழக பள்ளிக் கல்வித் துறை தந்திருக்கிறது.
NCTE -இன் விதிப்படி தகுதி மதிப்பெண் 60% என்பதை, பிற்படுத்தப் பட்டோர்,  தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தரவேண்டிய மதிப்பெண் தளர்வுகளை தனியார் பள்ளி நிர்வாகமே முடிவு செய்து கொள்ளலாம். ஆனால், தமிழ்நாடு அரசின் சுற்றறிக்கையில் தகுதித் தேர்வில் தாங்கள் குறிப்பிட்டுள்ள படி தேர்ச்சி பெற்றவர்களே (60% எடுத்தவர்களே) சேர்க்கப்பட வேண்டும் என்று, தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு  NCTE கொடுத்துள்ள வாய்ப்பையும் பறித்துள்ளனர். இதுபற்றிய தெளிவான பார்வை பள்ளிக் கல்வித்துறைக்கும் இல்லை. தனியார் பள்ளிகளுக்கும் இல்லை.
மதிப்பெண் பட்டியலைத் தந்தால், அதைக் கொண்டு தனியார் பள்ளிகளிலாவது பணி பெற வாய்ப்புடைய லட்சக் கணக்கான ஆசிரியர் படிப்பு படித்தவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டால் இதனால் ஏற்படும் பாதிப்பின் முழுப் பரிமாணமும் புலப்படும்.
************************
அனைவரின்  கண்களைக் கட்டிவிட்டு, மிக சூழ்ச்சியோடு செய்யப்பட்ட இந்த முறைகேட்டை, மிக நுணுக்கமாக ஆராய்ந்து,   உழைத்து, ஆதாரங்களைச் சிறுகச் சிறுகத் திரட்டி, சமூகநீதியை நிலைநாட்டும் வகையில், எளிய மனிதர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் தர்க்கபூர்வமான வாதங்களையும் வைத்து, கவனமாக அரசியல் கலந்துவிடாமல் நடுநிலையோடு அணுகி, இதனை சமூகநீதிச் சிக்கலாக மட்டும் வெளிக்கொணர்ந்திருக்கும், சென்னை லயோலா கல்லூரியின், மனிதம் மேம்பாட்டுத் துறைப் பேராசிரியர் தோழர் பெரியார்பேரன் அவர்கள் பாராட்டுக்குரியவர். லயோலா கல்லூரியின் மாணவர்களும், பேராசிரியர்களும், இத்தகைய சமூகநீதிப் பிரச்சினைகளில் முன்நிற்பது மிகவும் பாராட்டுக்குரியது!
சமூகநீதியினால், இட ஒதுக்கீட்டினால் பலன்பெற்ற பலன் பெறப் போகிற அத்தனை ஆசிரியர்களும், அலுவலர்களும், அவர்களது சங்கங்களும், அரசியல் இயக்கங்களும், படித்துத்தேறிய, தேறுகிற அனைத்துத் தலைமுறையினரும், இதே போன்று செயல்படுவதற்கு கடமை உள்ளவர்களே! இந்த சமூகநீதியைக் குலைக்க, அழிக்க அனைத்து உயர்ஜாதியினரும் குறிப்பாக பார்ப்பனர்களும் தங்களின் பதவி, பட்டம், அறிவு, வாய்ப்பு, அதிகாரம் அத்தனையையும் பயன்படுத்தும் போது, இதனால் தங்கள் உரிமையை மீட்கப் போகிற நமக்கு கடமை இன்னும் அதிகம் அல்லவா? விழிப்புடன் இருக்க வேண்டியது மிகவும் முக்கியமல்லவா?
ஒடுக்கப்பட்டோரே, சிந்திப்பீர்!
தொகுப்பு: ஈரோட்டு கண்ணாடி


தமிழக அரசு பதில் சொல்ல வேண்டிய கேள்விகள்
1. ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளில் சமூகநீதி இடஒதுக்கீடு எங்கே? குறிப்பாக நெட், செட் தேர்வுகளில் உள்ளது போன்றும், இதே ஆசிரியர் தகுதித் தேர்வில் அண்டை மாநிலமான ஆந்திராவில் இடஒதுக் கீட்டின்படி, வகுப்புவாரியாக தனித்தனியாக நிர்ணயிக்கப் பட்டுள்ள தகுதி மதிப்பெண்கள் அளவுகோல்கள் எங்கே?
2. முதுநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கு வெளியிட்டது போல், சட்டப்படி முறையாக வெளியிடப்பட்டிருக்க வேண்டிய, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களுக்கான, வகுப்புவாரி காலிப் பணியிட விவரங்களுடன் கூடிய முறையான அறிவிக்கை எங்கே?
3. மோசடியான முறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும்,  சுமார் 11,000 இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில், வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படை என்று சொல்லப்பட்டுள்ளதே. அதற்குரிய வகுப்புவாரியான கட்ஆஃப் தேதி என்ன? குறிப்பாக பொதுப்பிரிவு இடங்களுக்குரிய கட்ஆஃப் தேதி எங்கே.? மற்றும்
பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில், வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அடிப்படை என்றுசொல்லப்பட்டுள்ளதே. அதற்குரிய வகுப்புவாரியான கட்ஆஃப் மதிப்பெண்கள் என்ன? குறிப்பாக பொதுப்பிரிவு இடங்களுக் குரிய கட்ஆஃப் மதிப்பெண்கள் பாடவாரியாக எங்கே.?
4. -NCTE-  விதிகளின்படி, அரசு உதவி பெறும் மற்றும் பெறாத தனியார் பள்ளிகளும் மற்றும் சிறுபான்மைப் பள்ளிகளும், அவை தங்களுக்கெனப்பின்பற்றும் இடஒதுக்கீட்டு கொள்கைகளுக் கேற்கேற்ப, ஆசிரியர்தகுதித்தேர்வில் தகுதிமதிப்பெண்களை இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மட்டும் தளர்த்தி நிர்ணயித்துத் தங்கள் பள்ளிகளில், பணி நியமனம் செய்து கொள்வதற்கு ஏதுவாக, இந்தத் தேர்வை எழுதிய அனைத்து ஆசிரிய மாணவர்களுக்கும் மதிப்பெண் சான்றிதழ்களை மற்ற மாநிலங்களும், மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.இ., நிறுவனமும் வழங்குகின்றனவே,  தமிழகஅரசு ஏன் அது போன்று ஆசிரியத் தகுதித் தேர்வு எழுதிய அனைவருக்கும் மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கவில்லை?


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:




Tuesday, April 2, 2013

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து இடஒதுக்கீட்டு மோசடி (5)


முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில் நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து இடஒதுக்கீட்டு மோசடி


முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு (தகுதித் தேர்வு அல்ல) 27.5.2012 அன்று நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் 27.7.2012 அன்று வெளியிடப்பட்டன.
இந்தப் பட்டியலில் தான் பொதுப்போட்டியில் வரவேண்டிய உயர்ஜாதியினர் தவிர்த்த பிறரை அவரவர் இடஒதுக்கீட்டுப் பிரிவுக்கு மாற்றியிருந்தார்கள். அதாவது உயர்ஜாதியினரை மட்டும் GT என்று குறிப்பிட்டு, நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் மற்றவர்களை  BC, MBC, SC, ST  என்று குறிப்பிட்டிருந்தார்கள். இதன் மூலம் 31% பொதுப் போட்டி இடங்களை மொத்தமாக உயர்ஜாதியினருக்கே ஒதுக்கிவிடும் சதி இது!
எடுத்துக்காட்டாக, தமிழ் பாடப்பிரிவில், 136 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்திலேயே இரண்டாம் இடம் எடுத்தவர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால், 107 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் பொதுப் போட்டியில் அறிவிக்கப்பட்டிருந்தனர். (பட்டியலின் சில பகுதிகள் கீழே)
இதனை எதிர்த்து 01.09.2012 அன்று உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து அவர்கள் 01.10.2012 அன்று அளித்த தீர்ப்பு மிக முக்கியமானது. தேர்வு மதிப்பீடுகளும் (Valuation) முடிவுகளும் ரத்து செய்யப்படுகின்றன.
மேற்கண்ட அறிவிக்கையின் படி வெளியிடப்பட்ட அத்தனை பணியிடங்களுக்குமான பட்டியல்களும் ரத்து செய்யப்படுகின்றன. அத்தனைப் பாடங்களையும் மறுமதிப்பீடு செய்ய வேண்டும். அவற்றின் முடிவுகளை  TRB தனது இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
அதன் பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, முறையாக இடஒதுக்கீடு பின்பற்றப்படவேண்டும். பொதுப்பட்டியல், இடஒதுக்கீட்டுப் பட்டியல் ஆகியன மதிப்பெண் அடிப்படையில் சரியாகப் பின்பற்றப்பட்டு முடிவுகள் TRB-இன் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படவேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது மட்டுமல்லாமல், TRB-ன் நடவடிக்கைகளுக்குக் கடும் கண்டனமும் தெரிவித்திருந்தார். பிறகு அங்கேயே மன்னிப்புக் கேட்டு, இனிமேல் ஒழுங்காக நடந்துகொள் கிறோம் என்றெல்லாம் பசப்பித் திரும்பினார் தமிழக அரசின் வழக்கறிஞர்.
அதன் பிறகு 10.12.2012 அன்று முடிவுகளை வெளியிட்டு, மீண்டும் திருத்தி அறிவித்தது ஆசிரியர் தேர்வு வாரியம். உத்தேசப்பட்டியலையும் வெளியிட்டது. இறுதி செய்யப்பட்ட கட்-ஆப் மதிப் பெண்களை 18.1.2013 அன்று வெளியிட்டுள்ளது.  அதனுடன் தனித்தனியாக முடிவுகளைத் தெரிந்துகொள்ளும்படி பட்டியல் வெளியிட்டது. எடுத்துக் காட்டாக, தமிழைப் பொறுத்தவரை,
இது தான் கட்-ஆப் பட்டியல். அதாவது எந்த வகுப்பினராக இருந்தாலும் 115 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்திருந்தால் அவர்கள் பொதுப் போட்டியினராகக் கருதப்பட வேண்டும். இது தவிர மறு மதிப்பீடு செய்யப்பட்ட மதிப்பெண் விவரங்களை அவரவர் தனித்தனியாகத் தெரிந்துகொள்ளலாம் என்ற அளவில் வெளியிடப்பட்டது.
அதன் படி, பிற்படுத்தப்பட்டோருக்கான மதிப்பெண்ணும், அவர்களில் பொதுப் போட்டிக்கான கட்-ஆப்-க்கு மேல் எடுத்திருந்தவர்களுக்கு பொதுப்போட்டி  (GT)  என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, 136 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாம் இடத்தில் இருந்த வேல்முருகன் ஏற்கெனவே  BC  என்று இட ஒதுக்கீட்டுப் பிரிவுக்கு தள்ளிவிடப்பட்டிருந்தார். மறுமதிப்பீட்டில் 138 மதிபெண்கள் பெற்று பொதுப்பிரிவு  GT என்று குறிப்பிடப்பட்டிருக்கிறார்.
ஒரு சோறு பதம் என்று விட்டுவிட முடியாது. எல்லோரையும் பார்க்க பட்டியலும் கிடையாது. எனவே, ஆங்காங்கு சிலரைத் தேர்ந்தெடுத்து முடிவுகள் பார்த்ததில் தான், மீண்டும் முறைகேடு நடந்திருப்பதைக் கண்டுபிடிக்க முடிந்தது. இந்த முறை தாழ்த்தப்பட்டோர் மட்டும் பொதுப் பிரிவில் சேர்க்கப்படவில்லை.
இதோ, 115 மதிப்பெண்ணுக்கு மேல் இருந்தால் பொதுப்பிரிவுக்கு போக வேண்டிவர் 122 மதிப்பெண் எடுத்தும்  SC என்று இடஒதுக்கீட்டுப் பட்டியலிலேயே வைக்கப்பட்டிருக்கிறார். அவர் மட்டுமல்ல, அத்தனை பேருக்கும் இதுவே நடந்திருக்கிறது. 136 மதிப்பெண்கள் எடுத்துள்ள ரமணி,  124 மதிப்பெண்கள் எடுத்த அனிதா, 120 மதிப்பெண் எடுத்த ஜெயக்கனி என்று இப்படி 115க்கு மேல் எடுத்த தாழ்த்தப்பட்டோர் அனைவரும் SC பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது அப்பட்டமான மோசடி. எந்த முறைகேட்டுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதோ, கண்டனம் தெரிவித்ததோ, எதை இனிமேல் செய்யமாட்டோம் என்று தண்டனிட்டு விழுந்தார்களோ அதையே மீண்டும் செய்துவிட்டு, அது தெரியாமல் இருக்க மொத்தப் பட்டியலை வெளியிடாமல் தனித்தனியாகப் பட்டியல் போடப்பட்டுள்ளது.
சமூகத்தின் அடிநிலையிலிருந்து, மெல்ல மெல்ல வாய்ப்புகளைப் பிடித்து, படித்து எழும் தாழ்த்தப்பட்டோரை மீண்டும் மீண்டும் சட்டத்திற்குப் புறம்பாக அரசின் அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு அழுத்தும், புறக்கணிக்கும், கொடுமை செய்யும், தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக முறைகேடு செய்யும், அவர்களுக்கான வாய்ப்பை அடித்துப் பறிக்கும் அடாவடிப் பேர்வழிகள் யார் என்பதை அரசு அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டாமா?
இதற்குக் காரணமானவர்கள் மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படவேண்டாமா? இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் இப்படித்தான் நிரப்பப் பட்டிருக்கின்றன. இதில் பொதுப்போட்டியில் இடம்பெற வேண்டியவர்கள் தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்குக் கடத்தப்பட்டுள்ளனர்.
இது என்னங்க அநியாயமா இருக்கு?
இது மட்டுமில்ல... இன்னும் இருக்கு. 01.10.2012இல் நீதியரசர் நாகமுத்து வழங்கிய தீர்ப்பில், ஆசிரியர் தேர்வு வாரியம் இட ஒதுக்கீட்டை முறையாகப் புரிந்து கொள்ளாமல், பின்பற்றாமல் பட்டியல்கள் வெளியிட்டிருக்கிறது-ன்னு சொல்லியிருக்காரு, அதனால் தான் அந்தப் பட்டியல்களை ரத்துசெஞ்சு அறிவிச்சார்.
25. From the above facts, it is crystal clear that the Teachers Recruitment Board has not understood the method to be followed while making selection as against Open Quota, Vertical reservations for Backward Classes, Most Backward Classes, Scheduled Castes, Scheduled Tribes and the Horizontal reservations as laid down in the judgments cited herein before.(தீர்ப்பின் ஒரு பகுதி)
ஆனால், இதே மாதிரி தவறான பட்டியல் தானே   TET  தேர்வு முடிவுன்னு சொல்லி 24.08.2012இல் வெளியிடப்பட்டது. அதாவது அதிக மதிப்பெண் எடுத்த இடஒதுக்கீட்டுப் பிரிவினரை BC, SC, ST-ன்னு குறிப்பிட்டு, முன்னேறிய ஜாதியினரை மட்டும்  GT- General Turn ன்னு போட்டது.
அப்படின்னா, அந்த பட்டியலுக்கும் இந்தத் தீர்ப்பு பொருந்தும்ல... PGTRB  போட்டித் தேர்வு;  TET தகுதித் தேர்வுன்னாலும், பொதுப்போட்டி -இடஒதுக்கீட்டுப் பிரிவுன்னு செஞ்ச இந்த மோசடி ஒண்ணு தானே
ஓஹோ... அப்படின்னா அந்த 24.08.2012இல் வெளியிடப்பட்ட பட்டியலையும் சேர்த்துத்தான் பணி நியமனம் போட்டாங்களா?
ஆமா.... இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களோட முதல் பட்டியலும், இரண்டாம் பட்டியலும் சேர்த்துத்தானே 19000 பேருக்கு வேலை போட்டாங்க. அதிலயும் ஏகப்பட்ட இட ஒதுக்கீட்டு முறைகேடுகள்
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமன முறைகேடுகளின் விவரம் நாளைய விடுதலையில்!


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Monday, April 1, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு - பணிநியமன இட ஒதுக்கீட்டு மோசடி - (4)


தினுசு தினுசா மோசடி! உட்கார்ந்து யோசிப்பாங்களோ?
ஆசிரியர் தகுதித் தேர்வு - பணிநியமன இட ஒதுக்கீட்டு மோசடி
TET தேர்வு இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் என இரு தரப்பினருக்கு நடத்தப்பட்டது. அதாவது தாள் ஒன்று (Paper-I) இடைநிலை ஆசிரியர்களுக்கானது. தாள் இரண்டு என்பது பட்டதாரி ஆசிரியர்களுக்கானது.
12.7.2012இ-ல் தான் ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ்நாட்டில் நடத்தப்பெற்றது. இதில் தேர்வெழுதி யவர்களிலிருந்து 60%-க்கு மேல், அதாவது 90 மதிப் பெண்களுக்கு மேல் (மொத்தம் 150 மதிப்பெண்கள்) எடுத்து தேர்ச்சி அடைந்தவர்களின் பட்டியல் 24.08.2012 அன்று வெளியிடப்பட்டது. (http://trb.tn.nic.in/TET2012/24082012/status.asp)
அதில், தாள் ஒன்று எனப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வில் வெற்றிபெற்றவர்கள் -  1,735 பேர் (மொத்தம் தேர்வு எழுதியவர்கள்: 2,88,588)
GT - 67+ 2 (Telugu) + 1 (Malayalam)
BC - 1023+ 2 (Telugu)
BCM - 41 (பிற்படுத்தப்பட்டோர் - முஸ்லிம்)
MBC - 465+1 (Telugu)
SC -115 
SCA -17 (தாழ்த்தப்பட்டோர் - அருந்ததியர்)
ST -1
தாள் இரண்டு எனப்படும் பட்டதாரி ஆசிரியர் களுக்கான தேர்வில் வெற்றிபெற்றவர்கள் - 713 பேர் (மொத்தம் தேர்வு எழுதியவர்கள்: 3,88,175 பேர் )
Maths and Science category: (283) 
GT -8 
BC -114 
BCM -3 
MBC -128 
SC -25 
SCA -3 
ST -2 
Social Science Category: (430) 
GT -13+ 2 (Malayalam)
BC -227+ 2 (Malayalam)
BCM -8 
MBC -138 
SC -37 
SCA -2 
ST -1
இப்படி வெளியிடப்பட்ட பட்டி யலைத் தான் அவர்கள் ஜாதி வாரியான பட்டியல் என்று சொல்லி ஏமாற்றினார்கள்.
இதில் ஏமாற்ற என்ன இருக் கிறது? அது தான் எல்லா பிரி வினர் பற்றியும் தனித்தனியாக கொடுத்திருக்கிறார் களே, சரியாகத் தானே வகுப்புவாரி பின்பற்றப்பட்டி ருக்கிறது? என்று நாமெல்லாம் ஏமாற வேண்டு மென்பது தான் அவர்களின் நோக்கம்.
எப்படி ஏமாற்றப்பட்டோம்?
1. 60% மதிப்பெண் தான் அளவுகோல் என்ற பொதுப் போட்டிக்கான முடிவுகள் மட்டும் தான் இவை. முறையாக வழங்கப்படவேண்டிய (NCTE விதிப்படி) சமூகநீதிப்படியான தளர்த்தப்பட்ட தகுதி அளவுகோல் இல்லாமல் வெளிவந்த பட்டியலே இது!
2. GT - என்று General Turn என்ற பொருளில் இதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட் டோர் அனைவருமே முற்றிலும் பொதுப் போட்டிக்கான தகுதி அடிப்படையிலேயே (60% பெறவேண்டும் என்ற பொதுவான அளவுகோலின் அடிப்படையிலேயே) தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றால் அனைவருமே pen Competition பிரிவில் வந்தவர்கள் தானே! அதாவது, அனைவருமே அவர்கள் குறிப்பிட்டது போல, General Turn தானே!
3. பிறகென்ன BC, MBC, SC, ST என்றெல்லாம் போட்டுவிட்டு தனியே GT என்று பார்த்தால் GT என்று குறிப்பிட்டுள்ளோர் அனைவருமே இட ஒதுக்கீடு இல்லாத முற்பட்ட வகுப்பினர். அதாவது Forward Caste-அய் சேர்ந்தவர்கள்.
4. Open Competition (OC) என்பதை Other Castes (OC) என்று அரசியல் சட்டத்திற்கு விரோதமாகப் பயன்படுத்தக்கூடாது என்று எத்தனையோ தீர்ப்புகளில் நீதிமன்றங்கள் தெரிவித்துவிட்டபின்னும் (ஆசிரியர் பணி நியமனத்திலேயே அப்படியொரு தீர்ப்பு இருக்கிறது. அதைப் பிறகு பார்ப்போம்) General Turn (பொது வாய்ப்பு) என்று போட்டுவிட்டு அதில் முற்பட்ட வகுப் பினரை (FC) மட்டும் கொடுத்திருப்பதை அயோக்கியத் தனம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்?
மேலோட்டமாகப் பார்க்கும் போது அனைத்து இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள் ளது போன்ற தோற்றத்தை உருவாக்கத் தான் இந்த மோசடி பட்டியல்.
இந்தப் பட்டியலைப் பார்த்தாலே புரியும்.
எடுத்துக்காட்டாக, இடைநிலை ஆசிரியர்களுக்கான (தாள் -1) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளhttp://trb.tn.nic.in/TET2012/24082012/P1RESULT.pdf
உள்ள பட்டியலைப் பாருங்கள். (கீழே கொடுக்கப்பட்டுள்ளது)
122 மதிப்பெண்கள் எடுத்து முதலாமவராக வந்திருப் பவரை BC என்றும், 116 மதிப்பெண்கள் எடுத்து 4-ஆம் இடத்தில் உள்ளவரையும், 111 மதிப்பெண்கள் எடுத்து 17-ஆம் இடத்தில் உள்ளவரையும் GT என்று குறிப்பிட் டுள்ளதை மோசடி என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது?
தாள் இரண்டு எனப்படும் பட்டதாரி ஆசிரியர் களுக்கான தேர்வில் 142 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்திருப்பவர் BC என்றும், 107 எடுத்து 29-ஆம் இடம் பிடித்திருப்பவர் GT என்றும் பட்டியலில் உள்ளது.
இப்படித்தான் இந்தப் பட்டியல்கள் முழுக்கவும் இருக்கிறது.
BC, MBC, SC, ST என்று அனைவரையும் குறிப்பிட்டுக் காட்டியபிறகு GT  என்பது யார்? உயர்ஜாதியினரைத் தவிர வேறு யாராக இருக்கமுடியும்?
பிறகு இதையே தனித்தனியாக பிரித்துப் போட்டு Communal list என்று ஒரு பட்டியல் வேறு. அதுவும் நாம் ஏமாறுவதற்கு!
முற்றிலும் தகுதி அடிப்படையில் தான் தேர்வு என்றால் communal wise list வெளியிடவேண்டிய அவசியமே இல்லையே! இதே போன்ற மோசடியைத் தான் இவர்கள் முது நிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் அரங்கேற்றி னார்கள். அந்த பட்டியலை உயர்நீதிமன்றம் ரத்துசெய்து, கண்டனம் தெரிவித்து தீர்ப்பு தந்தது அக்டோபர் 01, 2012-ல்! (அந்த விவரம் பின்னர் வெளிவரும்) ஆனால், அதே நடைமுறையைத் தான் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் விசயத்தில் பின்பற்றியது TNTRB.
பொதுப் போட்டி என்பதில் அனைத்து பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் இடம் உண்டு. தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர், முன்னேறிய வகுப்பினர் என் றெல்லாம் பிரிவு காட்டாமல், முற்றிலும் மதிப்பெண்கள் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டு, பொதுப் போட்டிக்கான இடங்கள் நிரப்பப்பட வேண்டும். முன்பெல்லாம், பொதுப் போட்டி என்ற இடத்தில் முன்னேறிய வகுப்பை மட்டும் நிரப்பி, இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளுக்கு அவர்களது இட ஒதுக்கீட்டு அளவுக்கேற்ப இடங்களை நிரப்பி மோசடி செய்யப்படும். எடுத்துக்காட்டாக, 69% இட ஒதுக்கீடு என்றால் அதில் மட்டும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரை அடக்கிவிட்டு, 31% பொதுப்போட்டி என்பதை முற்பட்ட வகுப்பினருக்கு மட்டும் முற்றிலும் திறந்துவிட்டுவிடுவது. இதன் மூலம் பொதுப் போட்டியான 31% -அய் உயர் ஜாதியினருக்கான இட ஒதுக்கீட்டைப் போல நோகாமல் திருடிக் கொள்வார்கள். அது வேலை வாய்ப்பில்!
ஆனால், இங்கே கல்வி இட ஒதுக்கீட்டில்  பொதுப் போட்டி முடிவை மட்டும் அறிவித்துவிட்டு, அதையே இட ஒதுக்கீட்டுப் பட்டியல் போல காட்டுவது புதுவகையான மோசடி.
வடிவேலு சொல்ற மாதிரி, தினுசு தினுசா கண்டுபிடிக்கிறாங்களே! உட்கார்ந்து யோசிப்பாங்களோ?
கிட்டத்தட்ட 6.5 லட்சம் பேர் எழுதிய தேர்வில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 2,448 பேர் மட்டுமே என்றது 2012 ஆகஸ்ட் 24 ஆம் தேதி வெளிவந்த அந்த தேர்வு முடிவு!
காரணம் என்ன சொல்லப்பட்டதென்றால்...
150 கேள்விகளை 1:30 மணி நேரத்திற்குள் (90 நிமிடங்களுக்குள்) முடிக்க வேண்டும் என்பதால் தான் தேர்வு எழுதியவர்களில் 0.5% (அரை சதவிகிதம்) கூடத் தேர்ச்சி அடையவில்லை. அரசுப் பள்ளியிலேயே மொத்த காலிப் பணியிடம் 30 ஆயிரத்துக்கும் மேல் இருக்கிறது. எனவே மறு தகுதித் தேர்வு ஒன்று நடத்த இருக்கிறோம். முதல் தேர்வில் வெற்றி பெறாதவர்கள் மறு தகுதித் தேர்வு எழுதலாம். இதில் 1.30 மணி நேரங்கள் என்பதற்குப் பதிலாக, 3 மணிநேரங்கள்  தருகிறோம். ஆனால் அதே 60% மதிப்பெண்கள் எடுத்தால் தான் தேர்ச்சி. நாங்க தரத்தில யெல்லாம் சமாதானம் செஞ்சுக்க முடியாது என்றார்கள்.
மேலோட்டமாகப் பார்த்தால், ஏதோ பாவம் பொழைச்சுப் போகுது என்று நேரத்தையெல்லாம் கூட்டி, கோடிக் கணக்கில் செலவு செய்து அடுத்த தேர்வையும் நடத்துவது போல் தோன்றும். ஆனால், NCTE  வழிகாட்டுதல் படி, வகுப்புவாரியான தனித் தனியான தகுதி அளவுகோல்கள் நிர்ணயிக்கப்பட் டிருந்தால் தேர்ச்சி பெற்றோரின் அளவு பல மடங்கு ஏறியிருக்கும்.
ஆனால், அதைச் செய்யாமல், மறுதகுதித் தேர்வு அறிவித்தது யாருக்காக? அதுவும் உயர்ஜாதியினருக்காக மட்டுமே!
எப்படி என்றால், NCTE விதிப்படி தகுதி மதிப் பெண்ணைத் தளர்த்தி அறிவிக்க வேண்டியது, அறிவிக்க முடிந்தது - இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மட்டுமே! எக்காரணம் கொண்டும், எச்சூழலிலும் பொதுப் பிரிவினருக்கு தகுதி மதிப்பெண்ணைத் தளர்த்த முடியாது. அதாவது 24.08.2012-இல் வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்குரிய 55% அல்லது 50% என்று வழங்கியிருந்தால், எந்த உயர் ஜாதியினரும் அதில் இடம்பெற முடியாது. அதனால், எண்ணற்ற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டோர் வாய்ப்புப் பெற்றிருப்பார்கள். ஆனால் அது உயர்ஜாதியினருக்குப் பயன்படுமா?
கருணையுள்ளத்தோடு, தாயுள்ளத்தோடு மறு தேர்வு என்று நடத்தினால் தான் உயர்ஜாதியினருக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு உரிய தனித்த தகுதி மதிப்பெண் வழங்கி யிருந்தாலே முடிந்திருக்கக் கூடிய விசயத்தை, கோடிக் கணக்கான ரூபாய் செலவழித்து மறுதகுதித் தேர்வு நடத்தி செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்று யோசித்தாலே அது உயர்ஜாதியினருக்கு மட்டுமே என்பது புலப்படும்.
இந்த மறுதகுதித் தேர்வில் மற்றுமொரு மோசடி என்னவென்றால், முதல் முறை தேர்வு எழுதியவர்கள், இம்முறை எழுதக்கூடாது என்று சொன்னது. அப்படியொரு விதி NCTE-ஆல் வகுக்கப்படவில்லை. ஒரே ஆண்டில் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வுகள் நடத்தப்படலாம். அதில் வெற்றிபெற்றோர் கூட மீண்டும் தேர்வு எழுதி, தங்களது மதிப் பெண்ணைக் கூட்டிக் கொள்ளலாம் என்பது தான் விதி.
60%-க்கும் மேல் எடுக்கும் மதிப்பெண்கள் இடை நிலை ஆசிரியர்களுக்கு மதிப்பெண்ணைக் கூட்டிக் கொள்வதில் பயனில்லையே தவிர, பட்டதாரி ஆசிரி யர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் பெற வாய்ப்புக் கிடைக்கும். பயன் இருக்கிறதோ இல்லையோ, அப்படி எழுதும் வாய்ப்பு NCTE-ஆல் வழங்கப்பட்டிருந்தும், தடுக்கப்பட்டிருக்கிறது) ஆனால், தமிழ்நாட்டில் நடைபெற்ற மறுதகுதித் தேர்வில் அத்தகைய வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஏனெனில், இதற்கு போட்டித் தேர்வு போன்ற தோற்றத்தைத் தருவதற்குத் தான்.
அப்படி நடத்தப்பட்ட மறுதகுதித் தேர்வுக்கு 2.11.2012இ-ல் வெளியிடப்பட்ட முடிவுகளையும் வைத்துக் கொண்டு வேலை வழங்கும் பணியை நடத்தத் தொடங்கியது
TRB. கொஞ்சம் நில் லுங்க.... பணி நிய மனத்தைப் பற்றி அப்புறம் பேசுவோம். முதல்ல மறுதகுதித் தேர்வு முடிவு என் னாச்சுன்னு சொல் லுங்க. முதல் தேர்வு முடிவில, மோசடியா உயர்ஜாதியினரை மட்டும் GT ன்னு போட்டிருந்தாலும்,  எவ்வளவு பேர் பாஸ்? BC, BCM, MBC, SC,SCA,ST எவ்வளவுன்னு ஒரு கணக்கு சொன்னாங்களே, யார் யார் பாஸ் பண்ணியிருக்காங்கன்னு ஒரு பட்டியல் வெளி யிட்டாங்களே, அது மாதிரி இதுக்கும் வெளியிட்டி ருப்பாங்களே, அது பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க.... என்ற உங்கள் கேள்வி புரிகிறது.
"ஆனால், அப்படி ஒரு பட்டியலே வெளியிடப் படவில்லை."
"என்ன? தேர்வு முடிவே வெளியிடப்படவில்லையா?"
"வெளியிடப்பட்டது. ஆனால், தனித்தனியாக ஒவ்வொருவரும் தனித்தனியாக தெரிந்து கொள்ளும் விதத்தில் வெளியிடப்பட்டது. மொத்தமாக வெளியிட்டால் தான், ஏன் GT போட்டீங்க... யாருக்கு GT போட்டிங்க... யார் யாரு எத்தனை மார்க்... அப் படின்னு நோண்டி நொங்கெடுக்கிறோம்ல... அதனால தான் பட்டியலை வெளியிடாம, வெவரமா தனித் தனியா பார்த்துக்கிற மாதிரி போட்டது.
அடக் கொடுமையே? இப்படியெல்லாமா செய்யமுடியும்?
இதைவிடவும் மோசடி செய்ய முடியும்ங்கிறதைத் தான் இந்த தகுதித் தேர்வும், பணி நியமன நடவடிக் கைகளும் நமக்கு எடுத்துக் காட்டுது. அதைத் தான் நாமளும் விரிவா எடுத்துக்காட்டிக்கிட்டு இருக்கோம்.
இப்போ சும்மா சாம்பிளுக்கு இன்னொன்னை எடுத்து விடுறேன். 24.08.2012-ல முதல் தகுதித் தேர்வு முடிவு வந்தது. அடுத்த தேர்வு 14.10.2012 அன்று நடக்கும்னு அறிவிக்கப்பட்டது. வேலை போட்டப்போ இது இரண்டையும் சேர்த்து தான் அறிவிப்பு வந்தது. ஆனால் அக்டோபர் 1, 2012 அன்றைக்கு ஆசிரியர் தேர்வு ஆணையத்துக்கு எதிரா வந்த தீர்ப்பை மதிச்சிருந்தா, முதலில் வெளியிடப்பட்ட பட்டியலே திரும்ப வாங்கப்பட்டு, மாற்றப்பட்டிருக்கணும். ஆனால் அதை வச்சே வேலையும் கொடுப்போம். மறு தகுதித் தேர்வுல நீங்க கண்டுபிடிக்க முடியாதபடி ரிசல்ட் போடு வோம். அப்படின்னு நீதிமன்றத் தீர்ப்பையே அவ மதிச்சு நடந்துக்க முடியும்னு காட்டியிருக்காங்க...
அது என்ன தீர்ப்பு?
அது தான் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில நடந்த இட ஒதுக்கீட்டு மோசடிக்கு எதிரான சாட்டையடித் தீர்ப்பு!
அரசியல் சட்டம், சமூகநீதி, நீதிமன்ற ஆணை, கண்டிப்பு எதனையும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து செய்யப்பட்ட அடுக்கடுக்கான சமூக நீதி மோசடி - நாளைய விடுதலையில்!


ஆசிரியர் தகுதித் தேர்வு -ஆசிரியர் பணி நியமனம் இவை இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
இரண்டுலயும் இட ஒதுக்கீடு, இட ஒதுக்கீடுன்னு மாறி மாறி சொல்றீங்களே? ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு என்று சொல்வது கல்வியில் இடஒதுக்கீடு! (அதாவது தனித்தனியான தகுதி மதிப்பெண்கள் மூலம் வழங்கப்படுவது. பொதுப் பிரிவினருக்கு 60% என்றால், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 55% அல்லது 50%, 40% என்று முடிவு செய்யப்படவேண்டியது.) தேர்வு முடிவுகளில் ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரி தேர்ச்சி விகிதம் வைப்பது சரியா? என்றால், சரியே, ஒரே சூழலில் கல்வி கற்காத / கற்க முடியாத பலருக்கும் பொதுவான தேர்வு என்று வைக்கும் தகுதித் தேர்வு, முடிவுகளில் இப்படி தளர்வுகள் வழங்கப்படுவது இயற்கையானதே. சரியானதே. இதைத் தான் NET  SLET தேர்வுகளிலும் பின்பற்றுகிறார்கள். இப்படிப் பின்பற்றப்படவேண்டும் என்று தான்  வழிகாட்டலிலும் இருக்கிறது.
ஆசிரியர் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு என்பது வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு! (இதில் வகுப்பு வாரியான காலிப்பணியிட விவரங்களை வெளியிட்டு, அதற்கேற்ப பணிநியமனம் செய்யப்படவேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இதில் பொதுப் போட்டி என்பது 31%, இட ஒதுக்கீடு 69%)
இவை இரண்டுமே அரசியல் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டவை.


சுருக்கமா, எங்களுக்கு என்னென்ன பிரச்சினைன்னு சொல்லுங்கள்!
1. ஆசிரியர் தகுதித் தேர்வில் சட்டப்படி நிர்ணயிக்கப்படவேண்டிய இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்குரிய தனித்த தகுதி அளவுகோல் நிர்ணயிக்கப்படாமல் அவர்களது வெற்றிவாய்ப்பு தடுக்கப்பட்டிருக்கிறது
2. வெளியிடப்பட்ட தகுதித் தேர்வு முடிவுகளில் உயர்ஜாதியினரை மட்டும் G.T. (பொதுப்பிரிவு) என்று குறிப்பிட்டு மோசடி செய்யப்பட்டிருக்கிறது.
3. வேலை வாய்ப்பிற்கான வகுப்புவாரியான காலிப் பணியிட விவரங்களைக் கொண்ட அறிவிக்கை வெளியிடாமலே 19000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
4. தகுதித் தேர்வு முடிவிலிருந்து கலந்தாய்வுப் பட்டியல் தயாரிக்கக் கூடாது என்பதை மறைத்து, தகுதித் தேர்வையே போட்டித் தேர்வு போலக் காட்டி பட்டியல் தயாரித்து, வேலை வழங்கியது.
5. அப்படி தயாரிக்கப்பட்ட வேலை வாய்ப்புப் பட்டியலிலும் உயர்ஜாதியினரை மட்டும் G.T. என்று குறிப்பிட்டு, பொதுப் பிரிவில் வந்திருக்க வேண்டிய அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களெல்லாம் இட ஒதுக்கீட்டுப் பிரிவுக்குத் தள்ளிவிடப்பட்டுள்ளனர்.
6. தேர்வு முடிவை வெளிப்படையாக அறிவிக்காமல், பணிநியமனம் குறித்த வகுப்புவாரியான விவரங்களை வெளியிடாமல் மறைத்துள்ளனர்.
7 .பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவில் மதிப்பெண்ணே போடாமல் தகுதிப் பட்டியல் தயாரிக்கப் பட்டிருக்கிறது. அதிலும் இதே உயர்ஜாதியினரை மட்டும் G.T. என்று குறிப்பிட்டு மோசடி செய்யப்பட்டிருக்கிறது. இப்படி தயாரிக்கப்பட்டிருந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் வேலைவாய்ப்பு முடிவை உயர்நீதிமன்றம் ரத்து செய்யச் சொன்ன பின்பும், அதே போன்ற நடைமுறை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பின்பற்றப்பட்டிருக்கிறது.
8. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களுக்கு உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பில் உள்ளபடி முடிவு செய்யாமல், உயர் மதிப்பெண்கள் எடுத்த தாழ்த்தப்பட்ட பிரிவினரை G.T. பட்டியலுக்குள் கொண்டுவராமல், SC என்று இட ஒதுக்கீட்டுப் பிரிவுக்குள் அடக்கப்பட்டிருக்கிறது.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...