Friday, December 7, 2012

கல்வியும் கடவுளும்


மாணவச் செல்வங்களும், மழலைப் பிஞ்சுகளும் ஒன்றை உள்ளத்தில் கொள்ள வேண்டும். உண்மை என்பது எது? உறுதி செய்யப்படுவது மட்டுமே! எவை உறுதி செய்யப்படவில்லையோ அவை உண்மையல்ல. அவை வெறும் நம்பிக்கை. நம்பிக்கையென்பவை காரணகாரியத்துடன் இல்லாமல் இருப்பின் அதற்குப் பெயர் மூடநம்பிக்கை!
எந்தவொரு செய்தி பலவிதமாகச் சொல்லப்படுகிறதோ அது உண்மையல்ல. இதுவே நீங்கள் உள்ளத்தில் ஆழமாகப் பதியச் செய்யவேண்டிய கருத்து. உண்மையென்றால் அது ஒரேமாதிரி சொல்லப்படும். இந்த அளவுகோலைக் கடவுளுக்குப் பொருத்திப் பார்த்தால் அது உண்மையா, கற்பனையா என்பது உறுதியாகும்.
கடவுள் எது என்றால், ஒருவர் சொல்கிறார் அன்பே கடவுள். இன்னொருவர் கருணையே கடவுள். இன்னொருவர் அறிவே கடவுள். காற்று கடவுள், நீர் கடவுள், நிலம் கடவுள், நெருப்புக் கடவுள். இப்படிச் சொல்பவர் சிலர். நான்கு தலை, அய்ந்து தலை, ஆறு தலை கடவுள்களுக்கு உண்டு. அது மனிதனைப்போல என்பவர்கள் சிலர். சிலர் கடவுளுக்கு உருவம் இல்லை. உருவம் இல்லையென்றால் ஆண் கடவுள் பெண் கடவுள் என்பது பொய்.
ஆக, உருவம் உள்ள கடவுளை வணங்குகிறவர்களைப் பார்த்து உருவமற்ற கடவுளை வணங்குகிறவர், உங்கள் கடவுள் இல்லை என்கிறார். எனவே, கடவுளை நம்புகிறவனே இன்னொருவர் கடவுளை இல்லையென்கிறான்.
இப்படி கடவுள் என்பது பலவிதமாகச் சொல்லப்படுவதிலிருந்தே அது உண்மையல்ல என்பது உறுதியாகிறது. மனிதன் தன் விருப்பத்திற்கும், எண்ணத்திற்கும், சூழலுக்கும் ஏற்பவே கடவுளை உருவாக்குகிறான். எனவே, கடவுள் என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்டதேயன்றி அப்படியெதுவும் இல்லை.
மீனவர்கள் கடலைக் கடவுள் என்கிறார்கள். உழவர்கள் சூரியனைக் கடவுள் என்கிறார்கள். வீரர்கள் வீரத்தைக் கடவுள் என்கிறார்கள்; செல்வர்கள் பணத்தைக் கடவுள் என்கிறார்கள்; தொழிலாளிகள் தனக்குப் பயன்படும் கருவிகளைக் கடவுள் என்கிறார்கள்; அதைப்போல் படிப்பாளிகள் கல்வியைக் கடவுள் என்கிறார்கள்.
ஆக, தனக்கு அடிப்படையானதை மனிதன் மதிக்கிறான். அதன் உச்சமாக அதை வழிபடுகிறான். அது கடவுளாக்கப்படுகிறது. இவையே உண்மை! இந்த அடிப்படை உண்மையை பிஞ்சுகள் நெஞ்சில் பதிக்க வேண்டும்.
இது ஆயுத பூசை, சரஸ்வதி பூசை நேரம். தொழிற் கூடங்களிலும், கல்விக் கூடங்களிலும் படையல் போடுவார்கள். உங்களையும் கூப்பிடுவார்கள்; கும்பிடச் சொல்வார்கள். ஆனால்,இவை கடவுள்களா? சிந்திக்க வேண்டும். நமக்குப் பயன்படுபவை அவ்வளவே. நாம் அவற்றை வணங்குகிறோம் என்பது அக்கருவிகளுக்கோ அல்லது அந்த புத்தகங்களுக்கோ தெரியுமா? தெரியாது அல்லவா? அவை வெறும் அச்சிட்ட தாள்கள், வார்த்த, வடித்த, உருவாக்கிய கருவிகள் அவ்வளவே! எனவே அவற்றை வணங்குதல், அவற்றிற்கு பூசை, படையல், வழிபாடு என்பவையெல்லாம் அறிவுக்கு உகந்த செயலா? என்பதை பிள்ளைகள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
நம் முன்னோர்கள் படையல் போட்டார்கள். நாமும் படையல் போடவேண்டும் என்று எண்ணுவது தவறு. நம் முன்னோர்கள் செய்ததையெல்லாம் நாம் செய்வதில்லை. நம் முன்னோர்கள் சிண்டு வைத்திருந்தார்கள், கோவணம் கட்டி நின்றார்கள். நாமும் அப்படி செய்கிறோமா?
நம் முன்னோர்கள் கட்டை வண்டியில் சென்றார்கள். நாம் செல்வோமா? நம் முன்னோ ருக்கு கம்ப்யூட்டர் தெரியுமா? வானொலி, தொலைக்காட்சி, தொலைப்பேசி தெரியுமா?
அவர்கள் காலத்தில் அவர்கள் சிந்தனைக்கு அவர்கள் செய்தார்கள். நாம் நம் சிந்தனைக்கும் அறிவு வளர்ச்சிக்கும் ஏற்ப நாம் செய்ய வேண்டும்.
அறிவுக்கு உகந்ததை ஏற்று ஒவ்வாததை உதறித்தள்ளி வாழ்வதே அறிவுள்ள, கற்ற, தெளிவுள்ள மனிதர்க்கு அழகு.
கல்விக்கு கடவுள் சரஸ்வதி என்றால் நம் தாத்தாவிற்கும், கொள்ளுத் தாத்தாவிற்கும் ஏன் கல்வியை அது கொடுக்கவில்லை. ஆரிய பார்ப்பனர்களுக்கு மட்டும் ஏன் கொடுத்தது? கடவுள் என்றால் அப்படிச் செய்யுமா? சிந்திக்க வேண்டும்.
பெரியார் போராடித்தான் நமக்கு கல்வி கிடைத்தது. எனவே, கடவுளை மறக்க வேண்டும்; மனிதர்களை நினைக்க வேண்டும்; பெரியாரைப் பின்பற்ற வேண்டும்!
- சிகரம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...