Thursday, June 28, 2012

பெண்கள் விடுதலை



இராஜன்: ஏண்டா, டேய்! இராமா! பெண்கள் விடுதலை, பெண்கள் விடுதலை என்று பேசுகிறார்களே, அதென்ன விடுதலை? எனக்கு ஒன்றும் புரியவில்லையே?
இராமன்: உனக்கெப்படியப்பா புரியும்? உனக்கு கால் டஜன் பெண் டாட்டிகள் இருக்கிறார்கள்; அரை டஜன் வைப்பாட்டிகள் இருக்கிறார்கள்; அதோடு நிறையப் பணமும் இருக்கிறதே?
இராஜன்: நான் சொல்லுவது உனக்குக் கேலியாக இருக்கிறது. இந்தப் பெண்களிடமிருந்து எனக்கு (ஆண் களுக்கு) விடுதலை கிடைப்பதுதான் பெரிய கஷ்டமாயிருக்கிறது? ஒருத்தி விட்டால் மற்றொருத்தி இழுக்கிறாள். இவர்களைவிட்டு நான் எப்படி விடுதலை அடைகிறது?
இராமன்: சரிதான்; இப்போது புரிந்தது. நீ அந்தப் பெண்களிடம் கஷ்டப்படுவதினால் உனக்குத்தான் விடுதலை வேண்டும் என்கிறாய். உனக்கு 9 பெண்கள் எதற்கு? ஒரு பெண் இருந்தால் போதாதோ? ஒரு பெண் 9 கணவனை மணம் செய்து கொண்டும் காதலனாக வைத்துக் கொண்டும் இருந்தால் நீ அந்த ஒன்பதில் ஒருவனாக இருக்க சம்மதிப்பாயா?
இராஜன்: ஒரு பெண்ணுக்கு 9 புருஷன் என்றால் அது என்ன மிருகமா? நாமென்ன மிருக சாதியா? நன்றாய்ச் சொல்லுகின்றாய் நாக்கு கூசாமல்!
இராமன்: பெண்கள் விடுதலை என்றால் இப்போது உனக்கு அருத்தமாச்சுதா? நீ ஒன்பது பெண்களை வைத்துக் கொண்டு அவர்களுடைய இயற்கை உணர்ச்சிக்கு உன்னை வலிய இழுக்க வேண்டிய மாதிரிக்கு அவர் களை அடைத்து வைக்கலாம்.அது மனுஷத்தன்மை என்கிறாய். ஒரு பெண் 9 கணவனை வைத்துக் கொண்டி ருந்தால் அது மிருகத்தனம் என்கிறாய், இந்தக் கொள்கை போக வேண்டு மென்பதைத் தான் பெண்கள் விடுதலை என்று சொல்லுவது. புரிந்ததா?
இராஜன்: புரிந்தது. நன்றாய்ப் புரிந்தது. நான் அவசரப்பட்டு மிருகத் தன்மை என்று சொல்லிவிட்டேன். ஒரு பெண்ணுக்கு 9 பேர் என்பது இன்றும் தாராளமாய் நடக்கின்றதே. நம்ம தேவதாசிகளைப் பாரேன். நம்ம விலைமாதர்களைப் பாரேன். 9 தானா 90ம், 900-மும்கூட இருக்கும் போலிருக் கின்றதே.
மக்கள் அங்கு போவ தில்லையா? அவர்களுக்கு மரியாதை செய்வதில்லையா? அந்தப் பெண் களுக்குச் சுதந்திரமில்லையா? தங்கள் இஷ்டம் போல் பணம் கேட்பதும் தங்கள் இஷ்டம் போல் ஒருவனை நீ வேண்டாம் வெளியில் போ என்பதும் நாம் தினமும் பார்க்கவில்லையா? ஆகவே அவர்களுக்குச் சுதந்திரமில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?
இராமன்: பொறு, பொறு அவசரப்படாதே. சுதந்திரம் இருப்பதாக நீ சொல்லும் பெண்கள் யார் என் பதைத் தெரிந்து கொண்டாயா? தேவதாசிகளுக்கும் விலைமாதர் களுக்கும் சுதந்திரம் இருப்பதாகச் சொன்னாய். நீ சொல்கிறபடி பார்த்தால் ஒரு பெண் சுதந்திரமாக இருக்க வேண் டுமானால் ஒன்று தேவதாசியாகப் போய்விட வேண்டும்.
அல்லது விலைமாதாகப் போய்விட வேண்டும். வெள்ளைத் தமிழில் சொல்ல வேண் டுமானால் தேவடியாளாக அல்லது குச்சுக்காரியாகப் போய்விட வேண்டும் என்கிறாய். ஒருவனையே கணவனாகக் கொண்டு திருமணம் செய்து வாழ்க்கை நடத்துகிற பெண்களுக்கு விடுதலை என்பது ஒரு ஆணுக்குப் பல பெண்களில் ஒருத்தியாய் இருந்து அடைபட்டுக் கிடக்க வேண்டியதுதான் கடமைபோல் இருக்கிறது.
இராஜன்: ஒரு பெண் தனிமையில் இருந்து வாழ்க்கை நடத்திக் கொள்ளட்டுமே, யார் வேண்டாம் என் கின்றார்கள்? பெண்கள் தாங் களாகத்தானே யாருக்காவது ஒருவ னுக்கு வாழ்க்கைப்பட வேண்டும் என்று துடிக்கிறார்கள். அவர்கள் பெற் றோர்களும் வயது வந்துவிட்டதே என்ன செய்வது? யார் தலையிலாவது கட்டிவிட வேண்டுமே, இல்லா விட்டால் கெட்ட பெயர் வந்து விடுமே என்று கவலைப்படுகிறார்கள். அதற்கேற்றபடியே கல்வி இல்லாமலும் தொழிலில் பழக்காமலும் வளர்க் கிறார்கள்.
அப்படிப்பட்ட பெண்ணைக் கட்டிக் கொள்ள வருபவனும் தனக்கு அடிமைத் தொழில் செய்ய ஒரு ஜீவன் வேண்டும் என்று கருதியே பெண்ணைத் தேடுகிறான். அதோடு இவள் பெறுகின்ற குழந்தைகளுக்கும் இவளுக்கும் வாழ்விற்கு வேண்டியதை எல்லாம் தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டு செய்கிறான்.
இதற்கு மேல் அடிமை புகுந்தவளுக்கு எஜமானன் வேறு என்ன செய்ய முடியும்? தான் தேடிய சொத்துக்களையும் அடிமை பெற்ற குழந்தைகளுக்கே வைத்து விட்டுப் போகிறான். இன்னும் என்ன தான் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறாய்?
இராமன்: நீ சொல்லுவதைப் பார்த்தால் பெண்களைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டாம் என்கிறாய் போல் இருக்கிறது. கல்யாணம் செய்து கொண்டால் அடிமையாகத்தான் இருக்க வேண்டும் என்கின்றாயாக்கும்?
இராஜன்: நான் அப்படிச் சொல்லவில்லை; இயற்கை அது. கொடுப்பவன் கை மேலாகவும்,  வாங்குபவன் கை கீழாகவும்தான் இருக்கும். கல்யாணம் இல்லாமல் இருந்தால் என்ன முழுகிப்போய் விடும்? மலையாளத்தில் சில இராணிகளும் ஜமீன்தாரணிகளும் சம்பளம் கொடுத்து புருஷன்மார்களை வைத்துக் கொண்டு இருக்கிறார்களே, அவர்கள் கவுரவம் குறைந்துபோய் விட்டதா? அல்லது சமுதாயத்தில் குறை கூறுகிறார்களா?
அவ்வளவு தூரம் போக உன்னால் முடியாவிட்டால் பெண்களை நன்றாய்ப் படிக்க வைத்து அல்லது ஏதாவது ஒரு தொழிலில் அமர்த்தி, 25 வருடம் வரை கல்யாணப் பேச்சு பேசாமல் 25 முதல் 30 வயதிற்குள் அந்தப் பெண்ணையே தனக்குப் பிடித்தவனை ரிஜிஸ்டர் கல்யாணம் செய்துகொள்ளும்படிச் செய். வாழ்க்கைக்கு (அன்னவஸ்திரத்துக்கு) புருஷன் கையை எதிர்பார்க்காமல் செய். அப்போது பெண் விடுதலை வேண்டி இருக்குமா அல்லது ஆண் விடுதலை வேண்டியிருக்குமா அல்லது இருவரும் தங்களை ஒருவருக்கொருவர் கட்டுப் படுத்திக் கொள்வார்களா என்று பார்!
(சித்திரபுத்திரன்  என்ற புனைபெயரில் தந்தை பெரியாரால் எழுதப்பட்டது)
குடிஅரசு 27.9.1945


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...