இந்தியா டுடே வார இதழ் பெரியாருக்குத் தடை? எனும் தலைப்பில் செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது (16.10.2013, பக்கங்கள் 8, 9).
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்ட விருத்தாசலம் திராவிடர் மாணவர் கழக மாநாட்டில் மதவெறி, ஜாதி வெறி கொண்ட ஒரு சிறுகூட்டத்தார் வன்முறையில் ஈடுபட்டதைப் பற்றிக் கூறிவிட்டு, இந்தியா டுடே தன் கருத்தை எழுதுகிறது! எப்படி தெரியுமா?
இந்த சம்பவம், தமிழகத்தில் பெரியார் கொள்கை களை இனி சுதந்திரமாகப் பிரச்சாரம் செய்ய முடியுமா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது என்று எழுதுகிறது இந்தியா டுடே!
இது இந்தியா டுடேயின் ஆசையா? அல்லது நடைமுறை உண்மையா?
(1) எதிர்ப்பு நெருப்பாற்றில் நீச்சல் போட்டுப் போட்டுத்தான், இந்த இயக்கம் மகத்தான வெற்றி களைக் குவித்திருக்கிறது.
தந்தை பெரியார் பேசிய கூட்டங்களில் எல்லாம்கூட செருப்புகள் வீசப்பட்டதுண்டு - கற்கள் வீசப்பட்ட துண்டு - முட்டையில் ஓட்டைப் போட்டு, அதில் மலத்தை வைத்து பெரியார்மீது வீசியதுண்டே! சால்வையால் அதைத் துடைத்து எறிந்துவிட்டு, தன் பிரச்சாரத்தைத் தொடர்ந்தாரே தவிர, தொடை நடுங்கி ஒதுங்கிடவில்லை.
சின்னாளப்பட்டியில் கடுமையாக கற்கள் வீசப்பட்ட நேரத்தில், தானும் முண்டாசு கட்டிக்கொண்டு, கூட்டத்தில் கலந்துகொண்டவர்களையும் முண்டாசு கட்டிக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட நிகழ்வுகள் எல்லாம் உண்டே!
இவற்றையெல்லாம் சந்தித்தே - தந்தை பெரியாரை ஒட்டுமொத்தமான சமூகமே ஏற்றிப் போற்றிடும் ஒரு நிலையைத் தன் வாழ்நாளிலேயே கண்டு கண் மூடினார்.
தேர்தல் அரசியலில் தன்னையோ, தன் இயக்கத் தையோ ஈடுபடுத்தாத தந்தை பெரியாருக்கு இந்த அமைச்சரவையே காணிக்கையாக்கப்பட்டது என்று ஒரு முதலமைச்சர் (அறிஞர் அண்ணா) சொன்னார் என்றால், அது என்ன சாதாரணமா?
இது சூத்திரர்களின் அரசு என்று சட்டப்பேரவை யில் ஒரு முதலமைச்சர் (கலைஞர்) கூறியதெல்லாம் எந்த அடித்தளத்திலிருந்து?
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு வீரமணி அவர்களை எடுத்துக்கொண்டால்கூட, இத்தகு தாக் குதல்கள் ஒன்றும் புதியன அல்ல - இதற்கு முன்புகூட நான்கு முறைகள் அவர் உயிருக்குக் குறி வைக்கப்பட்ட துண்டே! அதனால் என்ன ஓய்ந்துவிட்டாரா? பொதுத் தொண்டிலிருந்துதான் ஒதுங்கிவிட்டாரா?
உலகத்தில் எந்த நாட்டிலும் கேள்விப்படாத அள வுக்குப் பொது இடங்களில் தந்தை பெரியார் சிலைகளை எழுப்பி, கடவுள் மறுப்பு, ஆத்மா மறுப்பு வாசகங்கள் பொறிக்கப்பட்டுதானே வருகிறது - இப்பொழுதும்!
அதனை எதிர்த்து நீதிமன்றங்களுக்குச் சென்றதும் உண்டே! ஆன்மிகவாதியான ஜஸ்டிஸ் திரு.மு.மு.இஸ் மாயில் அவர்களே கூட வழக்கைத் தள்ளுபடி செய்து, பெரியார் சிலையில், பெரியார் கருத்துகளைப் பொறிக் காமல், வேறு யாருடைய கருத்துகளைப் பொறிக்க வேண்டும்? என்று மண்டையில் அடித்துத் தீர்ப்புக் கூறினாரே!
பெரியார் மறைந்த ஓராண்டு நிறைவு நாளிலே இராவண லீலா நடத்தி, ராமன், சீதை, இலட்சுமணன் உருவங்களைக் கொளுத்தியது திராவிடர் கழகம்தானே - அன்னை மணியம்மையார்தானே - வழக்குப் போட்டார் களே - வெற்றி பெற்றனரா? மாறாகக் கழகம் அல்லவா வெற்றி பெற்றது.
எதிர்ப்பைப்பற்றி, உயர்த்தி எழுதுகிறார்களே! உண்மை என்ன? திராவிடர் கழகத் தலைவர் பயணம் செய்த வாகனத்தின்மீது தடிகொண்டு தாக்கிய தடியர்களைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டவர்கள்தானே அதிகம். விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் கண்டித்து அறிக்கை வெளியிடவில்லை என்றால், அதற்குள் அரசியலும், கூட்டணியும் இரகசியமாக இருக்கிறது - அவ்வளவே!
(2) இன்னொன்றை புத்திசாலித்தனம் என்று நினைத்துக்கொண்டு எழுதி இருக்கிறது - இந்தியா டுடே. கடவுள் என்று ஒன்று இல்லை. எனவே, அதனை இழிவுப்படுத்திப் பேசவேண்டிய அவசியம் இல்லை ஆசிரியர் வீரமணிக்கு என்று சொல்லுகிறது.
கடவுள் என்ற ஒன்று இல்லை என்று இந்தியா டுடே ஒப்புக்கொண்டதே கூட, திராவிடர் கழகத்திற்கும், அதன் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கும் கிடைத்த வெற்றியே!
இன்னொன்று கடவுளை இழிவுபடுத்திப் பேசவேண் டிய அவசியம் இல்லை என்று இதோபதேசம் செய்தும் உள்ளது.
எதை - எந்தக் கடவுளை இழிவுபடுத்திப்பேசி இருக் கிறார் வீரமணி? மொட்டைத்தாதன் குட்டையில் விழுந்தான் என்ற தோரணையில் எழுதலாமா?
எதை - எந்தக் கடவுளை இழிவுபடுத்திப்பேசி இருக் கிறார் வீரமணி? மொட்டைத்தாதன் குட்டையில் விழுந்தான் என்ற தோரணையில் எழுதலாமா?
இராமன் என்றும், கிருஷ்ணன் என்றும், விநாயகன் என்றும், சிவன் என்றும், பிரம்மா என்றும், சரஸ்வதி என்றும் கடவுள்கள்பற்றிப் புராணங்களை எழுதியது திராவிடர் கழகத் தலைவரா?
இந்தப் புராணங்களில் இந்தக் கடவுள்கள் பிறப்பு எல்லாம் ஆபாசமாகத்தானே எழுதப்பட்டுள்ளது.
பார்வதியின் உடல் அழுக்கிலிருந்து உருட்டித் திரட்டியவன்தானே விநாயகன் என்று எழுதி வைத்ததும்; - அதனை இன்றுவரை நம்பி விநாயகன் ஊர்வலங்களை நடத்துவதும் - அதனை மய்யப்படுத்தி சிறுபான்மை மக்களைத் தாக்குவதும் சரியானதுதானா?
சரஸ்வதியின் தந்தையும் பிரம்மா - கணவனும் பிரம்மா என்று எழுதப்பட்டுள்ளதே - இந்தக் கேவலத்தை எப்பொழுதாவது சுட்டிக்காட்டி - நாட்டு மக்களுக்கு நல்லதைச் சொல்லியிருக்கிறதா இந்தியா டுடேக்கள்?
ஒழுக்கமாகக்கூட ஒரு கடவுளை உண்டாக்க முடிய வில்லையே - அதற்காக வெட்கப்படவேண்டாமா?
பெண்களும், சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று கீதையில் கூறப்பட்டுள்ளதே - இப்படிக் கூறுபவன் பகவான் கிருஷ்ணன் என்று கூறு வதும், அந்தக் கீதையை ஒப்பற்ற நூல் என்று புகழ்வதும் மதிமயக்கத்திலும், மூட நம்பிக்கைச் சகதியிலும் மூழ்கிக் கிடப்பவர்களுக்குச் சரியானதாகப் படலாம். காரணம், பக்தி வந்தால்தான் புத்தியைப் பயன்படுத்துவது இல்லையே!
ஆனால், சமூக அக்கறையும், ஒழுக்கத்தின்மீது உயர்நாட்டமும் - அறிவின்மீது அளப்பரிய ஆர்வமும் கொண்டவர்களுக்கு ஆபாசங்களையும், இழிவையும், அறியாமையையும் சுட்டிக்காட்டி, தேவைப்பட்டால் இடித்துக் காட்டிச் சொல்லவேண்டிய சமூக அக்கறை யும், கடமை உணர்ச்சியும் எங்களுக்கு இருக்கிறது!
அது இந்தியா டுடேயிடம் இல்லை என்றால், அய்ம்பொறிகளையும் பொத்திக்கொண்டு நாய் விற்ற காசு குரைக்காது என்ற தன்மையில் வியாபாரப் பொழைப்பை நடத்திக் கொள்ளட்டும்!
அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் மக்களை அறிவு வெளிச்சப் பாதைக்கு அழைத்து வருவதையும் ஆண்டாண்டுக் காலமாக உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்கான சமூகநீதிக்காக அயராது பாடுபடுவதை யும், பெண்ணடிமைத் தனத்தின் முதுகெலும்பை முறித்து ஆணுக்கு நிகர் பெண்கள் என்ற பாலியல் உரிமை களுக்காகக் குரல் கொடுப்பதையும், பிறவியில் பேதம் பேசும் வருணதர்மத்தையும், அதனைக் கட்டிக் காக்க உருவாக்கப்பட்ட கடவுள்கள், புராணங்கள், இதிகாசங் கள், சாஸ்திரங்களை எதிர்ப்பதையும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்குவதையும் உயிர் மூச்சாகக் கொண்டு, எந்தவித சுயநலச் சிறைகளுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல், பதவிப் பக்கம் தலைவைத்துப் படுக்காமல், சொந்த வீட்டுச் சோற்றைத் தின்றுவிட்டு, ஊருக்காக உழைக்கும் கழகத்தையும், அதன் தன்னிகரற்ற தலைவரையும் சரியாக எடை போடாமல் எழுதவேண்டாம் - இந்தியா டுடேக்கள்!
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment