Monday, February 10, 2020

ஏர் இந்தியா நட்டமா - பின்னணி என்ன?

குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பயணித்த வகையில் ஏர் இந்தியா நிறுவனத் துக்கு, மத்திய அரசிடம் இருந்து ரூ.822 கோடி வர வேண்டி யுள்ளது என ஆர்.டி.அய். மூலம் தெரியவந்துள்ளது.
மத்திய அரசின் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா சமீபகாலமாகக் கடுமையான இழப்பைச் சந்தித்து வருகிறது. அதே நேரம் இந்த இழப்பைக் காரணம் காட்டி, ஏர் இந்தியாவை ஒட்டுமொத்தமாக தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியையும் பா.ஜ.க அரசு மேற்கொண்டு வருகிறது.குறிப்பாக ஏர் இந்தியா பெரும் பொருளாதார விரயத்தில் செயல்பட்டு வருகிறது என்ற காரணம் காட்டி ஏர் இந்தியாவிடம் அரசு வசம் இருக்கும் 100 சதவீத பங்குகளையும் தனியாரிடமே கொடுத்துவிடுவது என்ற நிலைக்கு மோடி அரசாங்கம் சென்றுள்ளது.
இந்நிலையில், ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் லோகேஷ் பத்ரா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு வி.வி.அய்.பி. சிறப்பு விமானத்தில் பயணித்ததால் எவ்வளவு தொகை மத்திய அரசின் சம்பந்தப்பட்ட அமைச்சகம் தரவேண்டும் என்பதை தேதி வாரியாகக் குறிப்பிட்டு மொத்தத் தொகை உள்ளிட்ட தகவல்களை வழங்கும்படி கேள்வி எழுப்பியிருந்தார்.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட அவரது இந்தக் கேள்விக்கு பதில் அளித்த ஏர் இந்தியா, குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை ஏற்றிச் சென்ற வகையில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு, மத்திய அரசிடம் இருந்து ரூ.822 கோடி வர வேண்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வெளியான ஆர்.டி.அய். தகவலில், கடந்த ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி முதல் வி.வி.அய்.பிக்கள் விமான பயணம் மேற்கொண்ட வகையில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.822 கோடி பாக்கி தொகை மத்திய அரசின் அமைச்சகத்திடம் இருந்து வரவேண்டியுள்ளது.
இது தவிர, வெளிநாட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை ஏற்றிவந்த வகையில் 12.65 கோடி ரூபாயும், ஆட்களை வேறு இடத்திற்கு வெளியேற்றும் பணியில் ஈடுபட்ட வகையில் 9.67 கோடி ரூபாயும் நிலுவையில் உள்ளது.அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, போதுமான அளவு வி.வி.அய்.பி. விமானங்கள் இல்லாததால் அரசு அதிகாரிகள் பயணம் செய்ய விமான பயணச் சீட்டுகளை எடுத்துத் தந்த வகையில் 526.14 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. இதில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 236.16 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
ஏர் இந்தியாவிற்கு மத்திய அரசு தரவேண்டிய தொகை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசே இவ்வளவு பெரிய தொகையைத் தராமல் நிலுவையில் வைத்திருக்கும்போது ஏர் இந்தியா நிறுவனத்தால் எப்படி இலாபகரமாக செயல்படமுடியும்?
முன்னதாக, ஏர் இந்தியாவின் நட்டத்திற்கு வட்டி சுமை, குறைந்த விலையில் பயணச் சீட்டுகளைத் தரும் பிற நிறுவனங்கள், அடிக்கடி மாறும் இந்திய ரூபாய் மதிப்பு மற்றும் அதிகளவிலான செயல்பாட்டுக் கட்டணம் ஆகியவையே இந்த நட்டத்திற்குக் காரணமாகும். அதனால், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மொத்தம் ரூ.8,556.35 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது என்று போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் விளக்கம் அளித்திருந்தது. ஆனால், தற்போது வெளி வந்துள்ள ஆர்.டி.அய். தகவலின்படி போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை முற்றிலும் பொய்யானது என்றும், ஏர் இந்தியா நிறுவனத்தை திட்டமிட்டே நட்டத்தில் இயங்கவைத்து அதை விற்கும் முடிவிற்கு மோடி அரசு வந்துள்ளது என்பதும் வெளிச் சத்திற்கு வந்துள்ளது.
மத்திய பிஜேபி அரசு என்றால் கார்ப்பரேட் மற்றும் சாமியார்கள் ராஜ்ஜியம் என்ற பெயர் மக்கள் மத்தியில் நிலை பெற்று விட்டது.
அரசு நிறுவனமான ஏர் இந்தியவை நட்டக் கணக்குக் காட்டி, தனியாருக்கு விற்க வேண்டும் என்பதன் பின்னணி இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்து விட்டது. அந்த நட்டம் என்பதே அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்ட செயற்கையான  ஒன்று என்பது இப்பொழுது அம்பலமாகி விட்டதா இல்லையா?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...