Monday, January 6, 2020

ஆளுங் கட்சிக்காரர்களின் வாயை அடக்க யாரும் இல்லையா?

மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்து வருபவர் தெலங்கானாவைச் சேர்ந்த
ஏ.அய்.எம்.அய்.எம் என்ற இஸ்லாமியக் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி. ஏற்கெனவே இந்தி திணிப்பு, என்சிஆர், முத்தலாக் உள்பட பல்வேறு அறிவிப்பு களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருபவர், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராகவும் போராடி வருகிறார். சமீபத்தில் நிஜாமாபாத்தில் நடைபெற்ற அவரது கட்சிக் கூட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும், நாடு உடனடி ஆபத்தில் உள்ளது என்றும்  வலியுறுத்தி யுள்ளார்.
இந்த நிலையில், நிஜாமாபாத் ஈட்கா மைதானத்தில் நடைபெற்ற பாரதீய ஜனதா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான அரவிந்த் குமார், அய்தராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன்  குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார்.
அப்போது,  "அசாதுதீன் ஓவைசி,  ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை கிழித்து விடுவேன் என்று கூறுகிறார். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, உங்கள் சொந்த சகோதரர் (அக்பருதீன்) 50 முறை குத்தப்பட்டார். உங்களது உறவினர் முகமது பெஹல்வான்  சுட்டுக் கொல்லப்பட்டார்.  உங்கள் சகோதரர்  ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தக் காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இப்படி இருக்கும்போது நீங்கள் பாஜகவை கிழிக்க அச்சுறுத்து வீர்களா?"  என்று பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசியவர், "நான் ஒரு கிரேன் கொண்டு வருவேன், அதில் உன்னை (ஓவைசி) தலைகீழாகத் தொங்க விட்டு, தாடியை மழித்து  மொட்டையடிப்பேன்; உங்கள் தாடியைத் தூக்கி வீசமாட்டேன்; அதற்குப் பதிலாக  பதவி உயர்வு தருவேன்" என்று கூறியவர், அதை தெலங்கானா முதல்வர் கே.சி.ஆரின் (கே.சந்திர சேகரராவ்)  முகத்தில் ஒட்டி, அவரை முல்லாவாக மக்களுக்குத் தெரியும்படி செய்வேன் என்று அநாகரிகமாக பேசியுள்ளார்.
முதல்வர் கே.சி.ஆர். ஒரு முல்லாவாக மாறிவிட்டார் என்றும், "முதல்வரின் போர்வையில் ஒரு முல்லா இருந்து வருகிறார், அவரது மகன் நாத்திகர். இந்து தர்மத்தைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்?" என்று கேள்வி எழுப்பியவர்,  ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பாஜக குடியுரிமை திருத்த சட்டத்தில் இருந்து  பின்வாங்காது என்று மேலும் திமிராகப் பேசி உள்ளார்.
நான்கு பேர் நான்கு பேருந்துகளை எரித்ததால், நாங்கள் திரும்பிச் செய்துவிட மாட்டோமா என்று எச்சரிக்கை விடுத்தவர்,   எதிர்காலத்தில் இன்னும் பல கடுமையான சட்டங்கள் வரும் என்றும் எச்சரித்துள்ளார்.
பாஜக நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த அகங்கார பேச்சு, இரு மதத்தினரிடையே மோதலைத் தூண்டும் வகையிலும்,வகுப்புவாத  மோதல்களையும் ஏற்படுத்தும் நோக்கிலும் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதுபோன்ற அநாகரிக காட்டு விலங்காண்டித்தன பேச்சுகளை மத்தியில் ஆளும் கட்சியின் முக்கிய தலைவர்கள் எல்லாம் பேசினால் - எங்கே கொண்டு போய் நாட்டை நிறுத்தும்?
பிரதமர், உள்துறை அமைச்சர் என்ற நிலையில் உள்ளவர்களின் குரலிலேயே நிதானம் பின்னுக்குத் தள்ளப்படும்  பொழுது மற்றவர்களின் நிலையைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?
உ.பி.யில் காவல்துறை அதிகாரிகளே முஸ்லிம் வீடு களுக்குச் சென்று பாகிஸ்தானுக்கு நடையைக் கட்டுங்கள் என்று கூறுவதெல்லாம் சகிக்கக் கூடியவைதானா? இதன் விளைவுகள் விபரீதத்தில் கொண்டு போய் விடாதா?
ஓர் ஆளும்  கட்சி தனக்குத் தானே தீயை வைத்துக் கொள்வது போன்ற சட்ட ஒழுங்கைக் கெடச் செய்யும் விபரீத செயல் அல்லவா! இவர்களுக்கெல்லாம் நல்ல புத்தியைச் சொல்லிக் கொடுக்க அங்கு யார்தான் இருக்கிறார்கள்?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...