2018 ஆம் ஆண்டில் ஒவ்வொரு நாளிலும்
சராசரியாக வேலையில்லாத 35 பேர் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் 36 பேர்
தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி
உள்ளது, இரண்டு பிரிவிலும் சேர்ந்து 2018ஆம் ஆண்டில் 26,085 தற்கொலை
மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.
நாட்டில் வேலையின்மை பெரும் பிரச்சினையாக
உள்ளது. அத்துடன் சரியான தொழில் செய்து முன்னேறுவதற்கான வாய்ப்புகளும்
குறைந்து கொண்டே வருகின்றன. இதனால் கடன் ஏற்பட்டோ அல்லது விரக்தி அடைந்தோ
பலர் தற்கொலையை நாடுகிறார்கள். இவை அண்மைக்காலமாக மிகவும் அதிகமாகி
வருகின்றன. தேசிய குற்ற ஆவண காப்பகம் நாடு முழுவதுக் குமான தற்கொலை
தொடர்பான 2018ஆம் ஆண்டுக்கான தரவுகளை வெளியிட்டுள்ளது. 2018ஆம் ஆண்டில்
வேலை யில்லாதவர்கள் 12,936 பேர் தற்கொலை செய்திருக் கிறார்கள். சுயதொழில்
செய்பவர்கள் 13,149 பேர் தற்கொலை செய் திருக்கிறார்கள். இது
வேலையில்லாதவர்களைவிட கொஞ்சம் அதிகம் ஆகும். அதே நேரத்தில் இரு
பிரிவுகளிலும் விவசாயத் துறையில் பணிபுரிபவர்களின் தற்கொலை புள்ளிவிவரங்கள்
10,349 ஆக உள்ளது. ஒட்டு மொத்தமாக, 2018 ஆம் ஆண்டில் நாட்டில் 1,34,516
தற்கொலைகள் பதிவாகியுள்ளன.
இது 2017 உடன் ஒப்பிடும்போது 3.6 சதவீதம்
அதிகரித்துள்ளது. தற்கொலைகளின் விகித அதிகரிப்பால் 2017 அய் விட 2018 ஆம்
ஆண்டில் 0.3 சதவீதம் மரணங்கள் அதிகரித்துள்ளன என்றும் தேசிய குற்ற ஆவண
காப்பகம் கூறியுள்ளது. என்சிஆர்பி வெளியிட்ட அறிக்கையில், தற்கொலை செய்து
கொண்ட பெண்களில் 54.1 சதவீதம் பேர் இல்லத்தரசிகள் (42,391 பேரில் 22,937)
ஆவர். 2018 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டவர்களில் கிட்டத்தட்ட 17.1
சதவீதம் பேர் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை செய்து கொண்டவர்களில் 1.3 சதவீதம்
(1,707) அரசு ஊழியர்கள், தனியார் துறை நிறுவனங்களிலிருந்து
பாதிக்கப்பட்டவர்கள் 6.1 சதவீதம் (8,246). பொதுத்துறை நிறுவனங்களின்
ஊழியர்களில் தற்கொலை செய்தவர்கள் மொத்தம் 1.5 சதவீதம் (2,022) பேர்.
அதேசமயம், மாணவர்கள் மற்றும் வேலைவாய்ப்பற்ற பாதிக்கப்பட்டவர்கள் மொத்த
தற்கொலைகள் முறையே 7.6 சதவீதம் (10,159) மற்றும் 9.6 சதவீதம் (12,936)
என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறியுள்ளது. தற்கொலை செய்து கொண்டவர்களில்
9.8 சதவிகிதத்தினர் (13,149) சுயதொழில் செய்யும் பிரிவினர் என்று அது
மேலும் கூறியுள்ளது. என்.சி.ஆர்.பி.யின் கூற்றுப்படி, விவசாயத் துறையில்
ஈடுபட்டுள்ள 10,349 பேர் (5,763 விவசாயிகள் மற்றும் 4,586 விவசாயத்
தொழிலாளர்கள்) 2018 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டனர். மொத்த தற்கொலை
செய்தவர்களில் 7.7 சதவீதம் பேர் ஆவர். 2018 ஆம் ஆண்டில் 5,763 விவசாயிகளின்
தற்கொலைகளில் 5,457 ஆண்கள் மற்றும் 306 பெண்கள். 2018 ஆம் ஆண்டில்
விவசாயத் தொழிலாளர்கள் செய்த 4,586 தற்கொலைகளில் 4,071 ஆண்கள் மற்றும் 515
பெண்கள் என அறிக்கை தெரிவிக்கிறது.
ஒட்டு மொத்தமாக, மகாராட்டிராவில் 17,972
தற்கொலைகள் பதிவாகியுள்ளன, அதன்பின்னர் தமிழகத்தில் 13,896, மேற்கு
வங்கத்தில் 13,255, மத்தியப் பிரதேசத்தில் 11,775 மற்றும் கருநாடகாவில்
11,561 தற்கொலைகள் பதிவாகியுள்ளன, இந்த அய்ந்து மாநிலங்களும் சேர்ந்து
நாட்டில் பதிவான மொத்த தற்கொலைகளில் இது 50.9 சதவீதம் ஆகும். பொருளாதார
ஆலோசகர்களின் எச்சரிக்கையையும் மீறி மத்திய அரசு தான்தோன்றித்தனமாக பண
மதிப்பிழப்பைக் கொண்டு வந்தது, அந்த பாதிப்பில் இருந்து மீளும் முன்பே
ஜிஎஸ்டி அமல்படுத்தியது, அதன் பிறகு பெரும் நிறுவனங்களின் கடன் தொகையைத்
தள்ளுபடி செய்தது என்று மனம்போன போக்கில் செயல்பட்டுக் கொண்டு இருந்தனர்.
இதனால் மோடியின் தலைமையில் இரண்டாம் முறை ஆட்சி அமைந்த பிறகு ஒட்டுமொத்த
பொருளாதார நகர்வும் பின்னோக்கி வேகமாக சரியத் தொடங்கியுள்ளது. இதில் வேலை
இழப்பு அதிகம் ஏற்பட்டு தற்கொலை தொடர்கிறது, முன்னாள் பிரதமரும், பொருளாதார
நிபுணருமான மன்மோகன் சிங், ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், உலக
வர்த்தக அமைப்புகள் அனைத்தும் எச்சரிக்கை விடுத்தும் பொருளாதர முன்னேற்றம்
குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் இந்தியாவில் பொருளாதார
காரணத்தினால் ஏற்படும் தற்கொலைகள் அதிகம் நிகழ்கின்றன. இந்தியாவில்
பொருளாதாரம் தொடர்பான தற்கொலைகள் என்பது தனிப்பட்ட சில இழப்புகளால்
ஏற்படுவதுதான், ஆனால் நாடு முழுவதும் ஒட்டுமொத்த பொருளாதார தற்கொலைகள்
ஏற்படுவது சுதந்திரத்திற்குப் பிறகு இப்போதுதான் ஏற்படுகிறது.
ஆண்டுக்கு இரு கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பை வாரி வழங்குவதாக வாய்ச் சவடால் பேசுபவர்கள் இதற்கு நாணயமாகப் பதில் சொல்ல வேண்டும்.
வானொலி 'மன்கிபாத்' பேச்சுகள் எல்லாம் அசல் ஏமாற்று வேலையே! மக்கள் உரிமை என்னும் எரிமலை வெடிக்காது என்று யாரும் கனவு காண வேண்டாம்.
No comments:
Post a Comment