மோடியின் நெருங்கிய நண்பரும்,
தொழிலதிபருமான அதானி நிறுவனம், இந்தோனேசியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி
செய்ததில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அதுதொடர்பான
விசாரணையை உச்சநீதி மன்றம் முடுக்கி விட்டுள்ளது. இதன் காரணமாக அதானி
நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
இந்தியாவின் மொத்த இறக்குமதி செய்யப்படும்
நிலக்கரியில், 90 விழுக்காடு இந்தோனேசியாவிலிருந்துதான் பெறப்படுகிறது, 5
விழுக்காடு மட்டுமே ஆஸ்திரேலியாவி லிருந்து பெறப்படுகிறது.
இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியில் 70 விழுக்காடு
அதானி கம்பெனி குழுக்கள் மூலமாக நடத்தப்படுகிறது
அதானி நிறுவனமானது மோடிக்கு மிக நெருங்கிய
நண்பரான கவுதம் அதானியின் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் மோடியின்
தேர்தல் செலவையும், பயணச் செலவையும் முழுவதையுமே ஏற்றுக் கொண்ட நிறுவனம்
ஆகும். இவரது விமானத்தில் தான் தேர்தல் பிரச்சாரங்களுக்கு மோடி பயணம்
செய்வார். இதுவரை எந்த ஒரு பிரதமரும் தங்களின் பரப்புரைப் பயணங்களுக்கு
தொழிலதிபர்களின் விமானத்தைப் பயன்படுத்தியது இல்லை. இந்த அதானி
நிறுவனமே,வெளிநாடுகளில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்து நாட்டில் உள்ள
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகிறது.
அதானி குழுமம் நிலக்கரி இறக்குமதி
செய்ததில் ரூ.29 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக ஏற்கெனவே காங்கிரஸ்
குற்றம் சாட்டியது. அப்போது வங்கிகள் உதவியுடன் அதானி நிறுவனம் இந்த
மாபெரும் ஊழலை நடத்தி உள்ளதாகவும், இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின்
விலை மிகைப்படுத்தப் பட்டு இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு
வரையில் நிலக்கரி இறக்குமதி செய்ததில் ஊழல் நடைபெற்றதாகவும், இறக்குமதி
செய்த நிலக்கரியில் சுமார் 70 சதவீத நிலக்கரியை கூடுதல் மதிப்பு
அடிப்படையில் இறக்குமதி செய்துள்ளதாகவும், இதன் மூலம் ரூ.29 ஆயிரம் கோடி
முறைகேடு செய்யப்பட்டு உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த முறைகேடு தொடர்பாக வருவாய்ப்
புலனாய்வுத் துறை 2016ஆம் ஆண்டில் விசாரணை தொடங்கிய நிலையில், இதில், பாரத
ஸ்டேட் வங்கியின் சிங்கப்பூர், ஹாங்காங், துபாய் கிளைகளின் மூலமாக தங்கள்
விலையை மிகைப்படுத்தி அதானி நிறுவனம் பண மோசடி செய்துள்ளது தெரிய
வந்தது. நிதித்துறை புலனாய்வுக் கழகம் இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி
செய்யப்பட்ட ரூபாய் 30000 கோடிக்கும் அதிகமான (4.47 பில்லியன் டாலர்கள்)
நிலக்கரி சம்பந்தமான ஊழலை விசாரிக்கக் கோரப்பட்டது. இதில் மாபெரும் ஊழல்
நடைபெற்று இருப்பதை டிஆர்அய்யும் உணர்ந்தது.
பெரும் நிறுவனமான அதானி நிறுவனம்,
தங்களுக்குச் சொந்தமான இந்த பினாமி மோசடி கம்பெனிகளைப் பயன்படுத்திக்
கொண்டு, நிலக்கரியை அதிக விலைக்கு விற்பதன் மூலம், அதிக அளவிலான ஆதாயங்கள்
பெற்றதும் தெரிய வந்தது. விலையை மிகைப்படுத்தும் யுக்திகளால் மட்டுமே,
நிலக்கரியின் விலை, சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் 250 விழுக்காடுகளுக்கும்
மேலாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் கண்டறிந்தது.
டிஆர்அய் கேள்விக்கு அய்.சி.அய்.சி.அய்.
வங்கி மட்டுமே பதில் அளித்தது. அதில், மிகைப்படுத்திய எல்லா விவரங்
களையும் சமர்ப்பித்தது. நிலக்கரி விலை 250 விழுக்காடு மிகைப்படுத்தப்பட்டது
இதன் மூலம் அம்பலமானது.
அதே வேளையில், அரசு பொதுத்துறை
வங்கிகளான ஸ்டேட் பாங்க் மற்றும் பாங்க் ஆப் பரோடா வங்கிகள் பதில்
தெரிவிக்காமல் அமைதியாக காலம் கடத்தின. இதைத் தொடர்ந்து, அப்போதைய நிதிச்
செயலாளர் தகவல்களை உடனே ஒப்படைக்கும்படி வலியுறுத்தினார்.
ஆனால், அதை ஏற்க வங்கிகள் மறுத்து
விட்டன. சிங்கப்பூர் மற்றும் இதர அயல் நாடுகளின் ரகசியக்காப்புச்
சட்டங்கள் படி, தாங்கள் கேட்கும் தகவலை தர முடியாது என்று நிகராரித்து
விட்டன.அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநரும் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று
குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில், இது தொடர்பாக அதானி
குழுமம் சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின்
விசாரணையைத் தொடர்ந்து, வங்கிகளிடம் விவரம் கேட்ட டிஆர்அய்-யின்
தாக்கீதுகளை ரத்து செய்த நீதிமன்றம், அதானிக்கு ஆதரவாக தீர்ப்பு
வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி
மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி
உள்ளது. அதன்படி, மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்தி வைக்க
உத்தரவிட்டதுடன், மேலும், நிலக்கரி இறக்குமதி முறைகேட்டில் அதானி
நிறுவனத்தின் நடவடிக்கைகள் குறித்தும், மிகைப்படுத்தப்பட்ட விலை குறித்து
சம்பந்தப்பட்ட வெளிநாட்டு வங்கிகள், நிறுவனங்கள் பதில் தெரிவிக்கவும்
உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு அதானி நிறுவனத்துக்குப்
பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எத்தனைக் காலம் தான் ஏமாற்ற முடியும்?
No comments:
Post a Comment