நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேருக்கு
ஜனவரி 22ஆம் தேதி காலை 7 மணிக்கு மரண தண்டனை - டில்லி நீதிமன்றம் உத்தரவு
பிறப்பித்துள்ளது.
டில்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர்
மாதம் 16-ஆம் தேதி மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் 6 பேரால்
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு
முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 6
பேரை டில்லி காவல்துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில் ஆறு பேரும் குற்றவாளிகள்
என்று நீதிமன்றம் அறிவித்தது. ஆறு பேரில் ஒருவர் சிறார் என்பதால் அவர்
சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். மீதமுள்ள 5 பேருக்கும் மரண
தண்டனை விதிக்கப்பட்டது. 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங், டில்லி
திகார் சிறைக்குள் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. மற்ற 4 பேர்
சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு
தண்டனையை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் முறையிட்டனர். ஆனால் உச்ச
நீதிமன்றம் 4 பேரின் தூக்கு தண்டனையை உறுதிசெய்தது.
இந்நிலையில் டில்லி நீதிமன்ற கூடுதல்
அமர்வு நீதிபதி சதீஷ் குமார் அரோரா, குற்றவாளிகளான முகேஷ் (32), பவன்
குப்தா (25), வினய் சர்மா (26), அக்ஷய் குமார் சிங் (31)ஆகியோருக்கு ஜனவரி
22ஆம் தேதி காலை 7 மணிக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று
உத்தரவிட்டுள்ளார். மேலும் குற்றவாளிகள் தங்களது சட்ட தீர்வுகளை 14
நாட்களுக்குள் பயன்படுத்தலாம் என கூறி உள்ளது.
No comments:
Post a Comment