Saturday, December 7, 2019

பண்டைய நூல்கள் எவற்றிலும் 'ஹிந்து' என்ற சொல் காணப்படவில்லை

சிந்தன் கிரீஷ் மோடி
(சதுர்வேதி பத்ரிநாதினால் எழுதப்பட்டு துளசி பத்ரிநாதால் தொகுத்து 24-11-2019 அன்றைய இந்து ஆங்கில நாளிதழில்வெளியிடப்பட்ட "தர்மம்: இந்து மதமும் இந்தியாவில் உள்ள மதங்களும்' என்ற நூலின் ஆய்வுரை தமிழாக்கம் செய்யப்பட்டு இங்கே அளிக்கப்படுகிறது. )

உண்மையை அறிந்து கொள்ளும் உங்களது திறமை கருத்து தெரிவிக்கும் கட்டுரைகளையும், தொலைக் காட்சி விவாதங்களையும் சார்ந்து இருப்பதானால், இந்தியா இரண்டு முகாம்களாக பிளவு பட்டிருப்பதாக உங்களுக்குத் தோன்றக் கூடும். மதச்சார்பின்மை கோட்பாட்டின் சாவுக்கு வருந்தும் மக்கள் ஒரு புறம்; இந்து ராஷ்டிராவின் தொடக்க விழாவைக் கொண்டாடும் மக்கள் மற்றொரு பக்கம். பாபர் மசூதி இடிப்பு மற்றும் ராமஜென்ம பூமி இயக்கத்தின் வளர்ச்சி , மதங்களுக் கிடையேயான சமகால உறவுகளை குறிப்பிடத் தக்க வழிகளில் வடிவமைத்துள்ளன.  ஓர் ஹிந்துவாகவோ அல்லது முஸ்லிமாகவோ இருப்பதன் பொருள் என்ன என்ற கோட்பாட்டின் மய்யமாக எந்த வழியிலும் அயோத்தியா இருக்கவில்லை என்பது நினைவில் இருத்திக் கொள்வது முக்கியமானதாகும்.
சதுர்வேதி பத்திரிநாதின் "தர்மம்: இந்து மதமும் இந்தியாவில் உள்ள மற்ற மதங்களும்" என்ற நூல்,  இப்போது நாம் இருக்குமிடத்துக்கு நம்மை கொண்டு வந்து சேர்த்திருக்கும் தத்துவ நீரோட்டங்கள் மற்றும் கலாச்சார விவாதங்களில் ஆர்வமுள்ள வாசகர்களுக்கு சரியான காலத்தில் கிடைத்த ஒரு நிதியமாகும். "இந்திய தத்துவம் என்பது ஹிந்து தத்துவம் அல்ல. ஹிந்து மதம் என்று அழைக்கப்பட்ட ஏதோ ஒன்று இருந்து வருகிறது . . .  ஹிந்து என்பது ஒரு மதம் . . .  இந்தியாவின் நாகரிகம் உண்மையில் ஹிந்து மத நாகரிகம்தான் . . ." என்ற மாபெரும் தவறான கருத்து 16 ஆம் நூற்றாண்டு முதல் நிலவி வருகிறது.  பண்டைய நூல்கள் எவற்றிலும் ஹிந்து என்ற சொல் காணப்படவில்லை என்பதால்,  தர்மம் என்பது மதம் என்று தவறாக மொழிமாற்றம் செய்யப் பட்டது என்று அவர் வலியுறுத்திக் கூறுகிறார்.
கடந்த கால தொடர்புகள்
கி.பி. 8ஆம் நூற்றாண்டில் ஹிந்து என்ற புதிய சொல்லை அராபியர்கள் வடிவமைத்தார்கள் என்றும், இந்தியாவின் பண்டைய சிந்தனையாளர்கள் தங்களை ஹிந்துவாக அடையாளப்படுத்திக் கொள்ள வில்லை என்றும்  பத்ரிநாத் கூறுகிறார்.  ஹிந்து என்ற பெயர் அளிக்கப்பட இயன்ற ஓர் ஒருங்கிணைந்த மத நம்பிக்கை நடைமுறையைத் தேடிக் கொண்டிருந்த 16 ஆம் நூற்றாண்டு கத்தோலிக்க கிறித்தவ மதத்தினால் உருவாக்கப் பட்டதுதான் ஹிந்து மதம் என்ற சொல் என்றும் அவர் கூறுகிறார். ஆனால் அவர்கள் எதிர் கொண்ட மதங்கள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றில் நிலவும் பல்வேறுபட்ட வேறுபாடுகளை அவர்கள் எதிர் கொள்ள வேண்டியதாயிற்று. காலப் போக்கில் சொற்களின் பொருள்கள் மாறுபடக்கூடும் என்ற உண்மையையும், இன்று கோடிக்கணக்கான மக்கள் தங்களை ஹிந்து என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றனர் என்ற உண்மையையும் அவர் மறுக்கவில்லை.
பலமதங்கள் ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ்வதையும், தங்கள் பிரச்சினைகளை அவர்கள் பேசித் தீர்த்துக் கொள்வதையும் பத்திரிநாத் பலமாக ஆதரிப்பவர் என்றே தோன்றுகிறது. இந்த நூல் முழுக்க முழுக்க அதற்கான சான்றாகவே விளங்குகிறது. இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சி அன்னியர்களின் ஆட்சி என்று கருதப்பட்டதுபோல, இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி அன்னிய ஆட்சி  என்று கருதப்படவில்லை என்பதை  அவர் மிகத் தெளிவாக வகைப்படுத்திக் கூறு கிறார். இந்தியாவை ஆண்ட முஸ்லிம்கள் இந்தியர்களே என்பதை நிலைநாட்டுவதற்கு விரிவான குறிப்புகளை அவர் அளிக்கிறார்.
அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான், அவுரங்கசீப் என்று தந்தைகளின் பெயர்களை மட்டுமே வலதுசாரி, இடது சாரி வரலாற்று விரிவுரையாளர்கள் குறிப்பிட்டிருக்கின் றனர் என்று கூறும் பத்ரிநாத் மிகுந்த கவனத்துடன் அவர்களது தாய்கள் மற்றும்  மனைவிகளின் பெயர் களையும் குறிப்பிடுகிறார்.  அவர்களில்  இந்துக்களாக இருந்த ஒரு சிலர் திருமணம் செய்து கொண்டபோது இஸ்லாம் மதத்திற்கு அவர்கள் மாற வேண்டியிருக்க வில்லை.
முஸ்லிம் ஆட்சியாளர்களின் ராணுவத்தினர் இந்தியர்கள் மீது இஸ்லாம் மதத்தைத் திணித்தனர் என்ற கண்ணோட்டமும் இந்நூலில் தீவிரமாக மறுக்கப் பட்டுள்ளது. இஸ்லாம் மதம் இந்தியாவில் பரவியதற்குக் காரணம், மக்களின் நோய்களைத் தீர்த்து வைக்கும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்கும் முஸ்லிம் துறவிகளே என்று பத்திரிநாத் கூறுகிறார். சுஃபி மாயதத்துவத்தின் பால் இருந்த ஆன்மிக கவர்ச்சி மற்றும் தத்துவ தாகமும்தான் ஹிந்துக்களை இஸ்லாம் மதத்திற்கு மாறுவதற்கு ஈர்த்தன. வேதாந்தத்தைப் போலவே இந்த தத்துவமும் அனைத்து உயிர்களும் ஒரே தன்மை கொண்டவை என்பதை வலியுறுத்துகிறது.
சமஸ்கிருத மொழியில் இருந்த  நூல்களை பெர்சிய மொழியில் மொழியாக்கம் செய்ததற்கு அல்பிருணி மற்றும் தாரா சுகோக்குக்கு நன்றி கூறவேண்டும். இஸ்லாம் மதத்தில் இருக்கும் மதிப்பு வாய்ந்த மதிப்பீடுகளை ஒரு மனிதராக மிக விரிவாக சாமி விவேகானந்தா பாராட்டியிருக்கும் காரணத்தால், ஒரு கோட்பாட்டுப் பெட்டகத்தில் அவரை அடக்குவது அவ்வளவு எளிதானது இல்லை. விவேகானந்தரை ஹிந்துத்துவக் கோட்பாட்டாளராகக் கருதுபவர்களுக்கு இது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கும்.
கிறித்துவ மதத்தின் வருகை
இந்தியாவிற்கு கிறித்துவ மதம் வந்தது, பெரும்பாலும் ஆங்கிலேய ஆட்சியுடன் இணைத்தே பேசப் பட்டு வருகிறது. யேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்ததற்குப் பிறகு அய்ந்து மாதங்களிலேயே தென் இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதிக்கு கிறித்தவ மதம் எவ்வாறு வந்து சேர்ந்தது என்று பேசுவதன் மூலம் அந்தத் தவறான கண்ணோட்டத்தையும் சரி செய்ய அவர் முயல்கிறார். இங்குள்ள சிரியன் கிறித்தவ மக்கள், அய்ரோப்பிய நாடுகளில் வாழும் கிறித்தவர்களை விட பழமை வாய்ந்தவர்கள்.
யேசு கிறிஸ்து பற்றிய அவரது அணுகுமுறை மிகுந்த மரியாதை கொண்டதாக இருந்த போதிலும், இந்திய கிறித்தவ தேவாலயங்களில் கிறித்தவ மதத்திற்கு மதம் மாறிய உயர் ஜாதியினர் மற்றும் கீழ் ஜாதியினருக்கு தனித் தனியான இடங்களைப் பிரித்து உருவாக்கியதன் மூலம் ஜாதி நடைமுறையை மறுபடியும் தொடர்ந்து நடைமுறைப் படுத்திய பாதிரிகளை அவர் மிக வன்மையாகக் கண்டிக்கிறார். ஹிந்து கடவுள் வரிசையில் யேசு கிறித்துவும் ஈர்த்துக் கொள்ளப்பட்டதன் மூலம் ஆங்கிலக் கல்வியினால் பார்ப்பனர்கள் பயன் பெற்ற நிலையில், சூத்திரர்கள் தொடர்ந்து பாகுபாட்டுடனேயே நடத்தி வரப்பட்டனர்.
உண்மையைக் கூறுவதானால், ஜைனமதம், புத்தமதம் பற்றி பத்திரிநாத் வைத்திருந்த மரியாதையும் பற்றும்  இந்த நூலின் மிகமிக முக்கியமான பகுதியாக அமைந்திருக்கிறது. பாரம்பரியமாக தங்களுக்குக் கிடைத்த இந்திய தத்துவக் கருத்துகளை பரிசீலனை செய்து, கண்டித்து, எதிர்த்து, மேலும் அவற்றை முன்னேற்றமடையச் செய்த மகாவீரர் மற்றும் கவுதம புத்தர் இந்நூலில் விரிவாகவும், ஆழ்ந்தும் விவாதிக்கப் பட்டுள்ளனர். என்றாலும், படிப்பது கூட ஓர் எதிர்ப்புச் செயலே என்பதால், விமர்சனங்களும் அரசியல் தேவைகள், நெருக்கடிகளுக்கு விட்டுக் கொடுத்து செல்ல வேண்டியதாகவே இருக்கின்றன.
நன்றி: 'தி இந்து'  24-11-2019

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...