Saturday, August 24, 2019

திராவிடர் கழகம் பிறந்த அதே சேலத்தில் வரும் 27 ஆம் தேதி திராவிடர் கழக பவள விழா மாநாடு



மத்திய பி.ஜே.பி. ஆட்சியால் சமூகநீதிக்குப் பேராபத்து மாநாட்டில் இதற்கொரு முடிவு காண்போம்!



சென்னை, ஆக.24   சேலத்தில் ஆகஸ்ட் 27 அன்று நடைபெறும் திராவிடர் கழகப் பவள விழா மாநாட்டில், இன்றைக்கு மத்திய பி.ஜே.பி. ஆட்சியில் சமூகநீதிக்கு ஏற்பட் டுள்ள ஆபத்தினைத்  தடுத்து நிறுத்திட உரிய முடிவு காணப்படும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சென்னை பெரியார் திடலில் இன்று  (24.8.2019)  செய்தியாளர்களுக்குத்   திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  பேட்டி அளித்தார். அப்பேட்டியின் விவரம் வருமாறு:

திராவிடர் கழகம் 1944 ஆம் ஆண்டில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற அமைப்பு - திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றப்பட்ட மாநாடு - கொள்கைத் திட்ட மும் மாற்றப்பட்ட மாநாடு சேலத்தில் 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி நடைபெற்று, வருகின்ற 26 ஆம் தேதியோடு, சரியாக 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

சேலத்தில் திராவிடர் கழக பவள விழா மாநாடு

எனவே, 75 ஆம் ஆண்டு பவள விழாவினை, ஒரு மாநாடாகவே அதே சேலத்தில் நடத்துவது என்று திராவிடர் கழகம் முடிவு செய்து, அதற்கேற்ற ஏற் பாடுகளையெல்லாம் சிறப்பாக செய்து, தமிழகத்தினுடைய திராவிடர் இயக்கக் கொள்கைகளையும், லட்சியங்களையும், சமூகநீதி, மதச்சார்பின்மை ஆகியவற்றை யார் பின்பற்றுகிறார்களோ, அத்துணை தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த தலை வர்களையும் அழைத்திருக்கின்றோம்.

அதேபோன்று, இன்றைக்குத்  தோன்றி யிருக்கின்ற பல்வேறு பிரச்சினைகளில், திராவிடர் கழகம் அடுத்த கட்ட நடவடிக் கைகளை, குறிப்பாக சமூகநீதிப் போன்ற வைகளை  எடுத்துச் செல்வதற்கான வேலைத் திட்டங்களையும் அந்த மாநாட் டிலே அறிவிக்கவிருக்கின்றோம்.

ஆகவே, அந்த மாநாட்டிற்கு, சக செய்தி யாளர்களான, ஊடகங்களைச் சேர்ந்த நமது தோழர்கள், நண்பர்களாகிய நீங்கள் அந்த மாநாட்டினை விளம்பரப்படுத்தவேண்டும்; அந்த மாநாட்டில் கலந்துகொள்ளவேண்டும். நேரிடையாக இங்கே இருக்கின்றவர்கள் அங்கே வருவதற்கு விரும்பினால், அவர் களை அழைத்துச் செல்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அல்லது உங்கள் நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் சேலத்தில் இருப்பார்கள்; அங்கேயும் தனியே அவர் களுக்கு அழைப்பு கொடுத்திருக்கிறோம். ஆகவே, இந்த மாநாடு என்பது மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில் நடை பெறக்கூடிய 75 ஆம் ஆண்டு பவள விழா மாநாடாகும்.

எனக்குக் கிடைத்த வாய்ப்பு!

என்னைப் பொறுத்தவரையில், திராவிடர் கழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கின்றேன் என்ற முறையில், எனக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், 1944 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண் டவன். எனக்கு இப்பொழுது 86 வயது. அன்றைக்கு எனக்கு 11 வயது. அந்த மாநாட்டிற்கு ஒரு மாதத்திற்கு முன்னால், தென்னார்க்காடு மாவட்ட திராவிடர் கழக மாநாடு என்ற தலைப்பில், கடலூரில் மாநாடு நடத்தி னார்கள். அப்பொழுதுதான் தந்தை பெரியார்மீது செருப்பு வீசப்பட்ட நிகழ்வுகளும்  நடந்தன.

அந்த மாநாட்டில், ஒரு மாணவனாக, ஒரு சிறுவனாக கலந்துகொண்ட நான், இன்றைக்குப் பவள விழா மாநாட்டை - அந்த இயக்கத்திற்கு - தந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் ஆகியோருடைய வழிகாட்டு தலுக்குப் பின் - தொடர்ந்து அவர்கள் போட்டுத்தந்த பாதையில், அவர்கள் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்ந்து நடத்தக்கூடிய அந்த வாய்ப்பினைப் பெற்றிருக்கிறேன் என்று நினைக்கின்றபொழுது, நான் மிகுந்த உற்சாகத்தோடு அந்த மாநாட்டில் பங்கேற்க விருக்கிறேன் என்பதை சக பத்திரிகையாளர்களாக இருக்கக்கூடிய உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்கிறேன், மகிழ்ச்சி.

தமிழகத் தலைவர்கள் பங்கேற்பு

அந்த மாநாட்டில், தமிழ்நாட்டிலுள்ள முக்கிய தலை வர்கள், குறிப்பாக, தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான தளபதி மு..ஸ்டாலின் அவர்களும், காங்கிரஸ் பேரியக்கத்தின் தமிழகத் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தமிழக மாநில செயலாளர்  தோழர் இரா.முத்தரசன்,  இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழக மாநில செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமா வளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவா ஹிருல்லா, திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ  ஆகியோர் கலந்துகொள்ளவிருக்கின்றனர். வைகோ அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, உடல்நலம் தேறி வருகிறார். அவர் ஓய்வெடுக்கவேண்டும் என்று மருத்து வர்கள் சொன்ன காரணத்தினால், அவருக்குப் பதிலாக, .தி.மு.. பொருளாளர் கணேசமூர்த்தி எம்.பி., சேலம் மாநாட்டில் பங்கேற்கவிருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்மையில் ஏற்பட்டு இருக்கின்ற பிரச்சினைகளில், மிகப்பெரிய ஆபத்தாக, புதிய தேசிய கல்விக் கொள்கை, நீட் தேர்வினால், பல உயிர்கள் பலியாகிக் கொண்டு வருவது தொடர்கதையாக ஆகிவருகின்ற இந்தக் கால கட்டத்தில், அந்தத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்குக் கொடுக்கவேண்டும் என்றும் போராடும் இந்த நேரத்தில், ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத்தாழ்ப்பாள் என்று சொல்வதைப்போல, நெக்ஸ்ட்' என்ற தேர்வை - எம்.பி.பி.எஸ்.  படித்தவர்கள் எழுதவேண்டுமாம், மூன் றாம் வகுப்பு அய்ந்தாம் வகுப்பிற்கும்  தேர்வுகள் என்று சொல்கிறார்கள்.

வாழ்நாள் முழுக்க முழுக்க தேர்வுகள்தானா? இந்த நேரத்தில், நுழைவுத் தேர்வு வேறு என்று சொல்லி, கல்வி என்பது எல்லோருக்கும் கிடைக்கக்கூடாது, குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப் பட்ட மக்கள், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மக் களுக்கு வாய்ப்புகளைக் குறைக்கவேண்டும்; பெண்களுக் கான வாய்ப்புகளைக் குறைக்கவேண்டும். அதுபோலவே, கிராமப்புற பிள்ளைகளுக்கு வாய்ப்பைக் குறைக்கவேண் டும் என்ற நிலை. கல்வி ஒரு அடிப்படை உரிமை என்று சொல்லக்கூடிய நிலையை எல்லாம் மாற்றி, அந்த  அடிப் படை உரிமையாகக் கொள்ளப்பட்ட அந்தத் தத்துவத்தையே, அரசமைப்புச் சட்டத் திருத்தத்தைப்பற்றி கவலைப்படாமல் நடந்துகொள்ளும் போக்கு இன்றைக்கு இருக்கிறது.

மறைமுக சூழ்ச்சிகள்

இதற்கிடையில், கல்வித் திட்டத்தில், மறைமுகமான சூழ்ச்சியாக இந்திய கலாச்சாரம், இந்திய மொழிகள் என்ற பெயராலே, வேதக் கணிதம், அதேபோல, சமஸ்கிருதப் பாடம், சமஸ்கிருதத்தில்தான் விஞ்ஞானமே அடங்கியிருக்கிறது; ஆகவே, விஞ்ஞானப் பாடத்தைக்கூட சமஸ் கிருதத்தில்தான் சொல்லிக் கொடுக்கவேண்டும் என்பது போன்ற பல்வேறு கண்ணிவெடிகளை எல்லாம்  உள்ளே வைத்து, புதிய கல்விக் கொள்கையை சரியான முறையில் ஆய்வு செய்யாமல், ஏதோ ஒரு சடங்காச்சாரம்போல் சொல்லக்கூடிய அளவில் இருக்கிறது.

எனவே, இவைகளைப்பற்றியெல்லாம் மக்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டிய கட்டாயம்; மக்களுக்கு விழிப் புணர்வை ஏற்படுத்தக்கூடிய ஒரு மாபெரும் இயக்கத்தை உருவாக்கிக் கொடுக்கவேண்டிய அவசியம் - தெளிவாக திராவிடர் கழகம் போன்ற ஒரு சமுதாய புரட்சி இயக் கத்திற்கு உண்டு. எனவேதான், அதனை செய்வதற்குத் தயாராக இருக்கிறோம்.

அதைவிட மிக முக்கியமான ஒரு செய்தி.

இரண்டு நாள்களுக்கு முன்புகூட, நான் விடுதலையில் அறிக்கை எழுதி, அதனை எல்லாத் தலைவர்களுக்கும் கொடுத்திருக்கிறோம்.

35 நாள்கள் - 38 மசோதாக்கள்!



உங்களுக்கு எல்லாம் மிகத் தெளிவாகத் தெரியும்; இப்பொழுது இரண்டாவது முறையாக பா... மத்தியில் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக மோடி அவர் களுடைய தலைமையில் ஆட்சி அமைத்திருப்பது - அவர்களுக்குக் கிடைத்திருக்கின்ற பெருத்த மெஜாரிட்டி, புல்டோசர் மெஜாரிட்டி என்று சொல்லக்கூடிய ஒரு பெரும்பான்மையைப் பயன்படுத்தி, 35 நாள்களில், 38 மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பெருமை' எங்களுக்கு உண்டு என்று சொல்லக்கூடிய அளவில், அதிக விவாதங்களே இல்லாமல், அதேபோல, நிலைக்குழு, பொறுப்புக்குழு, தேர்வுக் குழு ஆகிய குழுக்களைப்பற்றி கவலைப்படாமல், அந்த நிலைக்குழு, தேர்வுக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வேலை கொடுக்காமல், வாய்ப்புகளைக் கொடுக்காமல் இருக்கிறார்கள்.

அதைவிட, 10 சதவிகித இட ஒதுக்கீடு, பொருளா தாரத்தில் பின்தங்கிய முற்போக்கு ஜாதியினருக்கு என்று சொல்லி, அந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில், உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறுகிறார்!

இதற்கிடையே, திடீரென்று கடந்த 18 ஆம் தேதியன்று டில்லியில் ஒரு ஆய்வுக் கூட்டத்தினை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் நடத்தியிருக்கிறார். அந்தக் கூட்டத்தில்,

RSS chief pitches for conversation on reservation in harmonious atmosphere

என்று வார்த்தைகளில் தேனைத் தடவுவதுபோன்று, சுமூகமான ஒரு சூழ்நிலையில், இனிமேல் இட ஒதுக்கீடு தேவையா? இல்லையா? என்பதைப்பற்றி விவாதம் செய்யவேண்டும் என்கிற கருத்தைச் சொல்லியுள்ளார்.

ஆகவே, இட ஒதுக்கீட்டை ஒழிப்பதற்கு முன்னுரை பாடுகிறார்கள். ஏற்கெனவே உயர்ஜாதியினருக்கு 10 சத விகித இட ஒதுக்கீடு என்பதே, இட ஒதுக்கீட்டின் தத் துவத்தின் வேரை வெட்டுகின்ற முயற்சியாகும்.

இட ஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, பிற்படுத்தப்பட்ட மக்களுக் காக, வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும், இதுவரையில் உள்ளே நுழைய முடியாதவர்களாக இருந்தவர்களுக்கும் கொடுக்கக்கூடிய ஒரு வாய்ப்பு.

அரசமைப்புச் சட்டத்தின் திருத்தத்தைப்பற்றியெல் லாம் கவலைப்படாமல், அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்று கொண்டு வந்ததே கேள்விக்குறியாகி, விவாதத் திற்குரியதாகி இருக்கிறது. இன்னமும் நீதிமன்றங்களில் முழு அமர்விற்கு விசாரணைக்கு வராததாக இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், அவர்கள் அடுத்த கட்டத்திற்கு வேகமாகப் போகிறார்கள். அந்த அடுத்த கட்டம் என்னவென்று சொன்னால், இட ஒதுக்கீடு தேவையா? இல்லையா? என்பதுதான் அது.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில்கூட, தனி யார்த் துறைகளிலேயே இட ஒதுக்கீடு இருக்கின்றபொழுது, இங்கே உள்ள பொதுத் துறைகளை தனியார்த் துறைகளாக ஆக்கிக் கொண்டிருக்கும்பொழுது, இட ஒதுக்கீடு தனி யார்த் துறைகளுக்கும் அது விரிவுபடுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில், வேரையே வெட்டக்கூடிய அளவிற்கு, இட ஒதுக்கீடே தேவையில்லை என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தவர்கள் சொல்கிறார்கள்.

அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதம்!

இப்பொழுது இருக்கின்ற மெஜாரிட்டியில், அரச மைப்புச் சட்டத் திருத்தத்தைப்பற்றி கவலைப்படாமல், அதனை செய்யக்கூடிய பேராபத்து இப்பொழுது இருக்கிறது.

இதனை காங்கிரசு எதிர்த்திருக்கிறது; பகுஜன் சமாஜ் கட்சி மாயாவதி எதிர்த்திருக்கிறார். மற்ற கட்சியினரும் எதிர்த்திருக்கிறார்கள். இதனை எதிர்த்து முரசொலி'யில் தலையங்கம் எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொரு தலை வரையும் நாங்கள் தொடர்பு கொண்டிருக்கிறோம். இதைப் பற்றி ஒரு பெரிய முடிவினை  சேலம் மாநாட்டில் அறிவிக்க  இருக்கின்றோம். போராடத் தயங்கமாட்டோம்.

உங்களுக்கு ஒரு தகவலைச் சொல்கிறேன், இந்த எண்ணம் அவர்களுக்கு இப்பொழுது ஏற்பட்டதல்ல. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடிப்படைக் கொள்கையே இட ஒதுக்கீடு கூடாது என்பதுதான்.

வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தது பி.ஜே.பி.யே!

அதற்கு ஒரு சிறிய உதாரணத்தைச் சொல்கிறேன், மண்டல் ஆணையப் பரிந்துரை செயலாக்கப்படவேண்டும் என்று சொல்லி நாங்கள் அதற்காக 16 போராட்டங்களையும், 42 மாநாடுகளையும் அகில இந்திய அளவில் நடத்தியி ருக்கின்றோம். எல்லா மாநிலங்களுக்கும் சென்று, மாநிலத் தலைவர்களையும் ஒருங்கிணைத்து, ஒத்த கருத் திணக்கத்தை உருவாக்கியதற்குப் பிறகுதான், சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் பிரதமராக வந்த நேரத்தில், அவர் மண்டல் ஆணையப் பரிந்துரையை முழுமையாக அமல்படுத்தவில்லை. அதிலுள்ள ஒரு பகுதியைத்தான் அமல்படுத்த உத்தரவுப் போட்டார். அந்த உத்தரவினை எதிர்த்து, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பெரிய ரகளை செய்ததோடு மட்டுமல்லாமல், மாணவர்களைத் தூண்டி கலவரத்தையும் ஏற்படுத்தினர்.

மண்டலுக்கு எதிராக கமண்டல் என்று யாத்திரை நடத்தி, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்  அவர்களின் ஆட்சியை கவிழ்த்தார்கள்.

ஆகவே, அன்றையிலிருந்து பார்த்தீர்களேயானால், அவர்களுடைய அடிப்படை கொள்கை என்பது இட ஒதுக்கீடு கூடாது என்பதுதான்.

இப்பொழுது தங்கள் கைகளில் ஆட்சி வந்துவிட்டது என்பதைப் பயன்படுத்திக் கொண்டு, இப்பொழுது அதனை வேகமாக முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

இன்னொரு ஆதாரம், 2015 ஆம் ஆண்டு,

Revised Reservation System, R.S.S. Mohan Bhagavath, 20.9.2015

ஆகவே, தொடர்ந்து இட ஒதுக்கீட்டினை அவர்கள் எதிர்த்துத்தான் வருகிறார்கள்.

முன்பு சொல்வதற்கும், இப்பொழுது சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. காரணம், மத்திய ஆட்சி அவர் களுடைய கைகளில் இருக்கிறது. அவர்கள் எதை நினைக் கிறார்களோ, எதிர்க்கட்சியோ, மற்றவையோ, அரசியல் சட்டம் என்ன சொல்கிறது என்பதைப்பற்றி கவலைப் படாமல், அதனை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவேதான், இதைப்பற்றி ஒரு பெரிய முடிவெடுக்க வேண்டும். தென்னாடுதான் இட ஒதுக்கீட்டிற்கு அடிப் படையானது. அதிலும் குறிப்பாக தமிழ்நாடும், கருநாட கமும்தான் முன்னோட்டமாக இருந்த மாநிலங்கள். அந்த வகையில், தமிழ்நாடுதான் இட ஒதுக்கீட்டிற்கு வழிகாட்டக் கூடியது.

முதலாவது சட்ட திருத்தம் வந்தது எப்படி?

உங்களுக்கெல்லம் தெரிந்த செய்திதான், முதலாவது  அரசியல் சட்டத் திருத்தம் தந்தை பெரியார் அவர் களுடைய பெருமுயற்சியால், இங்கே இருக்கின்ற தலைவர்கள் எல்லாம் முயற்சி செய்து, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரசு இயக்கம், காமராசருடைய ஒத்துழைப்பு எல்லோரும் பாடுபட்ட தினால்தான், நேரு அவர்கள், முதலாவது அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார். கம்யூனல் ஜி.. இட ஒதுக்கீட்டிற்கு அடிப்படையை உண்டாக்கினார்கள்.

அம்பேத்கர் அவர்கள், Socially and Educationally  என்ற வார்த்தைகளைப் போட்டு திருத்தினார். இவ்வளவும் நடந்திருக்கிறது.

இப்பொழுது எல்லாவற்றிற்கும் அடிப்படைக்கே ஆபத்து வரக்கூடிய அளவிற்கு  இருக்கிறது.

69 சதவிகித இட ஒதுக்கீடு, ஜெயலலிதா அவர்களுடைய காலத்தில்  9 ஆவது அட்டவணையில் பாதுகாக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர். கொண்டு வந்த பொருளாதார

அளவுகோல்!

அதேபோன்று, எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, வருமான உச்சவரம்பை  அவர் கொண்டு வந்தபொழுது, அதனை நாங்கள் எதிர்த்து, தெளிவாக விளக்கிக் காட்டியவுடன், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இணைந்து போராடியதின் விளைவாகத்தான், தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை எம்.ஜி.ஆர். அவர்கள் சந்தித்தார். பிறகு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, எங்களைப் போன்றவர்களின் கருத்துகளைக் கேட்டு, வருமான உச்ச வரம்பை நீக்கினார்.

இந்த வரலாறுகள் எல்லாம் தமிழ்நாட்டிற்குத்தான் உண்டு. ஆகவே, தமிழ்நாடுதான் இந்தியாவிற்கே வழி காட்டக் கூடியதாக இருக்கிறது.

சேலம் மாநாட்டில் இதைப்பற்றி ஒரு பெரிய முடிவெடுத்து அறிவிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

இந்தக் காலகட்டத்தில், நம்முடைய மாணவர்களின் கல்வி, வேலை வாய்ப்புகளுக்கே அடிப்படையில் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. ஆகவே, அந்தப் பணியை செய்வதற்கு திராவிடர் கழகம், அரசியலுக்கு அப்பாற்பட்டு, இதற்கும், அரசியலுக்கும் சம்பந்தமே இல்லை. யார் யாரெல்லாம் ஆதரவு கொடுக்கிறார்களோ, அவர்களு டைய ஆதரவைப் பெற்று இதனை செய்யவிருக்கிறோம்.

தமிழ்நாடு அரசு அலட்சியம் காட்டக்கூடாது

தமிழக அரசுக்கு, உங்கள் மூலமாக எங்களுடைய வேண்டுகோள் என்னவென்றால், இதில் அலட்சியம் காட்டக்கூடாது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், அம்மா ஆட்சி, எம்.ஜி.ஆர். ஆட்சி என்று சொல்கிறார்கள்; அவர்களு டைய ஆட்சியில்தான் 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்குப் பாதுகாப்பு, 31 சதவிகிதமாக இருந்த இட ஒதுக்கீட்டை, 50 சதவிகிதமாக ஆக்கினார் எம்.ஜி.ஆர். அவர்கள்.

எனவேதான், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறினாலும், சமூகநீதி என்பது வளர்ந்து வந்திருக்கின்ற ஒன்று. பாதுகாப்போடு இருக்கின்ற ஒன்று என்பதுதான் தமிழ்நாட்டில் இருக்கின்ற சூழல்.

பெரியார் மண்தான்!

திராவிட மண், பெரியார் மண் என்று ஏன் சொல் கிறார்கள் என்று கேட்கிறார்கள், இதுதான் பெரியார் மண், தமிழ்நாடுதான் இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருக்கக் கூடியது.

எனவே, அந்தக் காலத்தில் அறிஞர் அண்ணா அவர்கள், திராவிட நாட்டில்  சேலம் செயலாற்றும் காலம்'' என்று தலையங்கம் எழுதினார்.

அதே  தலைப்பினை இப்பொழுதும் சொல்லக்கூடிய அளவிற்கு, சேலம் செயலாற்றும் காலம்''  தமிழகத் தலைவர்கள் எல்லாம் அந்த மாநாட்டில் பங்கேற்கவிருக் கிறார்கள். ஆகவே, இது இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய அளவிற்கு இருக்கும்.

முதல் கட்டம் தமிழ்நாட்டிலிருந்து தொடங்கும். பிறகு, அகில இந்திய அளவில் விரிவடையும். ஏனென்றால், அகில இந்திய தலைவர்களும் இந்தப் பிரச்சினையைப்பற்றி உணர்ந்திருக்கிறார்கள். ஏற்பட்டிருக்கின்ற ஆபத்தை அவர்களும் புரிந்திருக்கிறார்கள்.

ஆகவே, அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்தப் பணியை செய்வதற்கு இருக்கிறோம் என்பதை உங்கள்மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

செய்தியாளர்: துணை முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற 10 சதவிகித இட ஒதுக்கீடுபற்றிய ஆலோ சனைக் கூட்டத்தில் நீங்கள் கலந்துகொண்டீர்கள்; இப் பொழுது இருக்கிற 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு மாற்றுக் கருத்து கிடையாது என்று துணை முதலமைச்சர் சொன் னாரே, இப்பொழுது எது நிலைப்பாட்டில் இருக்கிறது?

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்  நடந்தது என்ன?

தமிழர் தலைவர்: அந்தக் கூட்டத்திற்கு எங்களை யெல்லாம் அழைத்தார்கள்; கருத்துகளைக் கேட்டார்கள். இப்பொழுது அந்தக் கூட்டத்தின் முடிவு என்னவென்று யாருக்கும் தெரியாது. கிணற்றில் போட்ட கல் போன்று இருக்கிறது. கூடுதலான இடங்களுக்காக 10 சதவிகித இட ஒதுக்கீட்டை நாம் ஒப்புக்கொள்ளலாமா? வேண்டாமா? என்பதற்காகத்தான் அந்தக் கூட்டத்தையே ஏற்பாடு செய்தார்கள். 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு பிரச்சினை ஒன்றும் இல்லை. ஏனென்றால், சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும்தான். 69 சதவிகிதத்தைத் தவிர, மீதி எஞ்சியிருக்கின்ற 31 சதவிகிதத்திற்கு எல்லோரும் போட்டி போடலாம், திறமையின் அடிப்படையில்.

10 சதவிகிதம் கொடுத்துவிட்டால், 31 சதவிகிதத்திலிருந்து குறைந்துவிடும் அல்லவா! பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு, திறமையானவர் களுக்கு, அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு அந்த வாய்ப்புகளை மறுத்துவிடுகிறார்களே என்பதையெல்லாம் அந்தக் கூட்டத்தில் விளக்கிச் சொன்னோம்.

அந்தக் கூட்டத்தில் நாங்கள் சொன்னது மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று சட்டமன்றத்திலேயே துணை முதலமைச்சர் .பி.எஸ்.  அவர்கள் குறிப்பிட் டிருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி சொல்கிறோம்.

இட ஒதுக்கீட்டின் வேரை வெட்டுவதுதான் 10 சதவிகித இட ஒதுக்கீடு

அதேநேரத்தில், 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது, இட ஒதுக்கீட்டின் அடிப்படையையே  மாற்றுவதுதான் என்பதை விளக்கி சொன்னவுடன், அவர்கள் விளங்கிக் கொண்டார்கள். ஆனால், என்ன முடிவு எடுப்பார்கள் என்பது தெரியாது.

இப்பொழுது நீங்கள் இந்தக் கேள்வியை எங்களிடம் கேட்ட பிறகு, இதே கேள்வியை தமிழக அரசுக்கு நாங்கள் வைக்கிறோம்.

சேலம் மாநாட்டில் அறப்போராட்டங்களை அறிவிப் போம். திராவிடர் கழகப் போராட்டங்களில் அராஜகம் இருக்காது; சட்டம் ஒழுங்கைப் பாதிக்காது. இதில் தமிழக அரசு தன்னுடைய நிலையை தெளிவுபடுத்தவேண்டும்.

செய்தியாளர்: தீவிரவாதி அச்சுறுத்தல் தமிழகத்தில் இருக்கிறது என்று ஒவ்வொரு மாவட்டத்திலும் தகவல் பரவிக்கொண்டிருக்கிறதே?

தீவிரவாதத்தை யாரும் ஆதரிக்கவில்லை

தமிழர் தலைவர்: தீவிரவாதத்தை யாரும் ஆதரிக்கப் போவதில்லை. தீவிரவாத அச்சுறுத்தல் இருந்தால், அதனைக் கண்காணிக்கக் கூடிய பொறுப்பு காவல் துறைக்கு உண்டு.

இலங்கையிலிருந்து ஆறு பேர் வந்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஒன்று, கடல் வழியாக வந்திருக்க வேண்டும்; அல்லது விமானம் வழியாக வந்திருக்க வேண்டும். இந்த இரண்டும் மத்திய அரசாங்கத்தினுடைய பாதுகாப்பில்தான் இருக்கிறது.

ஆகவே, மத்திய அரசாங்கத்தினுடைய பொறுப்பிலி ருக்கும் இந்தத் துறைகளைத் தாண்டி வந்திருக்கிறார்களா என்கிற கேள்வி எழுகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், எந்தக் கட்சியும் தீவிரவாதத்தை ஆதரிப்பதில்லை. தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கிறது. அது தொடரவேண்டும்.

இது ஒரு அச்சுறுத்தலாக பொதுமக்களுக்கு அமைந்து விடக் கூடாது. அசவுகரியமாகவும் இருக்கக்கூடாது. தாராளமாக தீவிரவாதத்தைத் தடுக்கட்டும். தீவிரவாதம் பரவக்கூடாது என்பதில் எந்தக் கட்சிக்கும் தமிழ்நாட்டில் மாறுபாடு கிடையாது.

இராம்விலாஸ் பஸ்வான் கருத்து

செய்தியாளர்: மோகன் பகவாத் கருத்தை பெரிது படுத்தவேண்டாம் என்று மத்திய அமைச்சர் இராம்விலாஸ் பஸ்வான் சொல்லியிருக்கிறாரே?

தமிழர் தலைவர்: அவர் என்னுடைய நண்பர்தான். நான் எழுதிய அறிக்கையிலும் சொல்லியிருக்கிறேன்.

மண்டல் ஆணைய அறிக்கை வருவதற்கு முன்பு, காங்கிரஸ் அப்பொழுது மத்திய ஆட்சியில் இருந்தது. சிக்மகளூரில் இந்திரா காந்தி வெற்றி பெற்றார். காங்கிரசு கட்சியில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமு தாயத்தைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதேபோன்று எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் எல்லோரும் சேர்ந்து, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் களுக்காகத்தான் இட ஒதுக்கீடு. இதுவரையில் எஸ்.சி., எஸ்.டி.,க்கு சட்டப்படி இட  ஒதுக்கீடு இருக்கிறது. சட்டப்படி இட ஒதுக்கீடு இல்லாதவர்களுக்காகத்தான் மண்டல் ஆணைய அறிக்கை கொடுத்திருக்கிறார்கள். முதல் கமிசன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. அதேபோன்று இப்பொழுது ஆகிவிடக்கூடாது. உங்களு டைய காலத்தில் அது வரவேண்டும் என்று சொல்லி, எல்லோரிடமும் கையெழுத்து வாங்கினோம். 223 பேர் கையொப்பமிட்டனர்; அந்த நகல் என்னிடம் இருக்கிறது.

டில்லியில் டி.பி.யாதவ் என்பவர், கல்வியமைச்சராக இருந்தார். அவர்தான் காங்கிரசு கட்சியின் பேக்வர்டு கிளாஸ் செல் என்பதற்கு செயலாளராக இருந்தார். அவர்மூலம் நாங்கள் முயற்சி எடுத்தவுடன், அவர் எல்லா எம்.பி.,க்களிடமும் கையெழுத்து வாங்கினார்.

எல்லாக் கட்சிகளிலும் உள்ள பிற்படுத்தப்பட்ட சமூகத் தைச் சேர்ந்த  223 எம்.பி.,க்கள் கையொப்பமிட்டார்கள். அதனை இந்திரா காந்தி அம்மையாரிடம் கொடுத் தார்கள். அப்பொழுது இராம்விலாஸ் பஸ்வான் எதிர்க்கட்சியில் இருக்கிறார்.

அவர் மூலமாக விவாதம் நடைபெற்றது.  கேரள மாநிலத்தில் உள்ளவர்கள் உள்பட அந்த விவாதத்தில் பேசினார்கள்.  அந்த விவாதத்தின்போது,  மாலை நேரத்தில் சிற்றுண்டி கொடுத்தார்கள்;  இரவு நேரம் உணவு கொடுத்தார்கள். இரவு 12 மணிக்குமேலேயும் அந்த விவாதம் நடைபெற்றது. பஸ்வான்தான் மிகக் கடுமையாக பேசினார்.

"இட ஒதுக்கீட்டில் விவாதத்திற்கே இடமில்லை!''

எல்லோரும் சேர்ந்து என்ன முடிவெடுத்தார்கள் என்றால், இட ஒதுக்கீட்டில் நாங்கள் மாறுபட்ட கருத்தைக் கொண்டவர்கள் அல்ல. Reservation is a Non- Negotiable subject  அரசியல் சட்டத்திலேயே இருக்கிறது. அது  மறு விவாதத்திற்கோ, மறுபரிசீலனைக்கோ உரியது அல்ல என்று இந்த நாடாளுமன்றம் தீர்மானத்தை நிறை வேற்றியது'' என்று தீர்மானம் போடப்பட்டது.

இப்பொழுது அதைப் பெரிதுபடுத்தவேண்டாம் என்கிறார். அவருக்கு என்ன ஒரு பிரச்சினை என்றால், இப்பொழுது பா... கூட்டணியில் அவர் இருக்கிறார்.

இதை பஸ்வான் அவர்கள் ஞாபகப்படுத்தியதற்கு நன்றி!

ஆனாலும், பஸ்வானை வைத்துக்கொண்டு, இதை மத்திய ஆட்சி செய்தது என்றால், இட ஒதுக்கீட்டிற்கு அவரே சாட்சி.

செய்தியாளர்: ஜம்மு காஷ்மீரில் இட ஒதுக்கீடு பலன் கிடைக்கும் என்று அமித்ஷா சொல்லியிருக்கிறாரே?

தமிழர் தலைவர்: ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொன்று சொல்கிறார்கள். முதலில் மற்ற பிரச்சினைகள் முடியட் டும். அவர்கள் தந்திரமாகத்தான் பேசுகிறார்கள். இப் பொழுதுகூட இட ஒதுக்கீட்டை ஒழித்துவிடுங்கள் என்று  சொல்லவில்லை. மிக சுமூகமான சூழ்நிலையில், இரண்டு பேரும் விவாதம் நடத்தி செய்யவேண்டும் என்று சொல்வது தந்திரமே தவிர வேறொன்றுமில்லை.

இரண்டாவதாக, ஆர்.எஸ்.எஸ். சொல்வதைக் கேட் பதா? அல்லது அமித்ஷா சொல்வதைக் கேட்பதா? என்றால், அமித்ஷா உள்பட, மோடி உள்பட எல்லோ ருக்கும் தெரிந்த விஷயம் என்னவென்றால், ஆர்.எஸ்.எஸ். உத்தரவு  போடுகின்ற இடத்தில் இருக்கிறது; இவர்கள் அதனை செய்கின்ற இடத்தில் இருக்கிறார்கள்.

அதனால், இவர்களுடைய பதிலுக்கு முக்கியத்துவம் கிடையாது.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...