பா.ஜ.க. ஆட்சி இரண்டாவது முறையாக ஆட்சி
அதிகாரத்தை கைப்பற்றியதிலிருந்து இந்தி மொழியை புகுத்துவதற்கு பல்வேறு
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து, சமீபத்தில்
தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் இந்தி பேசாத மாநிலங்களில்,
இந்தி ஆசிரியர்களை நியமனம் செய்து, இந்தியை கற்றுக்கொடுக்க ரூ.50 கோடி
ஒதுக்கப்பட்டுள்ளது.
இது இந்தி பேசாத மாநிலங்களில் கொந்தளிப்பை
ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பல்கலைக்கழகங்களில் மறைமுகமாக இந்தியைத்
திணிக்கும் வகையில் யு.ஜி.சி. அறிக்கை வெளியிட்டிருந்தது. இப்படி
தொடர்ச்சியாக பா.ஜ.க. ஆட்சி இந்தி மொழியைத் திணிக்க முற்பட்டு வருகிறது.
இதற்கு எதிராக ஜனநாயக அமைப்புகள் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றன.
நாடாளுமன்றத்தில் தமிழகத்தைச் சார்ந்த பேராசிரியர் தமிழச்சி தங்கபாண்டியன்
அவர்கள்கூட அதனை சுட்டிக் காட்டி எச்சரித்துள்ளார்.
வெளிநாடுகளில் இந்தி மொழியைப்
பரப்புவதற்கு, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ. 43 கோடியே 48 லட்சம்
அளவிற்கு மோடி அரசு அள்ளி வீசியுள்ளது. இதுதொடர்பாக மாநிலங்களவையில்
எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, மத்திய வெளியுறவுத்துறை இணை யமைச்சர்
வி.முரளீதரன் பதிலளித்துள்ளார்.
"அய்க்கிய நாடுகள் சபையின் அலுவல் மொழியாக
இந்தியைக் கொண்டுவர மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அந்த
வகையில், இந்தி மொழியை வெளிநாடுகளில் பரப்பவும், பிரபலப்படுத்தவும் கடந்த 5
ஆண்டுகளில் ரூ. 43 கோடியே 48 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு
மார்ச் மாதத்தில், அய்.நா. கருத்தாக்கங்களை இந்தியில் வெளியிட 2
ஆண்டுகளுக்கு இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. அண்மையில் அய்.நா.வின்
ட்விட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களும் இந்தி மொழியில்
பிரத்யேகமாகத் தொடங்கப்பட்டுள்ளது" என்று முரளீதரன் கூறியுள்ளார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது
அட்டவணையில் இடம் பெற்றுள்ள அலுவல் மொழிகளுள் இந்தியும் ஒன்று,
அவ்வளவுதான்! அதற்கு மேல் அதற்கு முக்கியத்துவம் என்பது கிடையாது. தொடர்பு
மொழி என்று எடுத்துக் கொண்டாலும் ஆங்கிலமும், இந்தியும்தான்.
இந்த நிலையில் அனைத்து மொழிகளின் வளர்ச்சி
களுக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுப்பதற்குப் பதிலாக இந்திக்கு
மட்டும் முன்னுரிமை கொடுப்பது - இந்தியா என்றாலே இந்தி தானா? நமது மாநில
மொழிக்கு உரிய மரியாதை கிடையாதா என்ற நெருப்பு மாநில மக்கள் மத்தியில்
பற்றிக் கொள்ளும் என்று எச்சரிக்கின்றோம்.
இந்தி என்றால் சமஸ்கிருதம் என்பது
அதற்குள் நகமும், சதையுமாக இருக்கிறது என்று சொல்லித் தெரிய வேண்டிய
அவசியம் இல்லை. இந்தி என்றாலே தேவநாகரி வடிவம் தானே.
வேறு மாநிலங்கள் எப்படி இருந்தாலும் தமிழ்
நாட்டைப் பொறுத்தவரை இந்தித் திணிப்பைக் கலாச்சாரக் கண்ணோட்டத்தில்
பார்க்கும் மாநில மாகும். இங்குக் கிளம்பும் தீ இந்தியத் துணைக் கண்டம்
முழுவதும் தாவ வெகு காலம் ஆகாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். வீண்
வம்பை விலைக்கு வாங்க வேண்டாம்!
No comments:
Post a Comment