* அணுசிறீ
20.8.2018 அன்றைய தொடர்ச்சி....
ஆளுநர்களின் தவறான செயல்பாடுகளுக்கு நீதிமன்றக் கண்டனங்கள்
கூட்டாட்சிக் கட்டமைப்பு பாதுகாக்கப்படுவதை பல நேரங்களில் நீதிமன்ற குறுக்கீடுகள் உறுதிப்படுத்தி யுள்ளன. தங்களது அரசமைப்பு சட்டப்படியான கடமை களை நிறைவேற்றத் தவறியதற்காக ஆளுநர்களை பல நேரங்களில் நீதிபதிகள் கண்டித்துள்ளனர். பூட்டாசிங்கின் செயலை தீய நோக்கம் கொண்டது என்று கண்டித்த உச்ச நீதிமன்றம், அருணாச்சலப் பிரதேச ஆளுநரின் செயல் அரசமைப்பு சட்டத்திற்குக் கொடுக்கப்பட்ட ஒரு சவுக்கடி என்றும் அரசாட்சியின் மீதான ஒரு பேரிடி என்று கண்டித்துள்ளது. எஸ்.ஆர்.பொம்மை மற்றும் மத்திய அரசுக்கு இடையே நடைபெற்ற வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிகுந்தது.
மாநில அரசுகளை கலைக்கச் செய்யும் மத்திய அரசின் அரசமைப்பு சட்ட அதிகாரத்தை அந்தத் தீர்ப்பு கட்டுப்படுத்தி இருந்தது. மாநில அரசின் பலத்தை மதிப்பிடுவதற்கான ஒரே வழி, சட்டப் பேரவை உறுப் பினர்களிடையே, சட்டப் பேரவையில் வாக்கெடுப்பு நடத்துவதுதான் என்றும், ஆளுநரோ அல்லது குடியரசுத் தலைவரோ தங்களது தனிப்பட்ட கருத்தின் அடிப் படையில் முடிவு செய்யப்பட இயன்ற விவகாரம் அல்ல என்றும் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு சட்ட அமர்வு உறுதிபடத் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், அரசமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவின்படி நெருக்கடி நிலை அறிவிக்கப்படுவது, மாநிலத்தில் அரசமைப்புச் சட்ட இயந்திரம் (நிர்வாக இயந்திரம்அல்ல) செயல்பட இயலாத நிலையில் மட்டுமே நியாயப்படுத் தப்பட இயலும் என்றும், அத்தகைய அறிவிப்பு நீதிமன்ற பரிசீலனைக்கு அப்பாற்பட்டது அல்ல என்றும் அந்த அமர்வு அறிவித்துள்ளது.
மத்திய மாநில உறவுகள், அதிகாரங்கள் பற்றி ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட ஆணையங்கள்
மாநிலக் கட்சிகளின் வளர்ச்சியும், செல்வாக்கு மிகுந்த மாநிலத் தலைவர்கள் உருவானதும், மாநில அரசுகளின் தேவைகளை உணர இயன்ற ஒரு கூட்டாட்சித் தத்துவத்தின் தேவையைத் தூண்டியுள்ளன. அதனை ஒட்டி, மத்திய-மாநில அரசுகளின் உறவுகளை இணக்கமாக்கு வதற்குத் தேவையான செயல்பாடுகளை ஆராய்ந்து பரிந்துரைப்பதற்கு 1966 இல் நிர்வாக சீர்திருத்த ஆணையம், 1969 இல் ராஜமன்னார் கமிட்டி, 1983இல் சர்க்காரியா ஆணையம், 2000 இல் அரசமைப்புச் சட்டத்தின் செயல்பாட்டை மறு ஆய்வு செய்வதற்கான தேசிய ஆணையம், 2007 இல் பூஞ்சி ஆணையம் என்று பல குழுக்களும், ஆணையங்களும் நியமிக்கப் பட்டன.
ஆளுநர் அலுவலகம் பற்றி நிர்வாக சீர்திருத்த ஆணையம் கூறியதாவது: சாமானியமான நடுத்தரப் பிரிவினருக்கு, போதிய வேலை வாய்ப்பு இல்லாத நிலையிலும் அதிக சம்பளம் அளிப்பது அல்லது சில நேரங்களில் செயல்பாடற்ற காலாவதியான அரசியல்வாதிகளுக்கு ஓர் ஆறுதல் பரிசு வழங்குவதாகக் கருதப்படுவதாக ஆகிவிட்டது ஆளுநரின் பதவி. அதற்கு மாறாக, இந்திய நிர்வாகம் என்னும் கூட்டாட்சி கட்டமைப்பின் மிக முக்கியமான அலுவலகங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட வேண் டும்.
முந்தைய மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களைப் பதவி நீக்கம் செய்வது என்ற பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, தவறாக நடந்து கொண்டார் என்று மெய்ப்பிக்கப்பட்ட போதும், உச்சநீதிமன்ற விசாரணை ஒன்றில் ஆற்றல் அற்றவர் என்று கருதப் பட்டாலன்றி ஆளுநர்கள் பதவியில் இருந்து நீக்கப் படக்கூடாது என்று ராஜமன்னார் கமிட்டி ஆலோசனை கூறியிருந்தது. அரசமைப்புச் சட்டத்தின் 263ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ள மத்திய, மாநில அரசுகளின் கூட்டமைப்பு ஒன்று உடனடியாக உருவாக்கப்பட வேண்டும் என்று அது ஆலோசனை தெரிவித்தது.
என்றாலும், இத்தகைய அனைத்து ஆணையங் களிலும், மத்திய-மாநில அரசுகளின் உறவு பற்றி சர்க்காரியா ஆணையம் மிக விரிவான 21 அத்தியாயங்கள் கொண்ட பரிந்துரைகளை அளித்திருந்தது. நெருக்கடி நிலை அறிவிக்கப்படும் அரசமைப்புச் சட்டத்தின் 356 ஆவது பிரிவு மிகமிக அரிதாகவும், மிகமிக இன்றியமையாத வழக்குகளிலும், இருக்கக் கூடிய மற்ற அனைத்து மாற்று வழிகளும் பயனளிக்காமல் போன பிறகு இறுதி நடவடிக்கையாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று சர்க்காரியா ஆணையம் எச்சரித் திருந்தது. மேலும், அரசமைப்புச் சட்டத்தின் 356 ஆவது பிரிவின்படி நெருக்கடி நிலை அறிமுகப்படுத்தப்பட்ட அறிவிப்பு நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு வைக்கப் படுவதற்கு முன்பாக, சட்டப் பேரவை கலைக்கப் படக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. மாநில அரசுகளை தேவையற்ற ஒரு தலை சார்பான செயல் பாடுகளிலிருந்து தவிர்ப்பதற்காக மாநிலத்திற்கு நியமிக்கப்படும் ஆளுநர் வெளி மாநிலத்தைச் சேர்ந்த உயர்பண்பு கொண்டவராக இருப்பதுடன், தீவிர அரசியல் தொடர்புகளற்று தனித்து நிற்பவராகவும், அண்மைக் காலத்தில் அரசியலில் பங்கெடுத்துக் கொள்ளாதவராகவும் இருக்க வேண்டும் என்றும் அந்த ஆணையம் பரிந்துரைத்திருந்தது.
பொருளாதாரக் கூட்டாட்சித் தத்துவத்தைப் பொறுத்த வரையில், கார்ப்பரேட் வரிகளை மாநிலங்களுடன் மத்திய அரசு பகிர்ந்து கொள்ளவேண்டும் என்றும், வரி விதிப்பதற்காக உள்ள வாய்ப்புகளைப் பற்றி மறு ஆய்வு செய்வதற்காக அரசமைப்புச் சட்ட 269 ஆவது பிரிவின்படி ஒரு வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் அது பரிந்துரைத்தது. சட்டப் பேரவையில் எந்த ஒரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாமல் போகும் நேரங்களில், முதலமைச்சர்களை எவ்வாறு நியமிப்பது என்பதற்கான வழிகாட்டும் நெறிமுறைகளையும் தயாரித்தளித்தது, தேர்தலுக்கு முன் கூட்டணி அமைக்கப்படாதபோது, தனிப்பெரும் கட்சியின் தலைவரை அரசு அமைக்க அழைக்க வேண்டும் என்று அது பரிந்துரைத்தது. இந்த பரிந் துரைகள் எல்லாம் பல நேரங்களில் காற்றில் பறக்க விடப்பட்டன. இதற்கு அண்மைக் கால எடுத்துக் காட்டுகளாக கர்நாடக, கோவா, உத்தரகண்ட் மாநி லங்களில் ஆளுநர்கள் தங்களது சுயேச்சையான அதிகாரத்தைப் பயன்படுத்தி, யதேச்சதிகாரமாக அரசு அமைக்க பா.ஜ. கட்சியை அழைத்த நிகழ்வுகளைக் காட்டலாம். அத்தகைய யதேச்சதிகாரம், 1952 இல் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவியேற்க சட்டப் பேரவை, சட்ட மேலவை இரண்டிலும் உறுப்பினர் அல்லாத ராஜகோபாலாச்சாரியை ஆளுநர் பிரகாசா அழைத்ததை நினைவுபடுத்துகிறது. மேலும், சர்க்காரியா ஆணையத் திற்குப் பிறகு, ஆளுநர்கள் எல்லாம் மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சி அரசியலில் தீவிரமாக ஈடுபடும் அரசியல் விசுவாசிகளாகவே இருந்து வருகின்றனர்.
கூட்டாட்சிக் கட்டமைப்பு உருவாக்கம்
ஏழாவது அட்டவணைபடி மத்திய, மாநில அரசுகளி டையேயான அதிகாரப் பங்கீடு, நிதி ஆணையம், உள்ளாட்சி அமைப்புகள், அனைத்திந்திய பணிய மைப்பின் கட்டமைப்பு நிர்வாகம், நதிநீர்த் தீர்ப்பாயங்கள், திட்டக் குழுக்கள், நிதி ஆயோக், சுமுகமான மத்திய மாநில உறவுகளுக்குத் தடையாக இருக்கும் ஆளுநர்கள் உள்ளிட்ட பல அரசமைப்புச் சட்ட விதிகளைச் சுற்றி கூட்டாட்சிக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல் நிலையற்ற தன்மை, உள்நாட்டுப் பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள், பிரிவினை வாதப் போக்குகள், பொருளா தாரப் போட்டி மற்றும் இவற்றைப் போன்றவை நிலவும் இன்றைய அரசியல் காட்சியில், ஆரோக்கியமான கூட்டாட்சி நடைமுறை தவிர்க்க இயலாத ஒன்றாகவே அமைந்துள்ளது.
உலகமயமாக்கப்பட்ட இந்த காலகட்டத்தில், தங்கள் அரசுக்கு வருவாயை உருவாக்குவதற்காக, தொழில், வணிகக் முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தி முதலீடு களைக் கவருவதில் மாநில அரசுகளும், மத்திய அரசும் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன. மேலும், கட்சி நடைமுறை அனைத்து மாநிலங்களிலும் பரவலாக்கப்பட்டதும், கூட்டணி அரசியல் உருவானதும், ஒன்றிணைந்து செயல்படும் கூட்டாட்சி நடைமுறையை ஓர் அரசியல் தேவையாகவே ஆக்கிவிட்டன. தேர் தல்கள் தெளிவான தீர்ப்பினை அளிக்காத நிலையில், பலகட்சி ஜனநாயக நடைமுறையிலான இந்தக் காலகட்டத்தில், மத்தியில் ஆட்சியில் இருக்கும் எந்த ஒரு கட்சியும், தேர்தல் களத்தில் காணாமல் போவதற்கு விரும்பாது என்பதால், மாநிலங்களில் உள்ள எதிர் கட்சிகளுக்கு வருத்தம் உண்டாக்குவதற்கு முன்பாக மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது அவசிய மானது.
எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு களின் செல்வாக்கைக் குறைப்பதற்காக, ஆளுநர் அலுவலகத்தை எந்த வழியிலாவது தவறாகப் பயன் படுத்துவது, கூட்டாட்சி ஜனநாயக அரசியல் நடைமுறை சுமுகமாக செயல்படுவதற்கு கேடு செய்வதாகவே அமையும். தேசிய ஒற்றுமையையும், அரசியல் நிலைத் தன்மையையும் பேணுவதற்கான அரசமைப்புச் சட்டப் படியான அதிகாரமும், கடமையும் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் தன்னாட்சி உரிமையை சமரசம் செய்து கொள்வதன் மூலம் மத்திய அரசு அதனைச் செய்யக்கூடாது. அதிகப்படியான அதிகாரங்கள் மத்தியில் குவிக்கப் படுவது மத்திய அரசும், மாநில அரசுகளும் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒப்பானதாகும். சர்க் காரியா ஆணையம் எச்சரித்தபடி, அவ்வாறான அதிகாரக் குவிப்பு மத்திய அரசை, ரத்த அழுத்தம் கொண்ட தாகவும், அதனைச் சுற்றியுள்ள மாநில அரசுகளை ரத்தசோகை கொண்டவை களாகவும் ஆக்கி, அழிவை விளை வித்துவிடும்.
மத்திய மற்றும் மாநில அரசுகளுக் கிடையேயான பிரச்சினை களைத் தீர்ப்பதற்கு மாநில அரசு களுடன் இணைந்து மத்திய அரசு, அரசமைப்பு சட்டத்தில் நிர்ணயிக்கப் பட்டுள்ள கூட்டாட்சித் தத்துவ உணர் வுக்கு உண்மையாக செயலாற்ற வேண்டும்; மாநில ஆளுநர்களும் நல்லிணக்கத்துடன் மாநில அரசு களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். ஆளுநர் பதவியை அரசியல் சாராத பதவியாக மாற்ற வேண்டியதன் அவசர, அவசியத் தேவை, ரோமன் விமர்சகர் ஜூவினலின் புகழ் பெற்ற ஒரு பழமொழியை எனக்கு நினைவு படுத்துகிறது. "பாதுகாக்கும் பணியை செய்யும் பாது காவலர்களை யார் பாதுகாப்பார்கள்?" சுயேச்சையான அதிகாரம் யதேச்சதிகாரமாக மாறும்போது, ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் போகும் நிலையில், மக்களின் விருப்பம் என்பது காலடியில் போட்டு மிதிக்கப்படுவதுடன், நாகரிக சமூகத்தினர் ஜூவினலின் மேற்குறிப்பிடப்பட்ட கேள்வியை மாற்றி "ஆளுநர்களை ஆளுபவர்கள் யார்?" என்று கேட்கத்தான் தோன்றும்.
(நிறைவு)
நன்றி: 'ஃப்ரண்ட் லைன்' 03-08-2018
தமிழில் : த.க. பாலகிருட்டிணன்
நன்றி: 'ஃப்ரண்ட் லைன்' 03-08-2018
தமிழில் : த.க. பாலகிருட்டிணன்
No comments:
Post a Comment