Thursday, June 14, 2018

பார்ப்பன மயமாகும் மத்திய அரசுத் துறைகள்

மத்திய அரசின் முக்கிய பத்து துறைகளுக்கு கூட்டுச் செயலாளர் பதவிகளுக்கு வெளியிலிருந்து யாரும் விண்ணப்பிக்கலாம் - தனியார்த் துறைகளில் பணியாற்றுவோரும் விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். (விடுதலை 12.6.2018) அரசமைப்புச் சட்டப்படி அது தவறானது என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தார்.

மத்திய அரசின் இணைச் செயலாளர்கள் பதவிகளில் நியமனம் செய்வதற்குப் புதிய அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அரசுத் துறைகளில் திறமை வாய்ந்தவர்களைக் கொண்டுவரும் பொருட்டு இந்த ஏற்பாடாம்.

இந்த இணைச் செயலாளர் பதவிகளுக்கு ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 200 ரூபாயிலிருந்து  2 லட்சத்து 18 ஆயிரத்து 200 ரூபாய் வரை மாத சம்பளமாம் - மூன்றாண்டுகள் வரை பணியாற்றலாம்; தேவைப்படும் பட்சத்தில் 5 ஆண்டுகள்வரை கூடத் தொடர வாய்ப்புள்ளது.

மத்திய பி.ஜே.பி. அரசின் நிர்வாகத் திறனும், அணுகுமுறையும் எவ்வளவுக் கேவலமாக, பொறுப்பற்ற சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உண்டு என்றாலும், அந்தப் பட்டியலில் இது சிகரம் வைத்தது போன்றதாகும். தகுதி - திறமை பார்த்து, அய்.ஏ.எஸ். போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்று, பல்லாண்டுகாலம்  அரசுத் துறைகளில் பணியாற்றிய மூத்த அதிகாரிகள் எல்லாம் திறமையற்றவர்கள்தானா?

உண்மையைச் சொல்லப்போனால் இப்படி எல்லாம் நிருவாகத்தில் குழப்பம் உண்டாக்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிடும் இத்தகைய அமைச்சர்கள்தான் திறமையற்றவர்களாக இருக்கிறார்கள். தகுதி - திறமை அடிப்படையில்தான் அமைச்சர்கள் வரவேண்டும் என்றால், அதில் பிரதமர் நரேந்திர மோடிகூடத் தேறுவாரா?

மத்திய அரசின் இந்தப் புதிய முடிவால் ஏற்கெனவே பணியாற்றும் அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியும், மன உளைச்சலும் ஏற்பட்டு, நிர்வாகக் குழப்பத்தில்தான் முடியும்.

தனியார்த் துறையிலிருந்து அதிகாரிகளை மத்திய அரசுத் துறைகளுக்குக் கொண்டு வந்தால், மத்திய அரசின் கொள்கை முடிவுகளும், திட்டங்களும் மாஜி முதலாளிகளுக்குக் கையும், உறையுமாகப் போய்ச் சேரும் என்ற அடிப்படைப் பொது அறிவுகூட மோடி அரசுக்குக் கிடையாதா? வெட்கக்கேடு!

இதில் இன்னொரு முக்கியமான அடிகோடிட்டுக் கவனிக்கத்தக்க அம்சம் ஒன்று விஷக் கொடுக்கை நீட்டிக் கொண்டுள்ளது.

இப்படி வெளியிலிருந்து இணைச் செயலாளர் பதவிகளை நியமனம் செய்வதில் இட ஒதுக்கீடுக்கு இடம் இருக்கப் போவதில்லை. அது குறித்த விவரம் அறிவிப்பில் இல்லை என்பதைக் கவனிக்கவேண்டும்.

தனியார்த் துறைகளில் பெரிய பெரிய அதிகாரிகளாக இருப்பவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களே! அவர் களையெல்லாம் மத்திய அரசுத் துறைகளில் கொண்டு வந்து திணிக்கும் திரைமறைவு சூழ்ச்சி இதற்குள் பதுங்கிக் கொண்டிருக்கிறது.

மத்திய பி.ஜே.பி. அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் (நீட்' முதல் குருகுலக் கல்வி உள்பட) சமூகநீதியின் கழுத்தில் கத்தி வைப்பதில்தான் கூர்மையாக இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. இன்னும் ஓராண்டுதான் மத்தியில் பி.ஜே.பி. இருக்கப் போகிறது. அதற்குள் தங்க ளுக்கு வேண்டிய பார்ப்பன அதிகாரிகளை முக்கிய துறை களில் எல்லாம் கொண்டு வந்து வைத்துவிட வேண்டும் - பார்ப்பன அதிகார மய்யத்தை உருவாக்கவேண்டும் என்ற உள்நோக்கம் இதில் சூட்சமமாக இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத் தப்பட்ட, சிறுபான்மை உறுப்பினர்கள் எல்லாம் கட்சி வேறுபாடின்றி எதிர்க்கவேண்டும். நாடாளுமன்றம் கூடும்வரை காத்திராமல், இவர்கள் குடியரசுத் தலைவர், பிரதமர் போன்றவர்களைச் சந்தித்து இத்திட்டத்தைக் கைவிடவேண்டும் என்று வற்புறுத்தவேண்டும்.

இது மிகமிக அவசரம், அவசியம்! மனுதர்ம ஆட்சியின் கடைசிக் காலத்தில் இன்னும் என்னென்ன சமூக அநீதிகள் தலைதூக்குமோ என்று தெரியவில்லை.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! எதற்காகப் போராட்டம் என்று கேட்கும் அதிமேதாவிகள் மத்திய அரசின் இத்தகு சமூக அநீதிப் போக்குகளைப் பார்த்துக்கொண்டு பேன் குத்திக் கொண்டு இருக்கவேண்டுமா? இப்படிக் கருத்துக் கூறுபவர்கள் எல்லாம் பி.ஜே.பி.யின் ஊதுகுழல்கள் என்பதையும் அம்பலப்படுத்துவோம்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...