Wednesday, May 9, 2018

'நீட்'டை ஒழிக்கும் வரை தொடர் போராட்டங்கள்! போராட்டங்கள்!!

மாநில பாடத் திட்டங்களில் படிக்கும் பெரும்பான்மை மாணவர்களைப் புறக்கணித்து விட்டு சிறுபான்மை எண்ணிக்கையில் படிக்கும் சி.பி.எஸ்.. பாடத் திட்டத்தில் 'நீட்' என்பது மோசடியே!

தமிழ்நாட்டில் மும்மொழி திட்டத்திற்கு இடமில்லை; தமிழ்நாட்டின் இந்தக் கல்விக் கொள்கைக்கு மாறாக மும்மொழி திட்ட கொள்கையுடைய சிபிஎஸ்இ---யின் பாடத்திட்டங்களில் 'நீட்' தேர்வு நடத்துவதும்தேர்வை நடத்திட சி.பி.எஸ்..யிடம் பொறுப்பை ஒப்படைப்பதும் திட்டமிட்ட சதியே

'நீட்'டை ஒழிக்கும் வரை தொடர் போராட்டங்கள் நடைபெற வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள சமூகநீதி அறிக்கை வருமாறு:
'நீட்' தேர்வு என்பது, பார்ப்பன மேலாதிக்க ஜாதியினர் கல்வியை மீண்டும் மனுதர்ம யுகத்திற்கே கொண்டு செல்லப்படுவதற்கான பா... அரசின் திட்டமிட்ட ஏற்பாடு ஆகும்.
நரபலி! நரபலி!! நரபலி!!!
இதனை உச்சநீதிமன்றத்தையே கருவியாகப் பயன்படுத்தி, சமூகநீதியை பலிபீடத்தில் நிறுத்தி, அதனை "காவு" வாங்கி வருவதோடு, அதன் நீட்சி தாழ்த்தப்பட்ட சமூக மருத்துவ கனவாளராகிய அனிதா முதல், ஒடுக்கப்பட்ட சமூகப் பெற்றோர்கள் மூவரையும், நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்கும், மய்யங்களுக்கும் அலைக்கழித்ததன் விளைவாக "நரபலி"யை மேலும் மேலும் கொடுத்துள்ளோம்.
விளக்குடி, சிவகங்கை அருகே சிங்கம்புணரி மற்றும் புதுச்சேரி பெற்றோர்கள் தங்களின் (இருபால்) பிள்ளைகளை டாக்டர்களாக்கிப் பார்க்க விரும்பி உயிர்ப்பலியை 'நீட்'டின் கோரப் பசிக்கு உணவாக அளித்துள்ள கொடுமை, மனிதாபிமானம் உள்ள அனைவரது நெஞ்சங்களையும் பிளக்கவே செய்கிறது.
பொறுப்பு மத்திய - மாநில அரசுகளே!
இதற்கு தற்போதுள்ள மத்திய அரசும், மாநில அரசுமே முழு பொறுப்பேற்க வேண்டியவர்களும், குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்களும் ஆவார்கள்; எப்படி?
1. தமிழ்நாட்டில் கடந்த சுமார் 1லு ஆண்டுகளுக்கு முன்னால் சட்டமன்றத்தில் 'நீட்' தேர்விலிருந்து விலக்குக் கோரும், (எதிர்க் கட்சிகளாலும் ஆதரிக்கப்பட்டு) ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட இரண்டு நீட் தேர்வு விதி விலக்கு மசோதாக்கள் இன்னும் குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெறாமலும் - அல்லது தகுந்த காரணம் காட்டி நிராகரிக்கப்பட முடியாமலும் - எங்கிருக்கிறது என்று அறிய முடியாத - வெட்கங் கெட்ட நிலைதான்!
தமிழ்நாடு அரசும், ஆளுங் கட்சியின் சுமார் 50 எம்.பி.க்களும் இருந்துமா இந்நிலை?
இந்த விலக்குக் கோருவது, மத்திய அரசு, மாநில அரசிற்குக் காட்டும் சலுகையோ, போடும் பிச்சையோ அல்ல! அரசியல் சட்டப்படி நமக்குள்ள உரிமை! உரிமை!!
தமிழ்நாட்டின் இரு மசோதாக்களின் நிலை என்ன?
கிராமப்புற மாணவர்கள், ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் பாதிக்கா வண்ணம் இந்த ஆண்டிற்காவது விலக்குத் தரும் அவசரச் சட்டத்தைக் கொண்டு வருவோம் என்று அன்றைய வர்த்தக அமைச்சர் (இன்றைய பாதுகாப்பமைச்சர்) திருமதி. நிர்மலா சீத்தாராமன் கொடுத்த வாக்குறுதியை மெய்யெனக் கருதி, தமிழ்நாட்டு மருத்துவத் துறை அமைச்சரும், அதிகாரிகளும் டில்லிக்குச் சென்று காவடித் தூக்கி, பெரும் ஏமாற்றத்துடன் திரும்பினரே!
இந்த லட்சணத்தில் தமிழ்நாடு 'நீட்' தேர்வினை எதிர்க்கிறது என்று ஒரு புறம் கூறிக் கொண்டே, மற்றொருபுறம் 'நீட்' தேர்வு பயிற்சி மய்யங்கள் என்ற பெயரால், மாணவர்கள் - பெற்றோரின் மத்தியில் ஒரு மறைமுக ஏற்பு மனப்போக்கையே உருவாக்கி, எதிர்ப்பினை நீர்த்துப் போக உதவுகின்ற வகையில்தான் இன்றுவரை "வித்தைகளை" நடத்தி வருகின்றனர்!
தமிழக  மாணவர்களைப் பழி வாங்கும் கெட்ட நோக்கம்!
துவக்கத்திலிருந்தே 'நீட்' தேர்வு எழுதச் சென்ற அத்துணை இருபால் மாணவர்களும் மிகப் பெரும் அவமானங்களைச் சுமந்து, மன அழுத்தத்திற்கும், மன உளைச்சலுக்குமே ஆளாகினரே! இப்போது நடந்துள்ள  தேர்வுக்காக வெளி மாநிலத்திற்கு நம் பிள்ளைகள் - அதுவும் ராஜஸ்தான், சிக்கிம் போன்ற மாநில மய்யங்களுக்குச் செல்ல வைப்பது அநீதியல்லவா! வேண்டுமென்றே தமிழக மாணவர்களைப் பழி வாங்கும் கெட்ட நோக்கத்தோடு தானே இப்படி சி.பி. எஸ்.. துறை நடந்து கொள்ளுகிறது - மறுக்க முடியுமா?
இதற்கு உச்சநீதிமன்றத்தின் முழு ஒத்துழைப்பும் - 'அசல் அநியாயம் அப்பீலில் அதுவே காயம்' என்ற பழமொழிக்கொப்ப, தேர்வுக்கு மூன்று நாள் இருக்கும்போது - அறிவிக்கப்பட்ட வேறு மாநிலங்களுக்குச் சென்றுதான் தேர்வு எழுத வேண்டும் என்ற தீர்ப்பு மூலம் மாணவர்கள் அலைக்கழிப்பு என்ற "விஸ்வரூபம்" எடுக்கச் செய்துள்ளது.
பொதுப் பட்டியல் என்றால் என்ன?
கல்வி என்பது மத்திய அரசின் ஏகபோக அதிகாரத்துறையா? மாநில அரசுப் பட்டியலில் (State List)  முன்பு இருந்த கல்வி 1976இல் ஒத்திசைவுப்  பட்டியலுக்கு (Concurrent List) ஒரு தலைப்பட்சமாக எடுத்துச் செல்லப்பட்டாலும் - ஒத்திசைவுப் பட்டியலில் இருந்தாலும், அதனை சற்றும் பொருட்படுத்தாமல் சி.பி.எஸ்.. (CBSE) நிர்வாகம் தமிழ் மாநிலத்தில் "தனிக்காட்டு ராஜ்யம்" நடத்தி வருகிறது.
இது ஒருவகை நவீன மனுவின் வர்ண தரும ஏற்பாடு  தானே! அதோடு அதில் வர்க்க ஆதிக்கமும் புகுந்து விளையாடுகிறது!
சிறுபான்மையாக உள்ள பார்ப்பனர், பிர்மாவின்தலையில் பிறந்தவன், மற்ற பெரும்பான்மையினர் "சூத்திரர்கள் பிர்மாவின் காலிலும், அதற்கும் வெளியே பிறந்தவர்கள் "பஞ்சமர்" என்றும் ஆக்கியுள்ளதுபோல் - மாநிலத்தில் 10 அல்லது 15 விழுக்காடு உள்ள மாணவர்கள் சி.பி.எஸ்.. பள்ளிப் பாடத்தில் படிக்கின்றனர். 80 விழுக்காடு மாணவர்கள் தமிழ்நாடு மெட்ரிக்குலேசன் மற்றும் செக்கண்டரி பள்ளிப் பாடமும் படிக்கும் நிலையில் இந்தப் பெரும்பான்மையினர் அலட்சியப்படுத்தப்பட்டு, சி.பி.எஸ்.. பாடத்  திட்டத்திலிருந்து 'நீட்' தேர்வுக்கான கேள்விகள் பெரிதும் என்றால் இதைவிட ஒரு பச்சை அநியாயம், திட்டமிட்ட சதி வேறு  ஒன்று இருக்க முடியுமா?
சி.பி.எஸ்.. தகுதி திறமை இது தானா?
தகுதி, திறமைக்கு அடையாளம் தாங்கள்தான் என்று பீற்றிக் கொள்ளும் சி.பி.எஸ்.-யின் தகுதிநிர்வாகத் திறமையின் லட்சணம் நன்றாக விளங்கிவிட்டதே, ஊர் சிரிக்கிறதே! சர்வீஸ் கமிஷன் தேர்வில் எழுதும் 12 லட்சம் பேர்களுக்கு தேர்வு மய்யங்கள் அமைத்த தமிழ்நாட்டிற்கு  அதிகபட்சம் சுமார் ஒரு லட்சம் பேர் எழுதிட தேர்வு மய்யங்களை ஏற்பாடு செய்ய முடியாதா என்று தமிழ்நாடு அமைச்சர் இப்போது கேள்வி கேட்கிறார்!
இதை உச்சநீதிமன்றத்தில் தங்கள் வழக்குரைஞர் மூலம் கேட்டிருக்க வேண்டாமா? இங்குதான் நடத்த வேண்டும் என்று வற்புறுத்தியிருக்க வேண்டும்.
கார்ப்பரேட்டுகளைக் கொழுக்க வைக்கவா?
தேர்வு நடத்துவதிலும் குளறுபடி! இந்தியில் கேள்வித் தாள்கள் சில ஊர்களில் கொடுக்கப்பட்டு, 5 மணி நேர தாமதமாம்! பிள்ளைகள் 5 நிமிடம் தாமதம் என்றால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படும் நிலையில், இப்படி 5 மணி நேர அலைக்கழிப்புதான் 'அவாளின்' தனித் 'தகுதி'  'திறமையா?'
சி.பி.எஸ்.. பள்ளிகளுக்கு இடம் இல்லை என்று துணிந்து கூற வேண்டும் தமிழக அரசு. தமிழ்நாடு அரசின் 50 ஆண்டு கால கொள்கை  இரு மொழித் திட்டமாகும். இந்நிலையில் மும்மொழித் திட்டம்  உள்ளதாலும், 'நீட்' தேர்வு பல குளறுபடிகளும், ஊழலும் செய்ததோடு, கார்ப்பரேட் பன்னாட்டு முதலாளிகளின் வர்த்தக களமாக்கிடும் பயிற்சி மய்யங்கள் கொழுக்கவே  உருவாக்கப்பட்டது என்பதால் 'நீட்' தேர்வை எதிர்த்து குறைந்தபட்சம் தமிழ்நாட்டுக்கு விலக்குப் பொறுவதற்காக  தொடர் போராட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் - ஒத்த கருத்துள்ள அனைவராலும்!
புதுவை 'ஜிப்மர்' (Jipmer) டில்லி எயிம்ஸ் (AIIMS)  இவைகளுக்கு மட்டும் விலக்காம்!
இது என்ன இரட்டை அளவுகோல்!
அடுத்தாண்டு 'நீட்' கிடையாது என்று சொல்லும்   துணிவு உண்டா?
"அடுத்த ஆண்டு தேர்வு மய்யங்கள் தமிழ்நாட்டிலேயே இருக்கும்" என்று தமிழக அரசோ, அமைச்சர்களோ கூறுவதைவிட, அடுத்த ஆண்டு முதலே 'நீட்' தேர்வே இருக்காது  -அதற்கான மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற்றே தீருவோம் என்றல்லவா அமைச்சர்கள் கூற வேண்டும். அப்படிக் கூறத் துணிவு இல்லாதது ஏன்?
போராட்டம் தொடரட்டும்! தொடரட்டும்!
உள்ளத்தில் உறுதி இருந்தால் - நிச்சயம் கூற முடியும். பிடிவாதம் காட்டிடும் மத்திய பா... அரசுக்கு வரும் 2019 தேர்தலில்  அல்லது எப்போது தேர்தல் வந்தாலும், அத்தகைய ஆட்சிக்கும், அவர்களுக்குத் துணையான பொம்மாலாட்ட தமிழ்நாடு அரசுக்கும் தமிழக மக்கள் விடை கொடுத்து வீட்டுக்கனுப்புவார்கள் என்பது உறுதியிலும் உறுதி!
போராட்டம் தொடரட்டும்! தொடரட்டும்!!

கி. வீரமணி
தலைவர் திராவிடர் கழகம்
சென்னை
8.5.2018

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...