Friday, April 27, 2018

தஷ்வந்துகளுக்கான தண்டனை வரவேற்கத்தக்கதே!

பொறியியல் பட்டதாரியான தஷ்வந்த் சிறுமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி, 7.2.2017 அன்று கொலை செய்தான். அவ்வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், 2.12.2017 அன்று அவன் தாயிடம் செலவுக்கு பணம் கேட்டுத் தாக்கி கொன்றுவிட்டு, தாயின் நகைகளுடன் மும்பைக்கு தப்பி ஓடினான். மும்பையில் காவல்துறையினரிடம் பிடிபட்ட பின்னரும் தப்பினான். அதன்பிறகு காவல்துறையினரிடம் பிடிபட்டான்.
கண்காணிப்புக் கேமரா பதிவுகளை வைத்து அவனது நடத்தையில் சந்தேகமடைந்து காவல்துறை யினர் பிடித்து விசாரணை நடத்தியபோது, தஷ்வந்த் கொலை செய்ததும், சிறுமி உடலை மறைக்க சாக்குமூட்டையில் கட்டி எடுத்துச்சென்று எரித்ததும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தஷ்வந்தை கைதுசெய்து குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனர்.
காவல்துறையினர் மூன்று மாதங்களுக்குள்  குற்றப் பத்திரிகையை நீதிமன்றத்தில் அளிக்காததையடுத்து, குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்த நீதிமன்றம், பிணையில் அவனை விடுவித்தது.
இந்த வழக்கின் விசாரணை கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி முடிவடைந்து, 19ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 19.2.2018 அன்று தஷ்வந்தை புழல் சிறையிலிருந்து பாதுகாப்புடன் காவல்துறையினர் செங்கற்பட்டு பெண்கள் நீதிமன் றத்துக்கு அழைத்து வந்தனர். கடந்த முறை பொது மக்கள், பெண்கள் அமைப்பினர் தஷ்வந்தை தாக்கியதால், நீதிமன்ற வளாகத்திற்குள் பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் யாரையும் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் 19 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.
தஷ்வந்த் மீதான குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட் டுள்ளதால் அவனை குற்றவாளி என அறிவித்து, தீர்ப்பை வாசித்த நீதிபதி வேல்முருகன் தனது தீர்ப்புரையில் குற்றவாளி தஷ்வந்த் மீதான 302, 363, 366, 354(பி) 21 ஆகிய பிரிவுகளில் குற்றங்கள் நிரூபணமாகியுள்ளன என்று தெரிவித்து தண்டனையை அறிவித்தார். தஷ்வந்துக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்குவதாக அறிவித்தார்.
இந்த வழக்கில் நேரடி சாட்சிகள் இல்லாத நிலையில், அறிவியல்பூர்வமாக ஆதாரங்களைச் சமர்ப்பித்து வழக்கை நடத்தியதாக சிறுமியின் பெற்றோர் தரப்பு வழக்குரைஞர் கண்ணதாசன் தெரிவித்தார். அறிவியல்பூர்வமாக ஆதாரங்களைத் திரட்ட வேண் டியிருந்ததாலேயே காலதாமதம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஹாசினி வழக்கு தவிர, மும்பையில் காவல்துறை யினரிடமிருந்து தப்பிய வழக்கு, தாய் சரளாவைக் கொலை செய்த வழக்கு ஆகியவை நிலுவையில் இருக்கின்றன.  தாய் சரளாவைக் கொன்ற வழக்கு சிறீபெரும்புதூர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
மனிதர்களாக உருவத்தில் நடமாடினாலும், உள்ளத்தில் மிருகங்களும் தலைகுனியும் அளவுக்கு மனிதனின் அறிவும், நடப்பும் இருப்பது குறித்து மானுடம் வெட்கப்படத்தான் வேண்டும்.
கல்வியும், செல்வமும், வாழ்க்கை வசதிகளும் ஒருபுறம் வளர்ந்தாலும், அறிவும், ஒழுக்கமும் தடம் மாறிப் போவதற்கு என்ன காரணம் என்பது கண்டுபிடித்தே ஆகவேண்டியவையாகும்.
கல்வியில் குறைபாடு, நுகர்வோர் கலாச்சாரம், கலை உலகம், ஆடம்பர வாழ்வில் அமோக ஆர்வம் இவை இந்நிலைக்கு முக்கிய கூறுகள் என்பதில் அய்யமில்லை.
இதற்கான சில கட்டுப்பாடுகள் கண்டிப்பாகத் தேவையே! அதுவும் பருவத்தே பயிர் செய் என்ற முறையில் இளமையைச் செப்பனிடவில்லை என்றால், எதிர்காலம் தறிகெட்டுப் போகத்தான் செய்யும்.
நம் நாட்டு மதங்களும் பக்தியைப் புகட்டுகிறதே தவிர, ஒழுக்கத்தை உணர்த்துவதில்லை. கொடிய குற்றங்களுக்கும் பரிகாரங்களை வைத்துள்ள மதங்கள், எப்படி ஒழுக்கத்தின் ஆசானாக இருக்க முடியும்?
கொலைத் தண்டனை கொடியதுதான் என்றாலும், சட்டத்தால் அது அனுமதிக்கப்படும்வரை அதனைப் பயன்படுத்துவதில் தவறு இல்லைதான்.
பொறியியல் பட்டதாரியான தஷ்வந்த்துக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை புதிய நன்னடத்தை வெளிச்சத்தைக் கொடுக்கட்டும்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...