விசுவ ஹிந்து பரிஷத் என்ற சங்பரிவாரின் கூர்முனை யான அமைப்பின் சார்பில் அயோத்தி முதல் இராமேசுவரம் வரை "இராம ராஜ்ஜியம் இரத யாத்திரை" என்ற பெயரில் ஒரு பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம், கருநாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் பயணித்து, வரும் 20ஆம் தேதியன்று தமிழ்நாட்டின் செங்கோட்டையில் நுழைந்திடத் திட்டமிட்டுள்ளனர். இராசபாளையம் வழியாக மதுரை இராமேசுவரம், திருநெல்வேலி, கன்னியா குமரி, நாகர்கோயில் வழியாக மார்ச்சு 23ஆம் நாள் திருவனந்தபுரம் சென்று பயணம் முடிவடைகிறது.
இது வெறும் பயணம் தானே என்று அலட்சியப்படுத்திட முடியாது, கூடாது. விசுவ ஹிந்து பரிஷத் என்றால் அவர்கள் மக்களுக்குத் திரிசூலங்களை வழங்கி வன்முறையைத் தூண்டக் கூடிய அமைப்பாகும்.
சூலத்தில் ஒரு முனை முஸ்லிம்களையும், இன்னொரு முனை கிறித்தவர்களையும், மூன்றாவது முனை மதச் சார்பின்மை பேசும் மதச் சார்பற்றவர்களையும் குத்திக் கிழிக்கும் - கிழிக்க வேண்டும் என்பதுதான் அதன் தாத் பரியம்.
இத்தகு வன்முறை அமைப்பின் பயணத்தை - அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் அனுமதிப்பது ஆரோக்கியமானதல்ல; பாபர் மசூதி இடிப்பில் விசுவ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்தவர்களின் பங்கு மிக முக்கிய மானது.
1990 செப்டம்பர் 25 அன்று லால்கிஷன் அத்வானி ரத யாத்திரை ஒன்றை பல மாநிலங்களில் நடத்தினார். அப் பொழுது பல மாநிலங்களிலும் மதக்கலவரம் வெடித்தது.
ஆந்திராவில் 4 கலவரங்கள் - பலி 23, அசாமில் ஒரு கலவரம் - 7 பலி, பீகாரில் 8 கலவரங்கள் - பலி 19, புதுடில்லி - மனித பலி 8, குஜராத்தில் 26 கலவரங்கள் - 99 பலி, கருநாடகா 22 கலவரம் - பலி 88, கேரளாவில் 2 கலவரங்கள் - பலி 3, மத்தியப் பிரதேசத்தில் 5 கலவரங்கள் - பலி 21, மகாராட்டிரத்தில் 3 கலவரங்கள் - பலி 4, ராஜஸ்தானில் 13 கலவரங்கள் - பலி 52, உத்தரப்பிரதேசத்தில் 28 கலவரங்கள் - பலி 224, மேற்குவங்கம் 2 கலவரங்கள் - பலி 6. ஆக 564 பேர் அத்வானியின் ர(த்)த யாத்திரையால் கொல்லப்பட்டனர். அந்தக் கலவரங்களைத் தொடர்ந்துதான் பீகாரில் முதல் அமைச்சர் லாலு பிரசாத் அத்வானியின் ரத யாத்திரையைத் தடை செய்தார்.
மண்டல் குழுப் பரிந்துரைகளில் ஒன்றான பிற்படுத்தப் பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இடங்களை சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் செயல்படுத்திய காரணத்தால் தன் ஆதரவை (அந்த ஆட்சியை வெளியி லிருந்து ஆதரவு அளித்த நிலையில்) விலக்கிக் கொண்டு வி.பி. சிங் தலைமையிலான ஆட்சியைக் பி.ஜே.பி. கவிழ்த் தது என்பது வரலாறு.
இப்பொழுது விசுவ ஹிந்து பரிஷத் என்ற வன்முறை அமைப்பு அய்ந்து முழக்கங்களை முன் வைத்து ஒரு யாத்திரையைத் தொடங்குகிறது.
(1) இராம ராஜ்ஜியத்தை மறு நிர்மாணம் செய்வது.
(2) பாடத் திட்டத்தில் இராமாயணத்தை இணைப்பது
(3) இராம ஜன்ம பூமியில் இராமர் கோயில் கட்டுவது.
(4) வியாழக்கிழமை வார விடுமுறை நாளாக அறி விப்பது.
(5) உலக இந்து நாள் அறிவிப்பு என்ற முழக்கங்களோடு இந்தப் பயணத்தை விசுவ ஹிந்து பரிஷத் தொடங்கு கிறார்கள்.
இந்த அய்ந்து முழக்கங்களும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முகாமையாகக் கூறப்பட்டுள்ள மதச் சார்பின் மைக்கு விரோதமாகும்.
இராமனை முன்னிறுத்துவது என்பது வருணாசிரமத்தை நிலை நிறுத்தும் நோக்கமே! வருண தருமத்திற்கு எதிராக சம்பூகன் என்னும் சூத்திரன் தவமிருந்தான் என்பதற்காக அவனை வெட்டிக் கொன்றவன் இராமன். அத்தகைய ஒரு வனது பெயரால் ராஜ்ஜியத்தை அமைப்போம் என்பதும், இராமாயணத்தைப் பாடத் திட்டத்தில் இணைப்போம் என்பதும் எத்தகைய மனப்போக்கு - எத்தகைய அயோக் கியத்தனம்!
ஆட்சி அதிகாரம் தங்கள் கைக்கு வந்துவிட்டது என்கிற காரணத்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம், சாதிக்கலாம் என்று நினைப்பது சிந்தனை ரீதியான வன் முறைத்தனம் தானே!
உலக இந்து நாளாக அறிவிக்க வேண்டுமாம். இந்து என்ற ஒரு மதமே கிடையாது - அது பிராமண மதம் என்று ஆகிவிட்ட பிறகு, பார்ப்பனீயத்தை உயர்த்திப் பிடிக்க 'ஹிந்து' என்ற முகமூடி தேவைப்படுகிறது - இந்தக் கூட்டத்துக்கு. மூன்று சதவீத பார்ப்பன கூட்டத்தின் இந்தத் திரை மறைவு சதியை முறியடிக்க 97 சதவீத மக்கள் ஒன்று சேர வேண்டிய கால கட்டம் இது.
இராவண - இராம யுத்தத்துக்கு கத்தியைத் தீட்டு கின்றனர். அதுதான் வி.எச்.பி.யின் இந்த ரத யாத்திரையின் அடிப்படை நோக்கம்.
அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் கலவரம் தூண்டப்படுவதை அனுமதிக்க முடியாது - கூடாது - இது ஒரு கட்சிப் பிரச்சினையல்ல - ஒட்டு மொத்தமான சமுதாயப் பிரச்சினை.
தோழர் மி.த. பாண்டியன் அவர்களை ஒருங்கிணைப் பாளராகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள காவி பயங்கர வாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினை (தமிழ்நாடு) வரவேற்கிறோம்.
மார்ச் 20ஆம் தேதி செங்கோட்டையில் நுழைய விருக்கும் பாசிச காவி வி.எச்.பி.யின் இராம ராஜ்ஜிய ரத யாத்திரையை எதிர்க்கும் தடை தடுப்பு மறியலுக்கு நமது ஆதரவு உண்டு. கழகத் தோழர்கள் பங்கேற்கவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
No comments:
Post a Comment