பா.ஜ.க. கருநாடக தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் பெயர் பட்டியலையும் இரண்டு கட்டங்களாக அறிவித்து விட்டது. இதில் மிகவும் அதிர்ச்சி கரமான தகவல் என்னவென்றால் இரண்டு பட்டியல் களிலும் இசுலாமியர், கிறித்துவர், இதர சிறுபான்மை(பவுத்த, சீக்கிய மற்றும் ஜெயின்)பிரிவு வேட்பாளர் ஒருவர் கூட இல்லை. இதிலிருந்து இந்துக்களை மட்டும் நிறுத்தும் போது ஒட்டுமொத்த இந்துக்களும் தமக்கான கட்சி என்று கருதி வாக்களிப்பார்கள் என்ற ஒரு மனப்பாலை பாஜக குடித்துள்ளது. உத்தரப்பிரதேசம், குஜராத், அரியானா, போன்ற மாநிலத்தேர்தல்களிலும் இசுலாமியர் மற்றும் இதர சிறுபான்மையினர் ஒருவரைக் கூட நிறுத்தவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கருநாடகாவில் 2016ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 87 விழுக்காடு இந்துக்கள், 14 விழுக்காடு முசுலீம்கள், 2 விழுக்காடு கிறித்துவர்கள், இதர சிறுபான்மையினர் ஒரு விழுக்காடு உள்ளனர். இதில் இந்துக்கள் என்று கூறப்படுபவர்களில் லிங்காயத்துக்கள் 20 விழுக்காடு மற்றும் தலித்துகள் 18 விழுக்காடு உள்ளனர். தென் மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, கருநாடகா, மற்றும் கேரளாவில் ஆட்சியைப்பிடிக்க இசுலாமியர்களின் வாக்குகள் காட்டாயம் தேவை என்ற நிலையில் அவர்களைத் தனிமைப்படுத்தி இந்துக்களுக்கான கட்சி பா.ஜ.க.வே என்று மதவாரியாகப் பிரித்து வாக்குகளைப் பெறலாம் என்ற தந்திரமும் இதில் அடக்கம்!
அதேவேளையில் காங்கிரசு கட்சி 15 இசுலாமி யர்களுக்கும், 4 இதர சிறுபான்மையினருக்கும் வாய்ப்பு அளித்துள்ளது. பா.ஜ.க.வினர் ரம்ஜான் பண்டிகையின் நோன்பு காலங்களில் கஜபோஜனம் என்ற பெயரில் கோவில்களிலும், பொது இடங்களிலும் இலவச உணவு வழங்கும் விழா நடத்தியபோது இசுலாமியர்களின் நோன்பு காலத்தை கேலி செய்தனர். இதன் மூலம் இசுலாமிய வெறுப்பு கொண்ட மக்கள் தங்கள் பக்கம் திரும்புவார்கள் என்று எண்ணியிருந்தார்கள். மேலும் கிறித்துவர்களின் கிறித்துமஸ் பண்டிகையின் போது போட்டியாக "நல்லாட்சி நாள்" என்ற பெயரில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளைக் கொண்டாடினர். இதன் மூலம் நாங்கள் இந்துக்களுக்கானவர்கள் மட்டுமே என்ற ஒரு செய்தியைக் தொடர்ந்து கூறிவந்த நிலையில் தற்போது இசுலாமியர்கள் உட்பட எந்த ஒரு சிறுபான்மையினருக்கும் பாஜக கட்சியில் இடம் தரவில்லை. இது கருநாடகாவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் ராஜ்நாத் சிங் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், வெற்றிபெறக் கூடிய ஆட்களை மட்டுமே வேட்பாளர்களாக அறிவித்து இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். என்னே சாமர்த்தியப் பேச்சு! இது தேர்தல் சமயத்தில் எல்லோருக்கும் புரியும் என்று கூறியுள்ளார். இசுலாமிய, கிறித்துவ மக்கள் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
120 கோடி மக்கள் வாழும் இந்தியத் துணைக் கண்டத்தில் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களும், சாராதவர்களும் வாழ்கிறார்கள். அரசு என்பது இந்த எல்லாப் பகுதிகளுக்குமான அரசாகும்.
ஆனால் தேசியக் கட்சி என்று பெருமையடித்துக் கொள்ளும் பிஜேபி - இந்தியாவின் ஆட்சியையும், பல மாநிலங்களில் ஆட்சிகளையும் கையகம் வைத்துள்ள பிஜேபி, மதவாதக் கண்ணோட்டத்தோடு "இந்துக்கள் மட்டுமேதான் எங்கள் வேட்பாளர்கள் - மற்றவர்களுக்கு வாய்ப்பு இல்லை!" என்ற முறையில் நடந்து கொள்வது அதன் மதக் குரோத குரூரப் புத்தியைத் தானே வெளிப்படுத்துகிறது.
இத்தகையவர்கள் கைகளில் ஆட்சி அதிகாரம் என்பது, இந்துக்களைத் தவிர்த்த மற்ற சிறுபான்மை மக்களுக்கு எதிரானது - அவர்களுக்கு பாதுகாப்புக் கிடையாது என்கிற திட்டவட்டமான அறிவிப்பாகத் தானே இதனைக் கருத வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்கள் இல்லையா? அவர்கள்மீது ஏன் வன்முறையை ஏவுகிறார்களாம்?
கடந்த காலங்களில் பிஜேபி ஆளும் இடங்களில் எல்லாம் சிறுபான்மை மக்கள் மீதான வன்முறைத் தலை விரித்தாடுவதை நாடு கண்டு கொண்டுதான் உள்ளது. இந்தச் சக்திகளை வளர விடலாமா? எச்சரிக்கை! எச்சரிக்கை!!
No comments:
Post a Comment