பன்னாட்டளவில் ஒப்பிடுகையில், இந்தியாவில் உள்ள குழந்தைகளில் 50 விழுக்காட்டளவில் ஊடடச்சத்து குறைபாடுகளுடனும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்குத் தேவையான அளவுக்கு உணவு கிட்டுவதில்லை என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் திட்டங் களுக்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரித்திட வேண்டும் என்றும் ஓர் ஆய்வறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.
தேசிய குடும்ப நல ஆய்வு - 4இன்படி, வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களை எடுத்துக் காட்டி, அசோசெம் - இஒய் ஆய்வறிக்கையில் வெளியிடப்பட்ட தகவலில், ஆறு மாதம் தொடங்கி 59 மாதங்கள் வரையிலான குழந்தைகள் 60 விழுக்காட்டளவில் ரத்த சோகையுடன் உள்ளனர். நாடுமுழுவதும் உள்ள குழந்தைகளில் வெறும் 10 விழுக்காட்டினர் மட்டுமே உரிய உணவைப் பெறுகிறார்கள்.
15 வயது முதல் 49 வயது வரை உள்ள பெண்களில் கருவுறாத பெண்கள் 55 விழுக் காட்டளவிலும், கருவுற்ற பெண்களில் 58 விழுக் காட்டளவிலும் போதிய ஊட்டச் சத்தின்றி ரத்த சோகையுடன் இருக்கிறார்கள்.
இந்தியாவின் பெரும்பகுதியில் உள்ளவர்கள் சத்தில்லாத உணவு, சரிவிகிதமற்ற உணவு, ஊட்டச் சத்தில்லாத உணவையே உண்டு வருகின்றனர்.
ஊட்டச்சத்து பற்றாக்குறை என்பதில் தேவையான உணவு கிட்டாமை என்பதைவிட நடைமுறைப்படுத்தப்படுகின்ற திட்டங்களால் நிகழும் குறைபாடுகளே இதில் அதிகம் என்பது கசப்பான உண்மையாகும். சுகாதாரம், கல்வி, துப்புரவு, உடல் நலன், பெண்களுக்கான அதிகார மளித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுடன் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்புகொண்டதாக இருந்து வருகிறது என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசோசெம் பொதுச் செயலாளர் டி.எஸ்.ராவத் கூறுகையில்: “சமுகம் மற்றும் சுகாதாரத்தில் சமத்துவமின்மையைக் களைந்திட கவனத்தை செலுத்தும்வகையில் அரசு கொள்கையை வகுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஊட்டச்சத்து சுமை இரட்டிப்பாக உள்ள தற்போதைய சூழலில் அதிலிருந்து மீட்கப்படும் வகையில் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் அமைதல் வேண்டும்’’ என்கிறார்.
அரிசி மற்றும் கோதுமையைவிட கம்பு போன்ற தானியங்கள் மூன்று முதல் அய்ந்து மடங்கு சத்தானவை. புரதம், தாது, வைட்டமின் சத்துகள் அதிக அளவில் கிடைக்கின்றன. அரிசி, கோதுமையுடன் ஒப்பிடுகையில், செலவு குறைவான பயிராகவும் உள்ளன. வைட்டமின் பி, கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம், துத்தநாகச்சத்து மிகுந்தவையாக உள்ளன. இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் உள்ள நீரிழிவு நோயாளிகளுக்கும், பொருந்தக் கூடியதாக கம்பு உள்ளது.
மோசமானதும் மீள முடியாததுமாக உள்ள ஊட்டச்சத்துக் குறைபாடு பல தலைமுறை யினரிடையே தாக்கங்களை ஏற்படுத்தி வருவது குறித்து அனைத்து குடிமக்களும் கவனம் செலுத்தினால்தான் போதுமான ஊட்டச்சத்து கிடைப்பதன்மூலம் நாடு வளர்ச்சி பெறும்.
அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு போது மான சத்து கிடைக்காத நிலையில், பல வகைகளி லும் சத்தான உணவு உற்பத்திப் பெருக்கத்தை முன்னிறுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மன்கீபாத் என்று மாதத்திற்கு ஒரு முறை வானொலியில் முழங்கும் பிரதமர் மோடிக்கு இதுபற்றியெல்லாம் அக்கறை கிடையாது.
குடிமக்கள் சத்தான உணவு பெற வேண்டும்; நாட்டு வளங்களுள் மனித வளம் என்பது முதன்மையானது. இவற்றைப் பற்றி எல்லாம் கருத்தூன்றாமல் மனித வளத்தைத் தாண்டி மத வளத்தைத் தேடி செல்லுபவர்கள் மக்கள் நலன்பற்றி சிந்திப்பார்கள் என்று எப்படி எதிர்ப் பார்க்க முடியும்?
No comments:
Post a Comment