தமிழகத்தில் லோக் ஆயுக்தா உடனடியாக அமைக்கப் படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. தமிழகம், புதுவை, ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, தெலங்கானா, திரிபுரா, மற்றும் மேற்கு வங்கம் முதலிய 12 மாநிலங்களில் லோக் ஆயுக்தா இன்னும் அமைக்கப்படவில்லை. இந்த மாநிலங்களில் லோக் ஆயுக்தாவை அமைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் லோக் ஆயுக்தா விசாரணை நீதிமன்றங்களை அமைக்காதது ஏன்? அவை எப்போது அமைக்கப்படும் என்பது குறித்து 2 வாரத்துக்குள் எழுத்துப்பூர்வ பிரமாண பத்திரங்களை 12 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் 9 பக்கங்கள் கொண்ட பதிலை எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் லோக்பால் சட்டத்தில் மத்திய அரசு திருத்தங் களை செய்யவுள்ளது; திருத்தப்பட்ட சட்டத்தின் அடிப்படை யில் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்கிறது அந்தப் பதில். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ரஞ்சன் கோகேய் நீதிபதிகள் அமர்வு, தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த பதிலை ஏற்க மறுப்புத் தெரிவித்தனர். தற்போது வரை லோக் ஆயுக்தா அமைக்கப்படாமல் இருப்பதற்கு தமிழக அரசு முன் வைத்த காரணங்கள் ஏற்கும்படியாக இல்லை என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், லோக் ஆயுக்தா அமைக்கும் பணியை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் லோக் ஆயுக்தா அமைக்கும் நடவடிக்கை குறித்து ஜூலை 10ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. லோக்பால், லோக் ஆயுக்தா தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்கவும் நீதிபதிகள் ஆணை யிட்டுள்ளனர். லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் ஊழலுக்கு எதிரான சட்டத்தைக் கொண்டுவர ஏற்படுத்தப்பட்ட மசோதாவாகும். ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மக்களால் நேரடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இம்மசோதா முன் மொழியப்பட்டதாகும்.
இம்மசோதா 22.12.2011இல் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எனினும் மாநிலங்களவையில் இம்மசோதா 29.12.2011இல் நிராகரிக்கப்பட்டது. பின்பு 21.5.2012இல் மாநிலங்களவையின் தேர்வுக் குழுவுக்கு பரிந்துரைக்கப் பட்டது. அக்குழு சில திருத்தங்களைச் செய்த பின் மாநிலங் களவையில் இம்மசோதா 17.12.2013இல் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 18.12.2013இல் மக்களவையில் வாக்கெடுப்பின் மூலம் இம்மசோதா நிறைவேற்றப்பட்டது.
லோக்பால், லோக் ஆயுக்தா மசோதாவின் முக்கிய கூறுகள் மத்தியில் லோக்பால், மாநிலங்கள் நிலையில் லோக் ஆயுக்தா அமைப்பு என்பதாகும், தலைவர் மற்றும் அதிக பட்சமாக 8 உறுப்பினர்களை கொண்டது லோக்பால் அமைப்பு. இதன் உறுப்பினர்களில் பாதிப்பேர் நீதித்துறை யைச் சார்ந்தவர்கள் ஆவர்.
லோக்பால் உறுப்பினர்களில் 50 சதவீதம் பேர் எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மகளிராக இருக்க வேண்டும்.
பிரதமர், மக்களவைத் தலைவர், மக்களவை எதிர்க் கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம் செய்யும் உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் குடியரசுத் தலைவர் நியமனம் செய்யும் சட்ட வல்லுநர் ஆகியோர் இடம் பெற்ற தேர்வுக் குழு வாயிலாக லோக்பால் தலைவர், உறுப்பினர்கள் இருப்பர்.
லோக்பால் விசாரணை வரம்பில் பிரதமர். உள்ளிட்ட கேபினெட் அமைச்சர்கள் வருவார்கள் விசாரணை வரம்புக்குள் அரசு ஊழியர்களில் அனைத்துப் பிரிவினரும் வருவார்கள்.
ஒரு ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்துக்கு மேல் அந்நிய நாட்டில் உள்ளவர்கள் மூலமாக நன்கொடை பெறும் எல்லோரும் லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டு வரப்படுவர்.
நேர்மை, நாணயம் மிக்க ஊழியர்களுக்கு உரிய பாது காப்பு; லோக்பால் பரிந்துரைக்கும் வழக்குகளை சிபிஅய், உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் விசாரிக்கும்போது அதைக் கண்காணிக்க, மேற்பார்வையிட லோக்பாலுக்கு அதிகாரம்.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் பரிந்துரை பேரில் சிபிஅய் வழக்கு தொடுக்கும், லோக்பால் பரிந்து ரைக்கும் வழக்குகளை விசாரிக்கும் சிபிஅய் அதிகாரிகள் லோக்பால் ஒப்புதல் தந்தால் மட்டுமே பணியிடமாற்றம்.
ஆரம்ப நிலை விசாரணை, புலனாய்வு, வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம், அதற்காக சிறப்பு நீதி மன்றங்கள் அமைக்கவும் அதிகாரம்.
ஊழல் வழியில் சேர்த்த சொத்துகளை, வழக்கு நிலுவையில் இருக்கும்போதே பறிமுதல் செய்ய அதிகாரம் தரும் விதிமுறைகள் ஆகியன உள்ளடங்கும்.
லோக்பால் சட்டமாக அறிவிக்கப்பட்டதிலிருந்து 365 தினங்களுக்குள் மாநில சட்டப் பேரவையில் சட்டம் இயற்றி லோக் ஆயுக்தாக்களை அமைப்பது கட்டாயமாகும். இவ்வளவு தெளிவாகக் கூறப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் லோக் ஆயுக்தாவை உருவாக்கத் தயங்குவது ஏன்? மடியில் கனமா?
No comments:
Post a Comment