Friday, April 27, 2018

போராடாமல் என்ன செய்வது?

தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரை அளிப்பதில் எப்பொ ழுதுமே கருநாடக மாநில அரசு சண்டித்தனம் செய்து வருகிறது. அம்மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவிரிப் பிரச்சினையில், தமிழ்நாட்டை வஞ்சிப்பதில் மட்டும் சுருதி பேதமில்லாமல் போட்டிப் போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.
1974 முதல் மிகக் கடுமையான பாதிப்புக்கு தமிழ்நாடு உள்ளாகி வந்திருக்கிறது, விவசாயத்தை நம்பி வாழும் கோடிக் கணக்கான மக்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது. விவசாயிகளின் தற்கொலைகளும் நடக்கத் தொடங்கி விட்டன.
சட்டப் போராட்டம் ஒரு பக்கம் தொடர்ந்து நடந்து கொண்டேதான் வந்திருக்கிறது. நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் அதனை அரசு கெசட்டில் வெளியிடவே போராட வேண்டியிருந்தது.
ஒருவழியாக அது கெசட்டில் வெளியான நிலையில் அத் தீர்ப்புப்படி தமிழ்நாட்டுக்கு நீரைவிட வேண்டும் என்பதற்குப் போராட வேண்டியிருக்கிறது.
நடுவர் மன்ற தீர்ப்பை முடக்க உடனே உச்சநீதிமன்றம்  சென்றது கருநாடக அரசு. நடுவர் மன்ற தீர்ப்பு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு இணையானது என்ற சட்ட நிலை இருக்கும்பொழுது, உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க ஏன் முன் வந்தது என்பது கேள்விக்குறியே.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று நடுவர் மன்றம் தெளிவாகக் கூறிய பிறகு, உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொன்னதா இல்லையா என்ற கேள்வி எங்கிருந்து வந்ததாம்!
'ஸ்கீம்' என்ற வார்த்தையைத்தான் உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறதே தவிர, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூறவில்லை என்பது தந்திரமான சாக்குப் போக்கே!
சரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் 'ஸ்கீம்' என்பதற்கு விளக்கம் கேட்ட தருணத்திலேயாவது வெட்டு ஒன்று துண்டு இரண்டாக வெளிப்படுத்த உச்சநீதிமன்றம் தவறியது ஏன்? இரு பொருள் தொனிக்கும் சொற்களைக் கையாள்வது பொறுப்பான செயல்பாடுதானா?
நீதிமன்றம் இப்படி நடந்து கொள்கிறது என்றால் மத்திய அரசு இரட்டை வேடம் போட்டு வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் - மத்திய அரசின் அத்துறை அமைச்சர் நிதின் கட்காரியைக் கேட்டால், அவர் என்ன சொல்லுகிறார்? காவிரி மேலாண்மை வாரியத்தை எல்லாம் ஆறு வார காலத்தில் அமைக்க முடியாது என்று சொல்லுவது - அவர் ஏற்றுக் கொண் டுள்ள பதவிக்கு உகந்ததுதானா? உச்சநீதிமன்ற தீர்ப்பையே கேலி செய்வது ஒரு மத்திய அமைச்சருக்கு அழகல்லவே!
ஆறு வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறுதியிட்டு ஆணை பிறப்பித்தது. இதன்மீது மேல் முறையீடும் இல்லை என்றும் தீர்க்கமாகவே தீர்ப்பில் கூறப்பட்ட நிலையில், ஆறு வாரத்தின் கடைசி நாள்வரை ஆட்டம் போட்டு, கடைசிக் கடைசியாக 'ஸ்கீம்' என்றால் என்ன என்று விளக்கம்  கேட்பது அசல் ஏமாற்றுத்தனம் அல்லவா?
மத்திய அரசும் சரி, உச்சநீதிமன்றமும் சரி இப்படி 'சித்து' விளையாட்டை மேற்கொண்டால், காவிரி உரிமையை மீட்க வேண்டிய நிலையில் உள்ள கட்சிகள்  வீதிக்கு வந்து போராட் டத்தை மேற்கொள்வதைத் தவிர வேறு வழிதான் என்ன?
அப்படிப் போராடுவதற்கு உள்நோக்கம் கற்பிக்கலாமா? சரி இப்படி உள்நோக்கம் கற்பிக்கக் கூடிய ஆளும் தரப்பினர் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது போராட்டங்களை நடத்தவேயில்லையா?
ஏன் ஆளும் தரப்பில் உள்ளவர்களே கடந்த 3ஆம் தேதி உண்ணா நோன்புப் போராட்டத்தினை நடத்தியது ஏன்? முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சரும்கூட உண்ணா நோன்பில் பங்கு கொண்டது ஏன்?
தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரைக் கொடுக்க வைப்பதில், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு, எதிர்க் கட்சிகளின் இத்தகுப் போராட்டங்களையும், அவற்றிற்கு மக்கள் கொடுக் கும்  ஆதரவினையும் புத்திசாலித்தனம் இருந்தால் பக்குவ மாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா? மாறாக போராட் டங்களைக் கொச்சைப்படுத்துவதும் வழக்குத் தொடுப்பதும் நம் பக்கம் உள்ள பலத்தைப் பலகீனப்படுத்துவது ஆகாதா?
மாறாக சட்ட ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்தி அதிமுக அரசைக் கவிழ்க்க மு.க. ஸ்டாலின் முயற்சிக்கிறார் என்று அதிமுக தரப்பில் கருத்துக் கூறுவது நகைப்புக்குரியதல்லவா! அவர்களின் பலகீனத்தைத்தானே இது காட்டுகிறது!
தமிழ்நாட்டுக்குரிய நீர் அளிக்க உச்சநீதிமன்றம் ஏற்பாடு செய்யும் - தமிழ்நாட்டில் ஏன் போராட்டம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளும் கூறும் நிலை ஏற்பட்டதற்கேகூட தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்கள்தானே காரணமாக இருக்க முடியும்?
தமிழ்நாட்டில் நடத்தப்படும் போராட்டங்கள் எல்லாம் காவிரி நீர்ப் பிரச்சினையில் தமிழ்நாட்டுக்கு சட்டப்படி உரிய நீரை பெறுவதற்கான முயற்சியே தவிர, ஆட்சியைக் கவிழ்க் கும் நோக்கமல்ல! அரண்டவன் கண்ணுக்கு இருண்ட தெல்லாம் பேய் என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...