Friday, April 27, 2018

மூலக்கொத்தள சுடுகாடுப் பிரச்சினை

வட சென்னைப் பகுதியில் மூலக் கொத்தளம் சுடுகாடு என்பதற்கென்று தனிவரலாறு உண்டு. இந்த சுடுகாடுதான்  - இடுகாட்டில்தான் நாட்டுக்காக - நாட்டின் மொழிக்காக இனவுணர்வுக்காக இன்னுயிரை ஈகம் செய்த, தியாக முத்திரை பொறித்த அருந்தமிழர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடமாகும்.
1938இல்  தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வெஞ்சிறை சென்று அந்தச் சிறைக் கோட்டத்திலேயே தன் இன்னுயிரை ஈந்த நடராசன், தாளமுத்து ஆகியோரும், இந்தி எதிர்ப்பு வீராங்கனை டாக்டர் தருமாம்பாள் அவர்களும் அடக்கம் செய்யப்பட்ட இடம் தான் இந்த மூலக் கொத்தளம் சுடுகாடு.
ஈழத் தமிழர்களுக்காகத் தன்னை அழித்துக் கொண்ட முத்துக்குமார், அமரேசன் மீளாத் துயில்கொள்ளும் இடமும் இதே இடுகாடுதான்!
சென்னைப் பெரு நகரம் புதுவண்ணையில் 21ஆம் மண்டலம், 5ஆம் வார்டு மூலக்கொத்தளம் பகுதியில் 20 ஏக்கர் பரப்பில், 120 ஆண்டுகளாகப் பயன்பட்டு வருவதுதான் இந்த சுடுகாடாகும்.
ராஜா முத்தையா செட்டியாரும், மேயர் பாசுதேவும், தோளில் சுமந்து மாவீரன் நடராசனை அடக்கம் செய்ததும் இங்கேதான்.
"விடுதலை பெற்ற தமிழகத்தில் நடராசன், தாளமுத்து ஆகிய இரு வீரர்களின் தியாகத்தை அடிப்படையாகக் கொண்டு,  தலைவர் பெரியாரை நடுவில் வைத்து, இறந்த இரு மணிகளையும் பக்கத்தில் வைத்து உருவச் சிலைகள் எழுப்ப வேண்டும்" என்று இதே மூலகொத்தளம் சுடுகாட்டில் தளபதி அறிஞர் அண்ணா பேசினார்.
இப்படிப்பட்ட வரலாறு படைத்த இந்த சுடுகாட்டில் உள்ள மாவீரர்களின் நினைவுச் சின்னங்களை எல்லாம் இடித்துத் தரை மட்டமாக்கி விட்டு, இந்தச் சுடுகாட்டையே வேறு இடத்திற்குக் கொண்டு சென்று, இந்தச் சுடுகாட்டில், தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் வீடுகள் கட்டப்படும் என்று அ.இ.அ.தி.மு.க அரசு ஆணையையே பிறப்பித்து விட்டது.
இந்த நிலையில் தான் மதிமுக சார்பில் நேற்று (13.3.2018) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்  கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்தார் மதிமுக பொதுச் செயலாளர் மானமிகு வைகோ அவர்கள். ஈரோட்டில் நடைபெற்ற மதிமுக பொதுக் குழுவிலும் இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் கலந்து கொண்டனர். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, திமு.க. மாவட்ட செயலாளர்கள் சேகர்பாபு மாதவரம் சுதர்சனம், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநில செயலாளர் தோழர் இரா. முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர்  - தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது,  மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழறிஞர் புலவர் பச்சையப்பன், திரைப்பட இயக்குநர், கவுதமன் உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கண்டன உரையை நிகழ்த்தினர்.
ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் வெளி யிட்ட அறிவிப்பு மிகவும் முக்கியமானது.
"மூலக் கொத்தள சுடுகாட்டை அழித்து விட்டு, அந்த இடத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித் தருவதாக வெளியிடப்பட்ட ஆணையானது 15 நாள்களுக்குள் ரத்து செய்யப்பட வேண்டும். இல்லையெனில் கடுமையான போராட்டத்தை சந்திக்க வேண்டிய அவசியம் அஇஅதிமுக அரசுக்கு ஏற்படும்" என்று எச்சரித்தார்.
இது ஒரு கட்சி பிரச்சினையல்ல; ஒட்டு மொத்தமான சமூகப் பிரச்சினையாகும். நினைவுச் சின்னங்களை அழிப் பது, உடைப்பது என்பதெல்லாம் பாசிஸ்டுகளுக்கான பால பாடமாகும்.
மத்தியில் அதிகாரத்தில் இருக்கக் கூடிய பா.ஜ.க. அரசின் கைப்பாவையாக இருக்கக் கூடிய தமிழ் நாடு அரசு பா.ஜ.க.வின் பாசிச நோய்த் தொற்றுக்கு ஆளாகி அவதிப் படுகிறதோ என்று கருதிட இடம் உண்டு.
இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது திராவிடர் இயக் கத்தின் இலட்சிய ரீதியான கூர்முனைப் போராட்ட மாகும். அதன் வழி வந்ததாகக் கூறிக் கொள்ளும் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையிலான அ.இ. அ.திமு.க. அரசு இந்தி எதிர்ப்பு வீரர்களின் நினைவுச் சின்னங்களை இடிக்க எப்படி துணிந்தது - முடிவு செய்தது என்பது முக்கிய மான வினாவாகும்.
இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணித்திடத் திட்ட மிட்டு செயல்படும் பிஜேபியின் கண்களை இந்தி எதிர்ப்பு வீரர்கள் கல்லறை கருவேள் முள்ளாக உறுத்துகிறதோ! அதன் கைப்பாவை அரசான இன்றைய அஇஅதிமுக அரசுக்கு எஜமானரின் தாளத்திற்கு தப்பாமல் ஆட்டம் போட வேண்டிய அவசியம் இருக்கிறதோ என்கிற கேள்விகள் எல்லாம் எழத்தான் செய்கின்றன.
"தாழ்த்தப்பட்டவர்களுக்கான குடியிருப்பு சுடுகாட்டில்தான் கட்டப்பட வேண்டுமா? தாழ்த்தப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதில் அஇஅதிமுக அரசுக்கு அக் கறை  இருக்குமானால் அதற்கான இடங்கள் சென்னை மயி லாப்பூரிலும், திருவல்லிக்கேணிப் பகுதிகளிலும் இல்லையா? அரசுக்குத் தெரியவில்லையென்றால் நாங்கள் அத்தகைய இடங்களைக் காட்டத்தயார்" என்று திராவிடர் கழகத் தலைவர் ஆர்ப்பாட்டத்தில் சொன்னபோது மிகப் பெரிய வரவேற்பைப் பொது மக்களின் தொடர் கை தட்டல் மூலம் அறிய முடிந்தது.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு வீடு என்று கூறி பிரித்தாளும் தந்திரத்தை வக்கிரத்தன்மையாக மேற்கொள்ளுவது கீழ்மை யானதாகும். வரலாறாகி விட்டதை பாதுகாப்பதுதான்  மக்கள் அரசின் ஜனநாயகக் கடமையாகும்.
வேறு ஒரு முக்கியமான இடத்தில் திட்டமிட்டபடி தாழ்த்தப்பட்டவர்களுக்கு வீடு கட்டித்தருவதில் தமிழ்நாடு  அரசு  அவசரம் காட்டவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
அடுத்த ஒரு வீறு கொண்ட போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு இடம் அளிக்காது என்று எதிர்ப்பார்க்கிறோம். ஒரு நல்லரசுக்கு அதுதான் அடையாளமும் கூட!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...