காஷ்மீரில் குஜர் இன நாடோடிகள் கோடைக் காலங்களில் மலைப்பகுதிகளிலும், குளிர்காலங்களில் சமவெளிகளிலும் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் அனைவருமே இசுலாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கோடைக்காலத்தில் ஜம்மு சமவெளிப் பகுதியில் கூடாரம் அமைத்து வாழ்வார்கள். இவர்கள் இசுலாமியர்கள் என்பதால் இவர்களை விரட்ட இந்து அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ்., இந்து எக்தா சமாஜ் என்ற அமைப்புகள் பல்வேறு தொல்லைகளைக் கொடுத்து வந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக இந்த நாடோடி இனத்தைச் சேர்ந்த 8 சிறுமிகளும், பெண்களும் காணாமல் போயுள்ளனர். இதுவரை அவர்கள் குறித்த எந்த தகவலும் இல்லை. இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் அந்த நாடோடி இனத்தின் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஆசீபா காணாமல் போயுள்ளார். இந்தச் சிறுமியை பல இடங்களில் அவரது குடும்பத்தாரும், உறவினர்களும் தேடியுள்ளனர். அவர் ஜனவரி 20ஆம் தேதி அன்று வனப்பகுதியில் மிகவும் மோசமான முறையில் உடலில் பலத்த காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார். விசாரணையில் சிறுமி 8 பேரால் கோவிலில் அடைத்து வைத்து வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டது தெரிய வந்தது. இந்தக் கொலையில் கோவில் பூசாரி, அவரது மகன், 3 காவலர்கள், ஒரு காவல்துறை அதிகாரி, ஆர்.எஸ்.எஸ். பிரமுகர், இந்து அமைப்பின் இரண்டு பிரமுகர்கள் என 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கொலை வழக்கில் ஒரு குற்றவாளி சிறார் என்பதால் அவன் மட்டும் சிறார் சிறையில் அடைக்கப் பட்டுள்ளான். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மற்ற 7 குற்றவாளிகளிடம் குற்றப்பத்திரிக்கை நகலை அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அவர்களிடம் குற்றப்பத்திரிக்கை அளிக்கப்பட்டது.
காவல்துறை குற்றப்பிரிவினர் பதிவு செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் இசுலாமியர்களை மிரட்டி அப்பகுதிக்கு இனிமேல் வராமலிருக்கச் செய்யவே சிறுமியின் படுகொலை அரங்கேற்றப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் கோவில் பூசாரி தான் இந்த கொலைக்குத் திட்டமிட்டார் என்பதும், இந்தக் கொலை தொடர்பாக பாஜகவின் பல பிரமுகர்கள் கொலையாளிக்கு ஆதரவாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. காஷ்மீரில் நடந்த சம்பவம் தாமதமாகவே வெளியே தெரிந்தது. அதேபோல் உன்னாவ் விவகாரமும், பாதிக்கப்பட்ட குடும்பம் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் வீட்டிற்குச் சென்று தீக்குளிக்க முயன்ற பின்தான் வெளியே தெரிந்தது. இந்த நிலையில் பாஜக ஆளும் குஜராத்தின் சூரத்தில் 8 வயது சிறுமி கொடூரமாக வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கிறார்.
ஞாயிறு அன்று அரியானா மாநிலத்தின், ரோதாக் மாவட்டத்தில் சமர்கோபல்பூர் என்ற கிராமத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து காவல்துறையினர் 11 வயது சிறுமியின் உடலைக் கைப்பற்றியுள்ளனர். சிறுமியின் உடலை மருத்துவ ஆய்வுக்கு அனுப்பியுள்ள காவல் துறையினர் சிறுமி குறித்த விவரங்களை விசாரித்து வருகின்றனராம். இந்த நான்கு கொடூர நிகழ்வுகளும் பாஜக ஆளும் மாநிலங்களிலும் (குஜராத், அரியானா, உத்தரப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் - பாஜக கூட்டணி ஆளும் மாநிலத்திலும்) நடந்துள்ளன. அதே போல் இதில் பாதிக்கப்பட்ட நபர்கள் என்று பார்த்தால் சிறுமிகள், இசுலாமியர்கள், தலித்துகள் மட்டும்தான்! பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் சிறு பான்மையினப் பெண்கள் இவ்வளவு பாதிக்கப்படு கிறார்கள்? காரணம் வெளிப்படை!
இந்த சம்பவங்களுக்கு எதிராக பாஜகவினர் பெரிதாகக் குரல் கொடுக்கவில்லை. முக்கியமாக பாஜகவில் இருக்கும் பெண் தலைவர்கள் கூட இந்த மோசமான சம்பவங்களுக்கு எதிராக துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை. இதில் இன்னமும் மோசமான விடயம் என்னவென்றால், இதில் இரண்டு சம்பவங்களில் பாஜக கட்சியினருக்கே தொடர்புள்ளது. உத்தரப்பிரதேச சம்பவத்திற்குக் காரணம் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார். அதேபோல் காஷ்மீரில் குழு வன்புணர்வை செய்தது பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கங் களைச் சேர்ந்த நபர்கள்தான். இதன் காரணமாகவே பாஜகவினர் இதுபற்றிப் பேசுவதில்லை. பாஜக கட்சியினர் அமைதியாககூட இல்லாமல் இதைப் பற்றி மோசமாகவும் பேசி இருக்கிறார்கள். டில்லியில் நடந்த நிர்பயா கொடூரத்தை மிகவும் சிறிய விஷயம் என்று அருண் ஜெட்லீ குறிப்பிடவில்லையா? கதவு இல்லாத கோவி லுக்குள் அந்த சிறுமி எப்படி இருந்தார் என்று காஷ்மீர் விவகாரத்தில் எச்.ராஜா வன்மமாகப் பேசியுள்ளார். பி.ஜே.பி.யின் விகாரமான கோரச் சிந்தனையின் அசிங்கமான வெளிப்பாடு இது!
சிறுமி ஆசீபா மீதான சீரழிவு மக்கள் கண்களைத் திறக்கச் செய்யட்டும்!
No comments:
Post a Comment