Friday, April 27, 2018

சவத்திற்கு உயிரூட்ட முடியுமா?

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் விஜயநகரத்தில் கஜபதி ஆட்சியாளர்களால் மகாராஜா அரசில் அரசு சமஸ்கிருதக் கல்லூரி 1860ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 1957ஆம் ஆண்டில் அரசிடம் ஒப் படைக்கப்பட்டது.
தற்பொழுது குற்றுயிரும் குலையுயிருமாக அக்கல்லூரி உள்ளது. அக்கல்லூரியில் கடந்த 2017ஆம் ஆண்டில் வேறு எந்த கல்லூரியிலும் இல்லாத நிகழ்வாக ஒரேயரு மாணவர்தான் சமஸ்கிருதப்பாடத்தில் பி.ஏ. (இளங்கலை பட்டப் படிப்பு) பயில்வதற்காக சேர்ந்தார். அவருக்காக ஒரேயரு ஆசிரியர் உள்ளார். அந்த ஆசிரியரே கல்லூரியின் முதல்வருமாவார்.
அந்தக் கல்லூரியில் அய்ந்து ஆண்டுகளுக்கான இளங்கலைப்பட்டப்படிப்பில் சமஸ்கிருத மொழி, தெலுங்கு மொழிப்பாடங்களைப் படிப்பதற்கு வேறு எவரும் முன்வரவில்லை. கல்லூரியில் முதல்வர்தான் ஆசிரியர், மற்றும் துப்புரவு  பணியாற்ற ஒரு பணியாளர்.
தற்பொழுது இந்த கல்வியாண்டில் இறுதியாண்டு பயிலும் அம்மாணவரைத் தவிர வேறு மாணவர் எவருமில்லை. மாணவரே இல்லாத காரணத்தால், அக்கல்லூரியில் பணியாற்றிய இளநிலை உதவியா ளர்கள் இருவர் சாலூர் மற்றும் எஸ்.கோட்டா அரசு கல்லூரிகளில் பணிமாற்றம் செய்யப்பட்டனர்.
அக்கல்லூரியில் வேத பாடங்கள், சமஸ்கிருத மொழிப்பாடங்கள், தெலுங்கு மொழிப்பாடங்கள் கற்பிக்கப்பட்டன.
எம்.ஆர்.சமஸ்கிருத பாடசாலையிலிருந்து மாண வர்கள் கல்லூரி கல்வியைத் தொடர அக்கல்லூரியில் சேர்ந்து படித்து வந்தார்கள்.
2010ஆம் ஆண்டில் சர்க்கரை ஆலை மற்றும் வணிக நிறுவனத்தை நடத்திவந்த என்சிஎஸ் குழுமத்தின்  சார்பில் ராமாயண, வேத பாடங்கள் கற்பிக்கும் திட்டம் இலவச உணவுடன் தொடங்கப் பட்டது.
1999ஆம் ஆண்டில் கல்லூரியில் ஆசிரியராக பொறுப்பேற்று, 2004ஆம் ஆண்டு முதல் கல்லூரியின் முதல்வராக உள்ளவரான ஸ்வப்னா ஹைன்தவி கூறுகையில்,
“எப்போதுமில்லாத அளவுக்கு மாணவர்கள் சேருவது குறைந்துவிட்டது. பி.ஏ. (தெலுங்கு) பாடத்துக்கு விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திர பல்கலைக்கழகம் அங்கீகாரம் உள்ளது. அதே போல், பி.ஏ. (சமஸ்கிருதம்) பாடத்துக்கு திருப்பதி சிறீ வெங்கடேசுவரா வேத பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் உள்ளது. ஒருங்கிணைந்த பாடத்திட்டங்களுக்கு அரசின் ஆதரவு இல்லை. மாணவர்கள் தங்கும் வசதி, உணவு வசதி, கல்வி உதவித் தொகை என ஏதும் கிடையாது. அதனால் மாணவர்களிடையே ஆர்வம் ஏற்படவில்லை. இருப்பினும், கல்லூரியின் பழம்பெருமையைக் காக்கும் வகையில் சிறீ வெங்கடேசுவரா பல்கலைக் கழகத்துடன் இணைந்து செயல்படும்’’ என்றார்.
158 ஆண்டுகள் பழைமையான சமஸ்கிருத கல்லூரியில் சமஸ்கிருத மொழியை பயில்வதற்கே மாணவர்கள் எவரும் முன்வராத நிலையில், பாஜக ஆட்சி மத்தியில் இருப்பதால் விரும்பாதவர்களிடையே அதிகார ஆணவத்துடன் சமஸ்கிருத மொழியைத் திணிக்க முயல்வது ஏன்?  இதுதான் செத்த மொழிக்கு சிம்மாசனமாம்.
இந்த உண்மையை மற்றவர்களைவிட பார்ப்பன ஜனதாவான பாரதீய ஜனதாவும், பார்ப்பனர்களும் அதன் தலைவர்களும் அதன் மாநில - மத்திய அமைச்சர்களும் புள்ளி விவரத்துடன் புரிந்தவர்கள் தான்.
அதே நேரத்தில் ஆசை வெட்கமறியாது என் பார்களே  அந்த நிலைதான் அவர்களுக்கு. ஏ.பி. வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவிருந்த முரளி மனோகர் ஜோஷி என்பவர் ஓர் ஆண்டையே சமஸ்கிருத ஆண்டாக அறிவித்தார். பல்கலைக் கழகங்களில் வேதக் கணிதம் எல்லாம் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு என்றாலும் விளக்கெண்ணெய்க்குக் கேடே தவிர பிள்ளை பிழைத்த பாடில்லை.
தங்களைத் தவிர மற்றவர்கள் யாரும் படிக்கக் கூடாது என்ற வருணாசிரம ஆணவத்துடன் நடந்து கொண்ட, பிர்மா முகத்தில் பிறந்ததாகக் கூறிக் கொண்ட பார்ப்பனர்கள்தான்; அந்த மொழி செத்தமொழி ஆனதற்குக் காரணம் சாகடித்து சவக் குழிக்கு அனுப்பியவர்கள் என்ன முட்டு முட்டினாலும் செத்ததை - சவத்தை எப்படி உயிரூட்ட முடியும்?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...