வெளிநாடுகளில் உள்ள கணவனால் கைவிடப் படும் பெண்களை பாதுகாக்கும் வகையில் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
வெளிநாடுவாழ் கணவனால் கைவிடப்படும் மனைவி தொடுக்கும் வழக்கில், கணவன் நீதிமன் றத்தில் நேர் நிற்கவேண்டும் என்பதை வலியுறுத்தி நீதிமன்றம் மூன்று முறை அழைப்பாணை பிறப்பித்த போதிலும் வருகைதரவில்லையெனில், கணவன் மற்றும் கணவனின் பெற்றோருக்கு சொந்தமான சொத்துகள் கையகப்படுத்தப்படும் என்றும், மூன்று முறை நீதிமன்றம் அறிக்கை வெளியிட்டும், நீதி மன்றத்துக்கு வருகைதராத கணவனை தலை மறைவுக் குற்றவாளியாக வெளியுறவுத் துறையின் சார்பில் அறிவிக்கப்படும் என்றும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது.
குழந்தைகள் மற்றும் பெண்கள்மீதான பாலியல் குற்றங்களில் இந்திய குற்றவியல் நடைமுறைச்சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று பெண் கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சகம் மத்திய அரசிடம் கோரி வருகிறது.
வெளிநாடுகளில் வாழும் கணவன் மனைவியைக் கைவிடுவது தொடர்பான வழக்குகளில் நீதிமன் றத்துக்கு வராமல் தலைமறைவாகவே உள்ளனர். இப்போதுள்ள இந்திய குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின்கீழ் வெளிநாடுகளில் வாழும் கணவனைக் கட்டுக்குள் கொண்டுவர இடமில்லாமல் உள்ளது.
ஆகவே, மூன்று முறைக்கும்மேல் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியபோதிலும் வரத்தவறிய கணவனை தலைமறைவுக் குற்றவாளி என வெளி யுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடும் வண்ணம் இந்திய குற்றவியல் நடைமுறைச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என¢று சட்ட அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பாலியல் தொல்லைக்கு இளம்வயதில் உள்ளாகி, மன உளைச்சலுடன் உள்ள பெண்களுக்கும் நீதி கிடைக்கும்வகையில் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற குற்றச் செயல்கள் குறித்த புகார்கள் அமைச்சகத்துக்கு வருகின்றன. ஆகவே, புகார் அளிப்பதற்குரிய காலவரையறைகள் நீக்கப்பட வேண்டும். இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் 473 ஆம் பிரிவு திருத்தப்படவேண்டும் என்று அமைச்சகத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தேசிய குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையத்திலும் பல ஆண்டுகளுக்கு முந்தைய குற்றங்கள்குறித்து புகார்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்தியாவில் பிறந்தவரான கனடாவாழ் பெண் அறிவியலாளர் ஒருவர் இளம் வயதில் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளார். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சிக்கான அமைச்சகம் மற்றும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த குற்றங்கள்மீதான புகாரினை அளிப்பதற்கு தேவையான சட்டத்திருத்தங்களை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இப்பொழுதெல்லாம் வெளிநாடுகளில் வாழும் - கை நிறைய சம்பாதிக்கும் மணமகனைத் தேடுவது என்பது ஒரு நாகரிகமாகவே போய்விட்டது; அதனைப் பெருமையாகவும் கூடக் கருதும் மனப் பான்மை வளர்ந்து வருகிறது.
வெளிநாட்டில் அந்த மணமகன் எப்படி வாழ்கிறார்? ஏற்கெனவே திருமணம் ஆனவரா? இல்லையா? என்பதெல்லாம் தெரிவதில்லை.
அண்மைக்காலமாக இதுபோன்ற தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன; ஏமாந்துவிட்டோமே என்று கைப்பிசைந்து கண்ணீர்விடும் பெற்றோர்களைப் பார்க்கிறோம்.
இந்த நிலையில், இவற்றிற்கெல்லாம் முடிவு கட்ட இத்தகைய சட்ட ரீதியான நடவடிக்கைகள் கண்டிப்பாகத் தேவையே!
கட்சி மாறுபாடு இல்லாமல் இதனை நிறைவேற்றிக் கொடுக்கவேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!
No comments:
Post a Comment