"2ஜி - அவிழும் உண்மைகள்" எனும் பெயரில் மத்திய மேனாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சரும், திமு.க. கொள்கைப் பரப்புச் செயலாளருமான மானமிகு ஆ. இராசா அவர்களால் எழுதப்பட்ட நூலின் வெளியீட்டு விழா சென்னை கலைஞர் அரங்கில் நேற்று மாலை (21.3.2018) நடைபெற்றது. இந்தப் பிரச்சினையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களும், "விடுதலை" ஏடும் - அளித்திருக்கும் பங்களிப்பு மகத்தானது; பொய்க் குற்றச்சாட்டு என்றாலும், அதற்குமேல் அமைச்சர் பதவியைத் தொடரக் கூடாது என்ற தார்மீகப் பண்பின் அடிப்படையில் மத்திய அமைச்சர் பதவியை ஆ. இராசா அவர்கள் ராஜினாமா செய்து விட்டு விமானத்தின் மூலம் சென்னை வந்த நேரத்தில் கழகத் தலைவர் தலைமையில் மாபெரும் வரவேற்புக் கொடுத்தது சாதாரணமானதா! எத் தனையோ விமர்சனங்கள் எழுந்தபோதும், அதைப்பற்றிக் கிஞ்சிற்றும் கழகம் கவலைப்படவில்லை.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு சொலவடை "இறுதியில் சிரிப்பவன் யார்?" என்பதாகும். ஆ. இராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த பொழுது மிகப் பெரிய ஊழலில் ஈடுபட்டார் - அதன் மதிப்பு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்று பூதாகரமாகக் கிளப்பி விட்டனர். அதனை அப்படியே பார்ப்பன ஊடகங்கள் இறக்கைகளைக் கட்டி விட்டு பரபர வென்று ஊதிப் பெருக்கித் தள்ளின.
அத்தகு பிரச்சாரத்தை இடதுசாரிகளே கூட நம்பி விட்டனர் என்றால், அதைப்பற்றிச் சொல்லவும் வேண்டுமா?
உலகத்தையே பாயாகச் சுருட்டி எழுதும் ஊடகங்களே எப்படியெல்லாம் தடுமாறின என்பதற்கு - தமிழ் 'இந்து' ஏட்டில் வெளிவந்த ஒரு கட்டுரையை எடுத்துக்காட்டாகக் கூறலாம் (23.12.2017).
"1,76,0000000000 - ஒரு தேசத்தையே தோற்கடித்த மாய எண்" என்ற தலைப்பில் வெளிவந்த நடுப் பக்கக் கட்டுரை அது. அதில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது:
"இந்திய அரசியல் வர்க்கமானது வினோத்ராய் (தலைமைக் கணக்காயர்) அனுமான இழப்பு என்று குறிப்பிட்ட ரூ.1.76 லட்சம் கோடியை 'ஊழல்' என்று மொழி பெயர்த்து, மக்கள் மனதில் வெற்றிகரமாக அதைப் பதித்தும் விட்டது. இன்று ஒரு லட்சம் கோடியை ஒரு அரசியல்வாதியோ, அதிகாரியோ பணமாக வாங்கிக் கையும் களவுமாகப் பிடிபட்டாலும் மக்களுக்கு அது பெரிய விஷயம் அல்ல. சாத்தியம் இல்லாத ஒரு மாய எண்ணின் பெயரால் ஊழலுக்கான சொரணையையே மக்களிடம் மழுங்கடித்து விட்டோம். ஜனநாயகத்தின் நான்கு தூண்களுக்கும் இதில் பங்கு இருக்கிறது. ஊழல் நடந்ததா, இல்லையா, குற்றம் நிரூபிக்கப்பட்டதா இல்லையா என்பதல்ல; ஒரு மாய எண்ணிடம் ஒரு தேசமே தோற்று விட்டது என்பதுதான் பிரதான பிரச்சினை" என்று மிகவும் காலந்தாழ்ந்து ஒரு பிரபல ஏடு எழுதுகிறது என்றால், இதற்குமுன் இந்த ஊடகங்கள் அவிழ்த்துக் கொட்டிய பொய் மூட்டைகளால் ஆ. இராசா என்ற தனி மனிதரோ, கனிமொழி என்ற தனி நபரோ பாதிக்கப்பட்டனர் - சிறையில் வதியும் நிலை ஏற்பட்டது என்பதைவிட இந்தப் பொய்ப் பிரச்சாரப் புளுகு மூட்டையை நம்பிய வெகு மக்கள் "தி.மு.க.வை இரண்டு முறை தேர்தலில் தோற்கடித்து விட்டனரே" இந்த நிலைக்கு இழப்பீடு என்பதெல்லாம் ஒன்றும் கிடையாதே! 2ஜி பிரச்சினையில் 23 நாள்கள் நாடாளுமன்றத்தை முடக்கியது இதே பிஜேபிதானே! இப்பொழுது வினையை அறுக்கிறார்கள்!
தணிக்கை அதிகாரி என்று கூறப்படும் ஒருவர் செய்த தவறினால் ஒரு அரசியல் கட்சியே தோற்கடிக்கப்பட்டுள்ளதே இதற்கு யார் பொறுப்பு? பொறுப்பு இல்லாமல் எழுதிய அந்த மனிதர்க்குத் தண்டனை கொடுக்க சட்டத்தில் இடம் இருக் கிறதா? தலைமைத் தணிக்கையாளர் வினோத்ராய் தன் சுய சரிதத்தில் பிற்காலத்தில் என்ன எழுதினார்?
"நிச்சயமாக ரூ.1.76 லட்சம் கோடி என்பது மிகைப்படுத்தப் பட்ட மதிப்புதான். அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பரபரப்புக்கு உள்ளாக்க வேண்டும் என்பது எனது நோக்கமல்ல; ஆனால் இந்த விஷயத்தின்மீது கவனத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன்" என்று எழுதியுள்ளாரே!
எவ்வளவுப் பெரிய அயோக்கியத்தனம்! இவர் விளையாட்டுக்கு ஆ. இராசாவும், கனிமொழியும் தான் கிடைத்தார்களோ - ஒரு தி.மு.க.தான் கிடைத்ததா?
நேற்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கருத்துரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் "இந்த 2ஜி ஊழல் குற்றச் சாட்டின் பின்புலத்தில் வருக்கம் மட்டுமல்ல - வருணமும் உண்டு" என்று குறிப்பிட்டது சாதாரணமானதல்ல; ஊன்றிச் சிந்தித்தால் உண்மை என்பது பொலபொலவெனக் கொட் டுமே!
இதே தொலைத் தொடர்புத் துறையின் மத்திய அமைச்சராக இருந்தவர் சுக்ராம். இவர் வீட்டின் படுக்கையறையிலிருந்து கட்டுகட்டாகப் பணம் கைப்பற்றப்பட்டது. குற்றவாளி என்றும் தீர்ப்பும் அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிறைக்குச் செல்லவில்லையே ஏன்?
காங்கிரசுகாரரான சுக்ராம், பிறகு பிஜேபி என்ற கங்கை யில் முழுக்குப் போட்டு 'புனித அவதாரமாக' 'பூணூல் திரு மேனியாக' எழுந்தாரே, அந்த நிலைக்குக் காரணம் சுக்ராம் தோளில் பூணூல் தொங்கியதுதான்!
ஆ. இராசா உள்ளிட்டோர் மீதான அபாண்ட பழியின் பின்னணியில் வருக்கம் இருக்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் சொன்னது - எத்தகு துல்லியமான உண்மையின் வெளிச்சம் என்பது விளங்கிடவில்லையா?
2ஜியில் ஊழல் செய்து விட்டார் ஆ. இராசா என்று குற்றப் பத்திரிக்கை படித்தபோது தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் "ஆ. இராசா - தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந் தவர்!" என்று குறிப்பிட்டபோது நான்கு கால் பாய்ச்சலில் ஈடு பட்டவர்கள் இதற்கெல்லாம் என்ன பதிலை தங்கள் வசம் வைத்துள்ளனர்?
ஒரு குலத்துக்கொரு நீதி கூறும் மனுவாதிகள் மரணித்து விடவில்லை - மாறாக இதோ வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை வெகு மக்கள் தெரிந்து கொள்வார்களாக!
No comments:
Post a Comment