'நீட்' தேர்வு: மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்காததற்குக் காரணம் - மடியில் கனமே!
தி.மு.க. தலைவர் - -முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களை பிரதமர் சந்தித்து உடல் நலம் விசாரித்தது -- நயத்தக்க நாகரிகமே - அதனை ஊடகங்கள் அரசியல்படுத்துவது அதீதக் கற்பனையே என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
'தினத்தந்தி'யின் பவள விழா நிகழ்ச்சிக்கு வந்த நிலையில் நேற்று (6.11.2017) காலை அவரது நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, டில்லிக்குப் புறப்படுமுன் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், சென்னை - கோபாலபுரத்தில் உடல் நலம் தேறிவரும் தி.மு.க. தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களைக் கண்டு உடல் நலம் விசாரித்ததோடு, உடல் நலக் குறைவுடன் உள்ள திருமதி தயாளுஅம்மாள் அவர்களையும் (அதே இல்லத்தில்) கண்டு உடல் நலம் விசாரித்து சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்து விட்டு திரும்பியுள்ளார்கள்.
பிரதமர் வருகை ஒரு பண்பாட்டுச் செயல்
பிரதமரையும் அவரோடு வருகை புரிந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய அமைச்சர்கள், தமிழக பா.ஜ.க. தலைவர் உட்பட அனைவரையும் கோபாலபுரம் இல்லத்தில் திமுகவின் செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின், திருமதி கனிமொழி எம்.பி., துரைமுருகன், டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., திருமதி ராஜாத்தி அம்மாள், திருமதி செல்வி ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களை நேரில் கண்டு நல் விழைவும் தெரிவித்து, சிறிது நேரம் (சுமார் 15 மணித்துளிகள்) அங்கிருந்து, விரைவில் மேலும் அவர் உடல் நலம் தேறிட வாழ்த்துகூறி திரும்பியுள்ளார்.
இது நயத்தக்க நனி நாகரிக அரசியல் பண்பாடே! தற்போதைய சூழலில், தமிழ்நாட்டில் வேண்டுமானால் இது வியப்பிற்குரிய செய்தியைப் போலத் தோன்றக் கூடும். வட நாட்டு அரசியலில் இந்தப் பண்பு ஒரு எடுத்துக்காட்டான சர்வ சாதாரணமான நிகழ்வுதான்.
நயத்தக்க நாகரிக சந்திப்பை ஊடகங்கள் அரசியல் ஆக்குவது ஏன்?
கொள்கையில் எதிரும் - புதிருமாக இருப்பது வேறு. மனிதநேயத்தோடு பான்மையும் நட்புறவும் கொண்டு பழகுவது என்பது வேறு.
எதிர்ப்பவர்கள் எல்லாம் எதிரிகள் அல்லர்; அது போல பண்புடன் பழகுபவர்கள் எல்லாம் கொள்கையை விட்டு விட்டவர்களும் அல்லர்.
ஆனால், தமிழ்நாட்டு ஏடுகள் - தமிழ், ஆங்கில பத்திரிக்கையாளர்கள் தங்களை "பாஷ்ய கர்த்தாக்களாக்கி"க் கொண்டு பல்வேறு வியாக்யானங் களையும், விவாதப் பொருளாக அச்சந்திப்பை ஆக்கியிருப்பதுதான் வேடிக்கை! விநோதம்!!
2ஜி வழக்குத் தீர்ப்பு வரப் போகிறதாம்; அச்சமயத்தில் இந்த சந்திப்பாம்!
அதிமுகவின் எதிர்க்கட்சியாக உள்ள திமுகவிடமும் 'ஒரு மென்மையான இடம்' பிடிக்க இது உதவுமாம்!
ஊடகங்களின் இனிய கற்பனைகள்
உடனே, திமுக அறிவித்த போராட்டம் ஒத்தி வைப்பு அல்லது கைவிடப்படுகிறது என்பதுபோன்ற பல்வேறு இனிய கற்பனைகளைத் தங்களது தட்ப வெப்பம் குறையாத அறைகளிலிருந்து கொண்டே விமர்சனங்களை வாரி விடுகின்றன! (கடும்மழை காரணமாக எட்டு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர மற்ற மாவட்டங்களில் திட்டமிட்டப்படி நாளை ஆர்ப்பாட்டம் திமுக சார்பில் நடக்கத்தான் செய்கிறது)
'மத்திய ஆளும் பா.ஜ.க. தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க. இடையே ஒரு புது உறவு மலர இது முன்னோட்டமாக அமையக் கூடும்' என்று எழுதி, தொண்டர்களைக் குழப்பிட இது ஒரு முயற்சி. யாரும் ஏமாறக் கூடாது.
திமுக மாறிவிட்டதா?
தேவையற்ற குழப்பத்தை விதைக்கும் வீண் வேலைகள் எடுபடாது; உடனே கூட்டணிக் கட்சிகள் (திமுகவுடன் இருப்பவை) அப்படியே அசந்து போய் விட்டனவாம்!
என்ன நடந்து விட்டது? எதில் திமுக மாறிவிட்டது?
இதுபற்றி தளபதி மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டபோது 'ஒரு மரியாதை நிமித்தமான நலம் விசாரிப்பு' என்று கச்சிதமாகக் குறிப்பிட்டுள்ளார்!
இந்த அரசியல் பண்பாடும், நனி நாகரிகமும் தமிழ் நாட்டுத் தலைவர்கள் கட்சிகளிடையே தாராளமாகப் பரவி நடைமுறைக்கு வர வேண்டியது அவசர அவசியம்!
அதீத கற்பனை வேண்டாம்!
கடந்த 3 நாட்களுக்கு முன்பே பிரதமர் மோடி இதை முடிவு செய்து, தளபதியிடம் தொடர்பு கொண்டு தெரிவித்து அதன் பிறகே தான் வருகிறார் என்றும் செய்தி வெளியிட்டு விட்டு, பிறகு சில ஊடகங்கள் அதீத கற்பனை குதிரை சவாரி செய்வது ஏன்? அந்தோ அரசியலே!
கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை
7-11-2017
No comments:
Post a Comment