Friday, November 17, 2017

மருத்துவமனைகளில் யாகமா?

தமிழ்நாட்டின் அருமையை வடஇந்தியாவைப் போய்ப் பார்த்தால்தான் தெரியும். சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து குழந்தைகள் மரணமடைந்து வரும் நிலையில், அம்மாநில சுகாதாரத்துறை இணைச் செய லாளர் "எங்களால் ஆன அனைத்து சிகிச்சைகளையும் கொடுத்து வருகிறோம். அதையும் மீறி குழந்தைகள் மரணமடைகின்றன என்றால் அக்குடும்பத்தினரால் கடவுளுக்கு செய்யப்படும் வேண்டுதல்களில் ஏதேனும் குறை இருக்கலாம்" என்று கூறியிருந்தார். இவரின் இந்தப் பேச்சிற்கு இதுவரை எந்த ஓர்   அமைப்பும்  எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதிலிருந்தே வட இந்தியாவில் சாதாரண மக்கள் முதல் மெத்தப் படித்த அதிகாரிகள் வரையில் மூடநம்பிக்கைகள் எந்த அளவிற்கு ஊடுருவி இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளலாம்.

ராஜஸ்தான் மாநிலம், கோட்டா மாவட்டத்தில்  அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி உள்ளன. மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய பொது மருத்துவமனை அது என்பதால் தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த மருத்துவமனைக்குத் தொடர்ந்து வருவார்கள்.

இந்த மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி  மரணங்கள் ஏற்படுவது தொடர் கதைதான்! இந்த நிலையில் செப்டம்பர் மாதம் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த இந்தோலி என்ற ஊரைச்சேர்ந்த துளிசந்தின் உறவினர்கள் மருத்துவமனையில் பார்வையாளர்கள் பகுதியில் பார்ப்பனர் ஒருவரை அழைத்துக் கொண்டுவந்து யாகம் நடத்தினார்கள்.

இதுகுறித்து துளிசந்தின் மகன் சிவ்தாஸ் கூறும் போது "எனது தந்தை சில மாதங்களுக்கு முன்பு இந்த மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்து விட்டார். அவர் மரணமடைந்த நாள் முதல் தினசரி எங்களின் கண்முன்பாக அவர் வந்து செல்கிறார். வீட்டில் யாரையும் தூங்க விடுவதில்லை.

தண்ணீர் கேட்கிறார். நடு இரவில் எங்களை எழுப்பி உணவு சமைத்துத் தருமாறு கேட்கிறார். மேலும் எங்கள் உறவினர் வீடுகளுக்குச்சென்று அவர்களுக்கும் இடை யூறு செய்கிறார்.

இதனை அடுத்து எங்கள் ஊரில் உள்ள பார்ப்பனப் பூசாரி ஒருவரிடம் இவ்விவகாரம் தொடர்பாக முறை யிட்டோம். உடனே அவர் செத்துப்போன துளிசந்தின் ஆன்மா சாந்தியடையாமல் சுற்றிக் கொண்டே இருக் கிறது. அவர் எங்கு  மரணமடைந்தாரோ அந்த இடத்தில் அவருக்குச் சில அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளன. ஆகவே அவர் பேயாக சுற்றிக் கொண்டே இருக்கிறார். அவர் மரணமடைந்த இடத்தில்  ஒரு யாகம் செய்ய வேண்டும்; இல்லை என்றால் அவர் குடும்பத்தில் பலருக்கு மரணத்தை ஏற்படுத்தி விடுவார்" என்று கூறினார்.

இதனை அடுத்து துளிசந்த் இறந்த மருத்துவமனையிலேயே யாகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாவட்டத்தின் முக்கியமான மருத்துவமனையில், தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வரும் மருத்துவமனையில் பார்வையாளர் அமரும் பகுதியில் யாகம் ஒன்றை நடத்தியுள்ளனர். சுமார் ஒருமணி நேரம் கழித்து மருத்துவமனை பாதுகாவலர்கள் அவர் களை அங்கிருந்து செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.

மரணமடைந்த துளிசந்தின் உறவினர்கள் யாகத்தை முடித்து விட்டுச் சென்ற ஒரு மணிநேரத்திற்குள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்த ஒரு பெண்ணின் உறவினர்கள் அதே இடத்தில் வந்து யாகம் நடத்திவிட்டுச் சென்றனர்.  இதனை அடுத்து மருத்துவமனை பாதுகாவலர்கள் இனிமேல் யாகத்தை நுழைவாயிலுக்கு வெளியே செய்துகொள்ளுங்கள் என  அப்பகுதியில் எழுதி வைத்து விட்டனர்.

மருத்துவமனைக்கு உள்ளேயே பொதுமக்கள் வந்து மரணமடைந்தவர்களுக்கு ஆத்ம சாந்தியாகம் நடத்துவது தொடர்பாக மருத்துவமனையின் தலைமை மருத்துவர் திவாரி கூறியதாவது, "எங்களுக்கு மருத்துவ மனை வளாகத்தில் யாகம் நடத்துவது தொடர்பாக தகவல் கிடைத்தது, ஆனால் எங்களிடம் அவர்களை விரட்டுவதற்கு அதிகாரமில்லை, மேலும் யாகம், பூஜை, மாந்திரீகம் போன்றவை அவரவர்களின் நம்பிக்கை களால் செய்யப்படுவது, அரசிடமும் இதைத் தடுக்கும் எந்த ஒரு சட்டமும் இல்லை, ஆகவே தனிமனித நம்பிக்கைகளில் நாங்கள் தலையிட முடியாது, மக்க ளுக்கு இப்படி யாகம் செய்பவர்களால் இடையூறு ஏற்படுமேயானால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். ஆனால் யாரும் இதுவரை புகார் செய்யவில்லை" என்று கூறினார்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் அய்சியூவில் அப்பகுதி பிரமுகர் ஒருவர் மரணமடைந்துவிட்டார் அவரை உயிர்ப்பிக்க மருத்துவமனையில் மிகப் பெரிய யாகம் ஒன்று நடைபெற்றது. இதில் மருத்துவமனையின் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர். மத்தியப் பிரதேச பாஜக அரசு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளுக்கு ஜோதிடம் பார்க்க ஒரு தனிப் பிரிவை இந்த ஆண்டு ஆரம்பித்துள்ளது. இதன்படி நோயாளிகளுக்கு ஏற்படும் நோய்களின் தீவிரம் மற்றும் அந்த நோய் என்று குணமடையும், குணமடைய என்ன மாதிரியான பரிகாரம் செய்யலாம் என்று அரசு நியமித்த ஜோதிடர்கள் ஆலோசனை கூறுவார்களாம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் மருத்துவமனைகளில் யாகமே நடத்த அரசு அனுமதியளித்திருப்பது நாடு எந்த திசையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

அதுவும் பிஜேபி ஆட்சியில் கேட்கவா வேண்டும்?

தமிழ்நாட்டில் இப்படி நடத்த முடியுமா? நடத்தத்தான் அனுமதிப்போமா? காரணம் இது பெரியார் நாடு!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...