Saturday, November 18, 2017

காந்தியை சுட்டுக் கொன்ற கொலை பாதகன் நாதுராம் கோட்சேவுக்கு தமிழ்நாட்டில் வீர வணக்கம் செலுத்தும் விழாவா?

 காந்தியை சுட்டுக் கொன்ற கொலை பாதகன் நாதுராம் கோட்சேவுக்கு

தமிழ்நாட்டில் வீர வணக்கம் செலுத்தும் விழாவா?

தமிழ்நாடு அரசு இதை அனுமதிக்கிறதா? சட்டம் என்ன செய்கிறது?

அண்ணல் காந்தியாரைச் சுட்டுக் கொன்ற கொலை பாதகன் நாதுராம் விநாயக் கோட்சேவுக்கு தமிழ்நாட்டில் வீர வணக்கம் செலுத்தும் விழாவா? தமிழக அரசு இதை அனுமதிக்கிறதா? சட்டம் என்ன செய்கிறது? அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை அமளிக் காடாக்கி மதவெறிக் காய்ச்சல் மக்களின் நல்லிணக்கத்தைப் பாழ்ப்படுத்த அனுமதிக்கலாமா? உடனே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

 இன்றைய (17.11.2017) 'தினஇதழ்' நாளேட்டின் முதற் பக்கத்தில் வெளியாகியுள்ள ஒரு விளம்பரம் - படிப்போர் அத்துணை பேரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் என்பது உறுதி.

இதோ அவ்விளம்பரம்:

17.11.2017 'தின இதழ்' பக்கம்: 1

தேசப் பிதா என்று அனைவராலும் மதிக்கப்படுகிற அண்ணல் காந்தியாரைச் சுட்டுக் கொன்ற (30.1.1948) மராத்தி சித்பவன் பார்ப்பனர்தான் நாதுராம் விநாயக் கோட்சே! இவர் ஆர்.எஸ்.எஸ்.  அமைப்பில் பயிற்சி பெற்று ஹிந்து மகாசபையில் இறுதியில் சேர்ந்தவர்.

இந்த கோட்சேவுக்கு பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேச, குவாலியரில் சிலை திறப்போம் என்று மார்த் தட்டுகின்றனர். கோட்சேவுக்குக் கோயில் கட்டுவதுடன் அங்கு அவரது மார்பளவு சிலையும் வைத்து அதை கும்பிடும்படிச் செய்யப் போவதாகவும், குவாலியரில் தான் கோட்சே ஆயுதப் பயிற்சி எடுத்தார் - காந்தியைச் சுட்டுக் கொல்லும் முன்பு என்று ஜெகதீஷ் பரத்வாஜ் என்ற பார்ப்பனர் - (அகில பாரதீய ஹிந்து மகா சபையின் தலைவர்)  கூறியது நேற்று ஏடுகளில் வந்துள்ளது.

வரலாற்றையே திசை திருப்பும் முயற்சி
மற்றொரு பக்கம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் துணை அமைப்புகளில் ஒன்றான அபிநவ பாரத் என்ற அமைப்பு (மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கொண்ட அமைப்பு) 70 ஆண்டுகளுக்குப்பின் - உச்சநீதிமன்றத்தில் காந்தியைக் கொன்றது கோட்சேயின் குண்டு அல்ல என்று வரலாற்றையே திசை திருப்பும் முயற்சிக்கான புது வழக்குத் தொடுத்துள்ளது. (இதை எடுத்த எடுப்பில் தள்ளுபடி செய்யாமல் அந்நீதிமன்றம் ஆராயும் வாய்ப்பையும் கொடுத்துள்ளது).

இந்நிலையில் தமிழ்நாட்டிலேயே சில காவிகள் இப்படி ஒரு விளம்பரம் கொடுக்க எப்படித் துணிந்தார்கள்?

இங்கு நடப்பது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ராஜ்யமா? எந்த தைரியத்தில் இப்படி ஒரு சிந்தனை - செயல் துவக்கம்!

பழமொழி ஒன்று உண்டு.
"ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, தோலைக் கடித்து, துருத்தியைக் கடித்து, பின் மனிதனையே கடித்தது'" என்று!

அந்நிலையில் தமிழ்நாட்டில் அதுவும் அதிமுக என்ற திராவிடர் கட்சி என்று முத்திரை - அண்ணா பெயர் கொண்ட கட்சி, எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழாக் கொண்டாடிக் கொண்டே டில்லிக்கு நிபந்தனையற்ற சலாம் போட்டு 'நீட்' போன்றவற்றில் மாநில உரிமையை வலியுறுத்தாமல்  அடகு வைத்த கொடுமையான நிலையில், இப்படி ஒரு துணிச்சல் எப்படி வந்தது?

அந்நாளேடு தான் எப்படி இந்த விளம்பரத்தினை வெளியிட முன் வந்துள்ளது? வியப்பாக உள்ளது!

காவல்துறை ஏன் வேடிக்கை பார்க்கிறது?

தமிழக ஆட்சி - உள்துறை, காவல்துறை ஏன் வேடிக்கை பார்க்கிறது?

உடனே சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன் வருவதோடு, தமிழகத்தின் உரிமைக்குக் குரல் கொடுப்போர்மீது பாயும் தேசத் துரோக மற்றும் குண்டர் சட்டங்கள் ஏன் ஊமைகளாய் நிற்கின்றன!

உடனே தகுந்த தடுப்பு நடவடிக்கை சட்டப்படி எடுத்து கைது செய்து வழக்குத் தாக்கல் செய்ய முன் வர வேண்டியது அவசியம்!

அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை அமளிக் காடாக்கி மதவெறிக் காய்ச்சல் மக்களின் நல்லிணக்கத்தைப் பாழ்ப்படுத்த அனுமதிக்கலாமா?

எனவே உதவாது இனி தாமதம்; உடனே நடவடிக்கை வேண்டும்!

 கி.வீரமணி
தலைவர்,     திராவிடர் கழகம்

சென்னை  
17-11-2017

==================

காந்தியைக் கொலை செய்த கோட்சேவிற்கு சிலையாம் - இந்து மகாசபைமீது வழக்குப் பதிவு

"மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், அகில பாரத இந்து மகாசபையினர் காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு மார்பளவு சிலையை அவர்களது அலுவலகத்தில் புதன் கிழமை திறந்து வைத்து கோட்சேவுக்கு கோவில் கட்ட சபதம் எடுத்துள்ளனர். இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காந்தியை சுட்டுக்கொன்ற, நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்றும், அவருக்கு கோவில் கட்டப்படும் என்றும் ஏற்கெனவே ஆர்எஸ்எஸ் தலைவர்கள் கூறி வந்துள்ள நிலையில், தற்போது,  குவாலியரில் உள்ள அகில பாரத இந்து மகாசபா அலுவலகத்தில் கோட்சேவுக்கு மார்பளவு சிலை திறக்கப்பட்டுள்ளது.

கோவில் கட்ட மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ள நிலையில், அதையும் மீறி அகில பாரத இந்து மகா சபா அவரது மார்பளவு சிலையை அவர்களது அலுவலகத்துள்ளேயே திறந்துள்ளது. இதுகுறித்து கூறிய அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகள்,  எங்கள் அலுவலக வளாகத்துக்குள்ளேயே கோட்சேவுக்கு கோவில் கட்ட எவரும் தடை விதிக்க முடியாது என்று கூறினர். காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவின் நினைவு நாள் தியாகிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என்று இந்து மகாசபா அறிவித்துள்ள நிலையில், நாதுராம் கோட்சே தூக்கிலிடப்பட்ட நவம்பர் 15ஆம் தேதியன்று கோட்சே சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. கோட்சேவுக்கு கோவில்  கட்டுபவர்கள்மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இந்துமகாசபையின் தலைவர்களுள் ஒருவரான ஜெயதீஷ் பட்வால் என்பவர் கூறும் போது கோட்சே குவாலியரில் தான் தேசத்தின் நலனுக்காக நீதிதவறாமல் நடந்துகொள்வேன் என்று சபதமிட்டார். இங்கு தான் அவர் ஆயுதப்பயிற்சிபெற்றார்.  ஆகவே குவாலியர் நாதுராம் கோட்சேவிற்கான மிகவும் முக்கியமான ஊராகும். ஆகவே இங்கு கோட்சேவிற்கு கோவில் எழுப்புவதில் எந்த தவறுமில்லை என்று கூறினார்.

நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பலையை ஏற்படுத்தி யுள்ள கோட்சே கோவில் விவகாரத்தில் இதுவரை சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான மத்தியப் பிரதேச அரசும், மத்திய அரசும் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இதனிடையே இந்து மகாசபைமீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காந்தி கொலை நடந்து முடிந்து சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பையைச் சார்ந்த 'அபினவ் பாரத்' என்ற அமைப்பைச் சார்ந்த டாக்டர் பங்கஜ் பத்னிஸ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதில் காந்தியை மூன்று முறை மட்டுமே கோட்சே சுட்டார். ஆனால் காந்தி உடலில் 4ஆவது குண்டு பாய்ந்திருக்கிறது. அது எப்படி வந்தது? அந்த நான்காவது குண்டுதான் காந்தியின் உயிரை எடுத்திருக்கிறது. இது குறித்து விசாரிக்க 1966ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட நீதிபதி கபூர் ஆணையம் இது குறித்து விசாரிக்கவில்லை. கோட்சே பயன்படுத்திய இத்தாலி பெரட்டகம் சிறிய துப்பாக்கியை அவருக்கு தந்தவர் கங்காதர் தாண்டவே என்பவர். இந்த தாண்டவே, ஜெகதீஸ் கோயல் என்பவரிடமிருந்து இந்த துப்பாக்கியை பெற்றிருக்கிறார். இதற்கு மேல் 4ஆவது துப்பாக்கி குண்டு எங்கிருந்து வந்தது? இதை விசாரிக்க வேண்டும் என்கிறார் மனுதாரர்.

காந்தி கொலையாளிகளில் ஒருவர்

இந்திய விமானப்படையைச் சேர்ந்தவரா?

குட்டையைக் குழப்பும் இந்துத்துவ அமைப்புகள்

இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளர்  மேட் தியோடன் என்பவர் காந்தி கொலையின் கருப்புப் பக்கம் என்ற பெயரில் ஆங்கில நூல் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கோட்சேவுடன் தூக்கிலிடப்பட்ட நாராயண் ஆப்தே ராயல் இந்தியன் விமானப்படையில் பணிபுரிந்தார் என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரிடம் கேட்ட போது நாராயண் ஆப்தே விமானப்படையில் இருந்தார் என்ற குறிப்புகள் எங்களிடம் இல்லை என்று கூறிவிட்டார்.

இந்துத்துவ அமைப்புகள் கொலையை கோட்சே செய்யவில்லை; ஏற்கெனவே விமானப்படையில் பணிபுரிந்த நாராயண் ஆப்தே தான் காந்தியைக் கொன்றார் என்று போலியாக மக்களிடம் காண்பிப்பதற்கு இப்படி ஒரு பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர்.

எழுத்தாளர் மேட் தியோடன் காந்தி குறித்து நூல் எழுத இந்தியா வந்த போது அவருக்கு காந்தி கொலைகுறித்த தகவல்களை இந்துமகாசபையினர்தான் அதிகம் கூறினார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது."

 

 

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...